நல்முத்து

DSC_0088

 

இனிய ஜெயம்,

 

 

என் தோழி ஒருவள்,  சூல் கொண்டாள். அவளது அகத்திலும் புறத்திலும் பூத்து விரிந்த மாறுதலை. அனுதினமும் அருகிருந்து கண்டேன்.  ஐயுருவாள், எரிச்சல் படுவாள், உவகையில் பறப்பாள், தனித்திருந்து விழியுதிர்ப்பாள்.  அவள் நிறைவயிற்றை தொட்டுப்பார்க்க என் உள்ளங்கை கொண்ட உன்மத்தத்தை, அதைக் கடந்து வந்த வன்பொழுதுகளை யோகிகள் மட்டுமே அறிவர்.

 

 

 

தருண நாளில்  அவளை,  பேறுமனை சேர்த்து அருகிருந்து   பிறந்து வரும் பிரபஞ்ச ரகசியத்தின்  முகத்தை முதன் முதலாக நோக்கும் ஒருவனாகும் ஆசியும் வாய்த்தது. அன்றைய நாளுக்குப் பிறகு, நூறு நாட்கள் கடந்து இன்றுதான் அவனைக் கண்டேன். முகம் நோக்கிச் சிரித்தான்.  ”பார்ரா பார்ரா மாமனப் பார்ரா ” என அவனை அள்ளி ஏந்தி, அவனது முகிழ் பண்டியில் முத்தமிழ்ந்த தோழியின் முகத்தைக் கண்டேன்.  கன்னிமை முதல் தாய்மை வரை அவளுக்குள் எத்தனை முகங்கள்.

 

 

 

தூய்மையில் புல்லிய சிறு மாசும்,

 

அது தாளாத துயர்க்கனலும்.

 

பிறப்பித்தன 

 

ஒளிரும் ஒரு முத்தினை.

 

 

 

தேவதேவனின் இக் கவிதை நினைவில் எழுந்தது.  கன்னிமை எனும் பரிசுத்தம்.  அதில் புல்லிய சிறு மாசுதான் அவளது அத்தனை அல்லலின்  விதையா?  பிறந்து வந்த மானுடமும், அது கிளர்த்திய தாய்மையும்  முத்தேதான். இல்லையா.

 

 

 

 

C360_2016-05-06-12-37-25-417

 

 

உங்களுக்கு நினைவு இருக்குமா தெரியவில்லை. நீலத்தின் ஒரு பாரா எழுதி விட்டு, அங்கேயே நிறுத்திவிட்டு ,அஜிதனுக்கு தொலைபேசி அவன் கிடைக்காமல் போக, அந்த நேரம் சரியாக என்னுடைய அழைப்பு.  ”ஐந்தாவது மாடில இருக்கேன். அப்டியே வெளிய குதிச்சிடலாமான்னு இருக்கு” என்றார்கள்.

 

 

 

மறுநாள் வாசித்துப் பார்த்தேன்,  உதிர்ந்த மலரினுள்  தாங்கள் வாழ்ந்த சிற்றுலகு உதிர்ந்துவிட்டதறியாமல் தேனருந்திக் கொண்டிருக்கும் எறும்புகளின்  அவை அறிய இயலா துயரின் வேதனை வரிகள்.

 

 

 

அடுத்த எல்லையில் இக் கவிதை  பேசுவது  படைப்பல்லிக்குள் நிகழும் அல்லைலைத்தானே.  சொல்லில் ராமகாதையும், கல்லில் ஹளபேடுவையும் எழுப்பி நிறுத்துவது எது?  காணும் கலை எல்லாம்,  பரிசுத்தத்துடன் முயங்கிய, தன்முனைப்பு எனும் புல்லிய மாசின்  நன்முத்து தானே.

 

 

 

நீங்கள் ஒரு முறை சொன்னது போல, பிரபஞ்ச லீலை.  பரிசுத்த அசேதனத்தில்  புல்லிய மாசு.  காணும் சேதனம் யாவும் அழகுதானே.

 

 

 

முத்தளவே சிறிய கவிதை. ஒளிரும் நன்முத்தளவே அழகும், மதிப்பும் வாய்ந்த கவிதை.

 

கடலூர் சீனு

 

 

 

 

அன்புள்ள சீனு

 

இணையான நினைவாக எழுவது இன்னொன்று

 

தியானம் பழகிவந்த நாட்கள். அப்போது பாலக்கோட்டில் தன்னந்தனிமையில் வாழ்ந்திருந்தேன். மாசுகள் அகன்று மனம் தெளியும் பருவம். அப்போது ஒரு மாசு. தெளிந்ததில் மாசு என்பது எவ்வளவு உக்கிரமானது என  தெரிந்தது. அப்படியே பஸ் பிடித்து கிளம்பி பெங்களூர் சென்றேன். அலைந்துத் திரிந்து அற்று அலைந்து திரும்பி வந்தேன்

 

 

அந்தக்கொந்தளிப்பை அலை எனச் சொல்வேன். தசையலை. அது மாசைமூடி முத்தாக்கியது.மிகப்பெரிய வதையுடன் எழுதிய அந்தக்காகிதத்தைத் தூக்கிப்போட்டிருந்தேன். பின்னர் விஷ்ணுபுரம் எழுதும்போது அதை எடுத்துப்பார்த்தேன். பழுப்பேறிய காகிதத்தில் முன்பின்னில்லாது ஒரு அத்தியாயம். விஷ்ணுபுரத்தின் மூன்றாம்பகுதியாக அது உள்ளது

 

 

 

சாகு சாகு என மழை ஒரு பெண்ணிடம் அறையும் இடம். அவள் மழையிலிறங்கி ஆற்றைப்பார்க்கச் செல்கிறாள். அவ்வளவுதான் அன்று எழுதியது. ஆச்சரியமென்னவென்றால் அதில் அந்த மாசு இல்லை. அந்த குணப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே உள்ளது

 

ஜெ

 

முந்தைய கட்டுரைகாலனிக்கறை
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49