’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43

[ 14 ]

சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே. எண்ணுக, புவி கொண்ட முதல் வல்லமைகள் எவை? காற்று, அனல், நீர்.” இந்திரன் சற்றே துடிப்புடன் முன்வந்து “அனலவன் எத்தரப்பும் எடுக்கமாட்டான். காற்று நம்மை துணைக்கலாகும்” என்றான். “ஆம், ஆனால் அது முடிவற்றதல்ல. குன்றாததும் அல்ல” என்றார் நாரதர்.

“அவ்வண்ணமெனில், நீர்?” என்றான் இந்திரன். “நீரின் நான்கு வடிவங்கள் புவியில் உள்ளன. மழை, ஊற்று, ஆறு, கடல்” என்றார் நாரதர். “கடலே காலத்தின் வடிவம். கடலை துணைக் கொள்வோம்” என்று அவர் சொன்னதும் இந்திரன் உளம் தளர்ந்தான். “முனிவரே, வருணன் அசுரர் குடிப்பிறந்தோன். அசுரகுடித் தலைவனாக அமர்ந்திருக்கும் ஒருவனை எதிர்க்க ஒருபோதும் அவன் ஒப்புக்கொள்ளப்போவதில்லை.” நாரதர் புன்னகைத்து “ஆம். ஆனால் ஒரு வினா அவனில் வளரும். புவியில் இன்றிருப்பதில் முதன்மையான அசுரன் யார்?” என்றார். இந்திரன் அதை புரிந்துகொண்டு புன்னகைத்தான்.

முதிய அந்தணன் உருவம் பூண்டு கைக்கழியும் தோள்முடிச்சும் முப்புரியும் அனல்கட்டையும் தர்ப்பையும் கொண்டு இந்திரன் மேற்கே அலைத்த கடலின் விளிம்புக்கு வந்தான். தன் கையில் இருந்த கழியால் கடல் அலைகளை அடித்துக் கிழிக்கத் தொடங்கினான். சலிக்காது சினத்துடனும் ஆற்றாமையுடனும் அவன் அதைச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அலைகள் என சுருண்டு கரைதொட்டு உருக்கொண்டு எழுந்து அவனருகே வந்த வருணன் கேட்டான் “அந்தணரே, இங்கு என்ன செய்கிறீர்?” “அலைகளை கிழிக்கிறேன்” என்றார் அந்தணர். “அடித்து கிழிக்கலாகுமா நீரை? அது இணையும் தன்மைகொண்டதல்லவா?” என்றான் வருணன். “அடிமேல் அடிவைத்தால் நீரையும் கிழிக்கலாகும்” என்றார் அந்தணர்.

நீள்தாடியும் குழலும் அலைபுரள நீலநிற ஆடையுடன் நின்ற வருணன் “ஏன் இதை செய்கிறீர்?” என்றான். “புவி அனைத்திற்கும் உரிய முதலரசனைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன். வழியில் இந்த நீர்ப்பெருக்கு என்னை தடுக்கிறது” என்றார் அந்தணர். “புவியனைத்திற்கும் அரசன் யார்?” என்று வருணன் கேட்டான். “விருத்திரன். அவனே இன்று விண்ணகத்தை ஆள்கிறான். அசுரப் பேருருவனின் ஆட்சியில் இப்படி ஒரு எளிய நீர்வெளி கட்டற்று கொந்தளிப்பதை அவன் எப்படி ஒப்புக்கொள்கிறான் என்றே புரியவில்லை” என்றார் அந்தணர்.

புருவம் சுளிக்க சினத்தை அடக்கி வருணன் கேட்டான் “இது ஆழி என்று அறிவீரா?” அந்தணர் “ஆம், அறிவேன். இது வருணனின் உடல். இன்று வருணனின் மேல் விருத்திரனின் கோல் நாட்டப்பட்டுவிட்டது. விண்ணேகி விருத்திரனைக் கண்டதுமே வருணனைக் குறித்து நான் துயர் சொல்லப்போகிறேன். என்னைப்போன்ற எளியோர் அவனை அடையும் வழிகள் அனைத்தையும் இந்த பொறுப்பற்ற நீலநீர்க் கொந்தளிப்பு சூழ்ந்துள்ளது. இதன் பொருளற்ற அலைகளுக்குமேல் தன் செங்கோலால் ஒரு கோடு கிழித்து ஒரு பாதையை அவன் அமைக்கவேண்டும். அன்றி அவன் தன் சொல்லைச் சரடாக்கி இந்த மாளாத் திமிறலை கட்டிப்போட வேண்டும்” என்றார்.

ஏளனத்துடன் இதழ்கோட நகைத்து “வருணனை வெல்ல விருத்திரனால் இயலுமென்று எவர் சொன்னது உங்களிடம்?” என்றான் கடலரசன். “வருணன் இந்திரனை தலைவனென ஏற்றுக்கொண்டான் என்பது நான் கற்ற அனைத்து நூல்களிலும் உள்ளது” என்றார் அந்தணர். “எந்நூலில் உள்ளது?” என்று சினத்துடன் உரத்த குரலில் வருணன் கேட்டான். “விருத்திரன் புகழ் பாடும் அனைத்து நூல்களிலும்” என்றார் அந்தணர். “இது என் சொல், இதை நம்புக! நூலில் பதிந்ததே காலத்தில் வாழ்வது.”

வருணன் சீற்றத்துடன் “அது பொய். இப்புவியில் எனக்கு நிகரென அசுரன் யாருமில்லை” என்றான். “அவ்வண்ணமெனில் விருத்திரனை இங்கு வரவழைத்து எனக்குக் காட்டு” என்று இந்திரன் சொன்னான். வருணன் புன்னகைத்து “இதோ” என்று கூறி அலைவடிவு கொண்டான். ஆயிரம் முறை தன் கைகளால் நிலத்தை அறைந்து “விருத்திரனே, இங்கு எழுக!” என்று கூவினான்.

அவ்வொலி இந்திர உலகில் இந்திராணியுடன் மலர்வனத்தில் காதலாடிக்கொண்டிருந்த விருத்திரனின் செவியில் விழவில்லை. மதுக்கிண்ணத்துடன் இருந்த அவன் மெல்லிய அலையோசை ஒன்றையே கேட்டான் “என்ன?” என்று இந்திராணி கேட்டபோது “அலையோசைபோல் ஒன்று” என்றான். “அது அலை ஓசை அல்ல. உங்களுக்கு சேடியர் வீசும் சாமரத்தின் ஒலி” என்றாள் இந்திராணி. “ஆம்” என்று விருத்திரன் புன்னகைத்தான். மதுக்குடுவைகளுடன் இரு சேடியர் அருகே வர அவர்களை நோக்கி கையசைத்தான்.

மீண்டும் உருக்கொண்டு எழுந்து வந்த வருணனின் முகம் சினம் கொண்டு சுருங்கியிருந்தது. தன் உருமீண்ட இந்திரன் “அசுரர் பேருருவே, நான் இந்திரன். உம் நிகரற்ற ஆற்றல் எவ்வண்ணம் ஏமாற்றப்பட்டுவிட்டது என்பதை சொல்லும்பொருட்டே இவ்வுருவில் வந்தேன்” என்றான். சினமும் ஆற்றாமையுமாக வருணன் பெருமூச்சுவிட்டான். “என் நகரை வென்று, என் துணைவியைக் கொண்டு, என் அரியணையில் அமர்ந்திருக்கிறான் அவன். அவனை வஞ்சம் தீர்க்கும்பொருட்டு இங்கு வந்தேன். அவனுக்கு நிகரான ஆற்றல் ஒன்று என்னுடன் இருக்கையிலேயே அவனை வெல்ல முடியும்” என்றான்.

வருணன் “நீர் விண்ணவர். விண்ணவர் என்றும் அசுரர்க்கு எதிரானவர். அசுரனாகிய எனது துணை ஒருபோதும் உமக்கில்லை” என்று திரும்பப்போனான். அவன் தோளைப்பற்றி “பொறுங்கள்! நான் விண்ணவன், ஆனால் விண்நகரை விட்டு வந்தபின் என்னை எப்படி விண்ணவன் என்று சொல்ல முடியும்? இதோ, இவ்வலைகளில் திகழும் காலப்பெருக்கை சான்றாக்கி உமக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஒருபோதும் விண்ணவர் உமக்கு எதிராக எழமாட்டார். எனக்கு நிகரான இடத்தில் விண்ணவனாக உம்மை அமைக்க நான் படைப்புத்தெய்வத்திடம் கோருவேன். நான் கிழக்கென்றால் நீர் மேற்கு. என்றும் உம் துணைவனாகவே திகழ்வேன்” என்றான்.

வருணன் முகம் சற்று கனிந்ததை உணர்ந்து அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “இதோ, மூன்று தெய்வங்களின்மேல் ஆணையாக சொல்கிறேன். இனி எந்த வேள்வியிலும் எனக்கு அளிக்கப்படும் அவியில் நேர்பாதி உமக்குரியது. ஆயிரம் ஆண்டு வேள்வியில் அவி கொண்டு இருந்தால் நீர் விண்ணவராக வானில் நிறுத்தப்படுவீர். உம்மை வேதங்கள் பாட்டுடைத்தலைவனாக்கும். வேதியர் உம்மை தெய்வமென வணங்குவர்” என்றான். வருணன் இறுதித் துளி தயக்கத்தில் நின்றிருப்பதை உணர்ந்து “வான் மழை அருளும் நீர்ப்பெருக்கு நீர். முகில்களின் காவலன் நான். நாம் இணைந்து இப்புவியை ஆளுவோம்” என்றான்.

வருணனை எண்ணவிடாமல் இந்திரன் சொல்லெடுத்தான் “நாம் பிரிந்தால் புவி வறண்டு அழியும். நீர் தேடி வான் நோக்கி அமர்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி உயிர்களின் குரலைக் கேட்பவன் நான் மட்டுமே. மழை பொழிகையில் அவை அளிக்கும் வாழ்த்துக்களை நானே பெற்றுளேன். அவ்வாழ்த்துக்களாலேயே நான் அரசனென மண்ணில் நிறுத்தப்படுகிறேன். இன்று வாக்களிக்கிறேன், என்னை வந்தடையும் வாழ்த்துக்களில் பாதியை உமக்கு அளிப்பேன். ஒவ்வொரு உயிரும் உமது பெருங்கருணையை உணரும்படி செய்வேன். உமது அலைகளின் பேருருவை முகில்களின் இடியென ஒலித்துக்காட்டுவேன். ஆணை! ஆணை! ஆணை!”

மறுத்தொரு சொல் எடுக்கமுடியாது வருணன் திகைத்து பின் மெல்ல அமைந்தான். “உமது சொல் எனக்கு வந்துவிட்டதென்றே கொள்கிறேன், நீர்களின் தலைவரே” என்றான் இந்திரன். வருணன் தலையசைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். அலைகடலை நோக்கி திரும்பி “அவ்வாறெனில் முடிவிலாதெழும் இப்பெரும்படை இனி எனக்குரியது அல்லவா?” என்றான் இந்திரன். “ஆம்” என்றான் வருணன். “இனி வேதமுதல்வர் நாம். இனி வேதம் இரு முகம் கொள்க! அதன் சொல் ஒவ்வொன்றும் இருவகையில் பொருள் பெறுக! உமது நெறியும் எனது இடியும் அதில் விளங்குக!” என்றான் இந்திரன்.

[ 15 ]

பிரதீகம் என்னும் சிற்றூரில் நிலவெனப்பெருகி ஓடிய ஆற்றங்கரையில் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் இளம்சூதனாகிய குணதன் சொன்னான் “வருணனின் ருதமும் இந்திரனின் வஜ்ரமும் அவ்வாறு வேதமெய்ப்பொருளாயின.” பிரசண்டன் “அக்கதையை சொல்க!” என்றான். குணதன்  குப்தசந்திரசூடர் எழுதிய விருத்திரபிரஃபாவம் என்னும் காவியத்தின் இறுதியை சொன்னான்.

விருத்திரன்மேல் சினம் கொண்ட வருணன் தன்னை அவன் வந்து சந்திக்க வேண்டுமென்று ஆணையிட்டு நூற்றெட்டு அலைகளை புற்றிகபுரிக்கு தூதனுப்பினான். அவ்வலைகள் அனைத்தும் கரைமுட்டி வளைந்து பின் திரும்பி அவனையே வந்து சேர்ந்தன. பின்னர் நீர்மலை என எழுந்த பேரலை ஒன்றின்மேல் ஏறி வருணனே புற்றிகபுரியின் மண் கோட்டை வாயிலை வந்து அறைந்து மேலெழுந்தான். முதிய அரசன் சினம்கொண்டிருந்தான். அவன் சடைக்குழலும் திரிகளாக சரிந்த தாடியும் நனைந்திருந்தன. உதடுகள் துடித்தன. “எங்கே அவன்? இக்கணமே நான் பார்த்தாகவேண்டும் விருத்திரனை” என புற்றிகபுரியின் கோட்டைவாயிலில் நின்று அவன் கூவினான்.

அவனை எதிர்கொண்ட விருத்திரனின் படைத்தலைவன் கௌமாரன் பணிந்து “நீருக்கு அரசே, வருக… மூத்தவராகிய தங்களை புற்றிகபுரி பணிகிறது. விருத்திரர் இப்போது இந்நகரில் இல்லை. அவர் சொல்கொண்டு நானே இதை ஆள்கிறேன்” என்றான். அலைமுழக்கமென ஒலித்த குரலில் “நான் உயிர் வாழும் அசுரர்களின் முதற்தலைவன் வருணன். எனது ஆணையுடன் நூற்றெட்டு அலைத்தூதர்கள் இங்கு வந்தனர். அவர்களை மறுமொழியின்றி திருப்பி அனுப்பியிருக்கிறீர்” என்றான். “அரசே, விருத்திரர் மண்மீதுள்ள அசுரர்களின் முதற்தலைவர். அவரை வந்து சந்திக்க எளிய தூதர்களுக்கு நிலை இல்லை. அமைச்சரோ அரசரோதான் வந்திருக்கவேண்டும்” என்றான் கௌமாரன்.

“உங்கள் அரசன் இன்று அந்திக்குள் என்னை வந்து சந்திக்க வேண்டும். பெருங்கடல்களின் ஆழத்தில் எனது மாளிகை உள்ளது. அதன்முன் அவன் ஒரு காலத்தில் இரந்து கையேந்திய முற்றம் உள்ளது. அங்கே வாயிலில் கைகட்டி வாய்பொத்தி நின்று சந்திப்பு கோரவேண்டும். இல்லையேல் அவன் இறுதிக் குருதியும் எஞ்சுவதுவரை போரிடுவேன். இறுதிச் சாம்பலும் எஞ்சுவதுவரை வஞ்சம் கொண்டிருப்பேன். அவனை அறிவுறுத்துவதற்கே வந்தேன்” என்றான்.

அச்சமின்றி நிமிர்ந்து வருணனின் விழிகளை நோக்கி கௌமாரன் சொன்னான் “வருணனே, நீர் உளம் திரிந்திருக்கிறீர். இப்புவிக்கு மட்டுமே நீர் பேருருவர். இன்று விண் எழுந்த ஏழு உலகங்களையும் வென்று இந்திரனென அமர்ந்திருக்கிறார் விருத்திரர். விதையென இருக்கையில் ஆலமரத்திற்கு நீர் நீரூற்றியிருக்கலாம். பன்னிரண்டாயிரம் விழுதுகள் எழுந்தபின் ஆலமரம் உமது முற்றத்து தொட்டியில் அடங்கவேண்டுமென நினைத்தீர் என்றால் உலகறியா பேதையெனப் பேசுகிறீர்.”

“கேளுங்கள், நீருக்கரசரே! இன்னும் சில ஆண்டுகளில் மூன்று பெருந்தெய்வங்களும் எழுந்துவந்து என் தலைவரை இந்திரனென ஏற்கப்போகின்றனர். புவியில் அந்தணர் அளிக்கும் அவியனைத்திற்கும் அவரே உரிமை கொள்ளப்போகிறார். அன்று அவருடைய சினத்திற்கு ஆளானீர்கள் என்றால் அவர் சுட்டுவிரலில் ஒரு துளி நீரென சுருங்குவீர். இருள் அழியா ஆழ் உலகங்களில் உம்மை சுண்டித் தெறிக்கவைக்க அவரால் முடியும். இடமறியாது ஆளறியாது உம்முள் எழுந்த சினம் நம்முடனே மறையட்டும். மீள்க! விருத்திரேந்திரனை வணங்கி உமது மாளிகையில் சென்று அமைக!” என்றான்.

வருணன் “நீ நிலைமீறிப் பேசிவிட்டாய். இதன் ஒவ்வொரு சொல்லும் உனக்கும் உன் குலத்திற்கும் நஞ்சு” என்றான். கௌமாரன் “வருணரே, நீர் அரசமுறை அறிந்தவர் என்றால் வரும் நீர்த்திருநாளில் சங்கும் முத்தும் பவளமும் மீன்மணியும் கொண்டுசென்று விருத்திரரின் காலடியில் வைத்து பணிக! அதுவே நன்று உமக்கு” என்றான். வருணனின் தோளைத்தொட்டு “முதுமையின் அறிவின்மை ஒன்றுண்டு, அது இளையோரை எப்போதும் இளையோரென்றே காணும். காட்டில் குலமாளும் முதுகளிறும் அவ்வண்ணமே. அது இளங்களிறின் கொம்புபட்டு குடல்சரிந்து சாகும்” என்றான்.

உளக்கொந்தளிப்பால் வருணனின் உடல் நடுங்கியது. மும்முறை சொல்லெடுக்க ஒலியெழாமல் கைகள் மட்டும் அசைந்தன. பின்பு பேசியபோது முதுமையும் இணைய அவன் குரல் நடுங்கியது. “அப்படியென்றால் இதோ, போர் குறித்திருக்கிறேன். போர் முடிவுக்குப் பின் நாம் மீண்டும் பார்ப்போம்” என்றபின் வருணன் திரும்பிச்சென்றான். அன்றே அலைகள் அடங்கின. கடல் குளம்போன்றிருப்பதாக சொன்னார்கள் தோணியோட்டி மீன்கொள்ளச் சென்ற அசுரர். மீன்களின் விழிகள் அனைத்தும் பொருளற்ற வெறிப்பு கொண்டிருந்தன. வலையிலிருந்து இழுத்து கரையிலிட்டபோதும் அவ்வெறிப்பு அவ்வண்ணமே நீடித்தது.

வருணன் வந்துசென்ற செய்தியை விருத்திரனிடம் சென்று சொல்ல கௌமாரன் எண்ணினாலும் பின்னர் அது ஒரு முதன்மைச் செய்தி அல்ல என்று தோன்றி வாளாவிருந்தான். ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறிய விண்ணில் நாரைகளென உருக்கொண்டு பறக்கும் அசுரர்களை அனுப்பினான். பலநாட்கள் கடல் அலை ஓய்ந்து கிடந்தது. ஆழம் மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. “அஞ்சிவிட்டார் என எண்ணுகிறேன், தலைவரே” என்றான் ஒற்றனாகிய தவளன். பிறிதொரு ஒற்றனாகிய சார்ங்கன் “எண்ணிநோக்கி தன்னிலையை உணர்ந்துவிட்டார் போலும்” என்றான்.

ஆனால் இந்திரன் வருணனை கிழக்குக் கடல் எல்லையில் அமைந்திருந்த இந்திரகீலம் என்னும் மலையில் சந்தித்தான். அங்கு அவனுடன் நாரதரும் இருந்தார். அவர்கள் அங்கே சந்தித்ததை அசுரகுலத்து ஒற்றர் எவரும் அறியவில்லை. இந்திரகீலம் ஒளிவிடும் வெண்முகில்களால் முற்றிலும் மறைக்கப்பட்ட மலை. இந்திரகீலம் அங்கிருப்பதை தேவர்களும் அறிந்திருக்கவில்லை. இந்திரகீலமெனப் பெயர்கொண்ட வேறு பதினெட்டு மலைகளை பாரதவர்ஷமெங்கும் அமைத்து மொழித்தடம் கொண்டு தேடிச்செல்பவர்களையும் இந்திரன் ஏமாற்றிவந்தான்.

விருத்திரனை வெல்வதெப்படி என்று நாரதர் இந்திரனுக்கும் வருணனுக்கும் சொன்னார். “உலோகங்களாலோ, கல்லாலோ, மரத்தாலோ, மானுடர் வனைந்த எப்பொருளாலோ, மின்னாலோ கொல்லப்பட இயலாதவன் விருத்திரன்.” வருணன் “ஆம், அந்த நற்சொல்லை என் முன் நின்றுதான் அவன் பெருந்தந்தையிடமிருந்து பெற்றான்” என்றான். அவர்கள் இந்திரனின் முகில்பளிங்கு மாளிகையின் முந்நூற்றிஎட்டாவது உப்பரிகையில் இருந்தனர். “இவையன்றி வேறேதுள்ளது படைக்கலமாக?” என்றான் இந்திரன். “அவனைக் கொன்றொழிப்பது ஒன்றே” என்ற நாரதர் சாளரம் வழியாக சுட்டிக்காட்டினார்.

அப்பால் எழுந்த குடாக்கரையில் வெள்ளிவாளென வளைந்து சென்றமைந்த அலைநுரையைச் சுட்டி நாரதர் சொன்னார் “அவ்வலைநுரையை வாளென ஏந்துக! அதுவே அவனை அழிக்கும் படைக்கலம்.” திரும்பி வருணனிடம் சொன்னார் “கணம்தோறும் பெருகும் உயிராற்றலால் தன் கோட்டையைப் படைத்து நிறுத்தியிருக்கிறான் விருத்திரன். கணங்களென்றே ஆன அலைகள்மட்டுமே அவனுடைய அக்கோட்டையை அழிக்க இயலும். காலமே அவன் கோட்டை. காலமே அதற்கு எதிரி என எழட்டும்.”

புன்னகைத்து “ஆம், அவன் கோட்டையை நான் வெல்வேன்” என்றான் வருணன். பின்பு வளைந்த கடற்கரையில் வெண்நுரை என எழுந்த மாபெரும் வாளை கைநீட்டி தொட்டெடுத்து இந்திரனிடம் அளித்தான். “இது உன் படைக்கலமாகட்டும். வெல்க!” நாரதர் “வருணனே, இந்திரனின் சொல் என்றும் திகழ்க! இனி அவன் கொள்ளும் அவி அனைத்திலும் பாதி உனக்காகும். அந்தணர்குலம் காக்கவும், வேதம்கொண்டு முடி சூடிய மன்னர்கொடி காக்கவும், நாற்குலம் காக்கவும் நீ தெய்வமென அமைந்து அருள்புரிக!” என்றார். “அவ்வண்ணமே” என்று உரைத்து வருணன் கிளம்பிச் சென்றான்.

அச்சந்திப்பை பலநாட்கள் கழித்தே கௌமாரன் அறிந்தான். அலைகளில் எழுந்த மீன்கன்னி ஒருத்தி செம்படவர்களிடம் “இன்னும் சிலநாட்களே. புற்றிகபுரி அழியும். இந்திரனிடம் எங்கள் தலைவர் சொல்லளித்துவிட்டார்” என்றாள். அச்செய்தியை கேட்டபின்னரே அவன் தூதர்களை அனுப்பினான். நீருக்குள் மூழ்கும் கரிய நீர்க்கோழிகளாக மாறிய அசுரர் அங்குள்ள மீன்களிடம் கேட்டு அச்சந்திப்பை உறுதிசெய்தனர். ஆனால் என்ன நிகழுமென அவனால் உய்த்தறிய இயலவில்லை.

ஒரு புலர்காலையில் பேரலைகள் எழுந்து புற்றிகபுரியை தாக்கின. நீரின் அறைபட்டு கோட்டைகள் அதிர்ந்தன. தன் மஞ்சத்தறையில் பொற்கலங்கள் குலுங்குவதைக் கேட்டு எழுந்து அமர்ந்த கௌமாரன் நீர்த்துமிகள் சாளரம் வழியாக வந்து அறைக்குள் பொழிவதைக் கண்டான். அவன் ஆடையும் போர்வையும் நீர்சிலிர்த்தன. சுவர்கள் கரைந்தவை என வழியலாயின. எழுந்து வந்து உப்பரிகையில் நின்று நோக்கியபோது வருணனின் படைகளான நீலநீரலைகள் நாகபடமென வளைந்து எழுந்து வருவதைக் கண்டான்.

KIRATHAM_EPI_43

ஆயிரம் ஆண்டுகளாக கணமொன்றென வந்து அலைத்து அந்நகரைத் தொட்டு நனைத்து மீண்டு கொண்டிருந்த அலைகளை அவன் அறிந்திருந்தான். கண் அறியாது வளரும் அப்பெருநகருக்கு அவை எவ்வகையிலும் ஊறல்ல என்று உணர்ந்தும் இருந்தான். ஆயினும் அலைகளின் சினம் அவனை அகத்தில் எங்கோ சற்று அச்சுறுத்தியது. இந்திர உலகுக்குச் சென்று விருத்திரனிடம் அச்செய்தியை சொல்லலாம் என்று எண்ணினான். அதற்கு முன் புற்றில்வாழ் சிதற்குலங்கள் பதினெட்டின் தலைவர்களை தன் அவைக்கு கூட்டினான். பொன்நிறக் கொம்புகளும் வெள்ளி உடல்களும் கொண்டிருந்த அவர்கள் அவை நிரந்து அமர்ந்தனர்.

“புற்றுறை குலத்தலைவர்களே, இக்கோட்டை உங்களால் எங்கள் அரசனுக்கு அமைத்து அளிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளாக இதைக் காப்பவர்களும் நீங்களே. எழுந்து வரும் இக்கடலலைகள் என்னை அச்சுறுத்துகின்றன” என்றான் கௌமாரன். ஏளனமாக நகைத்து முதற்குலத்தலைவர் சொன்னார் “அசுரர் தலைவரே, இக்கணமே பதினெட்டு குலங்களும் நூற்றெட்டு குலங்களாக மாறவும் மறுகணமே ஆயிரத்தெட்டு குலங்களாகப் பெருகவும் ஆற்றல் கொண்டவர்கள் நாங்கள். எழுபசியும் எரிவிழைவும் கொண்டவர்கள். எனவே நாங்கள் உண்பதற்கு மட்டும் மாளாது உணவளியுங்கள். வான் எனப்பெருகி இங்கு நிற்கிறோம். எங்கள் கோட்டை வாயிலில் சிற்றுருவென சிறுத்து வருணன் இருப்பதை காண்பீர்கள்.”

இன்னொரு குலத்தலைவர் சொன்னார் “அரசே, உள்ளனலால் அல்ல, உயிர் விசையாலும் அல்ல, உண்ணும் அன்னத்தால் மட்டுமே நாங்கள் எல்லைக்குள் நிறுத்தப்பட்டவர்கள். எங்களுக்கு அன்னம் முடிவின்றி கிடைக்கும் என்றால் இப்புவி அளவுக்கே நாங்களும் பெருகுவோம்.” கௌமாரன் தன் அமைச்சரை நோக்கி “முடிவற்று பெருகும் அன்னம் இப்புவியில் எது?” என்றான். “இங்குள்ள அன்னமெல்லாம் முடிவின்றி பெருகுவதே” என்றார் அமைச்சர். “ஆனால் அன்னம் அன்னத்தை உண்டே பெருக முடியும்.”

“அன்னத்தில் விரைந்து பெருகுவதென்ன?” என்று அவன் கேட்டான். “புல்” என்றார் அமைச்சர். “தடையின்றி வளரமுடிந்தால் ஆயிரம் ஆண்டுகளில் ஆயிரம் முறை இப்புவியைச் சுற்றி வளைக்கும் ஆற்றல் கொண்டது புல். ஆகவே அதை பிரஜாபதி என வாழ்த்துகின்றது வேதம்” என்றார். “அவ்வண்ணமெனில் இங்கு புல் வளர்க! புல்லை உண்டு சிதல்குலம் வளர்க! சிதல்குலம் எழுப்பும் கோட்டை தடையின்றி பெருகுக!” என்றான் கௌமாரன்.

அசுரகுலத்தோர் எட்டுத் திசைக்கும் சென்றனர். விரைந்து பரவும் புல் வகைகளைத் தேர்ந்து நகருக்கு கொண்டுவந்தனர். நாளுக்கு இருமடங்கென பெருகும் திரணம், நாளுக்கு மும்மடங்கென பெருகும் குசம், நாளுக்கு ஐந்து மடங்கென பெருகும் உதம், நாளுக்கு ஏழுமடங்கெனப் பெருகும் கேதம் என்னும் நால்வகைப் புற்கள் புற்றிகபுரியைச் சுற்றியிருந்த பெரும்பாலை நிலங்களில் விதைக்கப்பட்டன. புல் எழுந்தோறும் சிதல் புற்றெழுந்தது. வெளியில் எழுந்தெழுந்து வந்த வருணனின் படைகளை புற்றுமலைக்கோட்டைகள் தடுத்தன.

பன்னிரண்டு ஆண்டுகாலம் ஒவ்வொருகணமும் என அப்பெரும்போர் நிகழ்ந்தது. பெரும்பசிகொண்டு மண்ணை அள்ளி அள்ளி உண்டு வளர்ந்தது புல். அப்புல்லை உண்டு வளர்ந்தது சிதல். அசுரகுலக் கவிஞர் சிதலை உயிரின் வெண்ணுரை என்றனர். மண்ணிலெழும் பேரலை என்றனர் புற்றுகளை.

முந்தைய கட்டுரைவிலக்கப்பட்டார்களா?
அடுத்த கட்டுரைசுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி