இன்னும் மனிதர்களிடம் அன்பு அற்றுப்போய்விடவில்லை. அந்த ”இன்னும்” குறித்து சொல்ல நிறைய என்னிடம் உண்டு.
– வண்ணதாசன் _
மண் :
ஒரு முறை, கிருஷ்ணனுடன் ஈரோட்டில், ரயில்வே குடியிருப்பில் மாலை உலா சென்றேன். முதல் காட்சியிலேயே ஒரு புனைவு நிலத்துக்குள் நுழைந்து விட்ட பிரம்மையை எய்தினேன். அசோகமித்ரனின் கதைகளில் வரும் லான்சர் பாரெஸ் குடியிருப்பு நிலம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே என் கண் முன் விரிந்தது. நகர சந்தடி தாண்டி, அமைதி காக்கும் மரவரிசை வழியே, விரிந்த காலித் திடலாக பரவிக் கிடக்கும் சாலை, வலது புற மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் பதின் பருவத்தினர், கடந்து நடந்தால் எதிர்படும் சர்ச், அதன்பின்னே இடது புறத்தில் சமுதாய கூடம், மரவரிசை பாதுகாப்புக்குள் ஆண்டுகள் கடந்த மோன இல்லங்கள், எதுவுமே மாறாமல் அப்படியே இருந்தது.
அசோகமித்திரன் தனது பேட்டி ஒன்றினில், அவர் எழுதிய நிலம் அப்போதே மாறிவிட்டது, தான் கடந்து வந்த பால்யம் போல, அந்த நிலமும், அவர் சித்தரித்த வண்ணங்களை கடந்து வந்துவிட்டது என சொல்லிருந்தார். அசோக மித்ரனை இங்கே அழைத்து வந்து காட்டுவதாகவும், அவர் பரவசம் அடைவதாகவும் மனதுக்குள் கற்பனை செய்து புன்னகைத்துக் கொண்டேன். வாசகனின் அகத்தைத் தீண்டும் எந்தப் படைப்பாளியும், அப்படைப்பாளி குறித்து நினைக்கும்போது, அப்படைப்பாளி ”உருவாக்கிய” நிலத்துடன் சேர்ந்தே வாசகனின் மனதுக்குள் விரிவர்.
வண்ணதாசனும் நெல்லை மண்ணை, தாமிரபரணிக் கரையைக் கொண்டுதான் அடையாளப் படுத்தப் படுகிறார். வன்னதாசனே ”வண்ணநிலவனோ, கலாப்ரியாவோ எழுதுவது நெல்லையை என்றாலும், அது அவரவர் நெல்லை. அவரவர் தாமிரபரணிக் கரை. அவ்வாறுதான் என்னுடையதும். இது என்னுடைய தாமிரபரணி” என்று சொல்வதைப் போல, அவரது கதைகளில் இலங்குவது அவரது நெல்லை. யதார்த்தத்தில் ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு இந்தப் பக்கம் மழைமறைவுப் பிரதேசம். கொஞ்சம் கொஞ்சமாக வானும் நிலமும் வண்ணம் மாறி, வெளுத்து, பாளையங்கோட்டையை அடைகையில் வெயில் ஸ்தூலம் கொண்டு நிலமாக விரிந்திருக்கும், அரைப் பாலைவனம்.
தூத்துக்குடி மண்ணைச் சேர்ந்த தேவதேவன் ”ஒரு புல் போதும் என் காட்டை உருவாக்கிக் கொள்ள ” என்கிறார். வண்ணதாசனின் நெல்லையும் அதுதான். ஆனால் அந்த நெல்லை முற்றிலும் இல்லாத ஒன்றால் ஆன, கற்பனை நிலமும் அல்ல. அவரது நெல்லை அபூர்வமான ”தருணம்” ஒன்றினில் வெளிப்படும் நெல்லை. மிச்சம் கதையில் பாலியல் தொழிலாளி காணும் குளிர் இறங்கும் அதிகாலை, நெல்லையிலேயே வாழ்கையை கழிக்கும் எவரும் காண முடியும். ஆம் குளிரும், மழையும், பூத்தலும், நெல்லையில் அபூர்வம்தான். அந்த அபூர்வமான பருவச் சூழலின் பின்னணயில், [அதன் காரணமாகவும்] மனிதர்கள் மத்தியில் அபூர்வமாக வெளிப்படும் காமத்தையும் அன்பையும் தீண்டிப் பார்க்க முயல்வதே அவரது கதைகள். . ஞானப்பன் காட்சியில் விரியும் ஆர்பநேஜ், அதன் பருவ நிலையும், தனத்தின் நினைவும் முயங்கி விரியும் நிலை, அதன் பருவநிலை சற்றே மாறி மீளும் தருணத்தில் டெய்சி வசம் அவன் காணும் நெருக்கம். தனுமை கதையை சிறந்த உதாரணமாக கொள்ளலாம்.
சு வேணுகோபால் கதையில் ஒரு கதாபாத்திரம். முருகன். அன்று பகல் தொடங்கி, அந்திவரை அவனது வயலில் சூர்யகாந்தி செடிகள் மத்தியில் உழைக்கிறான். அப் பூக்களின் மலர்வில், தன்னை நிராகரித்து சென்ற காதலியின் முகத்தை மறக்கிறான், உள்ளே கிடந்தது அறுக்கும் இழப்பை, பூக்களின் மத்தியில் உழைத்துக் கடக்க முனைகிறான். அந்தி சரிய, செய்வதற்கு வேலை இல்லாமல் போக, அவனுள் இழப்பு விஸ்வரூபம் கொள்கிறது. தற்கொலை முயற்சியாக மூக்கு முட்ட அந்த வயலின் சேற்றை குடித்து மயங்கிச் சரிகிறான் முருகன். நாட்கள் சென்று, சூழல் மாறி, வளமான நாள் ஒன்றினில், முருகன் வலிப்பு கண்டு அதே சேற்றில், அதே பூக்கள் மத்தில் மூச்சடைத்து இறக்கிறான்.
அசோகமித்திரன் நிலத்தில் ”வரலாறு” அதை வகிர்ந்து செல்கிறது.
வண்ணதாசனின் மண், சு வே மண் போல அந்த மண்ணின் மனிதர்களோடு உயிர்க் கூட்டோடு உக்கிரமாக பற்றிப் பிணைந்த ஒன்றல்ல. அ மியின் மண் போல வரலாறு கடந்து செல்லும் மண் அல்ல.
வண்ணதாசனின் பூர்ணம் கதை. கதை சொல்லி பூர்ணலிங்கத்துடன் கோவிலுக்குள் செல்கிறான். பூர்ணம் அவனை, ஆட்கள் புழங்காத காய்ந்த மலம் சிதறிக் கிடக்கும் படித் துறைக்கு அழைத்துப் போகிறான். கதை சொல்லி ”வேற இடம் போவோமே” எனத் துவங்க, பூர்ணம் ”இருடா, இந்தப் படித் துறைலதான், இதோ தொ இங்கதான், எங்க அம்மா, பச்சைப் புடவை சுத்தி செத்து மிதந்தா” கதையின் ஆழம் அங்கே துவங்குகிறது.
முதலில் பருவச்சூழல், பிறகு புறச்சூழல், அதன் ஒரு பகுதியான மாந்தர்கள், அவர்கள் நிற்கும் நிலம், இதுவே வண்ணதாசன் கதையுலக மண்ணின் ஆழமும் எல்லையும். முன்னர் சொன்ன படைப்பாளிகளுக்கு நிலம், கடலலை சறுக்கு விளையாட்டு வீரன் நிற்கும் பலகை போல. வண்ணதாசனின் நிலம் போல்வால்ட் விளையாட்டு வீரன் ஊன்றி, உயர்ந்தபின் கைவிடும் கழி போல. என வகுக்கலாம்.
மனிதர்கள்:
வண்ணதாசனின் உலகை சேர்ந்த மனிதர்கள், முதல் தளத்தில் அனைத்தையும் கடந்து செல்ல வைக்கும் ஒரு அணைப்புக்கு, குறைந்தபக்ஷம் ஒரு தொடுகைக்கு விழைபவர்களாக இருக்கிறார்கள். அன்பின் அணைப்பு. பிரியத்தின் தொடுகை. ஒரு தற்காலிக ஒளி வட்டம் கதையின் நாயகி உங்க கைய பிடிச்சுக்கலாமா என்று வினவுகையில் கதை நிறைகிறது. சமீபத்திய கதையான ஒரு சொப்பனம் கதையின் நாயகி, சொப்பனம் போல கடந்து சென்றுவிட்ட எல்லாவற்றையும் சொல்லிவிடும்படி பிரியத்துடன் பற்றிக் கொள்ளும் கையை சேர்கையில் கதை நிறைகிறது. நெல்லையின் வாழ்கைச் சாரத்தை அப்படியே முன் வைக்கும், நவீன பகடிக் கவிதை ஒன்றுண்டு. நீயும் நானும் ஒரே சாதி சைவப் பிள்ளை. உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவ நல்லூர், எனப் பயணிக்கும் அக் கவிதையில் இதன் காரணமாக மனங்கள் அன்பு கொண்டு, செம்புலப் பெயல் நீராக ஒன்று கலக்கும். அம் மண்ணின் வீட்டிலும் வெளியிலும் அன்புக்கும் அணைப்புக்கும் ஆயிரம் அடைக்கும் தாழ்கள். மெய் தீண்டல் மக்களுக் கின்பம். அந்த இன்பம் தேடும் மனிதர்கள் முதல் தளம்.
பருவம் எய்திய பெண், விசேஷங்கள் நிறைந்து வெளியை அணுகுகையில் அவளுக்குள் நிறையும் உணர்வு இனம் புரியாத அந்த உணர்வு, சிறுமியை இழந்து பெற்ற கன்னிமை அது என வெகு பின்னால் அவள் கன்னிமையை இழந்து தாய்மையை அடைகயிலேயே அறிவாள். அந்த உணர்வுக்கு இணையாக ”இழந்து பெறும்” மனிதர்கள் இரண்டாம் தளத்தில். சிறந்த உதாரணம் பாம்பின் கால், மற்றும் ஓர் அருவியும் மூன்று சிரிப்பும் கதை. ஓர் அருவியும் கதையின் எண்ணைக்கடை அண்ணாச்சி வியாபாரம் என வந்து விட்டால் படு கறார். எந்த சூழலிலும் அவர் கல்லாவில் இருக்கையில் அவரது முகம் இளகாது. கறார் வியாபாரம். அத்தனைக்கும் பிறகு கணக்கில் கோட்டை விட்டு பணத்தை தொலைப்பார். [அதனால்தான் அவர் அக் கடை தாண்டி வளராமலே இருக்கிறார்] அத்தகைய அண்ணாச்சி தொப்பை குலுங்க சிரிக்கிறார். கதை சொல்லியின் ரகசிய ஆசையை கேட்டு. கதை சொல்லி விரும்பும் உடைகள் அற்ற நிர்வாணம் இறுதி நிலைதான். அதன் முதல் நிலையான ஒரு சிறிய ”பற்றினை” விட்டதர்க்கே அண்ணாச்சியால் தொப்பை குலுங்க சிரிக்க முடிகிறது. வண்ணதாசனின் உலகில் இழந்து பெறும் மனிதர்களில் இந்த அண்ணாச்சியே சிகரம்.
மூன்றாம் தள மனிதர்கள் மேலும் ஆழமும் சிக்கலும் கொண்ட ஆளுமைகளாக விரிகிறார்கள். அறிய இயலா விழைவு ஒன்றினால் அலைக்கழிக்கப்படும், அறிய இயலா ஆற்றலின் தோற்றுவாயாக அவர்கள் ஆகும் கணம் அதை சந்திக்கும் மனிதர்கள். வரும் போகும் கதையின் நாயகன் அன்பானவன், எந்த ஒழுங்கீனமும் இல்லாதவன், எல்லா தளங்களிலும் கிட்டத்தட்ட சரியானவன், ஏனோ அவனது இல்லறம் தடுமாறுகிறது அவனது மனைவியின் விசித்திர நடத்தையால். அவள் ஏன் அவ்வாறு ஆனாள் என்றே கதை சொல்லிக்குப் புரியவில்லை. காரணம் புரியாத இந்த நிலையை நண்பனிடம் சொல்லி வெட்கமே இன்றி வாய் விட்டு அழுகிறான். ஒரே ஒரு வருகை. எல்லாமே சரி ஆகி விடுகிறது. மனைவியின் தோழி அவனது மனைவியை தேடி ஒரு நாள் விருந்தாளியாக வருகிறாள். மனைவி முற்றிலும் விடுபட்டவளாக மாறுகிறாள். கதையின் இறுதி வரிகள்தான் இலக்கியம் மட்டுமே தீண்டும் உளவியல் தருணம். கதை சொல்லி தோழி வசம் பேச அமர்கிறான். மனைவி அவன் எதிரே வந்து அமர்கிறாள்.
தேடல்கள் :
வண்ணதாசனின் பல முக்கியமான கதைகளில் ஒன்று ஊமைப் படங்கள். வேலை இழந்து வீட்டில் இருக்கும் சினிமா ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர். அவர் மகன் ஒரு நாள் பக்கத்து வீட்டு அக்காவுக்கு [வயதுக்கு வந்ததால் பள்ளியும் சினிமாவும் இழந்து வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பவள்], முகம் பார்க்கும் கண்ணாடி வழியே சுவற்றில் ஒரு துளை வழியாக சூரிய ஒளியை விழ வைத்து, குவி ஆடி கொண்டு துளையை அடைத்து அதில் துண்டு பிலிம் கொண்டு ஸ்லைட் காட்சி காட்டும் விளையாட்டு விளையாட போகிறான். மகனுக்கு பிடிக்கா விட்டாலும் அப்பா அந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார். திரையில் கருப்பு வெள்ளை ஊமைப் படத்தின் ஸ்லைடுகள் கண்டு அக்கா மகிழ்கிறாள். அக் கணம் அவர் மனதால், ”தன்னால்” காட்டப் படும் உலகைக் கண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் ஒலிகளால் நிறைந்த திரை அரங்கின், ஆபரேட்டர் அறைக்குள் நின்று அந்தக் குதூகல ஒலிகளால் அவர் அடையும் உவகையை இங்கே இக் கணம் அடைகிறார். ஒரு மந்திரக் கலைஞன் தனது மாயத்தால் கட்டுண்டு வியந்து ஆர்ப்பரிக்கும் மக்களைக் கண்டு என்ன உவகையை எய்துவானோ, அதே உவகை. அபூர்வமான உவகைக் கணம் ஒன்றினைத் தொட்டு அதை வாசகனுக்கும் கடத்திய கதை.
பூனைகள் கதை. முழுக்க முழுக்க உளவியல் ஆட்டம் நிகழ்ந்த அவரது தனித்துவமான கதைகளில் ஒன்று. அவன் இல்லாத போது அவனது அறைக்குள் வந்து அசுத்தம் செய்யும் பூனை, அல்லது பூனைகளில் ஒன்று, வசமாக சிக்குகிறது. முதலில் அவன் பூனையின் பாய்ச்சலுக்கு பயப்படுகிறான். என்னென்னவோ செய்து அதன் ஆற்றலை அழித்து, பின் அதை தண்டிக்க எண்ணுகிறான், விடாப்பிடியின் ஒரு தருணத்தில் பார்க்கிறான் அவனை நோக்கி ஆயுதமாக எழ வேண்டிய அதன் நகங்கள் அதன் பஞ்சு பாதங்களுக்குள் உட்புதைந்தே இருக்கின்றன. அத்தருணம் அவன் நிலை மீள்கிறான். பூனையை வைத்துக் கொண்டே அறையை ஒழுங்கு செய்கிறான். இதோ என் அறை, நீ அசுத்தம் செய்ய உனக்குப் பிடித்த இடம் என்று மானசீகமாக அதனுடன் பேசுகிறான். இறுதியாக அரைக் கதவை திறந்து விட்டு அதற்க்கு பை பை புசிகாட் என குரல் எழ அதற்கு விடை அளிக்கிறான். பூனை வெளியேறாமல் அங்கேயே இருக்கிறது. வன்முறை பின்வாங்கி அவ்விடத்தை அன்பு இயல்பாக வெல்லும் கதை.
யாளி, வண்ணதாசன் உலகின் அபூர்வமான ஒரே ஒரு அமானுஷ்யக் கதை. குருமூர்த்தி இறப்பதற்கு முன் இறுதியாக வரையும் அந்த யாளியின் முகத்தை காலதேவனின் முகமெனக் கொண்டால், அந்த முதியோர் இல்லமும், அங்கு வாழும் முதியோர்களும் சூழலும் மிக்க அமானுஷ்யம் கொண்டு திகிலை விதைக்கிறது.
இந்த மூன்று கதைகள் போக, பசுக்கள், நடுகை போன்ற தனித்துவமான சில கதைகளை தவிர்த்து அவரது மொத்தக் கதை உலகு வழியே வண்ணதாசனின் தேடல் என்ன அது வளர்ந்த விதம் வந்து சேர்ந்த இடம் என நோக்கினால் பூடகம் ஏதும் அற்ற தெளிவான சித்திரமே கிடைக்கிறது. அவரது உலகின் முதல் தள மனிதர்கள் வழியே அவரது அகம் நிகழ்த்திய தேடல், விளிம்பில் நிற்பவர்கள் கதையில் செழுமை கொண்டு, காற்று வெளியிடை கதையில் செறிவும் ஆழமும் கொள்கிறது. முதல் கதையில் இல்லற நெறி மீறாமல் விலகிச் செல்லும் நாயகன், பிந்தைய கதையில் நெறி மீற வைக்கும் அந்த வசீகர விழைவுக்கு இணங்குகிறான்.
இரண்டாம் தள மாந்தர்கள் வழியே நிகழும் அவரது தேடல், பளு கதையில் துவங்கி, பூர்ணம் கதையில் பூரணம் பெறுகிறது. பூர்ணம் கதையின் நாயகி தன் காலை சுற்றும் பூனையைக்கூட கணவன் பெயரான [பூர்ண லிங்கம்] லிங்கம் என்றே கொஞ்சுகிறாள். அவள் காணும் இடமெல்லாம் லிங்கம் அன்றி யாரும் இல்லை. அவளது மறு எல்லை நாபிக் கமலம் கதையின் நாயகன் சங்கர பாகம். அவரது மனைவி யுடனான பிரேமையுடன் அவர் தனித்துக் கிடக்கிறார், அவர் காணும் யாவும் கனகு அன்றி வேறில்லை.
மூன்றாம் தள மனிதர்களைக் கொண்டு வண்ணதாசன் நிகழ்த்திய தேடல், அன்பு வழி கதையில் துவங்கி, சமவெளி கதையில் செழித்து, கனிவு கதையில் உச்சம் கொள்கிறது. மூன்று கதைகளுக்கும் இடையேயான ஒற்றுமை ஒன்றுதான். ஒரு ஆண் இயல்பில் உறையும் இரு வித பெண்களுக்கான தேட்டம். முதல் கதை முற்றிலும் புறவயமாக இரு பெண்களின் உடல்களை மையமாகக் கொண்டு வளருகிறது. இரண்டாம் கதை முற்றிலும் அகவயமானது. அவன் வடநாட்டு பெண் ஒருவளை வரைய எண்ணியே தூரிகையை எடுக்கிறான். ஓவியம் நிறைகையில் வந்தவளோ கரிய பேரழகி. தூரிகையால் தொட்டு தொட்டு எடுத்தது அவனது அகத்தில் உறைந்து கிடக்கும் பெண்ணை. மூன்றாவது கதை, அபோத மனதையும் குடைந்து அதற்க்கு கீழும் இறங்குகிறது. பெரிய ஆயான் மனைவி பொன்னு கருப்பட்டிக் கருப்பு. அவளுடன் சம்போகம் முடிந்த கணமே அவளை அப்படி ஒரு வெறுப்புடன் தள்ளி விடுகிறார். அணு தினமும் வெறுத்து, ஆவலுடன் அன்றாடம் காமத்தில் விழுகிறார். அவருக்கு வெள்ளை தசையே இல்லாத வெள்ளை உடல் கொண்ட துரைசாணியுடன் தொடர்பாகிறது. வனத்தின் சிறுத்தைகள் போல கலவி வாய்க்கிறது. சில தினங்களில், மாய தினங்களில் அவருக்கும் பொன்னுவுக்குமான பிணக்கு முற்றிலும் சரி ஆகி விடுகிறது. இந்த மூன்று அடுக்கில்தான் வண்ணதாசனின் தேடல் துவங்கி வளர்ந்து செழிக்கிறது.
அழகியல் :
அமி அவரது சமீபத்திய அனுபவக் குறிப்பில், சென்னையில் எல்.ஐ.சி கட்டிடம் எழுந்த கதை குறித்து விவரிக்கிறார். அதன் நிமிர்வு மீது பயம் கலந்த ஆர்வம், அதன் கடைகளில் ஒன்றில் அவர் வாங்கிய ஸ்டாப்ளர் சரியாக வேலை செய்யாதது என சின்னச் சின்ன உதிரித் தகவல்கள் வழியே அன்றைய நாளை விவரித்துக் கொண்டே செல்கிறார். பற்றி எரியும் அக்கட்டிடத்தை வேடிக்கை பார்க்க மகன்களை அழைத்து செல்கிறார். அவ்வளவு உயர கட்டிடத்தின் உயரத்தில் இருந்து ஆட்களை வெளியே எடுக்கும் கிரேன் வசதி எல்லாம் அப்போது கிடையாது என எழுதுகிறார். இந்த வரி வரும் போதுதான் அவர் முன்பு சொன்ன சரியாக வேலை செய்யாத ஸ்டாப்ளர் இவற்றுடன் இணைந்து அமி உருவாக்கும் கலாபூர்வமான விமர்சனம் பிடி கிடைக்கும். இதை தொடுத்து இணைக்காவிட்டால் வெறும் உதிரி தகவல்கள் என்றே படும்.
வண்ணதாசன் உருவாக்கும் சூழல் சித்தரிப்பும் முதல் பார்வைக்கு நிறைந்து வழியும் உதிரித் தகவல்களாகவே படும். அவரது கதைக்குள் நிகழும் சூழல் சித்தரிப்புகளை யாருடைய பார்வைக் கோணத்தில் கதை சொல்லப்படுகிறதோ, அவரது அக ஒழுங்குடன் அந்த புற சித்தரிப்புகளை தொடுத்துக் கோர்க்கும் போதே, அந்த சித்தரிப்புகளில் உணர்ச்சிகளின் உயிர் ஓட்டம் துலங்கும். உதாரணமாக பறவையின் சிறகு கதையை சொல்லலாம். விவாகரத்து ஆகி வரும் பெண். அங்கிருந்து தோழனின் குடும்பத்துக்கு வருகிறாள், தோழனின் அறையில் உடலும் மனமும் அலுத்து சலித்து உறக்கத்தில் விழுகிறாள். கதையே அற்ற கதை. வண்ண தாசனின் பல கதைகள் இவ்வாறுதான். இக்கதையின் சூழல் சித்தரிப்பை தனது கற்பனையால் தொகுத்துக் கொள்ளும் வாசகருக்கே இக்கதைகளின் பிரதி தரும் இன்பம் வாய்க்கும்.
ஆசிரியரின் இருப்பு என கதைக்குள் ஏதும் இல்லை எனும் பாவனையில் சொல்லப்படும் கதைகள். ஆகவே பெண்ணை நாயகியாகக் கொண்டு பெண்ணின் நோக்கில் சொல்லப்படும் கதைகள், வாசகனுக்கு கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு பெண் உடலுக்குள் சென்று விட்டதைப் போன்ற மயக்கைஅளிக்கிறது. குறிப்பாக பெண்கள் பேசும் நெல்லைத் தமிழ். இணையற்ற வாசக அனுபவம். புற சித்தரிப்பில் வண்ணநிலவனுக்கு இணையாக விமர்சகர்களால் சொல்லப்பட்டாலும், ஒரு துல்லியமான, பாரதூரமான வேறுபாடு இருவரது சித்தரிப்பிலும் உண்டு. வண்ணநிலவன் வைரம் போன்ற புறத்தை உருவாக்குகிறார். அந்த வைரத்தின் மையத்து நீரோட்டம் போல வண்ண நிலவனின் மனிதர்கள். வண்ணதாசனின் சித்தரிப்பு முற்றிலும் நீர்மை கொண்டது. உதாரணம் ஞாபகம் கதை. நாயகியின் பார்வையில் உவகை அளிக்கும் அத்தனை அலுவலக சித்தரிப்பும், கதை முடிவில் ஓவர் டைம் பார்க்கும் முதிய க்ளர்க்கில் முடிகிறது. முடிவில் இருந்து அக் கதை துவங்குகிறது இப்போது அந்த கிளார்க்கின் நோக்கில் விவரிக்கப்பட்ட அத்தனை சூழலையும் மறு வாசிப்பு செய்தால், நாயகிக்கு உவகை அளித்த அத்தனயும், இந்த முதியவருக்கு துயர் அளிப்பவையாக மாறுவதைக் காணலாம். இந்த கலாபூர்வமான வசீகரம் வன்னதாசனில் மட்டுமே உண்டு.
போட்டோ என்றொரு கதை. ஸ்டுடியோவில் ஒப்பனை அறை விஸ்தாரமாக வர்ணிக்கப்படுகிறது. சுவர் மூலையில் மறைவாக கண் மை கொண்டு எழுதிய, அழித்த ஏதேதோ பெயர்கள். பிந்து கிருஷ்ணனின் தூசி எழுத்து கவிதையை நினைவூட்டும் சித்தரிப்பு. நுண்ணிய சித்தரிப்புகளின் இடையே எழுதப்படும் வாழ்க்கை. இதுவும் வண்ணதாசனின் தனித்துவம்.
அனைத்துக்கும் மேல், வண்ணதாசனின் அழகியல் சங்க இலக்கியத்தில் வேர் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தின் அக புற திணை சித்தரிப்புகளின் நீட்சியாகவே வண்ணதாசனின் சித்தரிப்புகளைக் கொள்ளலாம். நவீனத்துவ அலை தாக்கி இலக்கிய மாந்தர்கள் இயற்கையால் கைவிடப்பட்டு தனிமையும் காமமும் கொண்டு அத்து அலைந்து கொண்டிருந்த சூழலில் வண்ணதாசன் மனிதர்களை இயற்கையின் ஒரு பகுதியாக கொண்டு ஒரு உலகை உருவாக்குகிறார். பில் ப்ரைசனின் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் ஒரு சுவையான கணக்கு வருகிறது. நீங்களும் நானும் இங்கே இருக்க, உங்கள் பெற்றோர் எனது பெற்றோர் என நால்வர் தேவை. அந்த நால்வர் இங்கிருக்க எட்டு பேர் தேவை, இப்படியே பின்னோக்கி கணக்கிட்டுக் கொண்டே சென்றால், மிக மிக சொற்ப வருடங்களில் முந்தய உலக மக்கள் தொகை கற்பனை செய்ய இயலா இலக்கத்தை தொட்டு விடுகிறது. கணக்கு சரிதான், ஆனால் மானுட வரலாற்றில் அது அவ்வாறல்ல. ஆம் நமது முப்பாட்டன், முப்பாட்டி பெருகுவது ஒன்றையே நெறியெனக் கொண்டதால்தான் நாம் இன்று, இங்கு, இவ்வாறு இருக்கிறோம், அந்த நெறியில் இன்றும் அலைக்கழியும் எளிய மனிதர்கள் நோக்கிய கனிவே வண்ணதாசனின் பெரும் பகுதி.
தரிசனம்:
ஒரு கதையில் நாயகி ”எங்களை சிவபார்வதி மாதிரி போட்டோ எடுத்துத் தாங்க” என்கிறாள். கதையுலகின் பல பெயர்கள் சிவனுக்கும் பார்வதிக்குமானது. இந்த இழையை கொண்டு எதுவும் மாறிவிடவில்லை கதைக்குள் புகுந்தால் வண்ணதாசன் கதையுலக வாழ்வின் தரிசனம் துலங்கும்.
அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது. கதையின் துவக்கமே இதுதான். பதினைந்து வருடமாக சம்போகத்தின் ஆதூரத்தை இழந்தவரின் பார்வையில் துவங்கும் கதை.
ஜெயராஜ் கதை சொல்லிக்கு, மது கவிதை, இரண்டு பிரியங்களுக்கும் நண்பனாக இருக்கிறான்.
//பின் வீட்டு மா மரம் இந்த வீட்டுச் சுற்றுச் சுவரின் மேல் தணிந்து கிடக்கும் கிளையில் உள்ள இலைகள் செப்புப் போலத் தொங்கும் நாக்குகளை அசைக்காமல் மரணத்தை நக்கக் காத்திருக்கின்றன. //
//பத்துப்பன்னிரண்டு அடி உயரத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டுத் துடைக்கப்பட்டுத் தெளிவாக இருந்த ஜன்னல் பக்கம் வந்திருந்தேன். இப்போது அனேகமாகக் காணாமல் போய்விட்ட, கல்வாழைகள் பூத்திருக்கிற முன் வாசலையே பார்த்தேன். வெயிலின் தள்ளாட்டத்தோடு ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி அவசரம் அவசரமாகத் தரையில் விழும் நிழலை பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்திப்பறந்துகொண்டு இருந்தது. குறைவற்ற வெயிலில் களகளவென்று தண்ணீர் ஓடுகிற ஒரு ஓடையாக என் சொற்கள் குளிர்ந்திருந்தன. //
சிலிர்க்கவைக்கும் புறச் சித்தரிப்புகள். அதைக் காட்டிலும் ஆழமான வர்ணிப்பில் சிவகாமியுடனான ஊடல் வர்ணிக்கப்படுகிறது.
// என்னைச் சந்தேகிக்கவே சந்தேகிக்காதவள் ஆகவும். சந்தேகிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாதவள் ஆகவும் அவள் இருந்த இடைவெளியில்தான் என்னுடைய அந்த ஒரே ஒரு விலகல் நிகழ்ந்தது. ஆறு பாறைக்கு விலகி ஆற்றோடு சேரும் நேரத்திற்குள் உண்டாகும் அத்தனை சுழிப்பும் நுரைப்பும் இன்னொரு பெண் குறுக்கிடும் அந்த விலகலுக்கு இருந்தது//
பெண்ணின் துளி கருணையும் ஆற்ற இருண்ட முகம் ஒன்று பெண்கள் வசம் உண்டு. எதிர் கொள்ளவே இயலா, மாற்றவே இயலா முகம். ஒரு வேளை அவர்களின் உண்மை முகம். நிஷ்டூரமாக மறுத்து அந்த மறுப்பில் பாலைப் பாறை போல உறைந்து விடுவது. எனும் முகம்.
கதையின் இறுதி அபாராமான தாக்கம் தருவது. அவரது ஆழ்மனதில் ”உறைந்து கிடக்கும்” அவரது பெண் அவரை பாரா முகமாக அவரை கைவிட்டு செல்லும் காட்சி. இப்போது அது வெறும் காமம் சார்ந்த விஷயம் அல்ல. ஒரு ஆண் அவனுக்குள் உள்ள பெண்மையை இழப்பது போல, அவன் அடையும் பேரிழப்பு பிறிதொன்றில்லை.
உமையொரு பாகன், இடப்பாதி ஆளும் சிவகாமி சென்றதும், இடதுபுறம் செயலிழந்து பக்கவாதத்தில் விழுகிறான். .
இந்த ஒரே கதையை வைத்துக் கொண்டு வண்ணதாசனின் கதைஉலகு கையாளும் அத்தனை ஆண் பெண் உறவு சிக்கல்களையும் வகுத்து விடலாம், ஆம் அது சிவசக்தி நடனம். முற்றத்தில் உதிர்ந்து கிடக்கும் மலர்கள் மட்டுமல்ல வண்ணதாசனின் உலகம், தேர்ந்த வாசகருக்காக்க அளிக்கப்பட்ட இந்த ஆழமே வண்ணதாசன். தனது படைப்புத் திறனைக் கொண்டு, அவர் தேடிக் கண்டடைந்து வாசகனுக்கு அளிப்பது இதுவே.
இது சிவனின் எல்லை. பார்வதியின் எல்லையில் தோட்டத்துக்கு வெளியிலும் பூக்கள் கதையில் என் அம்மையில்லா என்று கொஞ்சப்படும் சிறு பெண் குழந்தை, நிலை கதையின் கோமதியாக வளர்ந்து, போய்க்கொண்டிருப்பவள் கதையின் ஜுடி அன்னமாக உயர்ந்து, மகா மாயி கதையில் அனைத்தையும் கண்டு கடந்து உயர்ந்து விலகி நிற்கும் பொக்கைவாய் கிழவியாக, வருமுலை கொண்டு பூமிக்கே அமுதூட்டும் பேரன்னயாக மகா மாயி என்றே நிறைகிறாள்.
ஜன்னல் என்றொரு கதை. காதலித்து மணம் புரிந்துகொண்ட எழுத்தாளனை பிரிகிறாள் புஜ்ஜி. அதற்கான காரணம். எழுத்தாளன் எழுத்தை இழக்கிறான், கனவானாக அல்ல, கணவனாக கூட அல்ல வெறும் பொறுக்கியாக மிஞ்சுகிறான் பிரஸ் வேலையில் ஜீவனம் செய்து கணவனையும் பரிபாலிக்கிறாள் புஜ்ஜி. பிரஸ் முதலாளி சங்கரையா புஜ்ஜி மேல் கொண்ட காதலால் அவளது வேலை நிலைக்கிறது. எழுத்தாளன் எப்போதும் குடித்து விட்டு வந்து சங்கரையாவையும் புஜ்ஜியையும் இணைத்து வசை பாடுகிறான். உணவுக்கும் குடிக்கும் அவர்களையே சார்ந்து கிடக்கிறான். . எட்டு மாத நிறை வயிற்றுடன் புஜ்ஜி ஜன்னல் வழியே பார்க்கிறாள், ஜூவு ஜிவு என கோவத்தில் சிவப்பது போல சிவந்த செங்கல்லை கணவன் ஏந்தி குறி பார்க்கிறான், வேலி கட்டிய செடியை மேயும் நிறை மாத சூல் ஏந்திய ஆட்டின் அடி வயிற்றில் அடிக்கிறான். பதறி தவித்து வழி தேடும் ஆட்டின் அடி வயிற்றில் மீண்டும் அடிக்கிறான். எல்லாம் முடிந்து உள்ளே வரும் கணவனை கேள்வி கேட்க, அவன் முதன் முறையாக அவளை முகத்தில் அடிக்கிறான். புஜ்ஜி ”ஏன் முகத்துல அடிக்கிற, இங்க அடி, வேணும்னா செங்கக் கல்லால அடி” என்று சொல்லியபடி தந்து எட்டு மாத வயிற்றைக் காட்டுகிறாள்.
இருளின் ஆழத்தை, குரோதத்தின் பேருருவைக் காட்டும் இந்த ஒரே ஒரு கதை போதும் வண்ணதாசசனை சைவத்தின் ஒரு துளியாக வகுத்து வைக்க.
சங்க இலக்கிய அழகியலை ஈராயிரம் வருட மரபை, நவீன தமிழில் நிறுவிய வகையில் வண்ணதாசன் தவிர்க்க முடியாதவர். சைவத்தின் துளியாக தனித்துவமானவர். என்றேன்றைக்குமானவர்.
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு