திதலையும் பசலையும்

2518386520_3218d1bdcc

இனிய ஜெயம்,

இங்கே கடலூரில்,  முதிய தன்னார்வ சித்த வைத்தியர் ஒருவர் வசம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் நோய் அறிகுறிகளை கழலை, திதலை  என வரிசைப் படுத்தினார்.  திதலை எனும் சங்க இலக்கிய சொல்லால் நான் துணுக்குற்று, அச் சொல்லின் சரியான பொருளை கேட்டேன். [திதலை  எனும் சொல்லுக்கு நான் வாசித்தவை தேமல் எனும் ஒரே பொருளை மட்டுமே இயம்பின].

அவர் சொன்னார்  ஒரே தசைப் பகுதியின் ஒரு இடம் மட்டும், வண்ணத்தாலும், சரும மென்மையாலும், திணிவாலும், சற்றே அழுத்தம் கூடி இருந்தால் , அவ் விடத்திற்கு திதலை  என்று பெயர். உதாரணம் புயமும் முழங்கையும் இணைந்து மடங்கும் பின் முழை [எல்போ] மேல் இருக்கும் சருமம்.  பின் கையில் இருப்பது இயல்பான திதலை. அது உடலின் எப் பகுதியிலேனும் திடீர் என தோன்றினால்  அது நோய்க்கான அறிகுறி. என்றார்.

அவரது சொல்லைக் கொண்டு  இப் பாடலை வாசித்தால், எரோட்டிக் சுவையில் உள்நாக்கு தித்தித்து தலை கிறுகிறுக்கிறது.

27.பாலை – தலைவி கூற்று

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

[வெள்ளிவீதியார்]

யாருக்கும் பயனில்லை

கன்றும் உண்ணாமல் கறக்வும் கறக்காமல்
நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
எனக்கும் இல்லாமல்
என் தலைவனுக்கும் உதவாமல்
என் அழகு வீணாகிறது.

நன்றி : எழுத்தாளர் சுஜாதா (Book : 401 காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,உயிர்மை பதிப்பகம்)

எனது சுதந்திர மொழி பெயர்ப்பின் வழியே,

கன்றும் உண்ணாமல், கலத்திலும் சேராமல் ,

நற்பசுவின் தீம்பாலை  [ கன்று ஈன்ற உடனே, பசு உகுக்கும் முதல் பாலை என் ஊரில் தீம்பால், அல்லது சீம்பால் என்கின்றனர்]  நிலம் உண்பது போல,

எனக்கும் ஆகாமல், என் ஐ க்கும் உதவாமல்,

பசலை உண்டு அழிக்கிறது,

திதலை அல்குல் கொண்ட என் மேனி எழிலை.

சுஜாதாவின் எளிய உரை எனக்கு அளிப்பதைக் காட்டிலும், எனதிந்த அத்து மீறல், எனக்களிக்கும்  பிரதி தரும் இன்பம் அளப்பரியது.

இது சரியா? தவறு எனில் எங்கே தவறு செய்கிறேன்?  மட்டுறுத்தவும். நன்றி.

கடலூர் சீனு

 

rvk139a

 

அன்புள்ள சீனு

தமிழின் தொல்லிலக்கியங்களைப் பொருள்கொள்வதிலுள்ள முக்கியமான ஒரு சிக்கல் அவற்றுக்கு நமக்கு அறிவார்ந்த முன்னோடியாக இருந்தவர்கள் சான்றோர்களான தமிழறிஞர்கள் என்பது. சான்றோர்கள் என்றால் அவர்களுக்கு காதலுணர்வே இருக்காது. கணக்குணர்வே இருக்கும். ஆச்சிகளுக்கும் அதிலே பெரிய ஈடுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை. காலம் அப்படி. ஆகவே இயற்கையழகை ரசிக்கவோ,மானுட நுண்ணுணர்வுகளை கூர்ந்தறியவோ அவர்களால் இயன்றதில்லை.

காமத்தைப்பேசும்போது அவர்கள் எப்போதுமே நாலுபேர் நடுவே சொல்லத்தக்க பொருளைத்தான் தேடிக்கண்டடைந்தனர். இயற்கையை தங்கள் அறிஞர்சபைகளில் வைத்து வகுத்துக்கொண்டனர். அவர்கள்தான் நமக்கு பண்டைய இலக்கியங்களை மீட்டளித்தனர். அவற்றுக்குச் சொற்பொருள்தேடித் தொகுத்தனர். வரலாற்றுப்பின்புலத்தை வகுத்தனர். அந்த பெருமதிப்புடனேயே  “பெரிசு கொஞ்சம் அந்தால போ, இந்த அர்த்தத்த நானே வாசிச்சுக்கறேன்’ என்று சில தருணங்களில் சொல்லவேண்டியிருக்கிறது.

காமம் சார்ந்த தகவல்கள் மற்றும் இயற்கைசார்ந்த தகவல்களில் உரையாசிரியர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் வழிமுறை. அவர்களுக்குக் கவிதை வாசிப்பின் இன்பம் இருந்ததா என்பதே கேள்விக்குரியதுதான். நம் உரையாசிரியர்களின் வரிகளை வாசித்தால் கவிதையின் உள்ளடக்கம் மட்டுமே கிடைக்கும். உண்மையான கவிதை தவறிவிடிருக்கும். கவிதையை தமிழாசிரியர்களிடமிருந்து மீட்டுத்தான் அடையவேண்டியிருக்கிறது.

இவ்வாறு நம் பெரியவர்களால் அவர்களுக்குரியவகையில் பொருள் அளிக்கப்பட்ட சொற்களில் ஒன்று பசலை.  வையாபுரிப்பிள்ளையின் பேரகராதி அழகுத்தேமல் என்று அதற்குப் பொருள் அளிக்கிறது. பொன்னிறம், காமநோயால் உருவாகும் நிறவேறுபாடு, இளமை என்னும் மறுபொருட்களையும் அளிக்கிறது.

உண்மையில் பசலை என்றால் என்ன பொருள்? பசத்தல் என்னும் வேர்ச்சொல் வெளிறுதல் என்று பொருள்கொண்டது. தொன்மையான வேர்ச்சொற்கள் அக்கால பழங்குடிவாழ்க்கையின் இயல்புக்கேற்ப பல தருணங்களில் பலவாறாகப் பொருள்கொள்ளப்பட்டிருக்கும். குமரிமாவட்டப் பேச்சுவழக்கில் வயலில் பயிர் வளமில்லாது நிறம் வெளிறுதலைக்குறிக்க அச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேர்ச்சொல்லைக் கண்டபின் நாம் நம் அந்தரங்கமான கவிதைவாசிப்பினூடாகவே அச்சொல்லை அக்கவிதையில் கண்டடையவேண்டும். அகராதியை வைத்து கவிதையைப் புரிந்துகொள்ளலாகாது, கவிதை அகராதிப்பொருளைச் செழுமைப்படுத்துவது. சொற்களுக்கு ஒரு அவைப்பொருள் இருக்கலாம்தான். ஆனால் நமக்குரிய கவிப்பொருள் ஒன்றும் திரண்டாகவேண்டும்

சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் வரும் பசலை என்பது நேரடியாகச் சொன்னால் தோலில் உருவாகும் நிறமாறுபாடு. ஆனால் அது தேமலால் வருவது அல்ல. நிறமாறுபாடு என்றதுமே அது தேமல் என்ற முடிவுக்கு நம் சான்றோர் வந்துவிட்டனர். அவர்களில் பலருக்குச் சித்தமருத்துவ ஆர்வமும் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்

பெண்களின் தோல்மேல் உருவாகும் பொன்மணலின் மினுக்கம்போன்ற நிறமாறுபாடுகள், தளிரென ஒளிரும் மெல்லியவரிகள் அவர்களின் அழகின் முக்கியமான தன்மை என்றறிய ஆண் என்று கண்கொண்டிருந்தாலே போதும். கன்னியராக முலையும் இடையும் பெருக்கும்போது தோல் விரிசல்கொண்டதுபோல சற்று வெளுத்து விரிகிறது. பின்னர் வளரும்தோறும் மெல்லிய மினுக்கு கொண்டு நிறமாறுபாடு அடைகிறது.குறிப்பாக மார்பும் நெஞ்சும் புயங்களும் அன்றாடமென நிறமாறுபாடு கொள்பவை.

அதேபோல மெலியும்போதும் தோல்நிறமாறுபாடுகள் உருவாகின்றன. தோளில் மெல்லிய அலைபோல நிறமாறுபாடு கீழிறங்கும். முலைக்கீழே மணல்வரிகளென விரியும். தோல் என்பது ஒரு பொருள் அல்ல உயிர் நிகழும் ஒரு களம். பெண்மையை கண்கூடாகக் காணும் ஓர்  இடம். இந்த நிற மாறுபாட்டைத்தான் கவிஞன் கொண்டாடுகிறான். தேமல் என்னும் நோயை அல்ல.

எவையெல்லாம் பெண்ணில் அழகென்று கொண்டாடப்படுகின்றனவோ அவையெல்லாம் பெண்ணென்றானதனாலேயே அவள் உடலில் உருவாகக்கூடியவை. அவள் பெண்மைக்கு அடையாளமாக நின்றிருப்பவை. இப்பொருளில் எடுத்தால் மட்டுமே காதலன் பிரிகிறான் என்ற எண்ணத்தாலேயே பசலை வந்து மூடியது என்னும் வர்ணனை பொருள்படும். காதலன் பிரிந்த கணமே வந்து தொற்றுவதற்குக் காற்றில் தேமல் காத்திருக்கிறதா என்ன?

திதலை என்னும் சொல்லுக்கும் வையாபுரிப்பிள்ளை பேரகராதி தேமல் என்றே பொருள் சொல்கிறது. பொன்னிறத் திதலை என்று திருமுருகாற்றுப்படை சொல்வதைச் சுட்டுகிறது. ஈன்றபெண்களுக்கு ஏற்படும் வெளுப்பு நிறம் என்றும் பொருள் அளிக்கிறது

திதலை என்பதை குறுந்தொகை ஈன்றவள் திதலை போல என்று குறிப்பிடுகிறது. ஈன்றபெண் வெளுத்தல் அது. ஆனால் மெலிதலுக்குத் திதலை என்னும் சொல் பயன்படுத்தபடவில்லை.

திருப்புகழில் அருணகிரி

திதலை உலாத்து பொற்களபம் விடா புதுத்

திரிவித கடாக்களிற்று உரகோடு

என்கிறார். யானைமருப்பு போன்ற முலையை திதலை எனும் பொற்களபம் பூசிய என்கிறார். திதலை மாமை தளிர்வனப்பு என்று பரணர் தெளிவாகவே சொல்கிறார். பசலை வனப்பு எனச் சொல்லப்படுவதில்லை. திதலை மாமைநிறத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு தளிரின் அழகு என்றே குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாலான பாடல்களில் திதலையும் பசலையும் எதிர்ப்பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலே சொன்ன பாடலிலும் கூட அப்படித்தான்.

அகநாநூற்றுப்பாடல் வரி இது

திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி

இதிலும் திதலை கொண்ட உடலில் வனப்பு மறைந்து பசலை பாய்ந்தது என்னும் பொருளே வருகிறது. அப்படியென்றால் பசலையும் திதலையும் ஒன்றல்ல. ஆனால் இரண்டையுமே தேமல் என்றுதான் நம் தமிழறிஞர்கள் பொருள்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான பாடல்களில் இந்த வேறுபாடு கவனிக்கப்படாமலேயே கடந்துசெல்லப்பட்டிருக்கும்

திதலை என்பது உடல்விரியும்போது ஏற்படும் நிறமாறுபாடு. கருவுற்ற பெண்களின் அடிவயிற்றில், அல்குலில் உருவாவது. பசலை என்பது மெலிவதனால் வரும் நிறமாறுபாடு. இரண்டும் பார்வைக்கு ஏறத்தாழ ஒன்றே. ஆனால் எதிர்த்தன்மை கொண்டவை. உணர்வுரீதியாக வெவ்வேறு பொருள்கொண்டவை

இப்போது நீங்கள் குறிப்பிட்ட பாடலில்

பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

என இருசொற்களும் எதிரீடாக அமைந்திருப்பதன் நுட்பத்தை நோக்குங்கள்.

இங்கே ஒன்று சொல்லவேண்டும். அல்குலின் திதலை என்பது மைந்தரை ஈன்றதனால் மட்டும் அமைவது அல்ல. காதலால், காமத்தால் பெண்களின் அல்குல் வளர்வதைப்பற்றி பழம்பாடல்கள் நிறைய பாடியுள்ளன [வாம மேகலையுள் வளர்ந்தது அல்குலே- கம்பன்]  அவ்வாறு வளரும் அல்குலின் நிறமாற்றம்தான் திதலை.

உவகையால் வளர்ந்து அதனால் திதலை கொண்ட அல்குலில் பசலைபாயும்படியாக அழகு கெடும் பிரிவைப்பற்றித் தலைவி சொல்கிறாள். [அல்குல் என்றால் பெண்குறி என்னும் பொருள் உண்டென்றாலும் பெரும்பாலான பாடல்களில் வீனஸ் ஆஃப் மௌண்ட் தான் குறிப்பிடப்படுகிறது]

நன்றி, ஈராயிரம் ஆண்டு இடைவெளிக்கு இப்பால் நின்று வெள்ளிவீதியாரை அணுக்கமாக உணர்ந்த தருணத்திற்கு. நீ கவிஞர் என்றால் நானும்தான் என முப்பாட்டியிடம்  சொல்லிக்கொள்ள வாய்ப்பமைந்தமைக்கு

ஜெ

முந்தைய கட்டுரைவழிப்போக்கர்களும் வழிகாட்டிகளும்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48