[ 18 ]
அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன் கைவிரித்து “எப்படி இவர்கள் இவ்வண்ணம் ஆனார்கள்! அசுரர்களும் இக்கீழ்நிலையை அடைவதில்லையே?” என்றான்.
“அரசர் வழியையே குடிகளும் கொள்கின்றன” என்றாள் இந்திராணி. “நீங்கள் முடிசூடிய நாள்முதலே இதைத்தான் நான் சொல்லிவருகிறேன்.” விருத்திரன் “இவர்கள் தேவர்கள் அல்லவா?” என்றான். “ஆம், அசுரர்களில் தேவர்கள் ஒளிந்திருப்பதில்லையா என்ன?” என்று அவள் சொன்னாள்.
விருத்திரன் பெருமூச்சுவிட்டான். “அரசே, அசுரர்கள் என்றும் கள்ளிலும் காமத்திலும் திளைப்பவர்கள். தேவர்கள் அவற்றை கடந்து அமைந்தவர்கள். கடக்கப்பட்டவை அனைத்தும் எங்கோ கரந்துறைகின்றன. கரந்துறைபவற்றின் ஆற்றல் நிகரற்றது. ஏழு ஆழுலகங்களின் அனைத்து தெய்வங்களும் அவற்றில் வந்து குடியேறுகின்றன. இங்குள்ள தேவர்கள் இன்று உள்ளங்களில் சூடியிருப்பவை இருள்உலகத்து தெய்வ வல்லமைகளே” என்றாள் இந்திராணி.
“பாருங்கள், தேவர்கள் நிழலற்றவர்கள். இங்கோ ஒவ்வொரு தேவர்க்கும் மூன்று நிழல்கள் விழுந்துள்ளன. இதோ, மலர்சூடி இளித்தபடி செல்பவனை நான்கு கைகளுடன் நிழலெனத் தொடர்வது காளன் என்னும் காமத்தின் தெய்வம். அங்கே சினம்கொண்டு வெறித்துக் கனைப்பது கராளன் என்னும் குரோதத்தின் தெய்வம். நூறு கைகளுடன் எழுந்த நிழல்சூடி நின்றிருக்கும் அவனை நோக்குக! அவனில் கூடியிருப்பது கிராதம் என்னும் மோகத்தின் முதன்மைத்தெய்வம். கோடிகோடியெனப் பெருகி இந்நகரை அவர்கள் சூழ்ந்துள்ளார்கள்.”
“முன்னகர திசையின்றி நின்றுவிட்ட தேர் இந்நகர். கடையாணி துருவேறிவிட்டது. சக்கரம் மண்ணில் புதைந்துவிட்டது” என்றாள் இந்திராணி. “இதன் அழிவு உங்களால்தான். அரசு என்பது அரசனின் விராடவடிவம் கொண்ட உடலே. உங்கள் நோயனைத்தையும் உங்கள் விழிகளால் நீங்கள் பார்க்கும் வாய்ப்பு ஒரு நகருலாவில் அமைகிறது. அரசே, இது இங்கு நுழைந்தபின் நீங்கள் செல்லும் முதல் நகருலா.”
விருத்திரன் அவற்றை நோக்க அஞ்சி விழிமூடிக்கொண்டான். களைத்து கால்தளர்ந்து இந்திராணியின் அணைப்பில் மயங்கியவன்போல நடந்தான். அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.
“ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.
நீள்மூச்சுடன் இந்திராணி சொன்னாள் “ஒன்றும் செய்வதற்கில்லை, படைத்தலைவரே. ஊழ் இதுவென்றால் தலைவணங்கி காத்திருப்பதே நம் கடன்.” அவள் செல்வதை கௌமாரன் நோக்கிநின்றான். அவள் உடலசைவுகள் அனைத்திலும் துயரும் சினமும் நிறைந்திருந்தன. அவள் செல்லும்போது எதிர்த்திசையில் அவள் நிழலொன்று வருவதுபோல் தோன்றியது. அவன் விழியிமைத்து அம்மயக்கை அகற்றினான்.
அங்கிருந்து ஆவதொன்றுமில்லை. அவன் தானும் செல்லவே நினைத்தான். ஆனால் கால்கள் அசையவில்லை. விருத்திரனையே நோக்கிக்கொண்டிருந்தான். இளமையில் அவன் நோக்கி வியந்த உடல். அவன் கனவுகண்ட முகம். துயர்மிக்க இறப்பென்பது இது, வழிகாட்டியின் வீழ்ச்சி.
விருத்திரன் உடலில் அத்தனை தசைகளும் மெல்ல மெல்ல முறுக்கவிழ்வதை காணமுடிந்தது. முற்றணைந்து தாடை தளர்ந்து வாய் விரிய, கைவிரல்கள் ஒன்றொன்றாக நரம்பு தளர்ந்த யாழின் புரிகளென விடுபட, விழிகள் நனைந்த குருவியிறகுகள்போல் சரிந்து ஒட்டிக்கொள்ள துயில் அவன் உடலில் கால்கட்டை விரலில் இருந்து எழுந்து எங்கும் பரவி நெற்றிப்பொட்டை நிறைத்தது.
அவன்மேல் எழுந்த நித்ராதேவி உரத்த குரலில் தன் மொழியில் பேசலானாள். திகைப்புடனும் துயருடனும் அதை நோக்கிநின்றான் கௌமாரன். அச்சொல் மெல்ல திருந்தியது. “அகல்க. அகல்க.” கௌமாரன் அக்குரலை கூர்ந்து கேட்டான். செவிமயலா அது? “அமைக அமைக அமைக” அது அவள் குரலேதான். அவனும் அதை கேட்டிருக்கிறான்.
“அன்னையே, இவருக்கு கடமைகள் உள்ளன” என்றான். வெண்ணிற ஆடையணிந்து வலக்கையில் சாமரமும் இடக்கையில் அமுதமுமாக அவள் அவன் முன் தோன்றினாள். அவன் கைகூப்பி வணங்கி நின்றான். “அவர் இங்கிருந்து செல்ல விரும்புகிறார்.” நித்ராதேவி அவனிடம் சொன்னாள் “நான் நாடிவரவேண்டும் என்பதே நெறி. என்னை நாடுபவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இங்குள்ள அனைத்தையும் விட்டுவிட்டவர்கள். அவர்களை உடலும் உறவும் சுற்றமும் பற்றிக்கொள்ளலாம். அவர்கள் நெடுநாள் முன்னரே நழுவத் தொடங்கிவிட்டவர்கள். அவர்கள் மீளமுடியாது. அடித்தளத்தின் ஆழத்தில் விரிசல் விழுந்துவிட்டது.”
“தேவி, இவர் எங்கள் குலத்தின் முதல்வர். இவரில்லையேல் நாங்கள் முற்றழிவோம்” என்று கௌமாரன் சொன்னான். “மைந்தா, மாமனிதருக்குள் வாழ்வது எளிதில் சலிப்பு கொள்கிறது. உங்களுள் விசைகொண்டு மேலெழுந்தவன் இவனே. தன் முழுமையைத் திரட்டி இங்கு வந்தடைந்தான். இனி அவன் கொள்ள ஒன்றுமில்லை என அவனுள் வாழ்வது அறிந்துவிட்டது. இந்திரனையோ வருணனையோ எஞ்சும் கயிலையையோ வைகுண்டத்தையோ வென்றாலும் அது அடைவது ஒன்றில்லை.”
கௌமாரன் “தேவி, என் குலங்கள் இங்கே இன்னும் வேர்நிலைக்கவில்லை. இன்றுதான் நாங்கள் முளைகொண்டு எழுகிறோம்” என்றான். “ஆம், ஆனால் அது உங்கள் வாழ்க்கை” என்றாள் தேவி. “மாமனிதர்கள் எக்குலத்திற்கும் உரியவர்கள் அல்ல. குடிவிட்டெழுகிறார்கள். குலம்விட்டு எழுகிறார்கள். மானுடம்விட்டு உயர்கிறார்கள். பின்னர் தங்களையே கடந்துசெல்கிறார்கள். உதிர்த்து உதிர்த்து அவர்கள் அடைந்தவையே அனைத்தும்.” துயில்பவன் தலையை வருடி நித்ராதேவி சொன்னாள் “இனி அவர் உதிர்க்க விழைவது விருத்திரன் என்னும் வடிவை.”
செய்வதறியாது சுற்றிலும் விழியோட்டிய கௌமாரன் சினத்துடன் மதுக்கோப்பையை நோக்கி “அந்நஞ்சு அவரை கொல்கிறது” என்றான். நித்ராதேவி “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்றாள். “எவருக்காயினும் மது என் புரவி. என்னைத் தொடர்ந்து வருகிறார்கள் என் மூத்தவளாகிய வியாதியும் எங்கள் மூதன்னையாகிய மிருத்யூவும்.”
கௌமாரன் நெஞ்சுபொறாது மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான். நித்ராதேவி அனல்பட்டவள்போல் செந்நிறம்கொள்வதை கண்டான். அவள் சாமரம் சவுக்காகியது. அமுதகலம் அனல்குடுவையாகியது. “துயர்! துயர்! துயர்!” என்றாள் வியாதிதேவி. சுண்டும் தைலமென மெல்ல கருகி நீலநிறம் கொண்டாள். மிருத்யூதேவி செந்நிற உதடுகளும் நீண்டுபறக்கும் செந்தழல்குழலும் கொண்டிருந்தாள். வலக்கையில் மின்படையும் இடக்கையில் துலாக்கோலும் கொண்டிருந்தாள். “இனிது! இனிது! இனிது!” என்று அவள் சொன்னாள்.
கௌமாரன் பதைப்புடனும் துயருடனும் அங்கிருந்து மீண்டான். அமராவதியிலிருந்து இறங்கிச்சென்று முகில்கணம் மேல் நின்று கீழே நோக்கினான். கோலால் அடிபட்ட நாகங்கள்போல சீறி நுரைநாக்குகள் சிதற படம்எடுத்து ஓங்கி அறைந்து நகரை கொத்தி மீண்டன அலைகள். அவன் நோக்கியிருக்கவே இறுதிக் கோட்டை கரைந்து சரிந்தது. நெஞ்சு அறைய கண்ணீருடன் அவன் விழி அசைக்காது நின்றான். இறுதி அலை ஒன்று எழுந்து எஞ்சிய புற்றுக் கோட்டையை மூடி நாற்புறமும் வெண்மலரென விரிந்து அகன்றது. நடுவே ஒரு சிறுகுமிழியென கோட்டையின் மண்குவை தெரிந்தது. பின்னர் நீல அலைகள் மட்டுமே அங்கு எஞ்சின.
நீள்மூச்சுடன் கௌமாரன் எண்ணிக்கொண்டான், சென்று மறைந்த பெருநகரங்களின் நிரையில் பிறிதொன்று. இனி சொல்லில் மட்டுமே அது வாழும். சொல், அதனால் பொருள் என்ன? என்றோ ஒருநாள் அது வாழ்வென்று ஆகும் என்னும் நம்பிக்கையைத் தவிர? அவன் விரிந்துகிடந்த மண்ணை நோக்கி ஏங்கினான். மூதாதையரே, தெய்வவடிவங்களே, இனி என்று வந்தணையும் இச்சொல்லில் எழும் உலகு? சொல் ஒன்றே மிச்சமென்றால் இவ்வாழ்வை எதற்கு எங்களுக்கு காட்டினீர்கள்?
நெஞ்சுருகி அழுதான். நெடுநேரம் கழித்து மீண்டு நீல அலைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது சொல்லேனும் எஞ்சியிருக்கிறதே என்று எண்ணினான். அப்போது உருவான நிறைவை எண்ணி அவனே வியந்தான். “எஞ்சுக எஞ்சுக எஞ்சுக” எனும் சொல்லாக அவன் உள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.
[ 19 ]
பிரம்மகபாலம் என்னும் ஊரின் மலைக்குகையில் அணைந்து கொண்டிருந்த அனலுக்கு இப்பால் இருந்த பிரசண்டன் அப்பால் உடல் சரித்து கைகளை தலைக்கு வைத்து மேற்கூரையைப் பார்த்து படுத்திருந்த பிரசாந்தரிடம் சொன்னான் “விருத்திரகுடியின் மூத்த பூசகர் கபாலர் என்னிடம் சொன்னது இது. இதை பின்னர் நூறுமுறை அசுரர்களும் நாகர்களும் நிஷாதர்களும் சொல்லி கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு வடிவம் கொண்டு என்னுள் நின்றிருக்கும் ஒற்றைக் கதை இது.”
“கதை என்பது சிதல்புற்றென மூத்த அசுரர் என்னிடம் சொன்னார். பல்லாயிரம் கோடி சிதல்களால் சொல் சொல் என இயற்றி கோத்துருவாக்கப்பட்டு எழும் பெருமலை அது” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் புன்னகையுடன் “ஆம், ஆனால் நிலைமாறா ஆழத்திலிருந்து எழுந்துவரும் அலைகள் என்றும் அதை சொல்லலாம்” என்றார். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றான் பிரசண்டன்.
“புற்றுகளிலிருந்து எறும்புநிரைகள் ஊறிப் பெருகுவதுபோல மலைகளின் ஆழங்களிலிருந்து அசுரகுடிகள் எழுந்து நிலம் நோக்கி விரிந்த காலம் அது என்று என்னிடம் கபாலர் சொன்னார். ஊன் வேட்டும், தேன் எடுத்தும், மலைப்பொருள் சேர்த்தும் காடுகளுக்குள் வாழ்ந்த குலங்கள் அவை. முன்பு எப்போதோ நிலம் திருத்தி மண் விளைவித்த நினைவு அவர்களின் மொழியில் இருந்தது. மேற்கே கடலோரமாக தங்களுக்கென ஒரு நகர் அமைந்ததை அறிந்ததும் அவர்கள் தங்களிடம் நாடி வந்த அச்சொல் வழியாகவே வழியறிந்து கிளம்பிச் செல்லலாயினர்.”
புற்றிகபுரியில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரவர் தங்கள் குழந்தைகளுடனும் முதியோருடனும் படைக்கருவிகளுடனும் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு உணவும் இல்லமும் அளிக்க அசுரப்படைகள் பன்னிரு பிரிவுகளாகப் பிரிந்து இரவும் பகலும் பணியாற்றின. விருத்திரேந்திரனின் ஆணையின்படி அவை கூடி புற்றுக்குலத்தின் பதினெட்டு தலைவர்களிடம் மூன்று கிளையென பிரிந்து பரவிய அணைநீரை திருப்பி சூழ்ந்திருந்த வறுநிலத்தில் பரப்பும்படி ஆணையிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நீர்ப்பெருக்கும் நூறு கால்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு காலும் புற்று என எழுந்த சுவரால் தடுக்கப்பட்டு சுனையாக்கப்பட்டது.
சுனைநீர் சிற்றோடைகளில் பெருகி செந்நிலத்தை குளிர்வித்தது. அங்கு பொன் என அன்னம் பெருகலாயிற்று. ஒன்று நூறு ஆயிரம் என நீர்ப்பெருக்குக்கு குறுக்காக புற்றுச் சுவர்கள் பெருக பன்னிரண்டாயிரம் சுனைகள் அங்கெழுந்தன. விண்ணில் எழுந்துசென்ற கந்தர்வர்கள் மூன்று கொடிகளில் மூவாயிரம் கிளைகள் எழுந்து முப்பதாயிரம் தளிர்நுனிகளில் பன்னிரண்டாயிரம் நீலக்கனிகள் விளைந்திருப்பதைக் கண்டனர். தேன்தட்டென ஆயிற்று அந்நிலம். தேனீக்களென வந்து சுனைகளில் நீரள்ளிச் சென்றன அத்திரிகள் இழுத்த கரியநிற வண்டிகள்.
நீர்வெளிமேல் சிறகுவிரித்த பெருங்கலங்களில் வந்த வாருணீகர்களான வணிகர்கள் தங்களுக்கு நீர் கொண்டுவந்த நதிகள் நின்றுவிட்டதைக் கண்டனர். கடலாழத்திலிருந்து எழுந்து நதிமுகப்புக்கு உணவு தேடி வந்த படகுபோன்ற மீன்கள் துயரத்துடன் திரும்பிச் சென்றன. மீன்கன்னியரும் நீர்நாகங்களும் புதுமழைநீர் இல்லாமல் வருந்தினர். இருண்ட ஆழத்தில் விழியொளி மட்டுமே கொண்டு அமர்ந்திருந்த முதற்தாதையிடம் சென்று குமிழிகளென வெடித்த சொற்களால் அவை முறையிட்டன. ஒவ்வொருநாளும் ஒரு முறையீடு வருணனை வந்தடைந்துகொண்டிருந்தது.
கடலுக்குள் அமைந்த வருணனின் உள்ளங்கையாகிய ஜலஹஸ்தம் என்னும் தீவில் பன்னிரண்டாயிரம் நாவாய்கள் ஒருங்கு கூடின. நதிகள் நின்றுவிட்டால் தங்கள் குலம் அழியும் என்றும், குலம் காக்க மூதாதையாகிய வருணன் எழவேண்டும் என்றும் கோரின. முதற்றாதையாகிய வருணனை அன்னமும் பலியுமிட்டு பூசை செய்தன. ஆழத்து நீருள் அனல் வெடித்தெழுந்ததுபோல பேரலைகளென வருணன் படைகள் வந்து புற்றிகபுரியை தாக்கின. முட்டைகளை உண்ணும் பசிகொண்ட நாகங்களென புற்றுகளை விழுங்கி அழித்தன.
நீர் உண்டு பெருத்து விதை வாங்கிச் செழித்து பொன் உமிழ்ந்த வயல்கள் அனைத்தும் உப்பு நீரால் மூடின. புற்றிகபுரியும் அதைச் சூழ்ந்த வயல் பெருவெளிகளும் கடல் கொண்டன. கதறி அழுதபடி தங்கள் குலங்களை திரட்டிக்கொண்டு மீண்டும் வடக்கு நோக்கி ஓடி காடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர் அசுரகுடிகள். தடையுடைத்துப் பெருகி கடல் கண்டன மூன்று பெருநதிகளும்.
குளவிக்கூட்டுக்குள் குளவிக்குஞ்சுகள் மட்டுமே உகந்து அமையமுடியும். அன்னையின் நெஞ்சு அவற்றுக்கு இன்னுணவு. அங்கு செல்லும் பிற உயிர்கள் அக்கணமே உயிர் கரையத்தொடங்கிவிடுகின்றன. அமராவதிக்குள் நுழைந்ததுமே விருத்திரன் உயிரழியலானான். அங்கிருந்த அனைத்தும் அழகும் இனிமையும் கொண்டிருந்தன. அழகும் இனிமையும் மயக்கம் அளிப்பவை. மயக்கென்பது உயிர் தன் விழிப்பை மறந்து தேங்குவது.
விண்ணுலகில் காலமில்லை. காலமில்லாத இடத்தில் கணங்கள் மட்டுமே உள்ளன. முன்னும் பின்னும் எழும் இரு பெருங்காலங்களால் மட்டுமே கணங்கள் பொருளேற்றம் செய்யப்படுகின்றன. பொருளற்ற காலத்தில் எஞ்சுவது துய்த்தல் மட்டுமே. துய்த்தல் என்பது தன்னை ஒப்புக்கொடுத்தல். ஒப்புக்கொடுத்தல் என்பது இழத்தல். இழத்தல் என்பது துளித்துளியாக அழிதலன்றி வேறல்ல.
விண்ணுலக மதுவிலும் மாதரிலும் மூழ்கிக் கிடந்தான் விருத்திரன். மது எழுப்பிய மெய்யிலி உலகங்களில் உவந்தலைந்தான். காமமோ துய்க்கும்தோறும் பெருகுவது. இன்பங்களெல்லாம் அடையும்தோறும் விடாய்கொள்ள வைப்பவை. இன்பத்திலாடியவன் வென்றவை என ஏதுமில்லை, உள்ளும் புறமும். துயரென்பது தன் எல்லையை கடத்தல். கடத்தலே வெல்லல். துயரிலாடி மீள்பவன் தன்னை கடந்திருப்பான். சூதரே, துயரினூடாகவே மானுடர் வளர்கிறார்கள்.
ஒவ்வொருநாளும் விழித்தெழுந்து எங்கிருக்கிறேன் என்று உணர்கையில் கொல்லும் பழி உணர்ச்சி எழ தன் தலையில் அறைந்துகொண்டு விருத்திரன் அழுதான். ஒரு தருணம் கரைந்தழிந்த தன் நகரங்களை எண்ணி சினந்து உடல் கொதித்தான். அத்துயரும் சினமும் தாளமுடியாமல் மீண்டும் மது அருந்தினான். மதுவிலமைந்து துயின்று எழுகையில் மதுக்கோப்பைகளை அள்ளி வீசி உடைத்தான். “என்னைக் கொல்ல வந்துள்ளது. இது என்னை அழைத்துச்செல்லவே வந்துள்ளது” என்றான்.
“ஒருகணம்தான். உங்களுக்குள் வாழும் மதுவிழைவை பிறிதொரு தலையை எனக் கிள்ளி விலக்குக! விடுபடுக!” என்றாள் இந்திராணி. “ஆம், அதுவே” என்றான். ஆனால் மீண்டும் மது அவனை வந்து சூழ்ந்துகொண்டது. “என்ன செய்கிறீர்கள்?” என்று இந்திராணி சினந்து விழிநீர் உகுத்தாள். “தன்னைத்தானே அழிக்கும் சுவை ஆண்களுக்கு தெரியும், பெண்கள் அதை உணரமுடியாது” என்றான் விருத்திரன். கசப்புடன் நகைத்து “அன்னையென்றில்லாது நீங்கள் இருப்பதில்லை. சூதுக்களத்திலல்லாது நாங்களும் வாழ்வதில்லை” என்றான்.
மறத்தல் ஒன்றே வழியென்று அவனிடம் சொன்னது மது. அடைதலும் மயங்குதலும் ஒன்றே என்று அது காட்டியது. மதுவிலிருந்து விழிக்கும்போது வரும் வெறுமையை வெல்ல மேலும் மதுவே ஒரே வழி என்று அவன் கண்டான். மதுவென வந்து அவனில் நிறையும் தெய்வங்கள் அவனிலிருந்து உந்தி வெளியே தள்ளிய இருள் அனைத்தும் மது ஓய்ந்ததும் மீண்டும் வந்து அவனை சூழ்ந்துகொண்டன. விழிப்பிற்கும் மயக்கிற்கும் இடையே ஓயா ஊசலென நாட்கள் சென்றமைந்தன.
அப்போது ஒருநாள் நெடுந்தொலைவிலென மெல்லிய அதிர்வொன்றை அவன் கேட்டான். அருகிருந்த ரம்பையிடம் “அது என்ன ஓசை?” என்றான். “இது அந்தி. முல்லை மொட்டுகள் மொக்கவிழ்கின்ற ஓசை போலும்” என்று அவள் சொன்னாள். மறுநாள் மீண்டும் அவ்வோசையை அவன் கேட்டான். அது மேலும் வலுத்திருந்தது. “இம்மலர்வனத்தில் இளமான்கள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி போலும் அது” என்றாள் மேனகை. பின்னொருநாள் அவ்வொலியைக் கேட்டபோது “களிறுகள் தங்கள் கூடுகளை முட்டுகின்றன” என்றாள் திலோத்தமை.
அன்றிரவு கனவில் தொலைவானின் சரிவில் மெல்லிய வெண்கீற்றொன்றை அவன் கண்டான். விழித்தெழுந்து அது என்னவென்று நிமித்திகரிடம் கேட்டான். “அரசே, அது ஒரு வெண்ணிறகு. விண்கடந்து சென்ற பறவை ஒன்று உதிர்த்தது” என்றான் நிமித்திகன். “என்ன சொல்கிறது அப்பறவை?” என்றான் விருத்திரன். “அலைகள் என்றுமுள்ளவை என்று” என்றான் நிமித்திகன்.
ஒவ்வொரு நாளும் அவ்வொலி வலுத்துவருவதை கேட்டான். தொலைவில் களிறுகளின் காலடிபோல அது ஒலிக்கத் தொடங்கியபோது “அது அணுகி வருகிறது. நான் அறிவேன்” என்று அவன் இந்திராணியிடம் சொன்னான். “உண்மையில் என் முதிராஇளமையிலிருந்தே அதை கேட்டுவருகிறேன். என்று என் எழுச்சியின் முரசை கேட்டேனோ அன்றே அதுவும் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.”
மறுநாள் அவன் அறிந்தான், அது அணுகிவரும் போர்முரசின் ஒலியென்று. “போர்முரசு” என்று அவன் தன் அமைச்சரிடம் சொன்னான். “ஆம், அரசே. கிழக்கிலிருந்து இந்திரன் படைகொண்டு வருகிறான்” என்றார் அமைச்சர். “இந்திரனா? அவனிடம் ஏது படைகள்?” என்றான் விருத்திரன். “வருணனின் அசுரப்படை அவனிடம் உள்ளது” என்று அமைச்சர் சொன்னார். “எழுக நம் படைகள்! இப்போதே களம் புகுகிறேன்” என்றான். “ஆம், இதோ படை எழ ஆணையிடுகிறேன்” என்று அமைச்சர் சொன்னார். திரும்பி வெளியே ஓடினார்.
போர்முரசுகள் ஒலிக்கலாயின. அமராவதி நகரெங்கும் பெண்களுடன் மஞ்சங்களில் மதுக்களிப்பில் மயங்கிக்கிடந்த தேவர்கள் அரைவிழிப்பில் கையூன்றி எழுந்து “அது என்ன ஓசை?” என்று கேட்டனர். “போர்முரசு” என்றனர் மகளிர். “அது ஏன் இங்கு ஒலிக்க வேண்டும்? இந்நகருக்கு எதிரிகளே இல்லையே?” என்றனர். “எதிரியே அரசனான பிறகு எதிரியென யார் இருக்க முடியும்?” என்று ஒரு தேவன் நகைத்தான். “ஆம், எதிரிக்கு குடிகளாகி அமைவதைவிட இனிய வெற்றி பிறிதொன்றில்லை” என்றான் இன்னொருவன்.
மகளிர் அவர்களை எழுப்பி உந்தி கிளப்பினர். “போர் அல்ல என எண்ணுகிறேன். இது களிப்போராகவே இருக்கவேண்டும்” என்றான் ஒருவன். “ஆம், பயிற்சிப்போர். அல்லது போர்முரசின்மேல் ஏதேனும் விழுந்திருக்கும்.” அவர்கள் படைக்கலங்களுடன் தள்ளாடியபடி தெருக்களுக்கு வந்தனர். கவசங்களை சீராக அணியாமையால் கழன்று விழுந்தன. சிலர் காலணிகளை அணிந்திருக்கவில்லை. “எப்போது முடியும் இந்தப் போர்? இருட்டிவிடுமா?” என்று ஒருவன் கேட்டான். “விரைவிலேயே முடியும். அந்தியானால் அரசர் மதுவின்றி அமையமாட்டார்” என்று ஒருவன் நகைத்தான்.
போர்முரசின் ஒலி கேட்டு கவசங்களை அணிந்துகொண்டு அமர்ந்த விருத்திரன் மது கொண்டுவர ஆணையிட்டான். மேலும் மேலும் என அருந்தி கவசங்களுடன் படுத்துத் துயின்றான். அவன் வீரர்களும் படைக்கலங்களுடன் தெருக்களில் துயின்று சரிந்தனர். சிலர் சிரித்தபடியே “இத்தனை விரைவாகவா போர் முடிந்துவிட்டது?” என்றனர். “மது இருந்தால் போரே வேண்டியதில்லை” என்றான் ஒருவன்.
மறுநாள் விழித்தெழுகையில் உடலில் கவசங்கள் இருக்கக் கண்டு நடந்ததை உணர்ந்து பாய்ந்து சென்று விரைந்து அமைச்சரை அழைத்து என்ன நிகழ்ந்தது என்றான் விருத்திரன். “அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார் அமைச்சர். “இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை” என்று கூவினார். “ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான். “நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக!”