வண்ணதாசனுடன் இரண்டுநாட்கள்

 

1

 

வண்ணதாசனைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கவேண்டும். அஜிதன் மணிரத்னத்தின் படத்தில் இரவு பகலில்லாமல் தீவிரமாக இருக்கிறான். வேறு சிலரை அணுகினோம். அரைலட்சத்துக்குக் குறையாமல் பட்ஜெட் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் நாங்களே எடுத்துவிடலாமென முடிவுசெய்தோம். செல்வேந்திரன் இயக்குநர், சக்தி கிருஷ்ணன் உள்ளூர் ஒருங்கிணைப்பு.

சென்ற டிசம்பர் 5,6 தேதிகளில் நெல்லைக்குச் சென்றோம். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருந்தேன். நெல்லைக்குச் செல்லும் முன்னரே ஜெயலலிதா உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி வந்தது. கிளம்பவேண்டுமா வேண்டாமா என்று செல்வேந்திரனே குழம்பிக் கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் கிளம்பிவிட்டோம். வண்ணதாசன் அளித்த தேதிகள் இவை. அவருக்கு பல குடும்ப நிகழ்வுகள் இருந்தமையால் தாமதம்

1
ஈஸ்வரன் ,வண்ணதாசன் ,சக்தி கிருஷ்ணன்

 

நான் நெல்லைக்குச் செல்லும்போது நாகர்கோயில் பேருந்துநிலையத்தில் அத்தனை பேருந்துகளும் காலியாக இருந்தன. ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. ஒரு டீ குடிக்கமுடியவில்லை. நெல்லை பரவாயில்லை. சக்தி கிருஷ்ணன் என்னை வந்து அழைத்துச் சென்றார். ஏற்கனவே செல்வா வந்து விடுதியில் தங்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக கீர்த்தி என்னும் இளைஞர்.

இனிய பருவநிலை. குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வானம் மூடியிருந்தது. நெல்லையை அப்படி ஒரு தண்மையுடன் நான் பார்த்ததே இல்லை. அதுவே உற்சாகமான மனநிலையை அளித்தது. வண்ணதாசனை தனிமையில் அத்தனை அணுக்கமாகச் சந்தித்து நெடுநேரம் பேசியதும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்.

அன்று மாலையே ஜெயலலிதா இறப்பு குறித்த பதற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. இரவுணவுக்குச் சென்றபோது பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. ஒரு மெஸ்ஸில் அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டோம். இரவெல்லாம் பரபரப்பு. நள்ளிரவில் செய்தி வந்துவிட்டது.

2
செல்வேந்திரன் வண்ணதாசன் நான்

 

காலையில் நெல்லையில் முழு அடைப்பு. ஆனால் அமைதியாகவே இருந்தது. போஸ்டர்கள் கூட அதிகமில்லை. ஒருசில கருப்பு அஞ்சலிகள் மட்டுமே. முந்தையநாள் உணவகத்தில் வெண்முரசு வாசகர் ஒருவரைச் சந்தித்தேன். ஈஸ்வரன் என்று பெயர். நெல்லைப்பர் கோயிலருகே வசிப்பவர்

முழுநாளும் வண்ணதாசனுடன். இம்முறை அவரை குறுக்குத்துறைக்கு அழைத்துச்சென்றோம். வண்ணதாசனுடன் தாமிரவருணி என்பது ஓர் அரிய அனுபவம்தான். ஈஸ்வரனும் தாமிரவருணிக்கு வந்து எங்களுடன் கலந்துகொண்டார். மதியம் ஒரு நண்பரின் வீட்டில் சக்தி கிருஷ்ணன் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நெல்லையப்பர் கோயிலுக்கு அருகே.

1
ஒளிப்பதிவாளர் கீர்த்தியுடன் வண்ணதாசன்

 

மாலையில் செல்வாவும் ஒளிப்பதிவாளரும் திரும்பிச்சென்றனர். நான் நாகர்கோயிலுக்கு டாக்ஸியில் திரும்பிவந்தேன். திரும்பும்போது நினைத்துக் கொண்டேன் பல நுட்பமான அனுபவங்கள் நிறைந்த இரண்டு நாட்கள். வெளியே அரசியல் கொந்தளிப்பு. உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்றுநீர் போல அந்தரங்கங்களை மட்டுமே எழுதும் எழுத்தாளருடன் உரையாடல். நெடுநாள் நினைவிருக்கும் ஒரு நாள்

 

முந்தைய கட்டுரைஆந்திரப் பயணம்
அடுத்த கட்டுரைசிவசக்தி நடனம் – கடலூர் சீனு