அன்பு ஜெ,
உங்களுடைய வலைப்பூவை வாசிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எல்லா விசயங்களையும் நீங்கள் அனுகும் முறை மிக அழகாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. அதனால்தான் நெடுங்காலமாக எனக்குள் இருந்த இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். குல தெய்வங்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின் கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன். பிச்சாயி, தொட்டியச்சி என பல கதைகள் கிடைத்தன அவர்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மைப் போல மனிதர்கள் என அறிந்து பெரும் வியப்படைந்தேன். அந்த வரலாற்று இடங்களுக்கும் சென்று வந்தேன். மிகப் பெரிய அனுபவமாக அது இருந்தது. அந்தக் கதைகளில் ஒரு புறம் சைவமும் வைணவமும் ஆட்சி செய்கின்றன. (இதைப் பற்றி முன்பே நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.). மறுபுறம் கதைகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சில கதைகளைத் தவிற மற்றவை மிகவும் மோசமாக கற்பனைகளால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கின்றன. அவற்றை ஏதேனும் செய்து உண்மைக் கதையை கண்டறிய இயலுமா. மதுரைவீரன், சுடலை மாடன் என சில தெய்வங்களின் கதைகளில் மொத்த கதையையும் மாற்றாமல் ஒரு சில சம்பவங்கள் மட்டும் மாறுபட்ட கதைகள் வெவ்வேறுவிதமாக மக்களால் சொல்லப்படுகின்றன. இவற்றில் எந்த கதையை உண்மைக் கதையென நம்புவது என்பதே என்னுடைய கேள்வி. உங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.
நன்றி,.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
அன்புள்ள ஜெகதீசன்
குலதெய்வங்களைப்பற்றிய ஆய்வுகளை இரு கோணங்களில் செய்யலாம். சமூகவியல் கோணத்தில் அல்லது இறையியல் கோணத்தில்.
இரு தளங்களிலுமே அவற்றை ‘அப்படியே’எடுத்துக்க்கொள்ள முடியாது. அவை ஒரு குறிப்பிட்ட வகையான மொழிபுகள் [Narration] . தாங்கள் அறிந்த உண்மைகளை அம்மக்கள் ஒரு வகையான கதைகளாக ஆக்கி சொல்கிறார்கள். அக்கதைகளில் வரலாறு, தரிசனம் ஆகிய இரண்டும் புனைவாக ஆக்கப்பட்டுள்ளன. அந்த புனைவுக்கு ஒரு முறைமை உள்ளது. அந்த முறைமையை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே நம்மால் நாட்டாரியலுக்குள் செல்ல முடியும்.
சமூகவியல் ஆய்வுக்கு விரிவான சமூகவியல் புரிதல் ஒன்று தேவை. அதாவது சமூகத்தின் கட்டுமனம், அதன் அமைப்பு முதலியவற்றை பற்றிய ஒரு பொதுமனவரைபடம் என அதை சொல்லலாம். அந்த வரைபடத்தினை நிரப்ப நாம் நாட்டார் பாடல்கள் மற்றும் கதைகளில் இருந்து தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல இறையியல் ஆய்வில் இந்த நாட்டார் கதைகளை தொன்மங்களாக, குறியீடுகளாகவே எடுத்துக்கொள்ளவேணாடும்
அதாவது அவற்றில் சமூகவியல் உண்மை, மதம்சார் உண்மை என பல தளங்கள் உள்ளன. நீங்கள் சமூகத்தையும் மதத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராயும்போது அவை உருவாக்கும் வினாக்களை ஒட்டியே இந்தக்கதைகளை பொருள்கொள்ள முடியும். அல்லாமல் இவற்றுக்குள் ஒரே ஒரு கதை அல்லது ஒரே ஒரு உண்மை மட்டும் ஒளிந்துகிடக்கவில்லை. அந்த உண்மையை இவற்றை மட்டும் ஆராய்ந்து கண்டுகொள்ள முடியாது.
உதாரணமாக பொன்னிறத்தாள் அம்மன் கதை. அது சமூகவியல் நோக்கில் அருங்கொலை செய்யப்பட்ட பெண், குறிப்பாக கர்ப்பிணிப்பெண், மீது அக்காலத்து மக்களுக்கு இருந்த குற்றவுணர்ச்சியையும் அச்சத்தையும் காட்டுகிறது. கொள்ளையடிக்கும் மறவர்கள் எத்தனை அஞ்சப்பட்டார்கள், வெறுக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. இபப்டி பல அர்த்தங்கள்
அதே கதை இறையியல் நோக்கில் மனிதர்கள் எப்படி தெய்வங்களாக ஆகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் ஆவிகளாக ஆகிறார்கள். ஆவியாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள மன ஆற்றல் காரணமாக கடவுளை அடைந்து வரம்பெற்று தாங்களும் கடவுள்களாக ஆகிறார்கள். பெருந்தெய்வம் சிறு தெய்வத்தை உருவாக்குகிறது. இது ஒரு இறையியல் உண்மை.
இப்படி நாட்டாரியல் தரவுகளை நாம் நம்முடைய பார்வைக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே முக்கியமானதாகும்.
இந்த தளத்தில் நா.வானமாமலை, பக்தவத்சல பாரதி, முதல் அ.கா.பெருமாள் வரையிலானவர்கள் எழுதிய நூல்கள் உங்களுக்கு உதவும்
ஜெ