[ 11 ]
இந்திரதுவஷ்டம் என்னும் வேள்வியை இயற்றும் முறையை இல்லத்தில் அமர்ந்திருந்த முதிய வைதிகர் தன் உடலுக்குள்ளாகவே மூச்சுடனும் நாடித்துடிப்புடனும் கலந்து ஒலித்த மென்குரலால் சொல்ல ஏழு வைதிகர் அதனை குறித்தெடுத்தனர். முற்றிலும் புதிய சடங்குகள் கொண்டதாக அது இருந்தது. “தந்தையே, இவ்வேள்விச்சடங்குகள் பெரிதும் மாறுபட்டிருக்கின்றனவே?” என்றார் சலஃபர். “இவை மாகேந்திரம் எனப்படும் தொன்மையான வேதமரபைச் சேர்ந்த சடங்குகள். வாருணமும் பிறவும் வந்துசேர்வதற்கும் முந்தையவை” என்றார் முதிய வைதிகர். “இடியோசையை தாளமெனக் கொண்டவை. விழைவையே பொருளென சூடியவை.”
“மாகேந்திரம் மெல்ல வழக்கொழிந்து மகாவஜ்ரமென்றாகியது. தேவசிற்பியான த்வஷ்டாவால் விண்ணவனுக்கு சமைத்து அளிக்கப்பட்டது மின்கதிர்ப்படை. வஜ்ரமேந்திய விண்ணவனை மானுடர் அதன்பின்னரே வழிபடலாயினர். வைரவாளின் வழி என்பது வென்றுசெல்வது. வருணனும் சோமனும் மித்ரனும் விஸ்வகர்மனும் துணைநிற்கும் இந்திரனின் சொல் அது. மின்னதிரும் நுண்தாளம் வேதத்திலமைந்தது அதன்பின்னரே” என்றார் முதுவைதிகர். “ஆயினும் இன்னமும் வடமேற்கே எஞ்சியிருக்கும் தொல்குடிகள் மாகேந்திரமுறையிலேயே வேதத்தை ஆள்கின்றனர். ரிக்வேதத்தின் கிருஷ்ணபக்ஷத்தில் அது சற்று எஞ்சியிருக்கிறது.”
அவர் சொன்னவற்றைத் தேடி நாடுமுழுக்க அலைந்தனர் அரசஏவலர். வேள்விக்குரிய நெய்யும் ஐவகை விறகும் ஒன்பது மணிகளால் ஆன அன்னமும் பாலும் தேனும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. ஏழு மலைகளிலிருந்து கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டுவரப்பட்டன. பன்னிரு மலைகளிலிருந்து குந்திரிக்கமும் சவ்வாதும் அகிலும் திரட்டப்பட்டன. பதினெட்டு மலைகளிலிருந்து தேனும் தினையும் கொம்பரக்கும் கொண்டுவரப்பட்டன. மூன்றுவகை பொன்னும் ஐந்துவகை பட்டும் ஒளிவிடும் ஒன்பதுவகை அருமணிகளும் வேள்விக்களத்தில் கொண்டுவந்தமைக்கப்பட்டன.
அரண்மனை முற்றத்தில் அமைந்த ஆயிரங்கால் பந்தலில் மூவெரி மூண்டெழுந்து ஆடிய எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. வேதம் நிறைந்த வைதிகர் நூற்றொருவர் சூழ்ந்தமர்ந்து வேள்விக்காவல் தெய்வங்களை அழைத்து தர்ப்பைமேல் அமரச்செய்து வேள்வியை தொடங்கினர். நுரைவாள் சுழற்றி இந்திரன் விருத்திரனைக் கொன்றபோது விழுந்த குருதித்துளிகள் காந்தள் மலர்களாயின. செம்பவள மணிகளாயின. இந்திரகோபப் பூச்சிகளாக உயிர்கொண்டன. காந்தளும் செம்பவளமும் இந்திரனுக்கு அவியாக்கப்பட்டது.
இந்திரனால் பாதுகாக்கப்பட்டு மழைமாறாக் காடுகளின் புதர்களுக்குள் வாழும் குருதிப்பூச்சிகளைப் பிடித்து மூங்கில்குடத்தில் இட்டுக்கொண்டுவந்து வேள்விக்களத்தில் திறந்துவைத்து வேதம் முழக்கினர். அவை பறந்தெழுந்து அனலில் தங்களை அவியாக்கிக்கொண்டபோது வைதிகர் மாகேந்திரத்தின் தொன்மையான வேதவரிகளை முழங்கினர். அனல் சுருண்டு எழுந்து ஆம் ஆம் ஆம் என முழங்கியது. வெண்ணிற வேள்விப்புகை எழுந்து பந்தலுக்குமேல் முகிலென நின்றது.
பன்னிரு நாட்கள் அவ்வேள்வி நிகழ்ந்தது. அன்னம் உண்டு போடப்பட்ட இலைகளும் தொன்னைகளும் குன்றுகளென எழுந்தன. அவிகொண்டு மயங்கி சிறகுகள் எடைகொண்ட தேவர்கள் வெண்தாடிவிதைகளென தும்பிகளென தேன்சிட்டுகளென நகரெங்கும் விழுந்து சிறகு சரித்து மண் வருடிச் சுழன்றனர். அவிப்புகை உண்டு நனைந்த முகில்கள் கன்று முட்டிய காராம்பசு என மழை சொரிந்தன. மழைச்சாரல் அணைக்க நெய்யூற்றி மேலும் மேலுமென வேள்வித் தீயை எழுப்பினர் அந்தணர்.
நாளும் இரவும் கணமொழியாது வேதம் அதிர்ந்த காற்றில் சருகுகள் காயத்ரியில் மிதந்தன. இலைகள் அனுஷ்டுப்பில் ஆடின. இளங்காற்றில் துணிகள் உஷ்ணிக்கில் நெளிந்தன. சுவர்கள் தொட்டு வேதம் எனும் அதிர்வை உணரமுடிந்தது. ஒவ்வொருவர் உள்ளச்சொல்லோட்டமும் வேதச்சந்தமென்றமைந்தது. சந்தமே வேதமென்பதால் அவை வேதச்சொல்லென்றாயின. வேதச்சொல் கொண்டு செய்யும் செயலெல்லாம் வேள்வியே என்பதனால் நகரம் மாபெரும் வேள்விக்கூடமாகியது. உண்ணுதல் அவியூட்டலாயிற்று. உழைத்தல் வேள்விமுத்திரைகளென்றாயிற்று. உறங்குதல் வேள்விக்குள் அமைதலென மாறியது. வேள்வியன்றி பிறிதேதும் நிகழாத அந்நகரில் தேவர்களாயினர் மானுடர். தங்களுக்குத் தாங்களே அருள்பொழிந்துகொண்டனர்.
பன்னிரண்டாவது நாள் முகில் இருண்டு திரண்டது. வானில் எழுந்தது ஐராவதம். மின்படை சுழன்று நகர்மேல் கடந்து சென்றது. ஒவ்வொரு கூழாங்கல்லிலும் தெய்வ விழிகள் மின்னி அணைந்தன. ஒவ்வொரு மாளிகையும் அமராவதியில் அமைந்திருக்கும் அதன் ஒளிவடிவின் தோற்றத்தைக் காட்டி அமைந்தது. வேள்விப்பந்தலின் கிழக்கு மூலை பற்றி எரியலாயிற்று. “இந்திரனே, வருக! தேவர்க்கரசே, வருக! விழைவுக்கிறைவனே, வருக! கண் ஆயிரம் கொண்ட காமத்தலைவனே, வருக!” என்று வைதிகர் குரல் எழுப்பினர்.
வேள்வி மரமென நின்றிருந்த வேர்ப்பலாவின் கிளை பற்றி இறங்கி கொழுந்துவிட்டு வெடித்து நின்றாடி இந்திரன் கேட்டான் “வேட்பர்களே, உங்கள் விழைவென்ன? சொல்க!” கைதொழுது சலஃபர் சொன்னார் “விண்ணவர்க்கரசே, இவர் இவ்வேள்வியை ஆற்றும் அரசர். இவரது விழைவுக்கெனவே இங்கு நிகழ்கிறது இந்த மாகேந்திரப் பெருவேள்வி.” அரசனை நோக்கி “சொல்க!” என்று இந்திரன் இடியோசையால் உரைத்தான். வேள்விக்காவலனின் பீடத்திலிருந்து எழுந்து கைகூப்பியபடி பங்காஸ்வன் “விசைகொள் உடல் கேட்டு உன்னை அழைத்தேன், விண்ணவர்க்கரசே” என்றான்.
“காமமுழுமைக்கென்று இப்புவியில் பிறந்தேன் என்று என்னை உணர்கிறேன். காமத்தினாலன்றி மெய்மையையும் அறிய என்னால் இயலாது. உடலென்றான காமத்தை இளமையில் அடைந்தேன். நடுவயதில் உள்ளமென்றான காமத்தில் திளைத்தேன். இன்று காமமென்றேயான காமத்தை அறியும் கனிந்த நிலையிலிருக்கிறேன். இறுதி வாயில் திறக்கும் தருணத்தில் என் உடல் தளர்ந்துவிட்டது. இசை பெருகும் சூதனின் கையில் தந்தி தளர்ந்த யாழ்போல் ஆனேன். உன் அருள்கொண்டு என் உடல் மீண்டு எழவேண்டும். காமத்தை முழுதறிந்து நிறைய என் உள்ளம் கொள்ளும் எழுச்சியை உடல் சூடவேண்டும்.”
இந்திரன் தயங்கி சற்றுநேரம் அனலென கொழுந்தாடியபின் அரக்குவெடிக்கும் ஒலியில் சொன்னான் “முழுதறிய விழைகின்றாய், நன்று. மானுடனே, மூன்று மெய்நிலைகளை முழுதறிய இயலாதென்று அறிக! ஏனென்றால் அறிதல் வடிவிலேயே அவை இருப்புகொண்டுள்ளன.” நீலச்சுடர்கொண்டு மேலெழுந்த இந்திரன் கூறினான் “பிரம்மத்தை மானுடரால் முழுதறிய முடியாது. பிரம்மமென்று ஆவதொன்றே அதன் வழி. ஊழையும் முற்றறிய மானுடனால் இயலாது. பிரம்மத்தை அறிவதே அதன் வழி. அரசே, காமத்தை அறியவும் மானுடனால் இயலாது. காமத்தை அறிந்தவன் பிற இரண்டையும் அறிந்தவனாவான்.”
கைகூப்பி நின்றாலும் உறுதிமாறாத பங்காஸ்வன் சொன்னான் “இதுவன்றி பிறிதொன்றுக்குமாக நான் இங்கு எழவில்லை. இது அமையாவிடில் உயிர் வாழ்வதில் பொருளில்லை.” இந்திரன் கனிந்து “மாளா விழுச்செல்வம், முழுமைகொள் பெருவாழ்வு, சிறப்புறு மைந்தர், அழியாக் குடிநீட்சி, மானுடச் சொல்லில் வாழும் தகைமை இவை அனைத்தையும் அளிக்கிறேன். இவ்விழைவை விலக்குக!” என்றான். “இவ்வேள்வி இவ்விழைவுக்கென்றே ஆற்றபப்ட்டது. இதை மறுத்து இறைவனாகிய நீ விண் திரும்புவாயென்றால் இவ்வேள்வி அனலில் விழுந்து உயிர் துறப்பதே எஞ்சும் வழியென்றிருக்கும் எனக்கு” என்றான் பங்காஸ்வன்.
இந்திரன் புன்னகைத்து “காமத்தை உணர்ந்தறிய ஆயிரம் குறி கொண்டிருந்தேன். அதன்பின் ஆயிரம் விழிகொண்டவனாகி அக்காமத்தை செறிவாக்கிக்கொண்டேன். இன்னமும் காமத்தை கடந்தவனில்லை. நான் எப்படி உனக்கு அச்சொல்லை அளிக்க முடியும்?” என்றான். பங்காஸ்வன் “காமத்தைக் கண்டு கடப்பது என் வழி. நான் விழைவது காமத்தில் தளராமல் இருக்கும் உடல்நிலை. அழிவின்மை அமுதென கரந்திருக்கும் அரண்மனையில் வாழும் உன்னால் அதை எனக்கு அளிக்க முடியும்” என்றான்.
சலஃபர் சொன்னார் “அரசே, வேள்வியில் அனல்உண்டு எழும் தெய்வம் அளிப்பது தன் சொல்லை அல்ல. கடலின் துமியென்றே அது இங்கு தோன்றுகிறது. அதன் உப்பும் குளிரும் கடலுக்குரியவையே ஆகும். இங்கு சொல்லளியுங்கள், அதை ஆற்றுவது பிரம்மமே.” இந்திரன் தலையசைத்து “அவ்வாறே ஆகுக! காமநிறைவு கொள்க! அதற்குரியன நிகழ்க!” என்று சொல்லுரைத்து விண்மீண்டான்.
வேள்விக்களத்திலிருந்து வைரம்போல் உடல் கொண்டு மீண்டான் பங்காஸ்வன். கணுதோறும் முளைக்கும் முள்முருங்கை என்று ஆயிற்று அவன் ஆகம். நூறாயிரம் முறை காமத்திலாடினான். நூறு மைந்தரை ஈன்றான். தான் பெருகுவதை காணக்காண ஆணவம் கொண்டான். ஆணவம் காமக்கனலுக்கு காற்று. கரைதழுவும் கடலலைபோல் ஒவ்வொரு கணமும் மகளிரை தழுவிக்கொண்டிருந்தான். பின்பு ஒருமுறை இளமகள் ஒருத்தியின் அருகிருந்து எழுந்தபோது உணர்ந்தான், காமம் முழுதமையவில்லை என. ஏன் என வியந்த மறுகணம் எக்காமமும் முழுதமையவில்லை என்று அறிந்தான். முழுதமையாத காமமென்பது முற்றிலும் அமையாத காமமே என்று தெளிந்தான்.
அக்கணமே மஞ்சத்தறைவிட்டு வெளியே வந்து அங்கே நின்ற அமைச்சனிடம் “என் முதல் மைந்தனுக்கு முடிசூட்டுக!” என்று மட்டும் சொல்லிவிட்டு மேலாடையை எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு குளிர்ந்த காற்று சுழன்றடித்த விரிந்த முற்றத்திலிறங்கி நடந்து மறைந்தான். அவன் செல்வதை அமைச்சன் நோக்கி நின்றான். அவன் அதை முன்னரே எதிர்பார்த்திருந்தான். மூன்று தலைமுறைகளுக்கு முன் உணவின்மேல் பெரும்பித்து கொண்டிருந்த பங்காஸ்வன் மூதாதை பீதாஸ்வன் அதேபோல இருளில் இறங்கி மூழ்கி மறைந்ததை அறிந்திருந்தான். அதற்கும் முன் ஏழு தலைமுறை மூதாதையாகிய ஸ்வேதாஸ்வன் காவியம் மீது பெரும்பற்று கொண்டிருந்தான். அவனும் அதே இருளைத்தான் நாடினான்.
[ 12 ]
காட்டுக்குச் சென்ற பங்காஸ்வன் தன்னந்தனிமையில் நடந்தான். நாடி அடைந்த ஒவ்வொன்றையும் நினைவிலிருந்து உதிர்த்தான். அடிக்கு ஒரு நினைவு என அகற்றி அகற்றி பலநூறுகாதம் மண்தொடாது விண்ணில் நின்று துடிக்கும் அனலென விழைவு மட்டுமே அவனுள் எஞ்சியது. அவன் சென்றடைந்த காடு இந்திரகுப்தம் என்று அழைக்கப்பட்டது. தன் விழைவுக்கென இந்திரன் அமைத்தது அது. அவன் விழைவென அவனை மீறி வளர்ந்து பரவி அவனை ஒரு சிறுதுளியாக்கும் விரிவுகொண்டிருந்தது.
அக்காட்டுக்குள் செங்குருதிப்பெருக்கென சென்று கொண்டிருந்த ஆறொன்றைக் கண்டான் பங்காஸ்வன். அதன் கரையில் நின்று செந்நீரின் சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். ஓடும்புரவியின் உடலென, காற்றில்பறக்கும் கொடியின் நெளிவென, நெளிந்தாடும் தழலென. அப்பெருக்கில் ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன காய்களும் இலைகளும் நெற்றுகளும் சருகுகளும் நுரைக்குமிழிப்படலங்களும். மேலும் விழிகூர்ந்தபோது அவையனைத்தும் முகங்களென உடல்களென உருக்கொண்டன. காமம்கொண்டு புணர்ந்து நெளிந்தன அவை. பல்லாயிரம் மானுடர், விலங்குகள், பறவைகள், நாகங்கள். உடல் பின்னி திளைத்துக் கொப்பளித்து குமிழியிட்டு சுழன்றமைந்து நீரென்றே ஆகியிருந்தன.
அவ்வாற்றுக்கு அப்பால் இளம்பச்சை ஒளி பரவிய நிலமொன்றை அவன் கண்டான். அங்கிருந்த மரங்கள் அனைத்தும் முலைகளென காய்த்து கனிந்திருந்தன. தோல்கதுப்பென தளிர்கள். மென்தசை வளைவுகளென தண்டுகள். பாறைக்குவையில் மென்மணல் குழைவில் காமமே ததும்பியது. உடல்பிணைந்து ஒன்றென ஆகி துய்த்து திளைத்தாடின அடிமரங்கள். அதுவே தன் இடம் என்று அவன் உணர்ந்தான். மறுகணம் அது ஒரு மயல்நீரோ என்று அஞ்சினான். நீ இழப்பதற்கொன்றுமில்லை. மயல்நீரென்றாலும் அதை நோக்கிச் சென்று அழிவதே உன் ஊழென்றால் பிறிதொன்றை நீ தெரிவுசெய்ய இயலாதென்று சொன்னது அவன் நுண்ணறிவு.
மும்முறை தயங்கி, பின் துணிந்து அவ்வாற்றில் குதித்தான். பெருக்கு அவனை அள்ளிச் சுழற்றி ஆழத்திற்கு கொண்டுசென்றது. நீந்தி மேலெழும்போது அலையொன்று அவனை அறைந்து மீண்டும் உள்ளிழுத்தது.
பன்னிருமுறை அவனை சுழற்றியும் அலைத்தும் கொண்டுசென்ற அவ்வாற்றிலிருந்து அருகணைந்த உடல்புணை ஒன்றைத் தழுவி நீந்தி கரைசேர்ந்தான். எழுந்து கரையில் நின்று நீரை உதறி ஆடைதிருத்தியபோது அறிந்தான், அவன் உடல் பெண்ணாகியிருந்தது. முலைகள் பருத்து கருங்கண் கொண்டிருந்தன. தோள் மென்மையாகக் குழைய கைகள் கொடியென நெளிய இடைவளைந்து தொடைபெருத்து ஒற்றிச்செல்லும் சிற்றடி வைத்து நடந்தான்.
தன் உடலையே திகைப்புடன் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டான். கொழுமுலைகளை மென்வயிற்றை தொட்டபோது உள்ளம் திடுக்கிட்டு கைகூச விலக்கிக்கொண்டான். இடைக்குக்கீழ் எண்ணியபோது அனல்கொண்டு எரிந்தது அவன் உடல். அவன் நினைவறிந்த நாள்முதல் எண்ணி எண்ணி ஏங்கி தேடித்தேடி அடைந்து மேலும் மேலுமென விழைந்த அனைத்தையும் அவனே கொண்டிருந்தான். ஆனால் அவையனைத்தும் பிறனெனத் தோன்றி அருவருப்பூட்டின. பிறர் கொண்டிருக்கையில் ஆறாவிழைவூட்டியவை தான் கொண்டிருக்கையில் ஒவ்வாததென ஆகும் விந்தை என்ன?
விழைவுகொண்டது அவற்றின்மேல் அல்லவா? அவையென தன்னை வெளிப்படுத்திய பிறிதொன்றின்மேலா? அது பெண்மை. நாணமென காமமென கன்னிமையென அன்னைமையென அமுதென நஞ்சென தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஆடல். தெய்வம் குடியேற்றப்படாத சிலை வெறும் கல். இம்முலைகள், இத்தொடைகள், இந்த அல்குலுக்குப்பின் ஒரு பெண் இல்லை. மீண்டும் மீண்டும் அவன் உடல் கூசிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் குமட்டலெடுத்து வாயுமிழ்ந்தான். எதை அருவருக்கிறேன்? என் அகம் அமைந்திருக்கும் இந்த உடலையா? இதுவும் உடலே. இது உண்டு உயிர்வளர்க்கும், குளிர்வெம்மை உணரும், துயின்று விழிக்கும். இதன் இன்பங்களை என் அகம் அறியும். அக்கணம் சென்றுதொட்ட ஓர் எண்ணம் தேள்கொடுக்கென கொட்ட அவன் மீண்டும் வயிறு எக்கி வாயுமிழ்ந்தான்.
ஆம், இவ்வுடல் என்னுடையது. ஆனால் இது என்னை சொல்லவில்லை. கனவிலோ களிமயக்கிலோ நான் சொன்ன சொல்போன்றது இது. என்னால் பொருளேற்றம் செய்யப்படாதது. இதில் வெளிப்படுவது நான் அல்ல. இது என் வாய்க்குள் பிறர் எச்சில் துப்பப்பட்டு நிறைந்திருப்பதுபோல. மீண்டும் குமட்டி உமிழ்ந்து அப்படியே சோர்ந்து படுத்துக்கொண்டான். பொருளில்லாச் சொல். ஆனால் எல்லாச் சொல்லும் பொருள்குறித்தன. கனவிலும் களியிலும் சொன்ன சொற்களும் அவனுடையவை அல்லவா? ஒருவேளை அவனுள் உறையும் ஆழத்துக்குரியவை அல்லவா அவை?
நீள்மூச்சுடன் எழுந்து நின்று எங்கு செல்வதென்று எண்ணினான். அறியாநிலமெதற்காவது சென்றுவிடவேண்டும். அங்கே பெண்ணென்றேயாகி நடிக்கவேண்டும். ஆம், அதுவொன்றே செய்வதற்குரியது. ஆணென நோக்கும் விழிகள்முன் பெண்ணென்று நிற்றலாகாது. பெண்ணுக்கு அளிக்கப்படும் நோக்குகளை என் ஆண்விழி எதிர்கொள்ளலாகாது. பெண்ணென எனைச் சூழும் காமத்தை ஆணென என் உள்ளம் எதிர்கொள்வதே உயிருடன் இறத்தல். அவன் அங்கிருந்து கிளம்பி ஷீரப்பிரபை என்னும் நகரை சென்றடைந்தான்.
அங்கிருந்த சந்தையினூடாக அவன் நடந்தபோது விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. ஒருபோதும் தன்மேல் பிறர்நோக்கு அவ்வண்ணம் குவிவதை அவன் உணர்ந்ததில்லை. அணிகொண்டு முடிசூடி அரசயானைமேல் செங்கோலுடன் அமர்ந்து நகர்வலம் வரும்போதுகூட. இன்று ஒவ்வொரு கணமும் அணியூர்வலம் செல்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். ஒரு களிமகன் “பேரழகுப் பெண் நீ. ஆணொருவன் உன்னுள் புகுந்துவிட்டிருக்கிறான். கடப்பாரையை விழுங்கிய நாகமென தோன்றுகிறாய்” என்று சொல்லி வெடித்துச் சிரிக்க பல விழிகள் நகைப்பில் ஒளிகொண்டன.
என் உடலின் நெளிவை உள்ளம் கொள்ளவில்லை. உள்ளம் உடலில் அசைவாக வெளிப்படுகிறது. அவன் உடல்கொண்ட நெளிவை உள்ளத்தாலும் நடிக்கலானான். இடை வளைகையில் அவன் உள்ளத்தமைந்த தன்னுணர் உடலின் இடையையும் அசைத்தான். முலை குலுங்குகையில் அகமும் குலுங்கினான். எதிர்வரும் விழிகளை நோக்குகையில் இமைசரித்து ஓரவிழி கூர்த்து ஒல்கி நடந்தான். அத்தனை விழிகளுக்கு முன் அப்படி செல்வதே உகந்ததென்று விரைவிலேயே கண்டுகொண்டான்.
கசன் என்னும் பெருவணிகனின் மனைவிக்கு சேடியென அவன் சென்று சேர்ந்தான். “பேரரசியருக்குரிய அழகுகொண்டவள் என் பணிப்பெண்” என அவள் உவகையுடன் தோழிகளிடம் சொன்னாள். “நோக்கு, அவள் அணங்கோ யட்சியோ, யாரறிவார்?” என்றனர் தோழியர். “நோக்கினேன், ஒவ்வொரு அடியிலும் அவள் உடலென்றிருக்கிறாள். மானுடப்பெண்ணேதான்” என்றாள் வணிகன் மனைவி. அவன் பெண்களுடன் அணியறையிலும் அடுமனையிலும் நீராட்டறையிலும் இருந்தான். அவர்கள் பேசுவதை சிரிப்பதை ஒசிவதை ஒல்குவதை கூர்ந்து நோக்கினான். நோக்க நோக்க அவை அவன் உடலிலும் கூடின. நடிக்கும்தோறும் உள்ளம் உருமாறியது. உள்ளமென்பது ஒரு நடிப்பே என்று அவன் உணர்ந்தபோது உள்ளும்புறமும் பெண்ணென்று ஆகிவிட்டிருந்தான்.
பெண்ணுடலை அவன் நாளும் நோக்கியும் தொட்டும் அறிந்துகொண்டிருந்தான். அவை வெறும் மென்தசைகள் என்றாயின. அவர்களை நீராட்டி, அகில்காட்டி, அணிபுனைந்து, சுண்ணமும் மையும் பூசி அழகூட்டினான். அவர்களுடன் நிலவிரவுகளில் தோட்டங்களில் அமர்ந்து இசை கேட்டான். அவர்கள் தங்கள் நெஞ்சின் ஆழத்து அறைகளைத் திறந்து ஒளியையும் இருளையும் வெளியே எடுத்தபோது கேட்டிருந்தான். அவன் காமம் கொள்ளவேயில்லை என்பதை பிறகெப்போதோதான் அறிந்தான். அவ்வறிதல் அவனுக்கு உவகையையே அளித்தது.
பிறகொருநாள் தனிமையில் நீராடிவிட்டு அவன் நீராழிப் படிகளில் மேலேறும்போது மேல்படியில் வணிகனின் இளமகன் நின்றிருந்தான். அவன் விழிகளை நோக்கியபோது அவள் உடல் நாணி குளிர்கொண்டது. விழிதாழ்த்தி அவனை கடந்து சென்றபோது உடலெங்கும் அவன் நோக்கு வருடிச்செல்வதை உணர்ந்தாள். தோள்கள் வெம்மைகொள்வதை, உள்ளுருகி உடல்நனைவதை அறிந்தாள். வெறுந்தரையில் கால்வழுக்கி விழுந்துவிடுவோமென்று அஞ்சினாள். சுவர்பற்றி நிற்கவும் இறுகி கூர்கொண்டு நின்ற முலைக்குவைகளுக்கு அப்பால் செறிந்தமைந்த குளிர்மூச்சை ஊதி வெளிவிடவும் விழைந்தாள்.
திரும்பி நோக்கவேண்டுமென எண்ணி நோக்கலாகாதென்று முகத்தை இறுக்கி இதோ நோக்கிவிடுவோம் என அஞ்சி நோக்கு நோக்கென்று கெஞ்சிய அகத்தை வென்று உதிரும் நீர்த்துளி என விலகி ஓடினாள். தன் அறைக்குள் சென்று கொலைமதம் கொண்டெழுந்த மத்தகத்தைப்போல் விம்மிய முலைகளுக்குமேல் கைகளை வைத்து அழுத்தியபடி மூச்சடக்கினாள். மெல்ல நரம்புகள் விடுபட காதுமடல்களில் இளவெங்குருதி படர, கண்கள் நீர்கொள்ள, மூச்சு சீறித்தணிய அமைந்தாள். தன்னை உணர்ந்தபோது அவள் இடக்கால் நரம்பு இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்தது.
செறுக்கச்செறுக்க மிகும் காமப்பெருக்கின் முன் புதுவெள்ளமெழுந்த நதியின் மணற்கரைபோல அவள் கணந்தோறும் தன்னை காத்துக்கொள்ளவே முயன்றாள். அனைத்து முயற்சிகளும் சிலந்திவலையில் துடிக்கும் பூச்சியின் சிறகுகள் சிக்கிக் கொள்வதுபோல அமிழவே செய்தன. கணந்தோறும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் செயல்கள் பிழைத்தன. கை சென்ற இடத்திற்கு கண் செல்லவில்லை. கண் அறிந்ததை கருத்து தொடவில்லை. அவன் முன் செல்லும் தருணத்தை நூறுநூறாயிரம் வகைகளில் நடித்துக்கொண்டாள். நடிப்புகள் சலித்து எழுந்து அவன் முன் சென்று நின்றுவிட எண்ணினாள். அந்நினைப்பே கூச தலையசைத்து முகம் சிவந்தாள்.
அந்நூறுக்கும் அப்பால் என அது நிகழ்ந்தபோது பதறி உடல்வியர்த்து முலைக்குவையிடையே சுடுவியர்வை எழுந்து பனித்து இதழ்கள் தடித்து விழிகள் தழைந்து தள்ளாடினாள். அவன் கேட்ட ஓரிரு சொல் வினாக்களுக்கு குழறி தழைந்த குரலில் மறுமொழி அளித்தபின் ஓடி தன் அறைமீண்டு அமர்ந்து நெஞ்சிடிப்பை கேட்டுக்கொண்டிருந்தாள். மூடப்பெண், அறிவிலாப்பேதை என தன்னையே சலித்துக்கொண்டாள். பிழைகளைந்து மீண்டுமொரு சந்திப்பை நிகழ்த்துவதைப்பற்றி கனவுகண்டபடி சேக்கையில் முலைபுதைத்து விழுந்துகிடந்தாள்.
கூர்கொண்ட கனவு. முள்முனைமேல் பனித்துளி என நின்று நடுங்கியது அது. ஏழுநிறம் மின்ன வான்சூடி நின்றது. ஒருவன் அவளுள் பகுந்து விரிந்தான். அவன் இவனைப்போல் தோள்பெருத்தவன் அல்ல. முழவேந்திய பாணன். கண்களில் களிமயக்கு கொண்டவன். அவனோ நீண்ட உடல்கொண்டவன். நீண்ட கைகளில் நரம்புகள் பின்னியவன். வில்லவன். இவன் புரவிக்கடிவாளத்தை பிடித்து இழுத்து நிறுத்தும் சூதன். கரிய உடலில் வியர்வை வழிய ஒளிர்பவன். கூர்மீசை கொண்டவன் அவன். மெல்லுதடு அதிரும் இளமகன் இவன். அவன் குரல் முழவு. இவன் குரல் மயிலகவு. எங்கு கண்டேன் இவர்களை? எப்படி அள்ளிக்கொண்டேன்? ஏன் ஊறி எழுகிறார்கள் என் ஆழ்சுனையில்?
பின் குற்றவுணர்ச்சியுடன் புரண்டுபடுத்து அவர்களை இணைத்து ஒற்றைஉருவாக்கிக் கொண்டாள். நூறுமுகன். முகம்பெருகும் ஆண்மகன். முகம்பெருக்கி அவனை புணரும் முதலாற்றல் நான். மானென களிறென குயிலென எறும்பென உமையைப் புணர்ந்தான் சிவன் என்கின்றன காவியங்கள். நீரென நெருப்பென புணர்ந்தாலும் தீருமா? ஒன்றென உருகி இணைந்தபின்னரும் அணையுமா? வென்று கால்கீழிலிட்டு மார்மீது நின்றாடவேண்டும். கொன்று கிழித்துண்டு மண்டை மாலைசூடி கூத்தாடவேண்டும். நீறுபூசி நெருப்பென சிதைமேலெழவேண்டும்.
நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டு கதறவேண்டுமெனத் தோன்றியது. முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!. இச்சுவர்களை இடிப்பேன். எழுகிறது என் மதம்கொண்ட மத்தகம். இந்நகரை தூள்தூளென்றாக்குவேன். புழுதிசூடி உறுமியபடி இங்கே சுழன்றலைவேன். குருதியாடியே வெறிதீரவேண்டும். என்னென்ன எண்ணங்கள்! எண்ணங்களில் வாழும் தெய்வம் கணம்தோறும் கோடியென பெருகும் வல்லமைகொண்டது. எண்ணம் பெருகி இரவாகிறது. இருளாகிறது. கங்குல்வெள்ளம் கரையிலாதது. காக்கும் புணையிலாதது கங்குல்வெள்ளம்.
கனவுகளில் அவன் வந்தபோதுதான் அவன் குறுமீசையை, மென்முடிபரவிய கன்னங்களை, விரிந்த தோள்களை, புயங்களிலோடிய நீலநரம்பை, மார்பில் படர்ந்த முடியை, வயிறு நோக்கி அது குவிந்திறங்கிய பொழிவை அத்தனை கூர்மையாக அவள் நோக்கியிருந்தது அவளுக்கே தெரிந்தது. அவன் கண்கள் அவள் ஆயிரம் பிறவிகளில் அறிந்தவைபோல மிக அருகே வந்து இளநகை ஒளிசூடி நின்றன. விழித்தெழுந்ததும் ஏனென்றறியாமல் அவள் ஏங்கி அழுதாள். அழுதுகுளிர்ந்தபோது உள்ளம் தித்தித்தது. உடல் அவ்வினிமையை அள்ளி விரல்முனைவரை நிறைத்துக்கொண்டது.
அவன் கையில் அவள் சென்றமைவது முன்குறிக்கப்பட்ட கணமென அவள் அது நிகழ்ந்தபோது அறிந்தாள். அதுவரை ஒவ்வொரு கணத்தையும் ஒரு முழு வாழ்வென ஆக்கும்பொருட்டே அந்நாடகங்கள் அனைத்தும் நிகழ்ந்தன என்று உணர்ந்தாள். எத்தனையோ முறை கூடிக்களித்திருந்தாள். ஊடிப்பிரிந்து கலுழ்ந்து தனித்து மீண்டும் கண்டு தழுவியிருந்தாள். எவருமில்லா நிலங்களில் அவனுடன் வாழ்ந்தாள். மேடைமேல் ஏறிநின்று பெருந்திரளிடம் இவன் என்னவன் என அறிவித்தாள். மைந்தரைப்பெற்று முதுமகளாகி மறைந்தாள். இளமகளென உருக்கொண்டு அவன் கைவிரல்பற்றி துள்ளிக்குதித்து நடந்தாள். மதலையென அவன் மடியில் கிடந்தாள்.
அவன் அவள் கைகளைப் பற்றிய நாளில் வளையல்கள் உடைபட கையை இழுத்தபடி “வேண்டாம் வேண்டாம்” என்று மூச்சிரைத்தாள். அன்புமொழி சொன்னபடி அவளை இழுத்து அவன் தன் உடலுடன் இணைத்துக்கொண்டான். “விலகுக… வேண்டாம்” என அவள் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். அச்சொற்கள் பொருளிலாதொலிக்க அவள் உடல் அவன் உடலுடன் ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் அவற்றுக்குரிய தனிக் காமம் இருந்தது. கருங்கூர் எழ விம்மின முலைகள். தளர்ந்து நிற்கவியலாதாயின கால்கள். நோக்கிழந்தன விழிகள். மூக்கு ஆயிரம் மணங்களை அள்ளிச்சேர்த்தது.
தேனில் திளைக்கும் புழுவென காமத்திலாடுவதை அவள் முன்பு அறிந்திருக்கவே இல்லை. இதற்குத்தான் அவ்வெழுச்சிகளா? விலகி எதிர்ஓடி எட்டுத்திசைகளையும் சுற்றி வந்தமைந்தால்தான் இது இத்தனை இனிக்குமா? அவன் கைகளால் உடல் மீட்டப்பட்டாள். பற்றி எரிந்தது அவள் புரம். நின்றெரிந்தன காவல்மாடங்கள். சரிந்து மண்ணறைந்து விழுந்தன கோட்டைச்சுவர்கள். கருவூலப்பொன் உருகிக் குழம்பாகியது. ஊற்றுகொண்டன அனைத்து நீராழிகளும். ஆறுகளனைத்தும் கரைமீறிப் பரவின. தன்னை காமத்திற்கு முற்றளித்தாள். காமத்திற்குள் பிறந்து இறந்து மீண்டும் பிறந்துகொண்டிருந்தாள். விரிந்து பரவி அவள் நிலமென்றானாள். அதில் சிறுகால்களை வைத்து துள்ளிக்குதித்து களித்துக்கொண்டிருந்த சிறுமைந்தனை உவகையுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.