ஊர்பெருமை பேசுவதில் தமிழ்நாட்டில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் ஊர்கிறுக்கு பிடித்தவர்கள் குறைவு. அதுவும் இலக்கியத்தில் ஊர்க்கிறுக்கு பிடித்து அலைபவர்கள் எப்போதும் திருநெல்வேலி ஆட்கள்தான். பாவம், தஞ்சையும், கும்பகோணமும் கொஞ்சம் முட்டித்தான் பார்க்கும். ஆனால் இந்த நெல்லைக் கிறுக்குக்கு முன்னர் எந்த ஊர்க்கிறுக்கும் இலக்கியத்தில் நிற்க முடியாது. பக்கத்து ஊர் என்பதால் வேண்டுமானால் நாரோயில் மக்களை மோருக்கு ஊறுகாய் அளவே சேர்த்துக் கொள்ளலாம்.
இலக்கியத்தில் இளந்தாரியாய் சுற்றிய காலத்தில் என் ஊரை சொல்லும் முன் மூன்று பெருமைகளை சொல்லாமல் ஊர் பேரை சொல்ல மாட்டேன். தமிழிலக்கியத்தில் சொல்லப்படும் ஐவகை நிலப்பகுதிகளும் அமைந்த ஒரே மாவட்டம் எது, பிரிக்கப்படாதிருக்கும் வரை ஒரே மாவட்டத்தில் உற்பத்தியாகி அதே மாவட்டத்தில் ஓடி அங்கேயே கடலில் கலக்கும் தமிழகத்தின் ஒரே ஜீவ நதியை சொந்தமாகக் கொண்ட உலகின் ஒரே மாவட்டம் எது, சாகித்ய அகாடமி பரிசினை வென்ற மூவர் ஒரே நகரத்தில் இருக்கும் சிறப்பு கொண்ட மாவட்டம் எது – திருநெல்வேலி என்ற பெயரை சொன்னாலே நாக்கை சப்புக் கொட்டிக் கொள்ளும் கோட்டிக்காரப் பயலாக நான்தான் இருப்பேன் என்று நினைத்தால் நூலக அலமாரிகளிலிருந்து மடிக்கு வந்த இலக்கிய கர்த்தாக்கள் பலரும் என்னிலும் கூடிய பெருங் கோட்டிகள் என்றறிய ஒரே குதூகலமாகத்தான் இருக்கிறது இப்போதும்.
இந்த ஊர் பெருமை என்பதை வட்டார இலக்கிய வகைக்குள் அடக்கி விட முடியுமா ? ஊர்பெருமை பேசாத இலக்கியவாதிகள்தாம் உண்டா ? என்றால் பதிலை சற்று விரிவாக்க வேண்டும்.
வட்டார இலக்கியத்தை என் வாசிப்பைப் பொறுத்து இரண்டாகப் பிரித்து கொள்கிறேன். முதல் வகை வட்டாரத்தின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், ரசனைக் கூறுகளை படைப்பாக கொணர்வது. இரண்டாம் வகை வட்டார மொழி வழக்கை கையாண்டு பொதுப் படைப்பாக உருவாவது. சிறப்பான படைப்பாளிகள் இரண்டின் கலவையை சரிவிகிதத்தில் கொடுத்து, வட்டார வாழ்வியல் வழியே மானிடருக்குப் பொதுவான தளத்தில் சென்று சேரும் படைப்புகளைத் தந்து விடுகிறார்கள். புதுமைப் பித்தன், கி. ராஜநாராயணன், பூமணி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன், பவா செல்லதுரை, கண்மணி குணசேகரன் என்ற பெரும் பட்டியல் உண்டு. எல்லா இலக்கிய வாசகர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் அந்தந்த ஊர்காரர்கள் வாசிக்கையில் ஒரு தனி வாசிப்பனுபவம் கிடைப்பது வட்டார வகை இலக்கியங்களுக்கே உரித்தான ஒரு சிறப்புதான். படைப்பை இன்னும் ஒரு அடி ஆழ்ந்து அனுபவிக்க முடிந்த கூடுதல் திருப்தி அது. அப்படி ஒரு கூடுதல் அனுபவிப்பைத் தந்த விதத்தில் வண்ணதாசன் என் அன்புக்குரிய எழுத்தாளர்.
வண்ணதாசன் எழுதுவதும், எழுதியதும் இலக்கியமாக ஆகுமா என்ற கேள்விக்கு நேரடி பதிலை தைரியமாக ஆமென்று சொல்லலாம். ஆனால் நெல்லை வட்டார வழக்கு இலக்கியமாக ஆகுமா என்ற கேள்விக்கு நேரடி பதில் கிடைக்காது. அவரது படைப்புலகை முழுவதுமாக ஒரு வட்டம் அடித்து வந்தால் பிடி கிடைக்கும். வண்ணதாசனின் படைப்புகளில் இருக்கும் திருநெல்வேலி அப்படிப்பட்டது, அது எங்கே இருக்கிறது என்று தொடரலாம்.
ஒரு பொதுப் புரிதலில் நெல்லை மண்ணின் படைப்பு என்பது மொழியால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. நெல்லை மொழி பயின்று வரும் இடங்களை இன்று நெல்லை மக்களை விட பிற மாவட்டக்காரர்கள் சட்டென அடையாளம் கொள்கிறார்கள். திருநெல்வேலியின் பேச்சு மொழியாக திரைப்படங்களில் பயின்று வரும் மொழி நெல்லையின் பொது மொழிதான் என்றால் சிலர் வியப்படையக் கூடும். நெல்லையின் பொதுமொழிக்குள் பயின்று வரும் தனிமொழி ஒன்றுமுண்டு. ஊர்காரர்களுக்கே தெரிந்த இனவாரி, சாதிவாரி நெல்லைத் தமிழ் உண்டு. அது சாதியை, இனத்தை வட்டாரத்தை தெளிவுறக் காட்டி விடும். காயல்பட்டினம் பாயும், மேலப்பாளையம் பாயும் திருனவேலிக்காரங்க தான் பிறருக்கு. ஆனால் மூக்கு நீண்ட திருனவேலிக்காரனுக்கு இரண்டு பாய்மார்களின் ஊரை முப்பது வினாடி பேச்சில் கண்டுபிடித்துவிட முடியும். ஸ்ரீவைகுண்டம் பிள்ளைவாளுக்கும், செங்கோட்டை பிள்ளைவாளுக்கும் வேறுபாடு கண்டுபிடித்து விட முடியும். மொழியால் அடையாளம் காணப்படும் நெல்லை படைப்புகளில் வண்ணதாசனின் நெல்லை எங்கு வருகிறது ?
தனது படைப்புகளில் வண்ணதாசன் பயன்படுத்தும் நெல்லை மொழி நெல்லை வாழ் சைவப் பிள்ளைவாள்களின் மொழி. ஆண்டாண்டுகளாய் இந்த தாமிரபரணியின் கரையில் வாழ்ந்து தீர்த்த ஒரு இனத்தின் மொழி. அவரது படைப்புகளில் வரும் நெல்லைத் தமிழ் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பொன்னாக்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, பாபநாசம் பேட்டை பகுதிகளில் புழங்கும் சைவப் பிள்ளைமார்களின் மொழி. அந்த கூரிய மொழியின் திறம் வண்ணதாசனின் படைப்புகளில் சகஜமாக வரும்.
“அவாள்” என்ற சொல்லே அப்படியான “குழுஊக் குறி” சொல்தான். அவாள், அவுக, அவிய எனும் மூன்று சொற்களும் ஒரே பொருளையும், ஆனால் மூன்று சாதிகளின் மொழிப் பயன்பாட்டையும் உணர்த்தும் என்றால் நெல்லைக்காரரைத் தவிர பிறர் வியப்பார்.
தவணாப் புளி, பேந்தா ( ஒரு விளையாட்டு), அயத்து போவது, அழிரப்பர், என்று சொல்லிக் கொண்டே வரும் வண்ணதாசன் “ஜவ்வுத்தாள் பையை “ என்று சொல்லும் இடத்திலும், “சிதம்பரம் சார்வா (ள்)” என்று குறிக்கும் போதும், எருக்கம் பூவை “எருக்கலம்பூ, “எருக்கலம் புதர்” என்றே பிடிவாதமாய் சொல்லும் இடங்களிலும், “ஒக்கிட்டுக் கொண்டிருப்பது”, ”லாத்திட்டது”, ”முடுக்குதாக”, ”ரெண்டு பேரும் எசலிக்கிட்டே இருக்காக”, “போட்ஸா செய்யனுமில்லையா” என்று பேசும்போதும் 9௦ களில் மறைந்து போன திருநவேலி சட்டென மின்னி மறையும். வண்ணதாசனின் படைப்புகளைப் படித்து விட்டு இன்றைய நெல்லைக்கு சென்று இறங்குபவர் பார்க்க முடிந்தது பேர்பாதி நெல்லையைத்தான்.
வீட்டிற்கு வந்தவரை வாவென வரவேற்பதை “சித்தப்பாவை வான்னு கேட்டயாடே?” எனும்போதும், “இவ்வோ தரையில இருக்காக”, “அலையுதீளே ஆத்திக்கிட மாட்டாம“ எனும்போதும் சட்டென நெல்லை பிள்ளைவாள் வீட்டு கூடத்தில் நம்மை உட்காரவைத்து விடுவது வண்ணதாசனுக்கு இயல்பான விஷயம்.
அவரது கதை உலகம் பெரும்பாலும் வீடுதான். வீதி என்றால் நெல்லையின் ரத வீதிகள் நான்கும், அதன் குறுக்கு, நெடுக்கு சந்துகளும் தான். பயணம் என்பதே நெல்லையிலிருந்து தென்காசி , பாபநாசம் வரைதான். கொஞ்சம் பின்னால்தான் பயணம் நெல்லையிலிருந்து ரயிலில் சென்னைக்கு போனது. அது கூட கொஞ்ச நாட்கள்தான். அங்கும் பயணம் மின்சார ரயில்களில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி விட்டிருக்கும் அடிக்கடி. நெல்லை டவுண் பகுதிகளின் ரத வீதிகள், முடுக்குகள் வழியாகவே கதைகளை நகர்த்தும் வண்ணதாசன் அவரது கதைமாந்தர்களை , அவர்களுக்கான சூழலில் இயல்பாக்கி விடுகிறார். சுடலை மாடன் கோவில் தெரு, தென்னம் பிள்ளை தெரு, மாடத் தெரு, கழுவேத்தி முடுக்கு, தெக்கு புதுத் தெரு, காசுக் கடைத் தெரு என அவரது படைப்புகளில் காட்டப்படும் மொத்த தெருக்களின் நீளமும் கூட்டினால் ஐந்து கிலோ மீட்டர் கூட வராது.
அதே நேரம் அவர் காட்டும் வீடுகள் தெருக்களை விடப் பெரியவை. வாசல் படிக்கட்டில் ஆரம்பித்தால் திண்ணை ,முற்றம், தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்கு வீடு, கூடம், அடுக்களை, மெத்து, சாய்ப்பு, கிணத்தடி என்று வளர்ந்து கொண்டே போகும் வர்ணிப்பு வீட்டு வாசலின் மரங்கள், செடிகள், பூக்கள், அதில் விளையாடும் அணில்கள், வண்ணத்து பூச்சிகள் வரை விவரிக்கும். இந்த அமைப்புக்குரிய வீடுகள் திருநெல்வேலி டவுணில் இருக்கும் சைவப் பிள்ளை வீடுகளுக்குரியவை. அவர் சொல்வதைப் போலவேதான் சிறிய சந்துகளில் ஒவ்வொரு வீடும் பெரிதாக இருக்கும். சின்ன வாசலில் நுழைந்து நீளமான பாதையில் நடந்தால் “பகார்” என்று திறந்த முற்றத்தில் நாலு வீடுகள் இரண்டிரண்டாய் ஒன்றையொன்று பார்த்த மாதிரி மாடியோடு வரும். வண்ணதாசனும் அப்படித்தான். சின்ன வாசல் திறந்து ஒடுக்குப் பாதையில் அழைத்துச் சென்று விரிந்த முற்றத்தில் நம்மை திகைத்து நிற்க வைத்து மறைந்து விடுவார். “கிருஷ்ணன் வைத்த வீடு” வாசித்தவர்கள் இந்த அனுபவத்தை துல்லியமாய் உணரலாம்.
சம்பவங்களின் நிகழிடமாக வண்ணதாசன் பயன்படுத்துவது பெரும்பாலும் வீடுகளே. சமயங்களில் பேருந்து பயணங்கள். அப்படியே வீட்டிற்கு வெளியே சம்பவங்கள் நடந்தாலும் கல்லணை வாய்க்கால், சிக்கலிங் கிராமம், குறுக்குத் துறை, கல்வெட்டாங்குழி , நெல்லையப்பர் கோவில் என்று பெரும்பாலும் ஊருக்குள்தான் நடப்புகள் எல்லாம். ஆனால் அதற்குள்ளேயே மனிதர்களின் வர்ண பேதங்கள் அனைத்தையும் காட்டிவிட முடிகிறது அவரால்.
நெல்லை மணத்தை வண்ணதாசன் கொண்டுவருவது அவரது படைப்புகளின்
கதைமாந்தர்கள் பெயர்களில் . அதிலும் சில பெயர்களுடன் சில உறவுமுறைகளையும் முன்னொட்டு, பின்னொட்டாக சேர்த்து அவர் சொல்வது திருநவேலி யை நம்முள் நிரப்பி விடும். பெயர்களிலேயே அவரது கதைமாந்தர்களின் உலகம் சொல்லப்பட்டு விடும். பிரமு அத்தான், சிதம்பரத்தாச்சி, மங்காயி அத்தை, மீசை பெரியப்பா, வைத்தி சித்தப்பா, கோமு அத்தான் – இப்படி போய்க்கொண்டேயிருக்கும் அவரது கதை மாந்தர்களும், உறவுமுறைகளும். இந்த உறவுமுறையால் முன்னொட்டு-பின்னொட்டு சமாச்சாரங்கள் நிரம்பிய அடையாள விளி திருநெல்வேலிக்கு உரிய சிறப்பு. பிள்ளைமார்களுக்குத்தான் அதன் காப்பி ரைட் உரிமையில் முதல் பங்கு. ஆள் பெயரை சில நேரம் ஊர்பெயர் வந்து மாற்றீடு செய்யலாம் – களக்காட்டு சித்தப்பா, பொன்னாக்குடி ஆச்சி, வல்லநாட்டு சின்னம்மை, செப்பரை அத்தான் என்ற வகைப்பாடுகள். கோமதிநாயகம் என்ற கோமு, பிரமநாயகம் என்ற பிரமு, உலகநாதன் என்ற ஒலகு, சங்கர நாராயணன் எனும் சங்கரு, நெல்லை நாயகம் என்ற நெல்லை, கல்யாண சுந்தரம் என்ற கல்யாணி, மயிலேறும் பெருமாள் என்ற மயிலு – இந்த வகையான பெயர்களும், ஊர்களும் அவரவர் அடையாளத்தை தெளிவாகக் காட்டிவிடும். செல்லம்மா எனும் பெயர் கொண்ட பெண்கள் செல்லா, செல்லத்தக்கா என்று சுருக்கப்படும்போது முறையே முதல் ஆளை கடையம் அக்கிரகாரத்திலும், அடுத்த ஆளை பாபநாசத்திலும் வைத்து யோசிப்பது “திருநவேலி” ஆட்களுக்கு அனிச்சை செயல்.
இப்படி “நெல்லை மாநகர்” விட்டு சுற்று வட்டாரத்திலிருந்து வரும் அத்தான்களும், அண்ணன்களும், மாமாக்களும், சின்னம்மைகளும், மதினிகளும்தான் வண்ணதாசன் படைப்பில் ஓயாமல் மண்ணை மணக்க வைப்பவர்கள். “எங்களையெல்லாம் மறந்து போட்டியேடே“ என்று சிநேக சிரிப்போடு வருபவர்கள். “ஒங்க அம்மையக் கொண்டிருக்கயேடே அப்டியே“ என்று கடந்தகாலத்தை இப்போது நிகழ்த்தும் ரசவாதிகள்.
அதிலும், மதினிமார்களின் செல்வாக்கு மேற்சொன்ன உலகில் அபாரமான செல்வாக்கு செலுத்துவது. நெல்லையில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட இருவர் பேசக் கேட்டு அதில் ஐந்து நிமிடங்களுக்குள் ரெண்டு மதினிகளின் நல விசாரிப்புகள் நிகழ்ந்தால் அதில் ஒருவர் பெயராவது கோமதியாகவோ , சங்கராகவோ இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறை நம்பி என் சொத்தை பணயம் வைப்பேன். இந்த மதினிமார்கள் எனும் சொந்தம் நெல்லை சைவப் பிள்ளைமாரிடையே நிகழ்த்தும் ஊடுபாவுகளை சொல்லிச் செல்ல வண்ணதாசனுக்கு இன்னும் இருபது ஆண்டுகள் வேண்டும். அண்ணன் மனைவி, தன் வயதுக்கு மூத்த மாமன்/அத்தை மகள்கள் என்று நேரடியான உறவில் தொடங்கி நேசத்தின் காரணம் கொண்டு பிரிசில்லா மதினி வரை விரியக் கூடிய சொந்தம் இது. பொதுவாகவே “திருநவேலி” ஆட்களுக்கு மதினிமார்கள் மீது பெயரறியா நேசபாவம் உண்டு. அல்போன்ஸ் சாரையும், ஜப்பார் பாயையும் நலம் விசாரிப்பதன் இரண்டாம் வரி “வீட்ல மதினி சொகமாருக்காகள்ளா?”. வண்ணதாசனின் படைப்புகளில் சிறு சந்துகளில் நெருக்கியும் , நீண்டும் கிடக்கும் பெரும் வீடுகளுக்குள் ஒளி மிகு வண்ணங்களைக் கொண்டுவரும் தேவதைகள் இந்த மதினிமார்களும், அதற்கு சற்றும் குறைவிலா பெருமை உடைய அக்காமார்களும்.
இதற்கு அடுத்தபடியாய் வண்ணதாசன் எடுத்தாள்வது சிறு, சிறு வர்ணிப்புகள். பெரும்பாலும் ஒரு அறைக்குள் இருக்கும் சூழல், அறைக்குள் இருக்கையில் வெளியிலிருந்து கேட்கும் ஓசைகள், பேசும் இருவரின் அனிச்சை அசைவுகள், பெருமளவு மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என ஒரு கட்டம் கட்டிய வர்ணிப்புகள். பேருந்தில் பயணித்தாலும் அவரது சித்தரிப்பு பெரும்பாலும் கதைசொல்லியை சுற்றியிருக்கும் பத்தடி விஸ்தீரணம்தான். அதற்குள்ளாகவே அவரது படைப்புலகம் கச்சிதமாக, முழுமையாகப் பொருந்தியிருக்கும். அதன் சித்தரிப்புகளிலும் சட்டென தலைதூக்கும் “திருநவேலி” வாசனை. ஆட்டுக்கல்லை ஒட்டிய பெஞ்சு, இருக்காஞ் சட்டி விளக்கு வெளிச்சத்தில் தூண்கள், படித்துறையில் சிந்திய அருணகிரி சீயக்காய் பவுடர் வாசம், சிணுக்கோரியால் ஈர் உருவும் ஓசை, பூ வரைந்த உயரமான கண்ணாடி டம்ளர் – இப்படி வெண்பொங்கலின் சீரக ருசி அவரிடம் அநேகம்.
ஒவ்வொரு ஓவியனுக்கும் ஒரு பாணி உண்டில்லையா? கோடுகளை மட்டுமே ஆங்காங்கே வரைந்து சற்று தள்ளி வைத்துப் பார்த்தால் சட்டென ஒரு ஓவியம் உருவாகும் கோட்டோவியம் வரைதல் போன்ற ஒரு எழுத்து முறை வண்ணதாசனுடையது. கோடுகளிடையே உள்ள இடைவெளி பார்ப்பவர் கண்களால் நிரப்பப்படுவதைப் போலவே அவரது வரிகளை வாசித்ததும் இடைவெளிகளை நம் மனம் நிரப்பத் தொடங்கும்.
ஒவ்வொரு ஓவியனுக்கும் அதிகமாக பயன்படுத்திய , குறைவாகப் பயன்படுத்திய என இரண்டு வண்ணங்கள் இருக்கும். எழுத்தில் வண்ணதாசன் குறைவாகப் பயன்படுத்தும் சித்தரிப்புகள் அளவில் குறைவே தவிர ஆழத்தில் மிக தீவிரமானவை.
ஒரு பிரதேசத்தையும், ஒரு இனத்தவரையுமே பெரும்பாலும் தன் படைப்புக் களமாகக் கொள்ளும் வண்ணதாசன் மொத்த உலக அனுபவங்களையும் அதற்குள் கச்சிதமாக வரையறுத்துத் தருகிறார். ஒரு ஓவியம், ஒளிப்படம் போல ஒரு தருணத்தை , சிறு நிகழ்வை சட்டென உறைய வைத்துக் கொடுத்தது போன்ற படைப்புகள். அதை நிதானமாக கூர்ந்து பார்த்துதான் நாம் நமக்கான புரிதலை உணர முடியும். துளி கண்ணீரும், உள்ளே பொங்கி இதழில் மென்னகையாய் அமரும் நினைவுப் புன்னகையும் மாறி, மாறி வருவதைத் தவிர்க்க இயலாமல்தான் வண்ணதாசன் படைப்புகளை வாசிக்க முடிகிறது. ஓவியத்தின், ஒளிப்படத்தின் பின்னணியாக நெல்லையும், அதன் வீடுகளும் இருப்பதைப் பார்க்க ஒரு மகிழ்ச்சி.
சாமந்தி, செவ்வந்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் பூவுக்கு நெல்லையில் கேந்திப் பூ என்று பெயர் போட்டிருக்கிறது. ஒவ்வொரு இதழும் செங்காவி வண்ணத்தில், இதழ் இதழாக முழுதாக மலர நாட்கள் கொள்ளும் மலர். முதல் சுற்று இதழ் விரிந்த பின்னரும் அட்டுக்கடுக்காய் தினம் தினம் மலர்ந்து மலர்ந்து விரிந்து கொண்டே இருக்கும் மலர். அந்த செடிக்கு பூதான் விதை. ஒவ்வொரு இதழும் விதையால் தான் பூவின் அல்லித்தண்டோடு இணைக்கப்பட்டிருக்கும். பிய்த்து போட்டால் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கேந்திப் பூ செடி.
வண்ணதாசன் என்றைக்குமே திருநவேலியின் கேந்திப் பூ……
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு
========================================================
==========================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2