’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65

[ 6 ]

“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே, எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன் கொழுநன் எங்கே?” என்றார். அவள் அன்னை அதற்குள் புரிந்துகொண்டு அவளை அணைத்து “சின்னாள் நீ இங்கிரு” என்றாள். அவளை தன் இல்லத்திற்குள் கொண்டுசென்றாள்.

பெண்டிர் சூழ அவள் உள்ளறைக்குள் அமர்ந்தாள். அன்னை அளித்த நீரையும் உணவையும் உண்டாள். “என்னடி உன் எண்ணம்?” என்றாள் அன்னை. “கணவனிடம் பூசலிட்டாயா? நோக்கு, உன் கால்தடம் கலைவதற்குள் அவர் இங்கு வருவார்.” பெண்கள் சிரித்தனர். அவள் “இல்லை அன்னையே, அவர் வரப்போவதில்லை” என்றாள். அன்னை முகம்கூர “நான் உரைத்தேனே,  இங்கு கன்னியென திரும்பியிருக்கிறேன்” என்றாள். “என்னடி பேசுகிறாய்? மங்கலநாண் சூடி மறுகுடி சென்றவள் கன்னிமை நோன்பு ஏற்பது எப்படி?” என்று அன்னை கேட்டாள். “அன்னையே, ஒவ்வொன்றாக உதிர்த்து என் கன்னி நாட்களுக்கு திரும்பிச் செல்கிறேன். கன்னியழகை எனக்கு அளித்த தெய்வங்களை வரவழைக்கிறேன். அவர்களிடம் இக்கருமையழகை உதறி பொன்னழகை எனக்களிக்கும்படி கோருகிறேன்” என்றாள் காளி.

அன்னை “நீ சொல்வது பொருளற்றது, மகளே.  கொழுநனை கைபிடிக்கும் கணத்திலேயே உன் கன்னியழகுகளை கடந்துவிட்டாய். அதன்பின் திதலையும் பசலையுமென உன்னுடல் உருமாறிக்கொண்டிருக்கிறது. அன்னை என்றானபின் கன்னிவாழ்க்கை ஒரு தொலைகனவு மட்டுமே. நீ அறியமாட்டாய், இங்குள்ள அத்தனை பெண்டிரும் அவர்கள் கைவிட்டு வந்த அக்கன்னி வாழ்க்கையையே எண்ணி தங்கள் அறையிருளுக்குள் பிறரறியாமல் நீள்மூச்செறிகிறார்கள். முதற்புலரியில் விழிப்பு வருகையில் அக்கன்னி வாழ்க்கையின்  சில கணங்கள் கனவில் வந்து ஆடிச்சென்றதை எண்ணி கண்ணீர்விடாத பெண் இங்கெவரும் இல்லை” என்றாள்.

“தவம் என்பது நதி மலை மீளுவதுபோல, பறவை முட்டைக்குத் திரும்புதல்போல” என்றாள் காளி. “அரிதென்பதால்தான் அது தவம்.” அன்னை அதன்பின் சொல்சேர்க்கவில்லை. அவளை நோக்கி விழிநீருடன் அமர்ந்திருந்தாள். அவள் எழுந்து வெளியே சென்று குடிமூத்தார் சூழ மன்றமர்ந்திருந்த கராளரிடம் “தந்தையே, நான் கேட்டவற்றை அளியுங்கள்” என்றாள். அவள் குலம் கொந்தளித்தது. “இங்கு வந்து என் மகள் கைபற்றிச் சென்ற அவன் இவள் இங்கு வந்திருக்கும் நிலைக்கு பொறுப்பானவன். எழுக, நம் குலம்! அவனிடம் சென்று அறம் உரைப்போம். அது அவனுக்குப் புரியவில்லையென்றால் மறம் என்னவென்று அவனுக்கு தெரியவைப்போம்” என்றார் அவள் தாய்மாமன்.  கராளர் “என் குலமலரை விழிநீர் சிந்தவைத்துவிட்டான்” என்றார். “அவனை இழுத்து வந்து நம் குடிமன்றில் நிறுத்துவோம்” என்றனர் இளையோர்.

கைநீட்டி உரத்த குரலில் கூவி காளி அவர்களை தடுத்தாள். “தந்தையே, இது அவருக்கும் எனக்குமான ஆடல் மட்டுமே. இங்கு நான் வந்தது எனக்கென அமைந்துள்ள பிடிநிலம் இங்குள்ளது என்பதனால்தான். அதிலுள்ளன என் இளமைநினைவுகள்.” கராளர் “நன்று, மகளே! உனக்கு உரியது செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். அவர் ஆணைப்படி அக்காட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சோலை தெரிவுசெய்யப்பட்டது. கன்னியராக மண்மறைந்த பெண்களை மண்ணளிக்கும் இடம் அது. நூற்றெட்டு கன்னியரின் கல்பதுக்கைகள் அங்கு இருந்தன.

அச்சோலையில் அமைந்த குடிலுக்கு தன் மகளை கைபற்றி அழைத்துச் செல்கையில் அன்னை சொன்னாள் “நீ இன்னும் சிறுமியைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய், மகளே. ஒன்றறிக! மணம்முடித்து இல்லம்விட்டு கிளம்பிச்சென்ற எந்தப் பெண்ணும் மீண்டும் அந்த அன்னை இல்லத்துக்கு வந்ததில்லை. இங்கு நீ காணும் இந்தத் தூண்களும் சுவர்களும் திண்ணையும் அடுமனையும் இங்குதான் உள்ளன. நீ வளர்ந்த இல்லம் இங்கில்லை. இப்புவியெங்கும் பெண்கள் தாங்கள் விட்டுவந்த இல்லம் நோக்கித் திரும்பி அது அங்கு இல்லையென்று அறிந்து விழிநீருடன் திரும்பிச்செல்கிறார்கள். நீ வந்திருக்கலாகாது.”

“நானும் ஓர் இல்லாளே. இல்லாடலென்றால் எப்பெண்ணையும்போல் நானும் அறிவேன். இவ்வாடலில் நானோ உந்தையோ இங்குள்ள உன் குலமோ ஒரு தரப்பே அல்ல. இது இருவாள்களின் கூர்கள் உரசி அறியும் ஒரு தருணம். பெருங்காதலின் களியாட்டுக்குப் பின் இது நிகழ்ந்தாகவேண்டும். உன்னை நீ அவருக்கு முற்றளிக்கப்போவதில்லை. அவரும் தன்னை  உனக்கு முற்றளிக்கப்போவதில்லை. நீங்கள் எதை எதுவரை அளித்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று முடிவாவதன்பொருட்டு நிகழும் பூசல் இது. நீ அங்கு அவர் கண்முன் இருந்திருக்கவேண்டும். இங்கு வந்தாலும் நீ அங்குதான் குடியிருப்பாய்.”

“ஆம்” என்று அவள் சொன்னாள். “ஆனால் தவமென்று எண்ணியபோதே நான் உள்ளிய இடம் இதுவே. ஏனென்றால் கன்னியென்றும் சிறுமியென்றும் குழவியென்றும் இங்குதான் வளர்ந்திருக்கிறேன். அன்றிருந்த அந்நிலத்திற்கு நான் மீள முடியாது. ஆனால் அன்றிருந்த என்னைச் சூழ்ந்திருந்த நிலமும் காற்றும் நீரும் இங்குதான் உள்ளன. அவை என்னை அறியும். கன்னிமாடம் அங்கு அமையட்டும் என்று எண்ணியது அதனால்தான்.”

காளியின் தோழியர்களான ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவளுடன் தங்கினர். ஆண்கள் எவரும் அவளை பார்க்கலாகாது என்று குலநெறி வகுக்கப்பட்டது. அவள் வாழ்ந்த சோலை எல்லை வகுக்கப்பட்டு வேலியிடப்பட்டது. தந்தையும் அவளை பார்க்கவில்லை. பின்னர் பிற பெண்டிரும் அவளை பார்க்காதொழிந்தனர். நாளடைவில் அன்னையும் அணுகாதானாள். தோழியர் நால்வரால் புரக்கப்பட்டு தன் முழுத்தனிமையில் அவள் அங்கே இருந்தாள். தன்னுள் கருப்பை வடிவில் குடியிருந்த பிரம்மனின் பீடத்தை எண்ணி தவமிருந்தாள். முதற்புலரியின்போது எழுந்து படைப்பு முதல்வனை வணங்கி நோன்புணவை அருந்தி நாள் கடந்தாள். இரவில் தன்னைச் சூழ்ந்த அனைத்தையும் முற்றுதிர்த்து உள்ளம் என்றே அங்கிருந்தாள்.

அவள் உடல் மாறிவந்ததை தோழியர் அறிந்தனர். மணம்கொண்டபின் கூடிய மங்கலங்கள் அனைத்தும் அகன்றன. தோளும் இடையும் கன்னிபோல் மெலிந்தன. பின் சிறுமியென்றாகி ஒடுங்கின. யாழின் கார்வை கொண்டிருந்த குரல் நீர்த்து குழலின் மென்மை கொண்டது. நடையில் அமைதி குலைந்து சிறுதுள்ளல் வந்து கூடியது. ஓரவிழிப் பார்வை அகன்றது. அச்சமற்ற நேர்விழி நோக்கமைந்தது. சொல்லெண்ணிப் பேசும் சித்தம் மறைந்து வெள்ளிமணிக் கொலுசென சிரித்தாள். அச்சிரிப்பில் கலந்த சொற்களாக உரையாடினாள். விழிகளில் மான்கருமை அகன்று சிறு நாய்க்குட்டியின் பேதைமை வந்து படிந்தது.

வான் நோக்கி நிலவில் விழிநட்டு அமர்ந்திருக்கும் தனிமை அவளிடமிருந்து விலகி அருகிருக்கும் பொருளெதுவோ அதனால்  விளையாடப்படுபவளானாள். கூழாங்கல் பொறுக்கி சோழியாடினாள். சிறு விதைகளை தெரிந்து கொண்டுவந்து செப்புகளில் சேர்த்தாள். காலை எழுந்ததுமே முற்றத்து மலர்களை நோக்குவதற்காக சிற்றாடை பறக்க துள்ளி ஓடினாள். சாலையோரம் உதிர்ந்து கிடந்த ஒரு வண்ண இறகைக் கண்டதும் உவகை கொண்டு கூவி கைதட்டி ஆர்ப்பரித்து அதை எடுத்து கொண்டுவந்து தோழியரிடம் காட்டிச் சிரித்து துள்ளினாள். சுவைகளில் நாட்டம் கொண்டவளானாள். பின் அனைத்தும் சுவையே என்றாகியது. புளிக்காய்களும் துவர்க்கும் குருத்துகளும்கூட அவள் நாவுக்கு உகந்தன. கன்னம் கூர்கொண்டது. இதழ்கள் குமிழ் அகன்றன. கூந்தலிலும் கழுத்திலும் பளபளப்பு குறைந்து மென்வெளிறல் கூடியது.

சிறுமியென்றாகி சூழ்ந்திருந்த சோலை மட்டுமே அறியும் மந்தணங்கள் கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் கருக்குருதி நின்றது. பல மாதங்களுக்குப் பின் ஒருநாள் அடிவயிற்றை கைகளால் பொத்தி முழந்தாள் மடித்து அமர்ந்து அழுதாள். மலர் கொய்துகொண்டிருந்தவள் எண்ணியிராது குடலையை வீசிவிட்டு  அழும் ஒலி கேட்டு தோழியர் ஓடிச்சென்று நோக்கினர். “என்னடி? என்னடி?” என்றாள் ஜயை. “முள் பட்டுவிட்டதா விரலில்?” என்றாள் விஜயை. “எதையேனும் மிதித்துவிட்டாயா? இங்கு சிறு நாகக்குஞ்சுகள் உண்டே!” என்றாள் ஜயந்தி. அபராஜிதை அவள் முகம்பற்றி மேலேதூக்கி விழி நோக்கியதுமே அறிந்துகொண்ட புன்னகையுடன் “அதுதான்” என்றாள்.

அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். அச்சொல்லிலேயே அனைத்தையும் உணர்ந்தனர். இரு கைகளாலும் அவளை அள்ளி மெல்ல கொண்டுசென்றனர். தென்கிழக்கு குடில் மூலையில் அவளை அமர்த்தினர். குறுக்கே உலக்கையை அரண் வைத்தனர். ஈச்சை ஓலை துடைப்பத்தை துணைக்கு அமைத்தனர். அருந்த நீரும் இன்மாவின் உருண்டைகளும் கொண்டுவந்து அளித்தனர். “ஐந்து நாள் இங்கிரு. மீண்டும் ஒரு பெண்ணாக எழவிருக்கிறாய்” என்றாள் ஜயை. “அலையெனச் சுருண்டு பின் வாங்கிவிட்டாய். வளைந்து மீண்டும் எழவிருக்கிறாய்” என்றாள் விஜயை. “ஆம், ஆறு மலையடைந்துவிட்டது” என்றாள் ஜயந்தி. “முட்டைக்குள்ளிருந்து ஓடுடைத்து வெளிவரும் நாள் இனி” என்றாள் அபராஜிதை.

அன்று இரவில் வெளியே ஓர் உறுமல் கேட்டு அபராஜிதை திகைத்தெழுந்தாள். மெல்ல சென்று சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கி வியப்பொலி எழுப்பினாள். அன்று வளர்நிலவு பத்தாம் நாள். முற்றத்திற்கு அப்பால் நின்ற முல்லைக்கொடி படர்ந்த மஞ்சணத்தி மரத்திற்கு அடியில் பிடரிமயிர் பறக்க ஆண் சிம்மமொன்று நின்றிருப்பதை கண்டாள். அது ஓர் விழிமயக்கென்று முதலில் தோன்றியது. நாணல் எழுந்த சிறு மண்மேடு என எண்ணத்தலைப்பட்டது சித்தம். மீண்டும் ஒரு முறை உறுமி ‘நான் சிம்மம்’ என்றது அது. அதற்குள் அவள் தோழிகள் எழுந்து ஓடிவந்தனர். “சிம்மமா? இங்கு இப்படி ஓர் விலங்கை பார்த்ததே இல்லை” என்றாள் விஜயை. “அனலெழுந்து விலங்கானதுபோல் தெரிகிறது” என்றாள் ஜயந்தி. உகிர்க்கால்கள் மண்பொத்தி மெல்ல ஒலிக்க அசைவு ததும்பும் உடலுடன் முற்றத்திற்கு இறங்கிவந்து வாயில் முன் நின்று மீண்டும் உறுமியது சடைசிலிர்த்த சீயம். பின்னர் அங்கேயே வாயிலில் விழிபதித்து படுத்துக்கொண்டது.

“அது நம் இளவரசிக்குக் காவல்” என்றாள் ஜயை. “ஊனுண்ணி விலங்கு. ஆனால் அதன் கண்களில் அருள் உள்ளது” என்றாள் விஜயை. அவளிடம் சென்று அங்கு சிம்மம் ஒன்று வந்து அவளுக்கு காவலமைத்திருப்பதை சொன்னார்கள். அவள் விழிகள் அறியாத்தெய்வத்தின் நோக்கு கொண்டிருந்தன. ஐந்து நாள் அஞ்சும் சிறுமியென அம்மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தாள். தோழியரால் மஞ்சள் நீராட்டப்பட்டாள். சந்தனமும் அகிலும் கொண்டு அவள் உடலையும் குழலையும் நறுமணமூட்டினர். இரவும் பகலும் துணையென முறைவைத்து விழித்திருந்தனர்.

ஐந்தாம்நாள் முழுநிலவு. மெல்லிய யாழிசை ஒன்றை தோழியர் நால்வரும் ஒருங்கே கேட்டனர். “வண்டு முரல்கிறது போலும்” என்றாள் ஜயை. “இரவில் முரலும் வண்டுகள் உண்டா?” என்றாள் விஜயை. ஜயந்தி “அது கந்தர்வர்களின் இசை” என்றாள். இசை மேலும் மேலும் வலுத்தது. “நூறு வண்டுகள்” என்றாள் ஜயை. “ஆயிரம் பல்லாயிரம் என அவை பெருகுகின்றன போலும்” என்றாள் விஜயை.

ஜயை ஓடிச்சென்று சாளரத்தினூடாக வெளியே பார்த்தாள். காவல் சிம்மம் எழுந்து தொலைவை நோக்கி மெல்ல உறுமி எச்சரிக்கையுடன் கால்களை மெல்ல எடுத்துவைத்து பாய்வதற்காக உடல் தாழ்த்தியது. பெருகிவந்த யாழிசையால் கொண்டுவரப்பட்டவர்கள் போல வெண்சிறகுகள் பறக்கும் ஏழு கந்தர்வப் பெண்கள் அவ்வில்லம் நோக்கி வந்தனர். நுரைச்சிறகை மடித்து சுருக்கி ஆடையின் முந்தானை என்றாக்கி மண்ணில் கால்வைத்து ஒளி வடிவென்றாகி இல்லத்திற்குள் நுழைந்தனர். கைகூப்பி நின்ற ஜயை “காளியின் கன்னிமாடத்திற்கு வருக!” என்றாள்.

முதலில் வந்தவள் “என் பெயர் தீக்ஷை. நான் இவளை கன்னியென்று ஆக்க வந்தேன். கொண்டவற்றில் முற்றுறுதியை அளிப்பவள் நான்” என்றாள். “நான் ஸ்வாதை. இவளை மூதன்னையரின் நெறியில் நிறுத்துவேன்”  என்றாள் இரண்டாவதாக வந்தவள். மூன்றாமவள் தன்னை த்ருதி என்றாள். “குன்றாத் துணிவை இவளுக்கு அளிப்பவள்” என்றாள். நான்காமவள் தன்னை தயை என்றாள். “கருணையால் இவளை அன்னையென்றாக்குவேன்” என்றாள். ஐந்தாம் தேவி தன்னை க்ரியை என்றாள். “செயலூக்கத்தின் தெய்வம் நான்” என்றாள். ஆறாம் தேவியாகிய புஷ்டி “நான் அவள் உடலை வளரச்செய்பவள்” என்றாள். ஏழாம் தேவியாகிய லஜ்ஜை “அவளில் நாணத்தை நிறைப்பதே என் பணி” என்றாள்.

காளி எழுந்து கைகூப்பி “நன்று கந்தர்வப் பெண்களே, இக்கன்னியழகனைத்தையும் நான் சூடுவதற்குமுன் என் உடல் பொன்னொளி கொள்ளவேண்டும். அதன்பொருட்டே தவம் மேற்கொண்டேன்” என்றாள். தீக்ஷை திகைத்து “அறியாது பேசுகிறாய், இளையவளே. உடல் போர்த்திய தோல்கொண்டது அல்ல நிறம்.  உன் உள்ளமைந்த ஆழத்தின் விழித்தோற்றம் அது. கடல் நீலமும் அனல் சிவப்பும் அவற்றின் உள்ளியல்பால் ஆனவை என்று அறிக!” என்றாள். “அவ்வண்ணமெனில் என் ஆழத்தை மாற்றுக!” என்றாள் காளி.

“நாங்கள் உன்னில் விழி அறியும் புறத்தோற்றத்தை மாற்றும் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். உன்னைப் படைத்த பிரம்மனே உன் ஆழத்தை அறிவார்” என்றாள் த்ருதி. “அவ்வண்ணமெனில் பிரம்மன் எழுக!” என்றாள் காளி. “எங்கள் பணி உன்னை கன்னியென்றாக்குதல் மட்டுமே. நாங்கள் படைப்பிறைவனின் பணியாட்கள். பல்லாயிரம் கோடியெனப் பெருகி நாங்கள் இப்புவியெங்கும் வாழும் மானுடரை விலங்குகளை பறவைகளை நாகங்களை பூச்சிகளை புழுக்களை கன்னி எழிலூட்டுகிறோம். இதுவன்றி பிறிதறியாதவர்கள்” என்றாள் லஜ்ஜை.

“பிரம்மன் இங்கு எழுக!” என்று சொல்லி கைகூப்பி விழிமூடி ஒற்றைக்காலில் நின்று காளி தவம் செய்தாள். பதினான்கு நாட்கள் பிறிதொன்றிலாத சித்தத்துடன் நின்றிருந்தாள். அவளை நோக்கி விழியசைக்காது வாயிலில் நின்றிருந்தது செந்நிறச்சீயம். அவளைச் சூழ்ந்து காவல் நின்றனர் தோழியர். பதைத்தும் பொருளறியாது சுழன்றும் அங்கிருந்தனர் கந்தர்வப் பெண்கள்.

பதினான்காவது நாள் முற்றிருள் மூடிய கருநிலவின் இரவில் அவர்கள் மட்டுமே காணும் ஒரு முழுநிலவு ஒன்று வானில் எழுந்தது. அதன் ஒளி செம்பட்டுப் பாதையென நீண்டு அவள் குடில்வரை வந்தது. அதனூடாக நடந்து பொன்னுடல் கொண்ட அந்தணர் வடிவில் பிரம்மன் அவள் குடிலுக்கு எழுந்தருளினார். அவர் உள்ளே நுழைந்தபோது விளக்குகளின்றி அக்குடில் சுடர்விட்டது. அங்கிருந்த உயிர்களனைத்தும் விழிகொண்டு “எந்தையே!” என கைகூப்பின.  தன் சுட்டுவிரலால் விழி மூடி தவத்தில்இருந்த காளியின் நெற்றிப்பொட்டில் தொட்டு “விழித்தெழுக, இளையவளே! உன் விழைவென்ன? சொல்க!” என்றார்.

தவம் பொலிந்து விழிதிறந்த காளி “என் உடல் பொன்மயமாகவேண்டும்” என்றாள். “உன் ஆழம் முடிவற்றது, அறிவாயா? அம்முடிவிலியின் நிறம் கொண்டவள் நீ. அதைத் துறந்து ஒளிரும் புறப்பூச்சை நீ அடைய விரும்புவது ஏன்?” என்றார். “என் கொழுநனின் விருப்பம் இது. அவர் முன் பொன்னுடல்கொண்டு சென்று நிற்க விழைகிறேன்” என்றாள் காளி. “நீ இழப்பது மீண்டும் அடையப்பட இயலாதது என்று அறிக!” என்றார் பிரம்மன். “ஆம், அதை நன்கு அறிவேன்” என்றாள் காளி. “நான் அவருக்குரியவளாகவேண்டும். பிறிதெதையும் அதன்பொருட்டு இழப்பேன்.”

“பொன்னொளி பெறுக! பிறிதொருத்தியாகுக!” என்று வாழ்த்தினார் பிரம்மன். காளி உலையில் உருகி உருவழிந்து அச்சில் நிறைந்து மீளுருக்கொண்டு  எழும் பொற்சிலை என மேனி கொண்டாள்.  திரும்பி நோக்கியபோது அருகே கரிய உடல்கொண்ட பிறிதொரு பெண் நிற்பதைக் கண்டாள். பிரம்மன் “உன் கரிய தோலிலிருந்து எழுந்தவள். கோசத்திலிருந்து பிறந்தமையால் அவள்  கௌசிகை” என்றார். கரிய அன்னை புன்னகை செய்தாள். “தேவி, உன் இருள்வடிவு கொண்ட அழகனைத்தும் அவளிடமே எஞ்சும்” என்றார் பிரம்மன்.

திரும்பி நோக்கி “நன்று, அது நானிருந்த பீடம்” என்றபின் அன்னை பிரம்மனை வணங்கினாள். “நன்று சூழ்க!” என்று அவளை வாழ்த்தினார் பிரம்மன். வெளியே சென்று படிகளிலிறங்கி செந்தழலென பிடரி சிலிர்க்க நின்ற சிம்மத்தின் மேலேறி வடதிசை நோக்கிச் சென்று அவள் மறைந்தாள். கௌசிகை பிரம்மனை வணங்கி தென்கிழக்கு மூலையில் சென்று பீடம் கொண்டாள்.

அனற்சிம்மம் மீதேறி பொன்னுடல்கொண்டு தன்னை வந்தடைந்த காளியை முதலில் செஞ்சடையன் அடையாளம் காணவில்லை. ஏனெனில் அவள் சென்ற மறுகணம் முதல் அக்கரிய எழிலுருவையே தன் அகவிழியில் நிறைத்து தவம் செய்துகொண்டிருந்தான். அவன் உளம் உருகிய சொற்கள் நாண் தளர்ந்த வில்லின் அம்புகளென எழுந்து  அவள் காலடியில் விழுந்துகொண்டே இருந்தன. தன் சொற்களேதும் அவளை சென்றடையவில்லை என்பதை உணரும்தோறும் மேலும் தளர்ந்தான். காதலுடன் கொஞ்சியும் கண்ணீருடன் இறைஞ்சியும் சிறுமைந்தனென ஆகி பணிந்தும் அவன் அழைத்ததை அவள் அறியவில்லை. துறக்கப்பட்டவன் சிறுமைகொள்கிறான். இழக்கப்பட்டது பேருருக் கொள்கிறது. அவன் கரும்பாறை எழுந்த மலையடிவாரத்தில் சிறுநெருப்பென ஆடிக்கொண்டிருந்தான்.

தன் தவம் முடிந்ததென்று உணர்ந்து அவன் விழிதூக்கியபோது எதிரில் தோன்றியவளைக் கண்டு திகைத்தெழுந்து நின்றான். பின்னரே அவள் முகமும் சிரிப்பும் உணர்ந்து கைவிரித்து அருகே ஓடி அணுகி “தேவி, நீயா?” என்றான். “இதோ, நீங்கள் கோரிய பொன்னுடல்” என்று அவள் சொன்னாள். நெஞ்சுருக “என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா?” என்றான். “அதை நானும் அறிவேன். அது உங்கள் ஆழத்தால் நீங்கள் விழைந்தது. உங்கள் தகுதியால் நீங்கள் பெற்றது இது” என்று அவள் சொன்னாள்.

“இப்போது நீ பேரழகி. ஆனால் அக்கரியவளுக்கே  நான் என்னை முழுதளிக்க  முடியும். இங்கு அமர்ந்து தனிமையில் உணர்ந்தேன் அலகிலா கரிய நீர்வெளி நீ. அதில் சிற்றலை எழுப்பும் விசை மட்டுமே நான்” என்றான் சடையன்.  விழிநீருடன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். “என் அருகமர்க, தேவி! என்னைவிட்டு நீங்காதிரு. இன்றுமுதல் நீ என் தேவி. நீ கொண்ட அக்கரிய தோற்றம் என் அன்னை. அக்கடலைக் கடந்து இவ்வமுதத்தை எடுத்திருக்கிறாய்.” அவள் இடைசுற்றி தன் உடலுடன் சேர்த்து “என் இடமென ஆகுக! உடலென உடனிரு!” என்றான்.

புன்னகையுடன் அவள் அவனை தழுவிக்கொண்டாள். இருவரும் ஓருடல் ஆயினர். வெண்விடை வலமும் செஞ்சிங்கம் இடமும் நின்றிருக்க பொன்னிறமும் செந்நிறமும் கலந்த மாதொருபாகனாக மலைமுடி மேல் அங்கிருந்தனர்.

பின்னர் வெள்விடையும் உடுக்கும் வேலும் துறந்து அவன் காளிகம் என்னும் இக்காட்டுக்கு வந்தான். காளி தவம் செய்த அக்கன்னி மூலை கௌசிகவனம் என்னும் ஒரு சோலைக்கோயிலாக மாறியிருந்தது. அதில் பதினாறு கைகளும் வெறிவிழிகளும் கோரைப்பல் நகையும் கொண்டு கோயில் கொண்டிருந்தாள் கௌசிகை அன்னை. அவள் கரிய உடல் மிளிர அமர்ந்திருந்த கருவறைக்கு முன் செஞ்சடையும் நீறணிந்த மேனியும்கொண்டு மலை இறங்கி வந்த அயல்நிலத்துத் துறவியென நின்று அவன் கைகூப்பி வணங்கினான். “அன்னையே, உன் அடிபணிகிறேன். என் தலை மீது உன் கால் அமர்க! என் ஆணவம் பனித்து குளிர்ந்து சொட்டுக! இத்தென்னிலத்தை முற்றுரிமை கொண்டவள் நீ. உன் ஏவல் பணி செய்பவன் நான்” என்றான்.

 KIRATHAM_EPI_65

“கௌசிகை அன்னையின் காலடிகளால் புரக்கப்படுவது திருவிடத்துப் பெருநிலம்” என்றான் சண்டன். “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் மகாபைரவர் தன் காவியத்தில்.” ஜைமினி  “ஆம், பிடாரிக்கோலம் கொண்ட தாய்ப்பன்றியின் குட்டிகள் எனக் கொழுத்திருக்கின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான். சண்டன் நகைத்து “அதுவும் மகாபைரவரின் வரியே. வற்றாப்பெருமுலை சூடியிருப்பதனாலேயே அன்னை கொலைத்தேற்றையும் மதவிழிகளும் கொண்டிருக்கிறாள்” என்றான்.

முந்தைய கட்டுரைசுவையாகி வருவது- 2
அடுத்த கட்டுரைமென்மையில் விழும் கீறல்கள்