ஒளிக்குழந்தை

ழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை நீட்டி குலுக்கிவிட்டு சுரேஷிடம் ”போலாமா?” என்றார்.

நான் உடனே அறைக்கு ஓடிப்போய் பையைப் போட்டுவிட்டு பழனித் தெருவில் அவர்களுடன் நடந்தேன். ”எப்டி இருக்கு பிரதர்?” என்று சுரேஷ் கேட்டார். ”பழனி மாதிரி இருக்கு பிரதர்” என்றார் ஆர்தர் வில்சன். அதற்கு சுரேஷ் சிரிக்காததனால் நானும் சிரிக்கவில்லை. நகைச்சுவைக்கு சிரிப்பது பிடிக்காத சிலரும் இருக்கிறார்கள். அவரைப் பார்த்தால் ராயபுரம் சண்முகம், அயோத்தியாகுப்பம் வீரமணி, ‘வெள்ளை’ ரவி போன்ற யாருடையவோ தம்பி மாதிரி தெரிந்தார். அடையாளம் காணும் பொருட்டு நான் சுரேஷ்ஷிடம் ”சாருக்கு எந்த ஊர்?” என்றேன். ”திருச்சி” என்றார் சுரேஷ்.

அப்படியானால் ‘மணல்மேடு’ சங்கர் மாதிரி யாருடையவோ தம்பி. எதற்கு வம்பு? அவருக்கும் எனக்கும் ஒரே அறையில் படுக்கை போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. என் நண்பர் சண்முகத்தின் நண்பர் ஒருவர் செக் மோசடி வழக்கில் மதுரை சிறையில் இருக்கிறார். அவர் சாத்தூர் சங்கரலிங்கம் என்பவருடன் ஒரே அறையில் தங்கவேண்டும். சாச்சாவுக்கு அவர்தான் காலையில் கண்விழிப்பதற்கு முன்பே சவரம் செய்துவிடவேண்டும். உணவு கொண்டுவருவது குளிக்க உதவுவது துவைப்பது எல்லாம் முடிய இரவு தூங்குவது வரை கால்பிடித்தும் விடவேண்டும். நண்பர் ஒரு ஆடிட்டர். ஆகவே சாச்சா அவரை சுருக்கமாக ஆடு என்றுதான் கூப்பிடுவார்.

என்ன அப்படி இடம் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. நான் பெண்களை பார்க்க ஆரம்பித்தேன். அன்றிரவு அறைக்கு வந்த போது ஒருநாள் தங்கவந்த ஆர்தர் வில்சன் தன் மாபெரும் சூட்கேஸை திறந்தார். உள்ளிருந்து நூற்றுக்கணக்கான திரைப்பட டிவிடிக்கள். இரண்டு டிவிடி பிளேயர். சுவிட்ச் போர்டு. ஏராளமான ஒயர்கள் கம்பிகள் ஹாங்கர்கள். மாதா-ஏசு படங்கள். பலவகையான சோப்பு சீப்பு ஷாம்பு வகையறாக்கள். கட்டிலில் சட்டை இல்லாமல் நிரம்பி அமர்ந்துகொண்டு ஒரு டீவிடியை எடுத்தார். ”என்ன படம் சார்?” என்றேன். ”சினிமா படம் சார்” என்றார். இப்போது சிரிக்கலாமா என்று ஓரக்கண்ணால் சுரேஷைப் பார்த்தேன். ஒரு திரைக்கதையாசிரியரை இப்படி நக்கல்செய்யலாமா என்ற ஐயமும் இருந்தது. சரி, பணம் கொடுக்கிறார்கள் என சமாதானம் செய்துகொண்டேன்.

ஆர்தர் வில்சன் படம் பார்க்க ஆரம்பித்தார். பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய ஓவிய நூலை திறந்து உற்று பார்த்தபின் பாத் ரூம் போய்வந்து மீண்டும் படம். நான் படுத்து ஓரக்கண்ணால் அவரைப்பார்த்தபடி சுரேஷிடம் பேசிக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டேன்.

அதன்பிறகு காசிக்கு ரயிலில் போனோம். ஆரியாவும் கூட இருந்தார். அப்போதுதான் ஆர்தர் வில்சன்னை மெல்லமெல்ல தெரிந்துகொண்டேன். தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்றார் சுரேஷ். ”அவர் வேலை செய்றதைப்பாருங்க அப்ப தெரியும். மத்தபடி வில்சன் ஒரு குழந்தை… சீரியஸான விஷயங்களில ரொம்ப ஆர்வம், எஸ்.ராமகிருஷ்ணனோட நெருக்கமான நண்பர்…”

”ராமகிருஷ்ணனையே சமாளிக்கிறாரா?” என்று கேட்டேன் ஆச்சரியத்துடன்.

”ராமகிருஷ்ண்ன் ஒருமாதிரி திருந்தினதே இவர் போயி சேந்தப்பறம்தான்.”

வில்சன் மிக யதார்த்தமானவர். ஆகவேதான் பழனி அவருக்கு கிட்டத்தட்ட பழனிமாதிரியே இருந்திருக்கிறது. மாலைக்குள் நான் அவரது நெருக்கமான நண்பனாக ஆகி, இரவில் என் வாழ்க்கையில் நுழைந்த மிகச்சில இனிய நண்பர்களில் ஒருவராக மாறி, காலையில் ஒன்றாம் வகுப்பு முதல் சேர்ந்து படித்தவர்கள் போல ஆகிவிட்டோம். அந்த நட்பின் உரிமையில் நான் அவரிடம் சொன்னேன், ”பிரதர் உடம்ப குறைங்க…”

”முடியலை சார். டிரைபண்ணி பாத்தேன்…”

‘அப்றம்?”

”ஏன்னே தெரியலை, டயட்லே இருந்தாலே ரெண்டு கிலோ ஏறிடுது…”

”பட்டினி கிடக்கப்ப்பிடாது. வெள்ளரிக்காய் சாப்பிடணும்…”

”சாப்பாட்டுக்கு அப்றமா சார்?”

நான் அவருக்கு இரவில் பழ உணவு சாப்பிடுவதன் மகிமையைப்பற்றி சொன்னேன். இரவில் வெறும் பழங்களும் பச்சைக்காய்கறிகளும் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உபரி கலோரிகள் எரியும். மலச்சிக்கல் குணமாகும். மனச்சிக்கலும் சேர்ந்தே சரியாகும். நான் நான்குவருடமாக அப்படித்தான். அம்பாசமுத்திரம் ‘தேங்காப்பழச் சாமியார் ‘ ராமகிருஷ்ணன் பற்றி எடுத்துரைத்தேன்.

”நான் பழ உணவு ஆரம்பிச்சுடறேன் சார்” என்றார் வில்சன். ”காசியிலே எதையாவது விடணும்லே? எடைய விட்டுரலாம்.”

சிக்கன் மட்டனுடன் உணவு வந்தது. பயண அலுப்பு இருந்தமையால் டயட் மறுநாளுக்கு ஒத்திவைக்கபப்ட்டது. மறுநாள் காசியில் அவரது அறைக்குப் போனேன். நான்கு உதவி ஒளிப்பதிவாளர்கள் என் சொந்த ஊர்க்காரரான ரதீஷ் என்ற தலைமை உதவி ஒளிப்பதிவாளார் தலைமையில் அறைக்குள் பரபரவென எதையோ செய்துகொண்டிருந்தார்கள்.

”என்ன, என்ன?” என்றேன்.

”லைட் பண்றோம் சார்.”

”இங்கயா ஷூட்டிங்?”

”எங்க பாஸ் சொந்தமா லைட் செஞ்ச இடத்துலதான் தங்குவார். அப்பதான் மூட் வரும்…” என்றார் ரதீஷ்.

”எதுக்கு?”

”ஏன் மோகன் படுத்தறீங்க? சாப்டுறதுக்குத்தான். வாங்க” என்று சுரேஷ் என்னை தள்ளிக் கொண்டு சென்றார்.

நான் உடனே முடிவுசெய்து அன்றிரவு ஆர்தர் வில்சன் அறையிலேயே சென்று தங்கி அவரை பழ உணவுக்குக் கொண்டுவந்தேன். ”ஆப்பிள் சாப்பிடலாமா சார்? ஆரஞ்சு உரிச்சு சாப்பிடலாம் இல்ல சார்? வாழப்பழம்?” என்று கேட்டு விளக்கமாக தெரிந்துகொண்டார்.

மறுநாள் காலையில் போய்ப்பார்த்தோம், நானும் சுரேஷும். சுரேஷ் ஆசுவாசமாகி ”ஒண்ணும் ஆகல்லை. இருக்கார்” என்றார்.

”ராத்திரி முடியல்லை சார்… பன்னிரண்டு மணிவரை தூங்கிட்டேன்… அப்றம்தான்ன்…”

”அப்றம்?”

”முடியல்லை” என்றார்.

ஆர்தர் வில்சன் சாப்பிடும்போது அடுக்குகளை பற்றி கவலைப்படுவார். ”இன்னும் ஒரு லேயர் பாக்கி இருக்கு பிரதர்…” என்பார்

”அது காலியா இருக்கட்டுமே , இப்ப என்ன?”

”காலியிடத்தத்தானே சார் முதல்ல மானிட்டர் பண்ணுது.”

”எது?”

”மனசு.”

நான் உணவு விஷயத்தில் அவருடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தேன். ஆனால் ஆர்தர் வில்சன் ஒரு கருதுகோள் என்ற அளவில் டயட்டை மிக விரும்பினார். அதைப்பற்றி பேசுவதற்கும் ஆழமாக விவாதிப்பதற்கும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கும். இதில் அவருக்கு நாஞ்சில்நாடன்தான் சரியான துணை. நாஞ்சில்நாடனுக்கு மிக மிக பிடித்தமான விஷயம் சமையல். அதன் பின் டயட். சமையல் செய்வார், டயட் செய்யமாட்டார்.

வில்சன் என்னிடம் மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எடுத்த எடுப்பிலேயே கலைச்சொற்களில் ஆரம்பிக்கும் ஆர்வம். ‘நாயிண்டே மோனே” என்பது அதில் உள்ள ‘அ’. அவற்றை தன் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து தனியாக அமர்ந்து மெல்லிய உதட்டசைவுகளும் உரிய மெய்ப்பாடுகளுமாக சொல்லிச் சொல்லிப் படித்தார். ”ரொம்ப யூஸ்ஃபுள் சார்!” என்றார்.

நட்பின் அடிபப்டையில் வில்சனிடம் நான் நிறைய உரிமைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். உண்மையில் அவரது இடமும் சாதனையும் எனக்கு தெரியவில்லை. ”சும்மா சும்மா அவரிட்ட போய் டவுட் கேக்காதீங்க மோகன்” என்றார் சுரேஷ்.

”ஏன்? தெரிஞ்சுக்கிடறதிலே என்ன தப்பு?” நான் கேட்டேன்

”உங்க அறிவுப்பசி புரியுது. ஆனா சீனியர் கேமராமேன் கிட்ட போய் காமிராவைக் காட்டி இது என்னதுங்கிற மாதிரி கேக்கப்பிடாதுல்ல?”

நான் அப்படி கேட்கவில்லை, அது மிகை. அதன் எப்பகுதி படம் பிடிக்கும் என்றுதான் கேட்டேன்.

வில்சன் படங்களைப் பார்ப்பதே தனி ரகம். அவர் பெரும்படைப்புகளை மட்டுமே ‘பார்ப்பார்’- அதன் சரியான அர்த்தத்தில். ஒருமுறை நான் அவருடன் அமர்ந்து ஒரு படம் பார்த்தேன். அரை இருட்டு. ஒருவன் ஒருத்தியிடம் நெருங்கி ஏதோ செய்ய அல்லது சொல்ல அவள் அப்படியே கதறியபடி தரையில் அமர்ந்துவிடுகிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.”என்ன பிரதர்? என்ன ஆச்சு ?” என்றேன் பதற்றமாக.

”தரைக்கு மட்டும் லைட் லீக் போட்டிருக்கான் சார்” என்றார் வில்சன் அமைதியாக.

வில்சன் வெனிஸ் ஓவியர் ரெம்ப்ராண்டின் ரசிகர். கைவசம் ரெம்ப்ராண்ட் ஓவிய நூலை எப்போதும் வைத்திருப்பார். ரெம்ப்ராண்ட் ஒளியை நிழலுடன் கலப்பதில் முன்னோடி. இன்றுவரை மீறமுடியாத சாதனையாளரும் அவர்தான் என்று சொல்லப்படுவதுண்டு. பல படங்களில் ரெம்ப்ராண்ட் திரைக்கு வெளியே எங்கிருந்தோ கசிச்ந்துவரும் ஒளிக்கற்றை ஒன்றால் துலங்கியும் துலங்காமலும் தெரியும் முகங்கள் மற்றும் பளபளக்த்தும் இருளில் மூழ்கியும் இருக்கும் பொருட்கள் மூலம் உணர்ச்சிகரமான நாடகத்தனத்தை உருவாக்கியிருப்பார்.

‘நான் கடவுளி’ல் ஒரு காட்சி. காசியில் மாலை நேர ஒளியில் ஒரு குடிசைக்குள் ஆரியா காலபைரவ சிலையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார் – விகடனில் அந்த ஸ்டில் வந்தது. அதை மானிட்டரில் பார்த்தபோது சட்டென்று ரெம்ப்ராண்டை நினைவு கூர்ந்தேன்.

பின்னர் சிலபல மாதங்கள் கழித்து படத்தின் ‘ரஷ்’களை பார்த்துக் கொண்டிருந்தேன். பல படச்சட்டங்கள் நான் பார்க்காதவை. ”இதெல்லாம் எப்ப எடுத்தது?”

அதே காட்சி மூன்று இடங்களில் வெவ்வேறு முறை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை இயற்கை வெயில். பிறகெல்லாம் செயற்கை வெயில். அதே சரிவு, அதே நிறம், அதே அடர்த்தி, அதே தூசுப்படலச்சுழல். அப்படியே….

பிரமித்துப்போனேன். நான் சாதாரணமாக எண்ணி அல்லும்பகலும் கிண்டல் செய்துகொண்டிருக்கும் ஒரு நண்பர் எப்பேர்ப்பட்ட கலைஞன் என நான் அறிந்ததே இல்லை. அதற்குரிய கலைஞானம் எனக்கு இருக்கவில்லை.

அதன் பின் அவரிடம் அந்த இயல்புநிலைக்கு வர சிரமப்பட்டேன். அவர் ஒரு குழந்தை. குழந்தைகளுக்குரிய தெளிந்த கண்களுடன் உலகை ஒரு மாபெரும் ஒளிவிளையாட்டாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நவீன கலை என்பது தொழில்நுட்பத்துக்குள் அதன் ஆத்மாவாக கரந்து உறைகிறது. கலையை உணரவேண்டுமென்றால் தொழில்நுட்பத்தை பழகி அறிந்து மேலே சென்று உணரவேண்டியிருக்கிறது

ஒருவரை நினைத்தாலே மனம் மலர்கிறதென்றால் இப்போது எனக்கு வில்சன்தான். இந்த அழகிய குழந்தைமுகம் பற்றி ஏன் ஆரம்பத்தில் அப்படித்தோன்றியது? விஷ்ணுவுக்கு லீலையும் சிவனுக்கு விளையாடலும் இருப்பதுபோல பிரம்மாவுக்கு ஏதோ சூதாட்டம் இருக்கிறது.

கொஞ்சநாள் முன் சுரேஷ் கூப்பிட்டார். ”மோகன், பிரதர் இப்ப மௌன விரதம் இருக்கிறார்… அதிலே இப்ப அவருக்கு ஒரு சந்தேகம்”

”என்னது?”

”மௌன விரதம் இருக்கிறப்ப சாப்பிடலாமா?”

முந்தைய கட்டுரைகனவின் கதை
அடுத்த கட்டுரைகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’