’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54

[ 15 ]

அவை நிகழ்வுகள் முடிந்ததும் அறிவிப்பு மேடையில் ஏறிய நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை முழக்கினான். வெளியே வெள்ளிப்பேரிகைகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. தேவபுரியெங்கும் இந்திரனை வாழ்த்தி பேரோசை எழுந்தது, அவை நிறைத்து அமர்ந்திருந்த முனிவர்கள் எழுந்து அரிமலர்வீசி இந்திரனை வாழ்த்தினர். சாமரங்கள் அமைந்தன. சேடிகள் பின்னகர்ந்தனர். கைகளைக்கூப்பி முனிவரையும் அவையினரையும் வணங்கியபின் வலம் திரும்பி அவன் வெளியே நடந்தான். இடம் கொண்டு இந்திராணி உடன் சென்றாள்.

தேவர்க்கிறைவனின் மின்படை பொறிக்கப்பட்ட கொடியுடன் ஏவல்தேவன் ஒருவன் முன்னால் சென்றான். அணிமங்கலங்கள் ஏந்தி அரம்பையர் நான்கு நிரை வகுத்து அவனுக்குப்பின் தொடர்ந்தனர். தும்புருவும் இளையோரும் மங்கல இசையுடன் அவர்களுக்குப்பின் நடந்தனர். இந்திரனின் உடைவாளுடன் ஜயந்தன் நடக்க அவனுக்குப்பின்னால் மருத்துக்கள் தங்கள் படைக்கலங்களுடன் சென்றனர். ஒவ்வொருநாளும் நிகழும் நாடகமென்றாலும் நாளவன் அணையும் இனிய துயர் கொண்டிருந்தது அக்காட்சி.

இந்திரன் அவைநீங்கியதும் நிமித்திகர் மீண்டும் அறிவிப்பு மேடை ஏறி சங்கொலி எழுப்பினார். ஆடையும் அணிகளும் ஒலிக்க மெல்லிய பேச்சொலிகளுடன் அவை கலைந்தது. கைகூப்பி நின்றிருந்த அர்ஜுனன் புன்னகையுடன் தோள்தளர்த்தி அரசமேடையிலிருந்து கீழிறங்கினான். அவையமர்ந்திருந்த முனிவர்கள் அனைவரும் அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் கைகளைப்பற்றியும் தோள்களைத் தழுவியும் இன்சொல்லாடினர். அனைவர் கால்களையும் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அவர்கள் வாழ்த்துக்கள் உரைத்தனர். நலம் உசாவினர். அவன் அழகையும் தோள்வல்லமையையும் பாராட்டினர்.

’’உன் மூதாதை யயாதியின் அவையிலிருந்தேன்’’ என்றார் கர்க்கர். “உன்னைப்போலவே விழைவால் அனல்கொண்டவர் அவர். வெற்றிகளால் மேலும் விழைவெழப்பெற்றவர். சுபகர் “நான் உன் மூதாதையாகிய குருவை நன்கறிந்தவன்’’ என்றார். சுபாகு “உன் குல வேள்விகள் அனைத்தையும் தலைமைதாங்கினேன்’’ என்றார். “அவர் அறிந்திருக்கவில்லை, அவர்குருதி அருகுபோல் வேரோடி பரவும் என்று. காலத்தின் முன் மானுடர் மிகச்சிறியவர்கள்.” சௌரப்யர் “நான் பிரதீபரின் அவைகண்டவன். அவருக்காக பன்னிரு பெருவேள்விகளை இயற்றினேன்” என்றார்.

“நாரதர் உன் புகழ்பாடாமல் இங்கே வந்ததே இல்லை. மண்ணில் நீ கொள்ளும் வெற்றிகள் அனைத்தும் இங்கு விழவாகின்றன” என்றார் சப்தமர். “வெற்றியையும் புகழையும் அடைந்தவன் விண்ணுலகுக்கு ஏறும் படிகளை கட்டிக்கொண்டிருக்கிறான்” என்றார் குமரகர். சாந்தர் “வேள்விகளால் தேவர்கள் பெருகுவதுபோல மானுடர் அடையும் வெற்றிகளால் இங்கு ஒளி பெருகுகிறது மைந்தா” என்றார். அவன் அச்சொற்களை கலைந்த ஒலிகளாகவே கேட்டான். ஒரே சமயம் நூறு அன்னையர் கைநீட்டி அழைக்க திகைத்துநிற்கும் இளமைந்தனைப்போல் ஆனான். ஒவ்வொருவரையாக நோக்கி புன்னகைத்து பணிவுச் சொல்லுரைத்து சுழல் காற்றில் அலைப்புறும் செடி போல் அவன் நடுவே நின்றான்.

தன் பெரிய கைகளை விரித்து அனைவரையும் விலக்கி அருகே வந்த பாலி அவன் கைகளை பற்றிக்கொண்டு ’’இங்கு நெடுநாள் இருக்கப்போகிறார் இளைய பாண்டவர். இன்று அவர் என்னுடன் இருக்கட்டும். இளைப்பாறியபின் இன்னும் நிறைய சொற்களை சொல்வார். அவர் வணங்கவேண்டிய பாதங்கள் இங்கு பெருகியிருக்கின்றன” என முனிவர்களிடம் சொன்னபின் “வருக!’’ என்று அவனை அழைத்தான். அர்ஜுனன் முனிவர்களிடம் மீண்டும் மீண்டும் கைகூப்பி விடைபெற்றுக் கொண்டான். “இங்கு நீ களியாட சோலைகளும் நீராடச் சுனைகளும் சொல்மகிழ அவைகளும் உள்ளன, இளையோனே. வென்று செல்லத்தான் ஒன்றுமில்லை” என்றார் சித்பவர். அவன் புன்னகையுடன் “ஒவ்வொன்றினூடாகவும் என்னை வென்றுசெல்கிறேன்” என்றான்.

அவன் தோள்களைத் தழுவிய பாலியின் கை எடைமிக்கதாக இருந்தது. “வருக, இளையோனே!’’ என்று வாயிலை நோக்கி அழைத்துச் சென்றான். ’’கதைகளின் உலகுக்குள் விழுந்துவிட்டது போல் உள்ளது, மூத்தவரே. இங்கு நான் கண்ட அனைவரையும் சொல்வடிவில் முன்னர் அறிந்திருக்கிறேன்’’ என்றான் அர்ஜுனன். “ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு நூலைப்போல. ஒவ்வொருமுறை வாசிக்கையிலும் நயம் பெருகிக்கொண்டிருப்பவர்கள்.”

பாலி உரக்க நகைத்து ’’ஒரு சொல்லேனும் சென்று தொடாதவர்கள் இங்கு வருவதில்லை’’ என்றான். அர்ஜுனன் அதைக்கேட்டு “’சொல்லில் ஆடும் சூதர்களுக்கு பிறிதொரு விண்ணுலகு உள்ளது போலும்’’ என்றான். பாலி  மேலும் நகைத்தான்.  ”’அதை அவர்கள் அங்கு மண்ணிலேயே உருவாக்கிக் கொள்கிறார்கள்.’’ அர்ஜுனன் “உண்மை, அவர்களுக்கு நேற்றும் நாளையும் இல்லை. எனவே விண்ணுலகும் கீழுலகும் இல்லை” என்றான்.

பாலி “நம்மை சொல்லில் பிணைக்கிறார்கள். சிலந்தி சிக்கா வலை அது” என்றபின் “முதற்பாவலராகிய புற்றுறைமுனிவரை நான் இங்கு வந்தபின் சந்தித்தேன். என்னை அவர் அடையாளம் காணவே இல்லை. நான் பாலி என்று அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். திகைப்புடன் நீங்களா என்றார். ஏன் என்றேன். நான் அறிந்த பாலி வேறு என்றார். அவனாகவும் நானே இருக்கிறேன் என்றேன். சிரித்துவிட்டார்.”

அவர்கள் இடைநாழியில் நடந்தனர். அவன் கைகளை பாலி தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான். ஒவ்வொரு படியேறும்போதும் இளமைந்தனை துணைப்பது போல் அவன் தோள் வளைத்து “எப்போதும் உன்னை நோக்கிக் கொண்டிருந்தேன்’’ என்றான்.  ”அன்றிருந்தது போலவே இன்றும் ஒளிகொண்டிருக்கிறாய். அன்று இருந்த உன் முகம் இன்று வேண்டுமென்று எண்ணினேன். அதுவாக உன்னை இப்போது காண்கிறேன்.’’ அர்ஜுனனின் தாடியை வருடி “இனியவர்களின் உடல்தழுவுதல்போல் இன்பம் பிறிதில்லை” என்றான்.

“எங்கு பார்த்தீர்கள்? என்று அர்ஜுனன் வியப்புடன் திரும்பிப் பார்த்தான். ‘’இடும்ப வனத்தில்’’ என்று சொல்லி பாலி நகைத்தான். “சூர்ணன் என்னும் சிறு குரங்கை நினைவுறுகிறாயா?’’ அர்ஜுனன் முகம் மலர்ந்து “ஆம். நெல்லிப்பிஞ்சு போல உருளும் அவன் விழிகளை இன்னமும் நான் மறக்கவே இல்லை. அவன் ஒரு நாள் அக்காட்டை ஆள்வான் என்று மூத்தவர் சொன்னார்’’ என்றான். பின் உளஎழுச்சியுடன் பாலியின் கைகளை பற்றிக்கொண்டு “மூத்தவரே, அவன் தாங்களா?” என்றான்.

“அக்கணத்தில் ஆம்’’ என்றான் பாலி. “அவன் விழிகளில் நான் வந்தமைந்தேன். அவனில் நிகழ்ந்தேன்.” அர்ஜுனன் “அவன் குலம் பெருகியிருக்கும்” என்றான். “ஆம், அவன் பெயரன் இன்று அக்குலத்தையும் காட்டையும் ஆள்கிறான். அவனையும் தூளிகன் என்றே அழைக்கிறார்கள்” என்றான் பாலி. அர்ஜுனன் நெஞ்சு கனிய பாலியை அணைத்துக் கொண்டான். “அன்று ஏனோ என் நெஞ்சு நெகிழ்ந்தது. மூத்தவர்கள் இருவரும் சொல்லாடிக்கொண்டிருந்தபோது நான் அவன் புன்தலை மயிரையே நோக்கிக்கொண்டிருந்தேன். என்னை அவன் பார்க்கிறான் என்றும், என்னை அவனுக்குத்தெரியும் என்றும் தோன்றியது.”

அவர்கள் முன் அரண்மனையின் வெண்பளிங்குத் தூண்நிரைகள் பொற்பட்டையிடப்பட்டு சித்திரச்செதுக்குகளுடன் எழுந்தெழுந்து வந்தன. புதுமழைநீரின் செந்நுரைபோன்ற திரைச்சீலைகள் காற்றிலாடின. தலைக்குமேல் அலைவளைவெனத் தெரிந்த உட்கூரைக் குடைவில் வண்ணச்சித்திரங்கள் மலர்ப்படுகை என ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றையொன்று நிரப்பி நிறைந்திருந்தன. “இவ்வரண்மனை உனக்கென முற்கணம் உருவாகி வருகிறது” என்று பாலி சொன்னான். ’’நீ கால் வைக்க கால் வைக்க விரிந்து தன்னை பெருக்கிச் சூழ்கிறது.”

“ஆம், இது இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனையின் விராடவடிவம். இந்த அறைமுகப்பும் எனது அறை போலவே உள்ளது’’ என்றான். வாயிலில் நின்ற காவல்தேவன் தலைவணங்கி கதவைத் திறக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் இனிய இசையும் குளிர்காற்றும் எழுந்து அவர்களைச் சூழ்ந்தன. “விழியறியா மருத்துக்கள் இங்கே காற்றென நிறைந்திருக்கிறார்கள்” என்றான் பாலி. அங்கே அகல்களில் அருமணிகள் சுடர்களாக மின்னின. அலையடிக்காத ஒளியில் விழிதொடத்தொட துலங்குவதுபோல சுவர்கள் ஒளிகொண்டன. அவற்றில் இருந்த சித்திரங்கள் விழியும் நகையும் கொண்டன.

பொற்சித்திர செதுக்கு கொண்ட பீடங்களும் காற்றில் உலையும் செவ்வெழினியும் கொண்டிருந்தது அந்த அறை. நடுவே வெண்பட்டு விரித்த சேக்கையில் மலர்கள் விழுந்தவைபோல் கிடந்தன. பீடத்தில் அமர்ந்தபடி “அச்சாளரம் வழியாக நீ விழைந்தால் யமுனையைப் பார்க்கலாம்’’ என்று பாலி சொன்னான். ’’இல்லை கங்கையென அது ஒழுக வேண்டுமென்றால் அவ்வாறே’’ என்றான். “அங்கே மென்மணலும் நறுமலர்களும் அழகிய சிறுபறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்திருக்கும்.” அர்ஜுனன் “ஆனால் சேறும் புதர்களும் காகங்களும் கொசுக்களும் இல்லையேல் அது கங்கை அல்ல” என்றான். “இது விண்ணவரின் கங்கை” என்றான் பாலி.

அர்ஜுனன் புன்னகையுடன் அச்சாளரத்தை அணுகி பார்த்தான். பின்னர் திரும்பி பாலியிடம் ’’நான் பார்ப்பது யமுனையை’’ என்றான். பாலி “ஆம், எண்ணினேன்’’ என்றான். அர்ஜுனன் “ஆனால் இந்திரப்பிரஸ்தத்தின் சாளரத்தினூடாக அல்ல. மதுராவில் என் இனிய தோழரின் அறைச்சாளரத்தினூடாக” என்றான். பாலியின் முகம் மாறுபட்டது. திரும்பி அருகிருந்த பீடத்தை இழுத்துப் போட்டு கால்களை நீட்டிக்கொண்டான். அவன் பெரிய தோள்கள் சற்று இறுகி பின் தொய்ந்தன, நிலைகொள்ளாத உள்ளம் கொண்டவன்போல கால்மேல் கால் வைத்து கைகளை மடிமேல் பொருத்தி சாய்ந்துகொண்டான்.

IMG-20161212-WA0000

அவன் உடலசைவிலிருந்த மாறுதலை உணர்ந்த அர்ஜுனன் “தாங்கள் எப்போதேனும் அவரைப் பார்த்ததுண்டா, மூத்தவரே?” என்று கேட்டான். “ஆம் பார்த்தேன்” என்றான் பாலி அவனை நோக்காமல். ஆர்வத்துடன் அருகே வந்து “எப்போது?” என்றான் அர்ஜுனன். பாலி பேசாமலிருக்க அவன் முன் வந்து நின்று “சொல்க!” என்று அர்ஜுனன் கேட்டான். பாலி சொல்ல விழையாதவன் போல் விழிதிருப்பி அமர்ந்திருந்தான். “சொல்லுங்கள், மூத்தவரே! எங்கு பார்த்தீர்கள் அவரை?”

பாலி நிமிர்ந்து “பலமுறை” என்றான். மேலும் கேட்க அர்ஜுனன் காத்துநின்றான். “அவன் அங்கு நிகழ்ந்திருக்கிறான் என்று அறிந்தபோது கோகுலத்திற்கே சென்று பார்த்தேன். அவன் தாவிச்சென்ற மரக்கிளையில் சிறு குரங்குக் குட்டியென உடன் தாவி அணுகி நோக்கினேன். பின்னர் சாந்தீபனி குருநிலையில் பலமுறை. மதுராவில், யமுனைப்பெருக்கில், இமயக்காடுகளில் மீண்டும் மீண்டும் அவனை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பிறிதொருமுறை அவனைப் பார்க்கலாகாது என்று ஒவ்வொரு முறையும் எண்ணுவேன். ஆனால் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வெண்ணமே அவனைப் பார்த்தாகவேண்டும் என ஆக்குகிறது.

“நாம் எண்ணிக்கொண்டிருக்கும் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாக வேண்டும் என்ற விழைவு எழுவது இயல்பு. பார்க்காமலிருக்க முடியாது, இளையோனே. அவனிடம் இருந்து எனக்கு மீட்பில்லை” என்றான் பாலி. அர்ஜுனன் விழிகளைச் சுருக்கியபடி “ஏன்?” என்றான். “அவனுடன் நான் பிணைந்துள்ளேன்.” அர்ஜுனன் “அவர் வாழும் காலம் பிறிதல்லவா?’’ என்றான். “ஆம், இளையோனே. ஆனால் காலத்திலென்ன?” என்றான் பாலி.

பெருமூச்சுடன் பாலி சொன்னான் “அவனை முதல்நோக்கு கண்டதும் திகைத்து கிறீச்சிட்டு அலறியபடி மரக்கிளையின் பிடிவிட்டு நான் கீழே விழுந்தேன். என் ஆழுளமென ஆன வால் நீண்டு பிறிதொரு கிளையைப்பற்றி என்னைக் காத்தது. அன்று நான் கண்ட முகம் பால்மணம் மாறாப் பைதலுக்குரியது ஆயினும் விழிகள் அவனுடையவை. நான் நன்கறிந்த விழிகள், இளையோனே. அவ்விழிகள் என்றும் புவியில் இருக்கும். ஏதேதோ நிலங்களில் வெவ்வேறு முகங்களில் அவை மானுடரை நோக்காத ஒரு கணம் அங்கு நிகழாது.”

அர்ஜுனன் “எவை?” என்றான். அதைக்கேளாதவன் போல பாலி “அவை நானறிந்த விழிகள்’’ என்றான். அவன் என்ன சொல்கிறானென்று புரிந்தும் புரியாமலும் அர்ஜுனன் நோக்கிக் கொண்டிருந்தான். பாலியின் கைகள் விரல்பின்னி பிசைந்துகொண்டே இருந்தன. பலமுறை அவன் எழ எண்ணுவது உடலசைவில் தெரிந்தது. அதை அவன் உள்ளம் அறியவில்லை. அது பிறிதெங்கோ இருந்தது. “யார்?’ என்றான் அர்ஜுனன்.

மேற்கொண்டு சொல்ல விழையாதவன் போல பாலி எழுந்து இரு கைகளையும் உரசிக் கொண்டு பெருமூச்சுவிட்டு “நன்று! இப்பொழுது இதைப்பற்றி பேச நிகழுமென்று நான் எண்ணவில்லை. இப்பேச்சு இந்த இனிய தருணத்தை தேவையற்ற எடை மிக்கதாக ஆக்கியிருக்கிறது” என்றான். உடனே எளிதாகி நகைத்து ’’நாம் இதைப்பேசுவோம். இப்படி சுவர் சூழ்ந்த அறைக்குள் அமர்ந்தபடி அல்ல. அப்சரஸ்கள் அழகு சேர்க்கும் இனிய சோலை ஒன்றில் மீண்டும் சந்திக்கலாம்’’ என்றான்.

அவன் திரும்புவதற்குள் அர்ஜுனன் “பொறுங்கள், மூத்தவரே!’’ என்று அழைத்தான். “தாங்கள் கண்ட முகம் எது? அதை இப்போது உரைக்காது நீங்கள் போனால் இங்கு என்னால் இருக்க முடியாது.” பாலி அவனைத் திரும்பி நோக்கி “முகமல்ல விழிகள்’ என்றான். “சொல்லுங்கள்! எவர் விழிகள்?” என்றான் அர்ஜுனன். பாலி தத்தளித்த விழிகளுடன் கையைத்தூக்கி ஏதோ சொல்லமுயன்று தவிர்த்து மீண்டும் சொல்லைப்பிடுங்கி எடுத்து பேசினான்.

“கிஷ்கிந்தையின் காடு. அறியாத எண்ணம் ஒன்று என்னுள் எழுந்த திகைப்பை உணர்ந்தேன். மல்லாந்து விழுந்தேன். என் இளையோன் கால்களை ஊன்றி என் மேல் எழுந்து நின்றான். அவனும் திகைத்திருந்தான்.” அவன் குரல் மிகத்தாழ்ந்திருந்தது. “என் நெஞ்சில் பாய்ந்த வாளியை உருவி எடுத்து அவன் பெயரை படித்தேன். திகைத்து விழிதூக்கினேன். தானும் திகைத்து அங்கு நின்றிருந்தான். அவனை நானறிந்த அக்கணமே என்னையும் அவன் அறிந்தான்.”

“ரகுகுல ராமன்…” என்றான் அர்ஜுனன். அவன் அதை முன்னரே உய்த்திருந்த போதிலும் அச்சொல்லை நாவால் சொல்லப் போவதில் நெஞ்சு படபடத்தது. “அவ்விழிகள் அவனுடையவை” என்றான் பாலி. “வில்லறம் துறந்து நின்றான். வேதச் சொல்லறம் பின்னால் மறைந்தது. தொல்திகழ் நல்லறம் அதற்கும் அப்பால் இருண்டது. அக்கணத்தில் அவன் கொண்ட அவ்விழிகளைச் சூடி இவன் எழுந்திருக்கிறான். இளையோனே, அத்தருணத்தை நீட்டி பிறிதொரு வாழ்வென்றாக்கி இவனென்றானான்.”

“வேதம் புதியதல்ல. வேதமென கூர்கொண்ட தொல்மெய்மையும் புதியதல்ல. இவனும் பல்லாயிரம் முறை புவியில் நிகழ்ந்தவன்” என்றான் பாலி. அர்ஜுனன் “நான் ரகுகுல ராமனின் நூறு ஓவியங்களையாவது பார்த்திருப்பேன். ஒன்றிலும் எந்த வகையான ஒற்றுமையையும் நான் பார்க்கவில்லை. அவர் இவரைபோல கரியோன் என்பது மட்டுமே பொதுமை. அவர் நெடியோன். பெருந்தோளன். என் தோழர் எளிய சிற்றுடல் கொண்டவர். ரகுகுல ராமன் இளமையிலேயே கனிந்தவர். இவரோ முதுமையிலும் இளையவர்” என்றான்.

பாலி மெல்ல நகைத்து “அணியறை புகுந்து ஆடையும் உருவும் மாற்றி மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறார்கள். விழிகளை மட்டும் அவர்களால் மாற்ற முடியவில்லை. ஏனென்றால் அதுவே அவர்கள் தோன்றும்விதை” என்றான். “இங்கு ஏன் அதை நீங்கள் சொல்ல வந்தீர்கள்?’’ என்றான் அர்ஜுனன். “நான் அவனை எண்ணிக்கொண்டேன்” என்றான் பாலி. “ஆம், ஆனால் அவரை எண்ணிக்கொண்டபோது உங்கள் உளம் மலரவில்லை. அதனால்தான் இதைக் கேட்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

பாலி “நான் இந்திரனின் மைந்தன், உன்னைப்போல” என்றான். அர்ஜுனன் அவன் சொல்லப்போவதென்ன என்பதுபோல் நோக்கினான். “இளையோனே, அவன் இந்திரனுக்கு எதிரி என்பதை நீ உணர்ந்ததில்லையா?” என்றான் பாலி. அர்ஜுனன் எளிதாகி புன்னகைத்து “இதுதானா? நானும் பெரிதாக அஞ்சினேன்” என்றான். “மூத்தவரே, இளவயதில் இந்திரனுக்கு அளித்த பலிக்கொடையையும் பூசனையையும் இளைய யாதவர் நிறுத்தினார் என நானும் அறிவேன். மாற்றாக மந்தர மலையையே வழிபடுபொருளாக அமைத்தார்.”

“ஆம், யாதவர் குடில்களில் அணையாமல் எரிந்த இந்திரனின் சுடர் அவனால்தான் அகற்றப்பட்டது. யாதவரின் ஆலயங்களில் கிழக்கு மூலை சிறுதெய்வமென எந்தை அமரச்செய்யப்பட்டார். அது ஒரு கதையென யாதவர்களால் இன்றும் பாடப்படுகிறது’’ என்றான் பாலி. “கதை என்றாகும்போது அதன் குருதி உலரத்தொடங்கிவிடுகிறது” என்று தொடர்ந்தான். “ஆயிரம் வருடங்களாக யாதவர் இல்லங்கள்தோறும் வழிபடப்பட்டு வந்த சுடர் அது. ஒவ்வொரு நாளும் யாதவமூத்தோர் ஒரு பிடி அன்னம் இந்திரனுக்கு அளிக்கப்படாமல் உண்டதில்லை. இன்று அக்குலத்து இளையோர் நான்கு திசைதேவர்களுள் ஒருவனாக மட்டுமே எந்தையை அறிந்திருக்கிறார்கள்.”

“ஏன் அவன் அதைச் செய்தான்? என்றாவது நீ அதை எண்ணியதுண்டா?” என்றான் பாலி. “அறியாத வயது அது. அன்றே நந்தை இந்திரன்மேல் அவன் கொண்ட சினத்திற்கு என்ன அடிப்படை?” அர்ஜுனன் “அன்னைப்பசுவைப் கொன்று பலிகொடுத்தது அவருக்கு உகக்கவில்லை என்பது யாதவர்களின் குலக்கதைக் கூற்று” என்றான். “அப்படியென்றால் அவன் பசுவை பலியிடுவதை மட்டும் நிறுத்தியிருக்கலாம். இந்திர வழிபாட்டை முழுமையாக ஏன் நிறுத்தினான்?” என்றான் பாலி. அவன் விழிகளையே அர்ஜுனன் நோக்கிக்கொண்டிருந்தான். “சொல், ஏன்?” என்று பாலி கேட்டான்.

அர்ஜுனன் கைகளை நெஞ்சில் கட்டியபடி “அறியேன்” என்றான். “அறிந்துகொள். இன்று இவ்விழி கொண்டு யாதவர் குலத்தில் எழுவதற்கு முன் அவன் அயோத்தியில் ரகுகுலத்தில் க்ஷத்திரியனாகப் பிறந்தான். அன்று இந்திர மைந்தனாகிய என்னை மறைந்திருந்து வீழ்த்தினான். இளையோனே, இந்திரனுக்கும் அவனுக்குமான பூசல் இன்று தொடங்கியதல்ல” என்றான் பாலி.

அர்ஜுனன் “இந்தப் பூசலின் கதை அங்கும் நூல்களில் பேசப்படுகிறது. அதன்பொருள் எனக்கு இன்றுவரை புரியவில்லை” என்றான். “அந்தக் காலத்தின் அரசியல். அன்றுள்ள சூழல். அதை இன்று தொல்காவியம் வழியாகவும் சூதர் சொல்வழியாகவும் மட்டுமே அறியமுடிகிறது.” பாலி “அதன் பொருள் துலங்க இன்னும் நூறு தலைமுறைகளாகும்” என்றான். அவர்கள் சற்றுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர். “நந்தை அப்பகையை கொண்டுள்ளாரா?” என்றான் அர்ஜுனன். பாலி ஆம் என தலையை அசைத்தான்.

“ராகவனாக வந்து என்னை வென்று எந்தையை சிறுமை செய்தான். பின் எந்தையின் இயல்புகள் அனைத்தையும் தானே கொண்டு மீண்டும் மண் நிகழ்ந்தான். இன்று தங்கள் காளைகள் வீரியம் கொள்ள யாதவர்கள் வழிபடுவது இந்திரனை அல்ல. தங்கள் நிலங்கள் கதிர் நிறைய உழவர்கள் அவனை வணங்கும் நாள் தொலைவிலும் இல்லை” என்று பாலி சொன்னான். பின்பு “நான் இவை எதையும் இங்கு பேச வரவில்லை, இளையவனே. நீ யார் என்று நீயே உணர்ந்திருப்பாய் என்று எண்ணினேன். அதை மீண்டும் நினைவுறுத்திச் செல்ல விரும்புகிறேன்” என்றபின் கதவைத் திறந்து வெளியே சென்று மறைந்தான்.

அர்ஜுனன் அவனிடம் மேலும் பேசவிழைந்தான். அவன் சென்றபின் மூடிய கதவை நோக்கியபடி சற்றுநேரம் அசையாமல் நின்றபின் சேக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். சதசிருங்கம் முதல் அஸ்தினபுரியினூடாக இந்திரப்பிரஸ்தத்தினூடாக காடுகளினூடாக பாலைகளினூடாக கடந்துவந்த வாழ்க்கை ஒரு துளிக்கனவெனத் தோன்றியது. இல்லை, இதுதான் கனவு என சொல்லிக்கொண்டான். ஆனால் நெஞ்சு எடைமிகுந்திருந்தது. உடலைப் புரட்டிப்புரட்டி அவ்வெடையை நிகர்செய்யவேண்டியிருந்தது.

அவன் விழிசரிந்து துயிலில் ஆழ்ந்தபோது அவனைச்சூழ்ந்திருந்த அறை மறைந்தது. அவன் காட்டில் ஒரு மரத்தடியில் தன்னந்தனிமையில் படுத்திருந்தான். ஒரு நாகம் அவனை அணுகி தலைதூக்கி நாபறக்க நின்றபின் வளைந்து சென்றது. புலி ஒன்று தொலைவில் வந்து விழியொளியுடன் அவனை நோக்கி நின்றபின் திரும்பிச்சென்றது. அவன்மேல் சருகுகள் மெல்ல உதிர்ந்துகொண்டிருந்தன. அவன் அங்கு படுத்தபடி வேறெங்கோ ஒரு மென்சேக்கையில் துயில்வதாக கனவுகண்டுகொண்டிருந்தான்.

மிக அருகே அவனை எவரோ அணுகும் ஓசை. அவன் உடல் அதை அறிந்தது. அவனை நோக்கி குனிபவனை அவன் உள்ளுடல் நன்கறிந்திருந்தது. அவன் விழிதிறந்தபோது அந்த முகம் மிக அண்மையில் இருந்தது. விழிகளை அவன் தன் விழிகளுடன் கோத்துக்கொண்டான். அந்த விழிகள்தான். அவன் உடல்நடுங்க விழித்துக்கொண்டு சேக்கையில் தன்னை உணர்ந்தான். சாளரத்திரை அசைந்துகொண்டிருந்தது.

அந்த விழிகளை எங்கே பார்த்தேன்? அவை மதுராவிலும் யமுனையிலும் அவனுடன் ஆடிய இளைய யாதவனின் நகைக்கும் விழிகளல்ல. அவனுடன் அவையமர்ந்து சொல்லாடிய கனவுக்கண்களும் அல்ல. குளிர்விரல் ஒன்றின் தொடுகைபோல் அவன் உணர்ந்தான், அவை தன்னுடன் போரிட்டு வென்று அடக்கி மேலேறி கொல்ல ஓங்கிய கையுடன் தெரிந்த இளைய யாதவனின் அண்மைவிழிகள் என.

அவன் எழுந்து அமர்ந்து தன்னை அணையச்செய்தான்.  கண்களை மூடினால் அந்த விழிகள் தெரியுமென்பதனால் வெண்சுவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த விழிகளிலிருந்த வஞ்சம் எத்தனை உண்மையானது என அவன் உள்ளம் அன்று அறிந்தது. அவனை அலைக்கழித்தது அதுதான். அவன் திசைத்தேவர்களின் படைக்கலம்தேடிச்சென்றது அதனால்தான். நான் நிகர்நிலை நிற்க விரும்பி படைக்கலம் தேடவில்லை. அவனை அஞ்சியே அலைகிறேன். அவனிடமிருந்து என்னை காத்துக்கொள்ளவே இவையனைத்தும்.

அவனை வெல்ல விழைகிறேனா? நானா, அவனை வெல்வதா? என்று அவன் எண்ணிக்கொண்டதுமே உள்ளாழத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. வெல்வதும் அவன் விழைவே என. அதை உணர்ந்ததும் வலியளித்த முள்ளை பிடுங்கி எடுத்ததுபோல ஆறுதல்நிறைந்த உளைச்சல் எஞ்சியது. அவன் மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொண்டான். அந்தக்கண்கள் மிக அருகே எனத் தெரிந்தன. அவற்றையே நோக்கிக்கொண்டிருந்தான்.

முந்தைய கட்டுரைவிசித்திரபுத்தர்
அடுத்த கட்டுரைகூண்டு -கடிதங்கள்