இன்று, 10-12-2016 அன்று நானும் நண்பர்களும் ஆந்திரமாநிலத்திற்கு ஒரு ஐந்துநாட்கள் சுற்றுப்பயணம் கிளம்புகிறோம். அங்குள்ள என் வாசகியான நாகர்கோயிலைச்சேர்ந்த விசாலாட்சியின் அழைப்பு. விசாலாட்சி அங்கே அரசு உயரதிகாரி. சுந்தர ராமசாமிக்கு அணுக்கமான இளம் மாணவியாக நாகர்கோயிலில் பலமுறை சந்தித்திருக்கிறேன்
நான் நேற்றே நாகர்கோயிலில் இருந்து நெல்லை நண்பர் சக்தி கிருஷ்ணனின் [சக்தி கலைக்களம் உரிமையாளர்] காரில் கிளம்பி மாலையில் கோவை வந்துவிட்டேன். செல்வேந்திரனின் இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு காலையில் நான் சக்திகிருஷ்ணன் மீனாம்பிகை செல்வா ஆகியோர் கிளம்புகிறோம்
ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் தலைமையில் ராஜமாணிக்கம், சந்திரசேகர் ஈஸ்வரமூர்த்தி என ஒரு குழு. சென்னையிலிருந்து சென்னை செந்தில், குருஜி சௌந்தர்,தலைமையில் ஒரு குழு. உடன் வெண்பா கீதாயன், அனந்தமுருகன், ஜானகிராமன் ஆகியோர் இணைந்து கொள்கிறார். இன்னொரு குழு ஸ்ரீனிவாசனும் சுதாவும் அடங்கியது. மொத்தம் 15 பேர். நான்கு கார்கள்
ஆந்திரத்தில் உள்ள கடப்பாவில் 10 அன்று மதியம் ஒன்றுகூடுகிறோம். அங்கிருந்து கண்டிகோடா, யாகண்டி, ஒரவக்கல்லு, அலம்பூர் கோயில்கள் , ரோலப்பாடு சரணாலயம். கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு இரவு நிலவில் தங்குகிறோம். பதினைந்தாம் தேதி திரும்புவது திட்டம்.