மோட்டெருமை

1

இனிய ஜெயம்,

பிராமணர் என்றதுமே பசுதான் நினைவில் எழுகிறது. ஆண்டாள் வீட்டில் எருமையைக் கண்டதும் ஏனோ தெரியவில்லை ஒரே குதூகலமாக இருக்கிறது. அந்த எருமை வெறுமே கன்றின் நினைவு எழுந்ததற்கே பாலை சொரிகிறது.

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

கடலூர் சீனு

*

அன்புள்ள சீனு,

இதே உருவகம் கம்பராமாயணத்திலும் உள்ளது. எருமை வரால்மீன் முட்ட கன்று என்று நினைத்து வீடுவரை பால் சுரக்கிறது. சடையப்பரின் கொடைமடத்திற்கான உவமை இது. வராலுக்கு பால் தேவையில்லை. இருந்தும் எருமை இரங்குகிறது. ஏனென்றால் அது தேவை கருதி எழும் இரக்கம் அல்ல. எருமையின் இயல்பால் ஊறும் கனிவு.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று

வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்

அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்

உடையான் சடையப்பன் ஊர்

இந்தப்படிமம் அதற்கு முன்னரே பேச்சுவழக்கிலோ பாவழக்கிலோ இருந்திருக்கலாம். இதில் எருமை சொல்லப்படுவதற்கான காரணம் பால்சுரப்பதில் பசு மிக நுண்ணுணர்வும் கூச்சமும் கொண்டது, எருமை அப்படி அல்ல என்பதுதான். அது ஒரு சுரணையின்மைதான். ஆனால் இரங்குவதிலும் கனிவதிலும் அச்சுரணையின்மை ஒரு பெருநிலை. ஆகவேதான் இவ்வுவமையில் எருமை அத்தனை உவகையை அளிக்கிறது.

இன்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிக்குச் செல்லும்வழியில் யாரோ மேய்வதற்காகக் கொண்டு கட்டிய எருமையின் பாலை கமுகுப்பாளை கோட்டிய தொன்னையில் கறந்து சுடச்சுடக் குடித்துவிட்டுச் சென்ற நாட்களை. எருமைபற்றிய நிறைய உணர்ச்சிகரமான நினைவுகள் என்னில் உண்டு. காளி என ஒரு சிறுகதை எழுதி அச்ச்சில் வராமல் தொலைந்துபோய்விட்டது

அஜிதனின் குறும்படமாகிய காப்பனில் அனாதையாகி அலையும் காப்பன் எருமையில் அன்னையை கண்டுகொள்கிறான். ஒரு மன்றாட்டாக எருமையை, இருளை அவன் வருடிக்கொண்டே இருக்கும் காட்சியும் எருமை பால்துளிக்கும் காட்சியும் எனக்கு மிகப்பிடித்த சினிமாக்கணங்கள். அவன் எருமையை அன்னைபோல அணைத்துக்கொண்டு சொக்கிக்கிடக்கும் காட்சி அதன் உச்சம். அந்தத் தருணத்தின் இசையும் அழகானது

ஜெ

 

 

முந்தைய கட்டுரைபெருங்கனவு – நந்தகுமார்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56