பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

IMG_8991

 

விஷ்ணுபுரம் வாசித்து முடித்ததும் அடைந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ணி இருந்தேன், ஆனால் விஷ்ணுபுரம் வாசகர் விவாதங்களைப் படித்ததும் அங்கு நான் பதிவு செய்ய ஏதும் இல்லை என்ற வெறுமையில் கடிதம் எழுதாமல் கடத்திவிட்டேன்.

பின் தொடரும் நிழலின் குரல் வாசித்ததும் நம் வாசகர் விவாதங்களை அலசாமல் கடிதம் எழுதிவிட்டேன், இல்லை என்றால் இதற்கும் தைரியம் வந்திருக்காது என்று நினைக்கிறன். தங்கள் வாசகப் பரப்பில் உள்ள வாசகர்களை பல படிநிலைகளாக  எடுத்துக்கொண்டால், நான் தற்பொழுது தான் ஆரம்பப் படிகளில் அடி எடுத்து வைத்திருப்பேன் என்று நினைக்கிறன், அவர்களைப் படித்தால் கடிதம் எழுத வராது என்பதால் உங்களுக்கு எழுதிய பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன்.

 

பின்தொடரும் நிழலின் குரல்:

நாவலின் தலைப்புக்கு ஏற்றாற்போலவே கதை முழுதும் பயணப்படும் நிழலும் அதன் உண்மைக் குரலும் இப்படைப்பின் உச்சம் என்பேன். யாருடைய குரல் அது?, புகாரி , வீரபத்திர பிள்ளை, அருணாச்சலம் யாருடைய குரல் அல்லது வாசகனாகிய என்னுடையதா அல்லது எங்கள் ஆசான் ஜெமோ … இல்லை இது உண்மையின் குரல், “ஒவ்வொருவனின் அகம் பேசும் உண்மையின் குரல்” என்பதே இந்நாவலின் ஒட்டுமொத்த  படிமம் குறியீடு என்று  எண்ணுகிறேன்.

நாவல் அக்கால கம்யூனிச சித்தாந்த மனிதர்களின் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தாலும், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும்  அப்படித்தானே.  உண்மைக்கும், அகிம்சைக்கும், அறத்திற்கும் எதிராக நம்ஒவ்வொருவரும் செய்யும் செயல்களை, அவை அனைத்தும் சரி என்பதற்காக நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க பூர்வ காரணங்கள்  அனைத்தையும், யாரோ ஒருவன் போல் நம்மிலிருந்து  தனித்து நின்று வேடிக்கை பார்க்கும் நம் “அகத்தின் வெளிப்பாடு” தான் அந்த நிழல் , அது தொடர்ந்து எழுப்பும் “குற்ற உணர்வு” தானே அந்த குரல். யாரால் தான் தப்ப முடியும் அந்த “பின் தொடரும் நிழலின்” குரலுக்கு .

இரண்டாவது இந்நாவலின் தொகுப்பு (Editing) என்னை அதிகம் கவர்ந்தது. நிறைய கதைகள் வெறும் கடிதம் வாயிலாக வெளிப்பட்டிருப்பது ‘எங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுங்கள்’ என்று சிந்திக்க ஏங்கும் வாசகர்களுக்குரியது.

நிறைய கவிதைகள் இருந்தது, என்னால் அவற்றை உள்வாங்கி கொள்ள முடியவில்லை மன்னித்துவிடுங்கள்.

நாவலில் வரும் நாடகம் (மனநல மருத்துவமனையில் நடைபெறும் நாடகத்திற்குள் வரும் மனநல மருத்துவமனை ) நான் சிரித்து ரசித்தது, நல்ல timing comedy . இந்நாவலில் ஜெமோ வின் நகைச்சுவை குணம் வெளிப்படும் இடம் இந்த நாடகமே!.

ட்ராஸ்கியின்  இறப்பு  ராமலிங்கத்தை பாதித்தது, புகாரின் இருப்பு வீரபத்திர பிள்ளையை, கார்க்கியின் இறப்பு யாரையோ, வீரபத்திர பிள்ளையின் இறப்பு  அருணாச்சலத்தை என்றால் நான் பாதிப்படைந்தது சிறுவன் நிகிதா (அண்ணாவின் வளர்ப்பு மகன்) இறந்த போது. ஜெமோ, இந்நூலை வாசித்தவர்கள் எதனை பேர் இதை உணர்திருப்பாரகள் என்று உணர்வு கொள்கிறேன்.

சைபீரிய வதை முகாமில் புகாரின் மனைவி “அன்னா” வுடன் இருந்த அனைவருமே மரணம் அடைந்திருப்பார்கள். பல முறை கற்பழிப்பு, கடும் குளிர், பசி, உழைப்பு சுரண்டல் என பல இன்னல்கள் நடுவிலும் தன் காக்கும் லட்சியத்தின் பொருட்டு அன்னா 50 ஆண்டுகள் அவ்வதை முகாமில் வாழ்ந்து உயிருடன் திரும்புவாள். அவ்வதை முகாமில் அவளுடன் அவளது தோழி,  அத்தோழியின் பால்ய குழந்தை நிகிதா மற்றும் பலர் இருப்பர். குறைந்தது 20 பக்கங்களாவது வதை முகாமில் அந்த கடும் குளிரில் அவர்களின் வாழ்க்கை காட்டப்பட்டிருக்கும். அதில் குழந்தை நிகிதாவின் விளையாட்டு, மகிழ்ச்சி,பசி, தாகம் என்று காட்சிகள் சித்திரப்படுத்தப்பட்டிருக்கும். அக்குழந்தையின் தாய் இறக்கும்போது குழந்தை ஏதும் புரியாமல் இருப்பது, பாலுக்காகவும்  தூங்கவும் இறந்த தாயின் உடலை நாடுவது என்று நிகிதாவின் செயல்கள் மூலம் அக்குழந்தை வாசகர்ஆழ்மனதில் அவர்களை அறியாமலே வேரூன்றி விட்டிருக்கும்.

பிறகு புத்தகத்த்தின் பல பக்கங்கள் கடந்து, அன்னா நீதி மன்றத்தில் அளிக்கும் வாக்கு மூலத்தில், தங்கள் சைபீரிய வதைமுகாமில்  அனுபவித்த கொடுமைகளையும், அடைந்த இழப்புகளையும் சொல்லும்பொழுது  ஒரு கொசுறு வாரியாக “என் வளர்ப்பு மகன் நிகிதா,  பின் மண்டை கோடரியால் பிளக்கப்பட்டு கொல்லப்பட்டான்” என்று வரும். இவ்வரியை நான் பலமுறை படித்தேன், அவ்வளவு எளிதாக இவ்வரியை என்னால் கடக்க முடிய வில்லை. மீண்டும் பின்சென்று சைபீரிய வதை முகாமை படிக்க செய்தது. இவ்வ்ளவு பெரிய எழுச்சியை ஒரு வரியால் உருவாக்க உங்களால் எளிதில் முடிகிறது ஜெமோ.

மொத்தத்தில் “பின் தொடரும் நிழலின் குரலை” எப்படி சொல்வது? ஒரு கம்யூனிஸ்டின் மனப்போராட்டம் என்றா?அமைப்பு ஒன்றில் தனி மனிதனுக்கு என்று எந்த தனிக் கருத்தும் இருக்கக் கூடாது என்றா?’எனக்கு எவ்வளவு வரும்’ என்ற எளிய தொழிலாளியின் எளிய எண்ணம் ஒரு மாபெரும் லட்சிய அமைப்பின் பாதையை தீர்மானிக்கும் விதியையா?காரல் மார்ஸ் தான் நாம் அடைந்திருக்கும் கடைசி சித்தாந்தி என்றா?லெனினும், ஸ்தாலினும் மார்க்ஸின் நீட்சி அல்ல, அவர்கள் முசோலினி, ஹிட்லரின் நீட்சிகள் என்றா?பேரமைப்புகள் உருவாகும் தோறும் கேட்கும் பலிகளையா ?

மண்ணுடன் உறவாடும் விவசாயிகளின் மனங்களும், இயந்திரத்துடன் போராடும் தொழிலாளர்களின் கைகளும், ஒன்று சேர்ந்து உருவாக்க முடியாத சமத்துவத்தையா? உருவாக்க முனைந்து பேரழிவு கொண்ட ரஷ்ய கம்யூனிசத்தையா?

அனைத்தையும் பொறுப்போம், மீட்பர் வாள் ஏந்தி வருவார் என்று நம்பும் மக்களின் அறியாமையையா? வாளேந்தி வரமால் திறந்த இதயம் கொண்டு வரும் மீட்பரையே எதிர்க்கும் அறிவின்மையையா?

மார்க்சிசம், மதங்களில்  இருந்து உணர்வுகளையும் மரபுகளையும் எடுத்து முரணியக்க தத்துவம் மூலம், அறிவும் உணர்வும் ஒன்றை ஒன்று சமன் செய்த ஒன்றாக விரிவடைய வேண்டும் என்பதையா?

 

பாண்டியன் சதீஷ்குமார்

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69
அடுத்த கட்டுரைவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்