நின்றிருந்துகிடந்த நெடியோன்

நவம்பர் பத்தொன்பதாம் தேதி திலகா விடுதியில் எழுந்தோம். சிதம்பரம் முந்தையநாளே கிளம்பிச்சென்றிருந்தார். கூடவே தேவதேவன். அவரது பாமரேனியன் நாய் அவரை நான்காம் முறையாகக் கடித்துவிட்டது. கடைசிநாள் ஊசி மிச்சமிருந்தது. நானும் வசந்தகுமாரும் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து உடைமாறி அறையைக் காலிசெய்துவிட்டு செந்தூர் பேருந்துநிலையம் வந்தோம்.ஒரு டாக்ஸி பிடித்து தென்நெல்லை கோயில்களைப் பார்த்துவிட்டு நெல்லைச் செல்லலாம் என்றால் டாக்சிகள் ஆயிரத்தி இருநூறு ரூபாய் கேட்டார்கள். கட்டுப்படியாகாது என்று பேருந்திலேயே கிளம்பினோம்.

முதலில் ஆழ்வார்திருநகரி. ஏழரை மணிக்குத்தான் கோயில் திறந்தார்கள். பெட்டிகளை ஒரு டீக்கடையில் வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றோம். ஆழ்வார்திருநகரி திருக்குருகூர் என்றும் புகழ்பெற்ற ஊர். நம்மாழ்வார் இருந்த ஊர் இது. நாகர்கோயில் அருகே திருவெண்பரிசாரம் என்ற திருப்பதிச்சாரத்தில் காரிமாறனுக்கு புதல்வனாகப் பிறந்த சடகோபன் ஊமையாகவும் மந்தராகவும் இருந்தமையால் இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். இங்கே ஒரு புளியபரத்தடியில் அவர் இருந்தார்

மதுகவியாழ்வார் என்ற பக்தர் புளியமரத்தடியில் இருந்த சிறுவனை ஞானி என உணர்ந்து ‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேட்டார். அதற்கு ‘அத்தை தின்று அங்கே கிடக்கும்’ என்று சிறுவன் பதில் சொன்னார்.’பிரபஞ்சத்தின் பருப்பொருள்வெளியில் இருந்து உயிர்தொகை அல்லது ஆத்மா உருவானதென்றால் அதன் உருவாக்கத்தின் நோக்கம், அதன் இலக்கு என்ன?’ என்பது வினா. ‘அது தனக்குள் தன்னைக் கண்டு முழுமையடைவதே’ என்பது பதில். அவரை குருவென்று மதுரகவியாழ்வார் ஏற்றுக்கொண்டார். ‘தேவு மற்றொன்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே’ என்று அவர் புகழை மட்டுமே பாடி பரப்பினார்.

சடகோபன் பெரியதிருமொழி எனப்படும் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடி ‘வேதம் தமிழ்செய்த’ நம்மாழ்வாராக ஆனார். தமிழ் மரபின் மிகச்சிறந்த ஐந்து கவிஞர்களில் ஒருவர் என நான் நம்மாழ்வாரை மதிப்பிடுகிறேன். தென்கலை வைணவர்களுக்கு பெருமாளுக்குப் பின்னர் அவரே தெய்வம். முக்தியடைந்த நம்மாழ்வார் பெருமாளின் பாதமாக ஆனார். பெருமாள்கோயில்களில் இரு பாதங்கள் பொறிக்கப்பட்ட மணிமுடியை பக்தர் தலைமேல் வைப்பதுண்டு. அதற்கு சடாரி என்று நம்மாழ்வார் பெயரே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இரு கவிஞர்களுக்கே கோயில் உள்ளது. மூலத்தெய்வமாக அமர்ந்து பூசையும் விழாவும் பெறுகிறார்கள். நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில். ஆண்டாள் திருவில்லிபுத்தூரில். ஆழ்வார்திருநகரி பெரிய கோயில். பெருமாளுக்கு ஆதிநாதர் என்று பெயர். நான் முதலில் அங்கே சென்றிருந்தபோது சிற்பங்கள் மேல் வெள்ளையடித்திருந்தார்கள். இப்போது டிவிஎஸ் நிறுவனம் சிலைகளை சுத்தம்செய்து கோயிலை செப்பனிட்டிருக்கிறது. மிகமிகக்குறைவான அரசு ஊதியம் பெறும் பூசரிகளுக்கு அந்நிறுவனம் உபரி ஊதியம் அளிக்கிறது

கோயிலின் மண்டபங்கள் அமைதியில் அரையிருளில் விடியல்குளிரில் மூழ்கி கிடந்தன. கோயில்சிலைகள் நிலைத்த புன்னகையுடன் நூற்றாண்டுகளை தாண்டிச்சென்றுகொண்டே இருந்தன. நம்மாழ்வார் இருந்த புளியமரம் இன்று ஐந்து கிளைகளாக உள்ளது. ஐந்துமே முரடுபிடித்த மூத்த மரங்கள். குறுகிய கிளைகள். இது உறங்காப்புளி மரம் எனப்படுகிறது.

அங்கே நின்ற மணிவண்ணன் என்ற பூசாரி நம்மாழ்வாரின் கதையையும் கோயில்வரலாற்றையும் சொன்னார். கோயில் மேலேறி கோபுரச்சுதைச்சிற்பங்களை பார்த்தோம். மிகத்திருத்தமான சிலைகள். நம்மாழ்வாரின் கோயில் மையக்கோயிலின் வலப்பக்கமாக தனியாக உள்ளது. செம்பாலான உற்சகவர் திருமேனி. மூலவிக்ரகம் கல். அமர்ந்து அருள்புரியும் குருவின் வடிவில் நம்மாழ்வார் தெரிந்தார்.

மணிவண்ணன் நாங்கள் கொஞ்சம் அப்பால் இருந்த ராமானுஜர் சன்னிதிக்குச் செல்லவேண்டும் என்று சொன்னார். ஆகவே திரும்பி வந்து சிற்றுண்டிக்குபின்னர் நடந்து சாலையின் மறுநுனியில் இருந்த ராமானுஜர்கோயிலுக்குச் சென்றோம். அங்கே மூலவராக இருப்பவர் விசிஷ்டாத்வைத நிறுவனராகிய ராமானுஜர். அர்ச்சகர் அன்றி எங்கே எவருமே இல்லை. வெளிக்கதவையே மூடித்தான் வைத்திருந்தார்கள். கேட்டால்தான் திறந்தார்கள். பழைய கோயில். சிற்பங்கள் அதிகமாக இல்லை. ஆனால் இரு சுவர்களிலும் உள்ள சிறிய ராமர் பட்டாபிஷேகச்சிலைகள் மிக அழகானவை

தூத்துக்குடிக்குச் சென்ற தேவதேவன் ஊசிபோட்டுவிட்டு நேராக கிளம்பி திரும்பி வந்து சேர்ந்தார். ராமானுஜர்கோயிலில் இருந்து திரும்பும் போதுசிறிய பையுடன் எதிரே வந்துகொண்டிருந்தார். ‘ரொம்பநாளைக்கு தூத்துக்குடிக்கு இந்தப்பக்கம் இவ்ளவு அழகுன்னு எனக்கு தெரியாது’ என்றார். ஆழ்வார் திருநகரிக்கு வரும்படி சொன்ன வசந்தகுமார் வாய் சும்மா இல்லாமல் குருகூர் என்றும் சொல்லிவிட தேவதேவன் குரும்பூரில் இறங்கி செல்பேசியில் அதட்டப்பட்டு திரும்பி பேருந்து ஏறி வந்து சேர்ந்திருந்தார்.

ராமானுஜர் கோயிலுக்கு நேர் எதிரே ஒரு படித்துறை. பன்றி விட்டைகளை பொருட்படுத்தாமல் தாமிரவருணியில் இறங்கினோம். நதி மிக அகலாமாக ஓடியது. ஆனால் நீரோட்டம் அனேகமாக இல்லை. பாண்ட் நனையாமல் மறுபக்கம் செல்லலாம். மறுபக்கம் ஏமாந்தலிங்கேஸ்வரர் என்ற கோயில் பெரிய படித்துறையுடன் அழகாக தெரிந்தது. அதைச்சுற்றி இருந்த புராதனமான செஙக்ல்சுவர் இடிந்து ஆற்றுக்குள் பல நூற்றாண்டுகளுக்குள் விழுந்து சென்கலபாறைகளாக ஆகியிருந்தது

ஏகாந்தலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பயணிகள் எவரும் வருவதில்லை. பெரிய கோயில். ஆனால் ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்து திறந்து பூசைசெய்து மூடிவிட்டுச் செல்கிறார். கோயில் மூடியிருந்தது. அப்பகுதியில் மனித நடமாட்டமே இல்லை. கருவூரார் என்ற சித்தரின் சமாதி அங்கேதான். ஒரு சிறு கோயில் இருந்தது. கோயிலைச்சுற்றி அக்காலத்தில் நதி ஓடிய பள்ளம் இப்போது புளியஞ்சோலையாக இருந்தது.

திருவாவடுதுறை ஆதீனம் ஒருவர் அங்கே சமாதியாகி அவரது சமாதிகோயில் இருந்தது. மூடிய கோயில் முன் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தேவதேவன் அங்கே அவர் முன்பொருமுறை வந்ததைப்பற்றிச் சொன்னார். ஆயன் என்ற பேரில் எழுதிய ஓவிய நண்பர் ரோபஸ்டா வாழைகளை பிரபலபப்டுத்தும்பொருட்டு அரசு வைக்கும் விளம்பரங்களை வரைந்து கொடுக்கும்பொருட்டு அப்பகுதிகளில் பயணம் செய்தபோது கூட வந்திருக்கிறார். ஆயன் எழுதிய கடிதங்கள் சமீபத்தில் ஆயன்கடிதங்கள் என்றபேரில் நூலாக வந்துள்ளன.

 

’அன்று தாமிரவருணியில் நீர் பெருகி ஓடும். இந்தமாதிரி குப்பைச்செடிகள் இல்லை. நீரிலேயே இரவெல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். நட்சத்திரங்கள் நிறைந்த வானத்துக்கு கீழே கவிதையைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்போம்’ என்றார் தேவதேவன். ஆயன் இறந்து சில வருடங்களாகின்றன. நதியோர வீடுகளில் எல்லாம் கொல்லைப்பக்கம் ஆற்றில் நீரில் இறங்குவதுபோல படிகள் இருந்தன. இன்று அவை இடிந்துபோய் கிடந்தன.

மதியம் சீவைகுண்டம் சென்றோம். அங்கே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஒரு டீக்கடையில் நின்று பேசினோம். கோயிலை மாலை ஐந்தரைக்குத்தான் திறப்பார்கள் என்றார். அதுவரைக்கும் வேறு சில கோயில்களைப் பார்க்கலாம் என்று ஒரு ஆட்டோ ரிக்‌ஷா பிடித்து கிளம்பினோம். ரெட்டை திருப்பதி, திருப்புளிங்குடி போன்ற கோயில்களும் நவதிருப்பதிகளைச் சேர்ந்தவையே. அவை சிறிய கிராமங்களில் அமைந்துள்ளன. இந்த நவதிருப்பதி உலா என்ற கருத்து உருவான பிறகுதான் வெளியூரார் வருகிறார்கள்

தாமிரவருணி கால்வாய் நீர் நிறைந்து நாணர் வரம்பிட்டு சுழித்தோடியது. கால்வாய் வரப்பில் சாலையில் மறுபக்கம் வாழத்தோப்புகளைப் பார்த்துக்கோண்டே சென்றோம். டிசம்பர் மாதம் இப்பகுதிகளில் சுற்றுலா செல்ல மிக உகந்த காலம். குளுமையான காற்று. மங்கலான வானத்தின் கீழே பசுமை இன்னும் ஆழம் கொண்டிருப்பதாகப் பட்டது.

திருப்புளிங்குடி பெருமாள் பெரிய சிலை. படுத்த திருக்கோலம். திருவட்டார் ஆதிகேசவனை நினைவூட்டியது. திருவட்டார், திருவனந்தபுரம் பெருமாள்களை விட்டால் பெரிய பெருமாள் இதுதான் என்றார் அர்ச்சகர். கன்னங்கரிய பெருமுகம். ஒளிரும் கன்ன வளைவு. கூர்மூக்கு. தன்னுள் ஆழ்ந்த மென்சிரிப்பு. என் நெஞ்சில் நினைவுகளை அலைகொள்ளச் செய்தது அந்தக் காட்சி.

ஐந்தரை மணிக்கு மீண்டும் சீவைகுண்டம் வந்தோம். சீவைகுண்டத்தில் நுழையும்போது வலப்பக்கம் இருக்கும் வசந்தமண்டபம் தமிழகத்தின் முக்கியமான கலைக்கூடங்களில் ஒன்று. அங்குள்ள பன்னிரண்டடி உயரமான யாளிசிலைகள் தமிழகத்தின் மிகச்சிறந்த யாளிகள் என்றார் வசந்தகுமார். நுழையும் இடத்தில் உள்ள ராமர், லட்சுமணன் சிலைகளும் வீரபத்ரர் சிலைகளும் மிகமிக நுட்மான கலைப்படைப்புகள். நெடுநேரம் நின்று நின்று தாகம் தீராமல் பார்த்துக்கொண்டே இருந்தோம்

சீவைகுண்டம் பெரிய கோயில். உட்பிரகாரப் பின்பக்கச் சுவரில் உள்ள நாயக்கர்கால வண்ண சுவரோவியங்கள் முக்கியமானவை. பள்ளிகொண்ட பெருமாள், கிருஷ்ணலீலை ஓவியங்களின் வண்ணக்கலவையும் வெண்ணிறத்தைக்கொண்டு ஒளியை உருவாக்கியிருக்கும் விதமும் மிகச்சிறப்பானவை. ஓவியங்கள் பாதிப்பங்கு அழிந்துவிட்டன. நவீன வழிமுறைகளின்படி அவற்றை மீட்க முடியும். ஆனால் ஒன்று மேலே வெள்ளைபூசுவார்கள் அல்லது உள்ளூர் ஆசாமிகளைக்கொண்டு மேலே வரைவார்கள், இதுவே தமிழில் நிகழ்ந்து வருகிறது.

thevadevan

ஏழரை மணிக்கு தேவதேவன் சீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி கிளம்பினார். நானும் வசந்தகுமாரும் ஈரோடு போக நெல்லைக்குச் சென்றோம். நெல்லையில் இருந்து பேருந்தில் மதுரை. மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு. பயணத்தில் நான் நன்றாகவே தூங்கிவிட்டேன். சந்தடி மிக்க பேருந்து. பாட்டு போட்டுக்கொண்டே இருந்தார்கள். இளையராஜாவின் பொற்காலப் பாடல்கள். ’தெய்வீகராகம், தெவிட்டாத பாடல்’ ‘ஏய் பாடல் ஒன்று..’ ‘கிண்ணத்தில் தேன்வடித்து’ ‘நானே நானா யாரோ தானா? ‘குறிஞ்சிமலரில் வழிந்த ரசத்தை’…

எல்லாம் இளவயதுப்பாடல்கள். அரைத்தூக்க மயக்கத்தில் அவை மனதை நெகிழ்ச்செய்து உருகி ஓட வைத்தன. நினைவுகள். முகங்கள். இழந்துபோன இடங்கள். விட்டுவந்த காலங்கள். ஒருபோதும் திரும்ப முடியாமையால் கனவாகிப்போன இறந்தகாலங்கள்…அந்த இரவின் மன எழுச்சியின் உச்சம் சமீபகாலத்தைய பேரனுபவங்களில் ஒன்று. இருப்பு என்பதே ஒரு தித்திப்பான துயரமாக ஆகிவிடும் தருணம்…

ஈரோட்டில் காலையில் வந்து இறங்கினோம். விஜயராகவனும் கிருஷ்ணனும் பேருந்துநிலையம் வந்திருந்தார்கள். பூர்ணா விடுதியில் தங்கினோம். அரங்கசாமியும் சந்திரகுமாரும் ராமச்சந்திர ஷர்மாவும் தங்கமணியும் வந்தார்கள். காலை பத்து மணிக்கு கார்த்தி கல்யாணத்துக்குச் சென்றோம். அங்கிருந்து விஜயராகவனின் குவாலிஸ் காரில் அந்தியூர் மலைக்குச் சென்றோம்.

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதி புதிய மழையால் பச்சைபூண்டு காடு செறிந்து கிடந்தது. காடுகளாலான மலையடுக்குள். பர்கூரில் ஓர் தாமரை ஏரியின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சர்மாவை பாட வைத்துக் கேட்டோம். திரும்பும்போது அணைக்கட்டின் கரையில் யானைகள் நீர் அருந்த வரும் என்றார்கள். இருட்டும்வரை காத்திருந்தபோதிலும் யானைகள் தென்படவில்லை. மழையில் காட்டுக்குள் நிறைய குட்டைகளில் நீர் இருக்ம்போலும்

திரும்பிவந்து பத்து மணிக்கு நாகர்கோயில் பேருந்தில் ஏறினேன். ஏறியதுமே மீண்டும் தூக்கம். நின்றும் இருந்தும் கிடந்தும் அருளும் மாபெரும் கரிய திருமேனிகள் என் கனவுக்குள் எழுந்து வந்தபடியே இருந்தன. கருமையில் பேரழகைக் கண்ட என் முன்னோர்களின் அகம் தெளிவாவது போலிருந்தது.

நம்மாழ்வார்

புகைப்பட தொகுப்பு

விசிஷ்டாத்வைதம்

சிற்பப் படுகொலைகள்…
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்

முந்தைய கட்டுரைதிருச்சீரலைவாய்
அடுத்த கட்டுரைநாட்டாரியல் ஒரு கடிதம்