’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50

[ 7 ]

இந்திரகீலத்தின் உச்சிமலை ஏந்திய வெள்ளித்தாலமென முழுமைகொண்ட வட்டமாக இருந்தது. நாண்இழுத்த வில்லென வளைந்து தெரிந்த அதன் விளிம்பைக் கடந்தபோது அர்ஜுனன் கையிலிருந்த யட்சி நடைதிருந்தா, மொழியறியா பைதலென உருக்கொண்டிருந்தாள். வலக்கையின் விரலை வாய்க்குள் இட்டு மடிப்புகள் என தசைகொழுவிய கால்களை உதைத்து உடலை நெளித்து எம்பி ஆ ஆ என குரலெழுப்பி கீழிறங்க விரும்பினாள். “இறங்கிக்கொள்கிறாயா?” என்று அவன் மதலைமொழியில் கேட்டான். அவள் தலையசைத்து காட்டை சுட்டிக்காட்டினாள்.

அவன் இறக்கிவிட்டதும் அண்ணாந்து செவ்விதழ்களுக்குள் இருசிறுபற்கள் தெரிய புன்னகைத்தாள். மீண்டும் காட்டை சுட்டிக்காட்டினாள். அவன் குனிந்து அவள் புன்தலையில் கையால் வருடி “சென்று வருகிறேன், அன்னையே” என்றான். அவள் காட்டுக்குள் செல்கிறேன் என்று கையை காட்டிவிட்டு தளர்நடையிட்டுச் சென்று புதர்களுக்கிடையில் மறைந்தாள்.

மழைவிழுந்து கரைந்து மெழுக்கிட்டு கால்வழுக்கிய வெண்பளிங்குப்பரப்பில் நடந்து மையத்தை அடைந்தபோதுதான் அம்மாபெரும் வட்டத்தை அர்ஜுனன் நன்கு அறிந்தான். அண்ணாந்து வானை நோக்கியபோது மிக அருகிலெனத் தெரிந்தது எழுவண்ண வில். எம்பிக் குதித்து அதை பற்றிக்கொள்ள முடியும் என்பதைப்போல. அதற்கு இருபுறமும் மலையின் சிறகுகளென விரிந்து நீண்டிருந்த முகில்கள் வானொளி கொண்டிருந்தன. அவை மெல்ல நுனி அலைய அசைந்துகொண்டிருந்தன.

இந்திரகீலம் கடலுக்குமேல் பறப்பதை அவன் உணர்ந்தான். கீழே நோக்கியபோது மலைமுடிகளும் மரங்கள் செறிந்த தாழ்வரைகளும் கைவிடப்பட்ட வண்ண ஆடை என கீழிறங்கி மடிந்து நெளிந்து அகன்று கொண்டிருந்தன. நோக்கியிருக்கவே மலைமுடியொன்று கூரிய கல்ஊசி என்றாயிற்று. மரக்கிளைகள் பச்சை நிறக்குவியல்களின் பரப்பென மாறின. கடலின் அலைகள் எழுந்தமைவது பூனையின் கையில் வெண்ணிற உகிர்கள் எழுந்து மறைவதுபோல் தெரிந்தது.

இந்திரகீலத்தின் சிறகுகள் காற்றசையாது மெல்ல வீச, விழிநிறைக்கும் தூயஒளி நிறைந்திருந்த வானை நோக்கி அவன் எழுந்துகொண்டிருந்தான். மென்மழைத் தூறல் ஓய்ந்தது. நீர்த்துளிகள் ஒளித்துருவல்களாக சிதறி பின் மறைந்தன. வானுருகி பொழிவதுபோலிருந்தது ஒளி. சூரியன் கீழ்வானின் சரிவில் மிகப்பெரிய நீலவட்டமாக கதிர்வளையம் சூடி அதிர்ந்துகொண்டிருந்தது. இந்திரகீலம் மேலெழுவதன்  விசையை தன் உடலுள் குலுங்கிய நீர்மையால் மட்டுமே அறிந்தான்.

வானிலெழுந்து சென்ற இந்திரகீலம் மெல்ல தயங்கி நின்றது. கீழே அலைத்தோடிய காற்றில் மெல்ல அது அசைந்தது. நடக்கும் யானை மேல் நின்றிருப்பது போல் அர்ஜுனன் உடல்ததும்பினான். சூரியனை நோக்கியபோது கண்கூசவே மேற்கே சரிந்த வானிழைவின் தூயநீலத்தை நோக்கினான். அவன் மேல் நிழலொன்று கடந்துசெல்ல வானை அண்ணாந்தபோது கீழைச்சூரியனிலிருந்து கிளம்பி வந்தது ஓர் அசைவு. அதன் நீள்நிழல்கற்றைகள் எழுந்து ஆழியின் ஆரங்களென  சுழன்றன. விழிகூர்ந்தபோது  ஏழு வெண்புரவிகள் இழுத்த பொற்தேரொன்று அணுகிவரக் கண்டான்.

தொலைவில் வெண்முகிலின் முனையில் அந்திச்செம்மையென அது விழிமயக்கு காட்டியது. அணுகும்தோறும் புரவிகளின் பிடரிகள் பறப்பதும் இழுவிசையில் கழுத்துகள் முன் நீண்டிருப்பதும் தூக்கப்பட்ட நீள்முகங்களும் தெளிவடைந்தன. சுழன்று பறந்த செந்நிறவால். முகில்கீற்றுகளை அளைந்தபடி பாய்ந்த மெல்லிய நீண்ட கால்கள். பொற்குளம்புகள். அவன் அவற்றின் வாயில் தொங்கிய மென்பஞ்சுநுரையைக்கூட கண்டுவிட்டான்.

பொன்னிறக் கடிவாளங்களால் அப்புரவிகளை பிணைத்துப் பற்றியபடி அதன் முன்தட்டில் நின்றிருந்த இந்திரனை அவன் கண்டான். ஏழடுக்கு வைரமுடி தொலைவிலேயே மின்னியது. பொன்னிற முகம் ஒளிரும் நீலவிழிகளுடன் புன்னகைத்தபடி அணுகி வந்தது. பொற்துளி ஒன்று விண்ணிலிருந்து கண்ணைநோக்கி உதிர்வதுபோல. நிழல் அவனைக் கடந்து சென்ற பின்னரே தேர் முகில்களினூடாக இறங்கி இந்திரகீலத்தின் பளிங்குத்தாலத்தில் வந்து அமைந்தது.

புரவிகளின் குளம்புகள் பாறைபரப்பைத் தொட்டதும் துடிதாளமிட்டன.  விரல்தொட்டு மீட்டப்பட்ட கிணைப்பறையின் தோல் என ஆயிற்று இந்திரகீலத்தின் உச்சிவட்டம். அவனை அரைவட்டமென சுற்றி வந்து விசையழிந்து தேர் நின்றது. ஏழு கடிவாளங்களையும் இழுத்து புரவிகளை இந்திரன் நிறுத்தினான். கழுத்துகளை வளைத்தும் ஒசித்தும் அண்ணாந்தும் குனிந்தும் புரவிகள் விசையை தங்கள் உடலுக்குள் நிறுத்திக்கொண்டு அமைந்தன. குளம்புகளை பொய்யடி வைத்து முன்னும்பின்னும் ஊன்றி வால்சுழற்றி நிலை கொண்டன.

தேர்முகப்பிலிருந்து முழுக்கவச உடையுடன் ஒளிக்கற்றை சரிந்திறங்குவதுபோல படிகளில் கால்வைத்து இறங்கி வந்த இந்திரனைக் கண்டு அர்ஜுனன் தலைவணங்கி “எந்தையே, தங்கள் மைந்தன் பணிகிறேன்” என்றான். புன்னகையுடன் அருகே வந்து “நான் விண்ணவர்கோனின் தேர்ப்பாகனாகிய மாதலி” என்று அவன் சொன்னான். “உன்னை அழைத்து வரும்படி அரசரின் ஆணை” என்றான். அர்ஜுனன் கைகூப்பி “தேவசாரதிக்கு வணக்கம். உங்கள் கால் என் தலைமேல் அமைவதாக!” என்றான்.

மாதலி சிரித்தபடி “விண்ணரசர் என என்னை நீ மயங்கியது இயல்பே. நான் அவர் தோற்றம் கொண்டவன். அனலை அணுகியது அனலாவதுபோல அணுக்கன் அரசனைப்போல் ஆவதென்பது எங்குமுள்ளதே” என்றான். அர்ஜுனன் “தன்னை முழுதளித்த அணுக்கர் மாற்றுருக்கொண்ட அரசரே. நீங்கள் என் தந்தைக்கு நிகரானவர். ஊர்வலம் வரும் இறைப்படிமம் கருவறை அமர்ந்த முதல்தெய்வமே என்பது நம் கோயிலொழுகு அல்லவா?” என்றபின் குனிந்து மாதலியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான்.

அவன் இரு தோள்களையும் கையால் பற்றி அள்ளி மார்போடணைத்து மாதலி சொன்னான் “இளமைந்தன் என நீ பிறந்த அன்று உன் தந்தையுடன் அஸ்தினபுரியின் முகில்கூட்டத்தின்மேல் நின்றிருந்தேன். வில் தொட்டெடுத்து நீ எய்த முதல் அம்பை விண்ணிலிருந்து பார்த்துக் களித்தேன். உன் வெற்றிகளிலும் தனிமைகளிலும் எப்போதும் உடனிருந்தேன். இன்றே உன் உடல்தொட்டு நெஞ்சோடணைக்க வாய்த்தது. தேவன் என்றே ஆயினும் மைந்தரின்பத்துக்கு நிகர் விண்ணிலும் இல்லை என்றே சொல்வேன்.”

“தங்கள் அருளால் என்றும் காக்கப்பட்டேன், தந்தையே. தங்களால் தழுவப்பட்டதும் என் உடல் நிறைவுகொண்டது” என்றான் அர்ஜுனன். “வருக!” என்று தோள் தொட்டு அணைத்து தேரை அணுகி “அப்பீடத்தில் அமர்க!” என்று சுட்டிக்காட்டினான் மாதலி. விண்மீன்களை அள்ளிச் செறித்ததுபோல் வைரப்பட்டை விளிம்புடன் செம்பட்டு மெத்தையுடன் சிம்மப்பிடிகளுடன் அமைந்திருந்த அரியணையை நோக்கி அர்ஜுனன் தயங்கினான்.

“எந்தையே, அது விண்முதல்வனின் அரியணை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம். இத்தேரை அவர் அனுப்பினார் என்றால் அதில் உன்னை அமர்த்தி அழைத்து வரவே விரும்பியிருப்பார்” என்றான் மாதலி. அர்ஜுனன் “மானுடனாகிய நான் அதில் அமரலாகாது. பொறுத்தருள்க!” என்றான். “அது உன் தந்தையின் ஆணை என்றால் அதை ஆற்றுவதே உன் கடமை” என்றபின் மாதலி பரிபீடத்தில் ஏறியமர்ந்தான்.

உள்மேடையில் சென்று இந்திரனின் அரியணையைத் தொட்டு வணங்கியபின் அதன் காலமரும் மெத்தைமேல் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “இதுவே எனக்கு உகந்ததென்று எண்ணுகிறேன், தந்தையே. எழுக தேர்!” என்றான்.

விண்ணகருக்கான பாதை வானில் ஒரு செந்நிறத் தீற்றல் என தொடுவான்வரை வளைந்து சென்றது. புரவிகள் அதன்மேல் குளம்பு தொட்டும் தொடாமலும் விரைய தேருக்குப் பின்புறம் அப்பாதை அக்கணமே கரைந்து மறைந்தது. அழகிய இடையில் அரைநாண் படிந்த வடுபோல என்று அர்ஜுனன் நினைத்தான். அவ்வெண்ணத்தை அவனே நோக்கி புன்னகைத்துக்கொண்டான். தொடத் தொட வளைந்தகன்றது தொடுவான் கோடு. முகில்குவைகள் வளைந்திறங்கி கீழே மறைந்தன. குனிந்து நோக்கியபோது அவன் அறிந்த வானம் காலடியில் இருந்தது. நீலம் குடையென கவிந்த பிறிதொரு வானம் மேலே. சிறு துளியெனக் கூட எந்த மாசும் அற்றது. அதன் வழுக்கில் எம்மாசும் நிற்காதுபோலும்.

மேலும் மேலுமென கணந்தோறும் விரைவுகொண்டது தேர். அவன் ஆடைகள் எழுந்து படபடத்தன. தலைமயிர் உடலிலிருந்து பிடுங்கிக்கொண்டு பறக்க விழைவதுபோல் துடித்தது. விரைவின் ஒரு கணத்தில் ஆடைகள் விலகி அக்கணமே பின்கடந்த தொலைவில் மூழ்கி மறைந்தன. அவன் இரு கைகளையும் விரித்தான். அவன் கொண்ட கடலோடியின் இரும்பு அணிகள் உடைந்து தெறித்தன. பின் ஒரு கணத்தில் முற்றக்கனிந்த பழத்தின் விதையிலிருந்து மென்தசை வழிந்தகல்வதுபோல் அவன் உடல் பிரிந்து பறந்து பின்னால் அகன்றது.

எஞ்சிய அவன் உடல் வெறும் ஒளிவடிவெனத் தோன்றியது. கைகளைத் தூக்கிப் பார்த்தபோது நீர்ப்பாவை என அதனூடாக மறுபக்கம் தெரிந்தது. இருக்கிறேன், இதோ இதோ என சொல்லிக்கொண்டான். அவ்வுணர்வு உள்ளிருக்கையில் மட்டுமே இவ்வண்ணம் எஞ்சலாகும். கரைந்துகொண்டிருந்தது உடல். நிலவொளியில் பனிப்படலம்போல. நீரில் உப்பு போல. இருத்தலென்பது கணந்தோறும் வந்தமையும் இன்மையென்று உணர்ந்து அமையும் பதற்றத்தால் இருத்தலை மீண்டும் உணர்ந்தான்.

சித்தத்தால் சேர்த்துத் தொகுத்து தன் உருவை செறித்துக்கொண்டான். பனிச்சிலையென ஒளியை உள்வாங்கி கடக்கவிட்டான். ஒளிகடந்து செல்லும் அனைத்தும் வானே என்று உணர்ந்தான். பின்னர் அத்தேரும் அவ்வண்ணமே உருவழிவதைக் கண்டான். அவனைப்போன்றே ஒரு உணர்தல் மட்டுமென அதுவும் மாறியது. செல்கை மட்டுமே எஞ்சியிருந்தது.

மென்கருமை படிந்த யட்சர்களின் உலகை அடைந்தனர் அவர்கள். ஒவ்வொன்றும் நிழல்மட்டுமென எஞ்சிய உலகில் அவர்களும் நிழல்களென்றே அலைந்தனர். விழைவு அவர்களை நீண்டு மடிந்து சுருங்கி மறைந்து தோன்றச்செய்தது. ஓசையற்ற உலகு. அசைவுகள் பின்னிப்படர்ந்து வலையென ஆகி ஒற்றை அசைவென்றே ஆன வெளி. நகக்கண்களிலும் நோக்குகொண்டிருந்தனர் யட்சர். முலைக்கண்களாலும் நோக்கினர் யட்சிகள்.

இளநீல ஒளி பரவிய கந்தர்வ உலகை அவர்கள் கடந்து சென்றனர். நீலச்சிறகுகள் புகைப்படலமென அசைய மணியொளி கொண்ட உடல்களும் அனல் சுடரும் விழிகளுமாக கந்தர்வர்கள் அங்கு நிறைந்திருந்தனர். வண்ண மலர்களால் ஆனவை அவர்களின் இல்லங்கள். மலரிதழ்படுக்கைகள். மலர்க்குடைகள். மலர்மொட்டு இருக்கைகள். மலர்முரசுகள். மலர்க்குழல் கொம்புகள். மலர்களன்றி பிறிதிலாத உலகு. மலர்நிழல்களும் வண்ணம்கொண்டு பிறிதொரு மலராக இருந்தன.

இளஞ்சிவப்பு நிறமான கின்னர உலகத்துக்குள் அவன் தேரில் நுழைந்தான். அனல்வடிவ உடல் கொண்டிருந்தனர் அவர்கள். எழுந்து பறந்து தொலைவுவரை அலையடித்த குழல்கள். கை முனைகளும் கால் முனைகளும் அனலலைகள்போல் நெளிந்தன. ஒருவரைஒருவர் தொட்டதுமே அவர்கள் உடல்கள் ஒன்றென ஆயின. விழைவால் நீண்டு நெடுங்கோடென்றாயினர். தனிமையால் தேங்கி வட்டமாயினர். தவத்தால் குவிந்து துளியாயினர். காதலால் சுருள்களாகி இன்னொருவரை வளைத்துச் சூழ்ந்தனர்.

இளம்பச்சை நிறம் கொண்ட கிம்புருட உலகத்தை கடந்தார்கள். ஒளி உண்டு உடல் சுடரும் பச்சைக்கற்களென உடல் கொண்டிருந்தனர் அவர்கள். நீண்ட உணர்கொம்புகள் மெல்ல அதிர இன்னிசை எழுப்பினர். அவ்விசையையே சரடென்று ஆக்கி அதில் தொற்றி ஆடிப்பறந்தனர். அனைத்தும் தளிரென்றே எஞ்சும் ஓர் உலகு. மான்களும் யானைகளும் குழவிகளென்றிருந்தன. பறவைகளனைத்தும் குஞ்சுகள். நீரெல்லாம் சிறு ஊற்றுகள். மலைகளும் தளிரென்றிருந்தன.

இசையென ஆகியவர்களைச் சூழ்ந்திருந்தது காலம். அவ்விசையின் மறுபக்கமாக பிணைந்திருந்தது வெளி. இசையே அங்கு ஒளியென்றும் இருந்தது. இசையெழுந்தமைந்தபோது ஒளியலையாகியது. வெளிமடிந்து அவர்களை ஊசலாட்டியது. அவர்களில் ஒருவரை தொடமுடிந்தால் பேரிசை ஒன்றை உடலெங்கும் நிரப்பிக்கொள்ளமுடியும். இசையென்றாகி இனித்தினித்து அங்கிருக்கமுடியும்.

வெண்பாலின் வண்ணம் கொண்டிருந்தது வித்யாதரர்களின் உலகு. வெண்நுரையென அவர்களின் உடல் இருந்தது. வெளியில் சற்றே உருவாகி அவ்விழைவழிந்ததுமே மீண்டும் கரைந்து மறைந்தனர். நீர்நுரை. பால்நுரை. தேன்நுரை. நெய்நுரை. நுரைகள் மட்டுமேயான உலகில் அனைத்தும் அலைபாய்ந்தன. பறவைகளின் நுரையே இறகு. விலங்குகளின் நுரை வெண்மயிர். மரங்களின் நுரை வெண்மலர்கள்.

ஒவ்வொன்றும் நுண்வடிவத்தில் இருந்த குஹ்யர்களின் உலகை தேர் கடந்துசென்றது. இருத்தலென்னும் உணர்வென்றே அங்குளோர் எஞ்சினர். அவர்களால் உணரப்படுகையிலேயே பொருள் உருக்கொண்டது. உணரப்படும் வடிவை அது சூடியது. உணர்வுக்கேற்ப உருமாறியது. மீண்டும் கருநிலைகொண்டது. நுண்ணணு வடிவ மாமலைகள். நுண்துளிக் கடல்கள். ஒளித்துளியென வானம். அங்கே ஒவ்வொன்றும் ஆயிரம்கோடிமடங்கு எடைகொண்டு கணத்திற்கு ஆயிரம் மடங்கென எடைபெருகின. எடைமிகுந்து அவை இன்மையென்றாகி அவ்வெல்லையில் சென்றுமுட்டி மீண்டும் எடை இழந்து மீண்டுவந்தன.

நுண்சொல் வடிவென அனைத்தும் இருந்த சித்தர்களின் உலகை இறுதியாகக் கடந்தனர். ஒலியையும் பொருளையும் உதறிய தூய சொல்அறியப்படாத பெருவெளியாகி அங்கு நிறைந்திருந்தது. அதில் கரைந்திருந்தனர் சித்தர். பொருள்கொண்டு ஒலிசூடி பிறந்து குமிழியென்றாகி ஒளிசூடி மீண்டும் அதில் மறைந்தனர். கடந்துசென்றபின் அவன் அறிந்தான் ஓங்காரமென்ற ஒற்றைச்சொல் அது என.

“இவை விண்ணவரின் உலகுக்கான பாதைநிலைகள்” என்றான் மாதலி. “சிறகெழுந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சி இங்கே முட்டைஎன புழுஎன கூடுஎன பதங்கமென தன்னை தான் வளர்த்துக்கொள்கிறது.” அவன் கைகளைக் கூப்பியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். “இருத்தலென்பதன் மாறாநெறிகளால் கட்டப்பட்ட மானுடவாழ்க்கைதான் எத்தனை எளியது!” என்றான். “மென்பஞ்சுத் துகள்கள் பெருங்காற்றில் முட்களில் குத்திக்கொள்கின்றன தங்களை” என்றான் மாதலி.

[ 8 ]

அமராவதியின் நுழைவாயிலை அர்ஜுனன் நெடுந்தொலைவிலேயே கண்டான். சிறுகணையாழி ஒன்று நீரோடையின் அலைநகர்வுக்குள் விழுந்து கிடப்பதுபோல் தோன்றியது. அவன் விழிகூர்ந்து நோக்கும்தோறும் அது அணுகிவருவதாகத் தெரிந்தது. இல்லை அங்குதான் நின்றுகொண்டிருக்கிறதென்று எண்ணியபோது அசைவிழந்தது.

அவர்கள் சென்ற பாதை அதை நோக்கி சென்று இணைவதை அதன்பின் அவன் கண்டான். அந்த மென்சரடால் இழுக்கப்பட்டதுபோல  அது சீராக அணுகி, உருப்பெருகி வந்தது. அது ஒரு தோரணவளைவு என அவன் அறிந்தபோதே அதன் உயர்ந்த சிற்பவளை மிகமேலே எழுந்து சென்றுவிட்டிருந்தது. அதன் நடுவே பதிக்கப்பட்டிருந்த மும்முகனின் உவத்தல்முகம் அவனை நோக்கவில்லை. ஆனால் அதன் நோக்கை அவன் உணர்ந்தான்.

அமராவதி நகருக்குள் விண்ணிலிருந்து விழுபவன்போல அவன் சென்றடைந்தான். அதன் ஆழிவட்டத்தெருக்களும் அவற்றில் ஆரத்தில் பொற்காசுகளென பொற்செதுக்குகள் எனச் செறிந்திருந்த மாளிகைகளும் நடுவே எழுந்திருந்த இந்திரனின் அரண்மனையும் பொன்னிற இலைத்தளிர்கள் கொண்ட மரங்களும் அலையடித்த சுனைகளும் சிறகலைத்து வானை அளாவிய பறவைக்குழாம்களும் நகரெங்கும் பறந்தலைந்த தேவர்களின் கவச ஒளிகளும் அப்சரஸ்களின் உடைவண்ணங்களும் ஒரேகணத்தில் எழுந்துவந்து அவனை வாங்கிக்கொண்டன. மறுகணம் அவன் அவர்களின் நடுவே தன்னை உணர்ந்தான்.

அவர்களில் சிலர் இமையாவிழிப்பு கொண்ட கண்களில் கனவுடன் புகை காற்றில்பிரிவதுபோல மிதந்து அசைந்தனர். சிலர் கால்கொண்டு கைவீசி மண்ணில் நடந்தனர். சிலர் ஒளிக்கதிர்கள் போல எண்ணத்தின் விரைவிலேயே கடந்துசென்றனர். சிலர் காற்றென ஆகி மலர்களை அசைத்தனர். சிலர் மணற்பருவென்றாகி தெருவெங்கும் பரவியிருந்தனர். அறியும்தோறும் பெருகினர். எவரும் எவரையும் நோக்கவில்லை. எவரும் தனியுள்ளம் கொண்டிருக்கவில்லை. அங்கிருந்த வெளியென அவர்களின் அகங்களும் ஒன்றென்றே இருந்தன.

நோக்க நோக்க அவன் அமராவதிப் பெருநகர் சுவரோவியங்கள்மேல் வெள்ளைபூசி மேலும் மேலும் வரையப்பட்ட ஓவிய அடுக்குபோலிருப்பதை உணர்ந்தான். ஈசலிறகுகள் என ஒளிக்குள் ஓர் ஒளிநிழலென அசைந்தனர் தேவர்கள். ஒருவரை நோக்கி சித்தம்கூர்கையில் அவர் ஒன்றுள் ஒன்றெனச் செல்லும் பல்லாயிரவரின் பளிங்குமணிநிரை எனத் தோன்றியது. ஒவ்வொன்றும் ஆடிக்குள் ஆடியென, அணைவிலாப் பாதையின் தொடக்கமெனத் தெரிந்தது. ஒன்றன்மேல் ஒன்றென ஒளியை எத்தனை முறை அடுக்கமுடியும்? “எந்தையே, இங்கு நான் காண்பவை என் சித்தப்பெருக்குதானா?” என்று அவன் கேட்டான்.

“மண்ணுலகென்பது இடம், காலம், பரு என்னும் மூன்று இயல்புகளால் கட்டுண்டது. அவை மூன்றிலிருந்தும் விடுபட்டதே விண்ணுலகு. இங்கு ஒருவர் எங்குமிருக்கமுடியும். எப்போதுமிருக்கமுடியும். எவ்வடிவிலும் இருக்கமுடியும். இருத்தலும் இன்மையுமாக அமையவும் இயலும்” என்றான் மாதலி.  “மைந்தா, நீ காணும் ஒவ்வொரு துளி காலஇடத்திலும் முடிவிலிவரை செல்லும் அடுக்குகளாக தேவருலகங்கள் உள்ளன. உன் விழிபடும் ஒரு கோணம் கோடானுகோடி மண்ணுலகுக்கு நிகரானது.”

அர்ஜுனன் அந்தச் சொற்களின் விரிவை நோக்கி தன் உள்ளம் எழத் தயங்குவதை உணர்ந்தான். தன்னை கைவிடாமல் சென்றடையமுடியாத பொருள்வெளி. அதை உணர்ந்து பின்நகர்ந்து நீள்மூச்சுவிட்டான். “இங்குள்ள தேவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எந்தையே, மண்வாழ்பவர்கள் தங்கள் செயல்களால் தேவர்களாகிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றனவே?” என்றான்.

“ஆம், மண்ணிலிருந்தும் தேவர்கள் எழுகிறார்கள். புடவியின் பல்லாயிரம்கோடி உலகங்கள் அனைத்திலிருந்தும் கணம்கோடி தேவர்கள் இங்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றான் மாதலி. “நற்செயல்கள் வழியாக மானுடர் உருமாறி வந்தடையும் நிலை அல்ல தேவர் என்பது. தேவர்கள் மானுடனிலிருந்து கணத்திற்கு ஒருவரெனப் பெருகுபவர்கள். இன்னிசை ஒன்றின் உச்சியில் நீ நெஞ்சுருகும்போது ஒரு தேவன் உன்னிலிருந்து எழுகிறான். மைந்தனை எடுத்து நெஞ்சோடு அணைக்கையில் பிறிதொருவன். பொற்கணங்களனைத்தும் தேவர்களென்றாகின்றன.”

“வேள்விகள் தேவர்களை பெருக்குகின்றன என்று வேதங்கள் சொல்வது இதையே. வாழ்வே பெருவேள்வி என உணர்பவன் தன்னிலிருந்து தேவர்ப்பெருக்கை உருவாக்குகிறான்” என்றான் மாதலி. “ஒவ்வொரு வாழ்வாலும் கோடி தேவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மானுடனைச் சூழ்ந்தும் தேவர்களின் உலகமொன்று உள்ளது. பிறிதொருமுறை அப்பொற்கணத்தை நீ அறியும்போது முன்னர் உன்னில் எழுந்த அந்தத் தேவனை அருகே உணர்கிறாய்.”

“மைந்தா, மானுடரைச் சூழ்ந்து நின்று அரியவை ஒவ்வொன்றையும் சுட்டி இதோ இதோ என தவித்துக்கொண்டிருக்கிறார்கள் அவன் படைத்த தேவர்கள்” என்றான் மாதலி. அர்ஜுனன் அவர்களை நோக்கிக்கொண்டே சென்றான். பின்னர் “முன்பொருமுறை எங்கள் அரசப்பேரவையின் தூண் ஒன்றின் மேலேறினேன். அங்கே குவைமுகட்டில் கீழே நிகழும் அவைக்கலைவோசை ஓங்காரமென உருக்கொண்டிருப்பதைக் கண்டேன்” என்றான். மாதலி சிரித்தான்.

அவர்கள் அமராவதியின் தெருக்களினூடாகச் சென்றபோது அர்ஜுனன் அந்த விந்தையை உணர்ந்தான். அவன் எண்ணுவதற்கேற்ப அந்நகர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு கணம் அவன் சிற்றிளமையில் மாலினியின் இடையிலமர்ந்து சென்றபோது நோக்கிய அஸ்தினபுரியின் அந்திச்செம்மை கொண்ட காட்சியாக இருந்தது. பிறிதொரு கணம் அவன் கனவிலெழுந்த அறியாப்பெருநகர். அடுத்த கணமே ஓவியத்தில் வரைந்து சூத்ராகி காட்டிய இந்திரப்பிரஸ்தம்.

“இது என் உள்ளமேதானா?” என்று அவன் தனக்குள் என கேட்டான்.  அங்கே சொல்வதும் எண்ணுவதும் ஒன்றே என மாதலி மறுமொழி உரைத்தபோது உணர்ந்தான். “ஆம், ஆனால் உன் சிற்றுடலுக்குள் இருப்பதல்ல உள்ளம். உன் ஆளுமையால் சுமக்கப்படுவதுமல்ல. உள்ளத்திற்குள் உடல் ஒரு சிறுதுளி. உள்ளத்தின் ஒரு கணநேரத் தன்னுணர்வே தான் என்பது” என்றான் மாதலி. “இது இப்பிரபஞ்சப்பெருக்கின் உள்ளம் என்பர் கவிஞர்.”

“இனிதென்றும் நன்றென்றும் அழகென்றும் இறையென்றும் ஆன அனைத்தாலும் உருவான ஒரு நகர்” என்று அர்ஜுனன் சொன்னான். ஒவ்வொன்றையும் நோக்குவது இயலாதென்று உணர்ந்து ஒன்றையும் நோக்காமல் அனைத்திலும் முழுக்கக் கரைந்து இருக்க முயன்றான். மாதலி புன்னகைத்து “இல்லை, மைந்தா. நீ இங்கு அறிபவை அனைத்தும் இனிதென்றும் நன்றென்றும் அழகென்றும் இறையென்றும் ஆனவை. விண்ணுலகென்பது ஒரு விழிப்புத் தோற்றம் மட்டுமே” என்றான்.

அவன் விழியே இருப்பென நோக்கிக்கொண்டே சென்றான். நிழலற்ற ஒளி. எதிரொலியற்ற ஓசை. பொருட்களிலிருந்து எழாத நறுமணம். உடலே ஒரு நாவென அவ்வினிமையை சுவைத்தான். ஒவ்வொன்றிலும் இருந்து அவற்றின் உச்சங்களை மட்டுமே அள்ளிக்கொண்டுவந்து சமைக்கப்பட்ட உலகம். ஒவ்வொன்றும் மீளமுடியாத நிலையில் முழுமைகொண்டிருக்கும் வெளி. படைக்கலங்களின் கூர்மைகளை மட்டுமே கொண்டு ஒரு படையமைப்பதுபோல. “ஒரு கை ஓசை” என்று அவன் சொல்லிக்கொண்டான்.

ஆம் என  அவன் புன்னகைத்தான். அவன் செய்ததன் பிழையென்ன என்று புரிந்தது. அவனென எஞ்சி அனைத்தையும் கடந்தமைவதை அறிய முயன்றான். அறிதலினூடாக அடையப்படுவதல்ல அது. ஆதலே அறிதலென்றாவது. அவன் சொன்னான் “எந்தையே, தேவன் என்றாகாமல் தேவருலகை அறியமுடியாது.” மாதலி உரக்க சிரித்தான். “ஒருமுறையேனும் தேவனென்றாகாத ஒரு மானுடன்கூட மண்ணில் வாழ்ந்ததில்லை” என்றான்.

முந்தைய கட்டுரைமோகினி
அடுத்த கட்டுரைகன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்