கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

SR

அன்புள்ள ஜெ,

“கொற்றவை”, உங்கள் புனைவுலகின் தலைநகரங்களில் ஒன்றான, கன்னியும் கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வந்து முடிகிறது. அறியமுடியா ஆழம், அவ்வாழத்தின் நீலம், கடக்கமுடியாமால் கடலாக விரிந்து விரிந்து செல்லும் பெருந்துயரம், அதன் கரையில் கனிவும் அருளுமாக மூக்குத்தி சுடர நிற்கும் கன்னி, காலங்களை வென்ற அவளது ஒற்றை பாதத்தடம் என்று கன்னியாகுமரியை ஒரு நிலம், நகரம், தொன்மம் என்பதை தாண்டி ஒரு படிம வெளியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

“கொற்றவை”யை வாசித்ததைத் தொடந்து “கன்னியாகுமரி” நாவலை வாசிக்கையில், ஒரு வகையில் “கன்னியாகுமரி” கொற்றவையின் துணைப்பிரதி (companion text) என்று கொள்ளலாம் என தோன்றியது. இவ்விரண்டு ஆக்கங்களும் ஒரே பொருளின் இரு வேறு பக்கங்களை பேசுகிறது என்றே படுகிறது. கொற்றவையின் மைய்யச்சித்திரம் பெண்ணினுடையது; கன்னியாகுமரி ஆணினுடையது. கொற்றவை கன்னியின் கம்பீரத்தைப் பேசுகிறது என்றால், கன்னியாகுமரி, கடலென விரியும் அவள் துயரத்தையும் அதை அவள் துறப்பதையும் காட்டுகிறது. கொற்றவை சொல்வது மானுடத்தின் உச்சம், கன்னியாகுமரியில் வருவது மனிதனின் அதிகுரூர நீசம். கொற்றவையில் ஒழுக்கம் சார்ந்து நீலியும் கண்ணகியும் பேசிக்கொள்கின்றனர்; அந்த உரையாடலின் நீட்சியாகவே விமலா-பிரவீணாவின் உரையாடல்களைப் பார்க்க முடிகிறது. கொற்றவை அற்புதமான கனவுத்தன்மை கொண்ட தொன்மவெளி, கன்னியாகுமரி இரக்கமற்ற நிகழ்காலம். இவ்விரு ஆக்கங்களும் பல இடங்களில் பின்னிப்பிணைகின்றன. இரண்டையும் சேர்ந்து வாசிக்கும் போது கிடைக்கும் சித்திரத்தின் முழுமை ஒவ்வொரு ஆக்கத்தில் கிடைக்கும் தனிச்சித்திரத்தை தாண்டி மேலே செல்கிறது.

இந்திய நிலப்பரப்பை ஒரு பெருமரமென எடுத்துக்கொண்டால், அதன் வேர் குமரியாகவும், ஆயிரம் ஆயிரம் கிளைகளில் பற்பல தேவியரும் கன்னியரும் அம்மன்களும் பூத்து நிற்பதாகவும் ஒரு காட்சி “கன்னியாகுமரி”யில் வருகிறது. ஆம், நம் மண்ணில் இறைவிகளின் பாதத்தடங்களுக்கு பஞ்சம் இல்லை. வீட்டுக்கு வீடு கூட ஒரு தேவி இருப்பாள். ஆனால் அவள் பாதத்தடங்கள் அத்தனைக்கும் பின்னால் பயமும் கண்ணீரும் துயரமும் நிறைந்திருப்பது நம் மனசாட்சிகளுக்குத் தெரியும். இன்றும் பெண் தன்னை ஒரு பெண்ணாக உணராமல் பொதுவெளியில் இயங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வன்புணர்ச்சி, அமிலத்தாக்குதல், வன்தொடர்தல், பாலியல் துன்புறுத்தல் என்றெல்லாம் கூடப் போக வேண்டாம்; பெண் சந்திக்கும் நுண்ணிய வன்முறைகள் பல அவள் இயல்பாக இயங்கவேண்டிய வீடு மற்றும் பணியிடத்தில் நிகழ்கின்றன. இந்தச்சூழலில் தான் மனிதியாக இருக்க, தன் மனிதத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கிறாள் பெண்.

இதை “தந்தைமுறைமை சமூகம்”, “ஆணாதிகச்சூழல்” என்றெல்லாம் சொன்னாலும், அந்த முத்திரைகளைத்  தாண்டி அந்த சூழலின் உருவாக்கம்,  நீட்டிப்பு பற்றிய விவாதங்களும் திறப்புகளும் தேவைப்படுகின்றன. “கன்னியாகுமரி” இந்தச்சூழலை கட்டமைக்கும் ஆணின் மனக்குரூரத்தின் உளவியலை ரவியின் பாத்திரம் மூலம் முன்வைக்கிறது. அதே நேரத்தில், தங்கள் துயரங்களை மீறி சுயபாதைகளைக் கண்டடைந்து வெற்றிபெறும் கதாநாயகிகளாக விமலாவையும் பிரவீணாவையும் முன்வைக்கிறது. வெளியாகி பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் “கன்னியாகுமரி”யின் பல பகுதிகள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக, விவாதிக்கத்தக்கவையாக உள்ளன. நாவலின் பல சிக்கல்கள் இன்றைக்கும் சிக்கலாகவே உள்ளன. ஆகவே என்வரையில் இதை ஒரு முக்கியமான ஆக்கமாகவே கொள்கிறேன்

“தாயார் பாதம்” கதையில் வரும் தாத்தா ஊரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட மகான். கலைவாணியை பூஜிப்பவர். இசையில் சுருதியோடு கரைந்துவிடக்கூடியவர். உன்னதர். ஆனால் அவர் பின்மண்டையில் இருந்த முகம் அவர் வீட்டு மக்களுக்கு மட்டுமே தெரிந்தது. அது குரூரனின் முகம். வீட்டில் வாழும் கலைவாணியைக் கண்டு பொறாமையுண்டு வெறுத்து சுருண்டு மூலையில் முடங்கி விஷம் கக்கும் தேள் முகம் அது. அது வளர்ந்து வளர்ந்து தடித்து சரஸ்வதி கடாட்சமான பாட்டியைக் காவு வாங்குகிறது. தாத்தாவின் கலையும் இசையும் தேளின் கொடுக்குக்கு அலங்கார பட்டுக்குஞ்சலம் அன்றி வேறென்ன? ரவியின் கனவுகளில் மீண்டும் மீண்டும் வந்து அவனை கொட்டும் தேளும் இதே தேளோ என்று தோன்றுகிறது.

ரவி பயப்படுவது தன்னைத்தான். அவன் வெறுப்பதும் தன்னைத்தான். ஒரு வகை மனிதன், தான்  உண்மையில் எப்படிப்பட்டவன் என்று தெரிந்துகொள்ளும் போது, தன் போதாமையும் ஆற்றாமையும் கண்டு கூச்சப்படும்போது, தன் கீழ்மைகளைத் தானே  தெளிவாக காணும் பொது, அதைக்கண்டு பயந்து வெறுத்து ஓடுகிறான். அந்த மனித இயல்பின் சாரம் ரவி. அவன் கோழை. தாழ்வு மனப்பான்மை நிறைந்தவன். தன்னுடைய சுயவெறுப்பையும் பயத்தையும் தன்னைவிட எளியவர்கள் என்று அவன் நினைப்பவர்கள் மீது ஏற்றுகிறான். விமலாவை கண்டவுடன் அவளை அவமானப்படுத்த வேண்டும் என்று தோன்றுவதும் அதனால்தான். அவள் தோல்வியுற்றால் மட்டுமே அவன் ஜெயித்ததாக ஆகும் இல்லையா?

விமலா எவ்வாறு தோற்பாள் என்று அவன் மனம் போடும் திரித்த கணக்குகள் அதிநுட்பமானவை. அவள் கணவன் முன் அவளை நேர்கொண்டு அவளை நெளிய வைக்கலாம் என்றெண்ணுகிறான். தான் ஒரு அழகான பெண்ணுடன் அவளை எதிர்கொண்டு, பார்த்தாயா  உன்னைவிட அழகான, அறிவான பெண்ணை நான் என்னவளாக்கிவிட்டேன் என்று அறிவித்தால் அவளை அவமானப்படுத்தமுடியும் என்று நினைக்கிறான். எதுவுமே வேலைக்காகாத போது, அவளை வன்புணர்ந்த ஆளை அவள் முன் நிறுத்தி அதிர்ச்சியூட்ட முடியுமா என்று பார்க்கிறான். அவள் நொறுங்கி பொலபொலவென அழுவாள் என்று எதிர்பார்க்கிறான், அதற்க்காக ஏங்கிகிறான். மொத்தமாக, சராசரி ஒழுக்கங்களும் நாணங்களும் கொண்ட சராசரி பெண்ணை  எப்படி அவமானப்படுத்தலாமோ, அப்படியே விமலாவை வீழ்த்த அவன் யோசிப்பதை நாம் ஊகிக்கலாம். ஒரு வகையில், அவன் ஒரு சராசரி ஆண்.

ஆணும் பெண்ணும்  ஒரு வினோத பரமபதம் ஆட்டம் ஆடிக்கொண்டே இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் வெல்லவும் வீழ்த்தவும் ஆடும் ஆட்டம் இது. இந்த ஆட்டத்தில் ஆணுக்கு பெண் ஒரு நெருப்புக்குழி போல தெரிகிறாள். அது அவனை விழு! விழு! என்று விளித்துக்கொண்டே இருக்கிறதாக அவனுக்குத் தோன்றுகிறது. அதை எதிர்க்கும் திராணி அவனுக்கு இல்லை என்றும், அதில் விழுவது எவ்வளவு இயற்கையான செயலாக இருந்தாலும், அது அவனை ஏதோ ஒரு வகையில் கவுரவம் குறையச்செய்யும் என்று அவன் நினைப்பதாலும் அவளை அவன் அஞ்சுகிறான். நெருப்பு போல அடக்கி ஆள நினைக்கிறான். அவளுக்கு எங்கு வலிக்குமோ அங்கு குத்தி அவளை காயப்படுத்த பார்க்கிறான். ஆனால் உண்மையில் அவன் அஞ்சுவது எதை? தன்னை, தன் உடலை, உடல் மேல் தனக்கு கட்டுப்பாடு இல்லை என்ற உணர்வை. பெண்ணும் இது போல சில கணக்குகளால் உந்தப்பட்டு, அவளும் அவனை வெல்ல நினைக்கிறாள். தொடர்ந்து துயரமூட்டைகளை பரிமாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆணுக்கு பெண்ணுக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளும், அதை நிர்ணயம் செய்யும் சமூக மதிப்பீடுகளும்  கட்டமைப்புகளும் இந்த ஆட்டத்தின் கட்டங்களும் காய்களும் தானே?

விமலாவின் வெற்றி, இந்த ஆட்டத்துக்கே வராமல் இருப்பதில். இது என் ஆட்டமே அல்ல என்று நிராகரித்து மேலே செல்வதில். அவள் இயங்குவதே வேறொரு தளம். எளிய பெண்ணாக காய் நகர்த்தி சீண்டி விளையாடிய நாட்கள் எல்லாமே அவள் கடந்தகாலத்தோடு சென்றுவிட்டன. அவள் வெகுதூரம் சென்றுவிட்டாள். அதனாலேயே அங்கு போட்டிக்கே இடம் இல்லை என்று ஆகிறது; இது ரவிக்கு புரிந்ததாகத் தெரியவில்லை. தன் ஆற்றாமையை இறுதி வரை பொறுத்துக்கொள்ள முடியாமல் போகிறான். தன் இழந்த ஆண்மையை மீட்டெடுத்துக்கொள்ள மறுபடியும் மறுபடியும் ‘நான் ஆண்! நான் ஆண்!’ என்று கூப்பாடு போடுகிறான்.

தஸ்தயெவ்ஸ்கியின் ‘The Gentle Creature’ கதையை நான் பள்ளியில் இருக்கும் போது வாசித்தது. இன்று வாழ்க்கையை கொஞ்சம் அதிகம் பார்த்து, மேலும் வாசித்து வந்ததில் அந்த கதை எனக்கு இன்னும் கொஞ்சம் திறந்துள்ளது. இன்னும் கொஞ்சம் என்னுடையதாக ஆகிவிட்டதாக உணர்கிறேன். “கன்னியாகுமாரி”யில் வரும் ககுரூரத்தை, போதாமையின் சித்திரம் அந்தகாதையை நினைவுக்கு அழைத்தது.

அந்தக்கதையில் மனிதர்கள் எவ்வளவு நுட்பமாக ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்ள முடியும் என்று தஸ்தயெவ்ஸ்கி காட்சிப்படுத்த்துகிறார்.  அதில் ரவியை போலவே ஒரு அடகுக்கடை ஆசாமி வருகிறான். கறார் பேர்வழி. அவன் மனம் கணக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது – ஒரு கண் கடிகாரத்தில், மறு கண் கல்லாப்பெட்டியில். உன்னதமான, ஆனால் ஏழை  பெண் ஒருத்தியை – அவன் நடுவயதுக்காரன், அவள் கிட்டத்தட்ட சிறுமி – மணமுடிக்கிறான். ஆனால் தொடக்கத்திலிருந்தே அவளை கண்டிப்பும் கட்டுப்பாடோடும் நடத்துகிறான். அவளோடு மிகச்சில வார்த்தைகள் மட்டுமே பரிமாறிக்கொள்கிறன். அவளை தண்டிக்க அவளோடு பல நாட்கள் பேசாமல் கூட இருக்கிறான். அவள் அதை தாங்காமல் அழுகிறாள், அதையும் அவன் கண்டுகொள்ளாமால் கடக்கிறான். இப்படி கண்டிப்பாக இருந்தால் தான் அவளுக்கு அவன் மீது மதிப்பும் மரியாதையும் கூடும், அவனை வழிபட தொடங்குவாள் என்று எண்ணுகிறான். அதை மட்டுமே அவளிடம் எதிர்பார்க்கிறான்.

\\

ஆனால் அவன் ஏன் அப்படி நடந்துகொள்கிறான் என்றும் தஸ்தயெவ்ஸ்கி சொல்கிறார். பெரிய பணபலமோ அந்தஸ்தோ இல்லாத சூழலில் இருந்து வருகிறவன். அதனாலே தாழ்வு மனப்பான்மை கொண்டவன். ராணுவத்தில் அவனுடைய கூட்டத்தில் ஒரு வீரன் அவமானப்படுத்தப்படும் போது அவன் அருகே நின்றுகொண்டிருப்பான், ஆனால் கூச்சத்தால் ஒன்றுமே செய்யாமல் இருந்து விடுவான். இது அவன் மானத்தின் மீது பெரிய பங்கமாக ஆகிவிடும். அவனை கோழை என்று முத்திரை குத்தி ராணுவத்திலிருந்து நீக்கி விடுவார்கள். அவன் ஆண்மை, அவன் சுயம் அங்கு அடி வாங்குகிறது. அதன் பிறகு அவன் எண்ணுவதெல்லாம், எப்படியாவது காசு சேர்த்து தன்னை மதிக்காத மனிதர்களையும் வாழ்க்கையையும் உதறி மேலே செல்ல வேண்டும், அவ்வளவே. ஏழை சிறுமி மீது தன் ஆளுமையையும் கட்டுப்பாட்டையும் வைத்தது கோலோச்சுவது ஏதோ ஓர் வகையில் அவன் அடிபட்ட ஆணவத்தை வருடிக்கொடுக்கிறது.

இதில் உருக்கமான விஷயம் என்னவென்றால், அவன் அவள் மேல் உண்மையிலேயே அவ்வளவு அன்பு வைத்திருப்பான். ஒரு கட்டத்தில் மரியாதை, கவுரவம் எல்லாம் கடந்து அவள் அன்பு மட்டுமே அவனுக்கு முக்கியமாகப் படுகிறது. என்னை ஒரு நாய் போலாவது நடத்து என்று அவள் முன் மண்டியிட்டு மன்றாடுகிறான். அவள் அன்பை வேட்டையாடி அடைய தொடங்குகிறான். அவளுக்கு வேறென்ன வழி? அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளோடு சேர்த்து அவள் வழிபட்ட கன்னித்தாயின் சிலையும் விழுந்து நொறுங்கிப் போகிறது.

வாழ்க்கையில் நான் மீண்டும் மீண்டும் காணும், கேட்கும் கதை இது. என் பாட்டி தாயார் பாதம் பாட்டி போல, அருமையாக பாடக்கூடியவர். திரையில் பாட வாய்ப்பு கிடைத்த போது யாரோ “என்னடா, பொண்டாட்டி போட்ற சோத்த திங்கப்போறியாக்கும்” என்று சொல்ல தாத்தா பாட்டிக்கு வந்த அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். இறுதி வரை “42-ல நானூறு ரூபா சம்பளத்துக்கு பாட கூப்பிட்டாங்க”னு சொல்லி பாட்டி இறந்தாள். தாத்தா அவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்தவர் தான். ஆனால் அந்த அன்பின் வரையறைகள் அவர் மட்டுமே நிர்ணயிப்பார். பாட்டி அதற்குள் தான் வாழ்த்தாக வேண்டும், இல்லையென்றால் வசை, வன்முறை. அவர் தந்தை பசுபோன்றவர்; தன் தாயிடம் அடங்கிப்போய் பார்த்து இவர் வளர்ந்தார். அப்படி வாழ்வது தன் ஆண்மைக்கு இழுக்கென்று நினைத்தார். தன் ஆண்மை வெல்ல மனைவியை கட்டை விரலுக்கடியில் வைத்து ஆண்டார். யாரோ செய்த செயலுக்கு யாரையோ பழிவாங்கினார். (ஆனால் பாட்டி அந்தகாலத்து மனுஷி, பலியாகாமல் கடைசி வரை, தனக்காக மட்டுமென்றாலும், மனநிறைவுடன் பாடிக்கொண்டுத்தான் இருந்தாள்!)

இவ்வளவு பயமும் கேவலும் வக்கிரமும் சுமந்து துன்பப்படுவோருக்கு எவ்வளவு வாசல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. எவ்வளவு அன்பை இழக்கிறார்கள். தன் பயங்களின் பெருநிழல்களோடு அட்டைகத்தி சண்டை போட்டே எவ்வளவு வாழ்க்கைகள் மொத்தமாக முடிந்து போயினவோ. தன்னைத்தானே பல விதங்களில் கடுமையாக வருத்திக்கொள்ளும் விநோதமான ஜீவன் மனிதன் மட்டும் தான் என்று தோன்றுகிறது.

“கொற்றவை”யின் இளங்கோ அடிகளோடு ரவியைப் பொருத்தி பார்க்கும் போது, இதே மனிதனுக்குள் தான் எவ்வளவு உன்னதத்திற்கான திறன் என்று தோன்றும் போது சிரிக்கத்தான் முடிகிறது. மானுட மனம் ஒரு பெருநகரம். மாடங்களும் அம்பரவீடுகளும் தலை உயர்ந்து நிற்கின்றன என்றாலும் எலிகள் மட்டுமே உலாவும் பொந்துகளும் உள்ளன.

சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
அடுத்த கட்டுரைMA DEVAKIS DIARY