[ 1 ]
சுவை என்றால் என்ன? மனித குலம் ஒட்டுமொத்தமாகவே சுவையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எத்தனை தேடியிருந்தால் இத்தனை கனிகளை, இத்தனை வேர்களை அவன் கண்டடைந்திருப்பான். இத்தனை சமையல்முறைகளை உருவாக்கியிருப்பான். நாச்சுவை, விழிச்சுவை, செவிச்சுவை, மொழிச்சுவை என சுவை விரிந்து கிடக்கிறது எங்கும். நாளில் பெரும்பகுதியை நாம் சுவைகுறித்து பேசும்பொருட்டே செலவழிக்கிறோம்
ஆனால் சுவையென்று ஒன்று உண்மையில் உண்டா என்றே சுவைகளின் அலகிலாத வேறுபாட்டைக் காண்கையில் எண்ணத் தோன்றுகிறது. இப்புவியில் உள்ள அனைத்தும் எவருக்கோ சுவையானவைதானா என்ற எண்ணம் ஏற்படுகிறது. மண்ணில் புதைக்கப்பட்டு சற்றே மட்கிய மீனின் சுவையை வடகிழக்கில் கொண்டாடுகிறார்கள். களிப்பாக்கின் கடும் துவர்ப்பை ஊனுடன் சேர்த்து உண்கிறார்கள் தென்கிழக்கில். உளுந்தமாவை சேம்பின் தளிரில் சுருட்டி வேகவைத்து உண்கிறார்கள் தென்கர்நாடகத்தில் எண்ணவும் நமக்கு குமட்டும் சுவைகள் இவை
சுவையை மானுடப்பொதுவான வரையறை எதற்குள்ளும் அடக்க முடியாது. சாத்தியமாவது ஒரு வரையறை மட்டுமே. சுவையென்பது தனித்தன்மை. ஒரு நிலத்தின், ஒரு காலகட்டத்தின், ஒரு இனக்குழுவின், ஒரு வகைச் சமையலின், ஒரு தருணத்தின் தனித்தன்மை. சுடலைமாடனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத ஊன்கஞ்சியை நள்ளிரவில் மகுடம் இசைக்க குளக்கரைக்காட்டில் பனையோலை கோட்டிய தொன்னையில்தான் சுவைக்க முடியும்
மறைந்த எனது தந்தை ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்தார். எங்கள் இல்லத்தில் இருந்து அரை கிலோ மீட்டரில் உள்ள யட்சிகோயிலொன்றின் தெற்கு மூலையில் இருக்கும் தொன்மையான மாமரம் ஒன்றிலிருந்து மட்டுமே ’கண்ணிமா’ என்று எங்கள் பகுதியில் அழைக்கப்படும் வடுமாங்காய் ஊறுகாய் செய்வதற்கான காய்களை அவர் தேர்வு செய்வார். நினைவறிந்த நாள்முதல் பிறிதொரு மாங்காயையும் ஊறுகாயையும் தொட்டு உண்டதில்லை. மீன் சமைப்பதற்கு ஒவ்வொரு வகை மீனுக்கும் ஒரு தென்னையை பார்த்து வைத்திருந்தார். சற்றே நொளுநொளுப்புள்ள வாளை திரச்சி போன்ற மீன்களுக்கு மேட்டு நிலத்தில் காய்க்கும் தேங்காய். இறுகிய ஊன்கொண்ட சாளைக்கும் சூரைக்கும் நீர் ஊறும் நிலத்தில் விளைந்த சற்றே இனிப்பு கலந்த தேங்காய்.
நெல்லுக்குத் தேர்ந்தெடுத்த தழைகளையே உரமாக போடுவார். எருக்கோ வேம்போ போட்டால் அரிசியில் எங்கோ ஒரு கசப்படிக்கும் என்று அவர் நினைத்தார். பூச்சிமருந்தும் ரசாயனங்களும் அவர் தொட்டதில்லை. கொல்லைப்பக்கத்தில் வெங்கலக்குட்டுவத்தில் ஏற்றிவைத்து வேகவைத்த நெல்லை மச்சின் சிமெண்டுப்பரப்பில் நிழலில் உலர்த்தி ரப்பர் உருளைகள் கொண்ட மில்லில் அரிசியாக்கி கொண்டுவருவார்கள். செவ்வெறும்பின் நிறத்தில் இருக்கும் அரிசி. சற்றே விரல் தொட்டால் அழுந்த வேண்டும் என்னும் பதம்.
அதைக் கஞ்சியாக்கி இரவில் உண்ணும்போது எட்டுவகை தொடுகறிகள் சுற்றி அமைந்திருக்கும். வலப்பக்கம் இலையில் அரிசி அப்பளம். அதை தேங்காய் எண்ணெயில் வறுத்திருக்க வேண்டும். இடது ஓரத்தில் ஒரு கிள்ளு உப்பு. வலப்பக்கத்தில் கூட்டு. அது அன்று அகழ்ந்தெடுத்த காய்ச்சில் கிழங்கு. பாலூற வெட்டிய பலாக்காயின் மூசு. இலை வாடும் முன்னரே கிழங்குகள் சமைக்கப்பட வேண்டும் என்பது அவரது கொள்கை. தண்டில் பால் சொட்டி முடிவதற்கு முன்பே காய்கறிகள் நறுக்கப்பட்டாக வேண்டும். அம்மியில் அரைக்கையிலேயே கூட்டின் மணம் எழுந்தாகவேண்டும்.
உண்ணும்போது முற்றிலும் தனிமையில் அமர்ந்திருப்பார். ஒவ்வொரு கறியையும் தொட்டு நாவில் வைக்கையில் இசை கேட்கும் ரசிகனைப்போல் தலை சற்று அசையும் .ஒவ்வாத ஒன்றை மெல்ல நகர்த்தி அப்பால் வைப்பார். ஒருபோதும் உணவைக்குறித்து எதிர்மறைச்சொல் சொல்வதில்லை. ஒரு உணவை நிராகரித்தால் அந்த எதிருணர்வு எழுந்து இன்னொரு நல்ல உணவின் சுவையைக்செய்யும் என்று அவர் எண்ணினார்.
உணவில் மட்டும் அல்ல ஒவ்வொன்றிலும் அந்த தனித் தன்மையை அவர் பேணி வந்தார். அவருக்குத் தெரிந்த செம்மான் தைத்த செருப்புகளையே வாழ்நாளெல்லாம் அணிந்திருந்தார். அவருடைய கை நுட்பம் தன் கால்களுக்குத் தெரியும் என்பார். திரைப்படங்கள் பார்த்ததில்லை. கதகளியில் விரல் அசையும் சிறு நுட்பத்தைக் கூட தவறவிடாத நுட்பமான கண்கள் கொண்டிருந்தார். ஒவ்வொரு கதகளிப்பதத்தின் இசைஅலைகளையும் அன்று வரை அந்த மேடையில் பாடப்பட்ட அத்தனை குரல்களையும் நினைவிலிருந்து எடுக்க முடிந்தது அவரால்
யானைகளின் காதலர். நூற்றைம்பது யானைகளின் ஜாதகத்தைச் சேர்த்துவைத்திருந்தார். காளைகளில் பெரும் பித்து கொண்டவர். வாழ்நாளெல்லாம் ஒருமுறை கூட தவறாமல் வெள்ளிக்கிழமை கூடும் மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கு செல்வார். திருவனந்தபுரத்திற்கோ நாகர்கோவிலுக்கோ ஒருநாள் தங்கும்பொருட்டு சென்றார் என்றால் அதற்கு தேவையான அரிசியையும் பருப்பையும் காய்கறிகளையும் பையில் போட்டு எடுத்துச் செல்லும் அவரை நினைவு கூர்கிறேன்.
ஆனால் அவருக்கு அவருடைய எல்லைக்கு அப்பாலுள்ள எதுவுமே தெரியாது. அவரால் தூத்துக்குடி வர்க்கியை ஒரு வாய்கூட சாப்பிட முடிந்ததில்லை. திருநெல்வேலி அல்வா கூட அவருக்குச் சுவைக்கவில்லை. ஏனென்றால் சுவை எல்லைகொண்டது. எல்லையே தனித்தன்மையை வகுக்கிறது. சுவையென்பது ஒர்இடம் ஒரு காலம் ஒரு வெளிப்பாடு. மண்ணில் நீரில் காற்றில் ஒளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வகை பிறிதொன்றிலாமை அது
ஆகவேதான் இலக்கியத்தில் உலகப்பொதுவான சுவை ஒன்றில்லை என்று சொல்லப்படுகிறது. தரிசனங்கள் உலகப்பொதுவானவை. தத்துவங்களும் உணர்வுகளும் உலகப்பொதுவானவை ஆனால் அழகு தனித்தன்மை வாய்ந்தது. தனக்கென்றொரு நிலம் கொண்டது. எனவேதான் பேரிலக்கியவாதிகள் பெரும்பாலும் நிலத்துடன் கட்டுப்பட்டவர்கள்.
விளாடிமிர் நபக்கோவால் டால்ஸ்டாய் மிகவும் ருஷ்யத் தன்மை கொண்டவர் என்று விமர்சிக்கப்பட்டார். அதைப்போல அவருக்குப்பிறிதொரு பாராட்டுரை வேறில்லை. இன்று நான் உணரும் நபக்கோவ் ஒரு சிறிய எதிரலையாக ரஷ்ய பேரிலக்கியவாதிகளின் மேல் விமர்சனத்தை முன்வைத்தவர் மட்டுமே. ஐரோப்பியச் சுவைக்கு ருஷ்யாவைச் சமைத்த நபக்கோவ் எனக்குரியவர் அல்ல. ஆனால் டால்ஸ்டாய் என்றுமுள ருஷ்ய நிலத்தின் மொழிப்பதிவென்று என்னுடன் இருக்கிறார்.
மலபாரிலிருந்து பஷீரையும் குட்டநாட்டிலிருலிந்து தகழியையும் சிவம்ப்கேயிலிருந்து காரந்த்தையும் பத்மா நதிக்கரையிலிருந்து அதீன் பந்தோபாத்யாயவையும் பிரிக்க முடியாது. அந்த மண்ணும் நீரும் ஒளியும் அத்தருணத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட தனித்தன்மையின் மொழி வெளிப்பாடுகள் அவர்களின் ஆக்கங்கள்
தமிழில் நாம் வழிபடும் முன்னோடிப் படைப்பாளிகள் அனைவருமே மண்ணுக்குரிய தனித்தன்மை கொண்டவர்களே. திருநெல்வேலியின் சிறிய பகுதியாகவே சென்னையில் நடமாடிவந்த சுப்பையா பிள்ளை புதுமைப்பித்தனேதான். காலை ஆட்டிக் கொண்டு ’அவன் போக்கொளிழிஞ்சே போனானே’ என்று கையை மலர்த்தும் குஞ்சுவை பிள்ளைவாளின் நெல்லை மொழிதான் சென்று தொட முடியும். ’பீப்பிளி பீச்சிண மிஷ்கீன் !” என்று முற்றத்தில் வந்து நிற்கும் சூஃபியை தானே உருவாக்கிக் கொண்ட மொழியில் சொன்ன ஷாகினாவை பஷீரால் மட்டுமே பார்க்க முடியும்
அழகிரிசாமியின் கரிசல் அல்ல கிராவின் கரிசல். அவர்களின் பூர்வீக வீடுகளுக்கு நடுவே நானூறு அடி இடைவெளி மட்டுமே உள்ளதென்றாலும் அவர்கள் நின்ற நிலம் ஒன்று, உயிர்த்த மூச்சு ஒன்று , நோக்கிய கோணமும்கூட ஒன்றே அவர்களுக்கு முன் தங்களைக் காட்டிய இயற்கையின் தனித்தன்மை வெவ்வேறு. சுந்தர ராமசாமியின் நாகர்கோயில், ஜானகிராமனின் கும்பகோணம், ஆ.மாதவனின் சாலைத் தெரு, ப.சிங்காரத்தின் மருதை, ஆர் ஷண்முகசுந்தரத்தின் கோவை – எழுத்தாளர்களினூடாக தங்கள் தனித்தன்மையை நிலம் வெளிப்படுத்துகிறது.
அந்நிலத்தில் நிகழும் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் அந்தத் தனித்தன்மையே விளைகிறது. அந்த வாழ்க்கையை மேலும் மேலும் அறியத்துடிக்கும் வாசகனின் ரசனை சென்று தொடுகையிலேயே சுவையென்ற ஒன்று அறியப்படுகிறது. ரசனா என்ற சொல்லுக்கே சமஸ்கிருதத்தில் நாக்கு என்று தான் அர்த்தம். புனைவுலகுகளின் மேல் இமையா விழிகளுடன் நாபறக்க மெல்ல ஊர்ந்து செல்லும் நாகங்கள் வாசகர்கள். ஒலியையும் நாவால் அறிவது. காற்றை நாவால் அளவிடுவது நாகம். ஓசையற்றது.
சுவையே இலக்கியத்தின் முதற் தகுதி. தரிசனமும் தத்துவமும் உணர்வுகளுமே கூட சுவையெனும் வடிவு கொண்டு வருகையிலேயே கலையாகின்றன. சுவையென உருமாறாத அனைத்தும் இலக்கியத்தில் பொருந்தாது மிதப்பவை மட்டுமே. சுவைத்தபின் எண்ணுவனவே பிற அனைத்தும். அழகென்றும் நுட்பமென்றும் நாம் அதைச் சொல்கிறோம்.
[ 2 ]
வண்ணதாசனின் புனைவுலகை சுவை என்னும் சொல்லால் அடையாளப்படுத்தலாம். அவருடைய தீவிர வாசகர்கள் அனைவருமே அவர் தங்களுக்கு அளித்த தனிப்பட்ட சுவையனுபவத்தைப்பற்றியே பெரிதும் பேசுகிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர், நெல்லையின் பண்பாட்டுத் தனித்தன்மையை வெளிக்கொணர்ந்தவர், மனிதர்களின் நுண்ணிய முகங்களை வெளிப்படுத்தியவர், என்றெல்லாம் வாசகர்களால் பல்வேறு தருணங்களில் சொல்லப்படும் வரிகள் அனைத்துமே வண்ணதாசன் உருவாக்கும் தனிச்சுவையையே அடையாளப்படுத்துகின்றன.
அவர் படைப்புலகில் தத்துவங்களோ தரிசனங்களோ இல்லையென்பவர்கள் கூட இந்த சுவையெனும் அம்சத்தை தவறவிட்டதில்லை. சொல்லப்போனால் சுவை என்பதே அவரது தரிசனமென்று சொல்லலாம். ஒரு கால-இடமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது இப்பிரபஞ்சம். அதனுடன் கொள்ளும் உறவு வழியாக மானுடனால் அடையப்படும் அனுபவமே சுவையெனச் சொல்லப்படுகிறது. அச்சுவையன்றி மானுடன் இப்பிறவியிலிருந்து பெறத்தக்கதேதும் இல்லை என்பது வண்ணதாசனின் தரிசனமோ என்று தோன்றுகிறது.
மீண்டும் மீண்டும் மாறாக் காதலுடன் தன் வாழ்நிலத்தின் மீது படிவது அவரது உள்ளம். பூக்களை முத்தமிட்டுச் செல்லும் வண்ணத்துப்பூச்சி போல .மகரந்தத்தால் ஒரு மலரை இன்னொரு மலருடன் இணைக்கும் அதன் மாபெரும் கோலம். சுவைப்புள்ளிகளை இணைத்து வண்ணதாசன் தன் புனைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் பற்றிய தன் கட்டுரை ஒன்றில் கல்பற்றா நாராயணன் “அனைத்து இலைகளும் இனிக்கும் காட்டில் அலையும் பஷீரின் ஆடு” என்று சொல்கிறார். பாத்துமாவின் ஆட்டுக்கு அடங்காப்பசி. பசியே அதன் நாவில் சுவையாகவும் நாசியில் தேடலாகவும் திகழ்கிறது
சுவை என்று வண்ணதாசன் உணர்வது கனிவு என்றோ பிரியம் என்றோ பிறிதொரு சொல்லால் அவரால் சுட்டப்படுகிறது. சுவை என்பதற்கு அச்சொற்களும் சிறந்த மாற்றீடுதான். எனக்கு மட்டிப் பழம் பிடிக்கும் என்று சொல்லும்போது சுவையையே உத்தேசிக்கிறோம். சுவை என்பது ஒன்றின் மேல் நாம் கொண்ட விருப்பத்தின் பிறிதொரு வடிவுதான். ஒரு மனிதரில் ஒரு பொருளில் நாம் நினைத்திருப்பது நாமறிந்த அனுபவத்தைத்தான். அதையே சுவை என்கிறோம்.
வண்ணதாசன் அம்பாசமுத்திரத்திலும் சென்னையிலும் பணியாற்றியிருக்கிறார். வெவ்வேறு நிலக்காட்சிகளினூடாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் நெல்லையை அன்றி அவர் எதையும் எழுதவில்லை. ஒருகோணத்தில் நெல்லையை அல்ல அவர் எழுதியது என்றுகூட சொல்லலாம். அவர் வாழ்ந்த இல்லம் ,அவர் நடை பழகும் வீதிகள், கடைகள், குறைவாக அலுவலகம் என மிகக்குறுகிய எல்லைக்குள் அவர் கண்ட மனிதர்களைப்பற்றியே எழுதியிருக்கிறார்.
உண்மையில் குறுகுந்தோறும் கூர்மை கொள்வது சுவை. எனவே உலகளாவிய சுவை என்று ஒன்று இல்லை. இந்தியச் சுவையென்று ஒன்று உண்டு. அதற்குள் தமிழகச்சுவை தனித்தது. அதற்குள் நெல்லைச் சுவை மேலும் கூரியது. அதற்குள் வேளாளர் இல்லத்துச் சுவை மேலும் தனித்து நினைவுகூரத்தக்கது. எல்லைகளை குறுக்கிக் கொண்டு சென்று கூர்மைப்படுத்தும் ஒரு பயணமே சுவை நுட்பத்தைக் கண்டடையும். ஆகவேதான் மீண்டும் மீண்டும் வண்ணதாசன் ஒரே வகையான வாழ்க்கைச் சித்திரங்களுக்குள், ஒரே வகையான நிலக்காட்சிகளுக்குள் செல்கிறார்.
சொல்லப்போனால் சுவையிலன்றி பிறிதெதிலும் வாசகனின் கவனம் நிற்கக்கூடாதென்பதற்காகவே தன் கதைகளின் வடிவத்தையும் மாறாமல் வைத்துக் கொண்டிருக்கிறார். நுண்மை தேடும் ஒவ்வொரு கலைவடிவும் பொது வடிவை மாற்றாமல் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குறைந்தது முன்னூறு ஆண்டுகளாக ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா? என்ற பாடல் இங்கே பாடப்படுகிறது. அதே ராகம், அதே தாளம். பாடகர் உருவாக்கும் நுண்மையான தனித்தன்மையே அதன் சுவையென அறியப்படுகிறது. கைவளை கழல்தல் சங்க இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒவ்வொரு முறை கழல்வதும் வெவ்வேறு வளை, வெவ்வேறு துயர்.
இத்தெளிவை அடைந்த ஒரு வாசகன் புதிய வடிவம், புதிய நிலம், புதிய வாழ்க்கைச் சிக்கல் என்று வண்ணதாசனின் படைப்புகளுக்குள் செல்ல முயலமாட்டான். கூரிய ஊசி முனையால் மட்டுமே தொட்டு வேறுபடுத்தத்தக்க சுவை மாறுபாடுகளை மட்டுமே அங்கு அவன் தேடிச்செல்வான். வண்ணதாசனின் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான வேறுபாடென்பது ஓர் இசைப்பாடலின் ஒரு ஸ்வரத்திற்கும் அடுத்த ஸ்வரத்திற்குமான வேறுபாடு அளவுக்கே சேய்மை கொண்டது. அண்மை என்றால் அண்மை, சேய்மையை அறிந்தால் தொலைவு,
நாம் சென்று நோக்கி அறியும் நெல்லை வண்ணதாசனின் எழுத்துக்களில் இல்லை. இந்தச் சிறிய தேனுசாவி தொட்டுச்செல்லும் சில மலர்களின் வண்ணங்களும் வடிவங்களும் மட்டுமே உள்ளன. நெல்லையின் மையமாகிய நெல்லையப்பர் ஆலயம் பெரும்பாலும் அவர் கதைகளில் வருவதில்லை. தமிழிலக்கியத்துள்ள இந்தத் தனித்தன்மையை வாசகர் முன்னரே உணர்ந்திருக்கலாம். கும்பகோணத்தின் முகமென அறியப்படும் ஜானகிராமனின் கதைகளில்கூட கும்பகோணத்தின் ஆலயங்களே இல்லை. புழுதி படிந்த சாலைகளும் குளிர்ந்த கொட்டகை இடப்பட்ட இல்லங்களும் காவிரிக்கரையின் அந்தியும் புலரியும் மட்டுமே உள்ளன.
வண்ணதாசனின் புனைவுலகில் நெல்லையின் இறந்த காலமோ நெல்லையின் வரலாறோ, தொன்மங்களோ, பண்பாட்டு மரபுகளோ, நாட்டார் வாழ்க்கைக்கூறுகளோ இல்லை. சென்ற கால வாழ்க்கைத் தடங்களே காணப்படுவதில்லை. ஒரு வாசகன் இவர் வீட்டில் நூறாண்டுகாலம் பழைய ஒரு கட்டில் இருக்காதா என்ன, இருநூறாண்டுகாலம் பழமையான ஒரு மரப்பெட்டியை பாதுகாத்து வைத்திருக்கமாட்டார்களா என்ன, மூன்று தலைமுறைக்கு முன் இறந்த ஒரு மூதாதையின் கதையை இவர் பாட்டி இவரிடம் சொல்ல மாட்டாளா என்ன என்று கேட்கக்கூடும். ஆனால் சுவை என்பது நேற்றில் இல்லை. நேற்றென்பது ஒரு நினைவு. நேற்று என்பது மொழியில் கற்பனையில் மட்டுமே நிகழ்வது. புலன்கள் அறியும் சுவை பருவடிவ உலகில், அவை அமைந்திருக்கும் நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளது. சுவையுசாவி இன்றிருக்கும் மலர்களிலேயே அமர முடியும். நேற்றிருந்த மலர்களின் ஓவியங்கள் அதற்கு பொருள்படுவதே இல்லை
ஆகவே வண்ணதாசன் எப்போதும் நிகழ் காலத்தை எழுதுகிறார். அவருடைய பெரும்பாலான கதைகள் வீட்டுவாசலைத் திறந்து அவர் வெளியில் செல்வதில் தொடங்குகின்றன, மானசீகமாக இந்தச் சித்திரம் அவர்கதைகளை வாசிக்கையில் நமக்கு வந்துவிடுகிறது. தன் சிறு கூட்டிலிருந்து வெளிவந்து ரீங்காரத்துடன் சிறகு விரிக்கும் தேனீ போல அந்தக் கதைசொல்லியின் முதல் எழுகையை அவர் கதைகளில் காணலாம். “சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது” — என மிக இயல்பான ஒரு சொற்றொடரில்தான் அவருடைய பெரும்பாலான கதைகள் ஆரம்பிக்கின்றன. அந்தத் தேனீ பின்னர் சென்று அமரும் மலர்கள் என்ன என்று அது அறியாது. அதன் சுவை நரம்பின் ஈர்ப்பொன்றே அதைத் தீர்மானிக்கும்.
வண்ணதாசனின் அனைத்து கதைகளுமே தன்னிலையிலிருந்து சொல்லப்படுபவை. இலக்கணப்படி படர்க்கை என்றாலும் அது ஒருவகைத் தன்னிலைதான், அந்த ’அவன்’ நமக்கு மிகத்தெரிந்த அக்கதைசொல்லியே.. மையக்கதாபாத்திரத்தின் பார்வையினூடாகவே விரியும் காட்சிகளாகவே உள்ளன அவர் கதைகள். இவ்வியல்பு அவரது படைப்புலகின் எல்லையை மிகக் குறுகலாக்குகிறது. ஒட்டு மொத்தமாக அவரது சிறுகதையைப் படிக்கும்போது அவை திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரே கதைகள் தானோ என்றோ, ஒரே கதையின் பல்வேறு பகுதிகள் தானோ என்றோ வாசகனை மயங்க வைக்கிறது.
அதற்கும் விடையெனச் சொல்லப்படவேண்டியது. இந்த சுவையெனும் அம்சம்தான். சுவைப்பவனின்றி சுவையில்லை. எவருடையது புலன் அறிந்தது இந்தச் சுவை என்ற வினாவுக்கான விடையே அந்த மையக்கதாபாத்திரம். அவனறியும் துயரம், அவனறியும் மகிழ்வு ,அவனறியும் இனிமை ,அவனறியும் கசப்பு –அதனூடாக மட்டுமே இக்கதைகள் நிகழமுடியும். இக்கதைகள் சுவைப்பெருக்கென்றால், அந்த மையக்கதாபாத்திரம் ஒரு நாக்கு. இனிப்பும், துவர்ப்பும், கசப்பும், புளிப்பும் ஒரே நாவால்தான் அறியப்படுகின்றன. துழாவி சுவைத்து அறியும் அந்த நாக்கின் தவிப்பையும் நெளிவையுமே அவர் கதைகளில் வரும் அக்கதைசொல்லி பாத்திரத்தில் நாம் பார்க்கிறோம்.
வண்ணதாசனின் புனைவுலகில் உச்ச தருணங்கள் இல்லை. நாடகமுனைகள் இல்லை. பெரும்பாலான கதைகளில் எழுச்சியோ ஓட்டமோ அமைவதில்லை. ஒரு அன்றாடக் காலைநடையின் இயல்பான தனித்தன்மை கொண்டவை அவை. தன்னை தன்னுள் முற்றமைத்துக் கொண்டு விழிகளால் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஒரு சிறுவனின் நோக்கில் சொல்லப்படுபவை. ஏனெனில் சுவையை மறைப்பது கொந்தளிப்புகளும் அலைக்கழிப்புகளுமே. கொந்தளிப்பைச் சொல்லும் கதைகள் உண்டு. அவை கொந்தளிப்புகளினூடாக அலைக்கழிப்புகளினூடாக இப்புவியை, வாழ்க்கையை அறிகின்றன. முற்றாக அவற்றைத் தவிர்த்து தன் அன்றாட நிகழ்வுகளினூடாக சுவையைத் தொட்டெடுக்கும் வண்ணதாசனின் கதைகளுக்கு அவை பெருஞ்சுமை.
தன் மேல் வைக்கப்படும் எதையும் இலை வளைந்து கீழே விட்டுவிடுகிறது. வண்ணதாசனின் புனைவுலகு எடைமிக்க தருணங்கள் அனைத்தையும் இயல்பாக நழுவவிட்டுவிடுவதைக் காணலாம். பெரும்பாலான படைப்புகளில் கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் ஓரிரு வரிகளுக்குள் சொல்லி முடிக்கப்பட்டுவிடுகின்றன. ஒரு கூற்றாகவோ நினைவுக்கீற்றாகவோ அவை அறிவுறுத்தப்பட்டுக் கடந்து செல்கின்றன. உதாரணம் அவருடைய மனுஷா மனுஷா என்னும் கதை. இன்னொரு கதைசொல்லி தீவிரமாக மொழிய முற்படும் பல தருணங்கள் கொண்டது அக்கதை. அவை சிட்டுக்குருவி அலகால் கொத்தி எடுப்பதுபோலச் சொல்லிச் செல்லப்படுகின்றன.
ஒரு நாடகத்தீவிரம் கொண்ட படைப்பில் எவை குறைவாகச் சொல்லப்பட்டிருக்குமோ அவை இவரது படைப்பில் விரித்து விரித்துச் சொல்லப்படுகின்றன, அதாவது புறக்காட்சிகள். நாடகத்தீவிரம் கொண்ட ஆக்கம் எளிதாகக் கடந்துசெல்பவை புறக்காட்சிகளே. அவற்றை கூரிய பென்சில்முனையால் தீற்றிச்செல்கிறது இவரது புனைவுலகு. நாடகீய உச்சம் நோக்கிச் செல்லும் படைப்பு அதன் மையத்தின் அனலால் அதிலுள்ள அனைத்து பொருட்களையும் படிமங்களாக்கிவிடுகின்றது. ஒவ்வொரு பொருளையும் தொட்டு முடிவின்மை வரைக்கும் நீட்டும் வாய்ப்பை வாசகனுக்கு அளிக்கிறது. நாடகத்தன்மையை வெளியே நிறுத்திவிடுவதால் வண்ணதாசனின் படைப்புகளில் பொருட்கள் அனைத்தும் பொருட்களாகவே நிலைகொள்கின்றன. பொருட்களென அவை அளிக்கும் தன்னியல்பான அழகும் சுவையும் மட்டுமே அவர் படைப்புகளில் நிகழ்கிறது. அப்பொருட்களை சென்று தீண்டி அறிவது நுண்சுவை தேரும் ஒரு புலன். அதுவே அவர் புனைவுலகை ஆக்குகிறது