தாமிராபரணம்

thamiraparanam

[முன்னுரை]

நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் அளிக்கப்படுகிறது. அவருடைய புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரத்தின் பெயரால் அமைந்தது.

2010ல் ஆ மாதவனுக்கு முதல்விருது அளிக்கப்பட்டது. 2011ல் பூமணியும் 2102 ல் தேவதேவனும் 2013 ல் தெளிவத்தை ஜோசப்பும் 2014 ல் ஞானக்கூத்தனும் 2015ல் தேவதச்சனும் இவ்விருதைப் பெற்றனர். 2016 ஆம் வருடத்திற்கான விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ரூ 50000 ஆக இருந்த இவ்விருது இப்போது ஒருலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருதை ஒட்டி இரண்டுநாள் கருத்தரங்கு ஓர் இலக்கிய விழாவாகவே நிகழும். படைப்பாளிகளை வாசகர்கள் சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். படைப்பாளியைப்பற்றிய நூல் ஒன்று வெளியிடப்படும். அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்படும்\

ஆ.மாதவனைப்பற்றி ‘கடைத்தெருவின் கலைஞன்’, பூமணியைப்பற்றி ’பூக்கும்கருவேலம்’ தேவதேவனைப்பற்றி ‘ஒளியாலானது’ தேவதச்சனைப்பற்றி ‘அத்துவானவெளியின் கவிதை’ என்னும் நூல்கள் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பாக விருதுவிழாக்களில் வெளியிடப்பட்டன. தெளிவத்தை ஜோசப்பின் ’குடைநிழல்’ எனும் நாவலும் ’மீன்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளியிடப்பட்டது. ஞானக்கூத்தனைப்பற்றி ‘இலைமேல் எழுத்து’ என்னும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

அவ்வரிசையில் வரும் விமர்சனநூல் இது. இது விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வெளியிடப்படுகிறது. வண்ணதாசனுக்கு அவருடைய வாசகர்களின் வாழ்த்தும் வணக்கமும் அடங்கியது இந்நூல். வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த ’நதியின் பாடல்’ என்னும் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது

 

கே.வி.அரங்கசாமி

அமைப்பாளர்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

 

சமர்ப்பணம்

விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களில் ஒருவராக இருந்த சந்திரசேகர் நினைவுக்கு

விஷ்ணுபுரம் நண்பர்கள்

 

முந்தைய கட்டுரைபாஷோவின் தவளை -ராஜா
அடுத்த கட்டுரைஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன