கவிதையைப்பற்றி பேசும்போது பொதுவாக நாம் மனப்பதிவுகளை நம்பியே பேசுகிறோம். அதுவே இயல்பானது, நேர்மையானது. ஆனால் அதில் புறவயத்தன்மையை நம்மால் உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் நம்முடைய அனுபவம் எப்போதுமே நம்முடைய அக அனுபவமாகவே எஞ்சி நிற்கிறது. கவிதையைப்பற்றிய கோட்பாடுகளும் கலைச்சொற்களும் கவிதையை புறவயமாக பேசுவதற்கு உதவியானவை என்றவகையில் மிக முக்கியமானவை.. அவற்றை நம் வரையில் தெளிவாக வரையறுத்துக்கொள்வதென்பது கவிதையைப்பற்றிய எந்த பேச்சும் வெறும் பேச்சாக அமையாமல் தடுக்கும்
இன்று நாம் கவிதையைப்பற்றி பேசும் பெரும்பாலான பேச்சுக்கள் மேலைக்காவிய இயலை ஒட்டி உருவாக்கபப்ட்டவை.. மேலைக்காவிய இயலில் உள்ள பல அடிபப்டைக் கருதுகோள்கள் நம்மால் தெளிவாக வரையறைசெய்யப்படாமல் புழங்குகின்றன. அவற்றை நாமே விளக்கிக்கொள்வது இன்றியமையாதது
கவிதை[ Poetry]
வாசகனைக் கற்பனை செய்ய வைப்பதன் மூலம் உணர்வுகளையும் அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்கும் சொற்களின் தொகை. உட்குறிப்புத்தன்மை, இறுக்கமான வெளிப்பாடு, ஒலி நேர்த்தி ஆகியவை கவிதையின் இயல்புகள். சொற்களை அடிப்படை அர்த்த அலகுகளாகக் கொண்ட இலக்கிய வடிவம் இது. சொற்கள் அடிகளாகவும் அடிகள் பத்திகளாகவும் இணைகின்றன. பிற இலக்கிய வடிவங்களுக்கும் கவிதைக்குமான முக்கியமான வேறுபாடு பிறவற்றில் அடிப்படை அர்த்த அலகு சொற்றொடர் என்பதே. ஆகவே பிறவற்றைவிட கவிதை அதிகமான கற்பனை சாத்தியங்கள் கொண்டதாக உள்ளது.
கவிதை புராதன வாழ்க்கையின் இரு முக்கியமான வெளிப்பாட்டு முறைகளில் இருந்தே தொடங்கியது. ஒன்று மந்திரம். இரண்டு பாடல். பழங்குடி மனம் மொழியை அதிகபட்ச ஒலியதிர்வுடனும் மனத்தீவிரத்துடனும் பயன்படுத்துவதன் மூலம் தன் மீதும் பிறர் மீதும் இயற்கை மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பியது. இறந்தவர்கள், இயற்கை வல்லமைகள், கருத்துருவங்கள் ஆகியவற்றுடன் பேச மொழியை செறிவும் தீவிரவும் கொள்ள வைத்தது. இவ்வாறாக மந்திரங்கள் உருவாயின. புராதன மனம் உணர்வுகளைத் தீவிரமாக வெளிப்படுத்த இசையையும் இசையுடன் இணைந்த மொழியையும் பயன்படுத்த ஆரம்பித்த போது பாடல் உருவாயிற்று.
கவிதைக்கு மந்திரம், இசை இரண்டுமே முக்கியமான முன்மாதிரி வடிவங்களாயின. முதலில் மத மந்திரங்கள் நாட்டார் [Folk] பாடல்கள் ஆகியவற்றின் வடிவில் இருந்த கவிதை புராதனச் செவ்விலக்கியக் காலகட்டத்தில் தனித்துவம் பெற ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் கவிதையின் ஒலி அதன் முக்கியமான கூறாக இருந்தது. கவிதையின் ஒலியைத் தீர்மானிக்கும் பல அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. வேத மந்திரங்கள் குறிப்பிட்ட தாளம் மற்றும் சைகைகளுடன் ஓதப்படவேண்டுமென்று வகுக்கப்பட்டன. சங்கப் பாடல்களுக்கு அவற்றுடன் இசைக்கவேண்டிய இசைக்கருவி ஒலியை வகுக்கும் அடிப்படையாக ஆனது. இவ்வாறாக யாப்பு உருவாகி வந்தது.
யாப்பு [Meter]
யாப்பு என்பது கவிதையின் சீரான பொதுவான இசைத்தன்மையை தீர்மானிக்கும் இலக்கண வரையறையே. உதாரணமாக அகன்ற தோல் பரப்பு கொண்ட கிணைப்பறையை மீட்டி பாடப்படவேண்டிய பாடல் வடிவம் அகவல் என்று கூறப்படப்பட்டது. அதன் ஓசை மயிலின் அகவல் போலிருப்பதனால் அப்பெயர். நவீனகவிதை உருவாகும் வரை உலகம் முழுக்க யாப்பு கவிதையைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சமாக இருந்தது. யாப்பு உள்ள கவிதை செய்யுள் என்று சொல்லப்பட்டது. ஆனால் யாப்பற்ற கவிதைகளும், யாப்பை மீறும் செய்யுள் வடிவங்களும் எல்லா மரபுகளிலும் எப்போதும் உள்ளன. பைபிள் வசனங்களை யாப்பற்ற கவிதை என்று சொல்ல முடியும். சிலப்பதிகாரம் உரைநடைச் செய்யுள் என்ற கலவை வடிவில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
செய்யுளும் கவிதையும் [Poem /verse]
பொதுவாக பழங்காலத்தில் உரைநடை அதிகமாக அறிவுச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. கவிதை மட்டுமல்லாமல் நீதி, மருத்துவம், சிற்பவியல், இலக்கணம் முதலியவையும் செய்யுளிலேயே இருந்தன. செய்யுள் நினைவில் நிறுத்தவும், ஓலைகளில் சுருக்கமாக எழுதி வைக்கவும் உகந்த வடிவம் என்பது அதற்கு காரணமாக இருக்கலாம். அச்சும் தாளும் புழக்கத்துக்கு வந்ததுமே உரைநடை முக்கியமான மொழி வடிவமாக ஆயிற்று. நீதி, மருத்துவம் அனைத்தும் உரைநடைக்கு மாறின.
செய்யுள் கவிதை இரண்டையும் வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பொதுவாக நம் இலக்கண வரையறைகளில் செய்யுள் வடிவமே கவிதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்று எவ்வித வடிவ வரையறைகளும் இன்றி கவிதைகள் எழுதப்படுகின்றன. கவித்துவம் என்ற இயல்பே கவிதையைத் தீர்மானிக்க அளவுகோல் ஆகிறது.
அ)வாசக கற்பனையைத் தூண்டிவிட்டு அவன் மனதில் கவிதையனுபவத்தை அவனே உருவாக்கிக்கொள்ள வைக்கும் பண்பு.
ஆ)திட்டவட்டமாக இன்னதென்று வகுத்துக்கூற இயலக்கூடிய ஒன்றைச் சொல்வதாக இல்லாமலிருத்தல்.
இ)வாசிக்கும்தோறும் வளர்ந்து செல்லும் தன்மை கொண்டிருத்தல்
ஆகிய பண்புகள் கவிதைக்கு உரியவை; செய்யுளுக்கு பொதுவாக இல்லாதவை என்று கூறலாம்.
மனித குலத்துக்குக் கிடைத்த பழைய கவிதைகள் எகிப்தின் பிரமிடுகளில் சித்திர எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பாடல்களே என்று சொல்லப்படுகிறது. அவை மந்திரங்களும் பாடல்களும் கலந்த வடிவம் கொண்டவை. ரிக்வேத மந்திரங்களும் உலகின் பழமையான கவிதை வடிவங்கள். தமிழில் நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய கவிதை நூல்கள் நற்றினை, குறுந்தொகை ஆகியவை. இவை மிகச் செம்மையான செவ்வியல் வடிவில் இருப்பதனால் இவற்றுக்கும் முன்பே பல்வேறு வளர்ச்சிப் படிகளைச் சேர்ந்த ஏராளமான கவிதை நூல்கள் தமிழில் இருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கலாம்
கவிநீதி [Poetic Justice]
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உகந்த சிறந்த நீதியை புனைவுக்குள் வழங்குதல். இந்த சொல் இலக்கிய விமரிசகரான தாமஸ் ரைமர் (Thomas Rymer) உருவாக்கியது. நாடக அழகியலில் இருந்து இலக்கியத்திற்கு வந்த கருத்து இது. கவிநீதியானது ஒரு சமூகத்தில் வழங்கும் நீதியின் இயல்பான நீட்சியே. ஆனால் அச்சமூகத்தின் அன்றாட நீதியின் பிரதிபலிப்பு அல்ல. அச்சமூகத்தின் ஆகச்சிறந்த நீதியுணர்வின் வெளிப்பாடு. அபூர்வமாக ஒரு பெரும் கவிஞன் அச்சமூகம் உருவாக்கிய நீதியுணர்வின் எல்லைகளைத் தன் உள்ளுணர்வால் வெகுவாகக் கடந்து செல்லவும் கூடும். கவிநீதி, பலசமயம் புனைகதைகளுக்குள் மட்டும் நிகழக்கூடியதாகவும் அன்றாட வாழ்வில் நிகழாததாகவும் இருக்கும். நுண்ணிய இலக்கிய வாசகர்களுக்கான படைப்புகளை விடவும் வெகுஜன ரசனைக்கான ஆக்கங்களில் கவிநீதியின் இடம் மிக முக்கியமானது. அன்றாட வாழ்வில் சாதாரணமாக தப்பித்துவிடும் ஒரு தவறு செய்த மனிதன்கூட திரைப்படத்தில் தண்டிக்கப்படாது போவதை நம் மக்கள் ஏற்பதில்லை.
.
கதைப்பாடல் [ Ballad]
வாய்மொழி மரபாக நாட்டார் பண்பாட்டில் காணப்படும் நீண்ட பாடல். பெரும்பாலும் கடவுள்கள் மூதாதையர் மற்றும் வீரமரணம் அடைந்தவர்களின் கதைகளை சொல்பவை. தமிழ் நாட்டார் மரபில் அவமரணம் அடைந்தவர்களைப் பற்றித்தான் அதிகமும் கதைப்பாடல்கள் உள்ளன. குமரி மாவட்டத்தில் பிரபலமாக உள்ள கதைப்பாடல்கள் பொன்னிறத்தாள் அம்மன்கதை, தம்பிமார் கதை முதலியவற்றை உதாரணமாகக் கூறலாம். குமரி மாவட்டத்தில் இவற்றில் பெரும்பாலானவை வில்லுப்பாட்டுக்களாகப் பாடப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவற்றில் சில ஏட்டில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஆயினும் வாய் மொழியாக குரு சீட உறவின் மூலமே இவை பயிலப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. இலக்கியத்தில் நேரடியான ஆழமான பாதிப்பை உருவாக்கக்கூடிய மூல இலக்கியங்கள் என்று கதைப்பாடல்களை கூறுகிறார்கள்.¦ பெரும்பாலான பெரும் காவியங்கள் நீண்டகாலமாக நாட்டார் மரபில் கதைப்பாடல் வடிவில் இருந்தவைதாம் என்று ஆய்வாளர் கூறுவதுண்டு.
கதைப்பாடல்களில் உள்ள கூறுமுறை காவியங்கள் வழியாகவும் நேரடியாகவும் நவீன நாவல்களிலும் சிறுகதைகளிலும் பாதிப்பைச் செலுத்துகிறது. சமீபகாலமாக இலக்கியப் படைப்பாளிகள் கதைப்பாடல்களை ஆராய்ந்து அவற்றை நவீன இலக்கியமாக மறுஆக்கம் செய்யும் போக்கும் உருவாகி வருகிறது. கதைப்பாடல்கள் எளிய மக்களிடையே நீண்ட காலமாக புழங்கி திரண்டு வருபவையாதலால் அவை மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவம் செய்பவையாக உள்ளன. அத்துடன் படிமரீதியாக அவை ஒரு கலாச்சாரத்தின் ஆழ்மனதை வெளிப்படுத்துபவை. ஆகவே நவீன இலக்கியம் கதைப்பாடல்களை மேலும் மேலும் ஊன்றி கவனிக்க வேண்டியுள்ளது.
காவியம் [Epic]
கவிதையில் அமையும் நீண்ட கதைவடிவம். ஒரு பண்பாட்டின் ஒட்டுமொத்த சாராம்சத்தை காவியம் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது அப்பண்பாட்டின் எல்லா அம்சங்களையும் சித்தரிக்கக்கூடியதாகவும் அதன் விழுமியங்களை நிலைநாட்டக்கூடியதாகவும் இருக்கும்
காவியங்கள் பெரும்பாலும் ஒரு பண்பாட்டில் ஏற்கனவே கதைப்பாடல்களாக இருந்தவற்றின் மறு ஆக்கங்களாகவே இருக்கும். கதைப்பாடல் ஒன்று பெருங்கவிஞனால் மறு ஆக்கம்செய்யப்படுவதே காவியம் என்று எளிமையாகச் சொல்ல முடியும்.உதாரணமாக கேரளத்தில் கிடைக்கும் கூர்ம்பா (குறும்பா) தேவி குறித்த நாட்டார் கதைப்பாடல்களில் சிலப்பதிகாரக் கதை பண்படாத வடிவில் காணப்படுகிறது. பலகாலம் இவ்வாறு கதைப்பாடலாக மக்களிடையே புழங்கிய கண்ணகியின் கதையே இளங்கோ அடிகளால் காவியமாக்கப்பட்டிருக்கக்கூடும். நீலகேசி காவியத்தின் மூலகதையும் பலவடிவங்களிலும் தமிழ் நாட்டார்கதைப்பாடல்களில் உள்ளது
மேலைச்சிந்தனையில் காவிய இலக்கணத்தை வரையறுத்துக்கூறியவர் என்று தத்துவஞானி ஹொரெஸ் (Horace) குறிப்பிடப்படுகிறார். கவியொருமை,கவித்திறன்,கவிக்கூறு ஆகிய மூன்றும் காவியத்தின் அடிப்படை இயல்புகள் என்பது அவரது விளக்கம். ஹொரெஸ் தன் கவிதைக்கலை (Ars Poetica) என்ற நூலில் இக்கருத்தை முன்வைக்கிறார்
கவியொருமை [Poesis]
காவியம் ஓர் உயிர்பொருள்போல ஒருமை கொண்டிருக்க வேண்டும் என்ற வரையறை. பிற்பாடு இந்த குணம் எல்லா படைப்புகளுக்கும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு உயிர் ஒருமை (Organic Unity) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. படைப்பின் உள்ளோட்டமாக ஓடும் உணர்ச்சி, அதன் அடிப்படையான தேடல், அது முன்வைக்கும் தரிசனம் ஆகியவை மூலம் இந்த ஒருமை உருவாகிறது.
கவித்திறன்[ Poeeta]
காவியம் விரிவான கவிதைப்பயிற்சி, தத்துவப் பயிற்சியின் விளைவாகவே உருவாக வேண்டும் என்கிறார் ஹொரஸ். ஹொரஸ கவிஞன் அடைய வேண்டிய பயிற்சிகளை விரிவாகவே வலியுறுத்தி விளக்குகிறார்.
அ) கவிஞன் வாழ்க்கையை அறிந்திருக்க வேண்டும்.
ஆ) வாழ்வைப் பற்றிய விளக்கமான பார்வையை நூலில் முன்வைத்து வாசகனை நல்வழிப்படுத்த வேண்டும்.
இ) வாசக இன்பத்துக்காக ஒருபோதும் அவன் உபதேசப் பண்பில் சமரசம் செய்யலாகாது.
ஈ) வாசகனை தன் கூற்றுகளால் அடிமைப்படுத்தும் வல்லனை அவன் சொல்லுக்கு வேண்டும். ஆனால் சொல்லாட்சி மிகையாகலாகாது.
உ) கவிதை பிற அனைத்துக் கலை வடிவங்களையும் அறிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
கவிக்கூறு (Poema)
காவியம் கையாளும் கரு மரபில் இருந்து உருவாகி வந்ததாக, மரபில் வேரூன்றிய ஒன்றின் நீட்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்து. ஒரு சமூகத்திற்கு அல்லது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அன்னியமான ஒரு பேசுபொருள் காவியத்தில் கையாளப்படுவதை ஹொரஸ் ஏற்கவில்லை. காவியத்தின் மூலக்கூறு அது உருவாகும் பின்புலமாக உள்ள பண்பாட்டிலிருந்து திரண்டு வந்ததாக இருக்க வேண்டும்.
இக்கருத்து காவியங்களை ஆராயும்போது பொதுவாக உறுதிப்படுவதைக் காணலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய பெரும் படைப்புகளின் கதைக்கருக்கள் மரபின் ஆழத்தில் உருவாகி மக்களிடம் புழங்கித் திரண்டு பிற்பாடு கவிஞர்களிடம் வந்து சேர்ந்தவையே. அத்தகைய கருக்களே ஒரு கலாச்சாரத்தின் கூட்டு ஆழ்மனத்தின் பிரதிநிதிகளாக இருக்கமுடியும் என்று விமரிசகர் கூறுவது உண்டு. இந்தக் கருத்து பெரும் நாவல்களுக்கும் ஓரளவு பொருந்துவதாயினும் நவீனத்துப் படைப்புகள் கருக்களின் புதுமை மற்றும் அன்னியத் தன்மையினால் வாசகனில் ஏற்படுத்தும் ஈர்ப்பையும் அதிர்ச்சியையும் தங்கள் அழகியலின் முக்கியப் பகுதியாகக் கொண்டுள்ளன. காவியத்தன்மை கொண்ட நாவல்களுக்கு மட்டுமே கவிக்கூறு பொருந்துவது என்று கூறுலாம்.