ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி

 

CO2B0303

 

பிள்ளை பிறந்த வீட்டிற்குப் போவெதென்பதே கொஞ்சம் விசேஷம்தான்.கைக்குழந்தையை, வளர்ந்தவர் எடுத்து கொஞ்சுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். குழந்தையின் பின் தலையை தன் இடது கையால் பொத்தி மார்போடு எடுத்து பல்லி சப்தமிடுவது போல் ஒலி எழுப்பிக்கொண்டு வளர்ந்தவர் “யாரு வந்திருக்கா உன்ன பார்க்க?ஆரு… மாமாடா கண்ணு…ஆஆமா…மாமாதான்” என்று தன் உலகிலிருந்து பேச்சைத் தொடங்குவார்.

குழந்தையும் தன்னை தூக்கியவரை உற்று நோக்கும். அதன் உலகிலிருந்து அதன் பாஷையில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்.  இருவரும் தத்தம் உலகின் விளிம்பில் நின்று கொண்டு, தம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் மறந்துவிட்டு, தத்தம் மொழியின் வழியே அடுத்த உலகை நோக்கவும் அறியவும் முயற்சிக்கும் கணங்கள் பொற்கணங்கள்.எப்பேர்பட்ட “கடுமையான”, பட்டை ப்ரேம் கண்ணாடி போட்டிருக்கும் ஆசாமிகளும் குழந்தையின் உலகினுள் சட்டென போய்விடும் தருணங்கள்.

வண்ணதாசனின் படைப்புகளை வாசிக்கையில் கதை சொல்லியும் வாசகரும், வளர்ந்தவராகவோ அல்லது குழந்தையாக மாறிவிடுகிறார்கள். அவரது படைப்புகளை வாசிப்பு அனுபவத்தை இப்படித்தான், “இது மாதிரிதான் அது” என்றுதான் சொல்ல வருகிறது. அருமையாக இருப்பதை வேறு எப்படித்தான் சொல்வதாம்?

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் படைப்பாளியின் படைப்புலகத்தை எப்படி மதிப்பிடுவது? நிச்சயம் அவரது ஒரு சில படைப்புகளைக் கொண்டு அல்ல.ஆனால் நான் இந்த கட்டுரையில் அப்படித்தான் முயற்சித்திருக்கிறேன். தனுமை, போய்க்கொண்டிருப்பவள், நிலை போன்ற படைப்புகள் ஓரளவிற்கு அடையாளம் காணப்பட்டவை. ஆனால் இந்தக் கட்டுரைக்கு வேறு சில சிறுகதைகளை எடுத்துகொண்டிருக்கிறேன். அவை இன்னும் அதிகம் வாசிக்கப்படாத அல்லது பேசப்படாதது ஒரு காரணம். இன்னொன்று, இவை மற்ற எந்த முக்கிய படைப்புகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்பதும் இன்னொன்று.

(“நடேச கம்பரின் மகனும் அகிலாண்டத்து அத்தானும்”)

நெல்லை போன்ற ஒரு நகரத்தில், டவுன் பஸ்ஸினுள் அத்தனை நெரிசல்களினூடும் காவித் துணி கவர் போட்ட தவில், நாதஸ்வர வித்துவான்களில் நாதஸ்வர வித்துவானை அடையாளம் தெரிந்துவிடுகிறது, கதை சொல்லிக்கு. இருபத்திரண்டு வருடங்கள் ஆனால்தான் என்ன? தன் திருமணத்திற்கு வாசித்தவரை, அதுவும் முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்கு காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை குளிர குளிர வாசித்தவரின் முகம் மறந்து போகுமா என்ன? ஒரு கை உயர்ந்து பஸ் கம்பியைப் பிடித்திருந்ததில் பக்கவாட்டு முகம்தான் தெரிகிறது அதனால் என்ன?கதை சொல்லிக்கு நாதஸ்வர வித்துவானின் சால்வையிலிருந்து ஓர் ஓடை போல் அவருடைய வாசிப்பு இறங்கி நகர்வது போல் உணர்கிறார்…தவில், நாதஸ்வர கருவிகள் இடைஞ்சலாக, எரிச்சல் பட்டவரின் முகம் கூட தளும்புவது போல்…

கதை சொல்லி திருமண நாளிற்கு போய்விடுகிறார். மாப்பிள்ளை பேசணும்ங்கறார் என்றதும் எழுந்து வந்த, கூடுதல் குறைவில்லாமல் பேசிய நடேச கம்பரின் மகனை சந்தித்த நாளிற்கு போய்விடுகிறார். இறங்கியதும் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார். வெறும் திருமண நாளை பற்றி மட்டுமல்ல, நாதஸ்வர வித்துவானை பற்றி மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ சொல்ல வேண்டும் என்று அவர் உலகம் நிறைந்து தளும்பிக்கொண்டு இருக்கிறது. புற உலகில் நெரிசலான டவுன் பஸ் பிரயாணம் என்ன செய்துவிட முடியும்?

நிறுத்தத்தில் ஏற முண்டியடிக்கும் கூட்டத்தைப் பிளந்து வெளி வரும் மனைவியுடன் தன் நிறைந்த உலகின் மாந்தரைப் பற்றிச் சொல்ல காத்துக்கொண்டிருக்கிறார். சிரித்துக்கொண்டு, சிரித்து சிரித்து கண் கலங்கினமாதிரி, பளபளவென நீரில் புரண்டு கொண்டிருந்த பார்வையுடன், புடவை விசிறலும் வதங்கிய பூ வாடை எட்டுகிற தூரத்தில் வரும் மனைவியோ, ஒரே பாராவில் முற்றிலும் வேறு, இன்னொரு உலகை, அவரின் தளும்பிய உலகை முன் வைக்கிறார். அதில் அவரது அகிலாண்டத்து அத்தான்…வெகு காலம் கழித்து சந்தித்த அத்தானைப் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார்…முழுப்பரிட்சை லீவிற்கு மாமா வீட்டிற்கு போகிற போதெல்லாம் ஆற்றுக்கு வண்டியடித்துக்கொண்டு போகிற அகிலாண்டத்து அத்தான், மாங்காய், நொங்கு எல்லாம் பறித்துக்கொடுக்கும் அத்தான், தினசரி ரயிலில் பேட்டை காலேஜிற்கு வந்து படித்துவிட்டுப் போன அகிலாண்டத்து அத்தான், திடீரென யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு வடக்கே ஓடிப்போன அத்தான்…

“அவசரமா இறங்கிப் போயிட்டாங்க, நீங்க அவங்களைப் பார்க்கலையே” என்று கேட்கிறார் மனைவி. கதை  சொல்லிக்கும்  சரி, வாசகருக்கும் சரி, பார்த்துவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. நடேசர் கம்பரின் மகனைப் பார்த்தாலே போதுமே, ஒருத்தரைப் பார்த்தாலே இன்னொருத்தரைப் பார்த்தது போலத்தானே?நிறைந்திருக்கும் மனங்கள்/ உலகங்கள் வேறு வேறு இல்லை, எல்லாம் ஒன்றுதான் என்ற ஒன்று பளிச்சிடுகிறது, இறுதியில்.

மாசிலாமணி என்ற, மில்லில் வேலை பார்க்கும் நண்பரை, சைக்கிளை ஸ்டாண்ட்டிலிருந்து எடுத்தவுடன் பழக்க தோஷத்தில் மணி அடிப்பவரை, பொம்பளை புள்ளை பொறந்திருக்கு என்று மிட்டாய் கொடுப்பவர் நமக்கு புதிதில்லை. (“மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது”). நிச்சயம் நமது வாழ்வில் வேறு வேறு வடிவிலாவது சந்தித்திருப்போம்.அவருடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்லி அடுத்த முறை ஊருக்கு போகும் போது தனது குழந்தையை, ஊக்கம் குன்றிய மனைவியை எல்லாரையும் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறார், கதை சொல்லியை. சொல்லும் போதே மாசி அழ ஆரம்பிப்பது தெரிகிறது.

கதை சொல்லி, இன்னொரு நாள், ஊருக்குப் போயிருக்கும் ஓர் நடுப்பகலில்,  குருக்களைய்யா காம்பவுண்ட்டில் விசாரித்துவிட்டு மச்சியிலிருக்கும் மாசி வீட்டிற்கு ஏறி (“சிமெண்ட்டில் மரக்கட்டை பதித்த, தொம் தொம்மென அதிர்ந்து”) குழந்தை பிறந்த வாசனையோடு இருக்கும் வீட்டிற்கு நுழையும் போது மாசியின் மனைவியும், அத்தையும் எல்லாரும் உறக்கம். சிணுங்கிய குழந்தைதான் எழுப்பி விடுகிறது.குழந்தையை கொஞ்சிக்கொண்டே  மாசியைப் பற்றி சொல்லலாம் என்கையில் “அவுங்க மில்லுக்கு வேலைக்குப் போனாங்களா அய்யா ?’ என்று துவங்கி, ‘தெருவுல நிறுத்திவிடுவான் போல இருக்கே எல்லாத்தையும்’ என்று சொல்லிக்கொண்டே மாசியின் அத்தை அழும்போது நாம் இன்னொரு உலகில் இறங்க வேண்டியதாகிறது, அபூர்வ களையுடன் சிரிக்க ஆரம்பிக்கும் குழந்தையுடன்தான்.

“வடிகால்” சிறுகதையில் கதை நாயகன் சுந்தரத்திற்குப் பொறுக்கவில்லை. அவன் தகப்பனார் ஒரு கடுமையான வீட்டு சொந்தக்காரர். குடித்தனக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம். வாசலில் யாராவது சொம்பை வைத்திருந்தால் எட்டி உதைக்கத் தெரியும். முருங்கை மரத்தின் காய்களை தினமும் எண்ணி எண்ணி வைக்கத்தெரியும். இது எல்லாவற்றையும் விட இன்னொரு குடுத்தன வீட்டின் குஞ்சு எனும் வாயில்லாத பெண்ணின் உறவுக்காரர்களிடம் நடந்துகொண்ட விதம் – யாருக்குமே ஆறாது.

குஞ்சுவின் பாட்டி இறந்துவிட்ட துக்கம் விசாரிக்க ஆறு மாதம் கழித்து பம்பாயிலிருந்து உறவினர் வந்து இறங்குகிறார். இறந்த போது வர முடியவில்லை. ஆறு மாதம் துக்கத்தை பொத்தி வைத்து இப்போது வீட்டிற்கு வந்து “என்னை பிள்ளை போல வளர்த்தியே பெரியம்மே, கடைசி காலத்தல உன்னை பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று கதறுபவரை யாருக்காவது அதட்டி “இந்த அழுகையெல்லாம் ஆத்து மேட்டுல வைச்சிகிடணும், இங்க நாலு குடித்தனம் இருக்கற இடத்துல கூடாது” என நிறுத்த யாருக்காவது  மனம் வருமா?

சுந்தரத்தின் தகப்பனாரால் முடிகிறது. அத்தனை கடுமையாக இருக்க முடிகிறது.மனம் வெம்பிப்போன சுந்தரம் குற்றால அருவியில் குளிக்கையில் மூச்சு திணறி இறந்த செய்தி சொல்ல வரும் பையனைப் போலவே வாசகர் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்கிறது. சேதி கேட்டு எல்லா குடித்தனக்காரர்களும் வீட்டு சொந்தக்காரர் வீட்டின் முன் குழுமிவிடுகிறார்கள்.வெளியே போயிருந்த வீட்டு சொந்தக்காரர், சுந்தரத்தின் தகப்பனார் திரும்ப வருகிறார். சேதி கேட்டு திகைத்து குடையும் கையுமாக “ஏ, அய்யா” என்று சுந்தரத்தின் உடலின் மேல் விழுந்து கதறுகிறார்.அதுவரை அமைதியாக இருந்த எல்லாரும் அனுமதி கிடைத்தது போல் வாய் விட்டு அழ ஆரம்பிக்கிறார்கள்.

முருங்கைமரத்துப் பக்கம் தனித்து நின்று வாயைப் பொத்தி பொறுமிக்கொண்டிருந்த,  வடக்கிலிருந்து வந்திருக்கும் குஞ்சுவின் மாமாவோ “ஏ பெரியம்மே, உன்னைப் பார்க்க கொடுத்து வைக்கலையே” என்று பெருஞ்சத்தத்தில் அழுகிறார்… சுந்தரத்தின் அப்பா அவனது கால் மாட்டிலிருந்து தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் தலையை புதைத்து கண்ணீர் பெருக்கும் போது…எல்லாருடைய கண்ணீரும் ஒன்றுதான், துயரத்தில் உன்னுடையது என்னுடையது என்ற பிரிவு உண்டா என்ன என்று தோன்றுகிறது.

வண்ணதாசனின் படைப்புலகம் முழுக்க முழுக்க மனிதர்களால், “உயிர் கொண்ட” மனிதர்களாலும், அருகம்புல், துளசி, அந்த வேப்பம் மரம், கோவைப்பழம், அணில், மஞ்சணத்தி பூ, “நடுகை” தாத்தா, அவரது கன்னுக்குட்டி இவர்களாலும் மற்றும்  தருணங்களாலும் நிரம்பியிருக்கிறது.\அத்தருணங்கள் நீங்களும் நானும் தினம் தினம் சந்திக்கின்ற தருணங்கள்தான். ஆனால் வண்ணதாசன் போன்ற ஒரு படைப்பாளியால்தான் நலுங்காமல், அடிக்கும் சாரலில் முற்றிலும் நனையாமல் பொத்தின உள்ளங்கையை மெல்ல விலக்கி புத்தம் புதிய குருவிக்குஞ்சைக் காட்டுவது போல் காட்ட முடிகிறது. அப்படிக்காட்டும் போது அத்தருணங்கள் நிச்சயம் புதிதாய் இருக்கின்றன. இதற்கு அவரது மொழியும் ஒரு முக்கிய காரணி.

சில வாக்கிய அமைப்புகள் சிறுகதைகளிலிருந்து கவிதை வரிகளாக மாறி மாறி வருவதை துல்லியமாக உணரமுடிகிறது. படைப்புகள் வெறுமன தருணங்கள்  மட்டும் ஆனவை அல்ல. கதையின் கூரிய மையப்புள்ளியை நோக்கி தருணங்கள் புடை சூழ செல்கின்றன.

“உப்பு கரிக்கின்ற சிறகுகள்” என்ற சிறுகதையில், அரசு எனப்படும் திருநாவுக்கரசின் பிடிவாத தகப்பனாரால் நிராகரிக்கப்பட்ட தோழி (“அவியலும் பொரியலும் வச்சு சாப்பாடு போட்டு ஊஞ்சல்ல உட்கார்த்தி வச்சு அழகு பார்த்துக்கிட்டா இருக்கே மூதேவி” என்று அரசின் அம்மாவை அறைகிறார், கல் பொறுக்கிக் கொண்டிருக்கின்ற மடிச்சுளகிலிருந்து பாசிப்பயறு பட்டாசல் முழுவதும் விசிறுகிறது. அரசின் அம்மா குனிந்து கூட்டுகையில், சிறு உள்ளங்கைக்குள் உருண்டு உருண்டு இளம்பச்சை குவிந்து கொண்டிருக்கையில் உதை விழுகிறது) திரும்ப அந்த வீட்டிற்கு அரசை பார்க்க வர சில காலம் ஆகிவிடுகிறது.

அதற்குள் அரசு அம்மா இல்லை; அப்பா துரும்பாக, நினைவு தவறி முதுமையின் ஆழத்திற்கு, மிக ஆழத்திற்கு போய்விடுகிறார். அரசுதான் குளுப்பாட்டி பவுடர் போடுதல், சவரம் செய்தல் எல்லாம். (“அப்பாவிற்கு சவரம் செய்வதுதான் என் இப்போதைய தியானம்…அப்பாவின் சவரக்கத்தி பிரசித்தமானது. அப்பாவின் தீட்டுக்கல் பிரசித்தமானது. நான் அப்பாவின் சவரக்கத்தி போல கூர்மையாக இருக்கிறேன். அந்த கத்தியை உபயோகிக்கிற போது உயர்ந்து நிற்கின்ற என் சுண்டு விரலை நீ பார்க்க வேண்டும்” அரசின் கடிதம்).

தோழி வந்து வாசல் மணியை அழுத்தும்போது வீட்டு வேலைக்காரிதான், இசக்கிதான் கதவைத் திறக்கிறார்; பேசுகிறார். அந்த நேரத்தில் அரசு கல்லூரியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. தோழியும் இசக்கியும் சற்று நேரத்தில் இலகுவாகிவிடுகிறார்கள். புறவாசல் நடை சில சமயங்களில் தடுக்கிறது, சில சமயங்களில் தாண்டிப் போகச்சொல்கிறது. உட்காரச் சொல்கிறது. அன்று தோழியை உட்காரச் சொல்கிறது.  இசக்கி தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருக்க, தோழிக்கு இசக்கி அல்லது அரசு,  யாராவது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மத்தியானத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போல இருக்கிறது.

“இப்படி வந்து உட்காரேன்” என்று இசக்கியை கையை பிடித்து உட்கார வைக்கும் போதுதான், “நீங்கள் யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று இசக்கி சிரித்துக்கொண்டு கேட்கையில்தான் வெளியில் மோட்டார் பைக் வந்து நிற்கும் சத்தம்.அழைப்பு மணி ஒலிப்பதற்கு சற்று தாமதமாகிறது. வாசலில் கிடக்கிற தோழியின் செருப்புகளை அரசு பார்த்திருக்க வேண்டும்…உண்மையில் அந்தth தாமதம் என்னவொரு ஒரு முடிவுறாத, நித்ய கணம்…

என் நண்பர் ப்ரபு கவிதையைப் பற்றி அவர் எங்கோ படித்ததை சொன்ன விதம் நினைவிற்கு வருகிறது. கவிதை என்பது அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல்.முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கி கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தை புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது.

ஆனால் வண்ணதாசனால் பழக்கத்தின் பாசியை அகற்றி ஒவ்வொரு முறையும் தருணங்களை புதிதாக வாசகரோடு பகிர முடிகிறது. இவரது படைப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இது ஒரு முக்கிய காரணி என எண்ணுகிறேன்.உதாரணத்திற்கு “நடுகை”யில் ஒரு நெல்லையப்ப மாமா. இரவு முழுவதும் ரயிலில் பயணம் செய்து எழுந்திருந்து வந்தவர். வீட்டைச் சுற்றி மண்டியிருக்கிற செடி கொடிகளை வெட்டி துப்புரவு பண்ணினால்தான் நல்லது” – கையில் வெதுவெதுப்பான காப்பித் தம்ளரை வைத்துக்கொண்டு ஒரு வாய் குடிப்பதும், கொஞ்சம் நேரம் அந்த செடிகளின் அடர்த்திகளையே துளாவுவதுமாக இருந்து கொண்டு இப்படிச் சொல்கிறார்.

“அவர் விடியக்காலம் நாலரை அஞ்சு மணிக்கு வந்து சேர்கிற ரயிலில் இப்படி வருவதும், பல் தேய்த்த கையோடு இப்படி காப்பி தம்ளருடன், முன் வாசலிலோ, புற வாசலிலோ வந்து நின்றுகொண்டு பார்ப்பதும் எதையாவது சொல்வதும், வேறு யாரும் சொல்லாததாக இருக்கும். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் ஒரு தடவை “இங்க வா” என்று கூப்பிட்டு, விடிய ஆரம்பிக்கிற அந்த நேரத்தில் நீலக்குமிழ் போல ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னார்.  சொல்லச் சொல்ல நட்சத்திரம் மட்டுமே ஆயிற்று வானம். அப்போது வீசிய குளிர்ந்த காற்றை நட்சத்திரம் அனுப்பியது போல இருந்தது.”

 

 

download
சிவா கிருஷ்ணமூர்த்தி

 

*

 

ஒரு படைப்பாளியின் களம் எத்தனை முக்கியம் என்பது நாம் அறிந்த ஒன்று.நெல்லை நகரம், சரி, மாவட்டமே இருக்கட்டும், என்ன பெரியதாக இருந்துவிடப்போகிறது? ஆனால் இந்த சின்ன வட்டத்திலிருக்கும் மாந்தர்கள், உறவுகள் எத்தனை பெரியதாக வியாபித்து இருக்கிறார்கள்… ஆச்சி, மாமா, அத்தை, அக்கா…அத்தனை கோபங்களுடனும் எரிச்சல்களுடனும், பொறாமையுடனும், அக்கறையுடனும் மானிடத்தின் அத்தனை குணங்களும் சேர்ந்த உறவுகள்…கிட்டதட்ட உறவுகளின் ஓர் ஆவணம் போலவே ஆகியிருக்கின்றன, வண்ணதாசன் படைப்புகள். இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது இந்த உறவுகள் ஆவணத்தில் மட்டுமே எஞ்சியிருக்கும் என்றாலும் கூட…

பெரும்பாலும் நெல்லைதான் களம் எனினும் வண்ணதாசனின் பார்வையில், சென்னையை காண்பது என்பது இன்னொரு ஓர் அனுபவம். “நடுகை” தொகுப்பிற்கு ஆசிரியரின் முன்னுரை அவர் சென்னையில் வசித்த காலத்தில் எழுதப்பட்டது. சென்னை மின்சார ரயில் பயணங்கள் -ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தவாறே தற்செயலாக இடது புறம் திரும்பிப் பார்த்தால் யாரோ படுத்துக்கிடப்பது போலத்தான் தெரிகிறது.சரியாகப் பார்த்தால் பிணம், ரயிலில் அடிப்பட்டவரை மூடி மேலேயே ஒரு மஞ்சள் பையயும் வைத்து…பிணங்களோடு பயணம் செய்வது போலேயே பூக்களுடனும் பூக்கட்டுபவர்களோடும் பயணம்…வாய் பேச முடியாத பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளோடு பூக்கார சிநேகிதனோடு சைகைகளில் “பேசிக்” கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும்…

எல்லா ஊரையும் போலவே இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இசைக்கும் பாடல்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ரயில் அடையாறு சாக்கடை பாலத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டு புகையின் நிணம் பரவும். நிண வாடையில் வண்ணதாசனும் நீங்களும் நானும் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும் தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் நினைவில் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில் நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயதுச் சிறுவர்கள் தூக்ககலக்கத்துடன் மையவாடியுல் தாய் மாமா மடியில் உட்கார்ந்திருக்கும் காட்சிகள் என சென்னையில் ஆரம்பித்தாலும் திரும்ப அதிரும் நினைவுகளுக்கு போய்விடுகிறது. வண்ணதாசன் சொல்வது போல் இத்தனை மின்சார வண்டி தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ அவரது தாமிரபரணி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

சென்னை வாழ்க்கையில், ராஜு நாயக்கன் தெருவில், இரண்டாம் தளத்திலிருந்து எதிரில் இருக்கும் மாமரங்களோடு அவரது காலைகள் துவங்குகின்றன. முக்கியமாக, வீட்டுச் சொந்தக்காரரின் எண்பத்தி நான்கு வயது தாயாரான அந்த மனுஷி, ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த மாமரம் வரை போய் தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக உதிர்ந்து கிடக்கின்ற மாம்பிஞ்சுகளை பொறுக்குகின்ற தருணங்கள் முக்கியமானவை என்று அவர் சொல்லவே வேண்டியதில்லை. உணர்கிறோம்.

உடல் முழுவதும் ரத்தமும், தூசிகளும் பூசப்பட்ட, குண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிட இடிபாடுகளிலிருந்து எடுத்து வரப்படும் சிரிய அலப்போ நகர குழந்தைகளை காண நேரும் இன்றைய தினங்கள், சக மனிதர்களை, சக உயிர்களை, மதமோ, எல்லையோ, மொழியோ ஏதோ ஒரு சில அற்ப காரணங்களுக்காக அழிக்க சலிக்காமல் முயன்றுகொண்டிருக்கும் இந்த தினங்கள் மானிடத்தின் மேல் கடுமையாக அவ நம்பிக்கை கொள்ளும் தினங்கள்.

மானிடம் என்றுமே, வாழ்க்கை வரைப்படத்தில் ஒரே சீரான, நேர் கோடாக இருப்பதில்லை. வண்ணதாசன் படைப்புகள் அவற்றை மொத்தமாக, கீழ்ப்புள்ளிகளுடனும் மேல், உச்சப் புள்ளிகளுடனும், கீழ்மை மின்னும் தருணங்களோடும், மகத்தான தருணங்களோடுமேதான் வாசகர் முன் வைக்கின்றன. வைக்கப்படும் விதத்தில் மானிடத்தின் மேல் நிச்சயம் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதையே வண்ணதாசன் படைப்புகளில் நான் கண்டு கொள்ளும் தரிசனம். இந்த நம்பிக்கை வேறு எப்போதுமில்லாது இன்றைய தினங்களில் ஒரு அத்தியாவசிய தேவை.

தேவாங்கு வளர்க்கும் நரிக்குறவ இளைஞன்; காலையில் பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை இழந்தாலும் ராத்திரி வந்து வளர்த்த செடியைப் பாதுகாக்கிற பையன்; மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்கத் தோன்றும் ஒருவர்;பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் சிறுநீர் கழிக்க மனமில்லாத பள்ளிச்சிறுவன்; அத்தனை நெரிசல் நேரத்திலும், சுற்றி அத்தனை கூட்டமிருப்பினும்  பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ என்று சொல்லும் கண்டக்டர் என நம்மைச்சுற்றி தினமும் நம்பிக்கைகள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பதை காட்டுவது என்பது எத்தனை முக்கியமான ஒன்று.

மானுட உச்சங்களைக் காட்டுவதற்கு, அவற்றின் மேல் நம்பிக்கை வைப்பதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, ஏரி நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே சாத்தியமாக்கும். சாத்தியமாக்கியிருக்கின்றன வண்ணதாசனின் படைப்புகள்.நெல்லையோ, சென்னையோ, சிரியாவோ, இங்கிலாந்தோ வேறு வேறு அல்ல, எல்லாமே ஒன்றுதான்.

 

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

ப் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 

 

 

முந்தைய கட்டுரைவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63