சிறுகதைகள் கடிதங்கள் 18

photo

அன்புள்ள ஜெ,

என்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஒரு அறிவியல் கதை என்பது ஒரு அறிவியல் கருத்தை அடிப்படையாகக் தான் அமைகிறது. Space Travel, Time Travel போன்ற அறிவியல் கருத்துக்கள் கொண்ட கதைகளில் மிகைக்கற்பனை சாத்தியமாகிறது. அக்கதைகளில் மிகைக்கற்பனை எளிதாக பொருந்தி வருகிறது.

ஆனால் Chaos Theoryபோன்ற அறிவியல் கோட்பாட்டைக் கொண்ட கதைகளில் மிகைக் கற்பனை சாத்தியமில்லாத ஒன்று.

நான் பிந்தைய அஞ்சலில் குறிப்பிட்டிருந்த என் கதைகளான கடவுள் யார், காலத்தை வென்றவன், தெய்வமகன், எந்திரநகரம் போன்ற கதைகளில் மிகைக் கற்பனை உள்ளன. ஏன் என்றால் எடுத்துக் கொண்ட அறிவியல் கருவுக்கு அது இயல்பாக பொருந்தி வருவதனால் தான்.

சதீஷ்குமார்

***

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தளத்தில் நிகழ்ந்த விரிவான சிறுகதை உரையாடல் எக்கச்சக்கமான திறப்புக்களைத் தந்தது. மிகக் கூர்மையாகச் சமகாலத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் தொடர்பான விவாதமாக இதைப் பார்க்கிறேன். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

  1. பொதுத்தளத்தில் வாசகர்களை உரையாட வைத்து, அவர்களின் தரப்புக்களை வெளிக்கொணர்ந்தமை.
  2. சமகாலத்தில் எழுதுபவர்களின் / எழுத ஆரம்பிப்பவர்களின் கதைகளை மூத்த எழுத்தாளர் ஒருவர் வாசித்துத் தன் தரப்பை நுண்மையாகச் சொல்வது.

இந்த இரண்டு காரணங்களுக்காக இவ்விவாதம் மிகமுக்கியமானது. இவ்வுரையாடல் பல்பரிமாண வாசிப்பையும், ஒவ்வொருவரின் வாசிப்பு அனுபவ தரப்பையும் கச்சிதமாக சுதந்திரமாகப் பேசவிட்டிருக்கின்றது. இவ்வுரையாடலில் பலருக்குப் பல்வகையான மாற்று அபிப்பிராயங்கள், பார்வைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இவற்றை நிராகரிக்க முடியாது.

ஒரு சுவிங்கத்தை இழுத்து இழுத்து விரிவாக்குவது போல் ஒவ்வொரு கதைகளையும் அதன் தருணங்களையும் விரிவாக்கி அலசி தங்கள் தரப்பைச் சொன்ன அனைவரும் அன்புக்குரியவர்களாக ஆயிருக்கிறார்கள். சமகாலத்தில் தீவிரமாக எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் காலப் பகுதியிலும் புதிய வாசகர்கள்/ புதிய படைப்பாளிகளுக்குப் பிரயோசனப்படும் வகையில் பரந்துபட்ட விவாதமாக இதைச் செய்திருக்கின்றீர்கள். மெத்தப் பெரிய நன்றி.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

கதைகள் மீதான விவாதம் மிக முக்கியமானது. பலவிஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறீர்கள். அதில் முக்கியமானது புதியவடிவங்கள் இல்லையே என்ற உங்கள் கூற்று. வடிவம் புதியது என்பதனால் கதைகள் சிறப்பு கொள்வது இல்லை. ஆனால் வடிவம் வாசகனுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்து கதைக்குள் தீவிரமாக உள்ளே நுழையும்படிச் செய்கிறது

மகேஷ்

***

அன்பு ஜெ

சிறுகதைகளில் அனோஜனின் சிறுகதை நன்றாக இருந்தது என நினைக்கிறேன். அதில் இருந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு முக்கியமான ஒரு விஷயம். இதுவரை கதைகளை உணர்ச்சியே இல்லாமல் ரிப்போர்ட்டிங் ஆக இருப்பதே நல்லது என நினைத்திருந்தவர்கள் இக்கதையிலிருந்து மாறுதல் நிகழ்வதை உணரமுடியும்

போஸ்

***

அன்புள்ள ஜெ,

சிறுகதைகளில் கலைச்செல்வி, தருணாதித்தன் இருவரின் கதைகளும் நன்றாக இருந்தன. நாம் அறியாத ஒரு வாழ்க்கையைச் சொல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. அனோஜன் கதையில் உரையாடல் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம்.

பொதுவாக கதை என்பது ஒரு மாறுபட்ட சூழலைச் சொல்லக்கூடியதாக இருந்தால்மட்டுமே நமக்கு வாழ்க்கையின் ஒரு மாறுபட்ட பக்கத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது என நினைக்கிறேன்

எஸ்.சமத்துவம்

***

ஜெ

சிறுகதைகளில் வணிக எழுத்தின் நடை இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். காளிப்பிரசாத் கதையில் அப்படி இல்லை. அது அசோகமித்திரன் பாணிகதை என்றே தோன்றியது

அவர் அருகே இருக்கும் பையில் இன்னும் நிறைய கதைகள் இருக்கலாம். நீங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்

ராம்நாத்

முந்தைய கட்டுரைசுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி
அடுத்த கட்டுரைவழிப்போக்கர்கள்