பெருங்கனவு – நந்தகுமார்

 

unnamed1

இரவு மிக நீளமாக நீண்டு கொண்டிருந்தது. நாய்களின் ஊளை. கண்களிடுக்கி படுக்கையில் கிடந்தேன். கருத்த அந்த நாயின் வலுத்த ஊளையும் உறுமலும். வானம் பச்சை வெளியாகத் தகிக்கக் கண்டேன். பச்சை பச்சை எங்கும் நிதானமின்றி வெறித்து உற்று நோக்கும் பச்சைக் கண்கள். விஷ்ணுபுரம் மிக நீண்டு உன்மத்தமாய், வெறுமையாய், மகிழ்வாய், எழுச்சியாய், அலையாய், துளியாய், கடலாய், சூனியமாய், ஏதுமற்ற வெற்றிடமாய், காலங்களின்றி காலாதீதமாய் மூப்பனின் உடலைக் காண்கிறேன். அவன் என்ன? மகா தர்மமாய், அப்பனும் அம்மையுமாய், சூனியத்தின் புள்ளியாய், அனாதியற்ற வளியாய், காலங்களின் துடிப்பாய், கசங்கிய மோனப்பரப்பாய், சிதலமின்றி தூய வெண் ஒளியாய், சங்கீதங்களின் மௌனத்தின் ஒற்றை சொல்லாய், திமிறும் பரப்புகளின் அடங்கிய காலடிச்சுவடாய், தெளிவின்றி புதிர் கிளப்பும் மர்ம மிருகத்தின் புன்னகையாய், திகிலடைய வைக்கும்மூடு பனி இருளாய் புரண்டு படுத்துக் கொள்கிறேன். காலம் ஆம் காலம் யாருக்கும் தாட்சண்யம் காட்டாத காலம் புதைகுழியாய் அமிழ்த்தி இருத்திக் கொள்ளும் பேரிருப்பு. திடுமென்று அந்த ஒற்றை சொல் எழுந்து மிதந்திருந்தேன்.

கனவு கனவு. இல்லை இல்லை இது நிஜம் எனக்கு நெருக்கமான என்னுடைய நிஜம். உனக்கு கனவாக இருக்கலாம். சாத்தியமில்லா வெட்ட வெளியில் அள்ளி வீசப்படுகின்ற பயமும் துடிப்பும் உற்சாகமும் அடி வயிற்றில் புரண்டெழும் அமிலம் போல. மிக அந்தரத்தில் நமக்கான நிலம் அங்கு நாம் மட்டும் நம்முடையது மட்டும் தனியான நாம் தனியனான நான்கள்.

உங்களின் விஷ்ணுபுரம் சவட்டித் தேய்த்து அலைக்கழித்து பதில்களேதுமில்லா பிரம்மாண்டமான அலைப்பரப்பில் கடலுடன் கரையத்துடிக்கும் இல்லை கரைய மறுக்கும் இல்லை ஏங்கி கரையில் காத்து இருக்கும் பித்தின் பேரதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாது. இன்னும் அந்த சோனா நதிக்கரையில் காத்திருக்கலாமோ என்று தோன்றியது. மிருக நயினியிடம் கேட்கலாம். இல்லை அந்த நாயிடமே கேட்கலாமா? மகத்தான கனவுகள் கனவுகளைப் போலவே தொடக்கமும் முடிவுமில்லாது காலங்களுக்குள் அடங்காது வெளியின் தூய பரப்பில் மிதந்தலைகிறது. அதில் ஒரு கனவாக இந்த விஷ்ணுபுரத்தை எடுத்துக் கொள்ளலாமா. இல்லை இது ஒற்றைக் கனவில்லையா? கனவுகளின் சூனிய வெளியின் துளித்துமியோ? படிக்கும் போதெல்லாம் காணாமல் போய் விடுகிறேன். ஹரிததுங்காவின் சிகர நுனியில், வராக பிருஷ்டத்தின் இடைவெளி மணலில், கோபுரச் சிலைகளின் நகைப்பில், சிரிப்பில், ஆதங்கத்தில், கோபத்தில், பொறுமையில், உன்மத்தத்தில், அலைக்கழிப்பில், சோகத்தில், வானுயரத்துடிக்கும் விஷ்ணுபுரத்தின் சூரியன் எத்தனை சூரியன்கள் உதிக்கின்றன. இது கற்பனை தான் என்று அடிக்கடி சமாதானம் செய்து கொள்கிறேன். திரும்ப அந்த மகாசமுத்திரத்தில் மெல்ல மூச்சடக்கி அமிழ்த்துக் கொள்கிறேன். துளி மெல்ல தொலைந்து துளியே இல்லாது கடலாகிய பெரும் பரப்பாய் காண்கின்ற பெரும் கற்பனையிலிருந்து மீண்டு வருவதற்கு மனது வராது திரும்ப திரும்ப கனவு காண்கின்ற ஒரு நிலையினை அடைந்து விடுகிறேன்.

ஆனால் இத்தனை பெரிய நாவல், நேர்க்கோடில்லா கதையமைப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள், தர்க்கங்கள் எளிதில் படித்து விட முடியாது என்றெல்லாம் நிறைய நண்பர்கள் சொன்னார்கள். நிச்சயமில்லை. இது எளிதில் படித்துணர முடிந்த நாவல்தான். ஆனால் காலம் முழுக்க அந்த கருத்த நாய் பின் தொடரும். அதற்கு சாத்தியமுள்ளவர்கள் நிச்சயம் இந்த வெறுமையினுள் விழுங்கப்படலாம். திரும்பி வர வழியில்லை. ஒரு வேளை வழி இருக்கலாம். தெரியவில்லை.

காலத்தின் பிரம்மாண்ட நுனியில் காலாதீதமான மூப்பன் விஷ்ணு. மஹாதர்ம நிலையின் பேருரு. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சொந்த ஊரில் ஒருதடவை ஒரே ஒருதடவை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். திருவட்டார் கோவிலில் சின்ன வயதில் 15 வயதிருக்குமென்று நினைக்கிறேன். மீண்டும் அதை நினைவு கூர்கிறேன். இருள் பரப்பில் ஒளி மிதந்து கொண்டிருக்கும் கருவறை. 22 அடிப் படுத்த சிலை. பெரிய மனிதன் மோனமாய் அசைவின்றி அசைவிருப்பது போலவும் சிரிப்பு குமிழ்ந்து வழிந்திருக்கும். ஆனால் சிரிப்பில்லை சுண்டுகளில். மூன்று கதவுகள் வழி பயந்து நடுனடுங்கி நின்றிருந்தேன். அந்த பிரம்மாண்டம் ஒருவித அமானுஷ்யத்தோற்றம். பயம் வந்து சிறு நீர் முட்டிக் கொண்டிருந்தது. அப்படியும் பார்க்க வேண்டும் என்ற வசீகரம். மிக உயரத்தில் இருந்து குழிவான பாழைத் திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றுமே. அது போல.

அந்த ஒற்றை சொல் பிறந்த நகைப்பை எண்ணிக் கொண்டேன். ஆதிகேசவப்பெருமாள் கோவில். அதற்குப்பிறகு உங்களின் திருமுகப்பு சிறுகதையில் அந்த கருமேனியானைப் பார்த்து காளி எழுச்சி கொள்ளும் வார்த்தைகள். இவந்தான் தெய்வம். எங்களின் தெய்வம் கருமையின் மொத்த ரூபமாய். மொத்த பிரபஞ்சத்தின் கருமையின் பிறப்பிடமாய் கருத்த உருவம். அப்பொழுதுதான் தெரிந்தது. 23 வருடங்கள் ஊரிலிருந்தும் இந்த பெரும் பிரவாகத்தின் சிறு துளியைக் கூட உண்டு ருசிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று. உண்மையில் தெரியவில்லை. சொல்லித்தரவும் ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் மூலம்தான் அந்த பெரும் இருப்பாம் கருமை வெளியை உணர்ந்து பார்க்கும் சூட்சுமத்தைப் பெற்றேன்.

இன்று உங்களின் வழி நினைவு கூர்கையில் ஒரு ஒழுங்கில்லாத் திரவம் மெல்ல சிதறித் சிதறி உருவம் கொள்வது போல இந்த விஷ்ணுபுரம் அந்த ஆதிகேசவப்பெருமாளின் மலைத்த உருவம் வழி என்னருகாமையில் மெல்ல உருவெடுத்து கருவெளிப்பரப்பாய் நிறைக்கிறது. தொன்மம் என்பது என்ன? குறியீடா, காலத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பரப்பா? காலாதீதமில்லாத பாழ் வெளியா? வெறும் நம்பிக்கையா? காலத்தை சுருக்கி வைத்துக் கொள்ளும் முறைமையா? சாகாது கிடக்கும் உயிர் வெளியா? சாசுவதமான அலைப்பரப்பா? கேள்விகளும் பதிலுமில்லா கேள்விகளா? பதில்களா?, திட்டமிடப்படாத சூட்சுமத்தின் புள்ளியா? என்னவென்று தெரியவில்லை.

இந்த விஷ்ணுபுரம் எடுத்தாளும் அனைத்து விஷயங்களும் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பிதுக்கி வெளித்தள்ளி சதுரங்கத்தின் காய்கள் போல மெல்ல நகர்ந்து உருண்டு தோற்கடித்து காய்களில்லா பக்கங்களிலும் பாய்ந்து ஒன்றுமில்லாது நகைத்து சுடுகாட்டு சித்தனின் வெறிப்பான நகைப்பாகிறது.

பிங்கலன், அஜிதன், பவதத்தர், பாவனன், யோகவிரதர், சிற்பி, நரோபா எல்லோரையும் துரத்தும் காலனாகிய மரணத்தின் கருத்த நாய். எல்லோரும் தாகம் தாகம் என்று இறக்கையில். ஆம் தாகம் அந்த பச்சை வெளியின் தாகம். சொல்ல முடியாத சொல்லில் அடங்காத தாகம். அந்த எண்ணற்ற தாகங்களின் வலுத்த வெற்றுப்பரப்பு இல்லை பச்சைக்காடு, இல்லை காய்ந்த இலையுதிர் நகரம்.

சட்டியும் நெருப்பும் போயாச்சு

சூளை மண் மட்டும் மிச்சமாச்சு

எட்டியும் வேம்பும் இனிப்பாச்சு

எங்கும் ஆனந்த வெளியாச்சு

நஞ்சும் அமுதும் நிகராச்சு

நாலு திசையும் திறந்தாச்சு

பஞ்சும் நெருப்பும் தொட்டாச்சு

பற்றி எழுந்து நீறாச்சு

 

பாதம், கௌஸ்துகம், மணிமுடி [மூப்பனின் மூன்று பாகங்களாக]

DSC_0101

ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் சினிமா போல சோனா நதிகரையைத் தேடி, விஷ்ணுபுரத்தை தேடி செல்லும் இருவர் வழி ஆரம்பமாகிறது. சிற்பியும் காஷ்யபரும் என்றுதான் நினைக்கிறேன். சிற்பி அந்த சக்திபீடத்தை பச்சைக் கண்களின் உஷ்ணத்துடன் பார்க்கும் பாலை வெளியில் சக்திபீடம் உருவாகுகையில், மூப்பனின் பெரிய கட்டை விரலைத் தோண்டிப்பார்க்கிறான். உஷ்ணம் மேலெழுந்து நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. வெறும் தொல் நகரம், அப்படி ஒரு நகரமே இல்லை வெறும் நம்பிக்கைத்தான் என்று சொல்லிச் செல்கையில் .நகரம் விழிக்கிறது. ஆன்மிக நகரம். ஆம் ஆன்மிகம் தான் அதன் எல்லா முகங்களும் ஒரு சேர அமைந்திருக்கும் நகரம். வன்மம், பொறாமை, அதிகாரம், அரசியல், ஆட்சி, மக்கள், அறியாமை, வீழ்ச்சி, மனவெழுச்சி, தரிசனம் என்று எல்லாமே கலந்து விழிக்கும் நகரம்.

பிங்கலன் தன் சொந்த அனுபவத்தை தவிர எதையும் ஏறக முடியாது காமத்தில் விழுந்து உழல்கையில், சாருகேசிக்கு பிள்ளைப்பேறு அடைகின்ற பொழுது. அதை மட்டும் பிங்கலனால். தாங்க முடியவில்லை. தந்தைக்கும் மகனக்குமான உறவு சங்கர்ஷணன் வழி வருகையில். தந்தை ஏன் மகனை வெறுக்கிறான். மகன் என்பவன் அந்த தந்தையின் மேம்பட்ட பிம்பம்தானா? தந்தையின் தோல்வியின் இடைவெளிகளில் மகன் வெற்றியை ருசிக்கிறான். தாய் தான் விரும்பிய ஆண்மகனையே மகனாகாக் காண்கிறாள். அங்கு அந்த தந்தை தோல்வியுறும் தருணம் அவன் மகனை வெறுக்கிறான். அனிருத்தனை சங்கர்ஷணன் விரும்பவில்லையோ. அவன் இறப்பு கூட அவன் உள்ளூற விரும்பியது தானா? ஆனால் லட்சுமியின் முலைக்காம்புகளில் பால் பீறிடும் போது அந்த அன்னை மிருகத்தின் அணைக்க முடியாதீயில் பிங்கலன் மாட்டிக் கொள்ளும் பொழுது அனிருத்தா? அனிருத்தா? அந்த அன்னை பிள்ளை பெறும் நிகழ்வை சிலை முறுக்கி வடம் பிரிந்து பாழ் நோக்கி வீழ்வது போல அங்கு நீர் பெரிய கரிய கொப்புளமாய் தெரிவது போல சொல்லில் நிச்சயம் அடங்காது. அன்னையின் தீ என்பது அணைக்க முடியாதது. பின் தொடரும் நிழலின் குரலில் நாகம்மையிடம் அருணாச்சலம் கேட்பானே. அந்தங்க் குழந்தையை கொல்ல நினைத்தானெனில் அவன் கழுத்தைக் கடித்துக் கொன்று விடும் அன்னை. அனைத்திலும் மகத்தான ஒரு உயிர்ப்பிறவி

சங்கர்ஷணன் எனும் கவிஞன். கவிதைகள் பொய்யான உலகத்தைத்தான் படைக்கின்றானோ. பத்மபுராணம் எனும் பெரும் பொய்தான் இந்த காவியமா. திரிவிக்ரமரிடம் உளரும் போது படைப்பாளியின் நுட்பமான உளச்சிக்கல். கவிஞன் உலகில் உள்ள எதையும் விடவும் அற்புதமான ஒன்றிற்கு சொந்தக்காரன். ஆம் கவிதை நிகழும் போது மட்டும். கனவுகளின் சொற் சேர்க்கையாய் அந்த பத்மபுராணம் நிகழும் சபையில் சங்கர்ஷணனுக்கு வெறும் அபத்தமாக மாறுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

திருவடி லலிதாங்கையிடம் பித்தாகும் தூய காதல். அவளின் திருவடிகளில் உலகளந்தோனைக் கண்டு திருவடியாழ்வாராகிறான். நுணுக்கமான அவனின் கவிதைகள் பிரவாகமாக மாறிக்கலந்தடிக்கிறது. நெருப்பின் தந்திகளில் காற்று மீட்டும் பண்ணாக. அந்த சொற்பிரவாகமாய்த்துடிக்கும் பாடல் வெளி எளிதில் புரிந்து கொள்ள முடியாத இருந்தும் ஒரு ஒருமையில், காதலின் கட்டற்ற ஒளிச்சிதறலாய் துடித்துக் கொண்டிருந்தது. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை இருந்தும் முயற்சி செய்தேன்.

 

“ சதுப்பு வெளிக்காட்டில்

சிமிட்டும் ஒளி நீர்

நாத வெளியென

மடிந்து வானாகும்

மனப்பிரவாகம்

மேகத்தின் மீன்களாய்

கிடக்கும்

நிழல் சேற்றுப்பரப்பின்

புரியாத காவியம் இசைக்கும்

வெளி

உன் நடனம்

“சாகரத்திரச்சீலை

புன்னகைக்கும் பெருமுகம்

விண்ணலைகளின்

பிரிகோஷம்

பிரதிபலித்து

உன் விழி நாதம்

“இசைக்கும்

நடன வெளியில்

தொலைதூர மின்னற்சரம்

தரையிறங்கி

படர்ந்து வேரோடி

ஆழ்மண்ணில் கருவுற்று

வான் தொட்டு கிளை விரித்த கீதம்

“உன் நாதம்

அந்தியில்

சிமிட்டும்

விண்மீன் அச்சில்

புவிச்சக்கரம்

சுழலும் ஓலம்

வேக நதியின்

சுழலில்

உண்ணும்

ஒலிகளின் துயரம்

“உன் இசை

பாதாள நதி

இருள்களில்

குளிர்ந்து பீறிடும்

காற்றின் நடனச் சந்தம்

“உன் வெளி

நடனமிடும் காலம்

உன்னில் முளைத்த

காட்டின்

இலை நுனிகளை

வருடும் காற்றில்

எவர்

படித்த

சொற்கள் இவை

இப்படியே போய்க் கொண்டிருந்தது. அந்தக் கவிதைகள் அனுபவமின்றி ஆழ் குளத்தில் விழுந்து ஆழம் தொட்டு மூச்சிறைந்து கரை தேடி திணறி வெளி வந்திருந்தேன். கவிதைகளை சுருக்கி எனக்காக எழுதியும் எனக்குத்தெரிந்த மாதிரி வரைந்தும் வைத்துக் கொண்டேன். வெளிவர விரும்பாத பித்தின் மொழி அமிழ்த்திக் கொன்று விடும் போல இருந்தது.

சித்திரையின் கதை செந்தழல்க்கொற்றவையைக் காணுதல். கொற்றவை சித்திரையை அவள் குலத்தின் தலைவியாகச் சொல்லி அவளே கொன்றை வனத்தம்மனாக ஆகுதல். ஆரம்பத்தில் இருக்கும் மனிதர்கள் கதை முடிகையில் தொன்மமாக மாறி முடிவிலியில் இணைந்து கொள்கின்றனர். வைஜெயந்திக் குதிரைக்கு கூட விஷ்ணு புரத்தில் கோவில் இருக்கிறது. வீரன் சாவது சண்டாளிகையின் கண்கள். பிரசேனனின் கோபம். அவனும் காஸ்யபனுடன் உரையாடும் இடங்கள். மிக நுணுக்கமாக அமைகிறது. பின் கோபுரத்தின் புனர் லோகத்திலிருந்து விழுந்து சாகிறான். நரசிங்கரை நாக்கும் ஆண்குறியும் மட்டும் உள்ளவன் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் நித்தியமாக நிலைத்து விடுகின்றனர். சிற்பி கோவிலின் பாழடைந்த பகுதியினுள் நுழைகையில் வெள்ளாட்டுடன் புணருதல், சுயபோகம், ஓரினச்சேர்க்கை என்று எல்லா விதமான காம போகங்கள். மொத்தமாக சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களின் காமம் உளவியல் ரீதியாக சமூகத்தை அவர்களும் ஒதுக்குகிறார்களோ. உங்களால் இயலாத முடியாத எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம் என்று செய்யத்துடிக்கும் அவர்களின் காமம். சிற்பியைத் திட்டும் போது அதைத்தான் நினைத்துக் கொண்டேன் அதில் ஒருவருக்கு ரசகதலி என்று பெயர் வைத்திருந்தீர்கள். அது நம்மூரில் ஒரு பழத்தின் பெயரில்லையா? இறைவனுக்கு எப்பொழுதும் படைக்கபடும் பழம்.. அந்த கரிய குளத்தில் காற்று புகாத பிராண வாயு இல்லாத விஷக் குளம் அதன் பிம்பங்கள் வெறிக்கும் சிலைத் தோற்றங்கள். இறுதியில் பிரளயம் பிரளயம் என்ற திரிவிக்ரமரின் சொற்கள். காத்திருக்கும் காலன் நாயாய் பார்த்து நிற்கையில்.

“இருள் விளையாடும்

கரிய பூனைக்குட்டி

நான் மட்டுமே அறிவேன்

மெல்லிய அசைவு

என் மனம் பார்க்கிறது

இளமை குறும்பு பேதைமை

காற்றில் பரவி அதைச்சூழ்கிறது

என்மனம்

ஆனால்

விளையாட்டில்

ஒருகணம்

அது திரும்பும்போது

அனல் போன்ற கண்களைக் காண்கிறேன்

அது பிரமைதானா

என் கரங்கள்

புயல் பட்டமரத்தினை அறையும்

கொடிகளெனத் துடிக்கின்றன

அது வெறும் அச்சம்தானா?

காலமே உனக்கு வணக்கம்

வழிதவறிய

குழந்தையொன்று

பிஞ்சுக்கால் பின்ன அலைகிறது

அமுதக்கண்களில்

வான் நீலம் கரைகிறது

குழந்தை உனது பெயரென்ன?

பெயரிடப்படா குழந்தை அது!

உனது ஊரென்ன

மண்ணின் உப்பை அறியாதது அது

உன் தாய்?

தாயன்றி வேறேதும் அறியாதது

அனந்த கோடி அடையாளம் கொண்ட காலமே

நீ அன்னையாக வருக

காலமே உனக்கு வணக்கம்.

“கனவின் இருபுறமும் நிஜம் உள்ளது”

நான் தூங்குகிறேன் நீ கனவில் வந்து என்னை எழுப்புகிறாய்

“அறிதல் என்பது

ஒரு கணமே

அறிந்த பின் ஏதுமில்லை

“தர்க்கம் மட்டுமேயான தர்க்கம், தன்னையே உடைத்து விடும் தர்க்கம்”. அங்கிருந்துதான் தர்க்க ஞான சபையின் ஆரம்பம். சுடுகாட்டு சித்தனின் சொல். தர்க்கத்தின் குறுக்கு வெட்டாய் என்னில் அறைந்து கொண்டே இருந்தது. அஜிதன் பயந்தது அதைத்தான். சித்தன் அவனை பரிதாபமாகப் பார்த்தது. அஜிதன் உண்மையில் உணர்ந்தானா? இல்லையோ? அவனும் தண்ணீர் தண்ணீர் என்று தானே செத்தான். தன் மரணமே அவனை பாதித்தது. அந்த தாந்த்ரீக குருவின் மரணம வெறும் செய்திதான் அவனுக்கு. அவனும் அறிந்திருந்தான். நாய் துரத்த ஆரம்பித்தது. சந்திரகீர்த்தியின் ஞாயப் பேச்சுகளில் கெ.கெ.எம் வந்து போனார். அந்த அதிகார மயக்கம். இங்கு எதுவும் மாறப்போவதில்லை. பிராமணர்கள் சேர்ந்து பவத்தத்தரை கொல்வது. ஒவ்வொரு தர்க்கமும் அவர்களின் தத்துவம் கவிதையாகும் பொழுது வாதிட இயலாமல் தோற்பதை பவதத்தரைப் போலவே அஜிதனும் தோற்கடிக்கிறான். அதை அஜிதன் எங்கு உணர்கிறான். அங்காரகன் காட்டில் தான் யானை என்பதை உணர்ந்து பிளிறிக்கொண்டு வருகையில் அதை உணர்கிறானா?

“ஞானம் என்பது

எதனால் அறியப்படுகிறது

ஞானத்தினாலா

குசப்புல்லில் துளித்துளியாய்

நீர் மொண்டு

கடலை வற்ற வைப்பது.

மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின் தொடர்வது.

ஒவ்வொரு தர்ம தரிசனமாக நீங்கள் விளக்கியது. முக்கியமாக தாயைப் பின் தொடரும் குழந்தை. முலையுறந்தும் குழந்தை ஊட்டுகிறது. ஆயிரம் மடங்கு அமுதத்தை அன்னைக்கு [பக்தி தரிசனம்]. ஆயுர் வேதி கணதேவர் வரும் பகுதியில் நுணுக்கமாக DNA வைப் பற்றி விளக்கம் சொல்லியிருந்தீர்கள் [அப்படித்தான் நினைக்கிறேன்] கணதேவரின் வருகை அப்படியே ஆரோக்கிய நிகேதனத்தின் ஜீவன் மாஷாய் ஞாபகம் வந்தது. கோவிலின் நுட்பமான வடிவத்தையும் மனிதனின் உடல் உயிர் அமைப்பையும் இணைத்து வடிவமைத்திருந்தது.

பிராணமய கோசம்

மையம் [பார்த்தீவப் பரமாணு (DNA) [குண்டலினியில்]

அன்னமயகோசம்

மந்திரவடிவம்

மூலவிக்ரகம்

கருவறை

பிரகாரம்

மண்டபம்

விமானம்

ஆலயம்

யோகிகள் நெற்றி மையம் வழியாக, ஞானிகள் கண்கள் வழியாக, சான்றோர் நாசி வழியாக, பாமரர் வாய் வழியாக, பார்த்திவப் பரமாணு பிராணமாய் வெளியேறுதலைப் பற்றி விளக்கியிருந்தீர்கள்.

அஜிதனின் தர்க்கம் வெல்கிறது. பௌத்தத்தின் வழிமுறையும் தத்துவத்தையும் தர்க்கமாய் விளக்கியிருந்தீர்கள்.

நாம் காண்பதெல்லாம் உண்மையில் இருப்பதா? இல்லையா?

இதன் காரணம்

அந்த காரணம் ஒன்றா பலதா?

நம் வாழ்வு எந்த அர்த்தத்தில் இயங்குகிறது?

முடிவற்ற மாற்றத்தின் அகண்ட பிரவாகம் பிரபஞ்சம். அந்த பிரபஞ்சம் உருவாகக் காரணம் அதன் முந்தைய கணம் மட்டும் தான். எதுவும் நிலையாக நிறைவாக இல்லை. எல்லாமே தொடர்ச்சியான மாற்றம் மட்டுமே. ஆன்மா என்பது கூட நிலையான ஒன்றில்லை அது நிலையாக இருக்க வாய்ப்பில்லை நிலையான ஒன்றெனில் அது அழிந்த ஒன்று. உய்ர்த்தன்மையுடன் இருப்பது அனைத்தும் நிலையான தொடர்ச்சியான மாறுதலுக்குட்பட்டவை. பிரபஞ்ச மாயையின் காரணம் – ஐம்புலங்கள், நம்மை மையமாக நம்மக்கொண்டு பிரபஞ்சத்தை அளவிட முடியாது. இருந்தும் அளவையாக நாம் வகுத்த காலத்தைக் கொண்டே பிரபஞ்சத்தை அளவிட முடியும். அந்த காலத்தை சக்கரமாக வடிவமைப்பது. நேர்க்கோடாக இருக்க முடியாது. அப்படி இருந்தால். எல்லாம் வெறுமையில் முடிந்து எதற்கும் காரணங்களின்றி அமைந்து விடும். அது சக்கரம் போல தொடர்ச்சியான மாற்றத்தின் நிகழ்வாய் அமைகிறது.

ஐம்புலங்களினால் காட்சிவெளி தெரிகிறது. இல்லை ஐம்புலங்களுடன் மனம் இணைகியில் மட்டுமே நாம் பிரபஞ்சத்தை உணர்கிறோம். அந்த அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டு மொத்த மனமே மகா தர்மம். தர்மம் என்பது என்ன? அதுவும் தொடர்ச்சியான மாற்றம் அது நிலைத்த ஒன்று அல்ல. அந்த மகா தர்மத்தின் பிரதிபலிக்கும் பிம்பங்களாக மனங்கள் அதன் மூலம் பிரபஞ்ச மாயை. மாற்றங்களின் காட்சி வெளி முன் பின் நிகழ்கால அனுபவம் புலன் தன்மை [தனித்தன்மை] மூலம் நிர்ணயிக்கப்படுதல். மீன் கடலுக்குள் இருந்து கடல்தன்மையை அறிய முடியாத்து போல. அந்த மீனும் கடலினுள் இருப்பதால் அளக்க முடியாமையை சொல்லிச் செல்கிறது. அந்த மாயையின் முதிர்ந்த நிலையினை பிரம்மம் என்று வாதிடுகையில். அந்த காலச்சக்கரத்தின் மையமான மகாதர்மத்தோற்றத்தையும் அதன் ஒற்றை சொல்லாய் நிகழும் சுழற்சியும் உந்தியில் எழும் தாமரையும் பிரம்மனும் கலந்து வேறு வேறு தரிசனத்தில் மனம் ஆட்கொள்ளப்பட்டு பின் நிலமெல்லாம் வளர்ந்து நீலன் மூப்பனாய் படுத்த அகாலத் தோற்றம் மூன்று வாசல் வழி இருளில் பொதிந்து வைக்கப்பட்டு அசைவின்றி அசைகிறது.

மூர்க்கமாய் கருத்த நாய் அவன் கருவறை நிழலில் மெல்ல குமிழ்க்கண்களூடன் நாக்கு தொங்க நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். வேததத்தன் அந்த பிரளயத்திலிருந்து தப்பித்து விடுவான் என்று தோன்றியது. பாவனனை பாட்டியை நாய் குதறிப்போட்டிருந்தது. அந்த கருவறையினுள் பட்டர் அன்றும் பூஜை செய்வது. உடைந்த கண்ணாடிப்பரப்பின் வேறு வேறு பிம்பங்களாக நம் உருவமே தெரிகையில் வருகின்ற மிரட்சி.

“ஓளியோ இருளோ மகத்தானதல்ல

ஒளி என்பது பாதி பொய்

பிங்கலனின் தரிசனம் காமம் மூலம் கடவுளை அடைதல் ஓஷோவை ஒத்திருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் மனிதன் அந்த மகத்தான உன்னத உடலை அடைய முடியாதோ. காமத்திற்கு பின் துயரம் கொள்ளும் பிங்கலனின் முகம் வந்து போகிறது. அந்த குகையில் அந்த புலியின் தோற்றம் அட்பட்டு சீழ் படிந்த அதன் தோற்றம் அதன் பசி, சுவர் ஓவியங்கள் அந்த உன்னதமான நிர்வாணப் பெண் உடல் காமம் மனிதனால் முடியாது மனிதன் நிகழ்கின்ற இடம். அங்கு அவன் எதும் செய்ய இயலாது ஏதோ கண்ணியில் மாட்டப்பட்டு நிறைவுறாது மீண்டும் மீண்டும் ரத்தம் கசியத்துடித்து உவகை கொள்ளும். புரிந்து கொள்ள இயலாத வெறிப்பு சூழ்ந்து கொள்கிறது. காமத்தை நினைக்கும் பொழுதெல்லாம். நம் கட்டுப்பாட்டில் இல்லாத எதற்கோ யாரோ நிகழ்த்தும் லீலை [அபத்தம் அது லீலையா என்ன] என்று நினைக்கையில். அந்த லீலை எங்கு நிகழ்கிறது. அந்த குரூரியின் நுட்பமான நிகழ்த்தலில் பேய்களாய் மனம் சஞ்சாரிக்கும் ஆட்டம். திரும்பத்திரும்ப அகப்பட்டுக் கொள்ள விருப்பப்படும் இந்த காமம். அங்கு அந்த பேரின்பம் நிகழுமா தெரியவில்லை. இன்னும் முழுதாய் ஏதும் அனுபவிக்க வில்லை என்று மட்டும் தோன்றியது.

தனிமையும் காமமும் அச்சமும்.

“பிரம்மாண்டமான தன் உடல் மாறத்துடித்தது

வானாக மண்ணாக வளியாக ஒளியாக நீராக

எழுந்த மகா ஜோதியே

உனது யோனி வழி திறக்கட்டும்.

“காலம் என்பதே இல்லை

முன் பின் என்பதே இல்லை

பிரபஞ்சமே ஒரு சம்பவம்தான்

முக்கியமான சில சொற்கள் மிகுந்த மனக்கொந்தளிப்பைத் தந்தன.

“நான் கவிஞன் இந்த உலகில் உள்ள எதைவிடவும் மகத்தான ஒன்றிற்கு சொந்தக்காரன்”

“நெருப்பு பூமியின் மீது பற்றி வான் தொட சீறுகிறது”

“பேச்சு – நிழல்கள் ஆடும் மந்திரக்குளத்தில் நுழைவது போல”

”நீரில் நெழியும் தேங்காய் நெற்றுப் போல” [ஒரு பகுதி அமிழ்ந்த ரகசியமாய்]”

”கவிஞன் காலத்தை சொல்லால் அளப்பவன்”

“ஒரு வாரத்திற்கு மேல் தாங்கும் பாப பேதமேதுமில்லை”

“எண்ணங்கள் கனத்த ஈயக்குண்டுகள்”

“வெயிலின் ஆபாசம் அந்தரங்க உறுப்பை திறந்து போட்டபடி”

“பிரபஞ்சத்தையே கொட்டினாலும் நிரம்பாத பிலங்கள்”

“கண்மூடிப்படுத்திருக்கும் எத்தன்”

“மிருகம் கெஞ்சாது மன்றாடாது கடைசி வரைக்கும் எதிர்த்து நிற்கும்”

“நேர்மையற்ற மிருகம்தான் மனிதன்”

“ஒளி நோக்கி பறக்கும் வெண்புள் இளைப்பாற வந்தமர்ந்த கொம்பு” [தேவதேவனின் கவிதை போல]

“பன்னிரண்டு லிங்கங்கள் – மந்திரம் ஒன்றும் சொல்லத்தேவையில்லையப்பா”

“இரவில் முக்காடு போட்ட படி வந்தால் வாயுவே கட்டியம் கூறும்”

“காலமே மகாதர்மத்தின் ஆதிபிம்பம்”

“சங்கீதம் கூட மௌனத்திற்கு ஈடாகும்”

“மடிப்புத்தொட்டிலை தவறாக இழுத்து தூக்கியது போல”

“புழுதியே எங்கும் உள்ளது அது மௌனமாக காத்திருக்கிறது” [தேவதேவனின் கவிதை போல]

எண்ணற்ற படிமங்கள் நிறைய ஞாபகத்தில் இன்னும் வந்து சேரவில்லை. இறுதிப்பகுதியில் இடையன் மாதவன், பிரியை ஒரு சிறுகதைப் போலவே கடந்து செல்கிறது. அவள் ஏன் அவனைப் பார்க்கவில்லை. அவன் ஏன் காத்திருந்தான். அவளுக்கு நிச்சயம் தெரியும் அவன் வந்து காத்திருப்பான் என்று. ஒருவேளை அவன் நமக்காக வாளுடன் வந்து கூட்டி செல்வானோ என்று நினைத்திருப்பாளோ. அன்னைக்கும் மகளுக்குமிடையில் நடக்கும் மௌன சந்திப்புகள். புரிந்து கொள்ள இயலாத வாழ்வின் போக்குகள்.

இன்னும் அள்ளி விடலாம் என்றே தோன்றியது. முடியாது. விஸ்வரூப விஸ்ணுவின் கதாயுதத்தின் மீது கௌபீனம் காய்வதில் முடிகிறது. எல்லா நாடகங்களும்.

முடியாத பாடலாய் பாடல் கேட்டுக் கொண்டே இருந்தது. தவிர்க்க முடியவில்லை.

“எனது மரணம் மனிதர்கள் அறியாமலிருக்கட்டும்

எனது பிணத்தை கழுகுகள் காணாமலிருக்கட்டும்

தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்

இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறும்”

கரிய நாய் மெல்ல உறுமிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பசுமைத் தாண்டவமாடியது.

 

 =========================================

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
அடுத்த கட்டுரைமோட்டெருமை