இன்குலாபின் புரட்சி

600

ஜெ

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக் கட்டுரையை நீங்கள் எழுதுவதுண்டு. பல அறியப்படாத எழுத்தாளர்களை உங்கள் அஞ்சலிக் கட்டுரைகள் வழியாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் இடதுசாரிக் கவிஞரான இன்குலாப் பற்றி ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. ஏன் என அறிய விரும்புகிறேன்

முருகேசன்

*

அன்புள்ள முருகேசன்

இன்குலாப் அவர்களை நான் இருமுறை சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவரை நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் என்றும் நம்பி அதை எழுதியுமிருக்கிறேன் – சுபமங்களாவிலென நினைக்கிறேன்

ஆனால் அவரைப்பற்றி இன்று என் எண்ணம் வேறு. நல்லமனிதர். மென்மையானவர். கொஞ்சம் அப்பாவி என்றும் தோன்றியது நேரில் சந்திக்கையில். கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுபதுகளில் மோஸ்தராக இருந்த பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர். புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெருந்தரப்பாக அது ஒருவகையில் முக்கியமானதே. அது இங்குள்ள உறைந்துபோன சனாதனத்தின் மீது ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. கருத்தியலின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்குண்டு. அந்தத் தரப்பை உருவாக்கிய முன்னோடிகளுக்கு சிந்தனையாளர்கள் என்னும் இடமும் உண்டு. வெறுமே அதை பின்பற்றியவர்கள் கருத்துலகத் தொண்டர்கள் மட்டுமே, இன்குலாபும் அப்படித்தான்.

அத்துடன், பிறரது மதத்தை, பிறரது நம்பிக்கைகளை, பிறர் தனக்கெனக் கொண்ட பண்பாட்டை கிண்டல்செய்து வசைபாடி தன்னை புரட்சிக்காரன் என காட்டிக்கொள்வது இங்கே மிக எளிது. உண்மையான புரட்சிக்காரன் தன் மரபுமூலம் தனக்கு அளிக்கப்பட்டதும் தான் அன்றாட வாழ்க்கையில் சார்ந்திருப்பதுமான மதத்தையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் நிராகரிப்பதிலும் விமர்சிப்பதிலும்தான் தொடங்குவான். இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்.. கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம். புரட்சிகள் தன்னிலிருந்தே ஆரம்பிக்கும். அந்தக் கலகம் அளிக்கும் இழப்புகளைக் கடந்து வந்திருந்தால்தான் அவர் தியாகி என்று அர்த்தம்.

தியாகமில்லாமல் புரட்சி இல்லை. சௌகரியமான விஷயங்களைச் சொல்வது வெறும் பிழைப்பரசியல். இன்குலாப் மிகமிக நுட்பமான சமநிலையை அதில் வகித்தார். நான் அவரிடம் பேசிய ஒரு தருணத்தில் அதை அவரிடம் சொன்னேன். “சார் நீங்க ராமனையும் கிருஷ்ணனையும் கிழிச்சுத் தோரணம் கட்டுங்க. அதை என் மதம் அனுமதிக்குது. விமர்சனம் இல்லாம இந்துமதம் இல்ல. ஆனா நான் நபியை போற்ற மட்டும்தான் செய்வேன். ஏன்னா அவர் எனக்கு ஒரு இறைத்தூதர்தான். அவரிலே இருந்து வர்ர மெய்ஞானம் மட்டும்தான் எனக்கு முக்கியம்” என்றேன். அவர் கோபம் கொள்பவரல்ல. ”என் கருத்துக்களாலே புண்பட்டிருக்கீங்க” என்றார். “கண்டிப்பாக இல்லை. நீங்கள் அப்படிச் சொல்வதற்கு எதிராக எந்தக்குரல் எழுந்தாலும் நான் அதைக் கண்டிப்பேன்” என்றேன்.

கருத்தியல் போகட்டும். அவர் எழுதியவை நல்ல கவிதைகள் என்றால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் கவிஞன் சான்றோன் ஆக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள். கவிதையின் அழகியல் உருவானதே நேரடியாகக் கூற உணர்த்த முடியாதனவற்றை கூறும் பொருட்டு. மொழியால் அறிய வைக்க முடியாதவற்றை மொழி கடந்த மொழி ஒன்றால் உணர்த்தும் பொருட்டு. ஒரு சாதாரண முற்போக்குத் துண்டுப் பிரசுரத்திற்கும் இன்குலாப் கவிதைக்கும் வேறுபாட்டை இன்குலாபாலேயே கண்டுபிடிக்கமுடியாது.

நல்லமனிதர். அடிப்படையில் பிரியமானவர். அவருக்கு அஞ்சலி.

ஜெ

முந்தைய கட்டுரைமதுரைக்காண்டம் -கடிதம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58