வெற்றி [சிறுகதை]

images

 

“அந்தக்காலத்தில் இந்த காஸ்மாபாலிட்டன் கிளப் என்பது புராணங்களில் சொல்லப்படும் மேருமலை மாதிரி. தேவர்கள் வந்திறங்கி பாதாளத்திலிருந்து ஏறி வரும் அசுரர்களை இங்குதான் சந்திப்பார்கள். நடுவே எங்களைப்போன்ற மனிதர்கள் ஒன்றும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களை உங்களால் பார்க்க முடியும். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாது. இருவருடைய தயவும் எங்களுக்குத் தேவை. ஆகவே பணிவே உருவாக இருப்போம்” என்றார் எஸ். ஆர். நமச்சிவாயம்.

நாங்கள் ’ப்ளாக் லேபிள்’ விஸ்கியின் இறுதிச் சுற்றில் இருந்தோம். அவருடைய ‘பிராண்ட்’ அது. குடிக்க அழைத்தால் அவர் அதைத்தான் கேட்பார். அப்போது கண்களில் ஒரு சிறிய மின்னல் வந்து போகும். மற்றபடி உள்ளே என்ன இருக்கிறது என்று சுத்தமாக வெளியே தெரியாமல் நன்கு உடலால் பொதியப்பட்டவர் அவர். கண்கள் கூட இரண்டு சிறிய துளைகள் போல தான் இருக்கும். அதன் வழியாக உள்ளே பார்த்தால் உள்ளிருந்து யாரோ கவனமாக நம்மைப் பார்ப்பதை மட்டும் தான் பார்க்க முடியும்

என் தலை ஒருபக்கமாக சரிந்து கொண்டிருந்தது. என்ன காரணத்தாலோ உடல் எழுந்து வீட்டுக்கு போக ஆசைப்பட்டது. பெரிய தண்ணீர்ப்பை போல எடை கொண்டிருந்த உள்ளம் நாற்காலியில் நிறைந்து படிந்திருந்தது. ”ஏன் நிமிண்டிக்கொண்டே இருக்கிறாய்?” என்று சகதேவன் கேட்டான். ”ஒன்றுமில்லை” என்று சொன்னேன் ”காலை ஆட்டாதே” என்றான். நான் கால்களை நாற்காலிக்கு அடியில் இழுத்துக் கொண்டேன். பிரபாகர் “கழிப்பறை போக வேண்டுமா?” என்றார். ”இல்லை” என்று சொன்னேன்.

காஸ்மாபாலிட்டன் கிளப்புக்குள் நாங்கள் பொதுவாக ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்வது. குடிக்க ஆரம்பித்தால் தவறியும் தமிழ் வெளியே வராது. அப்படியெல்லாம் ஒன்றும் விதிகள் இல்லை. ஆனால் காஸ்மாபாலிட்டன் கிளப் என்பது வெள்ளையர்கள் அந்தக் காலத்தில் உருவாக்கிய மையம். முப்பது அடிக்கு மேல் உயரமான ஓட்டுக்கூரையின் கூம்புக்கு உள்ளிருந்து நீண்ட இரும்புக் கம்பிகளில் மின்விசிறிகள் தொங்கிச் சுழன்று கொண்டிருக்கும். அவையும் எழுபது எண்பது ஆண்டுகால பழமை கொண்டவை. நாற்காலிகளையும் மேஜைகளையும் எல்லாம் பத்து வேலைக்காரர்கள் இருந்தால்தான் அசைத்து நகர்த்த முடியும் எல்லா மரப்பொருட்களுமே மிகப்பெரியவை. எனக்கெல்லாம் இங்குள்ள நாற்காலியில் அமர்ந்தால் கால் கட்டை விரலால்தான் தரையைத் தொட முடியும். வெள்ளையர்கள் மிகப்பெரிய உடல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அசுரர்கள், அப்படியென்றால் தேவர்கள்…?

எஸ். ஆர். நமச்சிவாயம் எஞ்சிய மதுவை வாயில் விட்டுக் கொண்டு கண்ணாடிக் கோப்பையை தள்ளி வைத்தார். சகதேவன் இன்னும் சற்று மதுவிடுவதற்காக புட்டியை எடுத்தான். “வேண்டாம்” என்று சொன்னார். “ஏன்?” என்று பிரபாகர் கேட்டான். ”இப்போது கொஞ்சம் மிதப்பாக இருக்கிறது. உடம்பில் எழுபத்திரண்டு மரைகள் இருக்கின்றன். எல்லாவற்றையும் ஓரிரு சுற்று சுழற்றி உயவு போட்டுவிட்டது போல இருக்கிறது. எந்திரம் சத்தமே இல்லாமல் ஓடுகிறது” என்றார் எஸ். ஆர். நமச்சிவாயம்.

அந்தக்காலத்தில் அம்பாசிடருக்கு முந்தைய ஸ்டாண்டர்ட் கார்களின் உள்ளூர் ஏஜெண்டாக இருந்தார். கார்க்ளை உற்பத்தி செய்வது ஸ்டாண்டர்ட் நிறுவனம். விற்பவர் மைதீன்கண்ணு ராவுத்தர் மற்றும் மகன்கள். இவர் பெரிய மனிதர்களைப் போய்ப் பார்த்து, அவர்களின் உள்ளங்களைக் கவர்ந்து. கார் வாங்கும் முடிவை எடுக்க வைப்பார். ஒரு கார் என்பது பழைய காலத்தில் அரசர்களின் வீட்டு முற்றத்தில் நின்றிருக்கும் சாரட் வண்டி போல அல்லது மடாதிபதிகளுக்கு முன்னால் போகும் யானை போல. அல்லது உள்ளூர் கோவிலில் தலைப்பட்டம் கட்டுவது போல .அல்லது அழகான மலையாளத்துத் தாசியை ’எடுத்து’ வைத்திருப்பது போல. அதை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.

பணக்காரர்களிடம் பேசிப் பேசி அதற்கான ஒரு உடலசைவும் மொழியும் அவருக்கு வாய்த்திருந்தது. இப்போது இத்தனை வளர்ந்தபிறகும் கூட ஒவ்வொரு சொல்லையும் பணிவு தெரியும் ஒரு சின்ன பம்முதலுக்கு பிறகு தான் சொல்வார். காஸ்மாபாலிட்டன் கிளப்பில் இப்போது வருவதிலேயே முதிந்த உறுப்பினர் நமச்சிவாயம்தான். அவருக்கு தொண்ணூற்றாறு வயது தாண்டிவிட்டது. பட்டுக் கால்சராயும் லினன் கோட்டுமாக வெள்ளையர்கள் உலவிய அந்தக் காலத்திலேயே உறுப்பினராகிவிட்டார். அவர் இங்கே பார்த்த அத்தனை பேரும் இறந்த பிறகும் கூட அவர் அனேகமாக வாரத்தில் மூன்று நாட்கள் வந்து கொண்டிருக்கிறார்

காஸ்மாபாலிட்டன் கிளப்பிற்கு இப்போது வந்துகொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கட்டிடத்தையோ அதன் வரலாற்றையோ பற்றி அக்கறை கிடையாது. அதற்கு வெளியே விரிந்து கிடக்கும் விளையாட்டு மைதானங்கள் மரங்கள், அடர்ந்த சோலைகள்தான் அவர்களுக்கு முக்கியம். நகரத்துக்குள் அத்தனை அகலமான இடம் வேறெந்த கிளப்புக்கும் இல்லை. இந்த பழைய தடித்த சுவர்களையும், மிகப்பெரிய ஜன்னல்களையும், துருப்பிடித்த கம்பிகளையும் சிவப்பு மொராக்கோ தோல் போடப்பட்ட சிம்மாசனம் போன்ற நாற்காலிகளையும் ,தேக்கு மரத்தடியால் தளமிடப்பட்ட தரையையும் அர்த்தப்படுத்தும் கதைகள் அனைத்தும் நமச்சிவாயத்திடம்தான் இருந்தன. ஓரிரு கோப்பை மதுவுக்குப் பின்னர் அவரிடம் பேசுவதென்பது அந்த இடத்தின் சற்று பாழடைந்த தன்மையை மேலும் வசீகரம் கொள்ள வைக்கும்.

வரலாற்றிலிருந்து எழுந்து வருபவர்கள் அனைவருக்குமே ஒரு மர்மமும் பயங்கரமும் இருப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அல்லது அது நமச்சிவாயத்தின் இயல்பாக இருக்கலாம். எல்லாவற்றையுமே கொஞ்சம் புராணம் கலந்துதான் அவரால் சொல்ல முடியும்.

”தேவர்களை சந்திப்பதென்பது மிகச்சிறந்த வாய்ப்பல்லவா? வரங்களைக் கேட்கலாம்” என்றான் பிரபாகரர். அவன் அவரைப் பேச வைக்க விரும்புகிறான் என்று தெரிந்தது ஆனால் அவர் வழக்கம் போல் இல்லை என்று எனக்குத் தோன்றியது. வழக்கமாக இரண்டு  ‘பெக்கு’களுக்குப் பிறகு மிக இயல்பாக சற்று வியர்த்து சற்றுத் தளர்ந்து கைகால்களை நீட்டிக் கொண்டு இடப்பக்கம் கோணலாக எழும் புன்னகையுடன் மாறி மாறி எங்களைப்பார்த்தபடி பேசத்தொடங்குவார். பேசப் பேச வர்ணனைகளும் நுட்பமான தகவல்களும் இடக்குகளும் எழுந்து வரும். இன்று அவர் முற்றிலும் தனக்குள் ஆழ்ந்து போனது போல் தோன்றியது.

வெளியே இழுத்துக் கொண்டுவந்து விடுவதற்கு சகதேவனும் முயன்றான். ”அன்றெல்லாம் காஸ்மாபாலிட்டன் கிளப்பில்  உறுப்பினராவது சாதாரணமானதல்ல. ஆரம்பத்தில் நீங்கள் பெரிய அளவில் ஒன்றும் தொழில் புரியவில்லை. வளர்ச்சியெல்லாம் பின்னர்தான். அன்றே எப்படி இங்கே உறுப்பினர் ஆனீர்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது” என்றான். “நான் உறுப்பினரானது மிகவும் பிறகுதான். அம்பாசிடர் ஏஜென்சி எடுத்து, பணம் சம்பாதித்து, பங்களாவும் காரும் வங்கி வைப்புத் தொகையுமாக வாழ்க்கையில் நிலைத்த பிறகுதான் உறுப்பினரானேன். அப்போது கூட நான்கு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. அன்றைய தொகைக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டினேன். எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு நகரில் ஒரு நல்ல வீடு வாங்கியிருக்கலாம்” என்றார் நமச்சிவாயம்.

அதற்கு முன்னெல்லாம் இங்கே தொழிலுக்காகத்தான் வருவேன். இங்கிருந்த நிர்வாகிகளில் இருவர் என்னுடைய நண்பர்கள். யாரையாவது பார்க்க வருவது போல உள்ளே வருவேன். அன்றெல்லாம் இந்தக் கூடம் முழுக்க உள்ளூர் பெரிய மனிதர்க்ள் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பார்கள். ஜமீன்தார்கள், ஆலை அதிபர்கள், மோட்டார் நிறுவன உரிமையாளர்கள். வெள்ளைக்காரர்கள் போன பிறகு இவர்களில் பாதிப்பேர் வெள்ளைக்காரர்களாக ஆகிவிட்டார்கள். வெள்ளைக்காரர்களாக ஆகமுயல்பவர்கள் மீதிப்பேர்.பேச்செல்லாம் அதைப்பற்றித்தான்

“சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பவர்களிடம் சென்று அமரமாட்டேன். தனியாக இருப்பவர்களை அணுகி அவர்களிடம் பேச்சுக் கொடுப்பேன். யாருக்காகவோ காத்திருப்பவர்கள்  அவர்கள் வரும் வரைக்கும் என்னிடம் பேச விரும்புவார்கள். கவனமில்லாமல் பேச என்னைப்போன்றவர்கள்தான் ஏற்றவர்கள். என்னுடைய உடல் மொழியைப் பார்த்ததுமே நான் பணக்காரனல்ல, எதையோ விற்கவோ வாங்கவோ செய்பவன் என்று தெரிந்துவிடும். உட்காரச்சொல்ல மாட்டார்கள். நின்று கொண்டே தான் பேசுவேன். மிகச்சிலர் அருகே நின்றிருக்கும் வேலைக்காரனை அழைத்து முக்காலியை எடுத்துப்போடச் சொல்வார்கள். அது அன்றெல்லாம் பெரிய கருணை

”ஆனால் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வணிக உத்தரவுகளையெல்லாம் இந்த காஸ்மாபாலிட்டன் கிளப்பிலிருந்துதான் பெற்றிருக்கிறேன். இந்த கிளப் இல்லையென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லையென்று கூட சொல்லலாம் என்னுடைய கர்ம மண்டலம் இதுதான்” மீண்டும் அவர் கோப்பையை பார்த்தார். அவரது பார்வையை புரிந்து கொண்டு சகதேவன் கோப்பையை நிரப்பினான். அதை எடுத்து கையில் வைத்து உருட்டியபடி “ராயல் கோட்ஸ் என்ற நிறுவனத்தைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார்.

”ஆம் எழுபதுகளில் பூட்டிவிட்டார்கள் அல்லவா? என்றேன். ”ஒரு காலத்தில் அவர்கள் தான் பருத்திநூல் துறையை ஆட்சி செய்தார்கள் அதைத் தொடங்கியவர் சிவசைலம் ஜமீன்தார் ராமானுஜ நாயகர் என்று அவருக்குப் பெயர். மைக்கேல் க்ரீன்ஸ் என்னும் வெள்ளைக்காரருடன் சேர்ந்து ஆரம்பித்தார். அந்தக்காலத்தில் இங்கே நூல்நூற்பு ஆரம்பிக்கவில்லை. தென்னிந்தியாவிலேயே அவர்கள்தான் முன்னோடிகள். ஆகவே பணம் கொட்டியது. சிவசைலத்தின் அடுத்த ஜமீன்தார் பொறுப்பேற்றுக் கொண்டதும் அது பத்து மடங்கு பெரிதாகியது.”

அவர் பெயர் ரங்கப்பர். அமெரிக்காவில் சென்று படித்துவிட்டு வந்தவர் அன்றெல்லாம் லண்டனுக்கு போய் படித்துவிட்டு வருவதுதான் ஒரு மோஸ்தராக இருந்தது. அமெரிக்காவில் படித்துவிட்டு வந்தவர் அவர் ஒருவர்தான். அந்தத் தோரணை அவரிடம் உண்டு. ஆனால் அது சற்று வேறுபட்டது. இந்த அறையில் நூறு பேர் இருந்தால் கூட அவர் அமெரிக்காவில் படித்தவர் என்பது உடனடியாக தனித்துத் தெரியும்

…சிரிக்க வேண்டாம், உண்மையிலே தெரியும். ஆக்ஸ்ஃபோர்டிலோ கேம்ப்ரிட்ஜிலோ படித்தவர்கள் ஒரு பிரிட்டிஷ் பிரபுக்களைப்போன்று நடிப்பார்கள். உயரமான கழுத்துப்பட்டை கொண்ட சட்டை போட்டிருப்பது போல தலையை நிமிர்த்தி மோவாயை சற்று மேலே தூக்கி வைத்திருப்பார்கள். நம்மை அழைக்கும் போது கைகளை மலர்த்தி சுட்டு விரலை லேசாக அசைப்பார்கள். இமைகளை பாதி தாழ்த்தி எங்கோ ஒரு மெல்லிய இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனை இருக்கும். பேச்சில் நடத்தையில் எல்லாவற்றிலும் ஒரு பெண்மை தெரியும். கைகளைச் சுழற்றுவதும், தலைகுனிந்து விடைபெறுவதும் ,கைகளை விரித்து வரவேற்பதுமெல்லாம் இப்போது மாயக்காட்சிகளை மேடையில் நிகழ்த்துபவர்கள் செய்வது போலிருக்கும். அல்லது டிராக்குலா பிரபு போலிருக்கும்.  இருகால்களையும் நெருக்கமாகச் சேர்த்துக் கொண்டு கத்திரிக்கோல் போல் நடப்பார்கள். நடனமாடுவதும் அப்படித்தான்

இந்த எந்த பாவனைகளும் அமெரிக்காவில் படித்தவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் அப்போதுதான் ஒரு முரட்டுக்குதிரையில் இருந்து இறங்கி வந்ததுபோல் தோன்றுவார்கள். மேஜையை குத்திச் சிரிப்பார்கள். இரு விரல்களால் சுருட்டை பற்றி ஆழ்ந்து இழுப்பார்கள். முகத்தில் எல்லாவற்றையும் ஏளனம் செய்வது போன்ற மெல்லிய கோணல்கொண்ட சிரிப்பிருக்கும். ஆம், அதேதான். கிளிண்ட் ஈஸ்வுட்ட்டின் சிரிப்பு அது. பிரிட்டிஷ் கல்வி பெற்றவர்கள் மிகப்பெரிய மதிப்பீடுகளை சுமந்து கொண்டிருப்பவர்கள் போன்றிருப்பார்கள். எந்த மதிப்பீட்டிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள் அமெரிக்காவில் படித்தவர்கள்

எனக்கு ரங்கப்பரை அவர்களை மிகவும் பிடிக்கும். மற்றவர்களைப் போல் என்னை நடத்துபவரல்ல அவர். என் தோளில் கை வைக்கவும், என் சட்டைக் காலரை சரி செய்யவும், பார்த்தவுடன் முதுகில் தட்டிச் சிரித்து வரவேற்கவும் அவரால் முடியும். அவருக்குச் சமானமாக நாற்காலியில் அமர்ந்துதான் எப்போதும் பேசுவேன். எனக்குப்பிடித்த மதுவைக் கொண்டுவரச்சொல்வார். அருந்துவதற்கு முன் என் கிண்ணத்தில் தட்டி மகிழ்ச்சி சொல்வார். என்னிடம் மட்டுமல்ல அவர் எல்லா மனிதர்களிடமும் அப்படித்தான் நடந்து கொண்டார். ஆகவே இங்கிருந்த எல்லாருக்குமே அவர் ஒரு லட்சிய புருஷன் மாதிரி. ஒருமுறை இப்படித்தான்…

மேலும் ஏதோ சொல்ல வந்தவர் “நான் வீட்டிற்கு கிளம்ப வேண்டும்” என்றார். அவர் ஏதோ ஒன்றில் இடறிக்கொண்டதை உடனடியாக ஊகித்த சகாதேவன் “இருங்களேன் இன்னும் இருட்டவில்லை. நான் உங்களை வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறேன்” என்றான். ”என் பேரன் வருவான்” என்று நமச்சிவாயம் சொன்னார் “அவர் வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் நானே கொண்டு விடுகிறேன்” என்றபின் அவருக்குப் பிடித்தமான பாதி வெந்த முட்டைக்கு கையசைவாலேயே ஆணையிட்டான் சகதேவன்.

“ஒருமுறை அவர் என்ன சொன்னார்?” என்றான் பிரபாகர். “ஒன்றுமில்லை” என்றார் நமச்சிவாயம். ”சும்மா சொல்லுங்கள். இங்கே யாருமில்லை” என்றேன். “ஒன்றுமில்லை சும்மா நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்போம் அதில் ஒன்றுதான்…” என்றார் நமச்சிவாயம்.

நான் கண்காட்டினேன். எப்படியும் அது பேச்சுக்கு வரும் என்று எனக்குத் தெரியும் அழுத்தவேண்டியதில்லை. வயதனாவர்களால் ரகசியங்களை காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் இழப்புகள் ஏதுமில்லை. நமச்சிவாயம் எஞ்சிய மதுவை ஒரே மூச்சில் குடித்தபின் வாயைத் துடைத்தார். இருகைகளையும் கோர்த்தபடி கண்களை மூடி நாற்காலியின் சாய்மானத்தில் தலையைச் சாய்த்தார். தலை சாய்த்து அமர்வதற்கு அந்த நாற்காலி வசதியானது. நெட்டை வெள்ளையர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அந்நாற்காலியின் விளிம்பு நம் தலைக்கு மேலேயே இருக்கும். பலர் முக்கால் நூற்றாண்டாக தலை சாய்த்த மொராக்கோ தோல் அது. ஒரு ரத்தபடலம் போல கருவறைக்குள் சுருண்டு உட்கார்ந்திருக்கும் உணர்வை அது அளிக்கும்

இரட்டை முட்டை வருவது வரை நமச்சிவாயம் மெதுவாக வியர்த்து மின்விசிறி காற்றில் குளிர்ந்து கொண்டிருந்தார். முட்டை மேஜை மேல் வைக்கப்பட்டதும் பிரபாகர் அவரைத் தட்டினார். கண் விழித்து எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தபின் ஆவலுடன் முட்டையைப் பிய்த்து தின்றார். பிறகு ”ரங்கப்பர் போல பெண்களுக்குப் பிடித்தமான ஒரு ஆணை அதற்குப்பிறகு நான் பார்த்ததே கிடையாது” என்றார். நான் அவரைக் கூர்ந்து நோக்கினேன். ”அர்ஜுனன் அல்லவா?” என்றார் முட்டையை தின்றபடி. “போக்கிரியா நல்லவனா வீரனா பெண்ணனா என்று தெரியாத மனிதன் அர்ஜுனன்” . மென்றபடியே கையைத் தூக்கி “ஆனால். அர்ஜுனன் அத்தனை பெண்களையும் வென்றது அவன் பெரிய வில்வீரன் என்பதனால் அல்ல. அவன் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தியின் தம்பி என்பதனால்தான். அதை ரங்கப்பர்தான் ஒருமுறை சொன்னார்” என்றார் நமச்சிவாயம்.

“எப்படி அந்தப் பேச்சு வந்தது?” என்று பிரபாகர் கேட்டார். “இங்கே நாட்ராயன் என்றொரு ஜமீன்தார் இருந்தார். அவரிடம் ஒரு ஐயங்கார் பெண் இருந்தது. கோமளவல்லி என்று பெயர் பேரழகி. வயிரமும் பட்டுமாகக் குவித்து அவரை வைத்திருந்தார். எல்லாருக்கும் அவள் மேல் ஒரு ஈடுபாடு. கிளப்பில் பாதிப்பேச்சு அவளைப்பற்றித்தான். அவளுக்கு மேலே கொட்டிக்கொடுக்க பலர் காத்திருந்தார்கள். அதில் நாட்ராயனுக்கு ஒரு பெருமை. ஒருமுறை நாட்ராயன் பேச்சுவாக்கில் கோமளவால்லியை யாரும் கவர முடியாது, அவள் தன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் என்று சொன்னார். மது குடித்து ஆடிக்கொண்டிருந்த கும்பல். பேச்சு மாறிமாறிச் சென்றபோது நான் வென்று காட்டுகிறேன் என்று ரங்கப்பர் சூளுரைத்தார். நாட்ராயன் சீறி எழுந்து செய்து காட்டு என்று சவால் விட்டு ஆயிரம் ரூபாயை பந்தயம் வைத்தார். இவர் ஏற்றுக்கொண்டார்.  பதினைந்தே நாட்களில் அவளைக் கூட்டிக் கொண்டு ஏற்காடுக்குப் போய்விட்டார் ரங்கப்பர். அதைப்பற்றித்தான் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தோம்” என்றார் நமச்சிவாயம்

சிரிப்பும் நையாண்டியும் மாறி மாறி கால்வாரலுமாக அந்த உரையாடல் சென்றது. ஒரு கட்டத்தில் ஆவல் தாளாமல் நாட்ராயன் நேரடியாகவே கேட்டுவிட்டார். எப்படி அந்தப்பெண்ணை ரங்கப்பர் ஜெயித்தார் என்று. ரங்கப்பர் அவருடைய தோளில் தட்டிச் சிரித்தபடி ,  “அழகு இளமை இதெல்லாமே முக்கியமில்லை, பணத்தால் வெல்ல முடியாத பெண்ணென்று யாருமில்லை” என்றார். “அந்தப்பணத்தை எப்படி அவளுடைய ஆணவம் புண்படாதபடி கொடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம்”  என்று அவர் சொன்னபோது பலர் மேஜைகளைத் தட்டினார்கள்

அந்த உரையாடலில் நான் நுழையக்கூடாது. ஏனென்றால் அதில் பலர் ஜமீந்தார்கள். இருந்தாலும் என்னை அறியாமல் “அப்படி எல்லாரையும் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். ரங்கப்பர் என்னை நோக்கித் திரும்பி சிவந்த கண்களால் பார்த்தபடி , ”முடியும். பணத்தால் வெல்லமுடியாத பெண்கள் சிலர் இருக்கலாம். ஒரு ஐம்பது பேர்கூட இந்த நகரத்தில் இருக்கவாய்ப்புண்டு. மொத்தமாக ஒரு ஆயிரம் பேர் இந்தத் தமிழ்நாட்டில் இருக்கலாம். அவர்களெல்லாம் தெய்வங்கள். அவர்களைப் பார்த்துமே தெரிந்துவிடும். மற்ற கோடிக்கணக்கான பெண்களை பணத்தால் வென்றுவிடலாம்” என்றார்.

எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை மேஜையை தட்டியபடி. “இதெல்லாம் வெறும் பேச்சு” என்று  சற்றுக் கோபமாகச் சொன்னேன். ”வெறும் பேச்சல்ல. அப்படி இருக்ககூடாதென்று நான் ஆசைப்பட்ட ஒரு காலம் இருந்தது. கடவுளேம் இந்தப் பெண் கடைசி வரைக்கும் பணியவே கூடாது என்று வேண்டிக்கொண்டு பல பெண்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள்  பணியும்போது அவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் நானே அடைவேன். அவர்களிடம் உறவு கொண்ட பிறகு உப்பரிகையில் நின்று கொண்டு அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். இதுவரைக்கும் ஐம்பது முறைக்கு மேல் நண்பர்களிடம் பந்தயம் விட்டிருக்கிறேன். ஒருமுறை கூடத் தவறியதில்லை” என்றார் ரங்கப்பர்

“ஏன் அப்படி?” என்றார் நாட்ராயன். “பெண்கள் அப்படித்தான்” என்றார் ரங்கப்பர். “ஏன் ஆண்கள் மட்டும் மேலா? ” என்று ராமசாமி முதலியார் கேட்டார். “ஆண்களும் பணத்திற்கு அடிமைப்படக்கூடியவர்கள்தான். எல்லாருக்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை என்ன, அதை எப்படிக் கொடுப்பது என்று தெரிந்தால் அவர்களை வென்றுவிடலாம். ஆனால் நூறில் ஒரு ஆண் எந்த வகையிலும் வெல்லப்படமுடியாதவன். நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் மேலே செல்கிறோமோ அந்த அளவுக்கு வெல்லப்பட முடியாத ஆண்களைத்தான் அதிகம் சந்திப்போம்.” என்றார் ரங்கப்பர்

“ஏனென்றால் ஆண்களுக்கு ஆசையைவிட ஆணவம்தான் அதிகம். ஒரு இடத்தில் தோற்றுப் போகாமல் இருப்பதற்காக  கொல்லவும் சாகவும்கூடத் தயாராக இருப்பார்கள். தான்  எங்கும் தோற்காதவன் என்று நினைக்கும் ஆணவத்திற்காக எதை வேண்டுமானாலும் இழப்பார்கள். , இங்கு கூடியிருக்கும் வயதானவர்களைப் பாருங்கள். பெரும்பகுதியினர் தாங்கள் எங்கெல்லாம் தோற்கவில்லையென்று பீற்றிக் கொள்ளவே விரும்புவார்கள். எப்படியெல்லாம் எதிர்த்துநின்றோம் என்று கதைசொல்லுவார்கள். தோற்றுவிட்டால் அந்த அவமானத்தையே வாழ்நாள் முழுக்க வருடி வருடி வலியை உருவாக்கி அதில் திளைத்துக் கொண்டிருப்பார்கள்” என்று ரங்கப்பர் சொன்னார்.

“பெண்கள் அப்படியல்ல.  ஆணுக்கு முன் பெண்கள் காட்டும் ஆணவம் என்று பெரிதாக ஏதுமில்லை. தான் மதிக்கப்படுகிறோமா என்று கண்காணிப்பார்கள். அதற்கப்பால் மிக எளிதில் அவர்களால் எங்கும் வணங்கிவிட முடியும். வணங்கிவிட்டதை மிக எளிதாக நியாயப்படுத்தவும் முடியும். அவர்களுடைய உலகம் இந்த அன்றாட லௌகீகம் சார்ந்தது. ஒரு பெண்ணின் ஆசை என்ன என்பதை ஏதேனும் பொருளை வைத்தே சொல்லிவிட முடியும். அருவமான எதையும் அவர்கள் ஆசைப்படுவதில்லை.ஆகவேதான் பெண்களில் பெரிய துறவிகளோ ஞானிகளோ யாரும் கிடையாது. அவர்களால் துறந்து செல்ல முடியாது. இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அவர்களுக்கு வேண்டும். ஒன்றை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்றால் அதைவிட பெரிய ஒன்றை அவர்கள் பெற விரும்புகிறார்கள் என்றே அர்த்தம்”

“முழுக்க முழுக்க இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் முழுமையாகக் கட்டப்பட்டவர்கள் பெண்கள். அந்தப்பொருள் என்ன, அந்தப்பொருளை நாம் அவர்களுக்குக் கொடுக்க முடியுமா என்பது மட்டும்தான் கேள்வி. அதை அவர்களுடைய மெல்லிய தன்மானம் புண்படாமல் கொடுக்க வேண்டும். அது ஒரு சின்ன கலை. கொஞ்சம் பரிவுடன் அவர்களைக் கவனித்தால் தெரியும், எந்த இடம் அவர்களுக்குப்புண்படும் என்று. அந்த இடத்தை தவிர்த்து அவர்களுக்குள் செல்வது மிக எளிது”

ரங்கப்பர் மிகச்சிறப்பாகப் பேசக்கூடியவர். அவரது ஆங்கிலம் பிரிட்டிஷ் கல்வி கற்றவர்களின் ஆங்கிலம் போல இருக்காது. மிகவும் குழறித்தான் ஒலிக்கும் ஆனால் அன்றே அத்தனை பேருக்கும் அதன் மேல் பெரிய மோகம் இருந்தது. அவர் பேசினால் பெரும்பாலும் எல்லாரும் சும்மா கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவரை எதிர்த்துப்பேச நல்ல ஆங்கிலம் தேவை. ஆனால் நான் அப்போது மூன்று முழுக்கோப்பைகள் குடித்து முடித்திருந்தேன். அந்த இடத்தில் சற்று தலைதூக்கி என்னைக் காட்டவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. .

இப்போது யோசித்தால் அது வெறும் ஆணவம் என்றும் ,அந்த இடத்தில் ஒரு சிறிய ஏஜெண்ட் மட்டுந்தானே என்னும் தாழ்வுணர்ச்சியால்தான் அப்படி நடந்து கொண்டேன் என்றும் எனக்குத் தெரிகிறது.சரியான ஆங்கிலத்த்தில் சில சொற்றொடர்களை எடுத்துவிடவேண்டும் என்னும் நப்பாசைதான் அது. நான் உரக்க ஓசையெழும்படி கோப்பையைக் கீழே வைத்து “இது வெறும் பணத்திமிர். பணத்தால் உங்களால் இன்னொரு பணக்காரப் பெண்ணை வாங்கிவிட முடியும். ஆனால் ஏழைகள் தன்மானமுடையவர்கள். தன்மானம்தான் அவர்களுடைய சொத்து .அதை ஒரு போதும் இழக்கமாட்டார்கள்” என்றேன்.

அவர் ஏளனமாகச் சிரித்து “தன்மானம் அவர்களுடைய சொத்துதான். ஆனால் சொத்துக்கெல்லாம் ஒரு விலையிருக்கிறது. இங்குள்ள அத்தனை ஏழைகளும் தங்களுடைய தன்மானத்தை ஏதோ ஒரு வகையில் அடகு வைத்து அதற்கென்று விலையைப்பெற்றுக் கொண்டுதான் வாழ்கிறார்கள். நீங்கள் உட்பட” என்றார் அவர்.

தனிப்பட்ட முறையில் என்னைச் சுட்டிக் காட்டியபோது எனக்கு இன்னமும் வெறி ஏறியது. ”இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களையும் வென்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இந்த மேடையில் நீங்கள் ஒரு அர்ஜுனன் என்று காட்டிக் கொள்வதற்காக அதைச் சொல்கிறீர்கள். ஒரு பெண்ணை வென்றவன் நூறு இடங்களில் துடைப்பத்தால் அடிவாங்கியிருப்பான். ஆயிரம் வாசல்கள் அவன் முகத்தில் அறைந்து சாத்தப்பட்டிருக்கும். இந்தக் கொள்கையை எடுத்துக் கொண்டு எங்களைப்போன்ற ஏழைகள் வீடுகளுக்கு வரவேண்டாம். பூனையைப்போல ஓசையில்லாமலோ நாயைப்போல நாக்கு ஊறியோ இக்கொள்கை எங்கள் புழக்கடைவாயிலில் நுழையுமென்றால் அங்கே ஏராளமான துடைப்பங்கள் தருணத்திற்காகக் காத்திருக்கின்றன” என்றேன்.

எனக்கே என்னுடைய ஆங்கில சொல்லாட்சி நிறைவளித்தது. அத்தனை பேரும் என்னைக் கவனித்துவிட்டார்கள் என்று தெரிந்தது. பலருடைய கண்களில் சிறிய பாராட்டையும் பார்த்தேன். ஆனால் மேலும் ஏளனத்துடன் உடலை மிக எளிதாக்கி ரங்கப்பர் சொன்னார் “நீங்கள் கொந்தளிப்பதைப்பார்த்தால் உள்ளூர பயந்துவிட்டீர்கள் என்றுதான் தெரிகிறது”

“பயமா எனக்கா? நான் ஏன் பயப்படவேண்டும் ?என் மனைவியை எனக்குத்தெரியும்” என்றேன். நேரடியாக என் மனைவியை அங்கு கொண்டுவந்தது அவர்கள் அத்தனை பேருக்குமே சிறிய அமைதியின்மையை உருவாக்கியது. “சரி போதும். இதை நாம் அதிகம் பேசவேண்டாம்” என்றார் வயது முதிர்ந்தவராகிய நாச்சிமுத்து. ”இல்லை பேசி முடிப்போம். நான் ஏழைதான். நீங்களெல்லாம் பணக்காரர்கள். உங்கள் முன் நான் ஏழைகளின் பிரதிநிதியாக நின்று பேச விரும்புகிறேன். நாங்கள் எங்கள் உழைப்பை விற்று வாழ்கிறோம். பிள்ளை குட்டிகளுக்காக சிறிய சமரசங்களைச் செய்வோம். ஆனால் நாங்கள் ஒருபோதும் தன்மானத்தை விற்பதில்லை” என்றேன்.

“தெரியும். போதும்” என்றார் நாச்சிமுத்து. “என்ன தெரியும்? இதோ இந்த மைனர் எங்கள் வீட்டுப்பெண்கள் அத்தனை பேருமே பணத்திற்கு படுக்கைக்குவரும் விபச்சாரிகள் என்று சொல்கிறார் . நான் அதைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டுமா?” என்று  கூவினேன். கோப்பையை மீண்டும் ஓங்கித் தரையில் வைத்துவிட்டு எழுந்து “இந்த அவையிலே நான் சொல்ல விரும்புகிறேன். எங்கள் வீட்டுப்பெண்களின் காலடித் தூசியைக் கூட இவர்களால் தொட முடியாது. இவர் மன்னிப்புக்கேட்க வேண்டும். எங்கள் வீட்டுபெண்களை இழிவுபடுத்தியதற்காக இங்கேயே இப்போதே மன்னிப்புக்கேட்க வேண்டும்” என்றேன்.

ரங்கப்பர் நல்ல தடிமனான உடல் கொண்டவர் .தொடர்ந்து குதிரைப்பயிற்சியில் இருப்பவர் ஆதலால் உடம்பு இறுகிப்போயிருக்கும். கால் மேல் கால் போட்டபடி கைகளைக் கட்டி நன்றாகச் சாய்ந்து அமர்ந்து ”மன்னிப்புக் கேட்கப் போவதில்லை, ஏனென்றால் நான் சொன்னது உண்மை. ஒரு பணக்காரன் நினைத்தால் அடைய முடியாத பெண் என்பவள் பல லட்சங்களில் ஒருத்திதான். அது இங்குள்ள அத்தனை பணக்காரர்களுக்கும் தெரியும். இல்லையென்று சொல்லட்டும்” என்றார்.

அத்தனை பேரும் பேசாமல் இருந்தார்கள். “சொல்லுங்கள், எத்தனை பெண்களை பணத்தை வைத்து நீங்கள் வென்றிருப்பீர்கள். பணத்தால் வெல்ல முடியாத ஒரு பெண்ணையாவது பார்த்த ஒருவராவது இங்கிருக்கிறீர்களா? கைதூக்குங்கள்” என்றார் ரங்கப்பர். யாருமே கை தூக்கவில்லை.

எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. உரக்க கிறீச்சிடும் குரலில் “நீங்கள் அத்த்னை பேரும் சேர்ந்து என்னை சிறுமை செய்கிறீர்கள். இது எனக்கெதிரான ஒர் அறைகூவல். இந்தச் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவரால் முடிந்தால் என் மனைவியை வென்று பார்க்கட்டும். ஆம், நான் பந்தயம் வைக்கிறேன். என் மனைவியை வென்று பார்க்கட்டும்” என்று கூவினேன்.

“நான் வென்று காட்டுகிறேன். மூன்றே மாதம். என்ன பந்தயம்? ” என்று ரங்கப்பர் கேட்டார். நான் சொன்னேன் “நான் தற்கொலை செய்துகொள்கிறேன். இதோ இந்த காஸ்மாபாலிட்டன் கிளப்பின் முகப்பில் வந்து நின்று என் கழுத்தை நான் அறுத்துக் கொள்கிறேன்.போதுமா?”

”வேண்டியதில்லை” என்று அவர் சொன்னார். ”இத்தனை பேர் முன்னால் வைத்து பந்தயத்தில் தோற்றேன் என்று சொல்லி ஒரே ஒரு ரூபாய் நீங்கள் எனக்குத்தந்தால் போதும். பதிலுக்கு நான் தோற்றால் ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்”

“என்ன? என்ன இது? என்ன இது?” என்றார் நாச்சிமுத்து. சாமிக்கண்ணுக் கோனார் “என்ன பேச்சு இது? ஐந்து லட்சமா?” என்றார். ஐந்து லட்சம் என்பது அன்றைக்கு சாதாரணத்தொகை கிடையாது. முப்பதாயிரம் ரூபாயில் ஒரு நல்ல பங்களாவை நகரில் வாங்கிவிடலாம்.

“ஆம், என்னுடைய உடுகப்பட்டி எஸ்டேட்டின் மதிப்பு அது அதை அப்படியே கொடுத்துவிடுகிறேன். சவால்” என்றார் ரங்கப்பர். அதற்குப்பிறகு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆழ்ந்த அமைதி நிலவியது. வெளியே காற்று ஓடும் ஓசை. நான் முடிந்தவரை குரலை நிதானமாக்கி “சவால்” என்று சொன்னேன். ரங்கப்பர்  புன்னகையுடன் “மூன்றுமாதம். தேதியை எண்ணிக்கொள்ளுங்கள் நமச்சிவாயம்” என்றார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமே, அப்போது எனக்கு உள்ளத்துக்குள் தண்ணீர் நலுங்கும் ஒர் அசைவு ஏற்பட்டது. பயப்படுகிறேனா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பயமேதான் என்று எனக்குத்தெரிந்தது. ஏனென்றால் நான் ஒரு விற்பனைப் பிரதிநிதி. மனிதர்களுடைய பலவீனங்களை கணக்கிட்டு அவர்களை வெல்வதையே எனது தொழிலாக வைத்திருப்பவன். மனிதர்கள் என்பவர்களே விதவிதமான பலவீனங்கள் கொண்டவர்கள் என்றுதான் எனக்குத் தெரியும். ஆகவே எந்த மனிதர்களையும் எதற்கும் நம்பமுடியாதென்றுதான் நான் புரிந்து வைத்திருந்தேன்.

மனைவி மேல் கொண்ட நம்பிக்கை என்பது ஒருவகையில் நம்முடைய மரபு மேல் கொண்ட நம்பிக்கைதான். மனைவி என்பது ஒரு தனிப் பெண்ணல்ல. சாமியார் என்பது போல, பூசாரி என்பது போல ஒரு பதவி அது. அந்தப் பதவிக்குரியவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படித்தான் இருக்கிறார்களா என்று எப்படித்தெரியும்? என்னுடைய மனைவியை எனக்கு எப்படித்தெரியும்? நான் காலை எட்டு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுகிளம்பிவிடுவேன். அலுவலகத்துக்குச் சென்று வணிக உத்தரவுகளை எல்லாம் தட்டச்சு செய்து கடிதங்களை எல்லாம் எழுதி தபாலில் அனுப்பிவிட்டு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி மாலையில் எழுந்து காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு வந்துவிடுவேன் நடுஇரவுக்குப்பிறகு கைரிக்‌ஷாவில் வீட்டுக்குப்போவேன். பெரும்பாலும் போகும் வழியிலேயே போதையில் தூங்கிவிடுவேன். அவளிடம் நான் பேசுவதே குறைவு.

உண்மையில் அவள் எப்படிப்பட்டவள் எனக்கே பயமாக இருந்தது. அவளை நான் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவேனா? அப்படிச் சந்தேகப்பட்டால் அது மிகப்பெரிய பாவமல்லவா? எங்களுக்கு மூன்று குழந்தைகள். பதினாறு வயதில் அவள் என்னைத்திருமணம் செய்து என்னுடன் வந்தாள். அடுத்த வருடமே குழந்தை பிறந்துவிட்டது. மூன்றாவது குழந்தை சவலை. மாதம் இரண்டு முறை அதை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போவாள். நெஞ்சில் மாறாத சளி இருக்கிறது என்கிறார்கள். காசநோயாக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது. அடிக்கடிக் காய்ச்சல் வரும். அவளுடைய வாழ்க்கையே அந்த சின்னக்குழந்தையை பாதுகாப்பதில் தான் செலவாகிக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே வீட்டையும் பராமரிக்கிறாள், சமைக்கிறாள்.

நான் வீட்டில் எதையுமே தெரிந்துகொள்வதில்லை. கிளம்பும்போது எனது ஆடைகள் சலவை செய்யப்பட்டு கட்டில்மேல் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். ஷு நன்றாக பாலிஷ் செய்து திண்ணையில் இருக்கும். என்னுடைய பழைய வாட்சும், கொம்புச்சட்டமிட்ட கண்ணாடியும், பார்க்கர் பேனாவும், முதலைத்தோல் பர்சும், மேஜைமேல் எடுத்துவைக்கப்பட்டிருக்கும். சாப்பிட அமர்ந்தால் அன்றைக்கு நான் சாப்பிடுவதற்கு விரும்பும் பொருளே அங்கு இருக்கும்.

திருமணமான எட்டு வருடங்களில் ஒன்றிரண்டு முறை சிறிய சண்டைகள் வந்திருக்கின்றன. அவள் எப்போதுமே முழுமையாக என்னை ஏற்றுக் கொள்வதற்காகத்தான் முன்னரே தயாராக இருப்பதாகத் தோன்றும். அவளுக்கென்று ஒரு சொந்தக் கருத்தோ உணர்வோ ஏன், உடல் கூட இருப்பதாக நான் நினைத்ததே கிடையாது. எல்லாவற்றையும் விட திருமணமான முதல் ஒருவருடத்திற்கு பிறகு அவளுக்கு பாலுறவில் நாட்டமிருப்பதாகத் தெரிந்ததே இல்லை. எப்போதாவது மாலையில் நான் அவளிடம் அதைக் குறிப்பாக உணர்த்துவேன். உணர்த்த வேண்டியதே இல்லை, என்பார்வையை பார்த்த உடனே தெரிந்துகொள்வாள். அவளின் முகமும் தோற்றமும் மாறிவிடும். ஒரு ரகசியத்தை பாதுகாப்பவள் போல உடம்பு முழுக்க ஒரு பதுங்கல் தெரியும்.

இரவில் குழந்தைகள் தூங்கியபிறகு என் அறையில் மெத்தையில் நான் காத்திருப்பேன். இருட்டுக்குள் மிக மெல்ல அவள் வரும் காலடி ஓசை கேட்கும். என் அறையிலேயே படுத்து என்னைத் தழுவிக்கொள்ளும் போது முழுக்க எனக்காகத்தான் உடலை அவள் அளிப்பது போலிருக்கும். ஒரு பெரிய களிமண் பொம்மை போல அவள். நான் எப்படியும்  பிசைந்து உருவாக்கிக் கொள்ளலாம். சோப்பில் சாவியை அழுத்தி எடுத்த அச்சுபோல என்னுடைய உடம்பின் பதிவு அவளில் இருக்கும். அதில் அப்படியே என் உடலைப்பொருத்திக் கொண்டால் போதும்.

என்ன நடக்கப்போகிறது? தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர்,  கல்வியும் அழகும் என்னைவிட பலமடங்கு மேலானவர், அவள் மேல் தன் அனைத்து ஆற்றலாலும் படையெடுத்தால் நான் என்ன செய்ய முடியும்? அவளை எச்சரித்தால் என்ன? அப்படி நினைத்த போது எனக்கு மேலும் பதட்டமாகியது. அந்த எச்சரித்தலே அவளுக்கு ஆர்வத்தை ஊட்டிவிடுமா? அவரை அவள் கவனிப்பதற்கு வாய்ப்பாகிவிடுமா? அவள் இயல்பாகவே இருக்கட்டும். ஒருவேளை இயல்பாக அவள் இருக்கும்போது அவரை அவள் கவனிக்கக்கூட வாய்ப்பில்லை.

அன்று ரிக்‌ஷாவில் வீடு திரும்பும்போது கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன். பல முறை என் தலையைக் கைகளால் அறைந்து கொண்டேன் சீ சீ என்று சொல்லிக் கொண்டேன். ரிக்‌ஷாக்கார வடிவேலு ”என்ன சாமி தலைவலியா?” என்று கேட்டான். “ஆம்” என்றேன். ”வீட்டுக்குபோய் நல்ல சுடுதண்ணி வச்சுக்குளி. சரியாப்போயிடும்” என்றான்.

வீட்டுக்குப்போய் கோட்டையும் சட்டையையும் கழட்டிக் கொண்டிருக்கும் போது ”உடம்பு சரியிலையா?” என்று அவள் கேட்டாள். ”போடி” என்று உக்கிரமாகச் சீறினேன். மிரட்டப்பட்ட தெருநாய் போன்ற பாவனையுடன் உடலை பதுங்கி பின்னிழுத்துக் கொண்டு ”சாப்பாடு எடுக்கவா?” என்று கேட்டாள். ”வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டு சென்று படுத்துவிட்டேன்.

அவள் நான் மேற்கொண்டு எதையாவது சொல்வேனா என்று எதிர்பார்த்தபடி அறைவாசலில் பாதி உடம்பு காட்டி நின்றாள். அவள் அங்கு நிற்பது என் உடலை எரியச்செய்தது. போடி போடி என்று என் உள்ளத்துக்குள் கூவிக் கொண்டேன். எழுந்து அவள் முடியைப்பிடித்து இழுத்துபோட்டு நையப்புடைக்கவேண்டும் என்று தோன்றியது. ஏன் அப்படித் தோன்றுகிறது என்று எண்ணியபோது என்னைப்பற்றியே எனக்கு இழிவாக இருந்தது. உண்மையில் பெண்களைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?. பெண்களைப்பற்றிய நம்பிக்கை ஆண்களிடம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் தான் குடும்பங்கள் இயங்குகின்றன. அந்த நம்பிக்கை இல்லையேல் தனக்கு வீடு இல்லை என்பதனால் தான் ஆண்கள் அவ்வளவு மூர்க்கமாகப் பெண்களை நம்புகிறார்கள். கஷ்டங்களைக் கேட்பதற்கு கடவுள் ஒருத்தர் இருந்தாக வேண்டும் என்று நம்புவது போல. உண்மையில் கடவுள் இல்லாமல் இருக்கலாம். கற்பு என்ற ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்

இப்படியெல்லாம் எண்ணக்கூடாது, தூங்கிவிடவேண்டும். ஆனால் அன்று இரவு முழுக்க நான் தூங்கவில்லை. நெடுநேரம் நின்றுவிட்டு அவள் சென்று படுத்துக் கொண்டாள். படுத்ததுமே தூங்கி குறட்டை விடத்தொடங்கிவிடாள். சின்னவன் மட்டும் அவ்வப்போது நெஞ்சுவலியுடன் எழுந்து இருமிவிட்டு படுத்தான். தூக்கத்திலேயே கைநீட்டி அவன் உடலை தட்டி அவள் தூங்க வைத்தாள்.

நான் எழுந்து வெளியே வந்து இருண்ட தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்காவது ஓடிப்போய்விடவேண்டும் என்று தோன்றியது. ஒரு ரூபாயுடன் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அந்தப் பணக்காரர்கள் முன் சென்று நிற்பதைவிட தூக்கில் தொங்குவது மேல். ஆம், தூக்கில் தான் தொங்கப்போகிறேன். தோற்றால் அதன்பின் வாழமாட்டேன். நான் விதவிதமாக தூக்கில் தொங்குவதை கற்பனை செய்தபடி இரவெல்லாம் நின்று கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் வெளிச்சம் வந்தபோது எல்லாமே தெளிவாக இருந்தது. என்ன முட்டாள் தனம் இது! மனிதர்களை இப்படி ஒற்றைப்படையாக எடை போடுவதைப்போல மேட்டிமைத்தனமும் அறிவின்மையும் வேறில்லை. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகைமாதிரி என்று தானே நான் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?. அதுதானே என் தொழிலை அந்த அளவுக்கு சவால் மிக்கதாக ஆக்குகிறது?. எல்லா மனிதர்களும் கட்டாயப்படுத்தினால் கார் வாங்கிவிடுவார்கள் என்று நான் சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ அதற்கு சமானமானது இது.

அந்த சபையில் ரங்கப்பர் அப்படிச் சொல்ல விரும்பினார். அது உண்மை என்பதனால் அல்ல. அவருக்கு அப்படி அப்போது தோன்றியது. அவரும் போதையில் இருந்திருப்பார். சொன்னபிறகு அதிலிருந்து பின்னால் போகமுடியாது. ஆகவே மேலும் மேலும் சென்று அறைகூவியிருப்பார். அவ்வளவுதான் அது நேற்றே முடிந்தது.

ஆனால் முடியவில்லை என்று எனக்கும் தோன்றியது. ஐந்து லட்சம் ஐந்து லட்சம் என்று எண்ணும்போது ஏற்படும் படபடப்பை என்ன செய்வது. ஐந்து லட்சம் இருந்தால் இந்த நகரத்தில் ஒரு பெரிய கார் விற்பனை மையத்தை நான் தொடங்க முடியும். ஒரு பங்களா வாங்க முடியும். எனக்கென்றே நல்ல காரை கூட வாங்க முடியும். இதோ இதைப்போன்ற கரிய ஸ்டாண்டர்ட் கார். வெண்ணிற டர்க்கி துவாலை விரித்த இருக்கைகள். அதை நானே ஓட்டிக் கொண்டு செல்வேன். பின்னிருக்கையில் என் மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். ஒர் ஓட்டுநரைக்கூட வைத்துக்கொள்ள முடியும். கதவை அவன் திறந்து விட மெதுவாக இறங்கி அவன் எடுத்துப்போடும் செருப்பை அணிந்து கொண்டு நிமிர்ந்த தலையுடன் நடந்து அலுவலகத்துக்குள் நான் நுழையும் காட்சியை நானே கண்டேன். இந்த முண்டை ஒழுங்காக இருந்தால் எனக்குப் பணம் வரும். இருப்பாளா? இல்லாவிட்டால் இவளை வெட்டிப்போட்டுவிட்டுச் சாகவேண்டும்… அப்படிப்பார்த்தால் இது ஒரு நல்ல வணிகம்தான். இவள் கற்பின் விலை ஐந்து லட்சம!

மறுகணமே என்ன கீழ்மை இது என்று என் மண்டையில் அடித்துக் கொண்டேன். ஏன், ஜெயிக்கத்தான் போகிறேன். பணம் வரப்போகிறது. இல்லை, இப்படி ஆசைப்படுவதே தவறு. இது பணத்தாசை அல்ல. இது ஒரு அடிப்படை நம்பிக்கை. தோற்றுவிடுவேன் என்ற பயமா ஐந்துலட்சம் என்ற ஆசையா எது என்னை ஆட்டிப்படைத்தது என்று நானே கேட்டுக்கொண்டேன். மேலும் பதற்றமானேன்

தோற்றுவிடுவோம் என்ற பயமும் படபடப்பும் ஒவ்வொரு நாளும் குறைய ஆரம்பித்தது.  என் மனைவி தோற்றால் கூட அவளைக் கவர்வதற்காக ரங்கப்பர் பெரும்பணம் கொடுப்பார் அல்லவா என்று நினைக்க ஆரம்பித்தேன். அவ்வளவு கீழ்மையானவனா நான் என்று எண்ணி என்னை நானே வெறுத்துக் கொண்டேன். அந்த வெறுப்பை முழுக்க அவளிடம் காட்டினேன். அவளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. என்ன மனத்தாங்கல் என்று அவளுக்குப் புரியவில்லை.

நான் ஒவ்வொரு நாளும் ரங்கப்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நான்காவது நாள் ஞாயிற்றுக்கிழமை காலை அவருடைய கார் என் வீட்டு முன்னால் வந்து நின்றது. பழங்களும் இனிப்புகளுமாக அவருடைய வேலையாள் உள்ளே வந்து என்னைப்பார்க்க ஜமீன்தார் வந்திருப்பதாகச் சொன்னான். படபடப்புடன் நான் அமர்ந்திருந்தேன். எழுந்துசென்று வரவேற்கவில்லை. அவர் உள்ளே வந்து வணங்கியபோது எழுந்து வணங்கும்போது என் கைகள் வியர்வையால் நனைந்திருந்தன. குரல் எழவில்லை.

அவரை உட்கார வைப்பதற்கு வசதியான நாற்காலி என் வீட்டில் இருக்கவில்லை. பழைய நாற்காலியின் கால் அவர் அமர்ந்தபோது சற்றுக் கிறீச்சிட்டு ஆடியது. உடைந்து விழுந்துவிடுமோ என்று பயந்தபடி இருந்தேன். உள்ளே நோக்கி “ஏளா இங்கு வந்து பாரு. யார் வந்திருக்கா பாரு” என்று சொன்னேன். என் மனைவி எட்டிப்பார்த்துவிட்டு அவசரமாக ஓடிப்போய் முகம் கழுவி தலையை ஒதுக்கி புடவையை மாற்றி பொட்டு வைத்துக் கொண்டு வந்து கதவருகே பாதி உடல் காட்டி நின்று மிக மெலிந்த குரலில் “வணக்கங்க” என்றாள்.

அவர் எழுந்து கைகூப்பி “வணக்கம்மா” என்றார். “சார் நிறைய சொல்லியிருக்கிறார்” என்றார். அவள் புரியாமல் “உம்” என்றாள். “எல்லாமே நீங்கதான்னுட்டு சொல்வார் படிச்சிருங்கீங்கன்னு சொல்லியிருக்கார். எட்டாம்கிளாஸ் படிச்சிருக்கிங்கல்ல?” என்றார். “ஆமாம்” என்று அவள் சொன்னாள். “சாரதாஸ்ல படிச்சேன். அது ஆச்சு பத்துவருஷம்” முகம் மலர்ந்துவிட்டது. அவள் படித்தவள் என்று நான்  ரங்கப்பரிடம் சொன்னதே இல்லை.

“மேலே படிச்சிருக்கலாமே?” என்றார். “அப்ப வசதியில்லே: என்று அவள் சொன்னாள். பரபப்புடன் “காப்பி எடுக்கட்டா?” என்று கேட்டாள். “கொடுங்க” என்று அவர் சொன்னார் அவள் உள்ளே போனபோது நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அவர் மெலிதாக புன்னகை செய்தார். அதிலிருந்த தன்னம்பிக்கை என் உடம்பில் தீயை எரியவிட்டது போல் இருந்தது.

“நீங்க வேணும்னா அவங்க கிட்ட சொல்லுங்க, இப்படி நான் முயற்சி செய்வேன்னு” என்றார். “சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று நான் சொன்னேன். ”சரி” என்று புன்னகைத்தார். நான் என் உடம்பெல்லாம் ரத்தம் ஓடும் சத்ததைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவள் டீயுடன் வந்தாள். பீரோவுக்குள் புடவைக்குள் சுருட்டி வைத்திருந்த பீங்கான் கோப்பையை எடுத்துக் கழுவி அதில் டீயை விட்டுக் கொண்டுவந்தாள்.  அவள் மாமா பட்டாளத்திலிருந்து கொண்டுவந்து கொடுத்தது அது. அத்தனை ஆண்டுகளில் அதை வெளியே எடுத்ததே இல்லை.  டீயை அவர் சுவைத்துக் குடித்து “நல்லா இருக்கு… புதுப்பால்” என்றார். ”சார் ஒரு கார் விஷயம் சொல்லியிருந்தார். அத ஆர்டர் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார்

நான் “இப்ப எங்ககிட்ட ஸ்டாக் இல்லை. ஒருவருஷம் கூட ஆகும்” என்று சொன்னேன். “பரவாயில்லை. எங்கிட்ட எட்டு ஸ்டாண்டர்ட் இருக்கு. ஒரு பென்ஸ் வேணும்” என்றார். “பென்ஸா?” என்று என்னையறியாமலேயே வாயைப் பிளந்தேன். ”ஆமாம் இறக்குமதி செஞ்சு கொடுங்க. ஒரு வருஷத்தில் கிடைச்சா கூட போதும் அட்வான்ஸ் இப்பவே கட்டிடறேன்”

அப்போதே என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒரு பென்ஸ் என்ன விலை வரும்? எனக்கு கமிஷனே எப்படியும் ஐந்தாயிரம் ரூபாய் வரும் என்பதுதான் என் கண்முன் தெரிந்தது. எனது ஒரு வருட சம்பாத்தியம். அக்கணத்தில் அவர் மேல் இருந்த மொத்த எரிச்சலும் போய் பிரியம் வந்தது. வெறுமே சொல்கிறாரோ என்று நினைத்தேன். ”விரும்பினீங்கன்னா இப்பவே அட்வான்ஸ் போட்டுடலாம். செக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி திரும்பிப் பார்த்தார். வேலைக்காரன் ஒரு பர்சை எடுத்து அதிலிருந்த செக்கை அவரிடம் கொடுத்தான். அவர் எழுந்து அதை நீட்டினார். நான் எழுந்து நின்று அதை வாங்கி இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டேன். உடனே கொண்டு சென்று சுவரில் மாட்டப்பட்டிருந்த என் தந்தையின் படத்துக்கருகே வைத்தேன்.

என்னால் நிற்க முடியவில்லை. இந்தப் பணம் இருந்தால் ஒருவேளை சின்னவனை பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டு போய் காட்டலாம். நினைத்து நினைத்து தள்ளிக்கொண்டே வருகிறது அது. ரங்கப்பர் என் மனைவியிடம் ”எத்தனை பிள்ளைங்க?” என்றார். “மூன்று” என்றாள். அவள் வயதைப் பற்றி பாராட்டி ஏதாவது சொல்வார் என நினைத்தேன். சொல்லவில்லை. அப்படிப் பேசுபவர்கள் எளிய காமுகர்கள் என பின்னர் நினைத்தேன். பாராட்டிவிட்டார், ஆனால் அவளுக்கு ஆது தவறாகத்தெரியவுமில்லை.

அதற்குள் தேம்பிய உடலுடன் சின்னவன் தயங்கி வந்து அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டு நின்று பெரிய கண் கொண்டு அவரைப் பார்த்தான். அவன் முந்தானையால் கையை முடிவதை பார்த்து“ ஏன் இப்படி இருக்கான்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார். “அவனுக்கு என்னவோ மாரில சளி” என்றாள். அவர் “இல்லையே ரொம்ப மெலிஞ்சிருக்கிறானே?” என்றார் ”ஆமா, ரொம்ப நாளா சளி” என்றாள்.

“காசநோயாக இருக்குமோ” என்றார் ரங்கப்பர் “தெரியலை” என்று அவள் சற்று துயரத்துடன் சொன்னாள். “பாத்திரவேண்டியது தானே?” என்று அவர் சொன்னார். “பாக்கணும்” என்று அவள் சொன்னாள். அவள் கண்களில் வந்த வேதனையை பார்த்ததும் “ஒண்ணும் பயப்படாதிங்க. பார்த்துருவோம். நமக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார். நல்லா பாப்பார். இப்பல்லாம் சளிய எடுத்து லேப்பில கொண்டு போய் டெஸ்ட் பண்ணி பாக்கறதுக்கு கூட வசதி வந்திருக்கு” என்றார்.

“அதுக்கெல்லாம் …” என்று அவள் சொல்ல ”பணத்தப் பத்தி கவலப்படாதிங்க. நமச்சிவாயம் சார் எனக்கு எவ்வளவோ பண்ணிருக்கார். நான் அவருக்குத் தம்பி போல” என்றார் அவள் முகம் மலர்ந்தது. திரும்பி அவளைப் பார்த்தபோது அவள் கண்களில் தெரிந்த ஒளி எனக்கு படபடப்பை அளித்தது. அவள் அவ்வளவு அழகி என்று அப்போதுதான் கவனித்தேன். கன்னங்களும் கழுத்தும் பளபளவென்று இருந்தன. அவள் அவ்வளவு சிவப்பானவள் என்பதே அன்றுதான் தெரிந்தது. அவளுக்கு இன்னமும் இருபத்து எட்டு வயது கூட ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

”வரேன். வரேம்மா” என்று கும்பிட்டபடி அவர் எழுந்து கொண்டார். நான் அவரை தெரு வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்தேன். வண்டி கிளம்பிச் சென்றதும் திரும்பிப் பார்த்தால் எனது ஒண்டுக் குடித்தனத்தின் அத்தனை ஜன்னல்களிலிருந்தும் என்னைப் பார்த்தபடி முகங்கள் தென்பட்டன. ஒரே நாளில் என்னுடைய கௌரவம் மிக உயரே சென்றுவிட்டது

திரும்பி அறைக்குள் வரும்போது நான் மிதந்து கொண்டிருந்தேன். அந்த அட்வான்ஸ் பணத்தில் பாதியை நான் அனுப்பினால் போதும் மிச்சத்தை நானே வைத்துக் கொள்ளலாம். உடனே சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பினேன். ”ஏங்க, இவரே நம்ம பிள்ளையை டாக்டர்கிட்ட காட்டுறேன்னு சொல்றாரே?” என்று என் மனைவி சொன்னாள். “போடி அந்தாலே, தேவடியா மாதிரி வந்து மினுக்கிக்கிட்டு நில்லு. விவஸ்தை கெட்ட ஜென்மம்” என்று அவளைத் திட்டிவிட்டு அந்த செக்கையும் குடையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

நேராகச்சென்று என் வங்கியில் அந்த செக்கைக் கட்டினேன். திரும்பிவிடுமா? அதில் சந்தேகமே கிடையாது சிவசைலம் செக் திரும்பியதென்றால் அது பத்திரிகைகளில் தலைப்புச்செய்தி. என் அலுவலகத்துக்குச் சென்று பென்ஸுக்கான எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்தேன். ஏற்கனவே சிவசைலம்காரர்கள் இரண்டு கார்கள் எங்களிடம் வாங்கியிருந்ததனால் எல்லா தகவல்களும் எங்களிடம் இருந்தன. சென்னையில் இருந்து மேலதிகாரியே என்னை தொலைபேசியில் அழைத்து “பென்ஸா?” என்று மூன்று முறை கேட்டார். சிவசைலத்தின் பெயர் சொன்ன உடனேயே “ஓஹோ” என்று ஏமாற்றமடைந்தார். தானே நேரில் வந்து பேசியிருக்கலாமே என்று அவர் நினைக்கிறார் என்பதை உணர்ந்த நான் புன்னகையுடன் “எனக்கு ரொம்ப வேண்டியவர்” என்றேன். “ஓஹோ” என்று அவர் சொன்னபோது குரல் மேலும் தாழ்ந்தது.

கையிலிருந்த காசில் விஜயா கபேயில் தோசையும் அடையும் காபியும் சாப்பிட்டேன். காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு செல்லத் தோன்றியது ஆனால் போகவில்லை போகத் தைரியம் வரவில்லை. தட்சிண காளியம்மன் கோவிலுக்குச் சென்று பதினாறு கைகளுடன் உக்கிரமாக நின்ற அம்மனின் தோற்றத்தை பார்த்து வணங்கினேன். என்ன வேண்டிக் கொள்வதென்று தெரியவில்லை. ‘எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும், எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது’  என்று மட்டும் சொல்லிக் கொண்டேன். எப்படியானாலும் பணம் வருமே என ஒரு கணம் எண்ணியபோது மண்டையைத் தட்டிக்கொண்டேன். வேறேதோ சிந்தனைகளை உருவாக்கி சிதறடித்துக்கொண்டு எண்ணைக் கறை படிந்த கல்திண்ணையில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் நள்ளிரவுக்கு முன்னால் வீடு திரும்பும் வழக்கமே இல்லை.

நெடுநேரம் அமர்ந்திருந்த பிறகு ஏதோ தோன்றி என் அண்ணன் வீட்டுக்குச் சென்றேன். அவர் பொதுவாக என்னை சற்று அவமரியாதையுடன் நடத்துவார். அவருக்கு அரசாங்க வேலை. அவர் மனைவிக்கு அதில் மிகப்பெருமை. நான் படிப்பை முடிக்கவில்லை. பீ.ஏ. படிப்பில் மூன்று தேர்வுகளை அப்படியே விட்டுவிட்டேன். அதை முடிக்கும் படி அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அதை முடித்திருந்தால் எனக்கும் ஒரு அரசாங்க வேலை கிடைத்து நானும் ஒரு கௌரவமான மனிதனாக ஆகியிருப்பேன் என்று அவர் நினைத்தார். பிறகு அவரைவிட நான் ஒரு படி கீழானவன் என்பதை சொல்வதற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் “அந்த இரண்டு பேப்பரை எழுதியிருந்தால் இன்று இவன் இருக்கும் இடம் என்ன? சொன்னால் தெரியவேண்டாமா” என்று ஆரம்பிப்பார். அவருடைய அனைத்துச் சொந்தத் தோல்விகளையும் அப்படிப் பேசுவதனால் ஈடுகட்டினார். அதனாலேயே நான் அவரைத் தவிர்த்து வந்தேன்.

அலுவக கிளப்பில் பழையவிலையில் வாங்கிக்கொண்டுவந்த தி ஹிந்து நாளிதழை வாசலில் ஈஸிசேர்போட்டு அமர்ந்து  படித்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் கண்ணாடியுடன் முகத்தைச் சுளித்தபடி “வா” என்றார். ”சாப்பிட்டாயா?” என்றார் ”சாப்பிட்டேன்” என்றேன். அண்ணி என்னை வந்து பார்த்து “வாடா, லதா நல்லா இருக்காளா?” என்றாள். “இருக்கா” என்றேன். அதன் பிறகு என்ன பேசுவது என்று யாருக்கும் தெரியவில்லை. அண்ணனின் மூத்த பையன் கல்லூரி மாணவன் மேஜை விளக்கை அணைத்து போட்டு விளையாடிக் கொண்டு இருந்தான். இரண்டாவது பெண் உள் கூடத்தில்  குப்புறப்படுத்து ஆனந்தவிகடன் படித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் என்னைப் பொருட்படுத்தவே இல்லை. அண்ணி ஒரு கப் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பழையபால், மிஞ்சிய டிக்காஷன், தூக்கலாக சர்க்கரை.

“அப்ப வாறேன்” என்று கிளம்பினேன். “ஏன் வந்ததுமே கெளம்பறே?” என்று அண்ணன் கேட்டார். ”ஒண்ணுமில்லை சிவசைலம் ஜமீன்தார்கிட்ட இருந்து ஒரு பென்ஸுக்கு ஆர்டர் வந்திருக்கு. அவரைப் பாக்கணும். கிளப்புக்குப் போகணும்” என்றேன். “பென்ஸா? என்று அவர் திரும்பிக் கேட்டார். ஆர்வமில்லாதவர்போல தலைதிருப்பி ஹிந்துவை வாசித்தபடி ஓரக்கண்ணால் பார்த்து “இப்ப பென்ஸெல்லாம் மலிஞ்சிருக்குன்னு சொன்னாங்க” என்று சொன்னார். அவருடைய நப்பாசையை உடனடியாக் உடைக்க வேண்டுமென்று வெறி ஏற்பட்டது. ”எங்க மலிஞ்சிருக்கு? வருஷத்துக்கு வருஷம் ரெண்டு மடங்கு விலைக்குதான் போகுது. இப்பல்லாம் ஒன்னரை லட்சத்துக்கு மேல போகுது ஒரு வண்டி”

“ஒன்னரை லட்சத்துக்கு காரா?” என்று அவர் திகைப்புடன் கேட்டார். “ஆமா அதுக்கு மேல வரி இருக்கும். அப்புறம் எங்க பகிடி, என்னோட கமிஷன்…”. அவருடைய கண்களில் ஒரு நுட்பமான எச்சரிக்கை உணர்வு வந்தது. “உனக்கு எவ்வளவு கமிஷன் வரும்?” என்று கேட்டார். ”இருபதாயிரம் வரைக்கும் எனக்கு வந்துரும்னு தோணுது. செக் குடுத்துட்டாங்க” என்றேன். ”செக்கா?” என்றார். அவர் குரல் பரிதாபமாக இருந்தது. என் உள்ளம் குதியாட்டமிட்டது “ஆமாம் இப்பதான் பேங்குக்கு போய்ட்டு வரேன். ஒரு சின்ன மோட்டார் சைக்கிள் எடுக்கலாம்னு பாக்கறேன்”

மொத்த வீடுமே என்னைப் பார்த்தது. பையன் பதற்றமாகிவிட்டான். “மோட்டார் சைக்கிளெல்லம் ஓட்டறதுன்னா…” என்று அவர் ஆரம்பித்தார். “நான் கிளப்புக்கு போய் வரதுக்கு ராத்திரி ரொம்ப லேட்டாகுது. ஒரு மோட்டார் சைக்கிள் எடுக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. இப்ப இருக்கிற வீடு ரொம்ப சின்னது. பிள்ளைங்க பெரிசாய்ட்டாங்க. தனி வீடா பாக்கலாம்னு நினைக்கறேன்” என்று சொன்னேன். அண்ணன் பதற்றத்துடன் பார்வையை விலக்கிக் கொள்ள முயன்றார் .என் உள்ளம் போதையில் நிறைந்து தளும்பியது.  “இந்தவருசம் நாலஞ்சு பென்ஸுக்கு ஆர்டர் இருக்கு. ஒரு மூணுலட்சம் வந்திரும்னு தோணுது… வந்தா நானே ஒரு கார் ஏஜென்ஸி எடுக்கலாம்னு இருக்கேன்”

வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. அண்ணா மூச்சுத்திணறுபவர் போலிருந்தார். ”சரி வரேன்” என்று சொல்லி கிளம்பி தெருவில் வந்தபோது கைகளை விரித்து நடனமிட்டபடி சிரிக்கவேண்டும் என்று தோன்றியது. இதற்கே இப்படி என்றால் உண்மையில் ஐந்து லட்சம் எனக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?

பிள்ளைகளுடன் அண்ணி என் வீட்டிற்கு வந்து பணிந்து நிற்பதைப்பற்றி நினைத்துப்பார்த்தேன். மூத்தவனுக்கு ஒரு வேலைக்காக அண்ணா வந்து என்னிடம் மன்றாடினார். ஐந்து லட்சம்! ஐந்து லட்சம் இருந்தால் இவர்கள் எல்லாம் யார் எனக்கு? பால்காரன் என்னைப் பார்த்து தலையாட்டிவிட்டு சென்றான். அவனுக்கு ஏழுரூபாய் பாக்கி இருக்கிறது. ஐந்து லட்சம் இருந்தால் அவன் சைக்கிளிலிருந்து இறங்கி கும்பிடு போட்டுவிட்டு தள்ளிக் கொண்டு செல்வான். ஐந்து லட்சம் இருந்தால் இதோ எதிரே வரும் அர்ச்சகர் நின்று வணங்கி கோயிலில் நடக்கும் சடங்குகளைப்பற்றி பத்து நிமிஷம் பேசாமல் போக மாட்டார். ஐந்து லட்சம் இருந்தால் என் தெருவில் நிற்கும் பெண்கள் அத்தனை பேரையும் நான் வெல்ல முடியும். ஐந்துலட்சத்துக்கு வராதவளாக ஏதாவது பெண் இங்கே இருப்பாளா என்ன?

என்ன நினைக்கிறேன்?. என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள்! தலையை அறைந்து கொண்டேன். தலை வலிப்பது போல் இருந்தது. சரஸ்வதி கபேயில் இன்னொரு காபி குடித்தேன். அதன் பிறகு வீடு திரும்பினேன். என் மனைவி என்னைப் பார்த்ததுமே முகம் மலர்ந்து” நாளைக்கு காலம்பற ஆளனுப்பறேன், பையனை பெரிய டாக்டர்கிட்ட காட்டலாம்னு ஜமீன்தார் சொன்னார்” என்றாள். ”போய் இளிச்சுட்டு நில்லு” என்றேன். அவள் முகம் சுருங்கியது. “கூடவே படுத்தா அஞ்சு லட்சம் கொடுப்பார். வாங்கிட்டு வரியா?” என்றேன்.

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல் திகைத்து அவள் கண்கள் கலங்கின. ”போடி…போடீன்னா” என்று திட்டிவிட்டு என் அறைக்குள் சென்றேன். கட்டிலில் தலையைப் பற்றியபடி உட்கார்ந்துவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். அவள் வாசல் வந்து நின்று இடறிய குரலில் ”சாப்பிடலையா?” என்றாள். “போடி வெட்டிக் கொன்னுடுவேன்” என்றேன். பெருமூச்சுடன் அவள் கடந்து சென்றாள்.

காலம் தவறி சாப்பிட்ட டீயினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. படுத்து புரண்டு கொண்டே இருந்தேன். இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை யாரிடமாவது சொன்னால் வெடித்துச் சிரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் நாட்கணக்க்கில் இந்த நரகத்தில் இருக்கிறேன். எவ்வளவு பெரிய நரகம். இதை எப்படி விளக்குவது. காலையில் அவளிடம் சொல்லிவிட வேண்டும் ஜமீன்தாருடைய வலையைப்பற்றி எச்சரிக்க வேண்டும். வந்த உடனேயே அவளுடைய மிகப்பலவீனமான இடத்தைத் தொட்டுவிட்டார். குழந்தையை வைத்துதான் அவளை மடக்கப்போகிறார். கொஞ்சம் கூடுதலாகப் பணம் இருந்தால் அவள் குழந்தை சரியாகிவிடும். அதைச் சொல்லியே அவர் அவளைப்பெற முடியும்

ஆனால் உடனே தோன்றியது, அப்படியென்றால் அவர் எனக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இந்தப் பணத்தைக் கொண்டு நானே குழந்தையை சிகிச்சை செய்து காப்பாற்றிவிடமுடியுமே? தன்னுடைய வாய்ப்புகளை தானே அடைக்கிறார். எந்தக் குறுக்கு வழியையும் தேடவில்லை. அவ்வளவு தன்னம்பிக்கையா அவருக்கு? அவ்வளவு தன்னம்பிக்கையென்றால் அவருக்கு உறுதியாகத் தெரிந்த விஷயத்தில்தான் இருக்கும் அப்படியென்றால் அவர் ஜெயிப்பார். என் கைகள் பதறின அவர் ஜெயித்தால் நான் இறக்க வேண்டும். தோற்றால் நான் லட்சாதிபதி

அவளிடம் எப்படி சொல்வது, அவள் அவருக்கு அடிமைப்பட்டால் கிடைக்கும் பணத்தைவிட பத்து மடங்கு அவரைப் புறக்கணித்தால் கிடைக்குமென்று? இப்போதே சொல்லிவிட வேண்டும். எழுந்து போய் அவள் தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி அவளை எழுப்பி என்ன சொல்வது சொல்ல ஆரம்பித்தாலே பைத்தியக்காரத்தனமாக இருக்கும். நீ அவரை புறக்கணி, உனக்கு ஐந்து லட்ச ரூபாய் கிடைக்குமென்று சொல்வதா? என்ன முட்டாள்தனம். கற்போடு இருப்பதற்கு கூலியா? அவளுடைய சிறிய மூளை அதையெல்லாம் புரிந்து கொள்ளாது என்று தோன்றியது. சொல்லப்போனால் தன்னை இழிவு படுத்துவதாகத்தான் நினைப்பாள்.

உண்மையில் அது இழிவுபடுத்தலேதான். அவளிடம் நம்பிக்கை இருந்தால் எதையும் கவனிக்காமல் நான் பாட்டுக்கு இருக்க வேண்டும் அவளை எச்சரிக்கிறேன் என்றாலே அவளை சந்தேகப்படுகிறேன் என்று தான் பொருள். ஒரு மனைவியை இரவில் எழுப்பி உன்னுடைய கற்பு மேல் எனக்கு முழு நம்பிக்கை இல்லை கொஞ்சம் கவனமாக இரு என்று சொல்வது போல ஒரு ஆணின் கீழ்மை வேறொன்றுமில்லை.

என்ன இக்கட்டு, பேசாமல் கொல்லைப்புறம் சென்று அரிவாளை எடுத்து வந்து அவளை வெட்டித் தள்ளிவிட வேண்டுமென்று தோன்றியது. அதைவிட நானே தூக்கில் தொங்கலாம் தூக்கில் தொங்குவதாக இருந்தால் ஏன் இப்போதே தொங்கவேண்டும்? இன்னும் கொஞ்ச நாள்தானே? தோற்றால் ஓசையில்லாமல் தொங்கிவிடவேண்டும் ஜெயித்தால் இந்த நகரமே என் காலடியில் இருக்கும். இல்லை, தோற்றால்கூட எனக்கு நிறையப்பணம் வந்துவிடுமோ? என்ன மண்டை இது.

மறுநாள் ஜமீன்தாரும் அவருடைய உதவியாளனுமாக வந்து என் மனைவியையும் குழந்தையையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனார்கள். டாக்டர் அவனுடைய மார்ச்சளி முற்றிய நிலையில் இருப்பதாகவும் உடனடியாக சிகிச்சையை தொடங்கியாக வேண்டுமென்றும் சொன்னார். நான் இரவு வீட்டுக்கு வந்தபோது என் மனைவி மிகுந்த பதற்றத்துடன் இருந்தாள். சட்டையைக் கழற்றுவதற்கு முன்னரே அவள் சொல்ல ஆரம்பித்தாள். “ஏங்க, இன்னும் ஆறுமாசம் இப்படியே வெச்சிட்டிருந்தா பையனைக்காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்க. டிபி எலும்புக்குள்ளெல்லாம் போயிருமாம்” நான் ”அப்படியா?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.

அவள் அரண்டு போய்விட்டாள். பின்னர் மேலும் அழுகை கலந்து “நம்ம தப்புதான் எதையாவது வித்து இல்லேன்னா கடனவாங்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கணும். இந்த பையித்தார டாக்டரோட மருந்தையே கொடுத்திட்டிருந்துட்டோம். ரொம்ப முத்திடுச்சுங்க” என்றாள். தணிந்து, ஆனால் அவள் முகத்தைப்பார்க்காமல் “சரியாயிடும்டீ” என்றேன் ”நல்ல வேளையா இவர் வந்தார். தெய்வம் மாதிரி” என்றாள். ’ஆமாண்டீ, போய் படுத்துக்கோ. அள்ளிக்குடுப்பார்’ நா வரைக்கும் வந்தது, சொல்லவில்லை. அடக்கிக் கொண்டேன்.

எத்தனை எளிதாக உள்ளே நுழைகிறார். எண்ன எண்ண வியப்பாக இருந்தது. இங்கே பெண்களை அவரைப் போன்றவர்கள் விட்டு வைத்திருப்பதே அவர்களுடைய பெருந்தன்மையினால்தான். உண்மையிலே அவர்கள் எவரையும் எளிதாக வீழ்த்திவிட முடியும். இதை நான் தடுக்கக் கூடாது. என்ன நிகழ்கிறதென்று பார்க்க வேண்டும், இதைத் தடுத்து நான் வென்று விட்டால்கூட என் மனதுக்குள் ஒரு பெரிய சந்தேகம் இருந்து கொண்டிருக்கும். இவளாகவே எதிர்த்து நின்று வென்றாள் என்றால் என் மனதுக்குள் என் மூதாதையரிடம் இருந்து வந்த நம்பிக்கை உறுதிப்படும். சொல்லக்கூடாது, ஆமாம்.

”அவருக்கு எல்லாரையும் தெரியும். அவர் நினைச்சா காப்பாத்திருவார். நீ அவர்ட்ட எல்லாத்தையும் சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு இப்பதான் ஆர்டர் வர ஆரம்பிச்சிருக்கு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் நான் வந்து ஒண்ணும் ஆகப்போறதில்ல. நீயே கவனிச்சுக்க” என்று சொன்னேன். அவள் குழப்பத்தில் தலையாட்டினாள். சிரங்கை சொறிந்து கிழித்தால் இதமான எரிச்சல் வருமே, அதை அனுபவித்தேன். ஏனோ அன்று நீண்டநேரம் குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டுக்குளித்தேன்.

தொடர்ந்து காலையில் அவருடைய ஓட்டுநர் வந்து அவளைக்கூட்டிக் கொண்டு சென்றான். பல முறை ஆஸ்பத்திரிக்கு அவரே வந்ததாக அவள் சொன்னாள். எல்லாவற்றையும் ஒருவகை ஒப்புதல் வாக்குமூலம் போல என்னிடம் சொல்வாள். எல்லாவற்றையும் சொல்லி என் நம்பிக்கையைப் பாதுகாக்க அவளே முயல்கிறாள் என்றால் அவளுக்கு ஏதோ உள்ளோட்டம் இருக்கிறது என்றா பொருள். இல்லை, இப்படிச் சொல்லிவிடுவதன்மூலம் அவள் ஒரு அரண் கட்டிக்கொள்கிறாரா? அப்படியென்றால் அதுவும் அவளுடைய உறுதில்லாமையைத்தானே காட்டுகிறது?

ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் ஒப்பிப்பதுபோலச் சொல்வாள். பின்பு வேலைகளைச் செய்தபடியே சொல்ல ஆரம்பித்தாள்.  நான் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு முறை அவரைப்பற்றி ஏதாவது அவள் சொல்லும் போதும் கண்ணாடியை உரசுவது போன்ற ஒரு கிறீச்சிடல் மூளைக்குள் எழும். உடல் சற்று உலுக்கும்.பாய்ந்து அவளை அறையவேண்டும் என அரிவாளை எடுத்து என் சங்கை அறுத்துக்கொள்ளவேண்டும் என.

ஆனால்  கைக்கு வந்த பணம்  எனக்கு உற்சாகத்தை அளித்தது புதிய அல்பாக்கா கோட்டும் காலிகோ சட்டையும் வாங்கிக் கொண்டேன். நெடுநாளாக ஆசைப்பட்ட ஒரு சுவிஸ் கைக்கடிகாரத்தை இரண்டாம் விலைக்கு வாங்கினேன். அலுவலகத்துக்கு ஒரு ஆலிவெட்டி தட்டச்சுப் பொறியை வாங்கினேன். அனேகமாக தினமும் ஈஸ்டர்ன் மில்லினர்ஸ் கிளப்புக்கு சென்று மது அருந்தினேன். ”என்ன இந்தப்பக்கம்?” என்று அங்கே கேட்டார்கள். ”நீங்கல்லாம் காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு தானே போவிங்க?” என்றார் நிர்வாகி. “இங்க ஒரு பார்ட்டி. ஒரு பென்ஸுக்கு ஆர்டர் வந்திருக்கு” என்றேன். அவர்கள் முகங்களில் குழப்பமும் திகைப்பும். எனக்குள் ஒளிந்திருந்து சிரித்துக்கொண்டேன்.

பணம் வந்ததும் எல்லா கிளப்களிலும் உறுப்பினராக ஆகவேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். ஒன்றும் புரியாத நிலை. எங்கிருக்கிறேன் என்றே தெரியாத பித்து. ஏதேதோ செய்து கொண்டு ஒவ்வொரு நாட்களையும் கடத்தினேன். மூன்றுமாதக்காலம். இன்னும் ஒருமாதம்தான். ஒவ்வொரு நாளும் என் மனைவி மாறிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். அலங்கரித்துக் கொள்கிறாள். எளிய ஆடை என்றாலும் நேர்த்தியாக உடுத்திக் கொள்கிறாள். எப்போதும் தனக்குள் மெல்ல பாடிக்கொள்கிறாள். அவ்வப்போது முகம் சிவக்கிறாளா? கண்களில் ஒளி வந்துவிட்டதா? நடையில் துள்ளல் கலந்துவிட்டதா? இல்லை என் மனப்பிரமைகள் தானா?

ஆனால் கண்டிப்பாக அவளை அழுத்திக் கொண்டிருந்த பெரிய எடை எடுக்கப்பட்டுவிட்டது. அவள் ஒவ்வொருநாளும் வெறியுடன்  வீட்டுவேலைசெய்தது. அந்தக்கவலையிலிருந்து தப்பத்தான். அந்த பையன் இறந்துவிடுவான் என்று நம்பி அதை அஞ்சி அஞ்சி உருகிக்கொண்டிருந்தாள். இரவில் பலமுறை எழுந்து அவனைத் தொட்டுப்பார்ப்பாள். அவனை இடுப்பிலேயே வைத்திருப்பாள். தண்ணீர் மொண்டு வரும்போதுகூட அவன் இன்னொரு இடுப்பில் இருப்பான். அவனும் அவள் முந்தானையைவிட்டு விலகமாட்டான். இதோ. விடுதலை அடைந்துவிட்டாள். இந்த விடுதலைக்கு ஈடாக அவள் என்னதான் கொடுக்கமாட்டாள்? அப்படியென்றால் தோற்றுவிட்டேனா?

காதுவழியே ஸ்க்ரூவை விட்டு மூளையைக் குடைவாதுபோன்ற போன்ற வெறியுடன் காஸ்மாபாலிட்டன் கிளப்புக்குச் சென்றேன். அங்கு என்னைப்பார்த்த அத்தனை பேருடைய பார்வையும் மாறியிருந்ததைக் கண்டேன். யாரும் எதையும் கேட்கவில்லை, ஆனால் அதைப்பற்றிதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் தனியாக அமர்ந்திருந்த போது ரங்கப்பர் வந்தார். என்னைப்பார்த்து சிரித்து நேரடியாக என் அருகில் வந்து அமர்ந்தார். இயல்பாக கையசைத்து மதுவுக்கு ஆணையிட்டபின்  “பையன் தேறிவிடுவான். ஆனால் கொஞ்சம் கஷ்டம். எலும்பில் எல்லாம் டிபி இருக்கிறது” என்றார். “சொன்னாள்” என்றேன்.

“உங்க மனைவி நல்லவர்கள்” என்றார். கோணலாக வாய் இழுபட, “ஏன், வருகிறேன் என்று சொல்லிவிட்டாளா?” என்றேன். “இன்னும் இல்லை” என்று புன்னகை செய்தார். “இரண்டுவகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வகையான் பெண்களை ஆசை இயக்கிக் கொண்டு செல்லும். இன்னொரு வகையான பெண்களை கடமைகளின் அழுத்தங்கள் கொண்டு செல்லும். நல்ல பெண்கள் அழுத்தத்தால் வளைந்துவிடுவார்கள். மற்றவர்கள் ஆசையால் வளைந்துவிடுவார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “எப்படி இருந்தாலும் வளைவார்கள்” என்றார்.

“நாம் இதைப்பற்றி பேசவேண்டாம்” என்றேன். ”ஆமாம் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கிறது” என்றார். நான் அவர் கண்களைப்பார்த்து “ஐந்து லட்சத்திற்கு ஒரு அம்பாசிடர் ஏஜென்சி எடுப்பதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்குதான் எல்லாத் தகவல்களையும் பார்ததேன்” என்றேன். அவர் என் விழிகளைச் சந்தித்து “இன்னும் பதினாறு நாட்கள். பார்ப்போம்” என்றார். எனக்கும் சேர்த்து அவர்தான் அன்றும் மது சொன்னார். அவருக்குப்பிடித்த பிராண்ட் பிளாக்லேபிள். அவரிடமிருந்துதான் அந்த ருசி எனக்கு தொற்றிக்கொண்டது

அதன்பிறகு தினமும் காஸ்மாபாலிட்டன் கிளப்புக்குச் செல்லத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்தேன். பொதுவாக என்னிடம் எதையாவது பேசிச் சிரிப்பார். பெரும்பாலும் நான் தனியாகத்தான் அமர்ந்திருப்பேன். என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று யாரும் என்னிடம் கேட்கவில்லை. அவரிடமும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு நாள் என்னிடம் நாச்சிமுத்து வழக்கத்திற்கு மாறாக தனியாக வந்து பேசினார். நான் கிளப்பிலிருந்து வெளியே இறங்கும்போது அவர் என்னுடன் வந்தார். வழக்கமாக என்னை அவர் மிகக் கீழ்நிலையிலே வைத்திருப்பார். அன்று என் தோளில் கைவைத்து ”உனக்கு என்னுடைய மகன் வயது” என்றார். “சொல்லுங்கள் கவுண்டரே” என்றேன்.

“எனக்கு வயசு எழுபது. பதினெட்டு வயதில் மைனர் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். அவர் சொல்வதுதான் சரி. எல்லா பணக்காரர்களுக்கும் அது தெரியும் .பெண்களுக்கு எப்படியும் கஷ்டங்கள் இருக்கும். அந்தக் கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கான தன்னம்பிக்கையோ அதற்கான அறிவோ இருக்காது. அதற்கு பிறரைத்தான் நம்பியிருப்பார்கள்.  இன்னொரு வகையான பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு இன்னும் அதிகமாக கிடைத்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கும். இண்டு பேரையுமே ஜெயித்துவிடலாம். நான் அதிகம் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் ரங்கப்பரைவிட அதிகமாவே நானும் ஜெயித்தவன்தான். ஜெயிக்க மட்டும்தான் செய்திருக்கிறேன். ஒரு இடத்தில் கூட தோற்றது கிடையாது”

நான் அசையாது நின்றேன் என் கால்கள் மட்டும் பதறிக்கொண்டிருந்தன. அவர் தமிழில் “பேசாம அவளக்கூட்டிட்டு எங்கியாச்சும் ஓடிடு. இல்ல ஒரு ரூபா தானே, நீ சொன்னது தப்புன்னு ஒத்துக்கோ” என்றார். “அதெப்படி?” என்றேன். “சரிதான் தம்பி, அப்படித்தான் நடக்கும் நான் ஒத்துக்கறேன்னு சொல்லி உன் மனைவியை விட்டுருன்னு கேட்டுரு. அவ்வளவுதான், முடிஞ்சு போச்சு. உன்னவிட பெரிய ஒருத்தர்ட்டதான தோக்கிறே? ஆமா, சிரிப்பாங்க. ஒரு பத்து நாள் பேசுவாங்க. அவ்ளவுதான், அதோட மறந்துருவாங்க. ஏதோ ஒன்னு ஆயிருச்சுன்னா உன் வாழ்க்கை அழிஞ்சிரும் .அப்றம் உன்னால நிம்மதியா இருக்கவே முடியாது, பாத்துக்கோ” என்றார்

“பாப்போம்!” என்று நான் உரக்க சொன்னேன். “என்ன சொல்றே?” என்றார் அவர். “பாப்போம்” என்று நான் மீண்டும் சொன்னேன். அவர் என்னைப்பார்த்தபடியே சென்று வண்டியில் ஏறிக்கொண்டார். ஆனால் அவர் பேசிய பிறகு நான் அபாரமான உறுதியை அடைந்தேன். என் மனதுக்குள் இதைப்பார்த்துவிடுவது, கடைசி வரைக்கும் நின்றுவிடுவது என்று நானே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேன். வென்றால் நான் அடைவதைப்போல நிறைவை எங்கே தேடமுடியும்? அந்தவாய்ப்பை இழந்தால் வாழ்நாளெல்லாம் எண்ணி ஏங்குவேன் என தோன்றியது.

விசித்திரமானதோ நுட்பமானதோ எதையுமே ரங்கப்பர் செய்யவில்லை. ஒரு பெண்ணை வெல்வதற்கு ஆண் என்ன செய்வானோ அதையெல்லாம்தான் செய்தார். பேச்சுவாக்கில் அவள் அழகையும் படிப்பையும் புகழ்ந்தார். அதை நேரடியாகச் சொல்லவில்லை. அந்தப் புகழ்ச்சிகளை நான் அவரிடம் சொன்னதாக அவளிடம் சொன்னார். பிள்ளைகளுக்குப் பரிசுகள் வாங்கிக் கொடுத்தார். அவள்  தயக்கம் விலகி அவற்றைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்த பிறகு அவளுக்கு சிறிய பரிசுகளைக் கொடுத்தார் அதைக் கொடுப்பதற்கு அவரே எஒரு சந்த்ர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டார். “பெரிய ஆஸ்பத்திரிக்குச் செல்கிறோம். இன்னும் கொஞ்சம் நல்ல ஆடைகளை அணியலாமே” என்று அவளுடைய ஓட்டுநரை வைத்துச் சொல்லச்செய்தார். அதன் பிறகு  அவரே அவளுக்கு உடைகளை வாங்கிக் கொடுத்தார்.நல்ல நிறங்களில் விலைமதிப்புள்ள உடைகள். டிரைவர் கொடுத்தபோது அது தவறாகத் தெரியவில்லை, ஆனால் கொடுத்தது யார் என வாங்கியவரின் அகம் அறிந்திருந்தது.

ஒரு நாள் அவள் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பதைப் பார்த்தேன். என்னிடம் அதைக்காட்டி ஜமீன்தார் அதை வாங்கிக் கொடுத்ததாக சொன்ன்னார். அரைக்கணம் அவளுடைய பார்வை என்னைத் தவிர்த்து விலகி மீண்டு வந்துவிட்டது. “சும்மா கொடுத்தாரா?” என்று நான் கேட்டேன். “இல்லை உங்களுக்கு குடுக்க வேண்டிய பாக்கிப் பணத்திலெதான்ன்னு சொன்னார். உங்க கிட்ட பேசுறதாச் சொன்னாரே, சொல்லலியா? என்றாள். “ஆமா சொன்னார் ”என்றேன்.

“அஞ்சு பவுன்” என்றாள். ”இப்போ வாரத்தில் மூணு தடவை பெரிய ஆஸ்பத்திரிக்குப் போற மாதிரி ஆகுது. கொஞ்சம் மரியாதையா போனாதான் அங்குள்ளவங்க கவனிக்கறாங்க” என்றாள், சாப்பாடு எடுத்து வைத்தாள். பரிமாறவில்லை. நானே போட்டுச் சாப்பிட்டேன். பையனின் ஆடையை மாற்றியபடி “ஆஸ்பத்திரியிலே படுக்கையில ஒண்ணுக்குப் போய்டறான்னு திட்றாளுக. அங்க நர்ஸ் எல்லாம் பாத்தா என்ன மாதிரி இருக்காங்கன்னு நினைக்கறிங்க? ஒவ்வொருத்தரும் சீமாட்டி மாதிரி தலையில் வெள்ளை குல்லாயை வெச்சுகிட்டு…அய்யோ அப்டி ஒரு பவிஷு. லூஸியான்னு ஒரு சட்டக்காரி. இங்கிலீஸ்லயே கண்டபடித் திட்டுவா. இவர் கூட போனதனால எங்கிட்ட மரியாதையா பேசறாங்க. கொஞ்சம் ஒருமாதிரி இருந்தா அங்க போடி, இங்க வாடி, ஏன் இங்க நிக்கறேங்கறாங்க. செத்தாக்கூட திரும்பியே பாத்திருக்க மாட்டாளுக” என்றாள்.

அவளைப்பார்க்காமல் “அப்படியா?” என்றேன். அவள் பேசிப் பேசி சமரசங்களையும் சமாதானங்களையும் செய்து கொண்டு எங்கு சென்று கொண்டிருக்கிறாள் என்று எண்ணினேன். ஆம், அதற்குள்தான். சந்தேகமே இல்லை. ஜெயிப்பதற்கான வாய்ப்பு அரை சதவீதம்தான். ஆனால் அந்த அரை சதவீதத்தில் ஜெயித்துவிட்டேன் என்றால் என்னுடைய வாழ்க்கை உச்சகட்டத்தை அடைந்துவிடும். பழைய பிரிட்டிஷ் வீரர்கள் துவந்த யுத்தம் செய்வார்கள் என்பதை படித்திருக்கிறேன். ஏழுமுறை மாறி மாறிச் சுட்டுக்கொள்ள வேண்டும். இரண்டில் ஒருவர்தான் உயிரோடிருக்க முடியும் சாவதற்கான வாய்ப்பு மிக அதிகம். இருந்தாலும் எல்லா சந்தர்ப்பத்திலும் துவந்த யுத்தத்திற்கு அறைகூவிக்கொண்டே இருப்பார்கள். அந்த துவந்த யுத்தம் நடைபெறுவது வரையிலான நாட்கள் அவர்கள் வாழ்க்கையை மிக அர்த்தமுள்ளதாக்கிவிடும். ஒவ்வொரு நிமிடமும் ,ஒவ்வொரு கணமும் உயிர்த்துடிப்பாக மாறும். துவந்த யுத்தத்தைப்போல பெரிய சூதாட்டம் வேறில்லை என்று வெள்ளைக்காரர் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் ஒரு துவந்த யுத்தம் தான் ஜெயித்தாகவேண்டும். இல்லையென்றால் இருக்கிறது மரணம்

ஆனால் என்னால் உண்மையிலேயே இறந்துவிட முடியுமா? இறப்பேன் என்று தோன்றவில்லை. இறப்பைப்பற்றி இவ்வளவு எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவன் இறக்க மாட்டான். இறப்பவர்கள் அந்த கணத்தில் திடீரென்று முடிவெடுப்பவர்கள். இவ்வளவு நினைப்பதனாலேயே நான் நிறைய தப்பிக்கும் மார்க்கங்களை கண்டுபிடித்திருப்பேன். நிறைய விளக்கங்களை உருவாக்கி வைத்திருப்பேன். ஒவ்வொரு நாளும் முறுக்கம் ஏறிஏறிச் சென்றது. நொடி நொடியாக வாழ்ந்தேன். பத்துநிமிடம் என்பது அவ்வளவு நீளமானது என்று அறிந்தேன்.

பிறகு அந்த நெருக்கடி கட்டவிழ்ந்தது. அதுவும் பையன் வழியாகத்தான் நான் என் அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு சேவகர் சைக்கிளில் தேடி வந்தார். பையனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், நோய் உச்சத்தில் இருப்பதாகவும் சொன்னார். நான் கைவண்டி வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். உள்ளே சென்றவுடன் என் மனைவி ஓடி வந்து என் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதாள்.

”என்ன ஆச்சு?” என்றேன். ”தெரியல்லே! தெரியல்லே!” என்றாள் உள்ளே சென்று டாக்டரைப் பார்த்தேன் டாக்டர் வடக்கத்திக்காரர் மழலைத்தமிழ் பேசுவார். “இதுக்கு ஒரு மருந்துதாங்க இருக்குது. அதை குடுத்திட்டிருக்கோம். இப்ப திடீர்னு அந்த மருந்து ரெசிஸ்ட் பண்ண ஆரம்பிச்சிருச்சு. காய்ச்சல் கூடிட்டே போகுது” என்றார். நான் “என்ன பண்றது டாக்டர்?” என்றேன். “பார்ப்போம்” என்று சொன்னார். “என்ன ஆகும்?” என்று உரக்க கேட்டேன். “கடவுள்தான் இனிமே” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தது. “இனிமே எதாவது மருந்திருக்கா?” என்றேன். “ஒரு மருந்து இருக்கு. கண்டுபிடிச்சு ஒரு வருஷம் கூட ஆகல்லே. லண்டன்லேருந்து வரவழைக்கணும். விமானத்தில் வரணும். வர்ரதானாக்கூட எப்டியும் நாலஞ்சுநாள் ஆகும். அதுவரைக்கும் இந்தக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருக்கணும்” என்றார்

நான் வெளியே வந்தபோது அங்கே ரங்கப்பர் இருந்தார். அவள் அவரிடம் அழுதுகொண்டே பேசிக்கொண்டிருந்தாள். என்னைக்கண்டதும் ரங்கப்பர் “இருங்க நான் பேசிட்டு வர்ரேன்” என்று உள்ளே சென்றார். நான் தளர்ந்து அமர்ந்தேன். பதறியபடி “என்ன சொல்றார்? டாக்டர் என்ன சொல்றார்?” என்றாள் என் மனைவி. நான்  “இரு அவர் வரட்டும்” என்றேன். அந்தட் தளர்ந்த சொற்கள் வழியாக அவளை அவரிடம் நானே தள்ளிவிட்டேன்.

அவர் வெளியே வந்து என்னிடம் “லண்டன்லே மருந்து இருக்கு. இப்பவே தந்தி அனுப்பி கொண்டாரச் சொல்றேன். நாலஞ்சு நாளிலே வந்திரும். அதுவரை பையன் உடம்பு பேலன்ஸிலே இருக்கறமாதிரி பாத்துக்கிடுங்கன்னு சொல்லிட்டேன்” என்றார். அவள் “அங்கேருந்தா…. அய்யோ” என்றார். ரங்கப்பர் “செலவப்பத்திப் பாக்காதீங்க. சார் நமக்கு வேண்டியவர். பாத்துக்கலாம்” என்றார் . அவள் சட்டென்று வீரிட்டு அழுதபடி கைகூப்பினாள். அப்படியே கால்தளர்ந்து பெஞ்சில் அமர்ந்து கதறினாள். ரங்கப்பர் என்னிடம் “பாத்துக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

அவள் அழுதுகொண்டிருக்க நான் அருகே சும்மாவே நின்றேன். பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து வெளியே வந்தேன். என் மனைவி எழுந்து ஓடி வந்து என் கைகளைப்பற்றிக் கொண்டாள். “என்ன சொன்னார்? பொழச்சுக்குவான்னு சொன்னாங்கல்ல? சொல்லுங்க” என்றாள். “பொழச்சுப்பான்” என்றேன். “ஜமீன்தார் பாத்த்துகறேன்னு சொன்னார். அவர் ரூபத்திலே மருதமலை முருகனே சொல்ற மாதிரி இருந்தது” என்றாள். ”அவரு காலிலே விழுந்து கும்பிடணும்னு தோணிச்சுதுங்க. ”.

விழுந்துவிட்டாயா என்று எனக்குள் கேட்டுகொண்டேன். “அவர்தாங்க இனிமே. அவர்தாங்க இனிமே” என்று கதறி அழுதாள். அவள் கொஞ்சம் நிலைதவறியதுபோல் இருந்தது. ஆஸ்பத்திரியில் யாரும் இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ரங்கப்பர் தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார். நான் அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு பக்கத்து வீட்டு பாட்டியிடம் ஏற்பாடு செய்திருந்தாள். குழந்தைகள் தூங்கிவிட்டன. அவளுக்கு பாட்டி கொடுத்த கஞ்சியைக் குடிக்கவில்லை. அழுதுகொண்டே படுத்து தூங்கிவிட்டாள்.

ஆனால் அந்திநேரம் ஏழு மணிக்கு எழுந்து “என்னாலே இங்க இருக்க முடியாது. இங்க என்னால் தூங்க முடியாது. நான் போறேன்”. என்றாள். “என்ன பண்றே?” என்றேன். ”நான் அங்கதான் இருப்பேன். என் பையன் பக்கத்திலேதான் இருப்பேன்” என்று வீரிட்டாள். ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. சைக்கிள் ரிக்‌ஷா வரவழைத்து அவளை ஏற்றிக் கொண்டு திரும்ப ஆஸ்பத்திரிக்குச் சென்றேன் ”இங்கல்லாம் இருக்க முடியாதுங்க” என்றார் டாக்டர். “இங்கதான் இருப்பேன்னு அழறா” என்றேன். ”அப்படீன்னா வராந்தாலதான் உக்காந்துக்கணும்” என்றார் ”வராந்தால இருக்கேன் ,வராந்தால இருக்கேன்” என்றாள். அவளை வராந்தாவில் உட்கார வைத்துவிட்டு நானும் உட்கார்ந்தேன். காலை வரை இருவரும் தூங்கவில்லை.

காலையில் அவளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு நானே தோசை வார்த்து சாப்பிட்டு சற்று படுத்தேன். அறியாமலேயே மதியம்கடப்பது வரை தூங்கிவிட்டேன். முன்மாலையில் எழுந்து ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அங்கு என் மனைவி இல்லை. ஜமீன்தார் வந்தார், அவருடன் அவளும் காரில் சென்றுவிட்டாள் என்றார் காவலர். என் உடலிலிருந்து ரத்தமெல்லாம் வடிந்து சென்றது. ஓய்ந்து பெஞ்சில் அமர்ந்தேன். நேரமென எதையும் அறியாமல் அமர்ந்திருந்தேன். எட்டு மணிக்கு டாக்டர் வந்தார். “பையன் நிலை அப்படித்தான் இருக்கிறது, ஆனால் கீழே போகவில்லை. மருந்துவந்தால் பிழைக்கலாம்” என்றார்

”அந்த மருந்து எதிர்வினையாற்றியது என்றால் பயபமில்லை” என்றார். நான் கலங்கியிருப்பதைக் கண்டு என் தோளில் தொட்டு “நீங்க முன்னாடியே பாத்திருக்கணும். நீங்க குடுத்த சின்னச் சின்ன மருந்தாலதான் ரெஸிஸ்டென்ஸ் உண்டாயிருக்கு. பாப்பம். நம்பிக்கையோட இருங்க” என்றார்.

நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். காலையில் நான் பெஞ்சிலேயே தூங்கிக் கிடப்பதை உணர்ந்து எழுந்தேன். அங்கேயே முகம் கழுவிவிட்டு என் அலுவலகத்துக்கு போய் கடிதங்கள் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். சில கடிதங்களை அனுப்பினேன். வீட்டுக்குச் சென்று குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனவா என்று பார்த்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் மனைவி வீட்டுக்கு வரவில்லையென்று பாட்டி சொன்னாள். இரண்டாமவன் அம்மா எங்கே என்று இரவில் திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறான்

“இங்கேயே இருங்கள் விட்டுக்கு போகவேண்டாம்” என்று சொல்லி அவர்களுக்குச் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். ஆஸ்பத்திரியில் என் மனைவி இருந்தாள். வராந்தாவின் மறு எல்லையில் அவளைப் பார்த்தபோதே எனக்குத்தெரிந்துவிட்டது, ஏதோ நடந்திருக்கிறது என்று. அருகே கைகளைக் கட்டிக்கொண்டு வேறுபக்கம் பார்த்துக் கொண்டு ரங்கப்பர் நின்றிருந்தார். என் காலடி ஓசையைக் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அவர் அருகே வந்து என்னிடம் “சாயங்காலம் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் பார்ப்போம். மருந்துக்குச் சொல்லியிருக்கிறேன். நாளைக்கு காலை வந்திடும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

உடலின் எடை பத்து மடங்கு கூடியவன் போல அவள் அருகே சென்றேன். அவள் திரும்பியே பார்க்கவில்லை. “என்ன சொன்னார் டாக்டர்?” என்று கேட்டேன் ஒன்றுமில்லையென்று தலையாட்டினாள். வேறு என்ன கேட்பதென்று தெரியவில்லை. அவள் அருகிலேயே அமர்ந்திருந்தேன் அடிக்கடி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே நாளில் அவளுக்கு பத்து பதினைந்து வயது கூடிவிட்டது போல தோன்றியது.  அவள் அறிந்த வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது போல. அவளுடைய உடலுக்குள் இருந்து இன்னொரு பெண் வெளி: வந்து அமர்ந்திருப்பது போல.

அன்று பகல் முழுக்க அங்குதான் இருந்தேன். அவள் அங்கேயே சிலை போல அமர்ந்திருந்தாள். அந்தியில் “வீட்டுக்கு வருகிறாயா?” என்றேன். தலையசைத்தாள். ”வா” என்று கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். வரும்வழியிலும் அவள் அப்படியே இருந்தாள். முகம் வீங்கியது போலிருந்தது. நான் ஓரக்கண்ணால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஆயிற்று? அதை எப்படிக் கேட்பது?

ரிக்‌ஷாவில் இருக்கையில் எனக்கு கொஞ்சம் புரிவது போலிருந்தது. மெல்ல என் உடல் தளர்ந்தது. சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து வந்தது. மகாபாரதத் தருமனுக்குப்பின் மனைவியை வைத்துச் சூதாடியவன் நான்தான். எங்காவது அதைச் சொல்லவேண்டும். கேட்பவர்கள் சிரித்துக் குப்புற விழுவார்கள். யார் கண்டது என்னைவைத்து சினிமாகூட எடுப்பார்கள். அறியாமல் சிரித்தேன். அவள் திரும்பிப்பார்க்கிறாளா என்று பார்த்தேன். அவள் அங்கேயே இல்லை

வீட்டை அடைந்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு அழுத இரண்டாமனை அவள் மெல்ல தலையை வருடினாள். ஆனால் குனிந்து அவனைப் பார்க்கவில்லை. மூத்தவன் “குத்தாலம் எங்க அம்மா?’ என்றபோது “வந்திடுவான்” என மெல்லிய குரலில் சொன்னாள். பின்னர் காலோய்ந்தது போல தரையில் சுவர் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். பாட்டி பக்கத்து அக்ரஹாரத்திற்குச் சென்று அரைத்த தோசை மாவு வாங்கி வந்தாள். அவளே தோசை செய்து கொடுத்தாள். அவள் அதை கொல்லைப் பக்கம் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டாள். நான் கைகழுவச் சென்றபோது அவள் சாப்பிடுவதைப் பார்த்தேன். அவள் பார்வை வேறு எங்கோ வெறித்திருந்தன. நீர்பரவியது போலிருந்தன விழிகள். ஆனால் அப்போது மிக அழகாக இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது.

அவள் பாயை போட்டு போர்வையால் தலையையும் மூடிக்கொண்டு மூட்டை போல படுத்துத் தூங்கத் தொடங்கினாள். நான் அவளை நோக்கிக் கொண்டு நின்றேன். ஆம், முழுமையாகத் தோற்றுவிட்டேன். அதுதான், வேறொன்றுமில்லை. காஸ்மாபாலிட்டன் கிளப்புக்குச் சென்று அவரை எதிர்கொள்ளவேண்டும். இல்லை நான் ஆண்மகன் என்றால் அப்படியே சென்று தூக்கிலே தொங்கிவிட வேண்டும். ஆனால் அதை உறுதி செய்துகொள்ளவேண்டும். என்ன செய்வது? அவளை எழுப்பி அதைக் கேட்பதா? என்னவென்று? இரவு அவருடன் இருந்தாயா என்றா? அதைவிட காஸ்மாபாலிடன் கிளப்புக்குச் செல்வதே மேல். ஆனால் அங்குசென்று கூசிச்சிறுப்பதைவிட சாகலாம்

ஏன் சாகவேண்டும்? இப்படியே கிளம்பிச்சென்றுவிடலாம். பிள்ளைகளையும் அவளையும் ரங்கப்பர் கைவிட மாட்டார். ஒருவேளை அவர்களின் நல்லகாலம் இனிமேல்தான் தொடங்கவே போகிறது. மிகவும் சோர்வாக உணர்ந்தேன். உடலில் குளிர்ந்த நீர் நிறைந்திருப்பதுபோல. கையும் காலும் எடைகொண்டிருந்தன. கிளம்பு. அவ்வளவுதான்

ஆனால் அப்படிக் கிளம்பிவிட முடியாது என்றும் என் அகம் அறிந்திருந்தது. என்ன நடந்தது என்று உறுதி செய்துகொள்ளாமல் எங்கும் என்னால் வாழ முடியாது. முடிவு செய்ததும் ஓரளவு பதற்றம் குறைந்தது. கொல்லைப் பக்கம் சென்று தகர பீப்பாயில் பிடித்து வைத்திருந்த நீரை அள்ளி அள்ளி விட்டுக் குளித்தேன். மொத்த நீரையும் விட்ட பின்னரும் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. என் மிகச்சிறந்த சட்டையை அணிந்து கொண்டேன். மேலே புதிய கறுப்புக்கோட்டு. பொன்முலாம் பூசப்பட்ட சட்டைப் பித்தான்கள் இருந்தன. அடிக்கடி அணிவதில்லை. அவற்றை பெட்டிக்குள் இருந்து எடுத்து பொருத்திக் கொண்டேன். வெள்ளி மூடிப்பேனா. கண்ணாடி. கிளம்பும்போது என்னை நானே அப்பால் நின்று பார்த்தேன் ஒருவகையான தைரியம் வந்தது

செல்லும்போது சரஸ்வதி கபேயில் நுழைந்து வயிறு உடைந்து தெறிக்கும் படிச் சாப்பிட்டேன். நான்கு மசாலா தோசைகள். இரண்டு அடைகள். அதற்கு மேல் ஒரு வெண்பொங்கல். என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஆனால் வெளியே சென்ற போது பதற்றம் முழுமையாகவே குறைந்து உடல் ஒருவகையான மதர்ப்பை அடைந்துவிட்டிருந்தது.

நான் செல்லும்போது காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அத்தனை பேரும் இருந்தனர். அவர்களை ரங்கப்பர் வரச்சொல்லியிருந்தார் எனத் தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் என்னை நோக்கி மேலாளர் கோணலாக புன்னகை செய்தார். நான் சென்று ஒரு மேஜையில் அமர்ந்தேன். அனைவரும் என்னைத்தான் பார்த்தார்கள். ஆனால் சாதாரணமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டார்கள். மூச்சுவிடும் ஒலி கேட்கும் அளவுக்கு காஸ்மாபாலிடன் கிளப் அமைதியாக இருந்தது அப்போதுதான் என நினைத்துக்கொண்டேன்

வெளியே ரங்கப்பரின் பியூக் காரின் ஒலி கேட்டது. என் இடதுகால் மட்டும் தன்னிச்சையாக ஆட ஆரம்பித்தது. யாரோ “வருகிறார்” என்று முணுமுணுத்தார்கள். ஓரிரு கரண்டிகள் ஒலியெழுப்பின. நான் குனிந்தே அமர்ந்திருந்தேன். எல்லா ஓசைகளும் சற்று அடைத்தது போலக் கேட்டன. அவருடைய வேலையாள் அவருடைய பொருட்கள் அடங்கிய மூங்கில் கூடையுடன் உள்ளே வந்து அதை மேஜைமேல் வைத்தான். தொடர்ந்து ரங்கப்பர் சாம்பல்நிற சூட் அணிந்து தலையிலிருந்து தொப்பியைக் கையில் எடுத்தபடி வந்தார். மரத்தரையில் அவருடைய லங்காஷயர் செருப்புக்கள் முறுகி முறுகி ஓசையிட்டன. மீசையை மெழுகிட்டு கூர்மையாக முறுக்கியிருந்தார். மார்பில் கடிகாரத்தின் பொற்சங்கிலி மின்னியது

அவர் என் முன்னால் வந்ததும் நான் எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னேன். அவர் உற்சாகமான புன்னகையுடன் அமர்ந்தார். சேவகனிடம் மதுகொண்டுவரும்படி கைகாட்டினார். என்னிடம் “நம் பந்தயம் முடியும் நாள்” என்றார். நாச்சிமுத்து “நாயகரே, இதெல்லாம் என்ன? வேண்டாம்” என்றார். “இருக்கட்டும், நான் சொன்ன சொல் அல்லவா?” என்றார். “இதை நாம் பேசவேண்டாமே” என்றார் நாச்சிமுத்து. நான் உரக்க “சொல்லட்டும்” என்றேன்

“ஆம், நான் சொல்லியாகவேண்டும்” என்றபடி ரங்கப்பர் கையை தட்டினார். “எல்லாரும் கேளுங்கள். நான் பந்தயத்தொகையை நமச்சிவாயத்திற்கு கொடுக்க வந்திருக்கிறேன்” எனக்கு அச்சொற்கள் அர்த்தமே ஆகவில்லை. கேட்டவர்களும் அமைதியாக இருந்தனர். “நான் தோற்றுவிட்டேன். ஆகவே இதோ ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக்கை நமச்சிவாயத்திற்கு கொடுக்கிறேன்” என்றார். தன் பையில் இருந்து மணிலாக் கவர் ஒன்றை எடுத்து மேஜைமேல் வைத்தார். அதன் பின்னரே கிளப்பிலிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்

“நல்லது… நீங்கள் தோற்றீர்கள். ஆனால் இந்தப்பெரிய பந்தயம்…” என நாச்சிமுத்து சொல்ல ஆரம்பிக்க “இது என் வார்த்தை” என்றார் ரங்கப்பர். “இதில் எனக்குச் சந்தோஷம்தான். நான் சொன்னேனே, நான் தோற்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என்று. என் தீவிரம்தான் எனக்கு சில உயர்வான விஷயங்களைக் கற்றுத்தந்தது…. எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும்”

மீண்டும் கைத்தட்டல்கள், சிரிப்புக்கள். நாட்றாயன் என் தோளில் கைவைத்து “வென்றுவிட்டீர்கள்…” என்றார். எனக்கு எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை என்பதை நானே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமே இல்லாமல் நான் மேலே சுழலும் மின்விசிறிகள் ஏன் அத்தனை சத்தம் போடுகின்றன என்று எண்ணிக் கொண்டிருந்தேன். “ஐந்துலட்சம்” என்று எவரோ சொன்னார்கள்.

அத்தனைபேருக்கும் ரங்கப்பரே மது சொன்னார். பணியாட்கள் உற்சாகமானார்க்ள். எங்கும் சிரிப்பும் கூச்சல்களும் எழுந்தன. நாற்காலி ஓசையிட நான் எழுந்து தோளைக் குறுக்கியபடிக் கிளம்பினேன். ஓசை நின்று எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். நாட்றாயன் “உங்கள் செக்…” என்று என் தோளைத் தொட்டார். அதைத் தொடவே என் கை நடுங்கியது. அவரே அதை எடுத்து என் கோட்டின் பைக்குள் வைத்தார். நான் “நன்றி” என முணுமுணுத்தபடி எவரையும் பார்க்காமல் நேராகப் படிகளை நோக்கிச் சென்றேன். ரிக்‌ஷாவில் ஏறி அமர்ந்தபோது மிகப்பெரிய ஏதோ ஆபத்திலிருந்து தப்பியதுபோல உணர்ந்தேன். குளிர்காற்று உடலில் பட்டபோதுதான் எவ்வளவு வியர்த்திருந்தேன் என உணர்ந்தேன்

“அந்தப்பணத்தில்தான் அம்பாஸிடர் ஏஜென்ஸி எடுத்தேன். பணம் சம்பாதித்தேன். இப்போது நான்கு நகரங்களில் இருக்கும் எஸ். ஆர். என் சன்ஸ் ஆட்டோமொபைல்ஸ் அப்படித்தான் உருவாகியது” என்றார் எஸ். ஆர். நமச்சிவாயம். கதை முடிந்ததும் பிரபாகர் புன்னகைத்தான். “நான் எதிர்பார்த்தேன்” என்றான் சகதேவன். நான் கைகளையும் கால்களையும் தளர்த்தி உடலை நீட்டிக்கொண்டேன். நிறைவாக இருந்தது. ஆனால் ஏனோ ஏமாற்றமும் எஞ்சியது. ஏனென்றால் அது ஒருகதையாக மிகச்சம்பிரதாயமான முடிவைக்கொண்டிருந்தது

ஆனால் அதை உடனே நமச்சிவாயம் உடைத்தார். போதையில் தலை தாழ்ந்து முகவாய் மார்பில் முட்ட மெல்ல நடுங்கியபடி அவர் சொன்னார். “முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கப்பர் இறந்தார். அதன்பின் பத்து வருடம் கழித்து என் மனைவி இறந்தாள். அப்போது பேரன் பேத்தியெல்லாம் எடுத்துவிட்டோம். இறப்பதற்கு முன் அவள் என்னிடம் ஓர் உண்மையைச் சொன்னாள். அந்த ஐந்துலட்சம் அவளை ஜெயித்ததற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசுதான்”

முந்தைய கட்டுரைபெருவெள்ளம்- எதிர்வினை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7