கன்னியாகுமரி 3, -பெண்ணியம்

index

“கொற்றவை” மற்றும் “கன்னியாகுமரி” நூல்களுக்கு பெண்ணிய நோக்கில் வாசிப்பு சாத்தியமா? தேவையா? என்ற கேள்விகள் எழுகிறன.

“கொற்றவை” பெண்களின் கதை. பெண்மையின் பன்முகங்கள் புகைப்படங்களைப்போல தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் கதை நிகழ்வது தொன்மவெளியில். கதைமாந்தர்கள் பெண், தொன்மம், குறியீடு என்று பல தளங்களில் விரிகின்றார்கள். தவிர கதை காப்பியத்தழுவல். காப்பிய விழுமியங்களையும் கொள்கைகளையும் மறுக்கட்டமைப்புச் செய்து நவீன காப்பியமாகவே இயற்றப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய சமூக மதிப்பீடுகளை அதன் மேல் ஏற்றுவதால் என்ன பெறுவோம், அதை விட அப்படி ஒரு வாசிப்பில் என்ன இழப்போம் என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால் “கன்னியாகுமரி” நிகழ்காலச்சித்திரமாக எழுதப்பட்ட கதை. அது மைய்யத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண், அவள் அதை எப்படி அணுகுகிறாள் என்று பேசுகிறது. அவள் வாழும் சூழலின் குரூரத்தின்  சாரமாக ரவியின் பாத்திரத்தை வைக்கிறது. நடைமுறை நம்பிக்கைகளிலிருந்து சற்று மாறுபட்டவை என்ற வகையில் இந்நாவல் முன்வைக்கும் சமூக ஒழுக்கம் சார்ந்த கருத்துக்கள் விவாதிக்கப்படவேண்டியவை. இந்நாவலில் வரும் பெண்மையின், பெண்ணொழுக்கத்தின் கொள்கைகள் “கொற்றவை”யின் நீட்சியே. ஆக “கொற்றவை”யை விட  “கன்னியாகுமரி”யை பெண்ணிய நோக்கில் வாசித்தால் சில திறப்புகள் கிடைக்கலாம் என்றே தோன்றுகிறது.

“மற்றவர்களைப் பொருள் ரீதியாகவோ உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம் தான்” என்று விமலா ஓர் இடத்தில சொல்கிறாள். இது ஒரு வித தனிமனித கோட்பாடும் கூட, ஏனென்றால் இது தனிமனிதனின் உணர்ச்சிகளை பிரதானப்படுத்துகிறது. “உன்னை நான் காயப்படுத்தாத வரை என் கையை எங்கு வேண்டுமென்றாலும், எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் நீட்டுவேன், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்ற தனிமனித சுதந்திர அறைகூவலின் ஒரு வடிவம் தான் இது. இதில் இரண்டு சுதந்திரங்கள் அடங்கி இருக்கின்றன: கை நீட்டும் சுதந்திரம், தான் காயப்படாமல் இருக்கும் சுதந்திரம். இந்தவகை ஒழுக்கத்தை நோக்கியே இன்று நாம் – தமிழ் சமூகமும் சரி, உலகெங்கிலும் கூட – சென்றுகொண்டிருப்பது நிதர்சனம்.

ஆண்-பெண் உறவுகளை பொறுத்த வரை, கற்பு என்ற விழுமியம் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுவது அநீதி என்ற கருத்து கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மெய்ப்பற்றோடு இருப்பது அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்ல; உறவு கொள்ளுதல் என்பது அங்குள்ள அனைவரும் ஆர்வதோடும் மகிழ்ச்சியோடும் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் பட்சத்திலேயே நடக்கவேண்டும் (‘No means no’-வைத்தாண்டி ‘(Only) yes means yes’) போன்ற கருத்துக்கள் ஒழுக்கங்களை தீர்மானிக்கும் திசையில் நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாரும் யாரையும் மனதளவிலோ உடலளவிலோ காயப்படுத்தாத வரை திருமணத்திற்கு முன்னோ பின்னோ உறவு கொள்ளலாம், ஆனால் திருமண அமைப்பினுள் கூட, கட்டாயத்தால், சம்மதமின்றி நடக்கும் உறவு வன்புணர்ச்சி என்று இவ்வமைப்பு வகுக்கிறது. இந்த கருத்துக்கள் இன்று பெரும்பரப்பை பார்க்கையில் பேச்சளவோடு நிற்பது போல தெரிந்தாலும் அதை நோக்கித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்று எனக்கு படுகிறது.

இப்படிப்பட்ட சமூக அமைப்புகளின் சாதக-பாதகங்களை தொடர்ந்து விவாதிக்கலாம். ஒன்றை மட்டும் இங்கு முன்வைக்கிறேன் : தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட எந்த ஒழுக்கநெறிக்கும் அடித்தளம் என்பது அடுத்தவனை(ளை) தன்னைப்போலவே உணர்ச்சிகள் கொண்ட ஒரு மனிதனாக பார்ப்பது. அவனை மனிதனாக மதிப்பது. இதில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு மனிதசமத்துவத்திற்கான மிகப்பெரிய வாய்ப்புள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. மேலும், அடையாளங்களை களைந்து சுதந்திரமாவதற்கான சாத்தியம் இதில் உள்ளது. விமலாவின் பாத்திரத்தில் இதை காண முடிகிறது. இன்று உலகத்தில் முளைத்து வந்துள்ள பல கருத்தாக்கங்கள், பெண்ணியம் உட்பட, இந்த அடித்தளத்தின் மேலே இன்றும் நிர்ப்பதாக நான் நம்புகிறேன். விமலா கூறும் இந்த ஒழுக்கப்பார்வையும், பிரவீணா “நானும் கன்னி தானே” என்று கூறும் இடமும், அவ்விறு பெண்கள் அவர்களின் ஒழுங்குகளை அவர்களே நிர்னையித்துக்கொண்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது. திரைப்படமாக இருந்தால் விசிலடித்திருப்பேன்.

இந்தக்கதையின் முக்கியமான முடிச்சு, விமலா ஒரு கும்பலால் வன்புணரப்படுவதும், ரவி அங்கு இருந்தும் ஏதும் செய்யாமல் இருப்பதும், அந்த சம்பவத்தை அவள் கடந்து வளர்ந்து செல்வதும்.

மனித இனத்தில் வன்புணர்ச்சி என்பது பெரும்பாலும் புணர்ச்சியை சார்ந்தது அல்ல, வன்மத்தை சார்ந்ததாகவே உள்ளது. ஆணையோ பெண்ணையோ, அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை ஆட்கொள்வதில் அவர் மேல் ஆதிக்கத்தை அளிக்கிறது. அவ்வகை ஆதிக்கத்தை ருசிப்பவனே வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். ஆண் இன்னொரு ஆணை வன்புணர்வது அங்கு அவன் பெரியவன், தாட்டான் என்று நிரூபிக்க. ஆண் பெண்ணை வன்புணர்வது  அவளை வீழ்த்தி தன் ஆண்மையில் உவகையடைய. ஆண் மாற்றான் பெண்களை வன்புணர்வது மற்றோரு ஆணின் ஆண்மையை அவமானப்படுத்த. ஆம் வன்புணர்ச்சி அவமானத்துக்கான யுக்தி.

விமலாவுக்கு நடக்கும் சம்பவம் அவளை பலத்தளங்களில் அவமானப்படுத்துகிறது. அங்கு அவள் மனிதம், அவள் பெண்மை, அவள் காதல், அதன் அடிப்படையில் அவள்  தானாக முடிவெடுத்து ரவியுடன் அங்கு வந்தது, எதுவுமே ஒரு பொருட்டில்லை. சமூகம் அவளுக்கு வகுக்கும் கற்புநெறி அழிந்ததல்ல அங்கு நடந்தது. அவள் சுயத்தில் அடித்த அடி அது. ‘உன் மனிதத்தை நான் நிராகரிக்கிறேன், நீ வெறும் பெண். உன் பெண்மையை நான் நிராகரிக்கிறேன், நீ எனக்கு அடங்க வேண்டியவள். உன் காதலை நான் நிராகரிக்கிறேன், அது உன்னை காப்பாற்றி மீட்கவில்லை,’ என்னும் குரல் அது. அந்த அவலம் நடந்ததனாலேயே ரவி அவளை நிராகரிக்கிறேன். இந்த கடும் அவமானங்களைத் தாண்டித்தான் விமலா தன்னை மீட்டெடுக்கிறாள்.

விமலாவின் அப்பா அவளை பெண்ணாக பார்க்கவில்லை, வருங்கால மருத்துவராக மட்டுமே பார்க்கிறார் என்று அவள் உணரும் கணம் அவள் பார்வை மாறுகிறது. கற்பை உண்மையில் சமூகத்தில் யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று புரிந்து அந்த சம்பவத்தை கடக்க அவளுக்கு தைரியம் வருகிறது. அவள் கல்வி அளிக்கும் விடுதலை அவளுக்கு மீட்சி. இவ்வுலகத்து ரவிகளை கடந்து வெகுதூரம் செல்கிறாள். இது கதை.

விமலா சந்தித்த அவமானம் தனிமனித அவமானம் அல்ல, அவள்  பெண்ணாக பிறந்தததாலேயே அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம். பாண்டவர்கள் ஐவரும் பகடையாட்டத்தில் அடிமையானாலும் அவர்களில் எவருமே துகிலுரிக்கப்படவில்லை. தனிமனித அடிப்படையில் விமலா அவளுக்கு நேர்ந்த அவமானத்தை மீறிச்செல்கிறாள். அதற்கான திடம் அவளிடம் இருந்தது. அதுவே உசிதம் கூட.

ஆனால் அது தனிமனித விமலாவுக்கு நிகழ்ந்த ஒன்று அல்ல. அந்த இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அதை சந்தித்திருப்பாள். இது ‘systematic’-க்காக பெண்ணுக்கு எதிராக தொடுக்கப்படும் ஒரு வன்முறை யுக்தி. இதற்கான எதிர்ப்பு தனிமனித அளவில் மட்டும் இருந்தால் போதாது, சமூக அளவில் நிகழ்ந்ததாக வேண்டும்.

அதைத்தாண்டி, விமலாவின் விடுதலை அவளுக்கு அவள் பயின்ற கல்வி அளிக்கிறது. அவள் ஒரு மருத்துவராக அவளை வன்புணர்ந்தவனை எதிர்கொள்ளும் போது, அவன் அவளை சீண்ட முற்பட்டாலும், அவள் அவனை தான் பயின்ற கல்வியின், ஞானத்தின் மூலமாகவே அணுகுகிறாள். அந்த உரையாடலில் ஒரு நிமிடம் கூட அந்த பீடத்திலிருந்து அவள் விலகவில்லை. அது அவள் வெற்றி. என்றாலும், இந்த கல்வியோ அறிவுத்திறப்போ வன்புணர்வை சந்திக்கும் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அதற்கான சமூக, பொருளாதார சூழல் அவர்களுக்கு இல்லாமல் போகலாம்.

விமலா, ஒரு அசாத்திய பெண். அவள் ஒரு லட்சிய ஆளுமையும் கூட. வாழ்க்கையில் விமலாக்கள் உருவாக முடியும் என்பதை நான் சிறிதும் ஐய்யப்படவில்லை, ஆனால் எல்லோராலும் விமலாவாக முடியுமா? அதை எதிர்பார்ப்பது நியாயமா? பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை தன் மனவலிமையால் அவள் தாண்டி வந்தால் உண்டு, வேறு வழி இல்லை என்ற நிலையா? இதற்கான பதில்களை இலக்கியத்தில் தேடமுடியாது, தேடக்கூடாது. என்றாலும் வாசிப்பின் நீட்சியாக உருவான சில சிந்தனைகள் இவை.

——–

தன் அரவணைப்பில் உள்ள பெண் தாக்கப்படும்போது அவளை காப்பாற்றி அவளுடைய (மற்றும் தன்னுடைய) மானத்தை காப்பாற்றிக்கொள்வது ஆண்மைக்கு அழகு என்று நம்முடைய தந்தைமுறைமை சமூகம் ஆணுக்கு புகுட்டுகிறது. பெண்ணை இழப்பது ஆணுக்கு இழுக்கு என்ற கருது பூடகமாக ஆண்பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. உண்மையில் விமலாவின் வன்புணர்வு அவளை பாதித்ததை விட ரவியையே பாதிக்கிறது – அவள் தன் பெண்மையை இழக்கவில்லை, ஆனால் ரவி தன் ஆண்மையை இழந்ததாக உணர்கிறான். தோஸ்தோயேவ்ஸ்கி கதையில் வரும் ராணுவவீரனும் அப்படியே. சமூகம் அவனுக்கு கட்டமைத்துக்கொடுத்த ஆண்மை என்ற புரிதலில் விழும் விரிசலே அவன் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. இப்படி கட்டமைக்கப்பட்ட “ஆண்மை” என்ற கருதுகோள் மிகத்தீங்கானது.

சிறு வயது முதல் ஆண்களை, தங்கள் பலவீனத்தை வெளியே காட்ட க்கூடாதென்று சொல்லியே வளர்த்து வருகிறோம். பொம்பள மாதிரி அழாத, அதிகமா வசவசன்னு பேசாத, கம்பீரமா நில்லு, சண்ட போட கத்துக்க, உன்ன அவமானப்படுத்தினவங்கள திருப்பி அடிக்கலன்னா நீ என்ன ஆம்புள, பொம்பளைய அடக்கத்தெரியில நீ என்ன ஆம்புள, இப்படி.

ஆணை ‘பொட்டை’ என்று அழைப்பது வசை என்றிருக்கும் சூழலில் பெண்ணை இழிவானவள் என்று நினைத்தல்லவா வளருவான். தான் ‘பொட்டை’ அல்ல, ‘ஆண்’ என்று நிரூபிக்க பாடுபட்டுக்கொண்டே இருக்கிறான்.

அவன் இயல்பாகவே மென்மையானவனாக இருந்தாலோ, பெண்கள் பொதுவாக ஈடுபடும் செயல்களில் நாட்டம் உள்ளவனாக இருந்தாலோ, அவனே அவனை வெறுத்து, அவன் இயல்புகளை மீறி ‘ஆணாக’ மாற்றாமல் ஓயாது அவன் சுற்றம். ஆணாக பிறந்தால் ராணுவத்தில் முந்தி நிற்கவேண்டும்; குடும்பத்தை சலிக்காமல் தாங்க வேண்டும்; செல்வம் ஈட்டுவதில் குறியாக இருக்க வேண்டும், இப்படி ஆண்களுக்கு பல நிர்பந்தங்கள் நமது மரபார்ந்த சமூகத்தில். ஆண்மைய சமூக  கட்டமைப்பு (Patriarchy) பெண்களை மட்டும் அல்ல, ஆண்களையும் பாதிக்கிறது. சட்டங்களுக்குள் போடுகிறது. குரூரர்களாக ஆக்குகிறது.

இப்படிப்பட்ட அதி-ஆண்மய கலாச்சாரம் (Hypermasculine culture) பொதுவாக மரபார்ந்த ஆண் நடத்தைகளை போற்றுகிறது, மரபார்ந்த பெண் நடத்தைகளை இழிவுசெய்கிறது. பெண்களை ஆண்களைப்போல வளர்க்கும் இன்றைய பெற்றோரால் கூட ஆண்களை பெண்களைப்போல வளர்க்க மனம்கொள்ள முடியவில்லை.

பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வளர இந்தக்கலாச்சாரத்தில் ஊறிப்போன ஆணுக்கு,  அவனை இன்னும் கொஞ்சம் ஆண்மையுடைய ஆணாக முன்வைக்கும் நிர்பந்தம் உருவாகிறது. இதை “ஆண்மையின் நெருக்கடி” (crisis of masculinity) என்ற சொல்லாட்சி குறிக்கிறது. இந்த நெருக்கடி உள்ளவனுக்கு  பெண் அவனுக்கு சமமாக வீதியில் நடப்பதும், அவனுக்கு நிகராக அமர்வதும், பேசுவதும் கூட அவனை சீண்டக்கூடியதாக இருக்கின்றது. அவனுக்கு நிமிர்வுடன் பேசும் பெண்கள் ஒத்துவராது. குழந்தைபோல மழலை குழையும் பெண்ணை பிடிக்கிறது. பெண்களின் நிராகரிப்பை ஏற்க அவன் மனம் மறுக்கிறது. துன்பப்படுகிறான். அவளை வசைபாட அவள் ஒழுக்கத்தை வீதிக்கு இழுக்கிறான், அல்லது அவள் காலம்காலமாக புழங்கி மடிந்த அடுக்களைக்குள் தள்ளுகிறான். ஆணவக்கொலைகள், ஆசிட் வீச்சு எல்லாமே இந்த மனநிலையின் நீட்சி.

ரவிகள் இப்படித்தான்  உருவாகி வருகிறார்கள். இது ஆணுக்கு நடக்கும் அநீதி. ஆணுக்கு  இந்த சில்லறைத்தனத்தை தாண்டி வளர நிறையவே ஆற்றல் உள்ளது, அது குறுக்கப்படலாகாது.

——–

இதன் பின்னணியில் பெண்ணியம் என்னும் கருத்தாக்கம், தனிமனித அளவில், சமூக அளவில், எனக்கு பெரிய நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. இன்றைய பெண்ணியத்தின் ஒரு திரி இந்த அதி-ஆண்மய கலாச்சாரத்தை எதிர்த்து பேசுகிறது. இருபாலாரும் நிறைவான வாழ்க்கைகள் வாழ வழி காட்டுகிறது.

இன்றைய பெண்ணியத்தின் குறையாக நான் பார்ப்பது பல இடங்களில் அது ஒரு வித முத்திரை குத்தும் கலாச்சாரமாக ஆகிவிட்டது என்பது (call-out culture). ஒருவரை ‘ஆணாதிக்க வராகம்’ என்றோ ‘பெண்வெறுப்பாளர்’ என்றோ விளிப்பது விவாதத்திற்கான சாத்தியத்தை முறியடிக்கிறது. பல படித்த, சிந்திக்கக்கூடிய ஆண்கள் கூட பெண்ணியம் சார்ந்த, தந்தைமுறை சமூகம் சார்ந்த விவாதங்களுக்கு எங்கு முத்திரைகள் விழுந்து விடுமோ என்று வருவதில்லை. அப்படியே வந்தாலும் ‘என்னை ஆணாதிக்கன் என்று நீங்கள் சொல்ல நேரலாம், சொல்லமாட்டீர்கள் அல்லவா …’ என்று தற்காப்போடு முன்ஜாமீன் வாங்கிக்கொண்டு தான் விவாதத்துக்கே வருகிறார்கள். இன்னும் பலர் பெண்ணியம் என்பது சானிட்டரி நாப்கின் போல பெண்விஷயம் என்றும் அதில் ஆண்களுக்கு பேச எதுவும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். மாறாக பெண்ணியம் பெண்களுக்கான கருத்தாக்கம் அல்ல, அது சமூகத்தில் சமத்துவத்திற்கான கருத்தாக்கம் என்று தெரிந்துகொள்ள கொஞ்சம் முனைந்தார்கள் என்றால் நல்லது. உண்மையில்  தமிழகத்தில் பெண்ணியம் சார்ந்து சீரிய விவாதங்கள் இனிமேல் தான் நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பயங்களையும் தயக்கங்களையும் கூச்சங்களையும் செருப்போடு வெளியே கழட்டி வைத்து, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் செவிகொடுத்து கேட்டு, விரிவாக பேசி, கோட்பாடுகள் வடித்தால், தமிழ்ப்பெண்ணியம் என்று ஒன்று உருவாகி  வரலாம்.

இன்று பெண்கள், விமலா, பிரவீணாவைப் போல, பல விதங்களில் அக, புற விடுதலையை நோக்கித்தான் செல்கின்றனர். ஆனால் அதோடு சேர்ந்து ரவி போன்ற ஆண்களும் அவசியம் இந்த நெருடல் மனநிலையிலிருந்து  விடுதலை அடைய வேண்டும். பெண்ணியத்தின் சாத்தியத்தில் எனக்கு பெரிதும் நம்பிக்கை உள்ளது. அது இன்று பெண்களை விட ஆண்களுக்கே மிகவும் அவசியமான ஒரு இயக்கம் என்று நினைக்கிறேன்

சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- விண்ணப்பம்
அடுத்த கட்டுரைதிதலை: சொல்லாய்வு