’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58

[ 21 ]

மாதலியே தன்னை இந்திரமாளிகைக்கு அழைத்துப்போக வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னபோது அர்ஜுனன் திகைப்புடன் எழுந்துவிட்டான். “அவர் காத்து நின்றிருக்கிறாரா?” என்று கேட்டபடி அவன் அறையைவிட்டு வெளியே செல்ல உடன் வந்த கந்தர்வ சமையப்பெண்கள் “இளையவரே, இன்னும் அணிகள் முடியவில்லை” என்றனர். “போதும்” என்று அவன் சொன்னான். “இந்த மணிகள் மட்டும்” என்றாள் ஒருத்தி. “கால்நகங்களில் ஒன்றில் ஒளி குறைந்துள்ளது, சற்றுநேரம்…” என்றாள் இன்னொருத்தி. “போதும்” என அவர்களை விலக்கியபின் அவன் வெளியே நடந்தான்.

படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தபோது அங்கே உச்சிக்கதிரொளி பட்ட சுனைபோல இந்திரனின் ஒளிபரவும் தேர் வந்து நின்றிருப்பதை கண்டான். கூப்பிய கைகளுடன் அதை நோக்கி சென்றான். மாதலி தேர்த்தட்டிலிருந்து இறங்கி “வருக மைந்தா, உனக்காக அரசர் காத்திருக்கிறார்” என்றான். “தாங்களே வரவேண்டுமா, எந்தையே?” என்றான் அர்ஜுனன். “நானே வரவேண்டுமென்பது அரசரின் ஆணை. அவருக்கு இருக்கும் இடம் உனக்கும் அளிக்கப்பட்டாகவேண்டுமென்று சொன்னார்” என்றபின் மாதலி ஏறிக்கொண்டான். அர்ஜுனன் தேர்த்தட்டில் ஏறி அமராமல் நின்றுகொண்டான்.

தேர் அமராவதியின் தெருக்களினூடாகச் சென்றது. அர்ஜுனன் அதன் விரைவின் வழியாக படிப்படியாக இயல்பானான். “என்னிடம் ஏதேனும் சொல்லச் சொன்னாரா அரசர்?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் அதை சொல்லப்போவதில்லை” என்றான் மாதலி. “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “நான் உணர்வதை சொல்லவேண்டும், எனக்கு ஆணையிடப்பட்டதை அல்ல. அதற்கான தருணம் அமையட்டும்” என்றான் மாதலி சிரித்தபடி. அர்ஜுனனும் பணிவுடன் சிரித்து “சொல்லுங்கள், காத்திருக்கிறேன்” என்றான்.

தேர் இந்திரனின் அரண்மனையின் தேர்முற்றத்தில் சென்று நின்றது. கந்தர்வ ஏவலர் ஓடிவந்து புரவிகளை பற்றிக்கொண்டனர். அர்ஜுனன் இறங்கியதும் மாதலி அருகே வந்து அவன் தோளில் கைவைத்து “வருக, மைந்தா” என்றபின் முன்னால் நடந்தான். படிகளில் ஏறி பெருந்தூண்கள் நிரைவகுத்த இடைநாழியினூடாக நடக்கையில் அர்ஜுனன் அது அரசவைக்கூடத்திற்குச் செல்லும் வழிபோல இல்லை என எண்ணிக்கொண்டான். அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல “நாம் அரசரின் மஞ்சத்தறைக்கு செல்கிறோம்” என்றான் மாதலி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அவர் உன்னிடம் பேசவிழைகிறார். இருவரும் இணைந்து அவைநுழையவேண்டுமென எண்ணுகிறார்.”

அர்ஜுனன் அணிச்சொற்களுக்காக நெஞ்சைத் துழாவி அவை அமையாமல் நேரடியாக “அவர் என்னிடம் ஏதேனும் வாக்குறுதியை பெற விழைகிறாரா என்ன?” என்றான். மாதலி புன்னகைத்தான். “அவர் எனக்கு ஆணையிடலாம். ஆனால் என்னைக் கடந்தவற்றை ஆணையிட இயலாது” என்றான் அர்ஜுனன். மாதலி அதற்கும் புன்னகை புரிந்தான். இடைநாழியினூடாகச் சென்று சிற்றவைக்கூடத்திற்குள் நுழைந்தனர். “இந்திரமைந்தனின் வரவை அறிவி” என்று அங்கிருந்த கந்தர்வனிடம் மாதலி ஆணையிட்டான். அவன் சென்று அறிவித்து மீண்டுவந்து கதவை மெல்லத் திறந்து “அவர் அறைநுழையலாம்” என்றான்.

அர்ஜுனன் கைகூப்பியபடி திறந்த கதவினூடாக உள்ளே சென்றான். ஒளிகொண்ட வெண்முகில்கள்போல பளிங்குச்சுவர்கள் மின்னிக்கொண்டிருந்த அறையில் இடப்பட்ட நான்கு பீடங்களில் ஒன்றில் இந்திரனும் அருகே பாலியும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே இந்திராணி நின்றிருந்தாள். அர்ஜுனன் அருகணைந்து இந்திராணியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவள் “வெற்றியும் புகழும் திகழ்க! மெய்மை கைவருக!” என வாழ்த்தினாள். “நீ நகர்சுற்றி வருவதை இருமுறை கண்டேன். உன் விழிகள் இளமைந்தர் விழிகள் போலிருந்தமை கண்டு நகைத்தேன்” என்றாள். அர்ஜுனன் “இங்கு இளமை மட்டுமே உள்ளது, அன்னையே” என்றான்.

இந்திரன் தலைகுனிந்து அவனை நோக்காமல் அமர்ந்திருந்தான். அவன் அருகே சென்று கால்தொட்டு வணங்க அவன் தலையை மட்டும் தொட்டான். அவன் பாலியை வணங்கியபோது அவன் வாழ்த்தென ஏதோ சில சொற்களை முனகியபடி அவனை தலைதொட்டு வாழ்த்தினான். அவன் கைகட்டி அருகே நின்றுகொண்டான். “அமர்க!” என்றான் இந்திரன். “இல்லை” என்று அர்ஜுனன் சொல்லப்போக “இது அவை. இங்கு அமரலாம்” என்றான் பாலி. அர்ஜுனன் அமர்ந்தான்.

அவர்கள் எதற்காகவோ காத்திருந்தனர். காற்றிலாது அசைவிழந்த சுடர்கள்போல இருவரும் தோன்றினர். அர்ஜுனன் அவர்கள் சொல்கொள்வதற்காக காத்திருந்தான். பாலியின் உடலில் மெல்லிய அசைவு தோன்றியதும் ஆடிப்பாவையென இந்திரனும் அசைவுகொண்டான். பாலி “தந்தை உன்னிடம் நேரடியாகவே பேச விழைகிறார், இளையோனே” என்றான்.

“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். இந்திரன் விழிதூக்கி அர்ஜுனனை சிலகணங்கள் நோக்கியபின் “நீ என் மைந்தன் என்பதனால் இச்சொற்கள். நான் எவரிடமும் எதையும் வேண்டுவதில்லை” என்றான். “நீங்கள் ஆணையிடலாம், தந்தையே” என்றான் அர்ஜுனன். “நீ உன் தோழனை கைவிட்டாகவேண்டும். அதுவே என் ஆணை” என்றான் இந்திரன். சிலகணங்கள் அர்ஜுனன் சித்தமும் செயலற்றிருந்தது. பின்னர் கைகூப்பியபடி “அது என்னால் இயலாது, தந்தைப்பழிகொண்டவனின் நரகத்தில் முடிவிலாக்காலம் வரை உழன்றாலும்” என்றான்.

“நீ என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா, மூடா?” என்று கூவியபடி பாலி எழுந்தான். “மைந்தா, அமர்க! அவர் சொல்லவேண்டியதை சொல்லட்டும். நாம் பேசுவதற்காகவே இங்கே அவனை அழைத்தோம்” என்றாள் இந்திராணி. பாலி அச்சொல்லுக்கு அடங்கி அமர்ந்தான். “மைந்தா, அவன் அங்கிருப்பது ஓர் எளிய யாதவனாக அல்ல. முடிவில்லாத ஒரு மணிமாலையின் ஒரு அருமணி அவன். அவன் மண்ணில் வாழும் அனைவரையும் தன் காய்களாகக் கொண்டு பெரும் பன்னிருகளம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கிறான். அதை உன்னிடம் சொல்லவே முனிவர்களை அனுப்பினேன்” என்றான் இந்திரன். “ஆம், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அதன் பின்னருமா இதை சொல்கிறாய்? நீ அறிவாயா மகாவஜ்ரமென்றால் என்னவென்று? போர்கொண்டெழுந்த இந்திரனின் வேதம். இந்திரன் எவருடன் கொண்ட போர் அது என அறிவாயா?” என்று பாலி கூவினான். தசைகள் நெளிய பெரிய கைகளை உரசியபடி “எதிர்நின்று அறைகூவுவது யார் தெரியுமா? அவர் பக்கம் நின்று நீ பேசுகிறாய். சொல், உன் தந்தையின் நெஞ்சுக்கு நேராகவா எழப்போகிறது உன் வாளி?” என்றான். இந்திராணி “மைந்தா, நீ அமர்க! உன் தந்தை அவர் சொற்களை சொல்லட்டும்” என்றாள். பாலி மீண்டும் அமர்ந்தான். இந்திரன் “அவன் சொல்வதைத்தான் நானும் சொல்லவிழைகிறேன், இளையவனே” என்றான். “நான் என் மின்படைக்கலத்தை ஏந்தியபடி போருக்கெழுந்து நின்றிருக்கும் தருணம் இது. எதிர்நிற்பவன் உன் தோழன்.”

பலமுறை கேட்டிருந்தபோதிலும் அவன் வாயால் அதை கேட்க அர்ஜுனன் உடல் சற்று சிலிர்த்தது. “மண்ணில் மாகேந்திரம் தோற்கடிக்கப்பட்டது. எஞ்சி அங்கு தங்கும்பொருட்டு மகாவஜ்ரம் போராடிக்கொண்டிருக்கிறது. நீ அறியமாட்டாய், அங்கு எவ்வேள்வியிலும் இன்று எனக்கு முதல் அவி இல்லை. முதன்மை இடமும் இல்லை. அங்கிருந்து பெய்யும் அவியே இங்கு அமுதமென மழைக்கிறது என்று அறிந்திருப்பாய். இந்நகரம் சிறுத்துக்கொண்டிருக்கிறது. என் குடிகள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒளிமங்குகின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான் இந்திரன். சினம் அனல்கொள்ளச் செய்த முகத்துடன் “ஆனால் போராடிக்கொண்டே இருப்பவனுக்குரியது இந்திரநிலை. இதையும் போராடி வெல்வேன் என்பதில் ஐயமில்லை” என்றான்.

அர்ஜுனன் இந்திரன் சொல்லிமுடிப்பதற்காக காத்திருந்தான். “வேதப்பாற்கடல் கடைந்து அமுதெடுக்கப்போகிறான் அவன் என்கின்றனர் அவனைப் போற்றும் முனிவர். நஞ்செழாது அமுதில்லை என்றும் அவர்கள் அறிந்திருப்பார்கள். மைந்தா, அங்கு நிகழவிருப்பது பெரும் குருதிக்கொந்தளிப்பு. அங்கு திகழும் சொல்லை வெல்ல தன் மெய்யறிதலே போதும் என அவன் அறிந்திருப்பான். களம் நின்று வெல்ல உன் கைவில் வேண்டும் என்று உணர்ந்திருப்பதனால்தான் உன்னை தன் நண்பன் என கொண்டிருக்கிறான். நீ அவனுடனிருக்கையில் அவனே வெல்வான். அவன் சொல் அங்கு நிற்கும். அது மகாநாராயண வேதமென்று அங்கே வாழும்.”

“அவன் சொல்வது வேதத்திற்கும் அப்பால் உள்ள மெய்மையை” என்றான் இந்திரன். அர்ஜுனன் அவன் விழிகளை நோக்காமல் “ஆம், வேண்டுவனவற்றை கெஞ்சியும் அடம்கொண்டும் தந்தையிடம் பெறுபவர் மைந்தர். அவர் சித்தம் முதிர்ந்து தந்தையை அறிய முயல்வதும் இயல்பே என்று என்னிடம் சொன்னார்” என்றான். இந்திரன் உரத்த குரலில் “மூடா, ஒவ்வொரு கூழாங்கல்லிலும் உள்ளது முடிவின்மையே. முடிவிலியின் பாதையை திறப்பவனுக்கு இன்பங்களென்று ஏதுமில்லை. அவனுக்கு வாழ்வே இல்லை” என்றான். “ஆம், முடிவிலியை அறிந்தவன் தானே முடிவிலியென்றாகிறான்” என்றான் அர்ஜுனன்.

இந்திரன் தளர்ந்து கைகளை விரித்தான். பின்னர் நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்து “இளையவனே, வெயிலொளியை பளிங்குருளையால் குவிப்பதுபோல அவன் வேதவிரிவை ஒற்றை மெய்மையென்றாக்குகிறான். அது சுடர். எரித்தழிப்பதும் கூட. அவன் வென்றால் பாரதவர்ஷத்தில் ஊழிக்காலம் வரை அம்மெய்மையே நின்றிருக்கும். மைந்தா, அது கூர்வாள் என என் புகழை வெட்டிச்செல்லும்” என்றான். “ஏனென்றால் மாகேந்திரம் விழைவுகொண்டோரின் வேதம். மகாவஜ்ரம் வென்று எழுபவன் வேதம். அவன் சென்றடையும் வேதமெய்ப்பொருளோ அடைவதற்கும் இழப்பதற்கும் நடுவே, வெல்வதற்கும் வீழ்வதற்கும் அப்பால் விழித்திருக்கும் ஒரு நோக்கு மட்டுமே.”

“அவன் சிப்பியில் முத்தெடுப்பதுபோல அவ்வேதமெய்ப்பொருளை எடுக்கிறான்” என்றான் பாலி. “ஆண்டாண்டுகாலம் வேதத்தின் உள்நின்று உறுத்தியது. வேத உயிர்சூடி ஒளிகொண்டது. இளையோனே, அதை எடுத்தபின் வேதம் வெறுங்கலமே.” அர்ஜுனன் “கதிர் முதிர்ந்த பின்னரும் நிலம் வளத்துடன் எஞ்சுவதே வழக்கம், மூத்தவரே” என்றான். பாலி உரக்க “வீண் சொல் வேண்டாம்!” என்று கூவினான். அர்ஜுனன் முகத்தருகே தன் முகம் வர அணுகி சினத்தால் சுளித்த முகம் அசைய, இரைக்கும் மூச்சு அவன் மேல் வெம்மையுடன் படர “திசைத்தேவர்களின் வேதமே மகாவஜ்ரம். நீ திசைத்தேவர்களை அணுகி படைக்கலம் கொண்டாய். அவர்கள் உன்னை எந்தையின் இளைய மைந்தன் என்றெண்ணியே அருள்புரிந்தனர். இன்று அப்படைக்கலங்களுடன் நீ எந்தைக்கு எதிராக கிளம்புகிறாய்” என்றான்.

அவனை அடங்கும்படி கையசைத்து விலக்கியபின் இந்திரன் சொன்னான் “மைந்தா, சூரியன் எங்கள் தோழன். மகாநாராயணம் மண்நிகழத் தொடங்கியதுமே விண்ணகத்தேவர்கள் ஒருங்கிணைந்துவிட்டோம். என் குலத்தான் இவன். சூரியனின் மைந்தன் இவன் இளையோன் சுக்ரீவன். அந்த யுகத்தில் இவர்கள் பிரிந்து போரிட்டு அழிந்தனர், அவன் வென்றான். இந்த யுகத்திலும் அது நிகழலாகாது. இன்று மண்ணில் உன்னுடன் இருக்கும் அவன் மைந்தன் உன் உடன்பிறந்தான். அவனையே உன் முதல்வன் எனக் கொள்க! அவனும் நீயும் இணைந்தால் உன் தோழன் என வந்தவன் வெல்ல முடியாது. அவன் எண்ணும் வேதமுடிவும் மண்நிலைக்க முடியாது.”

இந்திரன் குரல் தழைந்தது. “மைந்தன் என்பதனால் உன்னிடம் நான் மன்றாடுவதும் பிழையல்ல. இத்தருணத்தில் இது ஒன்றே நான் உன்னிடம் கோருவது. இதை நீ ஏற்றால் மண்ணில் ஒரு பெரும்போர் தவிர்க்கப்படும். போரில் உனக்கு களமெதிர்நிற்கப் போகிறவர்கள் உன் உடன்பிறந்தார், உன் முதுதந்தையர், உன் ஆசிரியர்கள். நேற்றுவரை உன் சுற்றமென்றிருந்தவர், உன் கொடிசூடி உனக்குப் பின் படைநிரையென வந்தவர். அவர்களின் குருதிமேல் நடந்துசென்றே நீ வெல்ல முடியும்.” அர்ஜுனன் திகைத்து அமர்ந்திருந்தான். பாலி “பல்லாயிரம் கைம்பெண்கள், பல்லாயிரம் ஏதிலிமைந்தர், பல்லாண்டுகாலம் ஓயா விழிநீர். இளையவனே, அவை மட்டுமே எஞ்சும் உனக்கு” என்றான்.

அர்ஜுனன் தலைகுனிந்தான். அவன் உடல் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தது. “அழிவது அவர்கள் மட்டும் அல்ல. உன் குடியும்தான். இதோ சொல்கிறேன், உன் மைந்தர் களத்தில் நெஞ்சுபிளந்து விழுந்து துடித்து இறப்பார்கள். உன் நகரம் எரிஎழுந்து கரிமூடும்” என்று பாலி முழங்கும் குரலில் சொன்னான். “அனைத்துக்கும் அப்பால் உள்ளது ஒன்று. இளையோனே, போர்கொண்டு செல்லும் அரசனை தோல்விக்குப் பின் மூத்தவள் கையில் ஏந்திக்கொள்கிறாள். வென்றால் அவன் நெஞ்சில் இளையோள் குடிவருகிறாள். ஆனால் அவ்விளையோள் அறியாது உருமாறி மூத்தவளாக ஆவாள். நுனிக்கால் ஊன்றி நிற்க நிலமில்லாதாகும், வெறுமையே எஞ்சும்.”

கைசுட்டி பாலி சொன்னான் “உலராத உதிராத விழிநீருடன் நீ அந்நிலமெங்கும் அலைந்து திரிவாய். ஒவ்வொரு சொல்லும் பொருளழிந்து வெறும்கூடாகும். ஒவ்வொரு நம்பிக்கையும் பொய்யென்றாகும். ஒவ்வொரு உறவும் நடிப்பெனத் தெரியும். இளையவனே, அவ்வெறுமையில் இறந்தகாலம் எழுந்து வந்து நிறையும். இழப்புகள் பெருகும். துயர்கள் மேலும் இருளும். கணங்கள் எடைகொண்டபடியே செல்லும். மண்ணில் மானுடருக்கு அளிக்கப்படும் பெருநரகுகளில் அதுவே முதன்மையானது. உனக்கென அங்கே காத்திருப்பது அது.”

அர்ஜுனன் மீண்டும் உடல் விதிர்த்தான். பாலி இருகைகளையும் தட்டியபடி உரக்க “சொல், மூடா! விலகினேன் என்று சொல்! உன் கடன் மகாவஜ்ரத்துடன் மட்டுமே என்று சொல்!” என்றான். அர்ஜுனன் அசையா விழியிமைகளுடன் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தான். “நோக்கு… விழிகொண்டே நோக்கு. இதோ!” என்று பாலி கூவினான். “மைந்தா, இது நெறியல்ல” என்று சொல்லி இந்திரன் எழுந்தான். அதற்குள் விழிதூக்கிய அர்ஜுனன் தன்முன் பெரும்போர்க்களம் ஒன்றை கண்டான்.

வெட்டுண்டு சிதறிக்கிடந்த உடல்களை உதறி உதறிப் பிரிந்து மேலெழுந்த உயிர்களை அவன் கண்டான். ஊனுடல்கள் பொருள்வயின் பிரியும் தந்தையரை அள்ளிப்பற்றிக் கதறும் இளம்பைதல்கள் என அவ்வொளித்தோற்றங்களை நோக்கி எம்பியும் தாவியும் துள்ளின. உதறப்பட்டதுமே பொருளிழந்து குருதிநனைந்த மண்ணில் விழுந்து தவித்து மெல்ல அமைந்தன. அவற்றுக்குமேல் துயர்நிறைந்த விழிகளுடன் நின்ற உயிர்வடிவங்கள் கைகள் தவிக்க கால்கள் பதற அவ்வுடல்களையே சுற்றிவந்தன. குனிந்து அவற்றுக்குள் மீண்டும் நுழைய முயன்றன சில. அவ்வுடல்கள் மெல்லிய உதைபட்டதுபோலவோ உள்நாண் ஒன்று அறுபட்டதுபோலவோ விலுக்கிட்டன.

அவை இனி தங்களை உள்நுழையவிடாத வெறும் தசைக்கூடுகள் என உணர்ந்த உயிர்கள் தவித்தபடி மேலே எழுந்தன. கைகளால் அவ்வுடல்களை தழுவித்தழுவி ஏங்கின. எழுந்து பிறிதொரு உடலருகே சென்று அங்கு அவ்வுடலைத் தழுவி அமர்ந்திருந்த இன்னொரு உயிர்வடிவை தழுவிக்கொண்டது அதன் தந்தை என்று அர்ஜுனன் உணர்ந்தான். மைந்தரைத் தேடிப் பதைத்து அலைந்தன உயிர்கள். இன்னும் இறக்காது துடித்துக்கொண்டிருந்த உடல்களுக்குள் மைந்தரைக் கண்டு அவர்களைப் பற்றி வெளியே இழுத்தன. தோழர்கள் இறந்துகொண்டிருக்க அருகே அமர்ந்து காத்திருந்தன சில உயிர்கள்.

காற்றை உதைத்து உதைத்து தளர்ந்த கால்கள் அசைவிழக்க உடல்களில் இருந்து விடுபட்டெழுந்த புரவிகள் கால்களை உதறி உதறி புதிய வெளியை புரிந்துகொண்டபின் சுழற்றப்படும் ஆடியின் ஒளியென ஓசையற்று சுழன்று விரைந்தன. களிறுகள் நீள்மூக்கின் நுனியைத் துழாவி மணம்பற்ற விழைந்தன. அவை அறிந்த புது மணத்தால் திகைத்து துதிக்கை சுருட்டி மத்தகம்மேல் அறைந்து ஓசையின்றிப் பிளிறின. ஓடி அமைந்த புரவிகள் இறகுக்கீற்றுகளாக காற்றில் மிதந்து உருப்பிரிந்தன. பெரிய துளிகளாக திரண்டு அசைவற்று நின்றன யானைகள்.

அந்தி அணைந்துகொண்டிருந்தது. பல்லாயிரம் பாடிவீடுகளில் வெட்டுண்டும் குத்துண்டும் புண்பட்டிருந்த வீரர்களை அள்ளி நிரையாக மண்ணில் கிடத்தியிருந்தனர். மாணவர்கள் மருந்துப்பேழைகளுடன் உடன்வர அவர்களை நோக்கிச் சென்ற மருத்துவர்களை நோக்கி கைகூப்பி கதறி மன்றாடினர். அவர்கள் சுண்ணக்குறியிட்ட வீரர்களை மட்டும் தூக்கி துணிமஞ்சலில் ஏற்றி ஆதுரசாலைகளுக்குள் கொண்டுசென்றனர் வீரர். எஞ்சியவர்கள் கதறினர். கண்ணீருடன் மன்றாடினர். இளமருத்துவர்கள் அவர்களின் புண்வாய்களைத் திறந்து நச்சுருளைகளை வைத்து மூடினர். நஞ்சு உடலில் பரவ அவர்களின் உடல்கள் ஒளியிழந்தன. விழிகள் பிதுங்கித்தெறிக்க துடித்து அசைவழிந்தன.

இதழ்களில் எஞ்சிய சொற்களுடன் சிலைத்துக்கிடந்த அவர்களை இழுத்துக்கொண்டுசென்று அங்கிருந்த வண்டிகளில் முன்னரே அடுக்கப்பட்டிருந்த பிணங்களுடன் ஏற்றினர். எடைகொண்டு உடலழுந்த அப்போதும் இறக்காதிருந்த ஒருவன் முனகி அழுதான். பிணவண்டியில் ஏற்றப்படும்போது ஒருவன் ஏற்றும் வீரனொருவனின் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கிய உடலுடன் இறுதிச்சொல்லை ஊழ்கநுண்சொல் என மீண்டும் மீண்டும் வெறிகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.

பிணங்கள் செறிந்த வண்டிகள் ஓடிய களமெங்கும் உடல்கள் விரிந்துகிடந்தன. நீண்ட ஈட்டிகளுடன் களம்புகுந்த வீரர்கள் சாவுப்புண்கொண்டு துடித்துக்கொண்டிருந்தவர்களை நெஞ்சில் குத்திக் கொன்றனர். அவர்களிடமிருந்து எழுந்த உயிருடல்கள் குத்துபவர்களைச் சூழ்ந்துகொண்டு சினந்து கைநீட்டி துள்ளின. அவர்களை அறைந்தும் கடித்தும் தாக்கின. அந்தக் குளிரை உணர்ந்து அவர்கள் உடல் சிலிர்த்தனர். தங்கள் ஆடைபற்றி இழுப்பது காற்று என எண்ணி கைகளால் இழுத்து உடலுடன் செருகிக்கொண்டனர்.

அவன் துரோணரைக் கண்டான். வெட்டி அகற்றப்பட்ட தலைகொண்ட வெற்றுடலுடன் தேருக்குக் கீழே கிடந்தார். அவர் மூச்சுக்குழாய் நீண்ட செந்நிறக்கொடி என கழுத்திலிருந்து நீண்டு மண்ணில் கிடந்தது. உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க வான்நோக்கிக் கிடந்த பீஷ்மரைக் கண்டான். புயல்கடந்த நிலத்தில் இளமரங்கள் என செத்துக்குவிந்திருந்த இளைய கௌரவர்களின் உடல்களைக் கண்டான். கௌரவ நூற்றுவரையும் கண்டுவிட்டான். நெஞ்சு பிளந்துகிடந்த துச்சாதனன் எழுந்து தன் உடலை நோக்கியபடி நின்றிருந்தான். தொடைசிதைந்து கிடந்த உடலைச்சுற்றி வந்து பெருஞ்சினத்துடன் கைகளை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான் துரியோதனன்.

அவன் கர்ணனைக் கண்டான். தேர்த்தட்டின் அடியில் புதைந்த சக்கரத்தில் சாய்ந்து இறந்து அமர்ந்திருந்த அவனுக்கு மேல் ஒளிகொண்ட உயிருடல் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றது. அவனை திரும்பி நோக்கியபோது அதன் விழிகள் ஒளிகொண்டன. புன்னகையுடன் கைநீட்டி “இளையோனே” என்று அவன் அழைத்தான். “மூத்தவரே, நீங்கள் அறிவீர்களா? என்னை அறிந்திருந்தீர்களா?” என அவன் நெஞ்சுடையும் ஒலியுடன் கேட்டான். “ஆம், நன்கறிந்திருந்தேன். நீ என் உளம் கனியச்செய்யும் இளையோன். உன்னைக் கொல்லாதொழிந்த என் வாளியை எண்ணி எண்ணி எத்தனை முறை மகிழ்ந்தேன்.” அர்ஜுனன் “மூத்தவரே” என்று தேம்பினான். கர்ணன் கனிவுடன் நோக்கி “வருந்தாதே. இது வெறும் கனவு” என்றான்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் ஓர் உறுத்தலுணர்வை அடைந்து அது எண்ணமென்றானதும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். இரு கைகளையும் விரித்துக்கொண்டு ஓடி வீழ்ந்துகிடந்த அபிமன்யூவை நோக்கினான். தலை ஒரு குருதிக்குமிழியாக வெடித்துச் சிதறியிருக்க இரு கைகளையும் விரித்து மல்லாந்துகிடந்தான். அவன் இளங்கால்கள் இரு பக்கமும் விரிந்திருந்தன. கவசம் அகன்ற மார்பில் சரிந்து கிடந்தது மணியாரம். கங்கணங்களில் ஒன்று உதிர்ந்திருந்தது. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனருகே குளிரென ஓர் இருப்பை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கினான். அபிமன்யூவின் மூச்சுடல். “அங்கே இளையவர்களும் மூத்தவர்களும் எரிந்துகொண்டிருக்கிறார்கள், தந்தையே.” அர்ஜுனன் இல்லை என்பதுபோல் தலையசைத்தான். “அழுதபடி அன்னையும் அரண்மனை மகளிரும் வந்துகொண்டிருக்கிறார்கள்…” அர்ஜுனன் “வேண்டாம்… நான் நோக்கமாட்டேன். நான் விழிதூக்கமாட்டேன்” என்றான். “முற்றழிவு… எஞ்சுவது அதுமட்டுமே” என்றான் அபிமன்யூ. “அரண்மனையில் உத்தரையின் கருவுக்குள்ளும் புகுந்துவிட்டது நஞ்சு. என் மைந்தன் துடித்தணைவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” அர்ஜுனன் “வேண்டாம், பார்க்கமாட்டேன்” என்று கூவினான்.

“இதுதான் நிகழவிருப்பது” என்றான் இந்திரன் ஆழ்ந்த குரலில். கண்ணீருடன் கூப்பி நெஞ்சில்பதித்த கைகள் நடுங்கிக்கொண்டிருக்க நின்றிருந்த அர்ஜுனன் கால் தளர்ந்து பீடத்தில் விழுந்து அமர்ந்தான். “இதற்காகத்தான்…” என்றான் இந்திரன். அர்ஜுனன் அறியாது விம்மிவிட்டான். “மைந்தா, இதை நீ தவிர்க்கமுடியும்” என்று இந்திரன் சொன்னான். “இக்கணம் நீ எடுக்கும் முடிவு இக்குருதியை தடுக்கும், அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.” அர்ஜுனன் “இவை எங்கு நிகழ்கின்றன?” என்றான். “எதிர்காலத்தில். அது ஒவ்வொரு கணமும் அணுகிவருகிறது” என்றான் பாலி. “மூத்தவரே, அவர் இதை அறிவாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். இந்திரன் “நன்கறிவான். அவன் மைந்தரும் குலமும் நகரும் இதைப்போலவே அழியும் என்பதையும் அறிவான்” என்றான். வலிகொண்டவன்போல அர்ஜுனன் மெல்ல முனகினான்.

“அவன் அனைத்தையும் கண்முன்னிலென பார்த்துக்கொண்டிருக்கிறான். அதன் இருளால் சூழப்பட்டிருக்கிறான்” என்றான் இந்திரன். “இங்கிருந்து மாயம் நிகழ்த்தும் கந்தர்வர்களையும் வருவதுரைக்கும் முனிவர்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் அச்சித்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். அவ்விருளை அவன் கடக்கலாகாதென்று விழைகிறோம். கடப்பான் என்றும் அதன்பொருட்டே எழுந்தருளியவன் அவன் என்றும் நன்கறிந்துமிருக்கிறோம்.”

அர்ஜுனன் அசைவில்லாது அமர்ந்திருந்தான். அவர்களும் அவன்மேலிருந்து விழிகளை விலக்கி தங்கள் அமைதிக்கு மீண்டனர். நெடுநேரத்திற்குப் பின் பாலி விழிதூக்கி அர்ஜுனனை நோக்கினான். அந்நோக்கை உணர்ந்து அவன் உடல் மெல்ல அசைந்ததும் இந்திரன் கலைந்தெழுந்தான். “மைந்தா, உன்னிடம் நான் கோருவது ஒன்றே. அவனிடம் செல், ஒற்றைச் சொற்றொடரில் சொல். உன் தந்தைக்கு கொண்ட கடனுக்கு நீ கட்டுப்பட்டவன் என்றுரை. அனைத்தும் அக்கணமே முடிவுக்கு வந்துவிடும்.”

பாலி “உன் தமையனாகிய கர்ணன் அஸ்தினபுரியை ஆள்வான். அவன் வலப்பக்கம் இளையவனாகிய துரியோதனன் வாளுடன் காவல் நிற்பான். வலப்பக்கம் இளவல் யுதிஷ்டிரன் துணைநிற்பான். நூற்றைந்து தம்பியர் கொண்ட பேரரசன் பாரதமண்ணை முழுதாள்வான். அவன் பேரறத்தான். அவன் கோல்கொண்டிருக்கையில் கதிர்முறை மாறாது. நாளவன் அருளிருந்தால் எட்டுத்திசையர்களின் அருளுமிருக்கும். வளமும் செல்வமும் குன்றாது. புகழும் நிறைவும் தேடிவரும்” என்றான். அர்ஜுனன் சொல்லில்லாது அமர்ந்திருந்தான். “சொல், உன் உறுதியை தந்தைக்கு அளி” என்றான் பாலி.

அர்ஜுனன் மெல்ல அசைந்தான். அவன் உதடுகள் வெறுமனே பிரிந்தமைந்தன. பாலி “உன் சொல் ஒன்று போதும், தந்தை இதுகாறும் கொண்ட அத்தனை துயர்களையும் நீக்க. சென்ற யுகத்தில் நான் கொல்லப்பட்ட வஞ்சம் அவரை எரிக்கிறது, இளையோனே. ஒரு சொல்லால் அதை நீ அணைக்கமுடியும்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு விழிகளை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டான். “சொல்க!” என்றான் பாலி சற்றே தளர்வடைந்த குரலில். அர்ஜுனன் மெல்ல கனைத்தான். பின்னர் எழுந்து கைகூப்பி வணங்கினான்.

“என்னை நீங்கள் தீச்சொல்லிட்டு இழிநரகுக்குள் தள்ளினால் அதையும் என் நல்லூழ் என்றே எண்ணுவேன், தந்தையே. ஆனால் எதன்பொருட்டும் நான் என் தோழரிடமிருந்து விலகமுடியாது. அவருக்காக என்னையும் என் குடியையும் சுற்றத்தையும் அழிக்கவேண்டுமென்பதே அவர் ஆணை என்றால் அதையும் இனிதே தலைக்கொள்வேன். பெரும்பழிகளே எஞ்சுமென்றால் அதையும் என் கடன் என்றே சென்னிசூடுவேன். நான் அவரன்றி பிறிதல்ல” என்றான். பாலி சினத்துடன் கைநீட்டி எழமுயல அவன் தொடைமேல் கைவைத்து அமரச்செய்தான் இந்திரன். அர்ஜுனன் மீண்டும் மூவரையும் தொழுதபின் வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைஇன்குலாபின் புரட்சி
அடுத்த கட்டுரைஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2