அணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்

 

CO2B0407

 

நம் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவரேனும் மருத்துவமனையில் இருக்கும்போது நாம் துணைக்கிருக்கும்போதோ அல்லது பதைபதைப்புடன் கையறு நிலையில் (‘எப்போதடா பிள்ளைக்கு ஜுரம் குறையும்?’, ‘சிகிச்சை முடிந்து எப்போது சுயநினைவு திரும்புமோ’) தவித்துக்கொண்டிருக்கும்போது படிப்பதற்கு என்று ஒரு சிலபஸ் இருந்தால் சற்றும் யோசிக்காமல் வண்ணதாசன் கதைகளைப் பரிந்துரைத்து விடலாம்!

உண்மையில் தற்போதும் நிலைமை அவ்வாறே – அர்ச்சித்துக்கு காய்ச்சல் – நன்றாகவே சுடுகிறது – நாளையோ மறுநாளோ தேவளையாகிவிடும் என்று நன்றாகத் தெரிகிறது-அவ்வப்போது சிரித்துக்கொண்டே ஏதாவது பேசவும் செய்கிறான் – ஆனாலும் தற்போது சஞ்சலப்படும் மனதுக்கு நம்பிக்கையளிப்பதற்கு, சாய்ந்துகொள்வதற்கு ஒரு தோள் தேவைப்படுகிறதே.

உடனடியாக நினைவுக்கு வரும் இரு கதைகள் – ‘பெய்தலும் ஓய்தலும்’, ‘மிகவும் முக்கியமான பார்வையாளர்கள்’ – படித்து ஐந்து வருடங்கள் கழித்தும் ‘பெய்தலும் ஓய்தலும்’ கதையின் பல தருணங்கள் எந்தவித பிரயத்தனமுமின்றி நினைவில் நீள்கிறது – வீராசாமிக்கு தான் தன் தந்தையை சுமையாகக் கருதும் கையாலாகத்தனம் உரைக்கும் தருணம் – அவரது அப்பா சற்றே அதிகநேரம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறார். வீராசாமி பொறுமையிழந்து தண்ணீரை தந்தை மீது வாரியிறைத்து விட்டு ஒருமையில் ஏசுகிறார் – தந்தை சலனமேயில்லாமல் நிற்கிறார் – இதில் நாம் யாரைக் கோட்டியெனக் கொள்வது? பின்னர் கதைசொல்லி அப்பாவை வீட்டில் காணாமல் பதைத்து மொட்டைமாடிக்கு ஓடுகிறார். அங்கும் இல்லை – ஆனால் கீழே திரும்பும்போது பற்பசை டியூப் மொட்டைமாடியில் நீரை அடைத்துக்கொண்டிருக்கிறது. மாடிப்படி கைப்பிடியில் கைப்பட்டு பாசி வழுக்கும்போது அதன் வழவழப்பையும் மணத்தையும் அவர் உணரும் கணம் – தனது கவனிப்பை கைவிடுவதேயில்லை வண்ணதாசன் (போலவே அகம்புறம் கட்டுரையில் மற்றுமொரு கணம்-தந்தையின் உடல்நிலை சரியில்லாத செய்தி கேட்டு வேகமாக வண்டியோட்டிக்கொண்டுவந்து சேரும்போது நினைவுக்கு வருகிறது – ‘என்றும் ரசிக்கும் வாதமடக்கி இலைகளைக் கூட தவறவிட்டு விட்டேன்’)
ஆனால் இது புத்திசாலித்தனத்தை பறைசாற்றும் கவனிப்பு அல்ல – மனம் இலகுவாக இருக்கும்போது தன்னியல்பாக கவனத்தில் உறைபவை.
அடுத்த கதை (‘பெய்தலும் ஓய்தலும்’ தொகுப்பில்தான்) – ‘இரண்டு முக்கியமான பார்வையாளர்கள்‘ – மருத்துவமனைகளில், வேறு வழியில்லாமல் நாள்கணக்காக இருப்பவர்களின் அவஸ்தை- இதில் முக்கியமான விஷயம் – அவருக்கு சில நாள்களிலேயே நடமாடும் அளவுக்கு ஸ்மரணை வந்து விடுகிறது, ஆனாலும் மருத்துவக் காரணங்களுக்காக அங்கேயே இருக்கவேண்டிய கட்டாயம். அங்கிருக்கும் கட்டுப்பாடுகள், அவற்றின் அபத்தம், பார்வையாளர்களின் குணாதிசயங்கள் (‘பார்க்க வர்றவன் பேசினால் வேட்டி காயற அளவுக்கும் வெயிலடிக்கலைன்னாலும் கைக்குட்டையாவது காயவேணாமா?’ – தெய்வநாயகம் தாத்தா), அதன்பின் வரும் முக்கியமான கட்டம்/பாத்திரங்கள்… ஒரு வாரம் முன்னர்தான் அவரும், மனைவியும் கடன்வசூலிக்க வேண்டி ஒரு வீட்டில் கடுமையாய் பேசிவிட்டு வந்திருக்கின்றனர் – திரும்பி வரும்போது மனைவியின் கால் புத்தகத்தில் பட்டுவிட, அதைக்கண்களில் ஒற்றிக்கொண்டு அருகிலிருக்கும் சிறுவனின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிவிட்டு வந்து வண்டியில் ஏறுகிறாள். இந்த ஒரு சின்ன அசைவில் அவளது குணம் நமக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டப்பட்டுவிடுகிறது. இப்போது அந்து சிறுவனும் அவனது தங்கையும் இவரை மருத்துவமனையில் பார்க்கவருகிறார்கள். அதை விவரிக்கும் விதம் – “காலுறைகளையும் காலணிகளையும் கழற்றி அங்கேயே வைத்துவிட்டு தன் கைப்பையை அறையின் வாசலில் வைத்துவிட்டு வருகிறான் (‘எவரேனும் நம்பிக்கையுரியவர்களிடத்தில் நம் பொருளை ஒப்படைத்துவிட்டு அதைப் பற்றி கவலைகொள்ளாதிருக்கும் விதமாய் உள்ளே வந்தனர்’)” – அந்தச் சிறுவனும் அவளளவிற்கே நம்மில் பதிந்து விடுகிறான்.

11
வெங்கட்ரமணன்

 

 

வண்ணதாசனின் படைப்புகளுக்கு என பொதுவான சில அம்சங்களைச் சொல்லமுடிகிறது:

அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதம் மீதான நம்பிக்கை.

ஆர்வமும் குறுகுறுப்புமாக நிகழவிருக்கும் ஆச்சரியங்களுக்கு தன்னை ஒப்புகொடுத்துவிட்டு, உலகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது.

இரத்ததைச் சூடாக்கும் எரிச்சல் வந்தாலும் சமநிலை தவறி வார்த்தைவிட்டுவிடாத மனிதர்கள்.

‘சரி விடு போ! அவனும் மனுசந்தானே, ஏதோ பண்ணிட்டான்’ என்று கசப்பான கடந்தகாலத்தை ஒதுக்கி நிகழ்காலத்தில் வாழும் குணம்.

முக்கியமாக, சொல்ல வேண்டியவற்றை பறைசாற்றும் விதமாக அல்லாமல் ஒழுக்காறாக, கச்சிதமாக, subtle-ஆக சொல்லும் விதம்.

அகம்புறம் கட்டுரைகள் – மிகவும் சுதந்திரமானதொரு மனநிலையில் (கதைகளும் அப்படித்தான், ஆனால் கதைகளுக்குத் தேவைப்படும் சின்னச்சின்னக் கட்டுப்பாடுகள் கூட தேவைப்படாமல், நின்று நிதானமாக, தன் போக்கில்) எழுதப்பட்டவைகளாகவே தோன்றுகிறது. அனைத்துக் கட்டுரைகளுமே கதை-போன்ற-கட்டுரைகள் அல்லது கட்டுரை-போன்ற-கதைகள் என்றே வகைமைப்படுத்தக்கூடியவை. பல கட்டுரைகள் நினைவில் வந்து மோதுகின்றன…

பள்ளிநாள்களின் நன்விடை தோய்தல் (நாஸ்டால்ஜியா), கண்ணாடி போடப்பட்ட தருணம், அப்பாவின் மீதிருக்கும் பயம் கலந்த மரியாதை (‘அன்று ஏதோ விசேஷம்; அப்பா வீட்டிலிருந்தார்; அப்பா வீட்டிலிருப்பதே விசேஷம் என்பது வேறு‘), அம்மாவை இழந்த சலாகுதீன் சார் வீட்டில் துக்கம் விசாரிக்கப்போய் அதைத் தவிர அனைத்தயும், காற்றிலலையும் புகை போல் பேசிக்கொண்டிருந்து விட்டு சுவரில் மாட்டியிருக்கும் இரட்டை பனையோலை விசிறிகளைப் பற்றி இவர் ஏதோ எதேச்சையாய் கேட்க, சார்வாள் சன்னமாக ‘அது எங்கம்மாவோட விசிறி சார்‘ என்று சொல்ல, கட்டுரையை முத்தாய்ப்பாக முடிக்கிறார் (‘அப்போதுதான் இருவரும் பொருத்தமானச் சொற்களைப் பேசினோம்‘).

மென்மேலும் குணாதிசயங்கள் அணிவகுத்துக்கொண்டே இருக்கின்றன – இவரின் சமகால மனிதர்களின் சினிமா மோகம் (சுகா உள்ளிட்ட திருநெவேலிக்காரர்களின் சினிமாக்கோட்டி பற்றி புத்தகமே போடலாம்!), தன் சுயசோகத்தைப் பெரிதாக எண்ணாமல் பாடமெடுக்கும் ஆசிரியர்கள், அற்புதமான கலைஞராக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ‘டிராயிங்’ வாத்தியார், அவரின் பென்சில் சீவும் நேர்த்தி, எப்போது பென்சிலைக் கூராக்கினாலும் அவரை நினைத்துக்கொள்வது (‘கலை தனக்குரியவனை எப்படியும் கண்டுகொண்டுவிடும் என்றே தோன்றுகிறது‘), சிறுவயதுக் கேள்விகள் (ட்ரஃபால்கர் சதுக்கத்தில் ஏன் அவ்வளவு புறாக்கள்’, ‘சப்போட்டாவின் விதைகளின் கறுப்பு ஏன் அவ்வளவு பிடிக்கிறது’, ”இரும்புத்திரை’ என்று ஒரு சினிமாவுக்குப் பெயர்’, ஒரு கதைக்கு ‘முன் நிலவும் பின் பனியும்’ என்று ஜெயகாந்தன் வைத்தது எவ்வளவு அருமையான தலைப்பு! சதுக்கம் என்ற சொல் ஏன் ரொம்பப் பிடித்திருக்கிறது?) மஞ்சாடி விதைகளையும், கோலிகுண்டுகளையும் சேகரிக்கும் சிறுவனாக அவரின் கேள்விகள், கவனிப்புகள் … ஒவ்வொருமுறை இந்தத்தொகுப்பை வாசிக்குந்தோறும் அட்சயப்பாத்திரமாக வண்ணங்களை அள்ளிவழங்கும் ஒரு கலைடாஸ்கோப்.

வண்ணதாசனின் கவிதைகளைச் சிலாகிக்க முடிந்திருக்கிறது- ‘கூண்டுக்கிளிகளின் உறவில் பிறந்த கிளிக்கு எதற்குச் சிறகுகள்‘ போன்றவை தண்ணீரில் கல் விழும்போது ஏற்படும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் கதைகளை வாசிக்குமளவு கவிதைகளை அதன் அனைத்து அர்த்தங்கள், படிமச்சாத்தியங்களுடன் வாசித்திருக்கின்றேனா என்றால்.. இல்லை என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்கும்.

ஒருமுறை கிரிவலத்தில் நிமிர்ந்து நிலவைப்பார்த்தபோது ‘நிலாப்பார்த்தல்’ நினைவுக்கு வந்து.    வண்ணதாசன் படைப்புகளின் இயல்பும் இதுதான் என்றே படுகிறது – மனதுக்கினியவைகளை, நெகிழ்ச்சியூட்டும்/அசைபோடத்தோன்றும் தருணங்களை நினைவுபடுத்துவது, வாழ்க்கையொன்றும் அவ்வளவு சிக்கலில்லை, சற்றே ஈரமும் நம்பிக்கையும் இருந்தால் அர்த்தமுள்ள ஒரு வாழ்வை நாமும் வாழ்ந்துவிட முடியும் என்று நம்பிக்கையளிப்பது – வேறு ஏதேனும் பெரிதாக வேண்டுமா…தெரியவில்லை.

 

முந்தைய கட்டுரைவாழ்வை நேசித்தவனுக்கு…
அடுத்த கட்டுரைவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்