நவம்பர் பதிநான்காம் தேதி காலை ஆறுமணிக்கு காட்டுக்குள் செல்ல தயாராக இருக்கும்படி சொல்லியிருந்தார்கள். ஐந்தரை மணிக்கே எழுந்து பல்தேய்த்து வந்து நின்றோம். கவி அதிக உயரமில்லை என்பதனால் குளிர் குறைவு. மழைச்சட்டையின் வெதுவெதுப்பே போதுமானதாக இருந்தது. பால் இல்லாத ‘கட்டன்’ காப்பிதான் இருந்தது. நாலைந்து வெள்ளையர்கள் ஒரு ஜீப்பில் கிளம்பிச்சென்றார்கள். நாங்கள் இன்னொன்றில்.
காட்டுக்குள் காலைவெளுத்துக்கொண்டிருந்தது. ராஜா இருபக்கங்களையும் கூர்ந்து பார்த்துக்கொண்டே சென்றார். காட்டுக்குள் நீல்கிரிலாங்குர் எனப்படும் கருமந்தியின் உரத்த உறுமல் ஒலித்தது. அவை காட்டின் காவலர்கள் அல்லது நிருபர்கள். உச்சிக்கிளையில் அமர்ந்து அவை அளிக்கும் எச்சரிக்கை அல்லது செய்தி காட்டுக்கு முக்கியமானது. காட்டில் இருந்து சில பறவைகள் வந்து எங்கள் தலைக்குமேல் பறந்து பார்த்துச்சென்றன.
மலபார் விசிலிங் த்ரஷ் எனப்படும் பறவை கவியின் சிறப்புகளில் ஒன்று. புல்லாங்குழலில் ஒரு சுத்தமான இசைத்துணுக்கை வாசிப்பது போல கூவும் இந்த பறவை குயிலைவிட பல மடங்கு இனிய நாதம் கொண்டது. அதிகாலையிலும் மாலையிலும் மட்டுமே இசைக்கும். அஜிதன் இரவில் அதைத்தேடிப்போனாலும் பார்க்கமுடியவில்லை. விடிகாலையில் பல இடங்களில் அதைப்பார்க்க முடிந்தது.
புல்மேட்டருகே சாலையில் வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றோம். ஈரமண்ணில் நூற்றுக்கணக்கான காலடிகள். காட்டெருதுக்களின் காலடிகள் ஆழமானவை. மிளாக்களின் சிறிய கூரிய காலடிகள். கேழைமான்களின் ஆழமற்ற மெல்லிய கூர்நுனிக் காலடிகள். ராஜா சிறுத்தையின் காலடியை காட்டினார். புதர்களில் இருந்து புதர்களுக்குச் செல்லும்போது பதிந்தவை.
சட்டென்று ஒரு வெள்ளையர் புலியின் காலடியை காட்டினார். நன்றாக அகன்ற பாதங்கள். நகக்குறியே இல்லா குழிகள். புலியும் சிறுத்தையும் ஒரே இடத்தில் சிலநூறடிகள் தூரத்துக்குள் வேட்டையாடியது ஆச்சரியமாக இருந்தது. காட்டெருதை புலி மட்டுமே வேட்டையாடமுடியும் , சிறுத்தை சும்மா முயல்களை பிடித்திருக்கும் என்றார் ராஜா. காட்டெருதுக்கள் மலைச்சரிவின் விளிம்புவரைச் சென்று மிக அபாயகரமான இடங்களில் நின்றிருந்த தடம் தெரிந்தது.
அந்தமலைக்கு அப்பால் ஆழமான சரிவு. அதில் பச்சை தேங்கியதுபோல ஒரு சோலைக்காடு. அங்கே பறவைகள் ஒலித்தன. அங்கிருந்து ஏறிய அடுத்த மலைச்சரிவெங்கும் காட்டெருதுக்கள் மேய்ந்தன. கூட்டமாக மும்முரமாக புல்தின்றன. நாலைந்து குட்டிகள். இரு குட்டிகள் அந்த சரிவிலேயே துள்ளி துரத்தி விளையாடின. கடைசியாக ஒரு பெரிய காட்டெருது நிதானமாக வந்தது
காலையொளி எழுந்து புல்மலைகள் ஜொலித்தன. இளம்பச்சை அடர்பச்சை நீலம் அடர்நீலம் என நிற வேறுபாடுகளாலான மலையடுக்குகள் தொலைதூரம் வரை தெரிந்தன. அங்கேயே நின்று விடியலை முழுமைசெய்தபின் திரும்பி வந்தோம். மீண்டு வரும்வழியில் ராஜா காட்டுக்குள் யானைகள் நிற்பதை சுட்டிக்காட்டினார். யானைகள் தெரியவில்லை. ஆனால் கிளைகள் ஒடிய மரங்கள் அசைவதை கண்டோம். நெடுநேரம் அங்கே நின்று யானையை மனக்கண்ணில் கண்டோம்.
திரும்பும் வழியில் ஒரு கேழைமான் சாலைக்குக் குறுக்கே ஓடியது. செம்மஞ்சள் நிறமான சிறிய மான் இது. அடிக்கடி கண்ணில் படாது. மிக வெட்கம் கொண்டது. ஒருகாலத்தில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு இன்று மிகக் குறைவாகவே இது உள்ளது. இதற்கு வேகப்பாய்ச்சல் கொம்புகள் என எந்த பாதுகாப்பு அமைப்பும் இல்லை. பதுங்குவது மட்டுமே உயிர்தப்பும் வழி.
காலையுணவுக்குப் பின்னர் ஏரியில் படகில் சென்றோம். ஏரிக்கு அப்பால் கவியின் சிறிய அருவி உள்ளது. சில்லென்ற நீர் மிகமிகச் சுத்தமானது. சென்றமுறை நண்பர்களுடன் குளித்த நினைவு வந்தது.நானும் அஜிதனும் மட்டும்தான் குளித்தோம். வேறு யாரும் இல்லை. மேலும் பயணிகள் வர ஆரம்பித்ததும் கிளம்பினோம். ஏரிவழியாகவே உள்காட்டுக்குள் சென்றோம். மேலும் ஒரு சிறிய அருவியைக் கண்டோம்.
காட்டுக்குள் பாசிபடர்ந்த நீர் மீது படகை நிறுத்திவிட்டு அமைதியாக வெகுநேரம் இருந்தோம். பறவைகள் பேசிக்கொண்டிருந்தன. கருமந்தி எங்களை அறிவித்தபின் நெடுநேரம் கழித்து மெலும் ஏதோ சொன்னது. நீலகிரி அணில் எனப்படும் குட்டிப்பூனை அளவுள்ள குஞ்சரவாலுள்ள மாந்தளிர் நிறமான அணில் மரக்கிளைகளில் தாவிச்சென்றது. நீரில் பெரிய மீன்கள் எம்பி தாவி மறைந்தன. நீருக்குள் நீரே கருப்பாக தெரியுமளவுக்கு தலைப்பிரட்டைகள். பல்லாயிரம். அவற்றில் கால்வாசி தவளைகளாக ஆனால்கூட காடே தவளைகளாக ஆகிவிடும்.
காட்டுக்கு அத்தனை தவளைகள் தேவைதான். அந்த தலைப்பிரட்டைகளும் தவளைகளும்தான் காட்டின் மாபெரும் பூச்சிசாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்துபவை. அவற்றில் கொஞ்சம் குறைந்தால்கூட கொசுக்களும் பூச்சிகளும் மண்டி காட்டு மிருகங்கள் கடும்வதைக்குள்ளாகும். காட்டுக்குள் உள்ள தோட்டங்களில் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுவதனால் தலைப்பிரட்டைகள் அழிந்துபோய் இன்று காடுகள் முழுக்க கொசுப்படலங்களால் மூடப்பட்டுள்ளன என்றார்கள். கவி காட்டில் பூச்சிகொல்லிகள் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஊர்களில்கூட தவளைகள் அழிந்தமையால்தான் கொசு இத்தனை பெரும்பிரச்சினையாக ஆகியிருக்கிறது
மதிய உணவுக்கு திரும்பிவந்தோம். சாப்பிட்டு ஓய்வெடுத்தபின் நான்கு மணிக்கு மீண்டும் ஒரு கானுலா செல்ல திட்டம். ஆனால் காட்டில் யானை நிற்பதாக பஷீர் சொன்னார். ஆகவே ஜீப்பிலேயே காட்டுக்குள் சென்றோம். சாலையில் செல்லும்போதே யானை தெரிந்தது. மலைச்சரிவில் ஒரு பெண்யானை சற்றே பெரிய குட்டியுடன் நின்று மேய்ந்துகொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அதனருகே இன்னொரு சிறிய குட்டியை பார்த்தோம். இன்னொரு பெண்யானை அப்பகுதியில் எங்கோ இருந்தது, தெரியவில்லை. யானைக்கூட்டம் கிட்டத்தட்ட நாலைந்து கிலோமீட்டர் அகலமாகப் பரவி மேயக்கூயது
யானை மேய்வதையே பார்த்துக்கொண்டிருந்தோம். புல்லை பிய்த்து உதறி தின்றுகொண்டிருந்தது. குட்டி கொஞ்சம் மேய்ந்து கொஞ்சம் விளையாடியது. உடம்பெங்கும் மண் மூடியிருப்பதனால் காட்டுயானை கருமையாக இருப்பதில்லை. மண்நிறமான குன்றுக்கு உயிர்வந்ததுபோல இருக்கும். யானைகள் மேலும் தெரிகின்றனவா என்று சென்று பார்த்தோம். தெரியவில்லை.
‘இந்த நாளே ஆசீர்வதிக்கப்பட்டது மாதிரி இருக்கு ஜெ’ என்றாள் அருண்மொழி. ’அந்தக்குட்டிக்கு ஒரு கிஸ் அடிக்கணும் போல இருக்குப்பா’ என்றாள் சைதன்யா. காட்டில் யானையைப் பார்ப்பதென்பது காட்டின் ஆன்மாவையே பார்ப்பதுதான். அந்த கணங்களின் பரவசத்துக்கு ஈடே இல்லை. திரும்பும் வழியில் காட்டுக்குள் ஆழத்தில் ஒரு காட்டெருதை மிக அருகே பார்த்தோம். கண்கள் சந்திக்கும் அருகாமையில். அழகான பெருமுகம். எச்சரிக்கையான களங்கமில்லாத கண்கள். வெள்ளை முகமுனையில் ஒரு ஆர்வம். அதிக அவசரமில்லாமல் மறுபக்கம் புதர்களுக்குள் சென்றது.
இரவு திரும்பி வந்து ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இம்முறை ஒரு புது விளையாட்டு. நான் ஒரு கதை சொல்லி அதை ஒரு இக்கட்டில் நிறுத்திவிடுவேன். அதை விடுவித்து மேலும் சொல்லி இன்னொரு இக்கட்டில் நிறுத்தி சைதன்யாவுக்கு அஜிதன் கொடுக்க வேண்டும். அவள் எனக்கு. ‘சாலையில் எதிரே நடந்து வந்த ஒருவனின் தலையை காணவில்லை’ என்ற இடத்தில் நான் நிறுத்த ‘அது ஒரு உடைந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பம்தான்’ என்று அஜிதன் கதையை முன்னெடுத்தான்.
ஏரி இரவில் பெரிய கிராபைட் தகடு போலிருந்தது. அதில் பிரதிபலித்த பிம்பத்துடன் மலைநீட்சி வாய்திறந்த பிரம்மாண்டமான முதலை. நீரில் ஏதோ கொப்புளங்கள் அலைகள். அலைப்புற்ற நீல நிலா. இரவுணவுக்குப் பின் நானும் பஷீரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம். அதிலும் எண்பதுகளின் கேரள இலக்கியத்தின் பொற்காலங்களில் கல்லூரியில் படித்தபடி இலக்கியத்துள் நுழைந்தவர்கள் நாங்கள்.
பஷீர் பொதுவாகச் சுற்றுலாப்பயணிகளின் மனநிலைகளைப்பற்றிச் சொன்னார். வெள்ளைப்பயணிகள் அனேகமான அனைவருமே இயற்கையை மதிப்பவர்கள். பேணுபவர்கள். அவர்களிடம் எதையுமே சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் இந்தியர்கள் அப்படி அல்ல. இதில் வட இந்தியர், தமிழர், மலையாளிகள் என்ற பேதமே இல்லை. அவர்கள் இயற்கையை ’நுகர’ விரும்புகிறார்கள். சுற்றுலா என்றால் இன்பம் துய்ப்பது என்ற மனப்பிம்பம். இன்பம் என்றால் அவர்கள் ஏற்கனவே அறிந்த இன்பங்கள். காட்டுக்குள் வந்தால் காட்டுயிர்களை சமைத்துச் சாப்பிடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் கூட உண்டு. கூச்சலிட்டு கும்மாளமிட்டு ஆர்பபட்டம் செய்தால்தான் ’அனுபவிப்பது’ ஆகும் என்ற நம்பிக்கை.
குப்பைகளை போடலாகாது, சத்தம்போடலாகாது, வனவிலங்குகளை துன்புறுத்தலாகாது என்ற நிபந்தனைகள் எல்லாமே தாங்கள் கொடுத்த பணத்தை வசூலாக விடாத கட்டுப்பாடுகள் என அவர்கள் நினைக்கிறார்கள். இயற்கையை கவனிக்கும் கண்களே பெரும்பாலானவர்களுக்கு இல்லை. ’அவர்கள் அதற்கு பழக்கப்படவே இல்லையே’ என்றேன். ’அவர்கள் பார்க்கும் சினிமாக்களில் கதாநாயகர்கள்கூட இயற்கையை கண்டால் கத்தி ஆர்ப்பாட்டம் போட்டு ஆபாசமாகத்தானே கூத்தாடுகிறார்கள்?’
வருபவர்களில் குடிகாரர்களைப்பற்றி பஷீர் ஆழமான வெறுப்புடன் சொன்னார். குடிக்காதவர்கள் சிலரே. குடிப்பவர்களைப் பொறுத்தவரை இயற்கை எழில், பருவநிலை எது இருந்தாலும் அவர்களுக்கு போதுமென தோன்றுவதில்லை. அனைத்துமே குடிக்கான முகாந்திரங்கள் மட்டுமே. குடித்தால் மட்டுமே அவர்களுக்கு இன்பம். அதே நினைப்புதான் எப்போதும். குடித்தால் வெளிநாட்டவருக்கு இருப்பது போல சுயகட்டுப்பாடோ நாகரீகமோ இருப்பதில்லை. அளவுமீறி குடித்து கலாட்டா செய்வதில் படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரர் வேறுபாடே இல்லை.
‘குப்பிகளை அடித்து உடைத்து காட்டுக்குள் போட்டுவிடுகிறார்கள். கண்ணாடிச்சில்லு யானையின் கால்களுக்கு மிக ஆபத்தானது. அதன் எடை காரணமாக சில்லு ஆழமாக உள்ளே சென்றுவிடும். அது பழுத்து புண்ணாகி நொண்டி அலையும் யானைகளைப் பார்த்திருக்கிறேன். இந்தக் காரணங்களால் யானைகள் சமீபகாலமாக மனிதர்கள் மேல் கோபத்துடன் இருக்கின்றன. ஊகிக்கவே முடியாதபடி திடீரென தாக்குகின்றன’ என்றார். குடிகாரர்கள் மீதான இந்த வெறுப்பை பொதுவாக சேவை அல்லது நிர்வாகப்பணியில் உள்ள எவரிடமும் காண்கிறேன். அவர்களே குடிப்பவர்களாக இருந்தாலும்கூட! குடிப்பவர்களுக்கு மட்டும் இந்த வெறுப்பு புரிவதில்லை. அவமதிப்புகளை அவர்கள் உணர்வதில்லை
மறுநாள் அதிகாலையில் எழுந்து அதே மலைச்சிகரத்துக்குச் சென்றோம். அங்கே அதே மலைச்சரிவில் வேறு ஒரு காட்டெருதுக்கூட்டம் மேய்ந்துகொண்டிருந்தது. காலை ஒளியில் அவை கருஞ்செந்நிறமாக மின்னின. திரும்பி சாலைக்கு வந்து மேலே சென்றோம். சாலை முழுக்க புதிய யானைப்பிண்டங்கள். நேற்று மலையாழத்தில் மேய்ந்துகொண்டிருந்த யானைக்கூட்டம்.
அந்த யானைகளை தேடிச்சென்றோம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கவனித்தோம். பள்ளத்தில் நூறடி அப்பால் இரு யானைகள் தெரிந்தன. இருண்ட காட்டுக்குள் ஆழமான நிழல்குவை போல முதலில் தெரிந்தான. அவை அசைந்ததனால்தான் யானைகள் என்று புரிந்தது. இல்லையேல் நேராகச் சென்று முட்டிக்கொள்ள வேண்டியதுதான். முந்தையநாள் இரவில் நல்ல மழை பெய்து அவை குளிப்பாட்டப்பட்டிருந்தன- வானத்தால். கருமை வழிந்த தோல் அசைவது இருட்டு நலுங்குவது போலிருந்தது.
உறுமியபடி யானைகள் விலகிச்சென்றன. மேலே மூங்கில்சரிவில் சில யானைகள் நின்ற ஒலிகள் கேட்டன. நடுவே சாலையில் நிற்பது ஆபத்து என்றார் ராஜா. திரும்பி வந்தோம். காலையுணவுக்குப் பின்னர் மேலும் ஒரு மலைஏற்றம். புல்மலைகளை ஏறிச் சென்றோம். வெயில் இல்லை. காலை ஏழுமணி போலிருந்தது மதியம் பதினொரு மணி. புல்மலை உச்சியில் அமர்ந்து எதிரே விரிந்துகிடந்த மாபெரும் மலைச்சிகரங்களை கண்டோம். ஆழத்தில் ஒரு சிறிய சிகரத்தில் சபரிமலை கோயில் தெரிந்தது. மறுநாள் அங்கே நடைதிறப்பு என்றார் ராஜா.
பயணத்தின் முடிவு. கடைசியாகப் பார்ப்பதுபோல மலைகளையே பார்த்துக்கொண்டிருந்தோம். கண்ணிழந்த அறிஞரான ஹெலன் கெல்லரின் பொன்மொழி உண்டு,’அடுத்த கணம் பார்வை போய்விடுமென்றால் எப்படி பார்ப்பீர்களோ அப்படி இயற்கையை பாருங்கள்’ அப்படித்தான் பார்த்தோம்.
மீண்டும் அறைக்கு திரும்பினோம். சற்று ஓய்வெடுத்துவிட்டு கிளம்பினோம். மாலைக்குள் மதுரை. அங்கிருந்து நாகர்கோயில். அஜிதனும் சைதன்யாவும் காட்டை கார்ச்சன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தார்கள். உற்சாகத்தையும் கவனத்தையும் பார்த்தால் அவர்கள் அப்போதுதான் காட்டுக்குள் நுழைகிறார்கள் என்று தோன்றும்
[முற்றும்]