’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64

[ 5 ]

காளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப் பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த  தலைகுனிந்து அடியெண்ணி நடந்துவந்த  காளியை தாய்மாமன் கைபற்றி கொண்டுவந்து மன்றுநிறுத்தினார். தந்தையும் தாயும் வாழ்த்த அவள் மலர்மாலை சூடி மணை அமர்ந்தாள்.  குரவையிட்டு வாழ்த்தினர் இளமகளிர். வாழ்த்தொலி எழுப்பினர் இளைஞர். முழவுகளும் கொம்புகளும் முழங்கின. உச்சிமரத்தின் முகட்டிலேறி அமர்ந்து முழவிசைத்து காட்டுக்கு செய்தியறிவித்தனர்.”

குடிமூத்தார் கேட்டபோது தன் பெயரை காளையன் என்றும் பைநாகப் பெருங்குலத்தான் என்றும் அவன் சொன்னான்.  காளி அவனுக்கு உகந்த இணையே என்றனர் பெண்கள். அவளருகே அவன் நின்றபோது அந்தியும் இரவுமெனத் தெரிந்தனர். கருமையும் செம்மையும் கூடிய அழகிய குனிமுத்து அவர்களின் இணைவு என குழந்தைகள் எண்ணின. கரியிலெழும் கனல்  என்று எண்ணினர் குடிமூத்தோர்.

சிறுபறை அடித்து பாடி குலதெய்வங்களையும் நீத்தாரையும் வழுத்தி பூசகர் அவனை அக்குலத்திற்குள் எடுத்துக்கொண்டார்.  அவள் தந்தை கராளர் அவன் கையிலொரு கீறலிட்டு குருதிச்சொட்டு எடுத்து நீரில் கலந்து தங்கள் குடிகள்மேல் வீசினார். தான் அணிந்த எருக்கு மாலையை அவளுக்கு அவன் அணிவித்தான். அவள் காந்தள் மாலையை அவனுக்கு சூட்டினாள்.

தாய்மாமன் அவள் கைபற்றி அவனுக்களிக்க அரிமலர் பொழிந்த திரையில் மறைந்தது அக்காட்சி. விம்மியழுதபடி அன்னை தன் கணவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவர்கள் கை தொட்டுக்கொண்டபோது தொலைவில் இடி முழங்கியது. மின் ஒன்று காட்டை ஒளிரச்செய்து கடந்து சென்றது. வானமொரு தூவலாக மாறி மெல்ல மண் படிந்தபோது இளமழை பெய்யலாயிற்று.

பன்னிரு நாட்கள் இல்லாள் குடியில் புதுமணம் ஆடிவிட்டு அவள் அன்னையும் தந்தையும் குடியும் சுற்றமும் கண்ணீருடன் சூழ்ந்து விடைகொடுக்க அவள் கைபற்றி அழைத்து காட்டுக்குச் சென்றான். அவள் கன்னம் தொட்டு வாழ்த்தி கைமுத்தினர் அன்னையர். அவள் கைதொட்டு நெஞ்சில் வைத்து ஏங்கினர் கன்னியர். தாள் பணிகையில் தலைதொட்டு வாழ்த்தினர் முதுதந்தையர்.

வலக்கால் எடுத்துவைத்து அவள் அக்குடியின் எல்லை கடந்தபோது அந்தி விழுந்ததுபோல் அங்கு இருள் சூழ்ந்தது. நெஞ்சு கலுழ்ந்தபடி அன்னை நிலத்தமைந்து விம்மி அழுதாள். அனைவரும் சோர்ந்து எடைகொண்ட உடல்சுமந்தவர்கள்போல் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் சென்றுமறைந்த சித்திரம் விழிகளில் எஞ்சியிருக்க அப்பாதையை நோக்கினர். அவன் அணிந்த எலும்புமணி மாலையும் அவள் சூடிய கல்மணி நகைகளும் ஒலிக்கும் கிலுக்கம் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அது எப்போதும் அக்காட்டில் இருந்தது.

நூறு வளைவுகொண்ட அலையென வடக்கே எழுந்த விந்தியமலையின் உச்சியில் அமைந்த மலைக்குகை முப்பிரிவேல்போல் மூன்று வழிகளாக இறங்கி மண்ணுக்கடியில் சென்று பாதாள அனலை அள்ளிவந்தது. அவன் அக்குகையில் அவளுடன் வாழ்ந்தான். காலத்தை கணத்துளிகளாக்கி ஒவ்வொரு துளியையும் ஒரு முழுவாழ்வென்றாக்கி அவளுடன் அவன் காதலாடினான். பத்து விரல்நகங்களிலும் விழி கொண்டு அவள் உடலை அறிந்தான். முத்தங்களால் அவளை துளித்துளியாக உண்டு உண்டு மீட்டான். தேனில் பிறந்து தேனுண்டு தேன்திளைக்கும் தேன்புழுவென அவளில் இருந்தான்.

விழிகளை விழிகளுடன் கோத்து அவள் உள்ளத்தமைந்து சொற்களை எல்லாம் தான் உறிஞ்சிக்கொண்டான். சொல்லற்ற அமைதியில் இருவரும் ஒன்றென ஆனபோது சூழ்ந்திருந்த புவிப்பரப்பனைத்தும் செயல்கள் ஒருகணம் நிலைத்து இருண்டன. பின் ஆமென்று அவை நிலைமீண்டன. பறவைகள் எங்கோ வாழ் என்றும் ஈன்றவளே என்றும் கூவி உயிர்கொண்டன. அவள் அவனை செவ்விழிகளால் நோக்கி நாணியபோது வான் சிவந்தது. அவள் நாணம் கண்டு அவன் நகைத்தபோது வெயிலொளி பரவியது. அவர்களின் காதல் சொல் பொருள்கொண்டதுபோல் நீர் ஒளிகொண்டதுபோல் அனல் வெம்மை கொண்டதுபோல் மண்நிகழ்ந்தது என்கின்றது மகாபைரவரின் சொல்திகைந்த பிரசண்ட புராணம்.

இனிய காதல் ஓர் உறவல்ல, விளையாட்டு. ஆணும் பெண்ணும் ஆடத்தகுந்த  விளையாட்டு ஒளிந்தாடலே. நாளும் இரவும் அவர்கள் ஆடியதும் அதுவே. ஒருவரை ஒருவர் ஒருகணமும் ஒழியாது நோக்குபவர் மட்டுமே ஒளிந்தாடலின் உச்ச உவகையை அறிய முடியும். இலைகளின் பசுமையில்,  நீரின் நீலத்தில் பாறைப்பிளவின் வாயிருளில் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள். அவளை அறிந்த அவன் புலன்கள் முட்பன்றியெனக் கூர அவள் கால்தடமும் ஒலித்தடமும் மென்மணமும் தேடி அவளை கண்டுகொண்டான்.  பறவைக்குரலும் நிழலாடலும் ஒளியசைவும் தேர்ந்து அவளை கண்டுபிடித்தான். அவளோ தன் அல்குலும் முலைகளும் இதழ்களும் அறிந்த நுண்மை ஒன்றால் நேராக அவன் ஒளிந்திருந்த இடம் நோக்கி வந்து தழுவிக்கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் புதிய ஒரு காளியை அவன் கண்டுபிடித்தான். ஒவ்வொரு முறையும் புத்தம் புது காளையனை அவள் பெற்றாள். கண்டடைதலின் தருணத்தில் புதிதெனப் பிறந்தெழுந்து கூவி நகைத்து நீர்வழிப்படுபவன் புணையை என அவள் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டாள். அவளை அள்ளி மலரென தன் தலையிலும் மார்பிலும் சூடிக்கொண்டான். ஒவ்வொரு கண்டடைதலுக்குப் பின்னரும் முதல்முறை என உறவுகொண்டனர். உருகி இழைந்து ஒன்றென்றாகி அப்பெருநிலையின் அசைவின்மை சலித்து பிரிந்து மீண்டும் ஒளிந்தாடினர்.

பனியின் திரையிலும் புகையின் செறிவிலும் அவன் ஒளிந்துகொண்டான். ஒளிந்திருக்கையில் கண்டடையப்பட வேண்டும் என்று அவன் விழைந்தான்.  கண்டடையப்பட்டு கை தழுவி கால் பிணைத்து உடல் இணைகையில் உள்ளே ஒரு பகுதி ஒளிந்தே இருந்தது. ஒருபோதும் தாங்கள் முற்றிலும்  கண்டடையப் போவதில்லை என்றும் ஒரு துளியும் எஞ்சாது கண்டடையப்படவும் இயலாது என்றும் இருவரும் உணர்ந்தனர். எப்போதும் எஞ்சும் அவ்விடைவெளியிலேயே இருவரென்றாகி அங்கு நடிக்கும் அது தன் ஆடலை நிகழ்த்துகிறதென்று அறிந்தனர்.

துயிலும் அவள் செவியில் குனிந்து “என்னை தேடுக, இளையவளே!” என்றுரைத்து எழுந்து காலைச் செவ்வொளியில் கரைந்து அவன் உடல் மறைத்துக்கொண்டான். கையூன்றி எழுந்து அவள் அவனைத் தேடினாள். நெளியும் செம்மை படர்ந்த நீரில் காட்டுநெருப்பின் திரையில் பூத்த செண்பகத்தின் மரச்செண்டில் அவனை அவள் தேடினாள். அவளைத் தொடர்ந்து வந்து அறியாது முத்தம் கொடுத்து திகைத்துத் திரும்புகையில் நகைத்து அவன் நகையாடினான். தேடிச் சலித்து முகம் சிவந்து “தோற்றேன். என் முன் வருக, இறைவ!” என்றாள். “எங்கேனும் நீ மறைக! நான் உன்னை கண்டுகொள்வேன். அங்கு மட்டுமே என் உருக் காட்டுவேன்” என்றான்.

அவள் ஓடி காட்டுக்குள் சென்று இலைகளுக்குள் செறிந்த நிழலில் ஒளிந்தாள். பின்னர் அங்கிருந்து மேலும் இருண்ட குகைக்குள் சென்றாள். அங்கிருந்து இரவின் கூரிருளுக்குள் முற்றிலும் உடல் மறைத்தாள். இருளென்றாகி அருவமானாள். சிரித்தபடி தேடிய அவன் தன் புலன்கள் ஊமையானதை உணர்ந்தான். தன் உள்ளம் திகைத்தமைவதை பின்பு கண்டான். உள்ளமைந்த அறியா நுண்புலனும் கைவிட்டபோது அஞ்சினான். எனினும் கைகளிலும் கால்களிலும் அமைந்த அசைவின் அறியா நெறியால் தேடித் துழாவினான். சலித்து மெல்ல சினம் கொண்டான். “எங்கிருக்கிறாய்? என் முன் வருக!” என்றான்.

அவன் காதருகே சிரித்து “கண்டுபிடிக்கிறேன் என்றீர்கள், காத்திருக்கிறேன்” என்றாள். மேலும் பொறுமையிழந்து “எங்கிருக்கிறாய்? என் முன் வருக இப்போதே!” என்றான் முக்கண்ணன். “தோற்றேன் என சொல்லுங்கள், தோன்றுகிறேன்” என்றாள். “நான் எங்கும் தோற்பதில்லை” என்று அவன் சொன்னான். “தோற்றேன் என்று உரைக்காமல் உங்கள் முன் வரப்போவதில்லை” என்றாள். அக்கணத்தில் வந்து தைத்த கனலம்பு ஒன்று அவனை சீறச் செய்தது. “வரவேண்டியதில்லை. நீயிலாது முன்பு நானிருந்த நிலையே  முழுமையானது. செல்க!” என்று சொல்லி திரும்பி நடந்து தன் குகை மீண்டான்.

அங்கு அவளிலாத இன்மையே ஒவ்வொரு பொருளிலும் துலங்குவதைக் கண்டான்.  உளம் விம்மி நீள்மூச்செறிந்தான். அறியாது விழிகலங்க “காளி, நகையாடாதே. இங்கு எழுக!” என்றான். அவன் துயர் அவளுக்கு அறியா உவகை ஒன்றை அளித்தது. ஒளிந்துகொள்வதனூடாகவே பெண் ஆணை எப்போதும் வெல்கிறாள் என அவள் அறிந்தாள். எப்போதும் தணிபவள் ஒருமுறை வெற்றிச்சுவையை அறிந்தபின் எளிதில் மீளமுடியாதென்றும் உணர்ந்தாள். “வென்ற தருக்கனைத்தையும் நிலத்திட்டு கை தொழுங்கள்” என்றாள்.

தளர்ந்த குரலில் “கைதொழுதேன், வா!” என்றுரைத்தான். அவள் மேலும் எழுந்து “என் கால் தொட்டு வருக என்றுரையுங்கள்” என்றாள். “கால் தொடுகிறேன், வா!” என்றான். அவள் உடல் சிலிர்த்து விழிநீர் கோத்தது. அவளில் கூடினர் இருளுருவாக தென்திசையில் அமைந்த அவள் குடியின் மூதன்னையர். “உங்கள் முடித்தலை என் காலடியில் வளையவேண்டும்” என்றாள். எரிந்தெழுந்த சினத்துடன் “வேண்டாம். நீயில்லாது நான் நிறையிலாதோன். ஆனால் வளைந்திறுவதைவிட இக்குறையுடனே வாழ்வதே மேல்” என்றான். “நானென்று எஞ்சுவது அழிந்தபின் நான் கொள்வதும் வெல்வதும் எதை? விலகிச்செல்!” என்று கூவினான்.

அப்போதும் அவன் சினம் அவளுக்கு உறைக்கவில்லை. பின்னால் சென்று சிரித்து “தோற்பவர் கொள்ளும் சினம்தான் எத்தனை அழகு!” என்றாள். “விலகிச்செல்!” என்று அவன் கூவினான். முப்பிரி வேலை தலைமேல் தூக்கி “இக்கணம் என் முன் வந்தால் உன்னை கொன்றழிப்பேன். செல்… விலகு!” என்றான். “ஒளியில் மறைந்து என்னை ஆட்டிவைத்தீர்கள். இவ்விருளில் மறைந்து நான் ஆடுகிறேன். ஆணென்றால் வந்து என்னைத் தொடுங்கள் பார்ப்போம்” என்றாள். “இல்லை… இனி அந்த ஆடல் நம்மிடையே நிகழாது. இனி ஒருபோதும் உன்னை நான் தேடப்போவதும் இல்லை” என்றான்.

“அப்படியென்றால் நன்று. நான் செல்கிறேன்” என்று அவள் திரும்பிச்சென்றாள். அவன் தன் பின்னால் வருவான் என அவள் அப்போதும் எதிர்பார்த்தாள். கேட்கும் ஓசையெல்லாம் அவன் காலடி என்று மயங்கினாள். திரும்பிப்பார்க்காது சென்ற அவளுடலில் அமைந்து சித்தம் நொடிக்கொருமுறை திரும்பி நோக்கி ஏங்கியது. அவன் வரவில்லை என உணர்ந்ததும் முதலில் திகைத்து பின் சினந்தது. அது தன் பெண்மைக்கு அவமதிப்பென்று எண்ணினாள். எங்கு செல்லப்போகிறார் என்று இகழ்ச்சியுடன் எண்ணி அதை கடந்தாள். இருண்ட வேர்க்குவை ஒன்றுக்குள் சென்று உடலொடுக்கி அமைந்துகொண்டாள். அங்கிருக்கையில் முழுமையாக இன்மைகொள்ள இயல்வதை உணர்ந்தாள். அவ்விருளில் இருந்து அவன் விழிகளாலேயே தான் உருவென வரைந்தெடுக்கப்படுவதாக அறிந்தாள். களிமண்ணில் அவன் கைகள் தன்னை வனைந்தெடுத்து கலமென்றாக்கி அவன் கொண்ட அமுதை நிறைக்கின்றன. அதை அவன் உண்கிறான். அவன் கைவிட்டால் மீண்டும் களிமண் நிலமென்றாகி விரிந்து அவன் காலடிகளை நெஞ்சில் தாங்கி அமைவதன்றி பிறிதொரு வழியில்லை அவளுக்கு.

அவன் ஒரு சொல் எடுத்தால், ஒரு நோக்கசைத்தால் தாவிச்சென்று அவன் காலடியில் விழும்பொருட்டு காத்திருந்தாள்.  அவனோ அவளை மீண்டும் விழியிலிருந்தும் சித்தத்திலிருந்தும் இழந்தான். மீண்டும் அவள் தன்னிடம் ஒளிந்தாடுவதாக எண்ணினான். எத்தனை ஒளிந்தாலும் ஆணை பெண் தன் நுண்மையின் ஒரு முனையால் பின்தொடர்ந்துவிடமுடியும். தன்னை முற்றொளித்துக்கொள்ளும் பெண்ணை தன் உச்சப் புலனொன்றின் கூரால் கூட ஆண் தொட்டறிந்துவிட முடியாது. அவள் செல்லும் ஆழங்கள் முடிவற்றவை. அங்கு அவளுடைய மூதன்னையர் புன்னகைக்கும் விழிகளுடன் அவளை இரு கைகள் விரித்து பெற்றுக்கொள்கிறார்கள்.

உண்மை சினம் கொள்ளவைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ளவைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவிநெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை  சித்தம் அடிபிழைத்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது.

அவன் அவளை அழைத்தான் “காளி, எழுக! எழுக என் முன்! இது உன் கொண்டவனின் ஆணை!” அவள் அதை கேட்கவில்லை. சினத்தால் அல்ல, காதலாலேயே கருமையிலிருந்து திரட்டி எடுக்கப்படுபவள் அவள் என அவன் உணரவுமில்லை. “எழுக! இக்கணமே எழுக!” சினம் கொண்டு முப்பிரிவேலைச் சுழற்றி “இதோ ஆணையிடுகிறேன், நீ என்னை உளம் நிறுத்திய துணைவியென்றால் இத்தருணத்திலே வந்து என் முன் பணிக!” என்று முக்கண்ணன் கூவினான். அதிலிருந்த கரையற்ற பெருஞ்சினத்தைக்கூட காளி புரிந்துகொள்ளவில்லை. அவன் குரலைக் கேட்டதும் மீண்டும் அவள் முகம் புன்னகை சூடியது. அவன் ஒரு கனிந்த சொல்லை எடுக்கவேண்டுமென அவள் எண்ணினாள்.

“சினம் உங்களை மேலும் சிவக்க வைக்கிறது’’ என்று இருளாகி நின்று மெல்ல சிரித்தபடி சொன்னாள். அவள் குரலில் இருந்த காதலை அவன் இளிவரலென்று எண்ணினான். முப்பிரிவேலை நிலத்தறைந்து “இத்தருணத்தில் இங்கு வா! இல்லையெனில் நான் பூட்டிய மங்கலநாண் அறுத்து இங்கு இட்டுவிட்டு விலகிச் செல்!” என்றான். அப்போதுதான் அவள் அவன் கொண்ட சினம் என்ன என்று உணர்ந்தாள்.  உளம் நடுங்கி ஓடி வந்து அவன் முன் நின்று “என்ன இது? தாங்கள் சொல்வதென்ன?” என்றாள்.

“நீ என்னை வென்று செல்கிறாய். உன் இருளைப் பயன்படுத்தி என்னை சிறுமைப்படுத்துகிறாய். சிறுமகளே, என் ஒளியுடலின் ஒரு சிறு மரு என்று மட்டுமே அமையும் தகுதிகொண்டவள் நீ. கரியவளாகிய உன்னை ஒளியுடல் கொண்ட நான் ஏற்றது என் கருணையினால் மட்டுமே” என்றான். காளி கொழுநன் சினம் அறிந்த  மனையாட்டியரின் இயல்புக்கிணங்க மேலும் தாழ்ந்து “பொறுத்தருள்க! இது ஒரு களியாட்டென்றே கருதினேன். தாங்கள் சினம் கொண்டிருப்பதை உணரவில்லை” என்றாள்.

“இல்லை, நீ உணர்ந்தாய். என் சினத்துடன் நீ விளையாடினாய். இருளென என்னைச் சூழ்ந்து இளிவரல் தொடுத்தாய்” என்றான். “இல்லை, நான் விளையாடுகையில் என் கட்டற்ற கன்னிநாட்களுக்கு திரும்பிவிடுகிறேன். மங்கலநாண் சூடி பிறிதொருவருடன் இணைந்ததை மறந்துவிடுகிறேன். என் இளமை உள்ளத்தால் செய்த பிழை இது. பொறுத்தருள வேண்டும்” என்றாள் காளி.  அவன் பற்களைக் கடித்து நீர்மைகொண்ட விழிகளால் அவளை நோக்கி “நீ உன் மூதன்னையருடன் சென்று சேர்ந்தமைந்தாய். அவர்களின் பொருட்டே உன் காலடியில் என்னை விழும்படி கோரினாய். உன் குடிக்கு முன் நான் இழிவுசூடி நின்றிருந்தேன் என்றால் உன்னுள் வாழும் தொல்குடி அன்னை மகிழ்ந்திருப்பாள். அதை நான் அறிவேன்”  என்றான்.

அவள் ஒருகணம் திகைத்தாள். அது உண்மைதானோ என உளம் மயங்கினாள். மெல்லிய குரலில் “இல்லை, அது வெறும் காதல் விளையாட்டு…” என்றாள். அவள் குரலிறங்கியமை அவனை மேலும் எழச்செய்தது. வெறுப்புடன் நகைத்து “இல்லை, உன் உளமறியும் அதை. யார் உன் மூதன்னையர்? காட்டுக்கிழங்கும் தேனும் தேடியலைந்த மலைக்குறத்தியர்.  மொழிதிருந்தாத மூடர். கற்பெனும் நெறியிலாது மைந்தரை ஈன்று பெருக்கிய வெறும் கருப்பைகள். அவர்கள் முன் நான் அடிபணியவேண்டுமா என்ன?” என்றான்.

அவள் அச்சொற்களால் அனைத்தையும் மறந்து சினந்தெழுந்தாள். “ஆம், நான் அவர்களில் ஒருத்தி. அவர்களைப்போன்ற அன்னையர் ஈன்று பெருக்கியமையால் உருவானதே மானுடப் பெருங்குலம். அன்னையரையும் நீரையும் நிலத்தையும் பழிப்பவன் தன்னை இழிவுபடுத்திக்கொள்ளும் வீணன்.” அவள் சொல்மீறியது அவனை மேலும் உவகையே கொள்ளச்செய்தது. “ஆம்! இதோ, உன் நாவிலிருந்து எழுந்துவிட்டது உன் உளம்கொண்ட எண்ணம். நான் வீணன். உனை நாடிவந்த அரசர் கொண்ட செல்வக்குவையும் அரியணையும் இல்லாத மலைமகன். பித்தன், வெறும்பேயன்… நீ என்னை உன் சிறுகுடிக்கு முன் பணியச்சொன்னது அதன்பொருட்டே.”

முற்றிலும் தளர்ந்து அவள் மெல்ல விம்மினாள். கண்ணீரை கைகளால் மூட விரல்மீறி வழிந்தன துளிகள். நெஞ்சுலைய விசும்பியபடி “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் சொல்லும் சொல் எதுவும் உங்கள் நெஞ்சில் நஞ்சென்றே பொருள்கொள்கிறது” என்றாள். “ஏனென்றால் நீ உளம்கொண்ட நஞ்சு அது” என்றான் அவன். அவள் சூழலையும் அவனையும் மறந்து அழத்தொடங்கினாள். அழும் பெண் ஆணை வென்றவனாக உணரச்செய்கிறாள். உளமுருகவும் செய்கிறாள். அவன் மேலும் ஒரு சொல்லிடை வெற்றியை விரும்பினான். அதை கைக்கொண்டபின் அவளை அணைத்து முத்தமிட்டு மீட்டெடுக்கலாமென எண்ணினான்.

“உன் கருமை என் கண்ணை இருளச்செய்கிறது” என்றான். “உன் கீழ்க்குடிப்பிறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறது அது.” அவள் கைவிலக்கி கண்ணீர் அனல்கொள்ள நோக்கியபோது வென்றுவிட்டேன் என அவன் உள்ளம் உவகையில் துள்ளியது. அங்கு நிறுத்துவதே நலம் என அவன் அறிந்திருந்தபோதிலும் ஆயனின் சீழ்க்கை கேட்ட பின்னரும் மேலுமிரு காலடிகள் வைக்கும் கன்றுபோல சொல் முந்திச்சென்றது. “உலகை ஒளியூட்டும் செந்நிறம் நான். ஒளியனைத்தும் சென்று அமையும் முற்றிருள் நீ. நாமிருவரும் இணைதல் இயல்வதல்ல, செல்க!” என்றான்.

அவள் ஆழ்ந்த குரலில் “ஆம், நான் இருள் நிறம்கொண்டவள். அது புடவியின் நெறி. ஆதித்யர்களும் கோளங்களும் அவ்விருளின் சிறு மின்னல் துளிகள் மட்டுமே” என்றாள். அவள் குரலில் ஒலித்த அறைகூவலால் சினம்கொண்டு  அவள் விழிகளை நோக்கிய காளையன் அங்கு முழுமையான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு சற்றே அஞ்சினான். அதுவரை முற்றிலும் அடிபணிந்து நின்றிருந்த அவளுக்குள்ளிருந்து பெண்மையின் ஆணவம் பத்திவிரித்து எழுந்திருந்தது.

அதை உணர்ந்ததும் அவன் முழுமையாகவே பின்வாங்கிவிட்டான். அன்னையிடம் பாயும் அஞ்சிய மைந்தன் என அவளை நோக்கி கைவிரித்துச் செல்லவே உளமெழுந்தது. ஆயினும் அவன் நா “என் பொன்னிறம் உன்னில் ஒரு துளி மட்டுமே என்கிறாயா?” என்றது. “அனைத்து நிறங்களும் கருமையின் பரப்பில் அமைந்த சிற்றொளிகள் மட்டுமே” என்று அவள் சொன்னாள். இருவரும் சில கணங்கள் விழி கோத்தனர்.

இரு விசைகள் நிகர்கொண்ட உச்சதருணம். அது இருவரிலும் மானுடம்மீறிய உவகை ஒன்றை எழுப்பியது. போரிடும் உயிர்கள் கொலைத்தருணத்தில் அடையும் மெய்ப்பாடு அது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்கொண்டு எழுந்து நின்றிருக்கும் கணம். அதையறிந்த உயிர் பின்வாங்குவதே இல்லை.

காளி “நான் என்றும் இருக்கும் நிலை. என்னில் நிகழும் அலையே நீங்கள். இத்தருணத்தில் அதை உணர்ந்தமையால் நீங்கள் அடையும் சினம் இது. இதைக் காட்டவேண்டிய இடம் நானல்ல. இவையனைத்துமாகி நின்றிருக்கும் பிரம்மம். அங்கு சென்று சீறுக!” என்றாள். பெருங்காதலும் பெருஞ்சினமும் மிகச்சரியான தந்தியைத் தொட்டு மீட்ட வல்லவை. எந்தப் புள்ளியில் தன் வலியை மூவிழியன் உணர்ந்துகொண்டிருந்தானோ அங்கு பட்டன அவள் சொற்கள்.

இடிகொண்டு அனலான மரமென தழல்விட்டு கைநீட்டி அவன் சொன்னான் “நீ முழுமையென்றால் உன்னில் எழவேண்டும் அனைத்தும். செல்! எனக்குரிய அழகு வடிவம் கொண்டு இங்கு வா! உன்னை முகம் சுளிக்காமல் நோக்கி மகிழ என்னால் இயலுமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.” அவள் ஏளனத்துடன் இதழ்வளைத்து “இவ்வழகு வடிவத்தை தேடித்தான் நீங்கள் வந்தீர்கள்” என்றாள். அவன் “ஆம், அது காணும் பெண்ணையெல்லாம் வென்று செல்லவேண்டுமென்ற ஆண்மையின் ஆணவம் மட்டுமே.  உன் தந்தை விடுத்த அறைகூவலின் பொருட்டே உன்னை வென்றேன். உன்னை உடனுறையச் செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. உண்டு முடித்த கலம் நீ. இனி உனக்கு என் உள்ளத்தில் இடமில்லை. விலகு!” என்றான்.

அச்சொற்களில் அவள் ஒரு கணம் நடுங்கினாள். நலம் உண்டு துறக்கப்படுதல் என்பது பெண்மை என்றும் உள்ளூர அஞ்சும் கொடுநரகு, உலகாளும் அன்னை வடிவமே ஆயினும். தளர்ந்த குரலில் காளி “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “நான் மீண்டு வரவேண்டியதில்லையா? மெய்யாகவா சொல்கிறீர்கள்?” என்றாள். “செல்க, இனி ஒரு கணமும் உன்னை எண்ணிப்பார்க்க மாட்டேனென்று இதோ ஆணையிடுகிறேன். இப்புவியெங்கும் பிறந்திருக்கிறார்கள் எனக்குரிய பெண்டிர். நீ அதில் ஒரு துளி. அது உதிர்ந்துவிட்டது.”

அழுகையென ஒலித்த குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இனி என் விழிகளுக்கு நீ அழகல்ல. உன் உள்ளம் இனியெனக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதை மட்டுமே சொன்னேன்” என்றான். “இத்தனை நாள் நீங்கள் கொண்ட காதல் பொய்யென்று உரைக்கிறீர்களா?” என்றாள். அதிலிருந்த மன்றாட்டைக் கண்டு அவள் அகமே கூசியது. அவன் அத்தணிவால் மேலேற்றப்பட்டு உச்சி ஒன்றில் நின்று சொன்னான் “பொய்யல்ல, அத்தருணத்திற்கு உரியவை அவை. அக்கணங்களைக் கடந்து இங்கு வந்து நின்றிருக்கிறேன். உன்னை அங்கு முற்றுதிர்த்துவிட்டிருக்கிறேன். காதலில் ஆண் சொல்லும் அத்தனை சொற்களும் மின்னல் போன்று மறுகணமற்றவை. செல்!”

அனைத்துப் படைக்கலங்களையும் இழந்து கைதளர்ந்து கண்ணீர் வழிய விம்மியழுதபடி தலைகுனிந்து அவள் நின்றாள். அவள் அழுகைக் குரல் கேட்டு வீம்புடன் அவன் திரும்பி நின்றான். அவளுடைய அழுகையொலி அவன் நெஞ்சை அறுத்தது. மறைமுக உவகையுடன் அவன் அவ்வலியில் திளைத்தாடினான்.  “நான் ஒரு சொல்லுக்கென்று கூட உங்களை மறுதலிக்க இயலாது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றாள். அவன் உடலில் ஒரு சிறு அசைவு கடந்து சென்றது. “சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? எங்கு பணிய வேண்டும்? எவ்வளவு சிறுக்க வேண்டும்?”

அவன் வலியில் திளைப்பதன் சுவையை அறிந்துவிட்டிருந்தான். தன் கோட்டைகள் ஒவ்வொன்றையும் அவனே இடித்துச் சரித்தான். தன் உடலை குருதிவழியக் கிழித்து வீசினான்.  ஏளனம் நிறைந்த முகத்துடன் “சென்று இவ்விழிந்த கரிய உடலை அகற்றி பொன்னுடல் சூடி இங்கு வா! உன்னை என் துணையெனக் கொள்கிறேன். இனி கருமையின் கீழ்மையைச் சூட என்னால் இயலாது” என்றான்.

 KIRATHAM_EPI_64

அவள் உடல் தொய்ந்தபோது அணிகள் மெல்ல விழும் ஓசை எழுந்தது. முலைக்குவைகள் எழுந்தமைய நெடுமூச்சுவிட்டு “இதையே ஆணையெனக் கொள்கிறேன். பொன்னுடல் பூண்டு இங்கு மீள்கிறேன்” என்று சொல்லி திரும்பி நடந்தாள். அவன் அவள் செல்வதை முற்றிலும் தளர்ந்தவனாக நோக்கி நின்றான். ஒரு நாடகம் முடிந்துவிட்டதென அவன் அறிந்தான். ஆயிரம் முறை அவளை பின்னின்று அழைத்தான். அதை ஒலியாக்கும் ஆற்றல் அவன் உடலில் எஞ்சியிருக்கவில்லை.

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்குச் சாகித்ய அகாடமி
அடுத்த கட்டுரைவண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?