விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விழாவில் அறிவித்திருந்தபடி இந்தவருடம் முதல் ஒரு விருது அளிக்க உத்தேசித்திருக்கிறோம். பலவருடங்களாகவே நான் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாத நிலையைப்பற்றி பேசிவந்திருக்கிறேன். தவறான பேர்கள் தங்கள் ‘திறமைகள்’ காரணமாகவும் அரசியல்சார்புகள் காரணமாகவும் விருதுகள் நோக்கிச்செல்லும்போது இவ்வகை விஷயங்களை விட்டு விலகி தன் படைப்பூக்கத்தை நம்பியே செயல்படும் படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அதற்கு எதிராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்திருக்கிறேன். நல்ல படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறேன். அவர்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவர்களுக்காக விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். சில விருதுகளிலும் ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.

Image and video hosting by TinyPic“>

நண்பர்கள் ஏன் நாமே விருதை வழங்கக் கூடாதென கேட்டார்கள். ஆகவே ஒரு சிறு குழுவும் நண்பர்களின் சிறிய நிதியும் கொண்டு இதை ஆரம்பிக்கிறோம். இந்தவருடம் முதல் விருதை எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு அளிக்கவிருக்கிறோம்.

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை பின்னணியாகக் கொண்டு கடந்த நாற்பதாண்டுகளாக கதைகள் எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஆ.மாதவனுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது எல்லா திறனாய்வாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்று. இன்றுவரை ஆ.மாதவனுக்கு எந்த குறிப்பிடத்தக்க விருதும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய விருது அவர் பெறப்போகும் அங்கீகாரங்களுக்கு தொடக்கமாக அமையட்டும்.

ஆ.மாதவன் போன்ற மூத்த படைப்பாளிக்கு விருது வழங்குகையில் ஐம்பதாயிரம் ரூபாய் என்பது சிறியதே. ஆனால் இது அவரது வாசகர்களும் வழித்தோன்றல்களும் வழங்கும் விருது. கூடவே அவரை கௌரவிக்கும் முகமாக அவரைப்பற்றி நான் எழுதிய ’கடைத்தெருவின் கலைஞன்’ என்ற நூலும் வெளியாகும்.

விழா வரும் டிசம்பர் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில் நிகழும். என் மதிப்பிற்குரிய ஆசான் கோவை ஞானி விழாவுக்கு தலைமை வகிப்பார். என் நண்பர் எம்.எ சுசீலா வரவேற்புரை நிகழ்த்துவார்

விருதை மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா வழங்குவார். புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தின் முதன்மையான நாவலாசிரியர். மீசான் கற்கள் என்ற பேரில் அவரது நாவல் குளச்சல் மு.யூசுப்பால் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது [காலச்சுவடு பதிப்பகம்]

ஆ.மாதவனைப்பற்றிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ நூலை இயக்குநர் மணிரத்னம் வெளியிடுவார். இத்தகைய ஒரு கௌரவம் இலக்கியவாதிகளால் அளிக்கப்பட்ட ஒன்றாக மட்டும் அமையாது தமிழின் பிறதுறைக் கலைஞர்களின் பங்களிப்பும் கொண்டதாக அமையவேண்டும். மணிரத்னம் ஆ.மாதவனை கௌரவிப்பது ஒரு நல்ல தொடக்கம்.

ஆ.மாதவனை வாழ்த்தி நாஞ்சில்நாடன் பேசுவார். நாஞ்சில்நாடன் ஆ.மாதவனால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அவரை முன்னோடியாகக் கொண்டு எழுத ஆரம்பித்தவர். நெடுநாள் நண்பரும் கூட. எம்.வேதசகாயகுமார் ஆ.மாதவனை வாழ்த்தி பேசுவார். ஆ.மாதவனை தமிழில் தொடர்ந்து கவனப்படுத்தி வந்தவர் அவர்.

என்னுடைய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் விழாவில் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன். பலருக்கு தனிப்பட்ட கடிதமாகவும் அனுப்பலாம், ஆனால் சிலருக்காவது அது ஒரு கட்டாயமாக ஆகிவிடும் என்பதனால் இவ்வாறு அழைக்கிறேன். அனைவரும் வந்து ஆ.மாதவனை வாழ்த்தி கௌரவிக்க வேண்டுமென கோருகிறேன்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – இணையதளம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு

ஆ.மாதவன்

காந்தளூர்ச்சாலையின் கலைஞன்

கடைத்தெருவை கதையாக்குதல்

தெருவெனும் ஆட்டம்

தெரு மனிதர்கள்

ஆ.மாதவன் பற்றி விக்கி

ஆ.மாதவனின் இரு கதைகள்

புனத்தில் குஞ்ஞப்துல்லா

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

முந்தைய கட்டுரைமூப்பனார்
அடுத்த கட்டுரைகடிதங்கள்