அன்புள்ள ஜெ,
எனக்கு நன்றாக நினைவில் உள்ளது; யோகி (சந்திப்பு)பற்றி நீங்கள் நித்யாவுடன் விவாதித்ததை “வாழ்விலே ஒரு முறை– முடிவின்மையில் இருந்து ஒரு பறவை” யில் எழுதி இருந்தீர்கள்; அதில் ஒரு வரி வரும்;
நீங்கள் நித்யாவிடம் கேட்பதாக
“நான் அவரை எரிச்சல் ஊட்டியிருப்பேனோ ” என்று ,
அதற்கு நித்யாவின் பதில் ” அது உன்னால் முடியுமா”
இது என் நினைவில் என்றும் இருக்கிறது, இதில் இருந்து எனக்கு பல திறப்புகள் கிடைத்துள்ளன
நன்றி
ராமகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ,
யோகியை நீங்கள் சந்தித்து உரையாடியதைப்பற்றி சமீபத்தில் பவா செல்லத்துரை எழுதியிருந்தார். அதற்கு முன்னர் நீங்கள் எழுதியிருந்தீர்கள். இப்போது மா தேவகியின் டைரியை வாசித்தேன். மூன்றும் வெவ்வேறு கோணங்களில் ஒரே நிகழ்ச்சி.
மா தேவகி உங்களுக்குள் என்ன நிகழ்ந்தது, எதனால் அந்நிலையில் இருந்தீர்கள் என உணரவில்லை. எழுத்தாளர்களின் தேடலும் கொந்தளிப்பும் பொதுவாக ஆன்மிகமான திசையில் செல்பவர்களுக்குப்புரிவதில்லை. அவர்களுக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் எல்லாமே சாமானியர்கள்தான்.
அமைதியும் அடங்குவதும் ஆன்மிகத்தின் வழி என்றால் கலை இன்னொரு ஆன்மிகப்பயணம் என்றும் அதன் வழி கொந்தளிப்பும் சுயமறுப்பும்தான் என அவர்கள் புரிந்திருப்பதில்லை. நானறிந்த பல துறவிகளுக்கு இலக்கியம் என்றால் கதைஎழுதிப்படித்தல் மட்டும்தான். கலை என்றால் கேளிக்கை மட்டும்தான்.
ஆகவே உங்களை ஒரு துடுக்கான பொறுமையில்லாத வருகையாளன் என்று மட்டும்தான் மா தேவகி பார்க்கிறார். உங்கள் தேடல் அதற்கு அடியில் இருந்தது என அவருக்குத்தெரியவில்லை
நீங்கள் உங்களுக்கு அந்தச்சந்திப்பு என்ன பாதிப்பை அளித்தது என இன்றுவரைக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
சண்முகம்
அன்புள்ள ஜெமோ
நீங்கள் யோகியைச் சந்தித்ததைப்பற்றிய மா தேவகியின் பதிவை வாசித்தேன். யோகி உங்களுக்கு அளித்த அந்த ஆழ்ந்த கவனமும் கனிவும் ஆச்சரியமளிக்கின்றன. நீங்கள் அவர் அருளுக்குப்பாத்திரமாகியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். அவர் உங்களைச் சாதாரணமாக அணுகவில்லை. உங்களுடன் ஆழமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்
ஆர். லட்சுமணன்