’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53

[ 13 ]

முதற்காமத்திற்குப் பின் பங்காஸ்வன் தன்னை முழுதும் பெண்ணென்றே உணர்ந்தான். எங்கோ கனவின் ஆழத்தில் சிலகணங்கள் ஆணென உணர்கையில் அஞ்சி விழித்தெழுந்து நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்து நீர் அருந்தி மீள்வான். ஆனால் ஆணென்றிருந்த நினைவு அவன் புலன்களின் ஆழத்தில் இருந்தமையால் உடலறிந்து உள்ளம் அறியாது காமத்தில் ஆண்மை செல்லும் வழிகளிலெல்லாம் முன்னரே சென்று காத்திருந்தது அவன் உடல். முற்பிறப்பு நினைவுகளால் செலுத்தப்படுபவன் கண்டடையும் வாழ்ந்த நிலமும் அறிந்த முகங்களும்போல.

பெண்ணென்றாகி அவனை நிறுத்தியது அப்பெண்ணுடல். அது அறிந்து அடைந்து திளைத்தவற்றை அவன் உள்ளுறைந்ததும் கொண்டது. வணிக இளைஞன் செல்வந்தர்குடியில் பிறந்த இளைஞர்களைப்போல உடலறிந்ததுமே காமத்தில் விழுந்தவன். பெண்களைக் கண்டு கடந்துகொண்டே இருந்தவன். அவன் அறிய அறிய கடக்கவியலாத விரிவாக அவள் இருந்தாள். “உள்ளே நுழைந்தவர்களை வெளியே விடாத புதிர்வழிக்கோட்டை அவள். அவளுக்குள் அறிந்துமுடிக்கமுடியாத ஏதோ ஒன்று உள்ளது” என்று அவன் நண்பர்களிடம் சொன்னான்.

“அது என்ன என்று ஒவ்வொருமுறையும் என் அகத்தை கூர்தீட்டி வைத்திருக்கிறேன். என் விழிப்பில் ஒன்று காமத்தில் திளைக்கையிலும் ஒன்று விலகி நோக்கியிருக்கிறது. மீண்டு வரும்போது  விலகியிருப்பது பேசத்தொடங்குகிறது. அது கண்டவற்றை, தொட்டுத்தொட்டு சேர்த்தவற்றை. ஒவ்வொருமுறையும் ஒன்று” என்று அவன் சொன்னபோது அவர்கள் திகைப்புடன் நோக்கியிருந்தனர். “இன்று ஒன்று தோன்றியது. அவள் அறியாத ஆணின் ஆழம் என்பது இல்லை. உடலில் உள்ளத்தில் உள்ளம் கடந்த துரியத்தில். அவள் முன்னரே அங்கு சென்றுமீண்டிருக்கிறாள்.”

“ஒருவேளை காமத்திலாடி சலித்த முதுபரத்தை அந்தத் தெளிவை அடையக்கூடும். ஆனால் அவள்கூட ஆண்காமத்தின் அடுக்குகளையே அறிந்திருப்பாள். நாம் சூதுக்களத்தில் பொற்கோளில் சொல்லாடலில் அடையும் நுண்மைகளை அவள் எப்படி அடையக்கூடும்? இயல்வதே அல்ல அது” என்று அவன் சொன்னான். “அச்சமூட்டுகிறது அவள் நோக்கு. அங்கே நாம் ஆடையின்றி மட்டுமே நின்றிருக்கமுடியும்.” அவன் அணுக்கத்தோழன் சொன்னான் “அவ்வண்ணமெனில் அவளை விட்டு விலகுவதே உகந்தது. அவளுக்கு அறியாத்தெய்வங்களின் துணை உள்ளது.” அவன் சிரித்து “அச்சத்தைப்போல் பெரும் கவர்ச்சி பிறிதில்லை. இனி பிறிதொரு பெண்ணை என்னால் எண்ணவும் முடியாது. தோழனே, கூர்வாள் கொண்டு போர்க்களம் பயின்ற பின்னர் பயிற்சிக்குரிய மரவாளை கையிலெடுக்கவும் கூசுவோம்” என்றான்.

ஆனால் அவள் அவனை எளிதில் கடந்து மறுபக்கம் சென்றாள். அவன் பொருள் ஒழிந்து சலிக்கத்தொடங்கியதும் பற்றவைத்து இறுதியையும் கொள்ளமுயன்றாள். அதன்பொருட்டு சற்று விலக்கம் காட்டினாள். பெருகிய எழுச்சியுடன் அவன் மீண்டும் அருகணைந்தான். ஊடிச் சினந்தும் அருகணைந்து தழுவியும் அவனை பெருக்கிப்பெருக்கி துளிஎஞ்சாது துய்த்தாள். நழுவும்பொருளை அள்ளிப்பற்றும் பதற்றத்திலேயே அவனை வைத்திருந்தாள். பற்றப்பற்ற நழுவுமென்று அவனை அறியவைத்தாள். உச்சத்தில் முற்றிலும் ஒழிந்து அவன் நின்றபோது இரக்கமின்றி அவனை உதிர்த்துவிட்டுச் சென்றாள்.

அவனை உதிர்ப்பதைப்பற்றிய எண்ணம் அளித்த உவகையை அவளே திகைப்புடன் நோக்கினாள். ஒழிந்த கலத்தை வீசுவதில் புதுக்கலம் கொள்வதைவிட பேரின்பம் உண்டென்று பிறர் சொல்லியிருந்தால் ஏற்றிருக்கமாட்டாள். நூற்றுக்கணக்கான முறை வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுடன் அவனை விடுத்தாள். சொற்களை கூட்டிக்கூட்டி அப்போது சொல்லவேண்டியவற்றை யாத்து நினைவில் நிறுத்திக்கொண்டாள். ஒவ்வொரு சொற்கோவையையும் நுண்சொல் உரைக்கும் தவத்தான்போல சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ஆணவத்தின் உச்சத்தில் நின்று “நீ எளியோன். எனக்கு இணையானவனே அல்ல. உன் காமத்தின் உச்சத்தில் மட்டுமே நீ என்னுடன் ஓடமுடியும். புள் மேல் காதல்கொண்டால் தவளை தாவி அழியும்” என்றாள். தன்னிரக்கத்தின் கீழ்ப்படியில் நின்று “எளியவள், நீங்கள் செல்லும் தொலைவு மிகுதி. என்னுடன் இருந்தால் இழிவும் துயருமே மிஞ்சும். மறந்துவிடுங்கள். இனியொரு பிறவியில் அணுகுவோம். அன்று நானும் இணையானவளாக இருப்பேன். இன்று சொல்கிறேன், இப்பிறவியில் பெண்ணென உங்களால் நிறைந்தேன். இனியொரு எண்ணம் எனக்கில்லை” என்று கண்ணீர் வடித்தாள்.

வஞ்சம் கொண்டு சீறி “என்னை வெறும் உடலென்று நுகர்ந்தவர் நீர். சொன்ன சொற்களை நான் ஒருபோதும் மறந்ததில்லை. என்னுடன் சோலையில் இருக்கையில் உங்கள் குலமூத்தார் ஒருவரின் குரல்கேட்டு எழுந்து ஒளிந்தீர். அன்று நான் இழிந்தேன். அவ்விருளில் இருந்து வெளிவந்ததே இல்லை நான்” என்றாள். கனிந்து “இது வாழ்க்கையின் ஒரு கட்டம். இது இப்படியே கடந்துசெல்வதே முறை. தேர்க்கு அருகே சோலைமரம் ஒன்று எப்போதும் நின்றிருக்கவேண்டுமென்று விழைவது குழந்தையியல்பு. ஆணென்று நின்று கடந்துசெல்க!” என்றாள்.

அந்த அத்தனை நடிப்புகளிலும் முழுதும் ஈடுபட்டு உணர்வுநிலைகளின் உச்சங்களில் நின்று திளைத்தாள். அவள் முகம் ஒவ்வொரு தருணத்தில் ஓர் உணர்வின் உச்சத்தில் நெளிந்துகொண்டிருப்பதைக்கண்டு தோழியர் அவளுக்கு அணங்கு கூடியிருக்கிறதென்று எண்ணினர். நடித்து நடித்து அத்தருணம் மழையொழுகிய மலைப்பாறைபோல தேய்ந்து கருக்கழிந்தபோது அதில் சலிப்புற்றாள். அவனை மிக எளிதாக வென்று கடந்தாள். நுரைத்துத் ததும்பி தன் உச்ச உறவொன்றிலிருந்து அவன் விலகியபோது உதட்டுச்சுழிப்புடன் முகடுநோக்கி பேசாமல் கிடந்தாள்.

அவன் அவள் புன்னகையைக் கண்டதுமே அதிர்ந்து நோக்கை விலக்கினான். பின்னர் “என்ன? என்ன?” என்று மீண்டும் மீண்டும் கேட்டான். அவள் மறுமொழி சொல்லாமல் எழுந்து ஆடை அணிந்தாள். “சொல், என்ன?” என்று அவன் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விலகிச்சென்றாள். அவனை வென்றுகடந்துவிட்டோம் என்று அப்போது உணர்ந்தாள். உடம்பெங்கும் மதுக்களிபோல் ஒன்று ததும்பியது. கண்கள் மங்கலடைய கால்கள் தடுமாறின. எவரிடமாவது நகையாடவேண்டும்போல எவரையாவது தழுவவேண்டும் போலிருந்தது. காமத்தின் உச்சங்களுக்கு ஒருபடி மேல் அந்நிலை என்று உணர்ந்தாள். காற்றுபட்ட மலைச்சுனைபோல் சிலிர்த்துக்கொண்டே இருந்தாள். அடுமனைக்குச் சென்று அங்கிருந்த பெண்களிடம் நகையாடினாள். அவர்களை தழுவிச் சிரித்தாள். அவளுக்குள் பிறிதொரு அணங்கு குடிகொண்டுவிட்டதென்று அவர்கள் எண்ணினர்.

அவனை முற்றிலும் தவிர்க்கலானாள். அவனைத் தவிர்ப்பது அத்தனை எளிதென்று அப்போதுதான் உணர்ந்தாள். அவனை தன் அகம் முற்றாக முன்னரே தவிர்த்துவிட்டிருந்தது என்று அறிந்தாள். முதலில் அவன் கடும்சினம் கொண்டான். அவளை சந்தித்து மதவேழத்தின் உறுமலுடன் “ஏன் என்னை தவிர்க்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்றான். அந்த ஆற்றலுக்கு அடியிலிருந்த அச்சம் அக்குரலுக்குள் எங்கோ தெரிந்தது. காற்றுக்குள் மழை இருப்பதன் குளிர்போல. அது அவன் ஆண்மையின் நிமிர்வை மைந்தரின் தோரணையாக ஆக்கி அவளை புன்னகைக்க வைத்தது. “ஒன்றுமில்லை” என்று சொல்லி அவள் கடந்துசென்றாள்.

அவன் மேலும் மேலும் சினம்கொண்டான். அவளை அச்சினம் ஒன்றும் செய்யாதென்று உணர்ந்த ஒருகணத்தில் உடைந்து “என்னை தவிர்க்காதே. நான் உனக்கென உயிர்வாழ்பவன். உன் முகமன்றி பிறிதில்லை என் நெஞ்சில். நீ என்னை விடுத்தால் மண்ணில் விழுந்து மட்கி புழுதியாவேன்” என்றான். அவள் மெல்லிய இளிவரல் உள்ளுக்குள் ஒளிந்த கனிவுடன் “என்ன சொல்கிறீர்கள்? ஆண் என நின்று பேசவேண்டாமா? இச்சொற்கள் என்னை துன்புறுத்துகின்றன” என்றாள்.

அவன் உடைந்தழுது “என்னை கொன்றுவிடாதே” என்று கைகளை நீட்டினான். அக்கணத்தில் தன்னை அன்னையென விரித்து “ஏன் இப்படி பேசுகிறீர்கள்? உங்கள் நலனன்றி பிறிதொன்றும் நான் கருதவில்லை” என்றாள். கடந்துசென்றபோது அவள் கால்நகம் ஒன்று மட்டும் புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அதைமட்டும் கண்டான். இடிவிழுந்து எரியும் பனைபோல அவன் அங்கே நின்றான். அத்தனை அன்னை தெய்வங்களாலும் இளிவரலுக்காளானவன். அத்தனை ஆண் தெய்வங்களாலும் கனிவுடன் குனிந்து நோக்கப்பட்டவன்.

அவன் மீண்டும் மீண்டும் அவளிடமே வந்தான். நோயுற்று உடல்மெலிந்து விழிகள் பழுத்து இதழ்கள் கருகி நடுங்கும் உடலுடன் அவள் செல்லும் பாதையில் காத்து நின்றான். கண்கள் இறைஞ்சின. பின் அவை வெறும் பொருளற்ற நோக்குகள் மட்டுமாயின. பின் நோக்கும் அழிந்து இரு வெண்சிப்பிகளென்றே எஞ்சின. அவள் அவனை கடந்துசெல்கையில் உடல்கொள்ளும் ஆழ்ந்த உவகையில் திளைத்தாள். குட்டியைக் கிழித்து உண்டபின் நாவால் குருதியை நக்கும் அன்னைப்பன்றியின் நிறைவு. அவள் உள்ளத்தில் எழும் பாதைகளில் எல்லாம் அவன் எங்கோ நின்றிருந்தான். அவன் நோக்கு பரவிய மண்ணையே அவள் மிதித்து நடந்தாள்.

அவன் அளித்த உவகைகளும் பொருளிழக்கலாயின. புத்தாடை கருக்கழிந்து வண்ணமிழப்பதுபோல. அவள் பெருவணிகனின் நண்பனின் மைந்தனுடன் காதல்கொண்டாள். அக்காதலை முதற்காதலன் காணவேண்டுமென்று விரும்பினாள். அவனுடன் இருக்கையில் முதற்காதலனின் நோக்கு கதவுக்குமிழ்களின், கதவுத்துளைகளின் ஒளித்துளிகளில் இருப்பதாக உணர்கையில் நரம்புகள் இழுபட்டு உடல்கூசி உள்ளம் கூர்ந்து உச்சம்கொண்டாள். காமப்புளைவின் தருணங்களில் சாளரக்கதவு முனகினால் திரைச்சீலை நெளிந்தால் உடல்கொள்ளும் மெய்ப்பும் விழிகசிய கால்வெள்ளை கூச எழும் விதிர்ப்பும் காமத்தின் அறியாச் சுவைகளென்றிருந்தன.

பின்னர் அவள் காதல்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு எதிரான பிறிதொன்றென இருந்தன. உணர்ச்சிப்பெருக்குடன் ஒருவனை அடைந்தாள். தெய்வப்படையல் என தன் உள்ளத்தையும் உடலையும் அவனுக்களித்தாள். எஞ்சலாகாது எதுவுமென்று சூளுரைகொண்டாள். இதுவே இறுதியென்று எண்ணி உருகி அவனுடனிருந்தாள். அவளுக்குள் அந்தச் சிறுபல்லி அமர்ந்து நொடிப்பொலி எழுப்பியதை அவள் கேட்டுக்கொண்டுமிருந்தாள். அந்த மந்தண ஒலி அத்தருணத்தின் நெகிழ்வுக்கு மேலும் இனிமையை அளித்தது.

பின் கசந்து ஊடி பிரிந்தாள். அதற்கென்றே தருணங்களை அவளுள் அமர்ந்து தேடிக்கொண்டிருந்தது பிறிதொரு உள்ளம். அதைக் கண்டடைந்ததும் சேர்த்துவைத்த சொல்லனைத்தையும் அதன்மேல் பெய்தது. வளர்த்தெடுத்து அனலென்றாக்கியது. தன்னிரக்கமும் பகைவெறியும் கொண்டு கொதித்தாள். கூர்சொற்களால் குத்தி குருதிபெருக்கினாள். தன் குருதியை உடன்கலந்து குடித்து மயங்கினாள். பிரிதலின் பெருந்துன்பத்தின் மயக்கில் திளைத்தாள். அணிகளைந்து ஆடைகலைந்து சொல்குலைந்து துயர்சுமந்து பிச்சியென்றாகி அமர்ந்திருந்தாள். இறப்பின் கூர்விளிம்புகளில் கால்கட்டைவிரல் நகங்களை மட்டும் ஊன்றி நடந்தாள். இருண்டிருண்டு சென்ற அடியிலிகளில் முடிந்தவரை சென்றாள்.

எத்தனை தொலைவுக்கு இருண்டிருண்டு உள்வாங்குகிறாளோ அத்தனை விசையுடன் எரிந்தெழமுடியுமென்று அறிந்திருந்தாள். பிறிதொருவனைக் கண்டு அவனை பதினாறு கைகளால் தழுவி இறுக்கி அவன் மார்பில் முகம்பொத்தி தன்னை இரங்கி கலுழ்ந்து கண்ணீர்வார்ந்து குலுங்கி அதிர்ந்து ஓய்ந்தபோது எழும் தனிமைக்கு காமத்தைவிட நூறுமடங்கு சுவை இருந்தது. அவன் அளிக்கும் முத்தங்களை பெற்றுப்பெற்று மழைகொண்ட பாலைநிலமெனக் குளிர்ந்து மெய்ப்புகொண்டு தளிர்பரவி பரந்துகொள்ளும் காமப்புளைவென்பது  தெய்வங்கள் திகைத்து விழித்துச் சூழ்ந்து நின்றுநோக்கும் வெறிகொண்டிருந்தது. முடிந்து உடல்கள் ஓய்ந்தபின்னரும் காற்றில் அவ்வசைவு எஞ்சியிருந்தது.

பின்னர் அந்நாடகங்களில் அவள் தேர்ந்த நடிகையென்றானாள். ஒவ்வொன்றும் பிசிறின்றி முழுமைகொண்டிருந்தன. அம்முழுமை சலித்தபோது அவள் அதன் விளிம்பை கலைத்தாள். அக்கலைவை சீர்செய்யும்போது பதைத்தாள். அடைந்தவற்றை இழந்து ஏங்கினாள். ஒருகணத்தில் பேதையென்றும் மறுகணத்தில் கலைதேர்ந்த பரத்தை என்றும் இக்கணத்தில் அன்னை என்றும் அக்கணத்தில் குருதிவிடாய்கொண்ட அணங்கு என்றும் மாயம் காட்டும் அவளை திருப்பத்திருப்ப ஒளிபெறும் வைரம் என்று உணர்ந்தனர் ஆண்கள்.

அவள் உறிஞ்சி உதிர்த்த ஆண்களின் நிரையை அனைவரும் அறிந்திருந்தனர். அதனாலேயே அவளை நோக்கி மேலும் ஈர்க்கப்பட்டனர். ஒவ்வொருவரின் ஆணவத்தையும் அவள் சீண்டினாள். தாங்கள் உதிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கை அவர்களை அவளிடம் அழைத்துவந்தது. வெண்ணைக்கல் சிற்பம் செய்து தேர்ந்தபின் களிக்கல்லிலும் மாக்கல்லிலும் தேர்ந்து கருங்கல்லை வந்தடைவதுபோல அவள் மேலும் மேலும்  இறுகிய ஆண்களை சந்தித்தாள். வென்று மேலே சென்று திரும்பிநோக்கியபோது தன் கரும்பனையின் அடியில் உதிர்ந்து கிடக்கும் மண்டையோடுகளைக் காணும் யட்சி என அவள் விழிகள் மின்னின.

நெஞ்சு ஏறியிறங்க “ஆம்” என்று அவள் சொல்லிக்கொண்டாள். அக்கணத்தில் திளைப்பதற்காக தன்னிரக்கத்தின் படிகளில் மெல்ல இறங்கினாள். “நிறைவடையாதவளின் தனிமை” என்றாள். “எளியவள். எப்போதும் தாக்கப்படுபவள். தெய்வங்களால் கைவிடப்பட்டவள். பிறிதொன்றை நான் செய்யவியலாது. இச்செய்கைகளின் பழி சுமந்து என் உள்ளம் எடைகொள்கிறது.” அத்துயரை தன்குருதியை நக்கி உண்ணும் பெண்புலி என சுவைத்துச் சுவைத்து நிறைந்தபின் உள்ளெழுந்த ஆணவத்துடன் குகையதிர உறுமினாள். “ஆம், நான் பெண். பெண்ணென்பதனாலேயே இவையனைத்தையும் ஆற்றத்தக்கவள். தெய்வங்கள் அறிக!”

[ 14 ]

பல ஆண்டுகளுக்குப்பின் பெண்ணுருவில் பங்காஸ்வன் தன் அரண்மனையை வந்தடைந்தான். அரண்மனைக் கோட்டைக்குள் இயல்பாக நுழைந்த அவளைக் கண்டு காவலர் தடுத்தனர். “நான் உங்கள் அரசன். பெண்ணுருக்கொண்டவன்” என்று அவன் சொன்னான். தன் கைகளில் பொறிக்கப்பட்ட குலக்குறிகளைக் காட்டியும் அவர்கள் அவனை அறியவில்லை. துணைக்கழைத்த ஏவலரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. செய்தியறிந்து வந்த நூறு மைந்தருக்கும் அவனை அறியக்கூடவில்லை.

அமைச்சர் விபூதர் “மானுட உள்ளம் விழைவுகளும் ஐயங்களும் அச்சங்களும் கொண்டது. அம்மாசுபடாத உள்ளம் கொண்டவை விலங்குகள். அரசர் ஊர்ந்த புரவியாகிய பாண்டகம் இங்குள்ளது. பிற எவரையும் தன்மேல் ஏற அது ஒப்பியதில்லை. அது சொல்லட்டும்” என்றார். அவ்வெண்புரவி கொண்டுவரப்பட்டது.  பாண்டகம் அவளைக் கண்டதுமே கனைத்தபடி ஓடிவந்து  அருகணைந்து அவள் மேல் கழுத்தை உரசி நின்றது. அப்புரவியின் உளமறிந்த சூதன் “அரசே” என்று அழைத்து வணங்கினான். அவள் அதன்மேல் ஏறி அரண்மனைமுற்றம் நோக்கி சென்றாள்.

பெண்ணுருக்கொண்டு வந்தது அரசனே என்று அரண்மனை ஏற்றது. ஆகவே அவை ஒப்பியது. அதை அந்நகரும் நாடும் ஏற்றன. அரண்மனைச்சூதர் நாடுசெழிக்கும்பொருட்டு தவம்செய்து அரசர் பெண்ணுருப்பெற்று மீண்டிருப்பதாக பாடினர். அதை ஏற்று மக்கள் உவகைகொண்டு அரசியை வாழ்த்தினர். கமலத்வஜத்தின் அரசியென அமர்ந்து மீண்டும் கரையற்ற காமத்திலாடத்தொடங்கினான் பங்காஸ்வன்.

குளிர்விதை தொங்கும் காளையென மதமணம்கொண்ட இளையோர், தோள்திமிர்த்த மல்லர், நீள்கைகொண்ட வில்லவர், களம்நின்று பொருதும் வாள்வீரர் என வீரர்கள் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டனர். நாவன்மைகொண்ட கவிஞர், இன்குரல் பாடகர், விழிமயங்கும் ஓவியர் என ஒவ்வொருநாளும் அழைத்துவரப்பட்டனர். நாளும் பதின்மருடன் அவள் காமத்திலாடினாள். பவளப்பேழைக்குள் அமைந்த சின்னஞ்சிறு இந்திரகோபம். சருகுக்குள் ஒளிந்த அனல்துளி. எரிந்தெரிந்து சுவை அறியும் சிறுநா. அனல்போல தான் பெருகுவது பிறிதில்லை.  கொள்ளும்தோறும் பெருகும் களியாட்டென காமம் தழைத்தது.

நூறு மைந்தரை ஈன்றாள். நூறாவது மைந்தனுக்கு முலையூட்டி படுக்க வைத்து குனிந்து அம்முகத்தைப் பார்த்ததும் மீண்டும் அவள் முதுகிலொரு தொடுகையென எதையோ உணர்ந்தாள். அவ்வண்ணமே மேற்கு வாயில் திறந்து வெளியே சென்று பணிந்து நின்ற அமைச்சரிடம் “நகர்முடியை மீண்டும் மைந்தனுக்கு அளியுங்கள்” என்று சொல்லி நடந்து காடேகினாள்.

ஆணென்று அமைந்து பங்காஸ்வன் பெற்றெடுத்த நூறுமைந்தரும் பெண்ணென்று ஈன்ற நூறுமைந்தரும் தங்களுக்குள் பகைமை கொண்டனர். பெண்ணின் மைந்தர் தங்கள் தந்தையரின் குலத்தையும் குடியையும்  பொருளையுமே உரிமை கொண்டவர் என்றனர் தந்தையின் மைந்தர். அன்னையென வந்ததும் பங்காஸ்வனே என்பதனால் மணிமுடிக்கு தாங்களும் உரிமை கொண்டவரே என்றனர் பெண்ணீன்றவர். அவர்களுக்குள் எழுந்த பூசலைத் தீர்ப்பதற்கு முன்னறி நெறிகள் எவையும் சான்றோர் அறிந்திருக்கவில்லை. நிமித்திகர் வரைந்த பன்னிரு களங்களில் வந்தமைந்த தெய்வங்களுக்கும் விடை தெரிந்திருக்கவில்லை.

ஆண் பெற்ற மைந்தர் தங்களை அழித்துவிடக் கூடுமென்று அஞ்சி பெண் பெற்ற மைந்தர் தங்கள் தந்தையரை துணை கூட்டினர்.  அவர்களோ நாடுகளெங்குமிருந்து திரட்டப்பட்ட தகுதிமிக்க பெருவீரர்கள். அவர்கள் படைகொண்டு சென்று தந்தை பெற்ற நூறுமைந்தரை சூழ்ந்து போரிட்டு கொன்றொழித்தனர். அதன்பின் எஞ்சிய தாய் பெற்ற நூற்றுவருக்குள் பூசல் தொடங்கியது. நூறு மைந்தருக்கு பல்லாயிரம் தந்தையர் குருதியுரிமை கோரினர். மன்று வந்து சான்று சொல்ல அன்னை இருக்கவில்லை. பல்லாயிரம் தந்தையர் பலநூறு குடிகளைச் சேர்ந்தவர்கள். குலங்களெனத் திரண்டு ஒருவருக்கொருவர் போரிட்டனர். ஒருவருக்கொருவர் வெட்டி முற்றிலும் கொன்றொழித்து மைந்தரென எவருமில்லாதாகினர்.

காட்டில் தனித்து சென்ற பங்காஸ்வன் அவர்கள் போரிட்டு மறைந்ததை அறிந்திருக்கவில்லை. மீண்டும் அச்செந்நதிப்பெருக்கருகே வந்து நின்றபோது அங்கு குடில் அமைத்து தங்கியிருந்த பிருங்கர் என்னும் முனிவரைக் கண்டாள். அவர்முன் சென்று வணங்கி நின்றாள். “காமக் கடும்புனல் கடந்து அப்பொன்னுலகை எய்துவதற்கென இங்கு வந்தேன். இந்நீரில் என் உடல் அமிழ மறுக்கிறது. எனவே இங்கு குடிலமைத்து தங்கியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “அதைக் கடக்கவே இங்கு வந்தேன் நானும்” என்று அவள் சொன்னாள்.

“நீ இங்கு வந்தது என் ஊழ் போலும். இன்று நான் ஒன்றை அறிந்தேன்” என்றார் பிருங்கர். “நான் ஆற்றில் நீராட இறங்குகையில் அங்கு இடையளவு நீரில் ஒரு இளம்பசு நின்றது. என்னைக் கண்டு அது கரையேறாது நீராடியது. அப்போது கரைமேல் வந்து நின்ற அன்னைப்பசு ஒன்று காமம் கரையாத ஆண்முன் கன்னியர் நின்றிருக்கலாகாது மகளே, கரையேறுக என்றது. அப்போது அறிந்தேன் நான் எங்கு தோற்றேன் என்று. கரைத்தழிப்பதை புதைத்தழிக்க இயலாது.”

“ஆம், எனக்கும் அனலடங்கி உளம் மீளுமென்றால் நன்றே” என்றாள். அவருக்கு மனைவியாக அக்குடிலில் தங்கினாள். உதறிக்கடந்த காமமனைத்தும் உடலுக்குள் கரந்திருந்த முனிவர் அவளுடன் அக்குடிலில் கணந்தோறும் காமம்கொண்டு அறிந்தார். அவள் யாரென்று ஒருசொல்லும் அவர் கேட்கவில்லை. அக்கணத்திற்கு முந்தைய கணத்தில் அவள் இல்லையென்றே கொண்டிருந்தார். எனவே ஒவ்வொருகணமும் முழுமைகொள்ள அவள் முழுமையாக தழைத்தாள். அவர் முற்றிலும் ஒழிந்தார்.

ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர் உடல் எடை குறைந்து வந்தது. ஒருநாள் அவ்வாற்றங்கரையில் அவளுடன் உறவுகொண்டபின் எழுந்தபோது வீசிய மென்காற்று அவரை பஞ்சென பறக்கச்செய்து கொண்டுசென்று அப்பெருக்கில்விட்டது. அவர் நீர் மேல் நடந்து அவளை திரும்பி நோக்காமல் சென்று மறுபக்கம் மறைந்தார். அவர் விட்டுச்சென்ற எடையனைத்தும் தான் கொண்டவளாக அவள் நீரை அணுகியதுமே கற்பாறையென ஆழத்தில் அமிழ்ந்தாள். நடந்து குடிலுக்குச் செல்லவே நெடுநேரமாகும் அளவுக்கு அவள் உடல் எடைகொண்டது. நின்ற இடத்தில் கற்பாறை குழிந்தது. சாய்ந்த மரம் இலையுதிர்த்துச் சரிந்தது.

ஒருநாள் அவள் வேர்ப்பலவின் அடியில் கனிகொய்து உண்டு தனித்திருக்கையில் அவளருகே வந்து நின்ற காகம் ஒன்றுக்கு ஒரு சுளை எடுத்து வீசினாள். பசித்திருந்தும் அதை உண்ணாது பறந்தெழுந்தமைந்தது காகம். ஏழுமுறை அது அவ்வண்ணம் செய்யவே அதன் விழிகளைக் கூர்ந்து “பறவையே சொல்க, இவ்வுணவு ஏன் உனக்கு ஒவ்வாதிருக்கிறது?” என்று கேட்டாள். “நான் விண்ணுலகில் வாழும் உன் மூதாதை. மைந்தரில்லா வெற்றுடல் கொண்டிருக்கிறாய். நீ அளிக்கும் உணவு பலியாகவே பொருள்கொள்கிறது. அதை நான் உண்ணலாகாது” என்றது.

“நான் நூறு மைந்தருக்கு அன்னையும் தந்தையுமல்லவா?” என்று அவள் சீறினாள். “நீ அறியமாட்டாய், உன் இருநூறு மைந்தரும் பூசலிட்டு மடிந்தனர். உன் நகரம் நாகம் ஏறி பறவைகள் கலைந்த மரம்போலுள்ளது. உன் அரண்மனையில் எருக்கு எழுந்துவிட்டது” என்றது காகம். நெஞ்சிலறைந்து அழுதபடி அவள் தன் நகர் மீண்டாள்.  மெல்ல சிற்றடி வைத்து நின்ற இடமெல்லாம் கதறி விழிநீர் உகுத்து அவள் சென்றடைந்தபோது  ஒவ்வொரு அடிக்கும் என முதுமை கொண்டிருந்தாள். நகரை அடைந்தபோது உடல்பழுத்து முடிநரைத்து பல்லுதிர்ந்து நகங்கள் சுருண்டு அழுக்காடையும் சடைமுடிகளுமாக பிச்சியென்றே ஆகியிருந்தாள்.

நகர்த்தெருக்களில் எல்லாம் குடித்தலைவன் இறந்த வீட்டின் உணர்வே நிறைந்திருந்தது. இடிந்து சரிந்து முள்ளும் புழுதியும் மண்டிப் பாழடைந்திருந்த அரண்மனைக்குள் புகுந்து தன் மைந்தர் தவழ்ந்த திண்ணையை ஆடிய முற்றங்களை அவர்களை ஈன்ற ஈற்றறையை ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு சென்றாள். நெஞ்சில் அறைந்து அழுதபடி நகரெங்கும் அலைந்தாள். தன் மைந்தர் விழுந்திறந்த மண்ணில்  விழுந்து தலையறைந்து கதறினாள். அவர்கள் எரிந்த சிதைச்சாம்பல் கலந்த மண்ணை முகத்தில் அள்ளிப் பூசினாள். அவர்களின் எலும்புகள் கரைக்கப்பட்ட ஆற்றின் கரைச்சேற்றில் புரண்டு கதறினாள்.

இரவும் பகலும் அவள் கதறல் ஒலித்தது. நகர்த்தெருக்களில் நெஞ்சில் அறைந்து அலறியும் கைவிரித்துக் கூவியும் ஓடி விழுந்து எழுந்து அழுத முதுமகளை அயலூர் பிச்சியென்றே அனைவரும் எண்ணினர். அழுது உடல் நீரனைத்தும் விழிவழியாக வெளியேற கோடைஉண்ட குளம்போல உடல் வற்றி தோல் வெடிப்புகொண்டு எடையற்ற நெற்றென ஆனாள். ஒருநாள் எவரும் அறியாது அந்நகரைவிட்டு நீங்கினாள். மீண்டும் காட்டுக்குத் திரும்பி அந்நதிக்கரையை அடைந்தாள்.

அவள் இறங்கியபோது ஆற்றுநீர் பளிங்கென இறுகி அவளை தாங்கிக்கொண்டது. அதன்மேல் காலடி வைத்து மறுபக்கம் சென்றாள். மறுநிலத்தைச் சென்றடைந்ததும் அவள் உருமீண்டு பங்காஸ்வன் என்றாகியது. அது  மீண்டும் இளமை பெற்று ஒளிர்ந்திருக்கக் கண்டான். அவன் முன் மணிமுடியும் மின்கதிர் படையும் கொண்டெழுந்த இந்திரன் புன்னகையுடன் சொன்னான்  “இது காமநிறைவுற்றோருக்கான பொன்வெளி. காமமே இங்கு மகிழ்வென்றும் தவமென்றும் ஆகும். நீ கடந்து அடைந்துவிட்டாய். நீ அடைந்த அவ்வுலகு என்னால் இன்னமும் அடையப்படாதது. நீ வாழ்க!” அவனை கைகூப்பி வணங்கிய பங்காஸ்வனிடம் “உன்னை பெண்ணாக்கி ஆடியவன் நானே. நீ வென்றமைந்தாய். விழையும் ஒரு அருட்கொடையை கேள்!” என்றான் இந்திரன்.

இந்திரனின் அவைமுன் நடனமாடிச் சுழன்றவர்கள் மெல்ல தளர்ந்து மலர்க்காடென கை முத்திரைகொண்டு நின்றனர். இளங்காற்று கடந்துசென்ற மரங்கள் மலருதிர்க்க அசைந்தாடின. மேனகை பங்காஸ்வனாக கைகூப்பி நிற்க இந்திரனாக அருட்கை காட்டி நின்றாள் திலோத்தமை. தலைக்கோல் ஏந்திய ஊர்வசி அதைச் சுழற்றி முன்னால் வந்து விழிகளில் புன்னகை ஒளிவிட “சொல்லுங்கள், இளைய பாண்டவரே! பங்காஸ்வன் தேவர்க்கரசனிடம் கேட்ட அருட்சொல் எது?” என்றாள்.

அர்ஜுனன் புன்னகையுடன் தாடியை நீவியபடி “பெண்ணுரு மீண்டு பொன்னுலகுக்குள் செல்லவேண்டும் என்றுதான்” என்றான். ஊர்வசி அருகே வந்து “ஏன்? அவன் பெண்ணுடலில் வாழ்ந்தவன் என்றாலும் ஆணல்லவா?’’ என்றாள். “பெண்ணென்றும் ஆணென்றும் அமைந்து காமத்தை அறிந்தவன் அவன். அவன் நாடும் மாற்றுலகிலும் இன்பமென ஊழ்கமென அவன் விழைவது காமத்தையே. பெண்ணென்று அறிந்த காமத்தை சிறுதுளியேனும் ஆணென்று அறிந்திருக்க மாட்டான்” என்றான் அர்ஜுனன்.

அவை கலைந்து நகையெழுப்பியது. முகம் சிவந்து விழி திருப்பிய ஊர்வசி கோல்சுழற்ற மேனகை வணங்கி இந்திரனிடம் அச்சொல்லை பெற்றாள். பெண்ணென்று நடந்து அந்தச் சோலைக்குள் மறைந்தாள்.  மரக்கிளைகள் என கைகளை வீசி நடனமங்கையர் அவளைச் சூழ்ந்து அணைத்துக் கொண்டனர். பின்னர் வளையல்கள் குலுங்க கைகொட்டி நகைத்தபடி அனைவரும் கலைந்து விலகினர்.

முந்தைய கட்டுரைசிவசக்தி நடனம் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- விண்ணப்பம்