ஜில் ஜில் என ஆடிக்கொண்டு…

https://www.youtube.com/watch?v=OtpvfjTHSRs

 

வண்ணதாசனை ஆவணப்படம் எடுக்க நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது

சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமாநடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும்.

இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள்.

இந்தப்பாடலில் சாரங்கபாணி இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினைக்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது

ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல்! ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். சாரங்கபாணி பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது சாரங்கபாணியின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன.

அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் சாரங்கபாணியே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது. ஆச்சரியமும் வருத்தமும் என்னவென்றால் இவர்களைப்பற்றி ஒரு நல்ல விக்கிபீடியா பதிவுகூட இணையத்தில் இல்லை என்பதுதான்.

பாடல் வரிகள்

 

முந்தைய கட்டுரைபூனையும் புலியும்
அடுத்த கட்டுரைகேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்