அன்புடன் ஆசிரியருக்கு
அதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு பன்னிரண்டு வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியின் மனதில் என்பது மனதை உலுக்கவே செய்கிறது. குழிகளாய் தரையில் நீண்டு செல்லும் தூண்களின் நிழல் ஒரு கிழவி மட்டும் ஒரு அறையில் கட்டிலில் படுத்திருக்கும் வேறு யாருமற்ற பெரிய வீட்டில் இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் தனியே அமர்ந்திருக்கும் பெண்ணை பயமுறுத்தவே செய்யும். அந்த பயத்தை கூட உணர முடிகிறது. அது பயம் கூட கிடையாது. வெறுமைக்கும் தனிமைக்குமான தொடக்கம்.
வண்ணதாசனை அவ்வளவு அணுக்கமாக உணர்கிறேன். அவர் உலகம் மிக மெல்லியவற்றால் சமைக்கப்பட்டிருக்கிறது. மெல்லியவை என்பதாலேயே அவற்றில் விழும் ஒவ்வொரு கீறலும் மிகுந்த வலி தருகின்றன. சாலையோரம் உடைந்த முருங்கையில் இருந்து பூத்த பசுங்கொப்பு,மனைவியோடல்லாமல் பிள்ளையை தனியே தூக்கிக் கொண்டு மாமியார் வீட்டிற்குச் செல்வது, படிகளில் அமர்ந்து பேசுவது, செல்லப் பெயர் சொல்லி அழைப்பது, அப்பாவின் செருப்பினை ரோட்டிலும் ரோட்டாரப் பள்ளத்திலும் மாற்றி மாற்றி வைத்து நடப்பது ,வீட்டுக்கு பின்புறம் வாய்க்கால் ஓடுவது என வண்ணதாசனின் கதை மாந்தர்கள் மகிழ இவையே போதுமானதாக இருக்கிறது. பிரியத்துடன் தொட தழுவ அவர்களின் கை நீண்ட படியே இருக்கிறது.
பெற்றோரை இழந்த சோமு அண்ணனின் துயர் அவரது தங்கை “போன்றவளின்” வழியாக அவள் மகளுக்குள்ளும் நுழைகிறது. சோமு அண்ணன் மனைவியை இழக்கும் போது அம்மாவின் துயரை அப்பெண் கையாளும் தேர்ச்சியே சொல்லி விடுகிறது அவ்வன்பின் உக்கிரத்தை. பல “போன்றவர்களை” காண முடிகிறது அவர் உலகில். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்ட எவ்வித உறவையும் பாசத்தையும் வண்ணதாசன் முன் வைப்பதில்லை. மந்திரத்து மாமா பாஸ்கரன் பெரியப்பா செம்பா காந்தி சிந்தாமணி அக்கா என அவர் காட்டும் மனிதர்களில் கொதித்து வெளியேறத் துடிக்கும் உணர்வுகள் ஒரு எவர்சில்வர் கிண்ணத்தால் மூடப்பட்டது போல தளதளத்துக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை வண்ணதாசனின் உலகே சொல்லப்படாதவற்றால் சில சொற்களில் வகுத்து விட முடியாதவற்றால் ஆனதுதான் போல.
அவரின் கதை மாந்தர்கள் குறைவாகவே பேசுகின்றனர். எண்ணுகிறவற்றை சொல்ல முடியாமல் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். உக்கிரமான தவறுகளும் அதற்கான சரிகட்டல்களும் மனதில் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சிறுகதைகள் வழியாக மட்டுமே இதுவரை நான் அணுகிய படைப்பாளி புதுமைபித்தன் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவராக வெளிப்படுகிறார் அவர். வேதசகாயகுமார் போன்ற மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர்களால் மட்டுமே புதுமைபித்தனின் படைப்புலகில் ஒரு நேர்க்கோட்டினை இழுக்க முடிகிறது.
வண்ணதாசன் ஒவ்வொரு படைப்பிலும் தன்னைத் திறந்து வைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இயல்பான பிரியத்தினுள்ளும் அக்கறையின் உள்ளும் உறையும் காமத்தையும் வன்முறையையும் அவர் அடங்கிய குரலில் சொல்கிறார். அக்குரலின் நிதானத்தாலும் இயல்பான தன்மையினாலுமே அவர் படைப்புகள் விவாதிக்கும் உலகம் மறுக்க முடியாததாகிறது. ஒவ்வொரு கணமும் முகத்தில் அறைகிறது. ஒரு விதத்தில் வண்ணதாசனுடையதும் மரபினை சீண்டும் ஒரு கலகக் குரலாக படைப்பினூடாக ஒலிக்கிறது. ஆனால் அக்குரலில் வெறுப்பில்லை. ஏன் பரிகாசம் கூட இல்லை. அம்மரபு அளித்த ஆழ்ந்த நிதானமும் மௌனமும் கொண்டதாக அக்குரல் ஒலிக்கிறது.
“எந்த வாழ்க்கையும் சக்கையானதில்லை. எந்த மனிதரும் தக்கையானவரில்லை” என்கிறார் சின்னு முதல் சின்னு வரை முன்னுரையில். அவர் படைப்புகளும் அதை நிரூபிக்கின்றன. ஒரு புள்ளி விலகினாலும் தட்டையாகவோ சக்கையாகவோ ஆகி விடக்கூடிய வாழ்க்கைகளைத் தான் சொல்கிறார். ஆனால் அப்புள்ளி விலகவே வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது.
நேற்று பன்னிரண்டு மணி வரை அவரைப் படித்து விட்டுப் படுத்தேன். விடியலில் ஒரு கனவு. தோழி ஒருத்தி சாதாரண சோர்வேற்படுத்தும் அலுவலகப் பணிகள் குறித்து அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தபடி என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவ்வப்போது அவள் விழிகளில் இருந்து சில கண்ணீர்த் துளிகள் திரண்டு உருண்டு விழுந்தபடியே இருந்தன. எழுந்து கொண்ட போதே அவள் விழிகளை எப்போதும் கண்ணீருடன் இணைத்தே புரிந்து கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். அவள் விழிகளுக்கு கண்ணீர் அழகாகவே இருந்தது!
வீட்டிற்கு தினம் பசும்பால் கொண்டு வரும் சித்தி (தூரத்து உறவு) மகளுக்கு உடல்நிலை சரியில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். வாசலுக்கு பால் வாங்கச் சென்ற போது “சுபேதா எப்படி இருக்கு சித்தி?” என என்னையறியாமல் கேட்டுவிட்டேன். அப்பெண் பெயர் சுபேதா என்பது என் நினைவில் இருப்பதை கேட்டபோதே ஆச்சரியத்துடன் எண்ணிக் கொண்டேன். “அப்படித்தான் தம்பி இருக்கு” என்பதை சற்றே சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்தி. அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனக்கது “பிடித்திருந்தது”!
மேலும் நாங்குநேரியர்கள் வண்ணதாசனை திருநெல்வேலிக்குள் சிறையெடுத்து வைக்க நினைப்பதை அனுமதிக்கவே முடியாது! “பாங்காளியளா! “நீண்ட” உறவுமுறைகளை நினைவில் கொண்டு வாழும் ஆனால் நடைமுறையில் அத்தனை உறவுகளையும் தொட்டுப் பழக முடியாத அணுக முடியாதவர்களின் உள்ளே ஊற்றெடுக்கும் நெருக்கத்தையும் நேசத்தையும் அதன் அத்தனை தீமைகளுடனும் வன்மத்துடனும் கலந்தே தன் படைப்புகளை பின்னும் வண்ணதாசன் அந்த நினைவுகள் பொதிந்த அத்தனை பேருக்கும் அணுக்கமானவரே” என்று கை பிடித்துக் கொண்டே நாங்குநேரியர்களிடம் சொல்ல விழைகிறேன்.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்