பூனையும் புலியும்

 

thirumal
நேருக்கு நேர் 
கே.வி.திருமலேஷ்
 

1

கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது

என்னைப் பார்த்ததும் நின்றது.

அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும்

அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில்

எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில்.

பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம்,

இருவருக்கும் பின்வாங்க மனமில்லை.

சொல்லப்படாத யுத்தம் போல ஒன்று.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் அவ்வளவு சலனமற்றவை.

 

2

அதன் வால் காற்றில் விடைத்திருக்க

முடிகள் குத்திட்டு நிற்க

உகிர்களை தரையில் அழுந்தி

தெறி்த்துவிடும் வில் போல நின்றது.

என் பார்வையை அது முழுதும் மறைக்க

நான் எங்கோ பழங்காடுகளில் தொலைந்து கொண்டிருந்தேன்

பெயரறியா கடல்களில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.

நான் கண் இமைக்கவில்லை

அதுவும் கண் இமைக்கவில்லை .

அந்தப் பூனை என் முன்

தனக்குத் தானே சவால் விடுவது போல நின்றது

மனிதனும் மிருகமும் மட்டுமே இருக்கும் ஓர் தனிநிலை.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் அவ்வளவு அநாதையானவை.

 

3

இறுதியில் மிருகம்தான் தோற்றது

அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டேன்.

பூனை தன் உடலை தளர்த்திக்கொண்டு பின்வாங்கியது

ஒரு பூனைநடையிலேயே நடந்து விலகியது.

அது என் எல்லையை விட்டு அகன்றபின் நான் நினைத்துக்கொண்டேன்

அதற்கு அதன் சுயமரியாதையை அளித்திருக்கலாம்.

போயும் போயும் எனக்கு என்ன கிடைத்துவிட்டது ?

வென்றே ஆக வேண்டும் என்றால் பாகுபலி போல

விட்டுக்கொடுத்து வெல்ல வேண்டும்.

எனக்குத் தெரிந்திருக்கவில்லை

பூனையின் கண்கள் தங்கள் தவறுக்காக அவ்வளவு வருந்துபவை.

 

[ஆங்கிலம் வழித் தமிழாக்கம் மதுசூதனன் சம்பத்]

 

Sukumaran 1

புலி ஆட்டம்

சுகுமாரன்

ன் செல்லப் பிராணி

பரம சாது என்றால்

நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்

 

சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்

அப்போதுதான்

திரித்து முறுக்கிய நார்வட வால்

கணக்காகப் பார்த்து

தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்

பாலை வெய்யிலின் உக்கிர சருமம்

நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிறுகள்

நிலம் கிழிக்கும் கொன்றை உகிர்ப் பாதங்கள்

 

எல்லாம் இருப்பதால்

அஞ்சி மிரண்டு நடக்கிறீர்கள்

 

என் செல்லப் பிராணி

சாகபட்சணி என்றால்

ஒப்புக்கொள்ள ஏனோ  தயங்குகிறீர்கள்

 

பசித்தால்

பசும் புல்லைத்தான் மேய்கிறது

தாகித்தால்

துளசி தீர்த்தமே அருந்துகிறது

 

பாருங்களேன்

புஜிபுஜி என்று அழைத்தால்

ஒரு பூனையைவிட

எவ்வளவு ஒய்யாரமாக

ஓடிவந்து காலடியில் ஒண்டிக்கொள்கிறது

 

உண்கலத்தில் பரிமாறிய வாதுமைக் கொட்டைகளை

ஒரு அணிலைவிட

எவ்வளவு பக்குவமாகப் பிளந்து கொறிக்கிறது

 

உண்ட களைப்பில்

ஒரு தியானியைவிட

எவ்வளவு சாந்தமாக சுகாசனத்தில் அமர்கிறது

 

பாருங்களேன்

அன்பு மீதூற அனிச்சையாக

சூச்சூ என்று ஒலி எழுப்பியதும்

முதல் மழைத்துளியில் சிலிர்க்கும் அரசந்தளிர்போல

எவ்வளவு பரவசத்துடன் முதுகைச் சிலிர்க்கிறது.

 

பரமசாது என் செல்லம் என்பதை

எவ்வளவு சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.

 

என் அருமைப் பிராணி

வன் விலங்கு என்று

உங்களைப் போலவே எனக்கும் தெரியும்

எனக்குத் தெரியும் என்பது

என் செல்லத்துக்குத் தெரியாது.
நன்றி சுகுமாரன் இணையப்பக்கம்

இரு கவிதைகள். புலி பூனையென்றும் பூனை புலியென்றும் ஆகும் கணங்கள். நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகற்பனைகளில் ஒன்று விலங்கு என நம் முன் வந்து நின்றிருக்கும் ஒன்றை நோக்கிய திகைப்பு. பண்பாடென்றும் மொழியென்றும் நாமறிந்த அனைத்துக்கும் அப்பால் அது நின்றிருக்கிறது. படிமமாக்கியும் மொழியாக்கியும் அதைப் பொருள் கொள்ளச்செய்யும் முயற்சியே இக்கவிதைகள். சொல்லி முடிந்தபின் மெல்ல மென்மையான கால்களுக்குள் நகங்களை இழுத்துக் கொண்டு ஓசையில்லாமல் அவை கவிதையிலிருந்தும் அகன்று சென்றுவிடுகின்றன

சுகுமாரனுக்கு இயல் விருது\

கண்ணீருப்பின் கவிஞன்

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
அடுத்த கட்டுரைஜில் ஜில் என ஆடிக்கொண்டு…