[வண்ணதாசன் புனைவுலகில் பெண்களின் சித்திரங்கள் : எம் ஏ சுசீலா]
வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மகிழும் பாரதியைப்போல இவரது கதை வெளியிலும் கூடத் தாக்கத்தைச் செலுத்துவது கல்யாண்ஜி என்கிற கவிஞனின் மனமே . எதிர்ப்படும் சின்னச்சின்னப்பொருளும் மனிதர்களின் மிக இயல்பான தோற்றங்களும் பாவனைகளும் கூடப் படைப்பாளியைப் பெரும்பாலான தருணங்களில் அதீதமான பரவசக்கிளர்ச்சிக்கு உள்ளாக்கி விடுவதைக் காண முடிவது அது பற்றியே.. கலைத் தன்மையோடு கூடிய நுட்பமான சமூகவிமரிசனங்கள் அவரது எழுத்துக்களின் இடையே அரிதாகக் காணக்கிடைத்தாலும் மேற்குறித்த பொதுப் போக்கே அவரது படைப்புக்களின் தனித்துவமாக இருப்பதால் பெண்கள் சார்ந்த வண்ணதாசனின் பார்வையையும் அந்தச் சட்டகத்துக்குள் உட்படுத்திக் காண்பதே பொருத்தமாக அமையக்கூடும்.
வண்ணதாசனின் சிறுகதைகளைக் குறுக்கு வெட்டாகப்பார்த்து மதிப்பிடும்போது பெண்ணை அணுகும் அவரது பார்வையில் அழகுணர்வு சார்ந்ததும், பித்தாக்குவதுமான பரவச நிலையே மேலோங்கி இருப்பதையும், ’தனுமை’ போன்ற ஒரு சில ஆக்கங்கள் தவிர்த்த பெரும்பாலான தருணங்களில் காமஉணர்வோடு கலவாததாக அது இருப்பதையும் பார்க்க முடிகிறது.’’ஒரு புதிய பெண்ணை பெயர் தெரியாத அடையாளம் தெரியாத நிலையில் அவள் பெண்ணாயிருக்கிற ஒன்றுக்காகவே பார்த்தேன்’’என்று ‘புளிப்புக்கனிகள்’ சிறுகதையின் ஆண்பாத்திரம் கூறுவதைப் பெண்சார்ந்த படைப்பாளியின் பொது நோக்காகவே கொள்ளமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அவரது பல கதைகளும் அமைந்திருக்கின்றன..
‘’தூக்கத்தில் உப்பி மேலும் அழகானகண்களுடன்’’…’’விடிகாலை மாதிரி அடங்கின வெளிச்சத்துடன்..’’ இருக்கும் பெண்குழந்தை [’காற்றின் அனுமதி’], முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இரண்டு மகன்களுக்குத் தாயான சிநேகிதி அலமேலுநரசய்யாவின் ‘’அலட்டலில்லாத சிட்டுக்குருவி மாதிரி முகம்’’ [சிநேகிதியும் சிநேகிதர்களும்], தன் கைக்குழந்தையைக் கொஞ்சுவதற்காகப் போட்டி போட்டபடி ‘சின்னக்குட்டீ’ என்று ஓடி வரும் பெரிய சிறிய கொழுந்தியாள்களின் முக பாவனைகள் [தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்] , ஊரே ’ஒரு மாதிரி’ பேசும் அம்புஜத்தம்மாளின் ‘பவுன் மாதிரி நிறம்..அவளைச் சுற்றி இருக்கும் அழகான மர்மம்’’ [சொன்ன விதமும் கேட்டவிதமும்], எல்லோரும் தவறாகப் பேசும் பெண்ணின் ‘’மயிரிழையில் பாசி கோர்த்தாற்போலொரு நீர்முத்து..மஞ்சள் மினுமினுக்கிற உடல்…ஈரச்சேலை மோதுகிற நேர்த்தியான பாதங்கள்’’[புளிப்புக்கனிகள்], மணலிலிருந்து ஒற்றைக்கொலுசை எடுத்து..அதன் இரு முனைகளையும் பிடித்து ஆரமாக்கி சூரியனுக்குச் சூடி ..பரவசத்தால் அமிழ்ந்து கிறங்கும் கண்களுடன், புடவையை விலக்கிப் பாதத்தின் மேல் கொலுசைப்படியவிடும் ஜோதியைக் குறித்து ’’வானமெங்கும் பரிதியின் ஜோதி’’யெனக் கற்பனையில் விரியும் சித்திரம்[அந்தப் பையனும் ஜோதியும் நானும்], குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த அழகும் இல்லையென்றாலும் ’’அக்கறையற்ற இயல்புக்கு என்று ஒரு சிறு அழகு உண்டே’’அதைக் கொண்டிருக்கும் ராஜியின் ‘’குகைக்குள் விளக்கேற்றியது மாதிரி…மாயம் நிறைந்த வெளிச்சம்’’ [அப்பால் ஆன] என…இந்த எல்லாவற்றிலும் கிளர்ச்சியான மனநிலையோடு பெண்ணின் அழகை ரசிக்கிற ஆண் பாத்திரங்களையே முன் வைக்கிறார் படைப்பாளி.
குச்சிபோல் மெலிந்திருக்கும் மனைவியும், தாட்டியான மதமதப்புக்கொண்ட டெய்சி வாத்திச்சியும் அவர்களோடு ஊடாடும் ஆண்களுக்கு உகப்பானவர்களாக இருப்பதில்லை. ’’ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புக்களை மீறி….. பாரமான உடலும் பெருந்தொடையும் பிதுங்கச் செல்லும்’’ பெண் [தனுமை] ஆணின் அளவுகோலுக்கேற்ற அழகு வாய்க்கப்பெறாதவளாக அவனை அருவருப்படையச் செய்பவளாகவே காட்டப்படுகிறாள்.
வண்ணதாசனின் சிறுகதைகள் வீட்டு வாழ்வையே பெரிதும் மையப்படுத்துவதால் சாணி மெழுகிக் கோலமிட்டு…,அடுப்படியின் கரிப்புகையில் இருந்தபடி தோசை வார்த்துக் காப்பி போட்டு, துணி துவைத்து மடித்து, கீரை ஆய்ந்து குடும்ப வேலைகளுக்குள் தங்களை ஆழ்த்திக்கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையில் இருக்கும் பெண்களே அவரது ஆக்கங்களில் மிகுதியாகக் காணக் கிடைப்பவர்கள். அவர்கள் அன்பு செலுத்துவதற்கும் அன்பு செலுத்தப்படுவதற்கும் உரியவர்களாக மட்டுமே இருப்பவர்கள், அவ்வாறே சித்தரிக்கப்படுபவர்கள்.
’’விரித்துப்படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் கைலியையோ போர்த்திக்கொண்டு கணவன் தூங்குவதைப்பார்த்து மனம் கசிந்து எப்படியாவது இந்த மாதமாவது ஒரு போர்வை வாங்கி விட வேண்டும் என்று துடித்தபடி, கொசுக்களும் குளிரும் தொட முடியாத அவனது தூக்கத்துக்கான கற்பனையில் இருக்கும் மனைவி [போர்வை], மனைவியின் தலைவலிக்கு மருந்து வாங்கப்போய் விட்டு அதை முற்றாக மறந்து போய் நண்பனின் மகனுக்கு மருந்து வாங்கிக்கொடுத்து விட்டு வரும் கணவனிடம் தன் வலி குறித்தோ மருந்து குறித்தோ ஏதும் கேட்காமல் அவனை அன்போடு உணவுக்கு அழைக்கும் மனைவி [‘அன்பின் வழியது’], வீட்டின் வறுமையைக் குறை சொல்லாமல் பலசரக்குக்கடன் வசூலிக்கவரும் நபரிடம் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசும் மனைவி [‘அந்தந்த தினங்கள்’] என இவ்வாறான வகைமாதிரிகளே வண்ணதாசனின் புனைவுலகில் மிகுதியும் தென்படுபவர்கள்.
நகைக்கடையில் மகளோடு பேசி மனைவியை அலட்சியம் செய்யும் ஒரு கணவனை ‘’’கணவனும் ஆண்பிள்ளைதானே, சரிதான் எல்லாம் தெரியும் என்பது போல அவளை அலட்சியம் செய்கிறான்’’என்று வரும் குறிப்பும்[‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’], ’’இந்தச்செல்லமான பிரியமானசிரிப்பு குழந்தை பிறந்த பிறகு அவளுக்கு நிறையவே வருகிறது, கிட்டத்தட்ட இதே பிரியமும் சந்தோஷமுமான முகம் அவளுக்கு அம்மாவீடு போகும்போதெல்லாம் வரும்’’என்று கணவன் நினைப்பதாக இடம் பெறும் வரிகளும்[’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’] ஆணின் மரபார்ந்த பார்வையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வண்ணதாசன் முற்பட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுபவை. ஆணிலிருந்து தாழ்ந்தவள் பெண் என்ற மரபு ரீதியான போக்கை முன் வைப்பதைப் படைப்பாளி தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் வழி புரிந்தாலும் …‘’அவனுக்குத் தான் இல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’’ என்றும் [போர்வை], முன்னாளில் கணவன் நேசித்த பெண்ணோடு அவனுக்குத் திருமணம் ஆகாமல் போனதே என்றும் [விசாலம்] சிந்திக்கிற எல்லைவரை கணவன் மீதான அன்பை அதீதமான முறையில் அவர்கள் வெளிப்படுத்தும்போது –யதார்த்தச்சித்தரிப்பு என்ற நிலையையும் மீறி அவ்வாறான மரபார்ந்த தொனி அந்தக்கதைகளுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. .
‘’அம்மாவைப்பற்றி நினைக்கும்போது முருகேசனுக்கு அப்பாவை நினைக்காமல் தீராது. அப்பாவின் அழகுக்கு அம்மா பொருத்தமே இல்லை, அழகுக்கு மாத்திரமில்லை, சுபாவத்துக்கும். . ’படிப்புக்கும் கூட;;என்று எண்ணும் மகனின் பார்வையும் கூட [’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] பெண் சார்ந்த பாலின வேறுபாட்டுச் சிந்தனையாகவே அமைந்து போகிறது. .
இளம் வயதில் காதல் போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அண்ணனாக பாவித்துக் கடிதம் எழுதிக்கொண்ட ஒருவனைத் திருமணமாகிப் பல ஆண்டுகள் சென்று சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் உள்ளறையிலிருந்து கூட வெளிப்படாத மனத்தடையோடு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பெண் [’தற்காத்தல்’], தான் சம்பாதிக்கும் வருவாயில் மட்டுமே குடும்பம் நடந்தாலும், கை கால் இழுத்துக்கொண்ட கணவனின் நெஞ்சளவு புகைப்படத்தைக்கொடுத்து அவனை முழுமையாக வரையச்சொல்லி ‘’என் கூட அது நிக்க நிக்கதான் பலம்’’ என்று அவனைத் தன்னோடு இணைத்துப் படம் போட்டுத் தரச்சொல்லும் கரகாட்டப்பெண்ணின் சார்பு நிலை [’போட்டோ’], அரட்டையடித்துக்கொண்டிருக்கும் அக்கம்பக்கத்துப் பெண்கள் அலுவலகத்திலிருந்து திரும்பும் தன் கணவனின் சைக்கிளுக்கு வழி விட்டு ஒதுங்கி நகர்வதைத் தன் கணவனுக்குத் தரப்படும் மரியாதையாக ஏற்றுப்பெருமை கொள்ளும் மனைவி [’அவனுடையநதி அவளுடைய ஓடை’] ஆகிய இயல்பான இந்த வாழ்க்கைச் சித்திரங்களுக்குள் உறைந்திருக்கும் மரபுசார் மதிப்பீடுகளையும், கருத்தியல்களையும் வண்ணதாசன் வலிந்து முன்னிறுத்த முயல்வதாகக் கூற முடியாதென்றபோதும் கதைப் போக்கில் ஓர் ஆண் முன்னிறுத்த விரும்பும் பெண்ணின் பிம்பங்களாக மட்டுமே அவை வெளிப்பட்டு விடுவதை மறுப்பதற்கில்லை.
திருமணம் ஆகாமலோ…திருமணம் தட்டிப்போகும் நிலையிலோ இருக்கும் பெண்ணை ’’. அக்கா வயதுக்கு வந்து ஆறு வருஷத்துக்கு மேல் ஆச்சே, அவளால்…வீட்டுக்குள்ளேயே எப்படிப் பூத்துக்கொண்டு வர முடிகிறது இவ்வளவு அருமையானவளுக்கு ஏன் கலியாணத்துக்கு வேளை வரவில்லை’’’ என்று இரக்கத்துக்குரியவளாகக் காட்டுவதும், பெண் காத்திருப்பது திருமணத்துக்காக, , ஆண் காத்திருப்பது அவன் பெறவிருக்கும் வேலையின் பொருட்டு என்னும் வேறுபாட்டைப் பாத்திரங்களின் வழி முன்னிறுத்துவதும் வண்ணதாசன் கதைகளில் பெண்சார்ந்த பார்வைகளாக [’விசாலம்’, ’பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக’] வெளிப்படும் மேலும் சில பழமைவாதக்கூறுகள்.
தனித்தன்மையும் தன்னியல்பும் கொண்டவர்களான ஒரு சில பெண்களும் வண்ணதாசனின் படைப்புக்களில் ஆங்காங்கே அரிதாக வெளிப்படத் தவறவில்லை.
பலநாள் இடைவெளிக்குப் பின் சந்திக்கும் நண்பனிடமோ, சிநேகிதியிடமோ, உறவினரிடமோ தன் வறுமை, துன்பம் ஆகியவற்றைப் புலம்பித் தள்ளிக் கழிவிரக்கம் தேடும் சராசரிப் பெண்களிலிருந்து மாறுபட்டுத் தம்மளவில் உறுதியாக அவற்றைப் பொறுத்துக்கொண்டோ , ஏற்கப்பழகிக்கொண்டோ அமைதியடைந்து விடும் பிடிவாத குணம் படைத்த பெண்களையும் அவரது கதை உலகில் எதிர்ப்பட முடிகிறது. ‘’அவளால் தன்னைப்பற்றிய நிர்ணயங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது…அத்துடன் ‘எதையும் கேட்காதே’என்று நிபந்தனையிடுகிற ஒரு முகம் சேர்ந்திருந்தது…. ஒரு சந்தோஷத்தை உடனடியாகத் தரித்துக்கொண்டுவிட அவளுக்கு முடிந்தது…வெற்று விசாரிப்புக்கு உட்பட்டதல்ல இந்த வாழ்க்கை என்ற கடினம் அவள் அசைவுகளில் இருந்தது’ என்று ’அப்பாலான’ கதையில் விவரிக்கப்பெறும் ராஜி, தான் வரைந்த ஆதிவாசிப்பெண்ணின் அரை நிர்வாணப்படத்தை வீட்டில் மாட்ட விரும்பும் கணவனிடம் ’’நல்லாத்தான் இருக்கு ஆனா இதையெல்லாம் வீட்டிலே மாட்டக்கூடாது அசிங்கம்’’ என்று ஒற்றை வார்த்தையில் மறுதலித்து விட்டுப் பிறகு ’’தாக்கி விட்டு நடமாடுகிறவளின் காரியமாக’’ இல்லாமல் ‘’சுபாவப்படி நடமாடிக்கொண்டிருந்த’’ அவன் மனைவி [’சமவெளி’] என சில தன்னுறுதி கொண்ட மாறுதலான பாத்திரங்கள் பெண் இயல்பின் பிடிவாதத்தோடு கூடிய தனித்தன்மையை வெளிப்படுத்தக்கூடியவை.
பெண் சார்ந்த ஆணின் கவர்ச்சி அவளது உடலழகு சார்ந்ததாகவே இருந்தாலும் பெண்ணின் மனம் அவனது மன அண்மையை நாடுவதாகவே இருக்கிறது. புகைப்படநிபுணனான விருத்தாவை விரும்பி தேவநேசனை மணக்கும் நெருக்கடிக்கு ஆட்பட்டு அந்தப் பொருந்தா மணஉறவில் விருத்தாவுடனான உறவையும் ஒருபக்கம் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் தன் உடலழகை வெளிப்படுத்தும் புகைப்படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு அவன் பரிசு பெறும்போது அதைப்பொறுக்காமல் அவன் தன் உடம்பை மட்டும் நேசிப்பதான வருத்தத்துடன் ’’என்படத்தைப்போடணும்னு தோணினா இதையா போடணும்…. பழகின பழக்கம்…… உசிரைப்பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப்பயலுக்காக நான் இருக்கிற இருப்பு இதெல்லாம் ஞாபகமில்லே. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்குபோல’’என்று [’போய்க்கொண்டிருப்பவள். ’] அன்னம் ஜூடிக்கு ஏற்படும் வருத்தம் இந்தப் பின்னணியிலானதே.
அன்னம் ஜூடியைப் போலவே கணநேர சபலத்துக்கு ஆட்பட்டுப் பொருந்தா மண உறவுக்கு ஆட்படும் புஜ்ஜியின் மன மாற்றத்தையும், அந்த உறவிலிருந்தான அவளது வெளிநடப்பையும் பெண்ணுக்கே உரிய தனித்துவ உணர்வான அவளது தாய்மை உணர்வே சாத்தியமாக்குகிறது என்பதைப் பதிவுசெய்கிறது ‘ஜன்னல்’ சிறுகதை. கணவனின் பல குறைபாடுகளை சகித்தபடி அவனோடு வாழப்பழகி விட்டிருந்தபோதும் நிறைமாதக்கருவோடு இருக்கும் ஆடு ஒன்று வேலி தாண்டித் தழை மேய்வதற்காகச் செல்லும்போது மிகச்சரியாக அதன் வயிற்றில் குறிவைத்து அவன் தாக்கும் குரூரச்செயல் கர்ப்பிணியான அவளுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் ஊட்ட அந்த வாழ்விலிருந்து வெளிநடப்பு செய்ய முடிவெடுத்து விடுகிறாள் அவள்; தனித்துவத்தோடு கூடிய துணிச்சலோடு அவள் எடுக்கும் முடிவைப் பாராட்ட முடிந்தாலும் அவள் நாடிச்செல்வது அச்சுத் தொழிலில் உடன் பணி புரிந்த சங்கரய்யா என்னும் இன்னொரு நல்ல நண்பனின் துணையையும் சார்பையும் தேடியே என்று கதை முற்றுப்பெறுவது ஏமாற்றத்தையே ஊட்டுகிறது. .
வீட்டை உலகமெனக்கொண்டு வாழும் பெண்களாலும் அந்த எல்லையைத் தாண்டித் தங்கள் அன்பை விஸ்தரிக்கவும் …அதற்கான உரிமையை எடுத்துக்கொள்ளவும் முடியும் என்பதைக் காட்டும் ’வெள்ளம்’, பெண்சித்தரிப்பு சார்ந்த வண்ணதாசன் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. ஆற்றில் கட்டற்று ஓடும் வெள்ளத்தை…, . ஊரே கூடி வேடிக்கை பார்த்து மகிழும் அந்தக்காட்சியை மகளோடு ரசிக்கிறான் ஒரு தந்தை அவளோ தன் தாயை அழைத்து வந்து அவன் அதைக்காட்டியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ‘சதா வீட்டு வேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும் பனியிலும் மலையடிவாரத்திலும் அருவிக்கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று அந்தக்கணவனும் எண்ணாமலில்லை. அலுவலக வேலைப்பணிகளின் இடையே அது முற்றிலும் மறந்து போக அவன் வீடு திரும்பும்போது வெள்ளத்தால் வீடிழந்த ஒரு குடும்பத்துக்கு அடைக்கலம் தந்தபடி அவர்களின் குழந்தை நிம்மதியாய் உறங்குவதைத் தன் மகளின் தலையை வருடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி.
‘’பெரியதெரு நடுத்தெரு வேம்படித்தெரு பூரா வெள்ளக்காடாம்…வீட்டுக்குள்ளே தண்ணியாம். . தெரிஞ்சவங்களோ தெரியாதவங்களோ நம்மளால வேற என்ன செய்யமுடியும், அந்தப்பச்சப்பிள்ளையாவது படுத்துக்கிடட்டும்னு கூட்டியாந்தேன்’’என்று அவள் சொல்ல…. . ’’வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்க வேண்டுமா’’ என்ற கணவனின் மன ஓட்டத்தோடு கதை முற்றுப்பெறுகிறது. வரையறையற்ற அன்பு கொண்டவளாக மட்டுமன்றித் தன்னால் முடிந்ததைச் செயலாக்கும் திட்பம் கொண்டவளாகவும் பெண்ணை முன்னிலைப்படுத்தும் காட்சிச் சித்திரம் இது.
எழுத்தின் வழியாகவும் நேரடியாகவும் வண்ணதாசனை அறிந்திருக்கும் எவராலுமே அவர் மரபுகளைத் தூக்கிப்பிடிப்பவரென்றோ அவற்றை நியாயப்படுத்துபவரென்றோ சொல்லிவிட முடியாது. அந்த நிலையிலும் கூட அவ்வாறான பார்வையே அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறதென்றால் அவர் எழுதத் தொடங்கிய ‘60களிலிருந்து இப்போது எழுதி வரும் இன்றைய காலகட்டம் வரை பெண் சார்ந்த ஆணின் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே அவர் அறிந்ததும், அவர் சார்ந்ததுமான ஆண் உலகின் அடிப்படையில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். அவை பதிவுகள் மட்டுமேயன்றி எந்த ஒன்றையும் நியாயப்படுத்தவோ விமரிசிக்கவோ அவர் முயற்சிக்கவில்லை. அவர் காணவும் எதிர்ப்படவும் நேர்ந்த வாழ்க்கைமுறையின் துணையோடு பெண்சார்ந்த ஆண்களின் கண்ணோட்டத்தை முன் வைக்க மட்டுமே அவர் முயன்றிருக்கிறார். உள்ளார்ந்த மனச்சாட்சியோடு அந்தப்படைப்புக்களை அணுகும்போது பெண் சார்ந்த ஆணின் நோக்கிலும் அவனுக்காகவே தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெண்ணின் மனப்போக்கிலும் இன்னும் மாற்றம் விளையவில்லை என்ற புரிதலுக்கும் அந்தநிலையிலிருந்து இரு பாலாரும் மேலெழுந்து செல்வதற்கும் அந்தக் கதைகள் உத்வேகமளிக்கக்கூடும். அதற்காகவே பெண்ணியச்சிந்தனையாளர்கள் வண்ணதாசனுக்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு