மனிதமுகங்கள் -வளவ. துரையன்

 

[1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்திருக்கும்.. அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அதில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். வண்ண நிலவனின் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் இருக்கும் மௌனம் இவரின் தொடக்ககாலக் கதைகளிலேயே காணப்படுவதுதான் வியப்பான செய்தியாகும்.

இந்தத் தொகுப்பின் பெயரைத் தாங்கியுள்ள மனுஷா..மனுஷாகதையில் கதைசொல்லி மட்டும்தான் வெளிப்படையாகப் பேசுகிறான். அவன் மனைவி கூட அதிகமாகப் பேசி வார்த்தைகளைக் கொட்ட வேண்டிய வேளையில் மனுஷா, மனுஷாஎன்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள். கதைசொல்லியை விசாரிக்கக் கூப்பிட்ட அவன் தந்தையும் சின்னப் பிள்ளையா நீ? ஈஸ்வரா!என்பதுடன் தன் பேச்சை முடித்துக் கொள்கிறார். அதிகம் பேசி இருக்க வேண்டிய பிரமு அண்ணாச்சியோ அதைத் தவிர்த்து வேறெல்லாம் பேசுகிறார்.

ஒரு எதிர்பாராத நேரத்தில் எந்தவித எண்ணமுமின்றி முப்பத்து நான்கு வயதான கதைசொல்லி அவன் வீட்டுக்குப் பின்னால் குடி இருந்த பிரமு அண்ணாச்சியின் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுள்ள மகளுக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். அதை அவன் மனைவியும் பார்த்து விடுகிறாள். அண்ணாச்சி உடனே வேறு வீடு மாற்றிப் போய்விடுகிறார். ஆனாலும் அவனுக்கும் அண்ணாச்சிக்கும் இடையில் இருந்த சிநேகம் குறையவில்லை. ஒரு நாள் இரவு அதிகமாகக் குடித்த அவனை அண்ணாச்சி தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் படுக்க வைத்துக் கொள்கிறார். காலையில் கண் விழித்ததும் அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.

இந்தப் பிரமு அண்ணாச்சி என்னைப் புரிந்து கொண்டது போல, என் மனைவி இந்தப் பெண் என்னையும் புரிந்து கொள்ளல் ஆகாதா?” என்று கதைசொல்லி மனத்துள் நினக்கிறான். அப்போது மனைவி பற்றிய நினைவு வந்தவுடன் அவள் சொன்ன மனுஷா மனுஷா என்பது அவன் நினைவுக்கு வருகிறது. அதுவே என் பெயராக அழைக்கிறது போலக் கேட்டது இப்போதுஎன்று அவன் நினைப்பதாகக் கதை முடிகிறது

எல்லாரும் சாதாரண மனிதர்களே என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. அறிவு ஜீவிகளையும் அப்படி நினைத்ததால்தான் அவர்கள் வாழ்வில் மனக் கசப்போடு வாழ நேர்ந்திருக்கிறது. ஆனால் அவன் மனத்தில் எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லை என அவனைத்தவிர வேறு யாரறிவார் என்ற எண்ணமும் நமக்குத் தோன்றுகிறது. பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாகத் தானே இந்த உலகம் சொல்லும்.

இந்தத் தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான கதை சிறிது வெளிச்சம்”. இக்கதையில் கதைசொல்லியின் தாத்தா இறந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது சின்னம்மை யாருமே அழாத அளவிற்கு மிக அதிகமாக அடித்துக் கொண்டு அழுகிறாள். அதுதான் கதையின் முடிச்சு. உரக்க என்னைப் பெத்த ராசாஎன்று அவள் அடித்துக் கொண்டு அழுதாலும் அவளின் அழுகைக்குப் பின்னல் ஒரு மௌனம் புதைந்துள்ளது என்பதுதான் இறந்தவரின் மனைவியால் கூறப்படுகிறது.

திருமணம் ஆவதற்கு முன்னமே பிறந்த குழந்தையைப் புதைத்த சின்னம்மை தானும் தற்கொலை புரிந்து கொள்ளப் போக தாத்தாதான் அவளைத் தடுத்து எல்லாவற்றையும் மறைத்து வேற்றூருக்குக் கொண்டு போய் வைத்திருந்து நல்ல மாப்பிள்ளைக்கும் மணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் கதை சொல்லியை அந்தச் சின்னம்மைக்கு கதை எழுதுபவராகத் தெரியும். கதையின் இறுதியில் கதை சொல்லி சின்னம்மையையும் அவளுக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பார்க்க மருத்துவமனைக்கு எதிர்பாராதவிதமாகப் போக நேரிடுகிறது. அப்போது சின்னம்மை கேட்கிறாள். கதை எழுத மாமா வந்திருக்கா? என் கதையை எழுதச் சொல்லவா? உன் கதையை எழுதச் சொல்லவா?”

ஆனால் இவனோ எதை எழுத வேண்டும் என்கிறது போல எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா?” என்று நினைத்துக் கொள்கிறான்.

கதையின் தொடக்கத்திலேயே வெண்ணெயைப் பூனையைத் திருடுவது சின்னம்மை வைத்துக் கொண்டு கூறப்படுவது ஒரு குறியீடுதான். இத்தனை நாள்கள் மௌனமாக இருந்த விஷயம் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு கதைசொல்லிக்கு மட்டுமே வெளிச்சமாகத் தெரிந்தாலும் எப்படியோ சின்னம்மையின் வாழ்வில் சிறிது வெளிச்சம் வந்துள்ளது என்றுதான் நாம் ஊகிக்க வேண்டி உள்ளது.

p.txt

வளவதுரையன்

வளவதுரையன் திராவிட இயக்க ஈடுபாட்டால் அண்ணாத்துரையின் துரையையும் தன் சொந்த ஊரான வளவனூரின் முன்னொட்டையும் சேர்த்து தனக்குப் பெயர்சூட்டிக்கொண்டவர். பாண்டிச்சேரி மாநிலத்தில் வளவனூரைச் சேர்ந்தவர். கடலூரில் வசிக்கிறார். ஓய்வுபெற்றத் தமிழாசிரியர். இன்று திருப்பாவை,, மகாபாரதச் சொற்பொழிவுகளுக்காகப்  புகழ்பெற்றவர். சங்கு என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். ஆச்சாரிய வைபவம் என்னும் வைணவ நூலை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் வளவ துரையன் சிறுகதைகள் என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன

முந்தைய கட்டுரைவருகையாளர்கள் -2 இரா முருகன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62