கவி சூழுலா

சென்ற ஜூலையில் நண்பர்களுடன் கவி சென்று வந்தபோதே மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பாதியாண்டு தேர்வு முடிந்து அஜிதன் வந்தபோது நவம்பர் 12 ஆம்தேதி கிளம்பிவிட்டோம். இரு குழந்தைகளுக்குமே சிறுவயதிலேயே காடு மீதான ஆர்வம் வேறெதிலும் இல்லை. தீம்பார்க்குகள் போன்ற செயற்கை கொண்டாட்டங்கள் அவர்களை சற்றும் கவர்வதில்லை. எங்களுடைய எல்லா பயணங்களும் காடுகளுக்குத்தான். அபூர்வமாக கோயில்கள்.

இதை நண்பர்கள் பலரிடம் சொல்லியிருக்கிறேன். குழந்தைகளுக்கு ஆர்வம் உருவாகும் வயதில் அவர்கள் காண்பது விளம்பரங்களைத்தான். அத்துடன் மற்ற குழந்தைகள் செல்லும் இடங்களையும் அவர்கள் அறிகிறார்கள். அந்நிலையில் அவர்கள் செல்லவும் பார்க்கவும் ஆசைப்படுவது தீம்பார்க்குகள் போன்ற இடங்களாகவே இருக்கும். அவர்கள் ஆசைப்படுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்று அவர்களை அங்கேயே கூட்டிச்செல்லும்போது அவர்கள் சிறு வயதிலேயே அதற்கு பழகிவிடுகிறார்கள்.

சில நண்பர்கள் ‘எங்கள் குழந்தைகள் தீம் பார்க்குகள் தவிர எங்குமே வரமாட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளை நீங்கள் அப்படி பழக்கவில்லை என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது . குழந்தைகளுக்கென்று இளவயதில் தனியான ருசிகள் இல்லை. அறிவுத்திறன் அல்லது கற்பனைத்திறனில் குழந்தைகள் நடுவே அப்படி பெரிய வேறுபாடு எதையும் நான் கண்டதில்லை. இயல்புகள் சில சமயம் சற்றே மாறுபடலாம், அவ்வளவுதான்.

சிறுவயதிலேயே குழந்தைகளை எதுமுக்கியம், எது நல்லது, எது அழகானது என்று சொல்லி நாம் பழக்க முடியும் என்று நினைக்கிறேன். அதை நான் சொல்லி வெற்றிகரமாகச் செய்த பல நண்பர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளிடம் பேசுவதுதான் முக்கியம். ’நீ சாதாரண குழந்தை இல்லை, மற்றவர்கள் செய்வதை நீ செய்யக்கூடாது’ என்று சொன்னால் மேலும் அடம்பிடிக்கும் குழந்தை இருக்கும் என நான் நினைக்கவில்லை.

ஏன் காட்டுக்கும் கோயில்களுக்கும் செல்வது முக்கியம் என நான் நினைக்கிறேன்? நம்முடைய மொழியிலும் பொதுச்சிந்தனையிலும் இயற்கைக்கு எதிரான மனச்சித்திரங்கள் பல மண்டிக்கிடக்கின்றன. அவை வேளாண்மைச் சமூகத்தின் எச்சங்கள். இயற்கையுடன் போராடும் மனநிலையால் உருவாக்கப்பட்டவை அவை. வயலில் பரவும் களைகளை காடு என்று சொல்லி நாம் பழகியிருக்கிறோம்.

‘காடு’ என்ற சொல்லே எதிர்மறைத் தொனியுடன் நம் மொழியில் பலசமயம் ஒலிக்கிறது. ‘கொடிய காடு’ ’கொடிய காட்டுமிருகங்கள்’ போன்ற சொல்லாட்சிகள் பாடப்புத்தகங்களிலேயே உள்ளன. ‘காட்டுயானைகள் அட்டகாசம்’ ’புலி கொலைவெறி’ என்றெல்லாம் நம்முடைய நாளிதழ்கள் செய்திகளை வெளியிடுகின்றன. குழந்தைகள் அந்த மொழிக்குள் வளர்கின்றன. பல நகர்க்குழந்தைகள் இயற்கையை அறிவதே இல்லை. அத்துடன் நம் அன்னையர் அழுக்காகாமல் வாழ்வதே மேலான வாழ்க்கை என்று சொல்லிச் சொல்லி மண்ணை தீண்டாமலேயே பிள்ளைகளை வாழச்செய்கிறார்கள்.

ஆகவே குழந்தைகளுக்கு இயற்கைமேல் மதிப்போ விருப்போ இல்லாமலாகிவிடுகிறது. பல குழந்தைகள் பூச்சிகளை மட்டுமல்ல செடிகளையும் மரங்களையும் கூட அருவருப்பதையே நான் கண்டிருக்கிறேன். மழையையும் வெயிலையும் விரும்பாதவர்களாக இருக்கும் குழந்தைகள் நம்மிடம் அதிகரித்து வருகிறார்கள். இந்த மனநிலை கொண்ட அடுத்த தலைமுறையினருக்கு காடுகள் நமக்கு முன்னோர் விட்டுச்சென்ற பெரும்செல்வம் என்ற எண்ணமே இல்லாமலாகிறது. இயற்கை என்ற பெருவெளியில் நாம் ஒரு துளி என்ற எண்ணமும் இயற்கையை பேணாத நுகர்வுவாழ்க்கை அழிவை உருவாக்கும் என்றும் அவர்கள் அறிவதில்லை. அந்த அறியாமயே அவர்கள் சூழலை அழிக்கவும் காலப்போக்கில் தங்களையே அழிக்கவும் காரணமாக ஆகிறது.

அறுபதுகளில்தான் மேலைநாடுகளில் சூழலைப்பற்றிய விழிப்புணர்ச்சி உருவானது. அதை அவர்களால் வெற்றிகரமாக தங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கவும் முடிந்தது. அந்த விழிப்புணர்ச்சி அவர்களின் சூழலை காப்பதில் மட்டுமல்ல நம்மைப்போன்ற பின் தங்கிய நாடுகளின் சூழலைக் காப்பதில்கூட அவர்களை ஈடுபடுத்தியது. ஆனால் எண்பதுகளில் இந்தியாவில் சூழியல் இயக்கங்கள் ஆரம்பித்தாலும்கூட அவை வெகுஜன இயக்கங்களாக ஆகவில்லை. ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு இயற்கைமீதான மதிப்பும் பிரியமும் அறிமுகம் செய்யப்படவில்லை. தொழில்நுட்ப வழிபாட்டையே அவர்களுக்கு நாம் அளித்தோம். எண்பதுகள் முதல் இன்று வரை தமிழில் வந்துள்ள சுயமுன்னேற்ற நூல்ளில் உள்ள ’ஜப்பானைப்பார்’ என்று அறைகூவலின் பொருள் அதுதான்.

கவி கேரளத்தின் சூழுலா [Eco-Tourism ] மையங்களில் ஒன்று. ஏற்கனவே பரம்பிக்குளம் சூழுலா மையத்துக்குச் சென்றிருந்தேன். இந்த சூழுலா கருதுகோள் கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. காடுகளை புகலிடங்களாக அறிவிக்கும்போது அந்தக் காடுகளுக்குள் உள்ள ஊர்களை காலிசெய்ய வேண்டியிருக்கிறது. அந்த மக்களை இடம்பெயரச்செய்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு ஊர்சார்ந்த வேலைகள் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் காடுகளை நன்கறிவார்கள்.

ஆகவே அவர்களை வேலைக்கமர்த்திக்கொண்டு இந்த சூழுலா மையங்களை அமைத்தார்கள். இது அவர்களுக்கு நிலையான நல்ல வருமானத்தை உருவாக்குகிறது. அவர்கள் காட்டில் வேளாண்மை செய்வதும் விறகு பொறுக்குவதும் வேட்டையாடுவதும் தடுக்கப்படுவதனால் காடழிவும் நிகழ்வதில்லை. காட்டை அவர்களைக்கொண்டு கண்காணிப்பது எளிது. இதற்காக பெரிய கட்டுமானங்களும் தேவையில்லை. ஏற்கனவே காட்டுக்குள் அணைகள் கட்டப்பட்டபோது அதிகாரிகள் தங்கவும் பொருட்களை பாதுகாக்கவும் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டிடங்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றை மராமத்துசெய்தாலே போதும். உண்மையான அக்கறை கொண்ட அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் கேரளத்தில் மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

கவி கேரளத்தில் உள்ள பெரியார் புலிகள் புகலிடத்தில் அமைந்திருக்கிறது. ரான்னி வனக்கோட்டம், பத்தனம்திட்டா மாவட்டம். நாங்கள் பேருந்தில் மதுரைக்கு சென்று இரவு பன்னிரண்டு மணி அளவில் இறங்கினோம். நண்பர் அ.முத்துகிருஷ்ணன் [உயிர்மை, தலித்முரசு இதழ்களில் கட்டுரைகள் எழுதுபவர். தீவிர இடதுசாரி. சமூகசேவகர்.] அங்கே விடுதி ஏற்பாடுசெய்திருந்தார். இரவில் முத்துகிருஷ்ணன் நண்பருடன் அறைக்கு வந்தார். அவர் சமீபத்தில்தான் இடதுசாரிதீவிரவாதம் கொண்ட ஒரிஸா பகுதிகளுக்கு ஒரு பயணம் முடிந்து வந்திருந்தார். அந்தப்பயணம் பற்றி பேசினார். பாலஸ்தீனிய மக்களுக்கான தார்மீக உதவிக்குழு ஒன்றுடன் இணைந்து பாக்கிஸ்தான் ஆப்கானீஸ்தான் வழியாக பாலஸ்தீன் வரை ஒரு பெரும் பயணம் செல்லவிருக்கிறார். பயணத்திட்டத்தைக் கேட்டபோது வயிறு எரிந்தது. ஒரு முழு வாழ்நாளனுபவமாக அது அமையும் அவருக்கு.

முத்துகிருஷ்ணன் ஏற்பாடுசெய்திருந்த வாடகைக்காரில் மறுநாள் காலை ஆறு மணிக்குக் கிளம்பினோம். தேனி, கம்பம், குமுளி வழியாக மேலேறினோம். வண்டிப்பெரியார் போவதற்கு மூன்றுகிலோமீட்டருக்கு முன்னதாகவே இடதுபக்கம் திரும்பினால் வள்ளக்கடவு என்ற ஊர். அங்கே வனக்காவலரிடம் முறைப்படி அனுமதிபெற்று காட்டுக்குள் புகுந்தோம். அங்கிருந்து இருபக்கமும் அடர்ந்த காடுவழியாக பதினெட்டு கிலோமீட்டர் சென்றால் சாலையோரமாக கவி வருகிறது.

காலை பத்துமணிக்கு காடு வெயிலில் பச்சைவெளியாக விரிந்து கிடந்தது. சீவிடுகளின் ரீங்காரத்தால் ஒன்றாக இணைக்கப்பட்ட பிரம்மாண்டமான மரங்களின் செடிகளின் கொடிகளின் பெரணிகளின் பறவைகளின் பூச்சிகளின் கூட்டம். பச்சை அடர்ந்த காட்டுக்கு நடுவே இளம்பச்சை வெயில் தேங்கிக்கிடக்கும் சிறிய புல்வெளிகள். ஈரம் வழிந்த கரும்பாறைகள் மேல் பச்சைப்புற்கள் படர்ந்தேறியிருந்தன. மலைவிளிம்புக்கு மேலே மேகங்கள் ஒளியுடன் பரவிய நீல வானம்.

காடு முதலில் உருவாக்கும் எண்ணம் தூய்மை என்ற ஒற்றைச் சொல்தான். அதையே சைதன்யாவும் சொன்னாள். அந்த சொல்லை பலவிதமாக நாம் விளக்கிக்கொண்டே செல்லமுடியும். நாமறியும் நகர, கிராம வாழ்க்கையை நம் ஆழ்மனம் தவிர்க்க முயன்றபடியே உள்ளது. சத்தம், புழுதி, சாக்கடை, கட்டிடங்களின் சாலைகளின் ஒழுங்கின்மை, வாகனங்களின் நெரிசல், மக்களின் பிதுங்கல். காடு சட்டென்று நம்மை அவற்றில் இருந்து விடுவிக்கிறது. ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும் ஓர் இடம் காடு. அதை நாம் உணரும்போதே அதைச் சுத்தம் என்று சொல்லிக்கொள்கிறோம். அசுத்தம் என்பது ஒரு நிலைபிறழ்வுதான்.

கவி ஒரு நீர்தேக்கம். காட்டில் ஓடிய இரு காட்டாறுகளை நான்கு மலைகளுக்கு நடுவே மூன்று தடுப்பணைகள் கட்டி பெரிய ஏரியாக தேக்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் அந்த நீரை பிரம்மாண்டமான குழாய்கள் வழியாக எண்ணூறடி கீழே சபரி நீர்மின்சார நிலையத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த ஏரிக்கரையில்தான் கவி சூழுலா மையம் உள்ளது. அங்கே முப்பது பேர் வரை தங்க முடியும். தினமும் கேரளத்து விடுதிகளில் இருந்து நூறுபேர் வரை வந்து திரும்புகிறார்கள். அறுபது ஊழியர்கள் இருக்கிறார்கள்.

கவி சூழுலாமையத்தை அமைப்பதில் பங்காற்றியவர் பிரமோத் கிருஷ்ணன். அவர் என் நண்பர் எம்.ஏ.சுசீலாவின் மருமகன். அவரது நண்பர் பஷீர் அங்கே அதிகாரியாக இருந்தார். அவர் எங்களை வரவேற்றார். பஷீர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர். திரிச்சூரைச் சேர்ந்தவர். சச்சிதானந்தன், கெ.ஜி சங்கரப்பிள்ளை உள்ளிட்ட பல இலக்கியவாதிகளிடம் அறிமுகம் கொண்டவர். சென்றமுறை நாங்கள் சென்று வந்தபின் என்னைப்பற்றி விசாரித்திருந்தார். அவ்வாறுதான் சுசீலா என்னிடம் அவரைப்பற்றிச் சொன்னார். என்னுடைய எல்லா மலையாள எழுத்துக்களையும் வாசித்திருந்தார்.

கவியில் 1968ல் சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் நுவரேலியாப் பகுதிகளில் இருந்து இந்தியவம்சாவளி தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அன்று வந்த தமிழர்கள் மலையில் வாழ்ந்தவர்களாதலால் அவர்கள் தென்னகத்தின் மூன்று மாநிலங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டு மலைகளில் குடியேற்றப்பட்டார்கள். தமிழ்நாட்டில் ஊட்டி, கூடலூர், கொடநாடு பகுதிகளில். கேரளத்தில் அன்றைய கோட்டயம் மாவட்டத்தின் காடுகளில். அவர்களுக்காக காட்டை அழித்து ஒரு பெரிய ஏலக்காய் தோட்டம் உருவாக்கப்பட்டது.

எழுபதுகளுக்குப் பின்னர்தான் காட்டை அழிக்ககூடாது, பேணவேண்டும் என்ற கருதுகோள்கள் உருவாகி வந்தன. அதுவரை காட்டை அரசே அழித்தது. காட்டை வெட்ட அரசே குத்தகைவிட்டது. காட்டுக்குள் காகித ஆலைக்கான மரங்களையும் யூகலிப்டஸ் மரங்களையும் நட்டது. லாபம் சம்பாதிப்பதே இலக்காக இருந்தது. ஆனால் எண்பதுகளுக்குப் பின்னர் காட்டுக்குள் வேளாண்மைவிரிவாக்கம் தடைசெய்யப்பட்டது.

ஆகவே வளர்ந்து வந்த குடியேற்றமக்களுக்கு தேவையான வேளாண் விரிவாக்கத்தை அங்கே உருவாக்க முடியவில்லை. அவர்களில் பலர் படித்து பல்வேறு வேலைகளுக்காக வெளியே சென்றார்கள். இந்நிலையில் அங்கே பெரியாறு புலிகள் புகலிடம் உருவானது. அதையொட்டி கவி சூழுலாமையம்.அங்கே வேலைபார்ப்பவர்கள் பெரும்பாலும் அனைவருமே இலங்கையில் இருந்து வந்த மக்கள். ஆனால் அவர்களுக்கு இலங்கை நினைவே இல்லை. அவர்கள் எழுபதுகளுக்குப் பின் பிறந்தவர்கள். தமிழும் மலையாளமும் பேசுபவர்கள்.

மதிய உணவுக்கு பின்னர் ஒரு சிறிய கானுலா சென்றோம். எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வழிகாட்டியின் பெயர் சண்முகராஜா. நாங்கள் கிளம்பியபோது நாகர்கோயிலில் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. மதுரையிலும் மழை. ஆகவே கவியில் பெருமழை இருக்குமென நினைத்து குடைகளுடன் வந்தோம். கவியில் மழைச்சட்டை கொடுப்பார்கள். கவியின் மண் வழுக்கக்கூடியது. ஆகவே நல்ல வெட்டுகள் கொண்ட செருப்பு தேவை. சப்பாத்துகள் போடலாம். ஆனால் அட்டை உள்ளே போனால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே நல்லது எளிதாக அவிழ்த்துப்பார்க்கக்கூடிய கனமில்லாத செருப்புகளே. அவற்றை வாங்கிவந்திருந்தோம்.

கவி அட்டைகளால் ஆனது. மழைக்காலம் அட்டைகளின் கொண்டாட்டக்காலம். எங்களுக்கு கால்களை மூடும் காக்கி காலுறைகள் கொடுத்தார்கள். கையில் உப்பு பொட்டலமும் வைத்திருந்தோம். சிறிய அட்டைகள் தொற்றி ஏறி துவண்டபோது உப்பைபோட்டோம். உப்பு அவற்றுன் உடல் நீரை உறிஞ்சுவதால் அமிலம் பட்டது போல துடித்து இறக்கும்.

ஆனால் கவியில் மழை இல்லை. முந்தையநாள்கூட பெய்திருந்தது. நாங்கள் சென்றபோது வானம் வெளுத்து நீல வெளியாகக் கிடந்தது. காட்டுக்குள் நிலம் ஆவியாகி இலைகள் வியர்த்து நீர் சொட்டிக்கொண்டே இருந்தது. எங்கும் மௌனத்துள் ஒரு மெல்லிய ரகசியமாக நீரின் துளியொலி. கவி காடு முழுக்க வேய் எனப்படும் மென்மூங்கில்காடுகள். புல்லாங்குழல் செய்வதற்கான மூங்கில் இது. இலைகள் அகலமானவை, அரம்போல கூரிய விளிம்புள்ளவை.

யானைகள் முதுகு உரசிய மரங்கள் வழவழப்பாக நின்றன. யானைகள் தோண்டிய மண் குவிந்து கிடந்தது. யானைப்பிண்டங்கள் நீரில் கரைந்தும் கரையாமலும் கிடந்தன. எங்கும் யானையின் இருப்பு இருந்தது. காட்டுக்குள் இருக்கும் யானையின் அருவுருவமே இந்தியக்காடுகளை உயிருள்ளதாக்குகிறது. நான் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் சென்ற காடுகளில் இருந்த வெறுமை அங்கே அபாயம் இல்லை என்பதுதான்.

அஜிதன் பறவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவன். நான்குவருடங்களாக அதிலேயே ஈடுபட்டிருப்பதனால் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளையும் அவற்றின் குரல்களையும் அவனால் அடையாளம் காணமுடியும். அவனிடமிருந்து சைதன்யாவும் கற்றுக்கொண்டு நூறு பறவைகளைவரை அடையாளம் காண்பாள். அவர்களுக்கு காடு ஒரு பெரிய கலைக்களஞ்சியம்போல. வாசித்து தீராத பக்கங்கள். ஆனால் எனக்கு அது ஒற்றைப்பேரனுபவம் மட்டுமே.

மாலைவெயில் பெருகிக்கிடந்த புல்மேட்டை அடைந்து மூச்சுவிட்டோம். அங்கே நின்றபோது அஸ்தமனத்தில் பச்சை மலைகள் நீலம் கொண்டு அணைந்து மறைவதை காணமுடிந்தது. மெல்ல கீழிருந்து மூடுமேகம் வந்து திரையிட்டு எல்லாவற்றையும் மறைத்தது. களைத்துப்போய் திரும்பி வந்தோம். கால்களில் ஒரு சில அட்டைகள் இருந்தன. பிள்ளைகளுக்கு ஏற்கனவே அட்டைகள் பழக்கம்தான். ஆரம்பத்தில் உருவாகும் மனச்சுளிப்பு விலகிய பின் அட்டைகளை நாம் அஞ்சவோ அருவருக்கவோ தேவையில்லை. விரல்களால் சுண்டிச் சுண்டி விட்டோம்.

டீ குடித்துவிட்டு ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் நூற்றெட்டு கடிகள் என்ற விளையாட்டை ஆரம்பித்தேன். பைத்தியம் புடிக்கும்போல இருக்கு என்றால் பைத்தியத்தை யாருக்காவது புடிக்குமா என்பது போல. ஒவ்வொரு கடிக்கும் ஒரு குத்து எனக்கு அளிப்பது சைதன்யாவின் கணக்கு. எண்பத்தேழு வரை சென்றபோது பஷீர் வந்து ஒரு மலையுலாவுக்கு அழைத்தார்

பஷீரின் ஜீப்பில் காட்டுக்குள் சென்றோம். சிறிய வனப்பாதை. இருட்டி விட்டிருந்தது. இருபக்கமும் காடு இருட்டுக்குள் நிறைந்து கிடந்தது. இரு இடங்களில் மரங்கள் சரிந்திருந்ததை வழிகாட்டிகள் வெட்டி அகற்றினர். ஒரு சிறிய தடுப்பணை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தோம். வரும்வழியில் நடுச்சாலையில் ஒரு மிளா [சாம்பார் டீர்] நின்றிருந்தது. ஒளிக்கு கண்கூட உடல்சிலிர்த்து அசையாமல் நின்றது. சிலகணங்கள் கழித்து விளக்கை அணைத்ததும் பாய்ந்தோடி மறைந்தது. நாங்கள் கண்ட முதல் காட்டுமிருகம்

[மேலும்]

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகவி சூழுலா 2