கூண்டு -கடிதங்கள்

1

அன்புள்ள ஜெயமோகன்,

கூண்டு என்று தலைப்பிட்ட பதிவில் அரசு ஊழியர்கள் குறித்த தங்களுடைய கருத்துகள் நடைமுறையைப் பிரதிபலிப்பது கண்கூடு. இருப்பினும் பதிவிலிருந்த கேள்விக்குப் பொருத்தமில்லாத திசையில், எற்கனவே மனதில் தேங்கியிருந்த ஒரு கருத்தை இணைத்து தாங்கள் பதில் செல்வது போலத்தோன்றுகிறது. தாங்களே மீண்டும் ஒருமுறை கேள்வியையும் பதிலையும் வாசித்துப்பாருங்கள் – நெருடலாக உள்ளது.

சமீப நாட்களில் தங்களுடைய சில பதிவுகள் அவசரகோலத்தில் இம்மாதிரி நிகழ்வது வருத்தமளிக்கிறது. இதனை எளிதில் புரிந்து கவனமாக செயல்படக்கூடியவர் என்ற நம்பிக்கையிலேயே என் கருத்தை தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

ரமேஷ் குமார்

கோயம்புத்தூர்

*

அன்புள்ள ரமேஷ் குமார்

இருக்கலாம். பலசமயம் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருக்கையில் சிந்தனைகள் அனைத்தும் அதை நோக்கிச் செல்கின்றன. அதைத்தவிர்க்கமுடியாதுதான். மேலும் இப்படி கடிதங்கள் அனைத்தையும் வேறு ஒரு தீவிரமனநிலையை ஈடுகட்டவே செய்கிறேன் போலத்தெரிகிறது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிபவன் (Upper Division Clerk).

அரசு ஊழியர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு கற்க மறுப்பதற்கான காரணமாக இருப்பது அவர்களின் நிலையான மாத வருமானமும், பணி செய்தாலும், செய்யாவிட்டாலும் கிடைக்கும் ஆண்டு ஊதிய உயர்வும் தான். பட்டப்படிப்பு முடித்து சென்னை வந்து வேலைதேடிய காலகட்டங்களில் இருந்த சுறுசுறுப்பும், கற்கும் மனோபாவமும் அரசு வேலை கிடைத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே செத்துப் போனதை நான் உணர்ந்தேன்.

ஆம். கூண்டில் வைத்து வேளை வேளைக்கு நல்ல உணவு தருகிறார்கள். இப்படிப்பட்ட உணவு உண்டு உயிர் வளர்க்க வேண்டியிருக்கிறதே என எண்ணி வருந்துகிறேன். வேட்டையாடும் மற்றும் வேட்டையாடப்படும் உயிர்களிடத்தில் இருக்கும் அடுத்த வேளை குறித்த நிச்சயமற்ற தன்மைதான் அவற்றை உயிர்ப்போடு வைத்திருப்பதாக கருதுகிறேன்.

கூண்டிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் அரசூழியர்கள் எப்பொழுதும் தன் பணி சார்ந்தே சிந்திக்கும், பேசும் ஒருவித மன நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். சிறைக்குள் அடைபட்டிருந்தாலும் எப்படி தன்னை விரித்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க காரி டேவிஸாலும் ஜெயமோகனாலும் தான் முடியும். நான் தங்கள் பள்ளியில் சேர்ந்து நான்கு மாதமாகிறது.

ஒரு நாள் ட்விட்டரில் வந்த லிங்க் மூலம் அஜிதனின் பள்ளிப் படிப்பு குறித்து தாங்கள் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. எனக்குள் இருக்கும் உடைந்த துண்டின் மற்றொரு பகுதி அந்த எழுத்தில் எனக்கு கிடைத்தது. அன்றிலிருந்து எஞ்சிய மற்ற துண்டங்களையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
“என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் அரசு அலுவலகங்களில், அரசு வங்கிகளில் ஒருவர் கூட என்னை அறிந்திருப்பதைக் கண்டதில்லை” என்ற உங்களின் வார்த்தைகளுக்கான பதிலாய் என்னால் இதைத் தான் கூற முடியும்.

“வைரத்தை மானுடன் அறிந்த பிறகே, அதை வைரமென்றான். அவனுக்குத் தெரியாது, முன்னரும் அது அதுவாகத்தான் இருந்தது என்று.”

என் முந்தைய மின்னஞ்சலுக்கான தங்களின் பதிலில் ஒருவித நெருக்கமின்மையை நான் உணர்ந்தேன். தாங்கள் என்னை ஒருமையில் விளிக்கவே ஆசைப்படுகிறேன்.

நன்றியுடன்,

ஜெ. விஜய்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்.

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
அடுத்த கட்டுரைவண்ணமும் மென்மையும்…. சௌந்தர்