விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்

 

CO2B0434(1)

 

முதன் முதலில் வண்ணதாசனை வாசித்தது என்னுடைய பதின்பருவங்களில். முதிரா இளம்பருவத்தில் கிட்டத்தட்ட கற்பனாவாத சாயலை நெருங்கும் நடையும், புறக்காட்சி நுட்பங்களும் தந்த கிளர்ச்சி வெகுநாள் நீடித்தது. இருபது வருடங்கள் சென்று இன்று மீண்டும் அவரை அணுகும்பொழுது துலங்கும் வண்ணதாசன் முற்றிலும் வேறு வண்ணதாசன். நடையையும் சித்திரங்களையும் தாண்டி அவர் காணும் உலகைக் காண ஒரு சுற்று வர வேண்டி இருக்கிறது.

நான் என்னுடைய பதினாறாவது வயதில் கல்லூரிக்கு சென்றேன். அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு ஊருக்கே வரவில்லை. தினம் தினம் புதிதாகத் திறக்க வேண்டிய கதவுகள் ஏராளமாக இருந்தன. ஓவியமும், இசையும், இலக்கியமும் என மேலே வந்து விழுந்த அனைத்தும் என அந்த மூன்று வருடங்களில் திறந்து கொண்டவை அதற்கு முந்தைய பதினாறு வருடங்களில் திறந்ததை விட அதிகம். இவை அனைத்தும் சேர்ந்து குறுகிய காலத்தில் என்னை முற்றிலும் என்னுடைய ஊருக்கு அந்நியனாக்கி விட்டிருந்தன. மீண்டும் என்னுடைய ஊரின் தெருவுக்குள் நுழையும் பொழுது, அது வரை என்னுடைய மனதில் இருந்த தெரு மிக உயரமான வீடுகளாலும் திண்ணைகளாலும் ஆனதாக இருந்தது. கிட்டத்தட்ட இடுப்பளவு உயரம் மட்டுமே உள்ள ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து உருவான கோணத்தில். இப்பொழுது அவை அனைத்தும் குள்ளமான வீடுகளாக தெரிந்தது. தொடர்ச்சியாக படிகளில் இறங்கும் பொழுது கடைசியில் மேலும் ஒரு படி இருக்கும் என்று எண்ணிக் கால் ஊன்றும் பொழுது தரை இடிப்பது போல இருந்தது. இந்த அதிர்ச்சி இருபது வருடங்கள் கழிந்தும் இன்றும் இருக்கிறது. இப்பொழுதும் ஊருக்குள் நுழையும் பொழுது அந்த தெருவை உயரமாக எதிர்பார்த்து குள்ளமாக இருப்பதை எதிர் கொள்ள நேர்கிறது. முதல் பதினாறு வருடத்து மனப்பதிவை அகற்ற பின் வந்த இருபது வருடங்களிலும் முடியவில்லை.

வண்ணதாசனின் புனைவுலகின் சாரம் இந்த சித்திரத்தில் இருக்கிறது என்று தோன்றுகிறது. பால்யத்தின் இனிய வெண் திரைக்கப்பால் நெளியும் குருதி சிவப்பின் உலகத்தை உணர நேரும் துயரம், உணர மாட்டேன் என்று பிடிக்கும் அடம், இப்படித்தானே இருந்தது என்று மாய்ந்து கொள்ளுதல், எப்படி இருப்பினும் நான் இப்படிதான் அதை பார்ப்பேன், அல்லது இப்படி ஒரு திரையை போர்த்திக் கொள்ளவாவது வழி இருக்கிறதே என்ற ஆசுவாசம், இவையே வண்ணதாசனின் உலகு. இவை எதுவும் எனக்குத் தெரியவில்லை அப்பொழுது. பெரும்பாலும் அவரை அவரின் நடைக்காக மட்டுமே விரும்பி பின் தொடர்ந்தேன் என்பது இப்பொழுது உணர முடிகிறது.

துரதிருஷ்ட வசமாக தமிழ் இலக்கிய சூழலில் இந்தத் திரையை தாண்டி வண்ணதாசனை அடையாளப்படுத்தும், புரிந்து கொள்ளும் முயற்சிகள் பெரிதும் நிகழாமலேயே போயிற்று. அதன் காரணத்தையும் என்னுடைய பின்னணியிலேயே வைத்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.என்னுடைய இலக்கிய வாசிப்பு பள்ளியிறுதி காலங்களில் பாலகுமாரனில் துவங்கி கணையாழி வழியாக தி.ஜானகிராமனில் வந்து அங்கிருந்து வண்ணதாசனுக்கு வந்து சேர்ந்தது. உள்ளுணர்வின் தடம் சரியாகத்தான் இருந்திருக்கிறது. மூவருக்குமான பேசு பொருள் கிட்டத்தட்ட இணையானதுதான். ஆனால் மூவரும் வேறுபடும் இடத்தை துல்லியமாக அறியும் அளவுக்கு என் இலக்கிய அளவுகோல்கள் தேர்ச்சியடையவில்லை. விளைவு வண்ணதாசனின் நடை மீதான கிறக்கம் மட்டுமே எஞ்சியது. இன்றும் தமிழில் வண்ணதாசனை அணுகும் பெரும்பாலானோரும் நின்று விடும் இடம் அதுவே.

வண்ணதாசனின் கலை வடிவம் அசோகமித்திரனின் நீட்சி. சித்திரங்களை மணிகளாக கோர்த்துச் சென்று, பின்பு நூலை உருவி எடுத்து விட்டால் நலுங்கி நிற்கும் தளும்பல். இதை நோக்கும் ஒருவர் கேட்க வேண்டியகேள்வி  வண்ணதாசன் அசோகமித்ரனிடம் இணையும், வேறுபடும் புள்ளிகள் எவை என்பது. இருவர் உலகிலும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் களம் பால்ய காலம். அசோகமித்திரன் கதைகள் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிருந்தாலும், கதையின் திருப்பங்களுக்கு அந்த சிறுவனின் எதிர்வினை காணக் கிடைப்பதில்லை. வண்ணதாசனின் உலகில் அந்தத் திருப்பங்களுக்கு சமாதானங்கள், பொறுமல்கள், இயலாமை என அனைத்து வகையான எதிர்வினைகளும் வெளிபட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த சமாதானங்களும், தேம்பல்களுமே வண்ணதாசனின் உலகில் ஒரு நெகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆக, வண்ணதாசன் நெகிழும் கலைஞர் என்று குறிப்பிடும்பொழுது, அந்த திரைக்குப் பின் அவர் காணும் நுட்பமான குரூரங்களை, அதிர்ச்சிகளை என அனைத்தையும் தவற விடுகிறோம். அவை எல்லாவற்றையும் தாண்டியே, மனுஷன்தானே என்று ஆரத் தழுவ விரியும் கரங்கள் அவருடையவை. துரதிருஷ்டவசமாக அது மட்டுமே பிரதானமாகி விடுகிறது அவருடைய நடையில்.

வண்ணதாசனின் இன்னொரு முன்னோடியான ஜானகிராமனின் கதைகளிலும் இது போன்ற திரைகள் விலகும் தருணங்களும், கதை சொல்லி மானுடத்தை நோக்கித் தன்னை விரித்துக் கொள்ளும் தருணங்களும் வருகின்றன. ஆனால் அது பண்பாடும் மானுடமும் இணையும் புள்ளி. தனி மனிதர்கள் வெறும் நிமித்தமே. ஆகவேதான் அது அத்தனை உக்கிரமாக இருக்கிறது. தனி மனிதர்களுக்கு இடையேயான உறவில் நிகழும் நெருடல்களிலும், தொடர்ந்து வரும் அணைப்புகளிலும் அதை எதிர்பார்க்க முடியாது. அங்கே முணு முணுப்புகளும், தலையாட்டுதல்களும் போதுமானதாக இருக்கின்றன. இந்த அம்சத்தினால்தான் வண்ணதாசன் அசோகமித்திரனை நெருங்கி வருகிறார்.

அந்த வகையில் வண்ணதாசன் ஜானகிராமனில் சேர்த்தது, தனி மனித உறவுகளிலும் செல்லுபடியாகக் கூடிய மானுடம் என்ற உணர்வு, அதன் உச்சங்களுடனும் கீழ்மைகளுடனும் [கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான், பாயசம்] மகத்தான தருணங்களில் மட்டுமில்லை, இரண்டு மனிதர்களுக்கிடையேயான எளிய தருணங்களில் கூட நிகழலாம் என்பதையே [என்னுடைய நதி அவளுடைய ஓடை]. அசோகமித்திரனில் சேர்த்தது, அவரிடம் வெளிப்படும் விலக்கத்தை விட்டு, பிணைத்துக் கொள்ளும் கரங்களையே.

வண்ணதாசன் மீதான சுந்தர ராமசாமியின் மதிப்பீட்டில் கூட இந்த அம்சம் தவறி விடுகிறது. வண்ணதாசனின் கதையில் வரும் சித்திரங்களை, போய் சேரும் வழியில் பராக்கு பார்த்து நின்று காரியத்தை கோட்டை விட்டதாக சுட்டுகிறார். சிறு வயதிலேயே வளர்ந்து விட்ட சுந்தர ராமசாமிக்கு, வளர்ந்தும் வளர மறுக்கும் சிறுவனாக அடம் பிடிக்கும் வண்ணதாசனை புரிந்து கொள்ள முடியாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. வண்ணதாசனின் சித்திரங்கள் இரண்டு வகை. ஓன்று அவர் நினைவிலிருக்கும் பால்யத்தின் அவதானிப்புகள். மற்றது இப்பொழுதிருக்கும் யதார்த்தம் [இந்த நிஜங்களை கதை சொல்லி எதிர் கொள்ளும் தருணங்களே பெரும்பாலான திருப்பங்கள்]. இவ்விரு சித்திரங்களையும் இணைக்கும் பார்வையை வாசகனிடம் கோருபவை வண்ணதாசனின் சிறுகதைகள். இந்த பார்வையையே இன்னும் விரிவாக்கி பொது புத்திக்கு எதிரான கனிவாக [கன்னியான பின்னும் நுனியில் பூ] இளமைக்கும் முதுமைக்கும் நடுவே பரிமாறிக் கொள்ளப்படும் ஒன்றாக [கனிவு] என்றெல்லாம் விரித்து விரித்து செல்கிறார்.

சுந்தர ராமசாமிக்கு இந்த கதைகளில் உக்கிரமாக ஒன்றுமே இல்லாதது போல இருக்கிறது. அது அவநம்பிக்கை கொண்ட நவீனத்துவ பெரியவர்களின் எதிர்பார்ப்பு, வாழ்க்கையின் பொருள் பொருள் என்று தேடி, இருள் இருள் என்று கூவ வேண்டி இருக்கிறது. வண்ணதாசனில் அது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை, எளிய நெருடல்கள்தான் எல்லாமும், தாமிரவருணியில் தண்ணீர் ஓடும் வரை. [வண்ணதாசன் வாழ்க்கையைப் பார்க்கிறாரா? வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம். – தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்கிற புத்தகத்திற்கான சுந்தர ராமசாமியின் முன்னுரை]

சின்னு முதல் சின்னு வரையில் மங்காயி அத்தை வீட்டில் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் எண்ணிக் கொண்டிருப்பது அத்தை குறித்த அவரின் சிறு வயது மனப்பதிவை, பின்பு மனைவியுடனான வாதத்திற்கு பிறகு அதே மங்காயி அத்தையை வேறு கோணத்தில் காண்கிறார். இரண்டிலும் மங்காயி அத்தைக்குப் பெரிய மாற்றமில்லை. பார்க்கும் கதை சொல்லியின் புரிதலே மாறுகிறது. இதே மாற்றம்தான் கடைசியில் சின்னுவிடமும் நிகழ்கிறது. இந்த மாற்றத்தை எதிர்கொண்ட பின்பு, அது வரை ‘இவருடைய முகங்களின்’ தெருவாக இருந்த தெரு, வெறும் தெருவாக ஆகி விடுகிறது. நினைவுகளை, சித்திரங்களை நீட்டி முழக்கி சொல்லி சென்று திருப்பங்களை ஓரிரு வரிகளில் தாண்டி விடுவதன் சிக்கலை தாண்டிவிட்டால், வரிசையாக அடுக்கப்படும் சித்திரங்கள், எவற்றை அடுத்து எவை என வருகின்றன என பார்க்க துவங்கினால் அவை வெறும் புற உலக விவரிப்புகள் அல்ல என உணரலாம்.

போய்கொண்டிருப்பவள் கதையில் கரிய சாக்கடையில் வெள்ளை முட்டை ஓட்டையும், கனகாம்பரத்தையும் பார்த்துக் கொண்டே போகிறார் கதைசொல்லி. துவக்கத்தில் கதை சொல்லியும், விருத்தாவும் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து எப்பொழுதோ நகர்ந்து விட்ட அன்னம், கதை முடியும் தருணத்தில் மேலும் தாண்டிப் போய்கொண்டிருக்கின்றாள் என்பதை உணர்கின்றார். எல்லா ஆண்களும் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும் இடம் அது. போய்கொண்டிருப்பவள் என்பதற்கு பதிலாக ‘நின்று கொண்டிருப்பவர்கள்’ என்று வாசித்தால் வண்ணதாசனின் மொத்த கதையுலகும் திறந்து கொள்கிறது. அதன் சாரம் என்பது போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையை, மாற்றங்களை – பெரும்பாலும் பெண்களின் வழியாக, பார்த்து திகைத்து நின்று கொண்டிருக்கும் சிறுவர்களின் உலகம்.

இந்த சித்திரங்களையே கனவின் திரை என்கிறார் சுந்தர ராமசாமி. அது உண்மையில் மறைக்க விரும்பும் பகற்கனவின் திரையாக மட்டுமே இருந்திருந்தால், கதாபாத்திரங்களின் உருமாற்றத்தில் துவங்கி நேரடியாக குரூரங்களை மட்டுமே சொல்ல ஆரம்பித்து [நவீனத்துவர்கள் போல], திரையை போட்டு முடித்து விடலாம்.  அதற்கு எதற்கு பால்யகால நினைவுகளிலிருந்து துவக்க வேண்டும்? கதை சொல்லி மங்காயி அத்தையின், மனைவியின், சின்னுவின் மாற்றங்களை என அனைவரின் உள்ளும் ஊடுருவிப் பார்க்கவும் செய்கிறார். சிறு வயது முதலே பெண்கள் சூழ வளர்ந்தவர்களுக்கு தெரியும், சிறுவர்கள் ஆண்களாக ஆக எடுத்துக் கொள்ளும் காலத்தை விட, சிறுமிகள் சீக்கிரமே சட்டென்று பெண்களாகி விடுவார்கள் என்பது. கதையின் முடிவில், பெண்கள் எல்லோரும் கை கோர்த்துக் கொள்வதும், கண் கலங்கி கொள்வதும் என்றெல்லாம் இருந்த தருணங்களை கண நேரத்தில் கடந்து, வாள் வீசிக் கொள்ளும் தருணத்தில் தனித்து விடப்பட்ட சிறுவனைப் போல் ஆகிறார் கதைசொல்லி. இப்படி அனைத்தும் உருமாறி, கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பொழுது, சரி போகட்டும் மனுஷன்தானே என்று சொல்லுமிடத்தில்தான் நெகிழ்ச்சியாக தோன்றுகிறது. அது ஒரு வகையில் தன்னை இந்த சிறுமைகளின் முன்பு, இன்னும் இன்னும் என்று விரித்துக் கொள்வதுதான்.

“இந்த நெருடலும் சேர்ந்து அவருக்குப் பிரியமாகவே இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எப்படி அனைத்தின் மீதும் ஒரு பிரியம், ஒரு ஒட்டுதல், ஒரு கனவு வழிவது சாத்தியம்?” என்று இந்த நெகிழ்ச்சியைக் கேள்வி கேட்கும் சுந்தர ராமசாமி, எல்லாக் குரூரங்களையும் தாண்டி மனிதர்கள் மீது புன்னகையை படரவிட்ட பஷீரை பற்றி என்ன நினைத்திருக்க கூடும்?  நவீனத்துவம் என்பது எதிர்காலம் குறித்த லட்சியங்களின் வீழ்ச்சியிலிருந்து உருவான அவநம்பிக்கை. அடையவேண்டியவற்றை இழந்தால் மீண்டும் முதலிலிருந்துதான் துவங்க வேண்டுமா என்ன? இதுவரை மானுடம் அடைந்தவற்றை எல்லாம் பொருளற்றது என்று வீசிவிட முடியுமா? தாமிரவருணியை அத்தனை எளிதாக துறந்து விட முடியமா என்ன என்பதே வண்ணதாசன் நவீனத்துவத்தை பார்த்து கேட்கும் கேள்வி [ஒரு எல்லை வரை அவரும் நவீனத்துவர் எனினும்]. காவிரி ஆற்றங்கரைக்காரர் ஜானகிராமன் அதைப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.சுந்தர ராமசாமியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த ஆசீர்வாதம் இன்று பொதுவெளி வரை வந்து நிற்கிறது.

தமிழில் வண்ணதாசன் அளவுக்கு நகல் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் குறைவு. [அசோகமித்திரன்  இரண்டாவதாக இருப்பார் என நினைக்கிறேன்] இலக்கியவாதிகள், வண்ணதாசனின் நடையில் ஏமாந்தார்கள் எனில், பொது வாசகர்கள் அதை கடந்த கால ஏக்கம் என்று புரிந்து கொண்டு, பலூன் விக்கும் குமரேசன்களையும், காத்தடிக்கும் கதிரேசன்களையும் தேடித் தேடி கொண்டு வந்து “இலக்கியம்” ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள். 90 களின் தமிழ் நவீனத்துவ சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு நிகழக் கூடிய இரண்டு அபாயங்களும் வண்ணதாசனுக்கு நிகழ்ந்திருக்கின்றன. ஓன்று, மரபின் பின்பாரத்தை இறக்கி வைத்து விட்டு தனிமையின் சிலுவைகளில் தொங்கி கொண்டே,  எப்படி உக்கிரமாக தற்கொலை செய்து கொள்வதன் வழியாக உலகைக் காப்பாற்ற முடியுமென்று தீவிர விவாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கையில், ‘இப்படி வாங்க ஆத்தோரமா உக்காந்து பேசலாம்’ என்று சொல்ல நேர்ந்தது. மற்றது ஆத்தோரமா உட்கார்ந்து பேச அலையும் பொது வாசகர்கள் கூடி கும்மி அவரவர் சொந்த கதைகளை எடுத்து விட்டு ஆளுக்கொரு வண்ணதாசனாகியது . சித்தப்பாக்களும், அத்தைகளும் இல்லாதவர்கள்தான் யார் தமிழ்நாட்டில். இன்று வரை வண்ணதாசனுக்கு “வட்டியும் முதலும்” ஆக குடுத்துக் கொண்டே இருப்பவர்கள் இவர்கள்தான்.

இவர்கள் பெரும்பாலும் வண்ணதாசனின் அபுனைவு நடையையே நகல் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எழுத்தாளனுக்கு சரியான தொடர்ச்சி என்பது அவன் தரிசனத்தை முன்னெடுத்து செல்வதிலும், தன் பங்களிப்பென்று ஒன்றை அதில் சேர்ப்பதிலும் இருக்க வேண்டுமே தவிர நடையை நகல் செய்வதில் இருக்க கூடாது. துரதிருஷ்டவசமாக அதுதான் எளிதாக இருக்கிறது, அதுவும் பழங்கதையை பேசுவதில் பெருநாட்டம் கொண்ட தமிழ் சமூகத்துக்கு. இந்த விஷ்ணுபுர விருது விழா ஒரு மகத்தான வாய்ப்பு, நம்முடைய விவாதங்கள் வழியாக வண்ணதாசன்களிடமிருந்து வண்ணதாசனைக் காப்பாற்றவும், வண்ணதாசனின் பங்களிப்பை சரியாக புரிந்து கொண்டு சிறப்பிக்கவும். தமிழின் மூத்த படைப்பாளிக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதையும் அதுவே.

 

 

*

எழுத்தாளர்களின் நடை சார்ந்து இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஓன்று வாழ்க்கையை அப்படியே காட்டுவது. இந்த வகையில் படைப்பில் காட்டப்படும் தருணங்களைத் தேர்வு செய்வதன் வழியாகக் கலை வெளிப்படுகிறது. எழுத்தாளனின் குரல் அல்லது எதிர் வினை படைப்பில் வெளிப்படத் தேவையில்லாமல் ஆகிறது. மற்றது நிகர் வாழ்க்கையை உருவாக்குவது. இதில் தருணங்கள் மட்டும் அல்ல, அவற்றின் மீதான எதிர்வினைகளும் கொந்தளிப்புகளும் என பரவி விரிவதே முதன்மையான நோக்கம். முதல் வகை எழுத்தாளர்கள் பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்களாக இருப்பதும், இரண்டாம் வகை எழுத்தாளர்கள் நாவலாசிரியர்களாக இருப்பதும் தற்செயலானது அல்ல. இது வடிவம் சார்ந்த வகைப்பாடு.

வண்ணதாசனின் உலகில், சிறுகதைக்குள், சூழல் மீதான அவருடைய எதிர்வினைகள் வரும்பொழுது புதிய வகைப்பாடாக இருக்கிறது. சிறுகதைகளில் இதை செய்த இன்னொருவர் பஷீர், அவரின் எதிர்வினை என்பது சிரிப்பின் வழியே குரூரங்களையும் சுரண்டல்களையும் கோணலாக்குவது. புகைப்படங்களுக்கு பதிலாக கேலிச்சித்திரங்களை உருவாக்குவது. கிட்டத்தட்ட சமமான புனைவுலகுதான். ஆனால் பஷீர் மனங்களின் ஆழத்தை உலகின் விரிவில் வைத்து பார்த்து சிரிக்கிறார். அது தத்துவத்தை, உளவியலை அறிந்து கடந்து சென்று சிரிக்கும் சிரிப்பு. அசோகமித்திரன் உலகை பொறுத்த வரையில், அவர் திரையை விலக்கிக் காட்டி விட்டு,  அமைதியாக இருந்து விடுகிறார். அவர் உலகில் அவர் தனியன். ஆகவே அதற்கு மேல் அவர் சொல்ல விரும்புவது ஏதுமில்லை. அதற்கு கூட மூன்றாம் மனிதர் ஒருவர் தேவைப்படுகிறார், சொல்லவும் கேட்கவும் ஒரு உறவு தேவைப்படுகிறது. இந்த மௌனமே அசோகமித்திரனின் தனித்தன்மை. நகரத்தில் வளர்ந்த ஒருவர் இப்படித்தான் எதிர்வினையாற்ற முடியும். வண்ணதாசனுக்கு அப்படி இல்லை, அவர் தாமிரவருணிக்காரர். ஆறு ஓடும் ஊரில் எவரும் தனியனில்லை. வண்ணதாசனுக்கு அது ஜானகிராமனிலிருந்து வந்த ஆறும் கூட. எளிய வெயிலுக்கு கூட முகத்தை ஒற்றிக் கொண்டு முன் பின் தெரியாதவரிடம்  ‘காலம் கிடக்குற கிடப்பு பாருங்க’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு வெத்தலை வாங்கி போட்டுக் கொண்டு போகலாம். எந்த ஊரானாக இருந்தாலும் மனுஷன்தானே. இந்த எதிர்வினைதான் வண்ணதாசனின் புனைவுக்கு சரிதானே, ஆமாம்தானே என்றெல்லாம் இழுக்கும் ஒரு த்வனியை கொடுக்கிறது.  ஒரு வகையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் தாமிரவருணி பெருசை சற்று உற்றுக் கேட்டிருந்தால் அது யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்து விடலாம்.

ஆனால், கலையில் உணர்வு சார்ந்த எதிர்வினை நல்ல செயலூக்கி, மோசமான வழிகாட்டி. அது சூழலின் ஒரு பகுதியை மட்டுமே கருத்தில் கொள்வதால் அதன் எதிர்வினையும் ஒற்றைப்படையானதாக இருக்கும்.  கலையில் சமநிலை கூடுவதற்கு, தேடலை தருக்கம் பின்தொடர வேண்டும். தத்துவம் உணர்ச்சியை மோதி ஒன்றை ஓன்று உடைத்து எஞ்சுவதே முன்னகர வேண்டும்.  தத்துவத்தை தவிர்த்து உணர்வு சார்ந்து மட்டுமே சுருக்கிக் கொள்வது கண்டடைதல்களுக்கு பதிலாக எளிய சமாதானங்களையே முன் வைக்க வழிவகுக்கும். பயணத்தை துவக்கிய பின்பு பாதியில் நிறுத்தி கொள்வதல்ல செய்யக் கூடுவது, விரும்புகிறோமோ இல்லையோ விளைவை எண்ணாமல் முன்னகரும்பொழுதே அறியாத ஆழங்களை வெளிப்படுத்த முடியும்.

அப்படியெனில் உணர்வுபூர்வமான எதிர்வினைகளுக்கு படைப்பில் இடமில்லையா எனில், நிச்சயம் உண்டு. ஆனால் அவை எதிர் கொள்ளும் தருணங்களும் அதே அளவு உணர்வில் திரண்டு வந்ததாக இருக்க வேண்டும். தமிழில் சரியான உதாரணம் ஜானகிராமனின் பரதேசி வந்தான், கடன் தீர்ந்தது போன்றவை. அவை பேசும் சிக்கல்கள் எளிய அன்றாட சிக்கல்கள் அல்ல, பண்பாட்டு சிக்கல்கள், அதன் தீர்வு பண்பாட்டின் அடியிலிருந்து திரண்டு வரும்பொழுது, அத்தனை வேகமாக வரும்பொழுதே அவை ஒளிர்கின்றன. அன்றாட வாழ்வின் நெருடல்களையும், உரசல்களையும் பேசும் வண்ணதாசனின் உலகில் உணர்வு சார்ந்த எதிர் வினைகள் என்பது சற்று மிகையாக தெரிகின்றன. அதனால்தான் அதே சூழல்களை பேசும் அசோகமித்திரனின் மௌனம் இன்னும் தீவிரமானதாக இருக்கிறது. இன்றும் தமிழில் சிறந்த சிறுகதைகளாக குறிப்பிடப்படும் வண்ணதாசனின் சிறுகதைகள் அனைத்தும் அவருடைய எதிர்வினைகள் அற்ற, சித்திரங்களை மட்டுமே அளிக்கும் நவீனத்துவத்தின் சிறுகதை வரையறைக்குள் வரும் சிறுகதைகளாக இருப்பதை இப்படிதான் புரிந்து கொள்ள முடிகிறது.

உணர்வும் தர்க்கமும் ஒன்றாக இணையும்பொழுதே அனுபவம் தரிசனமாகிறது. ஒவ்வொரு தரிசனமும் அப்படித்தான் கண்டடையப்பட்டு மானுடப் பொது அறிவில் சேர்க்கப்படுகிறது. இலக்கியத்தை நாம் அணுகுவது, இந்த அறிதல்கள் மானுடத்தை மேலான எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் என்பதற்காகவே. எதிர்காலத்தை பற்றி முற்றிலும் நம்பிக்கையற்றிருந்த  நவீனத்துவர்களின் தரிசனமும் கூட இப்படித்தான் வரலாற்றில் அடுக்கப்பட்டிருக்கிறது [அவர்கள் போகும் திசையை தவிர்த்து வந்த வழியில் இருந்த ஓட்டைகளை காட்டினார்கள், அதுவும் கூட மேலான எதிர்காலத்துக்குத்தான்]. தர்க்கத்தை கைவிட்டு உணர்வு வெளிப்பாட்டை மட்டுமே முக்கியமானதாக கொள்ளும் பொழுது, கடந்த காலத்தை அசைபோடுதலாகவோ பெருமூச்சாகவோ எஞ்சி விடுகிறது.

வாழ்க்கை எப்படி இருப்பினும் உறைந்த ஓன்று அல்ல. எழுத்தாளனும், வாழ்வும், வாழ்வு சார்ந்த அவனுடைய நோக்குக்களும், மாறிக் கொண்டே இருப்பவை. ஒவ்வொரு படைப்பும், உருவாகும் கணத்தில் இந்த  மூன்று புள்ளிகளும் இருக்கும் இடத்தை பொருத்தே உருவாகிறது. ஆனாலும் புனைவுத்தரிசனம்  சார்ந்து எழுத்தாளர்களை இரண்டாக வகைப்படுத்தலாம், ஒரு சாரார் ஒன்றடுத்து ஒன்றாக கேள்விகளை அடுக்கி விடை தேடி செல்பவர்கள். அதற்கேற்றாற்போல அவர்களின் புனைவு மொழியும், வடிவமும் மாறிக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் ஒரே கேள்விக்கு வேறு வேறு புள்ளிகளிலிருந்து விடை தேடி சேர்ப்பவர்கள். இவர்களின் வடிவம் அதிகமும் மாறுவதில்லை. விடைகளும் கூட. நேர் எதிராக, வடிவம் மாறாததாலேயே விடைகளும் மாறுவதில்லையோ என்றும் தோன்றுகிறது.

வண்ணதாசன் இரண்டாம் வகை எழுத்தாளர். இந்த வகை எழுத்தாளர்களை அணுகும்பொழுது அவர்களின் படைப்புக்களை பொதுமைப்படுத்தி அல்ல, வேறுபடுத்தியே அறிய வேண்டும். பொதுமைப்படுத்தி அறியும்பொழுது வண்ணதாசன் ‘மென்மையான’ எழுத்தாளர், உறவுகளின் ‘மேன்மையை’ எழுதுபவர், ‘திருநெல்வேலியை’ எழுதுபவர் என்றெல்லாம் தோன்றும். அவை அனைத்தும் உண்மையே, ஆனால் அவை அனைத்தும் அவர் கண்டடைந்த விடைகளே, எந்தக் கேள்விகளின் விடைகள் என நோக்கும் பொழுதே அவரின் புனைவுலகை சரியாக அறிந்து கொள்ள முடியும்.  அவர் எழுதியது, குரூரங்களுக்கு மேலாக படரும் ‘மென்மையை’, நெருடல்களும் உரசல்களுமான உறவுகளின் ‘மேன்மையை’, தனி மனிதர்களின் பொது அடையாளமாக ‘திருநெல்வேலியை’. [தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களின் ஒருவரான ஆர்பி. பாஸ்கரன் நினைவுக்கு வருகிறார். அவர் ஓவிய உலகம் இரண்டே பேசுபொருட்களால் ஆனது. ஓன்று பூனைகள் மற்றது ஆணும் பெண்ணும் திருமணக் கோலத்தில் இருக்கும் சித்திரம். ஆனாலும் இவை பூனையும் ஆணும் பெண்ணும் அல்ல. ஒரு பூனையும் இன்னொரு பூனை அல்ல.]

வண்ணதாசனிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு அரசியல் கதை “பெயர் தெரியாமல் ஒரு பறவை”. அது கூட தனி மனிதர்களின் கையாலாகாத தன்மை குறித்தும், தன் சோற்றைத் தவிர வேறு எதிலும் கவனமற்ற உதிரி மனிதர்களின் மீதான பெருமூச்சாகவும்  வெளிப்படுகிறது [இங்கே அவர் பார்வை அதிகமும் அசோகமித்திரனை நோக்கி சாய்கிறது]. இந்த தனி மனிதனுக்கும் தாமிரவருணிக்குமான உறவின் பொருள் என்ன என்ற கேள்விக்கான பதிலை தேடி இருந்தால், பதில் நம் மரபில் சென்று முட்டி இருக்கும். வடிவமும் மாறி இருக்கலாம். வாழ்வின் எல்லா கோணங்களையும் ஒற்றை புள்ளியில் வைத்து அலசும் பொழுது ஒரு வகையில் அது எந்த அளவு நுண்மையாகிறதோ அதே அளவு குறுக்கல்வாதமாகவும் ஆகி விடுகிறது.

பால்ய காலத்தில் புற உலகை உள் வாங்கும் பொழுது நம் போதம், வளர்ந்தவர்களின் எந்த பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. இந்த பிரிவினைகளை மீறி, மிதித்து சூடு பட்டு, குழம்பி, மெல்ல தெளிந்து நாமும் அவற்றின் பகுதியாகும் பொழுதே வளர்ந்தவர்களாகிறோம். Coming of age எனப்படும் இந்த வகை எழுத்தின் முக்கிய அம்சம், கதை சொல்லி இதற்கு என்ன மாதிரியான எதிர் வினை ஆற்றப் போகிறார் என்பதே. எந்த இலக்கிய வாசகனும் இந்த முரணை தாண்டி வந்தவனாகவே இருப்பான். ஆகவே அவனுக்கென்று ஒரு கண்டடைதலும் இருக்கும், இதை தாண்டி என்ன சொல்லப்பட போகிறது என்பதே அவனுடைய எதிர்பார்ப்பாக இருக்கும்.

இந்த முரண்பாட்டை கடந்து செல்லலாம், திகைத்து நிற்கலாம், அசோகமித்திரன் போல. சிரித்துக் கொள்ளலாம் பஷீரை போல. காரணங்களை ஆராயலாம் ப்ரௌஸ்ட்டை போல. பரவாயில்லை மனுஷன்தானே என்று சொல்லும் பொழுது சமாதானங்கள் போதுமா என்று தோன்றுகிறது.இத்தனை தூரம் வாழ்க்கையை அறுத்து பார்த்து விட்ட ஒருவன் மேலும் மேலும் என்று செல்லவே இருப்பான். ஆனால் வண்ணதாசனுக்கு மனிதர்களே முக்கியம். ஏன் இப்படி ஆயிற்று என்பதற்கான காரணங்களை எல்லாம் வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும் என்று நம் கைகளை பிணைத்துக் கொள்கிறார். அப்பொழுது இருவருக்குள்ளும் ஓடுவது தாமிரவருணி, அது வற்றிய நதியே ஆனாலும்.

ஒரு வகையில் அவரது வரவு, தமிழ் நவீனத்துவத்தின் முடிவு மட்டுமல்ல, மரபின் மீதான நினைவூட்டலும் கூட. அடைய வேண்டியவற்றை இழந்ததால், இதுவரை அடைந்த அனைத்தும் பொருளற்றது அல்ல, காந்திமதியும் நெல்லையப்பனும் இருக்கும் வரை நாம் தனியனில்லை என்றவர். சென்னைக்கும், நிலக்கோட்டைக்கும் வண்ணதாசன் கொண்டு வந்த தாமிரவருணி இல்லையென்றால் நதியற்ற மனிதர்களாகி இருப்போம். அவர் கொண்டு வந்த அந்த நதியின் ஊற்றை தொன்மங்களிலும், வரலாற்றிலும் தேடி கிளம்பியவர்களே இன்றைய முதன்மையான தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும். அந்த சிறு புள்ளியிலிருந்தே இன்றைய தமிழ் இலக்கியம், மரபின் மீதான மறுபரிசீலனையும், மறுபுனைவுமாகிப் பெருகி ஓடுகிறது.

 

வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி https://azhiyasudargal.blogspot.in/2012/01/blog-post_2895.html

 வண்ணதாசன் கேந்திப்பூவின் நறுமணம் ாஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

முந்தைய கட்டுரைஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்
அடுத்த கட்டுரைவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1