’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55

[ 16 ]

இந்திர நகரியின் மலர்ச்சோலைகளிலிருந்து எழுந்து வந்த இளங்காற்று அர்ஜுனனைத் தொட்டு பற்றியிழுத்துச் சென்றது. அதிலிருந்த குளிரும் மணமும் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. செல்லும்தோறும் பெருகிய நறுமணத்தால் முற்றிலும் சூழ்ந்து பிறிதொன்றிலாது ஆக்கப்பட்டான். மூக்கைத் தொட்டு எண்ணங்களை நிறைத்து நினைவுகளைப் பெருக்கி இனிமை என்றாகும் நறுமணங்களை அவன் மண்ணில் பலமுறை உணர்ந்ததுண்டு. இனிமை என்றே எழுந்து பிறிதொன்றிலாதாகி நிற்கும் நறுமணத்தை அங்கே அறிந்தான்.

சோலை அவனை கடலலை கரைப்பாறையை வந்து தழுவுவதுபோல் சூழ்ந்துகொண்டது. வண்ணங்களின் ஆயிரம் மாறுபாடுகளால் அமைந்த மலர்ப்பெருக்கு. மலர் கொள்வதற்கென்றே ஆன கிளைகள். மலர் சுமந்து இடை நெளிந்த அடிமரங்கள். மலர்களுக்கு நடுவே யாழுடனும் குழலுடனும் பறந்தலைந்தனர் தும்பிகளும் வண்டுகளும் சிட்டுகளும் ஆன கந்தர்வர்கள். இனிமை நிறைந்து ஒரு துளி குறையாது ஒரு துளி மிகாது முற்றிலும் அசைவிழந்தது அவன் சித்தம். அசைவிழந்தபோது அது இன்மையென்றிருந்தது. அலைவுறும்போதே இனிமையை அறிய முடிந்தது.

முழுமையில் நிலைகொண்டு மேலும் அறியும்பொருட்டு பின்னகர்ந்தபோது தன்னை அறிந்தான். தானறியும் சோலையை அந்தத் தன்னுணர்வின் மீது படர்ந்த வண்ணமென உணர்ந்தான். உளம் நிறைந்து அங்கிருந்த காலம் கணங்களா யுகங்களா என்று மயங்கியது. அவ்வெளியில் இன்மையும் இருப்புமென இருநிலைகொண்டு  அலைந்துகொண்டிருப்பதை கனவென விழிப்பென உள்ளம் ஆக்கிக்கொண்டது. விலகி மீண்டபோது பிரிவாற்றாது துடித்தவை போல் அத்தனை மரங்களும் கிளைநீட்டி வந்து சூழ்ந்துகொண்டன. பெருங்கடல் எழுந்து ஒற்றை அலையென ஆனதுபோல் வண்ணமும் மணமும் அவனை வந்தறைந்து அள்ளி எடுத்து ஆழத்தில் அமைத்துக்கொண்டன.

பின்னர் அந்நறுமணத்தின் ஒலிவடிவென அவன் அவள் குரலைக் கேட்டான். மலர்ச்செடிகளுக்கு அப்பால் தோழிகளுடன் சொல்லாடி சிரித்துக்கொண்டிருந்தாள் ஊர்வசி. அவள் குரலின் முதல் ஒலிமாத்திரையிலேயே அவளென அறிந்த தன்னுள் உறைந்த ஆண்நுண்மை ஒன்றை எண்ணி அவன் புன்னகைத்தான். அவன் தன்னை கேட்டுவிட்டதை அக்கணமே தன் பெண்நுண்மையால் அவள் உணர்ந்தாள். உடனே அவள் குரலின் ஒலி மாறுபட்டது. இயல்பாக எழுந்த சிரிப்பு மிகையாகப் பொங்கியது. குரல் எவரிடமோ அறைவதுபோல அழுத்தமாக ஓங்கி ஒலித்தது. அவ்வொலி மாறுபாடை அவன் உணர்ந்து மேலும் புன்னகைத்தான்.

அவர்களை அணுகி மலர்ச்செடிகளுக்கு நடுவே கைகளைக் கட்டியபடி அவளை நோக்கி நின்றான். அத்தனை பெண்களும் அவனை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தனர் என்றாலும் அப்போதுதான் உணர்வதுபோல சற்றுகழித்தே உடலசைவுகொண்டு ஆடை திருத்தினர். அவனை நோக்காமலேயே ஆடையை அழகமைத்து இடத்தொடை குவிந்தெழ வலக்கையை ஊன்றி உடல் ஒசித்து எழுந்து நின்றாள். சரிந்த குழலை கை தூக்கி முடிந்து தோளிலிட்டாள். முலைகள் மேல் அருவிநுரை செம்பாறைமேல் என  மென்பட்டு சரிந்தது.

கைவளைகளின் ஒலி. காதிலாடியது குழைகளின் ஒளி. கட்டைவிரல் சிறுகிளியின் தலை என எழுந்து நிற்க புருவம் வளைத்து தோழிகளிடம் என்ன என்று வினவினாள். அவர்கள் கண்களை அசைத்து அவனை காட்டினர். அவள் மேலுதடில் மென்வியர்வை அரும்பியது. கன்னங்களில் குருதி அலை எழுந்தது. மூச்சில் முலைகள் எழுந்து அமைந்தன. கைவிரல்கள் ஆடைநுனி பற்றி சுற்றின.  அவளைச் சூழ்ந்திருந்த அப்சரகன்னியர் சிரித்தபடி விழிகளால் அவளிடம் விடைபெற்றனர். அவர்கள் விலகிச்சென்ற பின்னர் அவள் உடலில் மெல்லிய அசைவாக இயல்புநிலை மீண்டது.

அவர்கள் விலகிச் செல்வதைக் கண்டதும் அர்ஜுனன் அருகணைந்து “என்ன நகைப்பு?” என்று கேட்டான். ஊதப்பட்ட கனல் என அச்சொல்பட்டே அவள் முகம் சிவந்தாள். கைகைளைத் தூக்கி நகங்களை நோக்கிவிட்டு விழிமுனையால் அவனைப் பார்த்து விலகிக்கொண்டாள். “என்னைப்பற்றியா?” என்றான். அவள் விழி தூக்கி அவன் கண்களைப் பார்த்தபின் தழைத்து “பெண்களுக்குரிய பேச்சுகள்” என்றாள். அவன் விலகிச்செல்லும் அவர்கள் அங்கிருந்தே கைகாட்டுவதை நோக்கியபின் “ஏன் விலகிச்செல்கிறார்கள்?” என்றான். “ஆம், அதைத்தான் நானும் எண்ணுகிறேன். வேண்டுமென்றே செல்கிறார்கள்” என்றாள்.

அவன் “ஏதோ நினைக்கிறார்கள்” என்றான். “என்ன?” என்று கேட்டவள் “அய்யோ, நானும் செல்லவேண்டும்” என்று செல்வதுபோல் ஓர் அசைவை உடலில் நிகழ்த்தினாள். இரு கால்களும் தரையிலேயே பதிந்திருந்தன. அர்ஜுனன் அருகிலிருந்த சிறு மரப்பீடத்தில் அமர்ந்தபடி “என்னிடம் நீ ஏதேனும் பேச விரும்புகிறாயா?” என்றான். அவள் “இல்லை” என்றாள். அவன் “நன்று. அவ்வண்ணமெனில் நான் இங்கு சற்று நேரம் மலர் நோக்கி அமர்ந்திருக்கிறேன். நீ செல்லலாம்” என்று சொன்னான்.

அவள் உரக்க நகைத்து “பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று அறிந்திருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா? அணிச்சொற்கள் எதையும் நான் இங்கு சொல்லவில்லையே” என்றான். “அணிச்சொற்கள் சலிப்பூட்டுபவை. ஆணுக்குரிய கூரிய நேர்ச்சொற்கள் மேலும் அழகியவை” என்றாள். “அப்படியா? நான் என் எண்ணத்தைத்தான் சொன்னேன்” என்றான். “பெண்ணின் உளமறிந்து சொல்லும் நேர்ச்சொற்கள் மேலும் இலக்கடைவன” என்றாள். “நான் உளம் அறிந்துவிட்டேனா?” என்றான். “என் நகைப்பைக் கேட்டதுமே இங்கு நோக்கித் திரும்பியது அதனால்தானே?” அவள் தாழ்ந்த மரக்கிளை ஒன்றில் தன் இடை பதித்து பிறிதொரு மரக்கிளையை கைகளால் பற்றியபடி கேட்டாள். “மேலும் நான் ஏதேனும் பேசவிழைந்தால் இங்கிருக்கலாம் என்றும் நீங்கள் சொன்னதற்கு பொருள்” என்றாள்.

“நேற்று அவையில் அந்த ஆடலை தெரிவு செய்தது யார்?” என்றான் அர்ஜுனன். “நான்தான். அந்நடனத்தை அமைத்ததும் நானே” என்றாள். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “உங்களைப்பற்றி பல கதைகள் இங்கு வந்தன. மணிபூரகத்தில் சித்ராங்கதையின் பொருட்டு பெண்ணென்று ஆன கதை அதில் ஒன்று. அதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். பெண்ணென்று ஆகி பெண்ணை அணுகுவது முதல் நோக்கில் மடமை. ஆனால் பிறிதொரு நோக்கில் அது மதிக்கூர்மை. பெண்ணென்று உடல்கொண்டிருந்தால் எத்தனை உள்ளறிந்திருந்தாலும் பெண்ணென்றே விழிசொல்ல உளம் நம்பும். பெண் கொண்டிருக்கும் நடிப்பரண்கள் மறையும். வேலியில்லாப் பயிர்.”

அர்ஜுனன் நகைத்து “ஆணை அணுகத்தானே பெண் விரும்புவாள்?” என்றான். “இளைய பாண்டவரே, பெண் விழையும் ஆண் அவள் வேண்டும்போது பெண்ணென்றும் ஆணென்றும் ஆகத்தக்கவன்” என்றாள். “எப்போதெல்லாம்?” என்று அர்ஜுனன் சிரித்தபடி கேட்டான். “களித்தோட்டத்தில், வம்புப்பேச்சுகளில், இனியபொருளின்மைகளை சலிக்காது பேசுகையில் பெண்ணென்றிருப்பவனே நல்ல காதலன்.” அர்ஜுனன் அவள் கணகளை நோக்கி “எப்போது ஆணென்றிருக்கவேண்டும்?” என்றான். “துயரில் அச்சத்தில் அடைக்கலம் கோருகையில். பிறபெண்கள் முன் இவன் என அவள் சுட்டிக்காட்டுகையில். பிற ஆண்களுக்கு முன் ஒருபடி மேலென்று நின்றிருக்கையில்.”

அர்ஜுனன் “படுக்கையில்?” என்றான். “அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் அவள் உள்ளம் மாறுவதற்கேற்ப மாறிக்கொண்டிருக்கவேண்டும். அவன் மாறிய பின்னர் அதைக்கண்டே அவள் அம்மாற்றத்தை விழைந்தாள் என்று அவள் அறியவேண்டும்” என்றாள். அர்ஜுனன் “பெண்ணை அறிந்து கடப்பது எளிதல்ல போலும்” என்றான். “எதையுமே அறிந்து கடக்க முடியாது. அதுவாக ஆதலே கடத்தலின் வழி. காமமும் காதலும் அழியாது நின்றிருந்தால் போதும். அவையே நீர்வெளி. பெண் அலையும் நுரையும் மட்டுமே” என்றாள்.

“நான் அடைந்த பெண்களை வென்றேனா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றான். “நீங்கள் வென்ற பெண் உங்கள்மேல் மேலும் உரிமைகொள்வாள். உருமாறி உங்கள் அன்னையென்றாவாள். அதுவே அடையாளம்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “விந்தையாக இருக்கிறது” என்றான். “வெல்லப்பட்டபின் அவனை தான் வென்று செல்வதற்குப்பின் பெண்ணுக்கு இருக்கும் ஒரே வழி அன்னையென்றாவதே. மெலிய அதட்டல்கள், கடுமைகள், நயத்தல்கள், வழிநடத்தல்கள். ஆணைச் சிறுமைந்தனென்று ஆக்கிக்கொண்ட பெண்ணைப்போல மகிழ்வுமிக்கவள் வேறில்லை” என அவள் நகைத்தாள். அர்ஜுனனும் உரக்க நகைத்தான் “ஆம், உண்மை” என்றான்.

“ஆகவேதான் அந்தக் கதையை தெரிவுசெய்தேன்” என்றாள் ஊர்வசி. “உங்களுக்கு பெண்ணை எத்தனை அணுக்கமாகத் தெரியும் என்று பார்ப்போமே என்று எண்ணினேன்” என்றாள். அர்ஜுனன் “அணுகும்தோறும் அறிதல் குறைகிறது” என்றான். அவள் விழிசுருக்கி “ஏன்?” என்றாள். “அகன்றிருக்கையில் அறிபடுபவை பெரியவை, பருவடிவானவை. அணுகும்தோறும் நுண்மைகள் பெருகுகின்றன. ஒரு வான்கடத்தலைவிட அணுதுளைத்தல் நெடுந்தொலைவு என்பார்கள்” என்றான். அவள் நகைத்து “முற்றிலும் அறியாத சில எஞ்சும்வரைதான் புவி சுழலக்கூடும்” என்றாள்.

“பெண்ணென்றும் ஆணென்றும் ஆனதுதான் என்ன? இரு மானுடத்தோற்றங்கள். அன்னை வயிற்றில் பிறக்கும் இரு உயிர்கள்” என்றான் அர்ஜுனன். அவள் “ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள். அவை முற்றிலும் நிரப்பினால் அங்கு முழுமை எழுகிறது. எந்த முழுமையும் பிரம்மமே என்பது வேதநிறைவுச் சொல்” என்றாள். “காமத்தினூடாக பிரம்மம்!” என்றான் அர்ஜுனன் கேலியாக. “நன்று! உங்களுக்கு உகந்த பாடம்தான்” என்று அவள் நகைத்தாள்.

“நான் காமத்தை ஒருபோதும் தேடிச்செல்லவில்லை. காமத்தினூடாக அலைவுற்றேன். கங்கையில் செல்லும் நெற்றுபோல. கங்கையை நோக்காது அதை காண்பவன் ஒரு நடனத்தை அல்லது போரைத்தான் காணமுடியும்” என்றான் அர்ஜுனன். அதுவரை பேசிவந்த உவகை ஏனென்றே தெரியாமல் அறுபட்டு அமைதி சூழ்ந்தது. பெண்களுடன் பேசுகையில் அந்த அமைதி ஏன் அவ்வப்போது உருவாகிறது என அர்ஜுனன் வியப்பதுண்டு. மெல்லிய இறகு ஒன்றை இருவரும் சேர்ந்து ஊதியூதி வானில் நிறுத்துவதுதான் அது. எங்கோ ஒரு புள்ளியில் அது அவர்களின் மூச்சுக்காற்றுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. அப்படியே மெல்ல மண்ணில் அமைகிறது.

“மண்வாழ்த்தும் பெருங்காதலனுக்கு பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வியப்புதான்” என்றாள் அவள். மேலும் அப்பேச்சை நீட்ட விரும்புகிறாள் என அவன் அறிந்தான். “நான் அல்ல, இளைய யாதவரே பெருங்காதலன் என சூதர்களால் பாடப்படுகிறார்” என்றான். அவள் “இல்லை, அவர் காதலரே அல்ல” என்றாள். அவன் இளைய யாதவனைப் பற்றிய எண்ணம் முன்னரே வந்துவிட்டதென்றும் அதனால்தான் பேச்சு அமைதியாகியதென்றும் அப்போதுதான் உணர்ந்தான். “ஏன்?” என்றான். “அவர் பெண்களுடன் தன்னை பகிர்வதில்லை.” அவன் மீண்டும் “ஏன்?” என்றான். “நதிகளிணைந்து ஒழுகுவது காதல். நதிகள் சென்று கடல்சேர்வது அல்ல” என்றாள் ஊர்வசி.

அவன் “ஆம்” என்றான். எழுந்து விலகிச்செல்ல விரும்பினான்.  அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் உள்ளச்சரடை மிக அண்மையில் தொடர்ந்துகொண்டிருந்தாள். “சற்று நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அதனால்தான் ஒரு பெண்ணுடன் சொல்லாடலாம் என்று தோன்றியதோ?” என்றாள். “பெண்ணுக்காக இங்கு வரவில்லை” என்றான் அர்ஜுனன் சிறிய எரிச்சலுடன். “மலர்ச்சோலையில் பெண்கள் இருப்பார்களென்று அறியாதவர் அல்ல நீங்கள்” என்றாள் ஊர்வசி. அவன் உடனே விடுபட்டு புன்னகைத்து “உண்மை. இங்கு வருகையில் என்னுள் எங்கோ அவ்வெண்ணம் இருந்தது என்று இப்போது உணர்கிறேன். உன் குரல் கேட்ட அக்கணமே உன்னை எதிர்பார்த்திருந்ததை அறிந்தேன்” என்றான்.

அவள் கன்னத்தின் இருபுறங்களிலும் நீள்கோடென குழி விழ சிரித்தாள். சிரிப்பு முடிந்ததும் அக்குழி விழுந்த இடம் நீர்ச்சுழி மறைந்தபின் எஞ்சும் விழிமயக்குப் புள்ளிபோல தெரிந்தது. ஒவ்வொன்றும் முற்றிலும் அமைத்தெடுக்கப்பட்ட முகம். அவள் கொண்டுள்ளது பருவுடல் அல்ல. அவன் விழைவுகளை அவனிடமிருந்து திரட்டி அதற்கேற்ப உருவாக்கிக்கொண்ட முகம். அதில் அவன் மகிழ்ந்த அத்தனை முகங்களின் கூறுகளும் இருந்தன. மிக இளமையில் பெண்ணை கனவுகாணும்போதுதான் அந்த முகம் அவனிடமிருந்தது. விழுந்துடைந்து நூறு முகங்களாக சிதறியது. மீண்டும் ஒரேமுகமென்றாகி முன்னால் அமர்ந்திருந்தது.

அசைந்தசைந்து சுருள்நிழல் வீழ்த்திய கருஞ்சுருள்கள் கன்னத்திலிருந்து கீழிறங்கின. பொற்பலாவின் சுளைபோன்ற காது. கருங்குருவி இறகுபோன்ற இமைப்பீலிகள். குழவியின் கொழுங்கன்னம். மென்பாளை வரிகள் கொண்ட கழுத்து. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு “சற்றுமுன் மூத்தவரிடம் சொல்லாடிக்கொண்டிருந்தேன்” என்றான். அவளிடம் கொள்ளும் மயக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே அப்பேச்சை எடுத்தானா? அல்லது அவனுள் இருக்கும் அந்தச் கசப்பை அவள் நீக்கமுடியுமென எண்ணினானா? உரையாடல்களில் எப்போதும் உள்ளிருந்து பிறிதொன்று எழுந்துவந்து தன்னை நிகழ்த்துகிறது.

அவள் “நீங்கள் இருவரும் தோள்பிணைத்துச் செல்வதை கண்டேன்” என்றாள். “நாங்கள் எதை பேசியிருப்போம் என்று உன்னால் கணிக்க முடிகிறதா?” என்றான். “இளைய யாதவரைப்பற்றி” என்றாள் அவள். அர்ஜுனன் சற்று வியந்து “எப்படி தோன்றியது?” என்றான். “உங்கள் நடுவே அது ஒன்றே எஞ்சமுடியும்” என்று அவள் சொன்னாள். “அதையன்றி பிறவற்றை பேசுவோம் என்றே அவர் அறைக்குள் வந்திருப்பார். அதைப்பற்றி மட்டுமே பேசமுடியும் என்று பேசி முடிந்தபின் அறிந்திருப்பார்.” அவன் அவளை நோக்கினான். அவள் அவ்வெண்ணங்களையும் தன்னுள் இருந்து அள்ளித் திரட்டிக்கொள்கிறாளா? ஆனால் காதல்கொண்ட பெண் ஆணிடமிருந்து அறியாத நுண்மைகள் சிலவே.

“இளைய யாதவர் ரகுகுல ராமனேதான் என்கிறார்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து அறியும் உண்மை அது. அங்கு அது உண்மையென்றாக வேண்டுமென்பதில்லை” என்றாள் ஊர்வசி. “உண்மை அப்படி உருமாறுமா?” என்றான். “நாம் சொல்லளாவிக் கொண்டிருக்கும் இந்தச் சோலையில் உங்கள் விழிதொடுவதற்கு ஒரு கணம் முன்னரே இவையனைத்தும் உருவாகின்றன. விழிதிரும்பியவுடன் மறைந்துவிடுகின்றன என்றால் மண்ணில் அதை எப்படி பொருள் கொள்வது?” என்று அவள் கேட்டாள். “உண்மைதான்” என்று அவன் சொன்னான்.

“இங்கிருந்து நோக்குகையில் புவி ஒரு சிறிய நீர்த்துளி. பெருமலைகள் அதில் வெறும் அதிர்வுகள். மானுடம் என்பது அதிலாடும் ஒளிநடனம்” என்று ஊர்வசி சொன்னாள். “நான் அதை எண்ணவே விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “மானுட உள்ளம் என்பது ஒரு கைப்பிடி நீர். அதை ஒரு முழம் பரப்பலாம். நூறு முழமும் பரப்பலாம். நூறு காதம் பரப்பினால் என்ன எஞ்சும்?” அவள் நகைத்து “நல்ல ஒப்புமை” என்றாள். “எங்கோ சூதர் பாடலில் கேட்டிருப்பேன்” என்று அவன் சிரித்தான்.

“இளைய யாதவராகி அங்கிருக்கும் அவருக்கும் எந்தைக்குமிடையேயான என்றுமிருக்கும் முரண்பாட்டைப்பற்றி மூத்தவர் சொன்னார்” என்றான் அர்ஜுனன். “அது இரு மானுடருக்கு இடையேயானதல்ல. இரு தெய்வங்களுக்கிடையேயான பூசலும் அல்ல. இரு திசைகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளி கொண்டது” என்று ஊர்வசி சொன்னாள். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இளைய பாண்டவரே, இந்திரன் பெருந்தெய்வமென அமைந்த வேதம் இருவகை. இன்றுளது மகாவஜ்ரம் என்றும் முன்பிருந்தது மாகேந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது”   என்றாள் ஊர்வசி. “வேதமெய்மை ஒன்றென்றால் ஏன் இந்த வேறுபாடு?” அர்ஜுனன் “அவை நோக்கும் திசைகள்” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்றாள் அவள்.

“மாகேந்திரத்திற்கு முன் வாருணம் வேதமுறைமையாக சொல்லப்பட்டது. அதற்கு முன் ஆசுரமும் மாநாகமும் வேதங்களென அங்கே இருந்தன. வேதம் ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை எழுப்பி கூராக்கிக்கொள்கிறது. இளைய பாண்டவரே, அங்கு மாகேந்திரத்திலிருந்து எழுகிறது பிறிதொரு வேதம்” என்றாள் ஊர்வசி. “நீங்கள் அறிந்த ஒவ்வொரு முந்தைப்பெருவேதமும் பல தலைமுறைக்காலம் நிகழ்ந்த குருதிப்போருக்கும் சொற்களத்திற்கும் பின்னரே முழுதமைந்தன.”

மெல்ல அழகுரு அகன்று ஓர் அருஞ்சொற்பாவை என்றாகி ஊர்வசி சொன்னாள் “ஓர் அரசு உருமாறுவதற்கான போரில் நூறுமடங்கு ஆக்கமும் அழிவும் ஒரு குமுகம் மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு குமுகம் மாறுவதைவிட நூறுமடங்கு ஒரு பண்பாடு மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு பண்பாடு மாறுவதைவிட நூறுமடங்கு குருதியும் கண்ணீரும் சொல்லும் ஒரு தத்துவம் மாறுவதற்கு தேவையாகின்றன. இளைய பாண்டவரே, ஒரு தத்துவம் மாறுவதைவிட ஆயிரம்மடங்கு அனலெழுந்து அடங்கிய பின்னரே ஒரு தரிசனம் மாறுபடுகிறது.”

“அங்கு என்ன நிகழவிருக்கிறது?” என்று அர்ஜுனன் அச்சத்துடன் கேட்டான். “இருமுறை அவர்கள் நிகழ்ந்திருக்கிறார்கள். கரிய சான்றோன் என ஒருமுறை. களியாடும் கார்நிறத்தான் என மறுமுறை. அவர்கள் அங்கு சமைக்க எண்ணுவது பிறிதொரு வேதம். அழித்து தொகுத்து ஆக்கி நிறுத்தி அவர் மீள்வார்.” அர்ஜுனன் “குருதியும் கண்ணீரும்” என்றான். “ஆம், குருதியும் கண்ணீரும். வேரில் மட்காமல் கிளையில் பூக்காது என்பார்கள்.” அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். அலையலையாக அவன் முன் இளைய யாதவனின் முகம் எழுந்தணைந்தது. இறுதியாக அந்த வஞ்சப்பெருமுகம். அதன் எரியும் விழிச்செம்மைகள்.

“அவர் முகமொன்று எனக்குள் எஞ்சுகிறது. என்னை இங்குவரை செலுத்தியது அதுவே” என்றான் அர்ஜுனன். “நான் அதை அஞ்சுகிறேன். அதை எதிர்க்கவும் வெல்லவும் விழைகிறேன். அதன்முன் என்னை முற்றாகப் பணியவைத்து அமையவும் எண்ணுகிறேன்.” ஊர்வசி “நீங்கள் அவருடன் போரிட்டபோது எழுந்த வஞ்சம்மிக்க கரியமுகம் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நீ அதை அறியமாட்டாய்.” அவள் புன்னகைத்து “அறிவேன்” என்றாள். அவன் விழிதூக்கி நோக்கினான்.

“அங்கே மண்ணில் அவர் இருண்டு இருண்டு எடைகொண்டு குளிர்ந்து அமைந்திருக்கிறார். அவரை முற்றிலும் சூழ்ந்திருக்கிறாள் மூத்தவள். அத்தவத்தைக் கலைக்க இங்கிருந்து இசைஞரும் ஆட்டரும் கணிகையரும் என சென்றுகொண்டே இருக்கிறார்கள். நானும் சென்றேன்.” அர்ஜுனன் “நீயா?” என்றான். “நானாக அல்ல. அவர் உள்ளம் விழைந்த பெண்களில் ஒருத்தியாக.” அர்ஜுனன் பேசாமல் அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். “அவரை அணுகமுடியவில்லை. மூத்தவளின் இருண்ட வளையத்தைக் கடந்து எவரும் செல்லமுடியாது.”

“நான் சென்றது ஓர் இளைய கோபிகையாக” என்று ஊர்வசி சொன்னாள். “அவள் பெயர் ராதை.” அர்ஜுனன் சிரித்து “அவள் மூத்தவள்” என்றான். “அவளுக்கு என்றும் இளமைதான்” என்றாள் ஊர்வசி.  “அவர் செல்லும் வழியில் பாற்குடம் சுமந்து ஆய்ச்சியெனச் சென்றேன். அவர் எதிரில் வந்தபோது என் கலம் ததும்பி விழுந்த பாற்துளி மலரென மண்ணில் விரிந்தது. அவர் விழிகள் என்னை நோக்கின. ஆனால் எதையும் அங்கு நான் காணவில்லை.”

“நான் புன்னகை செய்தேன். அப்புன்னகையை அவர் தன் இளமையில் ஒவ்வொருநாளும் கனவுகண்டிருந்தார். ஆனால் வெறும் விழிகளுடன் கடந்துசென்றார்” என்றாள். “நான் அவரைத் தொடர்ந்து செல்ல காலடி எடுத்து வைத்தபோது அவர் சென்றுமறைந்த சாலைவளைவில் இருந்து அந்த யாதவப்பெண்ணின் கணவனாகிய அபிமன்யூ வருவதைக் கண்டேன். அவன் என்னை நோக்கியதுமே என் மாயங்கள் அழிந்தன. தயங்கி பின்காலெடுத்து வைத்து புதருக்குள் ஒளிந்தேன்.”

“மீண்டுவந்தபின் அறிந்தேன், அது அவரேதான்” என்றாள். அவன் “ம்?” என்றான். “அவரிலிருந்து ஒரு மாய உருவை சமைத்திருக்கிறாள் மூத்தவள். ஒவ்வொருவருக்கும் உருமாற்றி அவரை அவளே காட்டுகிறாள். பல்வேறு பேயுருக்கள். அவர் அன்னையெனச் சென்றவள் மேனகை. அவள் முன் கம்சன் எனக் காட்டினாள்.”

“காதல், இசை, கவிதை, தத்துவம், மெய்மை அனைத்துமே இப்பால் நின்றிருக்கின்றன. அவரை அணுகுபவர்கள் அனைவரையும் அவள் அணைத்துக்கொள்கிறாள். கடுங்குளிர்ப் பனிக்கட்டி சூழ்ந்திருப்பவை அனைத்தையும் உறையச்செய்வது போல அவர்கள் அனைவருமே இருண்டு இறுகிவிட்டனர். அவர் துணைவியர் அஞ்சி துவாரகையில் அமைந்திருக்கின்றனர். அவர் அமைச்சரும் தோழரும் மைந்தரும் அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன.”

“ஏன் அவ்விருள்?” என்றான் அர்ஜுனன். “வென்று செல்ல. இரக்கமில்லாமலிருக்க. எஞ்சவிடாது அழிக்க” என்றாள் அவள். “கருக்கிருட்டுக்குப் பின்னரே புலரி என்று அறிந்திருப்பீர்கள்.” அர்ஜுனன் “பேரழிவு ஒன்று அமையவிருக்கிறது என நெடுநாட்களாகவே நிமித்திகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அது முன்னரே தொடங்கிவிட்டது” என்று அவள் சொன்னாள். “அவர் பிறப்பதற்கு முன்னரே. ராகவன் பிறப்பதற்கு முன்னரே. அதை அவர்கள் முடிவுசெய்வதில்லை. நாம் அலைகளைத்தான் காண்கிறோம், ஆழ்கடல் பின்னாலிருக்கிறது.”

அர்ஜுனன் நீள்மூச்சுடன் “துளியினும் துளியென உணர்வதன் விடுதலையை அறிகிறேன். நன்றி” என்றான். அவள் சிரித்து “காதற்சொல்லாட வந்தீர்கள். பேரழிவைப்பற்றி பேசிவிட்டேன்” என்றாள். “இல்லை, என்னுள் திகழ்ந்த கசப்பு ஒன்றை அகற்றிவிட்டாய்” என்றான்.

முந்தைய கட்டுரைவண்ணமும் மென்மையும்…. சௌந்தர்
அடுத்த கட்டுரைபெருங்கனவு – நந்தகுமார்