சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்

CO2B0292

“கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்கள்… பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வதற்கு அது ஒன்றே வழி. சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரசியமானது. முடிவற்ற மனித உண்மைகள் அதில் புதைந்துள்ளன. ..நான் எப்போதும் இந்த சிறிய பிரபஞ்ச வெளியை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறேன், ஒரு மனிதன், ஒரு நபர். அங்கு தான் பிற எல்லாமும் நிகழ்கின்றன.” – 2015 இலக்கிய நோபல் பெற்ற ஸ்வெட்லான் அலேக்சிவிச்

ஜெயமோகன் தளத்தில் நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தில், நண்பர்கள் சிலருக்கு வண்ணதாசன் அத்தனை உவப்பானவராக இல்லை என தனது வருத்தத்தை எழுதி இருந்தார். அப்படி அவரை வருந்த செய்த வெகு சில நண்பர்களில் நானும் ஒருவன். வண்ணதாசன் எனக்கு விகடன் வழியாகவே அறிமுகம். ஐந்தாறு கதைகள் அங்குமிங்குமாக உதிரியாக வாசித்திருப்பேன். அவர் எனக்கான எழுத்தாளர் இல்லை எனும் எண்ணம் ஏனோ ஏற்பட்டுவிட்டது. ஃபேஸ்புக்கில் போகன் – எம்டிஎம் இலக்கிய கோட்பாடு விவாதத்தில் எம்டிஎம் வண்ணதாசனை எல்லாவகையிலும் தமிழின் சிறந்த எழுத்தாளராக முன்வைத்தார். நாம் எதையோ தவறவிடுகிறோம் எனும் முதல் நெருடலை அது எனக்கு ஏற்படுத்தியது. விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை சாக்காக கொண்டு இணையத்தில் கிடைக்கும் அவரது கதைகள், ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’, ‘சமவெளி’, ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ ஆகிய சிறுகதை தொகுப்புக்களில் உள்ளவை என சுமார் ஐம்பது கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தேன். எனது முன்முடிவுகளும் அபிப்ராயங்களும் சாய்க்கப்பட்டுள்ளன.

சுந்தர ராமசாமி வண்ணதாசனின் சிறுகதைகளை பற்றி (அவரது இரண்டாம் தொகுப்பின் முன்னுரையில் எழுதியது) இரண்டு முக்கியமான விமர்சனங்களை வைக்கிறார்.

  1. இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.
  1. சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன.

முதலாம் கருத்தின் நீட்சியாக மற்றொன்றையும் சொல்லலாம், அவருடைய கதைகள் ஒற்றைப்படையான நெகிழ்ச்சியை மட்டுமே முன்வைப்பவை. இருளோ வாழ்வின் குரூர யதார்த்தமோ பதிவாகவில்லை.

இவ்விமர்சனங்களை வண்ணதாசனின் சில கதைகளைக் கொண்டு எதிர்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

‘நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்’ கதை ஒருவகையில் வண்ணதாசன் பற்றிய எல்லா விமர்சனங்களையும் தகர்த்தெறியத்தக்க கதை. அவருடைய கதையில் வரும் காட்சிகள், விவரணைகள் கதையை வலுவாகக் கட்டி எழுப்புகின்றன. குறியீடுகள், உருவகங்கள் அற்ற நேரடியான கதை அவருடையது என பரவலாக சொல்லபடுவதுண்டு. ஆனால் தேர்ந்த கதை சொல்லி குறியீடுகளை மெனக்கெட்டு உருவாக்குவதில்லை. அவை கதையின் ஊடாக துலங்கி வருகின்றன. பிச்சு மற்றும் புட்டா என இரு கலைஞர்களின் வாழ்வை சொல்கிறது. பிச்சு தேசிய விருது வாங்கிய நடிகன். ஆனால் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் பழைய பேப்பர் வியாபாரம் செய்கிறான். புட்டா ஒரு சித்திரக்காரன். வெளியேறி சென்றவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அவர்கள் சிகப்பி எனும் நொண்டிக் கிளியை வளர்க்கிறார்கள்.

பிச்சுவுக்கு எப்போதும் உத்திரத்தில் தென்படும் கோமாளியின் முகம் அன்று தெரியவில்லை என துவங்குகிறது கதை. கதை போக்கில் புட்டா அவனுடன் வந்து சேர்ந்து கொண்ட பினனர் தான் அந்த முகம் அவனுக்கு தெரிய துவங்கியதாக சொல்கிறான் பிச்சு. கதை முடிவில் கொஞ்ச நாட்களாக அவனால் கண்டடையப்படாத முகம் மீண்டும் தென்பட்டு அவனை பார்த்து சிரிக்கிறது. அருகே இருக்கும் சாயத் தொழிற்சாலை பற்றிய விவரணைகள் வருகின்றன. அதன் நெடியோடு பிச்சு வாழப் பழகிவிட்டான். காலைகளில் சிவப்பும் பச்சையுமாக சாக்கடையில் ஓடும். அதில் வெண்ணிற நுரைகளாக சோப்பு நுரை கலப்பதை தேர்ந்த ஓவியனாக புட்டா ரசிக்கிறான். அந்த நெடி அவனுக்கு பழகவில்லை. நிறம் வெளிறி சாயம் போவதை ஏற்க முடியாமல் தானோ வெளியேறி சென்ற புட்டா திரும்பவில்லை?

புட்டாவை முதன் முதலாக சந்தித்த நினைவுக்குப் பிறகு கதையில் சிகப்பி அறிமுகமாகிறது. அதற்கு வைக்க உணவில்லை என தேடும் போது சுவரோரம் செத்து கிடக்கும் பல்லியை எறும்புகள் இழுத்து போவதை பார்க்கிறான் பிச்சு. புட்டா ஒரு நாள் வெட்டப்படும் மரத்திலிருந்து தப்பி வந்த இந்த நொண்டிக்கிளியை தூக்கி வருகிறான். சிகப்பி என்று பெயரிட்டு வளர்க்கிறான். கிழிந்த ஜப்பான் விசிறி போலுள்ளது அதன் சிறகு. புட்டாவின் ஏற்பாட்டில் பிச்சு, தாள்கள் அதன் உட்பொருளால் அல்லாது வெறும் எடையாக கணக்கிடப்படும் பழைய பேப்பர் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். நொண்டிகிளியை அருகில் வைத்துக்கொண்டு குரூரமான நாய்களின் சித்திரங்களை வரைகிறான் புட்டா. மீண்டும் செத்துப்போன பல்லியின் சித்திரம் வருகிறது. அங்கிருந்து வெளியேறி செல்லும் புட்டா அவ்வப்போது கடிதங்கள் எழுதுகிறான், ஆனால் அவனை பற்றி வேறெந்த தகவலும் இல்லை. பிச்சு அவனாகவே நாடகம் எழுதி அரங்கேற்றி கவனம் பெறுகிறான். அப்போதும் கூட அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எக்ஸ்ட்ரா சப்ளை செய்யும் கண்ணுசாமி ஒரு படத்தில் நடிக்க அவனிடம் இருக்கும் நொண்டி கிளியை கேட்கிறான். அவனை கிண்டல் செய்கிறான். மறுத்து அறைக்கு திரும்புகிறான். பழைய பேப்பர் கட்டுக்கள் சரிந்து அதன் அடியில் நசுங்கி கிடக்கிறது நொண்டிக்கிளி.

இந்தக் கதை கலைஞர்களின் சமரசத்தையும், கலையையும், நசிவையும் சொல்கிறது. நாடகம் எழுதியவன் பழைய பேப்பர் வியாபாரம் செய்கிறான். ஏற்கனவே அங்கீகாரமற்று நொண்டி கிடக்கும் அவனுடைய கலையை அவனுடைய வயிற்று பிழைப்புக்காக வேறு வழியின்றி அவன் தேர்ந்த  அன்றாட வாழ்வே கொன்றுவிடுகிறது. நொண்டியாக இருந்தாலும் அந்த கிளி அவனோடு உயிருடன் இருந்தது. புட்டா சுதாரித்து கொண்டவன். அவன் இந்த சுழலில் இருந்து தப்பித்து செல்கிறான். கிளிகள் வெறிநாய்களால் மீண்டும் மீண்டும் வேட்டையாட படுகின்றன. கலைஞன் கிளியை பலிகொடுத்து தான் நாய்களின் பசியாற்ற வேண்டும் என்பது எழுதபடாத விதி போலும். ஒரு கலைஞனின் நசிவை இத்தனை நுட்பமாகவும் இருண்மையோடும் சொன்ன கதைகள் வெகு சிலவே. நொண்டிக் கிளி, வெறி நாய், செத்து கிடக்கும் பல்லி, அந்தரத்தில் தெரியும் கோமாளி உருவம், சாயப் பட்டறையின் கழிவு நீர் சாக்கடை, பழைய பேப்பர் வியாபாரம் என கதையின் எல்லா விவரணைகளும் குறியீடுகளாகவும் உருவகங்களாகவும் கச்சிதமாக ஒத்திசைந்து உன்னதமான கதையை உயிர்ப்பிக்கின்றது. சித்திரங்களின் அளைதலில் அல்ல வண்ணதாசனின் உலகம் அவைகளின் ஒத்திசைவில் இருக்கிறது.

‘முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்’ கதை கலைஞனின் துயரை சொல்லும் மற்றொரு சிறந்த கதை. ‘புலிக் கலைஞனோடு’ ஒப்பிடத்தக்க களம் கொண்டது. சென்ற காலத்தில் கோலோச்சிய ஒரு மாயஜால வித்தைகாரனும் அவருடைய உதவியாளர் கதிரேசனும் கல்லூரி பேராசிரியர் சங்கரநாராயணிடம் ஒரு நிகழ்ச்சி செய்வதற்கு வாய்ப்பு கோரி வருகிறார்கள். அருகே வேடிக்கை பார்க்கும் அவருடைய மகன் சுந்தரை கவர்வதற்கு தாவி குதித்து தனக்கு தெரிந்த வித்தையை மூச்சு வாங்கி வியர்த்தபடி செய்து காட்டுகிறார். அவனுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. சங்கர நாராயணன் நாசூக்காக மறுக்கிறார். தற்காலத்து கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  ரசனைகள் மாறிப்போய்விட்டது என்பதை பொறுமையாக உணர்த்த முயல்கிறார். காலனியில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு ஷோ ஏற்பாடு செய்தால் கூட போதுமென்கிறார். இருவரையும் நோக்கி சாப்பிட்டு செல்கிறீர்களா என கேட்கிறார் சங்கரநாராயணன். வீட்டுக்குள் நுழைந்த அதே தோரணையோடு அங்கிருந்து இருவரும் கிளம்பி செல்கிறார்கள்.

காலாவதியாதல் எனும் துயரம். அதுவும் ஒரு கலைஞன் காலத்தால் மிதித்து செல்லப்படும் வேதனை இக்கதையில் பதிவாகிறது. அந்த மாயஜாலக்காரரின் கிளியும் நொண்டி கொண்டிருக்கிறது ஆனால் உயிருடன் இருக்கிறது. ஒருவேளை அவன் அங்கே சாப்பிட்டு சென்றிருந்தால் அது இறந்திருக்க கூடும்.

நண்பர் சர்வோத்தமன் சடகோபன்  “காட்சி ஊடக கொந்தளிப்புக்குப் பின்பான காலகட்டத்தில் சிறுகதைகள் சவால் மிகுந்த புதிய எல்லையை தொட்டிருக்கிறது” என்றார். இன்றைய சிறுகதைகள் ‘துல்லியமான சித்தரிப்புகளில் அதிகமும் காட்சி ஊடகத்தின் தாக்கத்தால் செலவிடுகின்றன என்பதே அவருடைய வாதம். சிறுகதைகள் அனைத்தும் குறும்படத்தை மனதில் கொண்டு எழுதப் படுகின்றனவோ? எனும் ஐயத்தை எழுப்பினார். ஆகவே சிறுகதைகள் காட்சிகளை வெறுமே விவரிப்பதை காட்டிலும் மொழிரீதியாக படிமங்களால் செறிந்த கவிதையை நெருங்குவதே அதன் எதிர்கால பாதையாய் இருக்கும் என்றார். கல்பற்றா நாராயணனின் சுமித்ரா புதினத்தை முன்வைத்து ஜெயமோகனும் இதே கருத்தை வலியுறுத்தினார். நாவலும் சிறுகதைகளும் கவிஞனின் ஊடகமாக திகழும் காலமிது. காட்சி ஊடக புரட்சிக்கு முன்பான காலகட்டம் துவங்கி இன்று வரை வண்ணதாசன் எழுதி கொண்டிருக்கிறார். சித்தரிப்புகளை கவித்துவ எல்லைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய இன்றைய சவால்களை அன்றே எதிர்கொண்டு கணிசமாக நிகழ்த்தி காட்டிய வெகு சில எழுத்தாளர்களில் வண்ணதாசனும் ஒருவர். அவர் ஒரு ஓவியரும் கூட. அவருள் துலங்கும் ஓவியரும் கவிஞரும் முயங்கும் தளங்களில் அவருடைய புனைவுலகம் வலுவாக வெளிப்படுகின்றன.

வண்ணதாசன் பவுத்த அய்யனாருடனான நேர்காணலில் வாழ்க்கையை பற்றி சொன்னதை கவனிக்கலாம். “வாழ்க்கைக்கென்ன, அதுபாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதை சொல்லி கிடையவே கிடையாது. சில சமயம் மேகம் மாதிரி, மேக நிழல் மாதிரி, வெயில் மாதிரி கண்ணுக்கு முன்னால் அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இலந்தம் புதர் வழியாக அது சரசரவென்று யாரையும் கொத்தாமல் யாரையும் பார்க்காமல் எங்கே போகும் என்று தெரியவில்லை. மீன் வியாபாரியைச் சுற்றிச் சுற்றி வருகிற சாம்பல் பூனை மாதிரி நம்முடைய கால் பக்கமே நின்று மீசை முடிகள் அசையாமல் மியாவுகிறது. குளிக்கவும், மீன் பிடிக்கவும் வந்த பையன்கள் ரெண்டு பேரையும் மிதக்கச் செய்யும் கல்வெட்டாங்குழி மாதிரி பால்கவர் அல்லது செய்தித்தாள் விநியோகிக்கிற நம் கண் முன்னே பள்ளத்தில் கிடக்கிறது. பாபநாசம் ஏகபொதிகை உச்சிக்குள் கற்சிலையாக கருத்த புன்னகையைப் புல்லுக்கும் பனிக்கும் விசிறுகிறது. தலைப்பிள்ளை பேறுகாலம் ஆன அம்மை மாதிரி முலைப்பால் வாசனையுடன் நம்மைப் பக்கத்தில் போட்டுத் தட்டிக் கொடுக்கிறது. லாடங் கட்டுவதற்குக் கயிறு கட்டிச் சாய்த்திருக்கிற காளையின் வெதுவெதுப்பான சாணி மாதிரி வட்டுவட்டாக அடுக்கு விட்டுக் குமிகிறது. தொடர் வண்டிகளின் அரக்குச் சிவப்புக் கூவலுடன் கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து சூடான தண்டவாளங்களில் வண்ணத்துப்பூச்சியாக ஆரஞ்சு முத்தமிடுகிறது. நரிக்குறவக் கிழவனைப் போலப் பரிசுத்தமாகச் சிரிக்கிறது. ஒரு கரும்பலகையின் உடல் முழுவதும் என் கேலிச் சித்திரத்தை வரைகிறது.”

வாழ்வை பற்றி சொல்வதற்கு கூட வண்ணத்துபூச்சி, காளைசாணி, ரயில் வண்டி போதுமானதாய் இருக்கிறது அவருக்கு.

வண்ணதாசனின் கதையில் வரும் பெண்கள் துயரங்களை சகிப்பவர்கள், மன்னிப்பவர்கள். வண்ணதாசனின் பெண்கள் தனித்த கட்டுரைக்கான பொருள். தாகமாய் இருப்பவர்கள் கதையில் வரும் பொன்னம்மை, சரசு, வேறு வேறு அணில்களில் வரும் நாச்சா, நிலை கதையின் கோமு என ஒவ்வொருவரும் ஆழமான மாந்தர்கள். தீராநதி நேர்காணலில் அவருடைய பெண்களின் துயர் பற்றிய கேள்விக்கு “பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.” என்கிறார்.

அவருடைய ‘போய்க்கொண்டிருப்பவள்’ ஒருவகையில் எல்லா பெண்களையும் பற்றிய கதை என கூறலாம். பெண்களின் துயர் கண்டு துயருறும் ஆண் இதிலும் வருகிறான். ‘போர்த்தி கொள்பவர்கள்’ மற்றொரு உதாரணம். துன்பத்திலும் சிறு சிறு இன்பங்களை சுவைக்கும் பெண்களாலும் பெண்களின் இடர்களை கண்டு கையறு நிலையில் தவிக்கும் ஆண்களாலும் ஆனது வண்ணதாசனின் உலகம்.

அவருடைய ‘ஒட்டுதல்’ கைம்பெண்ணின் துயரை சொல்லும் ஒரு எளிய கதை. கணவனை இழந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் மகேஸ்வரிக்கு அவளுடைய தோழி செஞ்சு லட்சுமி அரக்கு நிற ஸ்டிக்கர் போட்டை ஒட்டுகிறாள். அவ்வடையாளத்தை மீட்டு கொள்வதன் ஊடாக வாழ்வுடன் மீண்டும் இயைந்து கொள்கிறாள். இக்கதையில் ஆட்டோவில் செஞ்சு லட்சுமியும் மகேஸ்வரியும் அலுவலகம் விரையும்போது அவர்களை ஆட்டோவில் ஏற்றிவிடும் செஞ்சு லட்சுமியின் கணவர் அவர்கள் இருவரை காட்டிலும் வெகுவாக உணர்ச்சி வயபடுகிறார். இச்சிறு நிகழ்வு இக்கதையை வேறோர் தளத்திற்கு கொணர்கிறது. கணவன் ராம்பிரசாத் பற்றிய நினைவுகளில் அவன் தேன் உண்பதைப் பற்றி எண்ணுகிறாள். கடந்தகாலத்தின், இனிமையின் நினைவுகளாக பொருள்படுகிறது. வண்ணதாசன் அசிரத்தையாக கதைகளுக்குள் சித்திரங்களை உலாவ விடுவதில்லை.

வண்ணதாசனின் ‘சிநேகிதிகள்’ அவர் கடந்த பத்தாண்டுகளுக்குள் எழுதிய மிக முக்கியமான கதைகளில் ஒன்று. அறுபது வயதான சேது, அவருடைய இளம் சிநேகிதி அனுஷா. ஓடும் ஆற்றை காண்கிறான் சேது. நீர் பரப்பில் விழும் மழை வண்ணதாசனின் பல கதைகளில் திரும்ப திரும்ப வரும் உருவகம். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் இணைக்கும் படியாக அவருடைய கதைகளில் இவ்வுருவகம் பயன்படுத்தபடுகிறது. ‘பெய்தலும் ஓய்தலும்’ மற்றொரு உதாரணம். பின்னர் அனுஷாவின் இயல்புகளை, அவள் எடுத்துகொள்ளும் உரிமைகளை  பற்றி கூறப்படுகிறது. சேதுவுக்கு இச்சிறு இச்சிறு இயல்பான செயல்கள் கூட ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆற்றில் குளித்து முறுக்கிய உடையுடன் எழுந்து வருகிறார்கள் நாச்சியாரும் கிரிஷ்ணம்மாவும். நாச்சியாரை அடையாளம் காண்கிறான் சேது. அவளை பற்றிய நினைவுகளில், குறிப்பாக அவள் அணியும் விதவிதமான ரவிக்கைகள் பற்றியும் உள்பாடியை பற்றியும் எண்ணுகிறான். நாச்சியாருக்கும் அத்தெருவாசிகளுக்குமான உறவு விவரிக்கபடுகிறது. சேதுவின் நண்பன் சுந்தரம், இயல்பாக பேசவும் பழக கூடியவன், அவன் அம்மாவுடன் நாச்சியார் இணக்கமாக இருப்பதாக சொல்லபடுகிறது. ‘முத்தையா சம்சாரம் தானே’ என்று சேது கேட்பதும் ‘நாச்சியாரு’ என அவள் சொல்வதும் இருவரும் ஒருவரையொருவர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டிவிடுகிறது.

கிருஷ்ணம்மாள் அறிமுகமாகிறாள். சேது ‘கிருஷ்ணம்மாளை’ பெயருடன் நினைவு கூர்கிறான். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக பேசியதற்காக மகிழ்கிறாள்.  நாச்சியார் கிருஷ்ணம்மாள் நட்பு கூறப்படுகிறது. கிருஷ்ணம்மாள் சுந்தரத்தின் மீது பசிலை பழம் வீசி எறிவது போல் விளையாட்டு காட்டி நசுக்குவதை நினைவு கூர்ந்தவுடன், சேது அனுஷாவை தேடுகிறான். அவள் அல்லவா இத்தனை ஆண்டுகளுக்கு பின் அவனுக்கு வாய்த்த சிநேகிதி.  ரவிக்கைக்காக நினைவு கூறப்பட்ட நாச்சியார் புகைபடத்திற்கு நிற்கும் போது அதை அணியவில்லை. பிழியப்பட்ட உள்பாவடையில் உள்ள மணல் துகளை தட்டிவிட்டுவிட்டு அது மினுங்குகிறது என்கிறாள் அனுஷா. நீண்டகால சிநேகிதிகள் என அறிமுகபடுத்துகிறார் சேது. நாச்சியார் தயங்கியபடியே சுந்தரத்தை பற்றி விசாரித்ததாக சொல்ல சொல்கிறாள். அவருக்கும் இவர் சிநேகிதி என்றதும் அவர்கள் விழி நீர் சொரிவதோடு கதை நிறைவுறுகிறது.

இத்தனை விரிவாக இந்த கதையை மீள சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. வண்ணதாசன் கதைகள் செவ்வியல் காப்பிய கவிஞர்களின் கவிதையை போன்று வைப்புமுறை பற்றிய கவனத்துடன் வாசிக்கப்பட வேண்டும். நினைவடுக்குகளின், நிகழ்வுகளின், சித்திரங்களின் வைப்புமுறை அவசியமான இடைவெளிகளை மவுனத்தால் நிரப்புகிறது. மவுனங்களின் வழியாகவே இக்கதை நமக்கு கடத்தபடுகிறது. அனுஷாவிற்கும் சேதுவிற்குமான உறவு, நாச்சியார் – கிருஷ்ணம்மாள் உறவு, அவர்களுக்கும் சுந்தரத்திற்குமான உறவு, சேதுவுக்கு இவர்களுடன் இருந்த உறவு, சேதுவுக்கும் சுந்தரத்திற்குமான உறவு என எல்லாமும் இக்கதையில் கூறப்பட்டுள்ளன.

ஒரு இளம் படைப்பாளியாக வண்ணதாசனை வாசிப்பது எனக்கு இருவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகிறது. முதலாவதாக வண்ணதாசனின் கதைகள் வாசிக்க வாசிக்க புலன்களும் மனமும் கூர்மையடைகின்றன. புறத்தையும் அகத்தையும் விழிப்புடன் அவதானிக்க சொல்கின்றன. எழுத்தாளனுக்கு தேவையான முதன்மை தகுதிகளில் இதுவும் ஒன்று. இரண்டாவதாக மொழியும் அதன் தொனியும். எங்கோ ஓர் வனாந்தரத்தில் ஓடும் குளிர்ந்த சுனை நீரில் கால் நனைத்தபடி, தனது அந்தரங்களை நம்பிக்கையுடனும் பரிவுடனும் பகிரும் தோழனின் குரல் அவருடைய புனைவுகளில் ஒலிப்பதாக தோன்றும். வண்ணதாசனை தொடர்ந்து வாசிக்கும்போது அவருடைய மொழி நம்மையும் தொற்றி ஏறிகொள்கிறது. இளம் எழுத்தாளன் பல்வேறு மொழிநடைகளை தனக்குள் உலாத்த அனுமதிக்கிறான். அவற்றின் கலவையிலிருந்து அவனுக்கே உரிய புதிய மொழிநடை அவன் குரலை தாங்கி எழுந்து வருகிறது.

கதைகளின் ஊடே அவரளிக்கும் சில கூர்மையான சித்திரங்கள் சில நேரங்களில் கதையை மீறி நம் கவனத்தில் நிறைந்து விடுகிறது. ‘எல்லாவற்றையும் நோட்டம் விடுகிறது போல தலையை திருப்பி திருப்பிச் சுற்றுகிற டேபிள் பேன்’, ‘கிழிக்கும்போது சன்னமாக மிருதுவாகச் சரசரவென்று தட்டுப்படுகிற தினசரிக் காலெண்டர் தாள் மாதிரி, இந்த சிரிப்பு இந்தக் குரல் பழசை எல்லாம் கிழித்து அப்புறப்படுத்துகிற மாதிரி இருந்தது’(ஒட்டுதல்).’ போன்ற பல சித்தரிப்புகளை உதாரணம் கொள்ளலாம்.

இருவகையான கதை போக்குகள் உண்டென நம்புகிறேன், ஆர்வெல் போல உலகபொதுமை அல்லது மானுட விழுமியங்களை விசாரணைக்கு உட்படுத்தும் எல்லோருக்குமான படைப்புகள் ஒரு எல்லை எனில் மறு எல்லையில் திருநெல்வேலி சன்னதி தெருவின் 21 ஆம் நம்பர் வீட்டில் வசிக்கும் ஒருவர் மட்டுமே எழுத சாத்தியமிக்க, அவர் காணும் உலகின் நிறங்களையும் அதன் சிறு சிறு தேசல்களையும், அடர்வுகளையும் புனைவது மறு எல்லை.  எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தில் “ஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன். ஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா?” என்றெழுதியது வண்ணதாசனின் படைப்புலகுக்கு கச்சிதமாக பொருந்தும்.

வண்ணதாசன் மனிதர்களின் இயல்புகளையும் அதன் மெல்லிய பிறழ்வுகளையும் மீண்டு வரும் இயல்புநிலையையும் எவ்வித புகாருமின்றி இயல்பான கரிசனத்தோடு கதையாக்குகிறார். வேறு வேறு அணில்கள் கதையில் பிணக்கில் வேலை செய்யும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டு, அவளே மனமுவந்து ஒருநாள் மட்டும் வாடிக்கையாக வரவேண்டியவள் வராமல் போனதால் பெருக்கிவிட்டு போகிறாள்(வேறு வேறு அணில்கள்). பளு என்றொரு கதை. வலிப்பு நோய்காரனை கட்டிக்கொண்டு வீடு திரும்பியவளின் சகோதரனிடம் வேலையில்லாதவன் ஆசிரியர் வேலையை யாசிக்கிறான், அவளையும் ஏற்க தயாராக இருக்கிறான். சுமைகளின் இயல்பு வேறானவை எடையல்ல அதன் பிரச்சனை.

வண்ணதாசன் புனைவுகள் உருவாகும் தருணங்களை பற்றி சொல்கிறார். அவை அன்றாடத்தின் புதிர் தன்மையிலிருந்து கிளைக்கின்றன. வெவ்வேறு ஊர்களில் பலதரப்பட்ட மனிதர்களை கண்டிருக்கிறார்.

“நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செட்டிகுறிச்சி மீண்டும் அம்பாசமுத்திரம் என இருபத்தாறு வருடங்கள். எல்லா ஊர்களிலும் எங்களுக்கு மனிதர்கள் கிடைத்தார்கள். அப்படி மனிதனும், மனுஷியும் கிடைத்ததால் எனக்குக் கதைகளும், கவிதைகளும் கிடைத்தன. எல்லா ஊர் வரைபடத்திலும் ஒரு சுடலைமாடன் கோயில் தெரு உண்டாகிவிடும்படி நாங்களும் நடமாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊரிலும் அதிகபட்சம் நான்கு, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள். அடுத்த ஊரில் காலை வைக்கையில் முந்தின ஊர் மறக்க முடியாததாகி இருக்கும்.”

“அநேகமாக அனுபவங்களிலிருந்து, அனுபவங்கள் உண்டாக்குகிற நெகிழ்ச்சியிலிருந்து சில சமயம் காயங்களிலிருந்து இன்னும் சில, `அட… என்ன வெளிச்சம்’ என்றும், `எவ்வளவு இருட்டு’ என்றும் ஒரு மினுக்கட்டாம்பூச்சி பறக்கிற நிலையிலிருந்து எல்லாம் உருவாகத் துவங்குகிறது என்று சொல்லலாமோ. சமையல்கட்டில் தவறிவிடுகிற டம்ளரின் ஓசையிலிருந்து உங்களுக்குப் பாடத் தோன்றும் எனில், கரண்ட் போய் கரண்ட் வந்தவுடன், தன்னையறியாமல் விளையாட்டுக் குழந்தைகள் `ஹோ’ என்று கத்துகிற கத்தலிலிருந்து எனக்கு எழுதத் தோன்றும்.”

தாஸ்தாயேவ்ஸ்கி பற்றி சொல்லும்போது, அவர் இருளை அதிகமாக எழுதினாலும் அவர் காட்டியது ஒளியைத்தான் என்பார்கள். வண்ணதாசன் அதிகமாக ஒளியை எழுதினாலும் அவர் இருளில் இருந்து பதுங்கிகொள்வதில்லை. வண்ணதாசன் சின்ன விஷயங்களின் கடவுள் என நுணுக்கமான சித்திரங்களுக்காக போற்றபடுகிறார். இது முழு உண்மையல்ல. அன்றாடத்தின் வழியே அவர் பெரிய அசைவுகளை தோட முயல்கிறார் என்றே தோன்றுகிறது. மனித இயல்புகளின் வேடிக்கை விநோதங்களை, பூச்சுக்களை நோக்கியே அவருடைய கதைகள் விரிகின்றன.  சரவணன் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கடிதம் வண்ணதாசனின் படைப்புலகத்தின் அடிநாதத்தை தொட்டு காட்டுகிறது. “உலகம் முழுவதும் மனிதர்கள் வேறுபடலாம் அவர்களின் அகம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றது.” வண்ணதாசன் அந்த பிரபஞ்ச மானுட அகத்தை தொடவே தன் படைப்புகள் மூலம் முயல்கிறார். வண்ணதாசன் சிறுகதைகள் வாழ்வின் சிக்கல்கள் பிணக்குகள் பினைந்ததன் ஊடாக வெட்டப்படும் ஒரு துண்டு. அவர் அந்த துண்டின் முனைகளை சமம் செய்வதில்லை. ஆகவே அவை பிற நவீனத்துவ ஆக்கங்கள் போல் கச்சிதமான செவ்வகங்களாகவோ சதுரங்களாகவோ இருப்பதில்லை. அதன் ஓரங்கள்  சில இடங்களில் பிசிரடித்து துருத்தி கொண்டிருக்கும். அதுவே இக்கதைகளின் அழகியல்.

“அந்த ரெட்டி இருக்கானே, செத்துப் போயிட்டான் பாவம், அவன் வந்து கதர் போட்டுண்டு வருவான் இருந்தாலும் அதெல்லாம் அந்த சூழல்ல இருக்கறத்தினாலே நாம சொல்றத்துலே, அது அவங்களுக்கு ஒரு பாராட்டு (tribute) மாதிரியும் ஆயிடும் மானசீகமா உண்மையா அவுங்களுக்கு நாம அஞ்சலி செலுத்தின மாதிரியும் ஆயுடுத்து. பாக்கப்போனா நான் எழுதுற கதையெல்லாம்..அதுல பெரிய திறமைசாலி கிடையாது..அவுங்களுக்கு ஒரு அஞ்சலி, ஏதோ ஒரு விதத்துல நம்ப வந்து ‘ஐ சே ஐ ரிமம்பர் யூ’ன்னு சொல்றது.’

அசோகமித்திரன் சொல்வனம் நேர்காணலில் கூறியது இது. வண்ணதாசன் தீராநதி நேர்காணலில் நூல்கள் சமர்ப்பணம் செய்யப்படுவதை பற்றி இவ்வாறு கூறுகிறார்   “இருபது, இருபத்தொன்று எல்லாம் போதாது. நூற்றுக்கணக்கில் `இன்னார்க்கு சமர்ப்பணம்’ என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன்  மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் கி.ராஜநாராயணன் மாமா கணவதி அத்தை, கணபதி அண்ணன், ராமச்சந்திரன், சமயவேல், நம்பிராஜன் இவர்களுக்கெல்லாம், சமர்ப்பணத்தைவிட, அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்.”

ஒருவகையில் வண்ணதாசனும் தாமறிந்த மனிதர்களின், தான் கண்ட வாழ்க்கையின் கூற்றுகளை பதிவாக்கி அம்மனிதர்களின் நினைவுகளை கவுரவம் செய்கிறார் என்றே தோன்றுகிறது.

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகன்யாகுமரி கடிதங்கள்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59