’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41

[ 10 ]

சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னை மட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான். வணிகர்கள் “ஆம்! ஆம்!” என்றனர். “அரிய சொல்” என்றார் ஒரு முதுவணிகர்.

ஜைமினி உரக்க “இவை முறையான கதைகளல்ல. இவற்றுக்கு நூற்புலம் ஏதுமில்லை. சொல்லிச்சொல்லி அனைத்தையும் உருமாற்றுகிறான் இந்த வீணன்” என்று கூவினான். சண்டன் புன்னகையுடன் திரும்பி “அவ்வாறென்றால் நீங்கள் அறிந்த மெய்க்கதையை நீங்கள் சொல்லுங்கள், உத்தமரே” என்றான். ஜைமினி “அதை இவ்வணிகர்முன் சொல்ல எனக்கு உளமில்லை” என்றான். சண்டன் “அப்படியென்றால் அவர் சொல்லட்டும்” என பைலனை சுட்டினான்.

பைலன் “இளையவர் சொல்ல விரும்புவார்” என்றான். சுமந்து ஊக்கத்துடன் “ஆம், நானறிந்ததை சொல்கிறேன்” என முன்னால் சென்றான். “விஸ்வரூபனின் கதையை தேவலரின் புராணகாதம்பரி சொல்கிறது” என்றான். “அந்நூலை நான் நான்குமுறை முழுதாக கற்றிருக்கிறேன். பலமுறை சொல்லியும் இருக்கிறேன்.” “சொல்க! சொல்க!” என்றனர் வணிகர். அவன் சொல்லத்தொடங்கினான்.

அசுரகுலத்தில் பிறந்தவள் அன்னை வாகா. அசுரர்களுக்கு முழவின்குரல் என்பது நெறி. அன்னையோ இளமையிலேயே குழலினிமைகொண்ட குரலுடனிருந்தாள். அசுரகுலமுறைப்படி வேட்டையாடி ஊனுண்டு மதுக்களியாடி அவள் வாழ்ந்தாள். ஒருநாள் காட்டுக்குள் அவள் செல்கையில் ஒரு முனிவர் ஆற்றங்கரையில் அமர்ந்து வேதமோதக் கண்டாள். அவள் அச்சொற்களை ஒருமுறைதான் கேட்டாள். தீட்டிக்கூராக்கிய வைரங்களெனச் சொல்லெழ வேதமோதக் கற்றாள்.

அந்நதிக்கரையிலமர்ந்து வேதமோதிக்கொண்டிருந்தவர் மாமுனிவராகிய த்வஷ்டா. அவர் காட்டுக்குள் செல்கையில் மரங்களில் பறவைகள் சிறகோய்ந்து அமைந்திருக்க மீன்கள் நீர்ப்படலத்திற்குள் விழிகளென நிறைந்திருக்க மானும் சிம்மமும் இணைந்து மயங்கிநிற்க இனிய ஓசையுடன் வேதமெழக்கேட்டார். அருகே சென்று நோக்கியபோது அதை ஓதுபவள் ஓர் அசுரகுலப்பெண் என்று கண்டார். அவளிடம் “அசுரகுலத்தவளே, வேதமுழுமை உன்னில் எப்படி கைகூடியது?” என்று கேட்டார். “இது வேதமென்றே நானறியேன். ஆற்றங்கரையில் நான் கேட்ட ஒரு பாடல் இது. இனிதென இருப்பதனால் பாடினேன்” என்றாள் அவள்.

வேதத்தை அறியும் நல்லூழும் வேதமோதிப் பெற்ற நற்பலனும் கொண்டவள் அவள் என உணர்ந்த த்வஷ்டா “நீ வேதமுணர்ந்த மைந்தனைப் பெறுவாய்!” என வாழ்த்தினார். அவளுக்கு வாகா என்று பெயரிட்டு தன் துணைவியாக்கிக்கொண்டார். அவளிடம் காமம் கொள்வதற்காக தன்னுள் இருந்து  உகிர்களும் எயிறுகளும் அனல்பரவிய குருதியுமாக அசுரன்  ஒருவன் எழுவதை அவர் உணர்ந்தார். அவள் வேதத்தை பெற்றுக்கொண்டாள். அவர் விழியுளமறிவென  ஏதுமில்லா விலங்குக் காதலை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

வாகாவின் வயிற்றில் பிறந்த மைந்தன் மும்முகம் கொண்டிருந்தான். மூன்றுமுகம் கொண்ட மைந்தனைக் கண்டு திகைத்த த்வஷ்டாவிடம் அவரது தந்தையாகிய விஸ்வகர்மர் சொன்னார் “மூன்று விழைவுகள் மைந்தனுக்காகக் கோரின. ஒன்று அசுரனொருவனுக்காக எழுந்தது. மற்றொன்று வேதமெய்யறிவன் பிறக்கும்பொருட்டு வேண்டியது. மூன்றாம் விழைவு இரண்டையும் கடந்த படிவனொருவனுக்காக எழுந்தது. மூன்று விழைவுகளும் இணைந்துபிறந்த இம்மைந்தன் மும்முகனாகத் திகழ்கிறான்.”

மும்முகன் வளர்ந்து மெய்யறிவனென்றானான்.  வேதமெய்மையை ஓதியது ஒரு முகம். ஊனும் கள்ளும் கொண்டு களித்தது பிறிதொருமுகம். ஊழ்கத்திலமைந்திருந்தது மூன்றாம் முகம். வேதிய முகத்தை அன்னை விரும்பினாள். கிராத முகத்தை தந்தை விரும்பினார். இருவரையும் விரும்பியது ஊழ்க முகம். வேதியரின் ஒழுங்கும் அசுரரின் விசையும் படிவரின் அமைதியும் கொண்டவர் அவர் என்றனர் முனிவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வேதச்சொல்லையும் தேவர்கள் விரும்பி ஏற்றனர். அவர் அளித்த அவிகொள்ள மும்மூர்த்திகளும் வானிலெழுந்தனர்.

அந்நாளில் பிரஜாபதியான கசியபர் நாரதரிடம் கேட்டார் “இப்புவியில் வேதத்தை முழுதறிந்தவர் யார்?” நாரதர் சொன்னார் “மண்ணுலகில் வாழும் வேதமெய்யறிவராகிய திரிசிரஸ்.” அதைக் கேட்டு கசியபர் ஆணவம் புண்பட்டார். தானறியாத வேதமேது திரிசிரஸிடம் என்றறிய தானே ஒரு மைனாவாக மாறி அவர் அருகே மரக்கிளையில் அமைந்து அவர் ஓதும் வேதத்தை கேட்டார். அவர் கற்ற வேதத்தையே திரிசிரஸ் பாடினார். ஆனால் அவர் ஒருபோதும் உணராத இனிமை அதில் இருந்தது.

திகைப்புடன் மீண்டு வந்து நாரதரிடம் “அந்த வேதத்தின் இனிமை எப்படி அமைந்தது?” என்று கேட்டார். “அந்தணமுனிவரே, அவருடைய அசுரமுகம் பிறிதொரு வேதத்தை பாடுகிறது. வைதிகமுகம்கொண்டு அவர் பாடும் அனைத்து வேதவரிகளுடனும் ஒரு சொல்லென அதுவும் இணைந்துகொண்டுள்ளது. அப்போதுதான் அது முழுமையடைகிறது” என்றார் நாரதர். “மறைந்த வேதம் அது. நீருக்குள் ஒளியென அது இருக்கையிலேயே வேதம் முழுமைகொள்கிறது.”

கசியபர் மேலும் ஆணவம் புண்பட்டார். திரிசிரஸிடம் வந்து அவர் பாடிய அந்த வேதவரிகளுக்கு பொருளென்ன என்று கேட்டார். திரிசிரஸின் இருமுகங்களுக்கும் அதன் பொருள் தெரிந்திருக்கவில்லை. ஊழ்கமுகம் கொண்ட திரிசிரஸ் மூன்று கைவிரல் செய்கைகளில் அதற்கு முழுவிளக்கம் அளித்தார்.  அனைத்து விரல்களையும் விரித்து முழுவிடுதலை காட்டினார். கைமேல் கைவைத்து அமரும் முத்திரையை காட்டினார். கட்டைவிரலை சுட்டுவிரலால் தொட்டு முழுமைமுத்திரையை காட்டினார்.

கசியபர் “ஆம், ஒன்று பிறிதை நிறைக்க எழுந்த மும்முகனே வேதமுதல்வன். காட்டாளனும் மெய்யறிவனும் இருபுறம் நிற்கையிலேயே வேதம் முழுமைகொள்கிறது” என்றார்.  நாரதர் புன்னகைத்து “காட்டாளனும் வேதமும் இருபுறம் நிற்கையிலேயே ஊழ்கம் தகைகிறது” என்றார். பின்னர் மேலும் உரக்க நகைத்து “வெறிகொண்டெழும் காட்டாளனுக்கு இருபுறமும் வேதமும் ஊழ்கமும் காத்துநிற்கின்றனவா, முனிவரே?” என்றார். “ஆம்” என்று கசியபர் சொன்னார்.

அங்கிருந்து இந்திரன் ஆண்டமர்ந்த அமராவதிக்கு நாரதர் சென்றார். அங்கே அவையமர்ந்திருந்த இந்திரனிடம் அந்நகரின் முழுமையை புகழ்ந்து பேசினார். “ஒரு துளி ஆசுரம் கலந்திருப்பதனால் இந்நகர் அழியாநிறை கொண்டிருக்கிறது. இது வாழ்க!” என்றார். சினம்கொண்ட இந்திரன் “இங்கு ஆசுரமென ஏதுள்ளது? இது தேவர்களின் உலகு” என்றான். “அரசே, இங்கு அவையமர்ந்திருக்கும் பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குரு அல்லவா?” என்றார் நாரதர். இந்திரனால் மேலும் சொல்லெடுக்க முடியவில்லை.

ஆனால் அவன் உள்ளம் திரிபடைந்தது. பிரஹஸ்பதியை அவன் ஐயத்துடன் நோக்கலானான். ஐயம்கொண்டவன் தன் அனைத்து அறிவாலும் அந்த ஐயத்தை நிறுவிக்கொள்ளவே முயல்கிறான். ஆகவே அதை அவன் நிறுவிக்கொள்வான். ஐயம் அச்சமாகியது. அச்சம் சினத்தை கொண்டுவந்தது. ஒருநாள் தன் அவைக்கு வந்த பிரஹஸ்பதியிடம் இந்திரன் “நீங்கள் உங்கள் முழுதுள்ளத்தை தேவர்களுக்கு அளிக்கவில்லை. அசுரர்களையும் உங்கள் மைந்தரென்றே எண்ணுகிறீர்கள்” என்றான்.

“நான் தேவருக்கும் அசுரருக்கும் ஆசிரியன். கற்பிப்பது என் பணி. கல்வியை விழைவுக்கு அவர்களும் நிறைவுக்கு நீங்களும் பயன்படுத்துவதனால் நீங்கள் மாறுபடுகிறீர்கள்” என்றார் பிரஹஸ்பதி. இந்திரன் “தேவர்களுக்கு மட்டுமென நீங்கள் மெய்மையை கற்பிக்கவில்லை” என்றான். “மெய்மை அனைவருக்கும் உரியது” என்றார் பிரஹஸ்பதி. “மாணவனை விரும்பாத ஆசிரியனால் அறிவை அளிக்கமுடியாது” என்று இந்திரன் சொன்னான்.

உளம் புண்பட்ட பிரஹஸ்பதி “நீ என்னை ஐயப்படுகிறாயா?” என்றார். “நீங்கள் இனி தேவர்களுக்கு மட்டும் உரியவராக இருப்பதாக சொல்லுங்கள்” என்றான். “அச்சொல்லை நான் சொல்லமுடியாது. நீ என் அருமையை அறிந்து மீள்வதுவரை தேவருலகைவிட்டு அகல்கிறேன்” என்று சொல்லி பிரஹஸ்பதி கிளம்பிச்சென்றார். இந்திராணி “அவர் நம் முதன்மையாசிரியர். அவரை அழையுங்கள்” என்றாள். இந்திரன் “அவர் செல்லட்டும். நாம் நம் மெய்மையை மட்டும் சூடி இங்கிருப்போம்” என்றான்.

மறுநாள் வேள்விக்கு அமர்ந்த முனிவர்கள் “முதன்மைவைதிகரான பிரஹஸ்பதி அமராமல் வேள்வி இங்கு நிகழாது” என்றனர். “ஏன், நீங்கள் வேதம் முற்றறிந்தவர்கள் அல்லவா?” என்று இந்திரன் சினம்கொண்டு கேட்டான். “ஆம், ஆனால் நாங்களறிந்தது தேவர்களின் வேதம். அசுரவேதம் அறிந்தவர் அவர்மட்டுமே. அதுவுமிணையாமல் வேதம் முழுமைகொள்வதில்லை.” இந்திரன் திகைத்து அமர்ந்திருக்க “சென்று அவரை அழைத்துவாருங்கள், அரசே!” என்றனர் முனிவர்.

நாரதரை அழைத்து “என்ன செய்வது, முனிவரே? இங்கிருந்து மறைந்த பிரஹஸ்பதியை நான் எங்கு சென்று தேடுவது?” என்றான் இந்திரன். “மண்ணில் அவருக்கு நிகரென பிறிதொருவன் இருக்கிறான். அவன் பெயர் திரிசிரஸ். வேதமெய்மை உருக்கொண்டு எழுந்த அவனை பேருருவன் என்கின்றனர்” என்றார் நாரதர். நாரதரையே அனுப்பி திரிசிரஸை அழைத்துவரச்சொல்லி வேதவேள்வியைத் தொடங்கினான் இந்திரன். ஐயம்கொண்டிருந்த முனிவர் திரிசிரஸின் முதற்சொல்லைக் கேட்டதும் அவரே முதல்வர் என ஏற்றனர்.

வேதம் செழித்தது விண்நகரில். ஆனால் நாள் செல்லச்செல்ல அசுரர்களும் பெருகலாயினர். இந்திரனின் அரியணையைத் தாங்கிய துலாக்கோல் நிலைபிறழ்ந்தது. அதன் முள் அசுரர்பக்கம் சாயத்தொடங்கியபோது இந்திரன் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று முனிவர்களை அழைத்து கேட்டான். “அரசே, நாம் இடும் வேள்விக்கொடை அசுரர்களுக்கும் செல்கிறது” என்றனர் முனிவர். “எவ்வண்ணம் செல்லமுடியும்? தேவர்களில் அசுரர்களுக்கு அவியிடுபவர் யார்?” என்றான் இந்திரன். ஐயத்துடன் சொல்லின்றி நின்றனர் தேவர். அவர்களின் சொல்லின்மையைப் புரிந்துகொண்ட இந்திரன் தலையசைத்தான்.

மறுநாள் வேள்வி நிகழ்கையில் தலைமைகொண்டு அமர்ந்திருந்த மும்முகனையே இந்திரன் நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய கிராதமுகம் சொல்லும் வேதச்சொல்லை இதழ்களைக் கூர்ந்து நோக்கினான். அவர் அசுரர்களுக்கு கொடையளிப்பதைக் கண்டான். அனலில் நீலக்கொழுந்து எழுந்து நாவாகி அந்த கொடையைப் பெற்றுக்கொண்டதை உணர்ந்தான். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான்.

அன்றே ஒரு கிளியென்றாகி பறந்து மண்ணுலகுக்கு சென்றான். கிளிகள் சொல்லும் மொழிகளைக் கூர்ந்தபடி அலைந்தான். ஒரு கிளி சொன்ன சொல் வேதச்சந்தத்துடன் இருப்பதை உணர்ந்ததும் அதை பின்தொடர்ந்தான். அக்கிளி சென்றணைந்த மரத்தின் அடியில் பிரஹஸ்பதி தவம் செய்துகொண்டிருந்தார். அவர் காலடியில் விழுந்து “பிழை செய்துவிட்டேன், ஆசிரியரே. ஆசிரியர் மாணவருக்கு உரிமைகொண்டாடலாம், ஆசிரியனுக்கு மாணவன் உரிமைகொண்டாடக்கூடாதென்று இன்று அறிந்தேன். கனிவு கொள்க!” என்றான்.

பிரஹஸ்பதி கனிந்தார். தன் முதன்மை மாணவனாகிய காம்யகன் என்னும் சிற்பியை இந்திரனுடன் அனுப்பினார். மறுநாள் வேள்வி நிகழ்கையில் காம்யகன் திரிசிரஸின் அருகே நின்றிருந்தான். வேள்வியனலில் அவியிடும்போது கிராதமுகம் அசுரர்களுக்கு என வேதமோதி அளித்த அவி அனல்சேரும் முன் தச்சன் அந்தத் தலையை துண்டித்தான். திகைத்து திரும்பிநோக்கிய வேதமுகம் தான் ஓதிய சொல்மறந்து நின்றது. அந்தத் தலையை இந்திரன் துண்டித்தான். இருமுகமும் சரிந்தபோது ஊழ்கமுகம் நிகர்நிலை அழிந்து முகம் சுளித்தது. அந்தத் தலையை இந்திரன் துணித்தான்.

“இந்திரன் திரிசிரஸை வென்ற கதை இது” என்றான் பைலன். ஜைமினி “ஆம், மும்முகன் செய்த வேள்வி அசுரர்களுக்குச் சென்றது. அந்தக் கரவுக்குரிய தண்டமே அவருக்கு அளிக்கப்பட்டது” என்றான். “அப்படியென்றால் பன்னிரு தூயநீர்நிலைகளில் ஏன் இந்திரன் நீராடி பழி களைந்தான்?” என்றான் சுமந்து. “வேதமோதி அவிக்கரண்டியுடன் அமர்ந்த வைதிகனைக் கொன்ற பழி அகலும்பொருட்டே” என்றான் ஜைமினி.

“அசுரனும் அந்தணனும் கலந்து ஒன்றாகக்கூடுமென்பதை உணர்ந்தே ஊழ்கமுகம் புன்னகைத்தது என்று தேவலரின் புராணகாதம்பரி சொல்கிறது” என்றான் பைலன். “ஆம்” என்றான் சுமந்து. உரக்க நகைத்து சண்டன் சொன்னான் “அசுரரில் இருந்து வேதத்தையும் வேதத்திலிருந்து அசுரத்தையும் வெட்டிவிலக்குவதே தேவர்களுக்கரசனின் முதற்பணி போலும்.”

[ 11 ]

பிரம்மகபாலத்தின் குகைக்குள் அமர்ந்திருந்த மூவரில் சூதன் எழுந்துசென்று இலைமறைப்பினூடாக வெளியே நோக்கினான். “இன்னமும் ஓயவில்லை மழை. நீர்ப்பொழிவுகள் பெருமரங்கள் போல வேரூன்றி நின்றிருக்கின்றன” என்றான். அந்தணர் “இந்த மழை எளிதில் ஓயாது. இக்காட்டைக் கண்டதுமே அதை அறிந்தேன். நீர்கொள் உடல்கொண்ட மரங்களே இங்கு மிகுதியாக உள்ளன. நீர்நிலைகள்தோறும் தவளைகள் செறிந்திருக்கின்றன” என்றார். சூதன் திரும்ப வந்து அமர்ந்துகொண்டான். பிச்சாண்டவர் இருகைகளையும் மார்பின்மேல் கட்டி தசைச்சிலையென அமர்ந்திருந்தார்.

“மலைச்சிற்றூரில் கபாலரின் சொற்களில் நீங்கள் கேட்ட விருத்திரனின் கதையை சொல்க!” என்றார் பிரசாந்தர். “அந்தணரே, குளிர்ந்த பாறைமேல் படுத்து விண்மீன்களை நோக்கியபடி நான் கேட்ட கதை இது” என்று பிரசண்டன் சொன்னான். “திரிசிரஸின் இறப்பால் உளமுடைந்த த்வஷ்டா அனைத்தையும் துறந்து பித்தனென காட்டில் அலைந்தார். சடைவளர்ந்து நிலம்தொட்டது. தாடிவளர்ந்து கால்களில் ஆடியது. கைநகங்கள் வளர்ந்து சுருண்டு உள்ளங்கைக்குள் செறிந்தன. அவர் இமைமயிரும் வளர்ந்து நோக்கைமூடியது. உடல்பழுத்து மண்படியும் நிலையை அடைந்தும் உயிர் எஞ்சி நின்றது. நூற்றெட்டுமுறை முயன்றும் தன் உடல்விட்டு உயிரை உதிர்க்க அவரால் இயலவில்லை.”

நெஞ்சுள் அமைந்த உயிரிடம் அவர் கோரினார் “சொல்க, இந்தப் பட்டமரம்விட்டு விண்ணிலெழ உனக்கு என்ன தடை?” உயிர் சொன்னது “விடாய்கொண்டும் விழைவுகொண்டும் வஞ்சம்கொண்டும் எவரும் இறக்கலாகாது, அசுரரே. நான் கொண்ட வஞ்சம் அடங்கவில்லை.” கண்விழித்த த்வஷ்டா நடந்து காட்டைவிட்டு வெளியே வந்து அவ்வழி சென்ற இடைச்சி ஒருத்தியிடமிருந்து இளம்பால் வாங்கி அருந்தி தன் உயிரை மீட்டுக்கொண்டார். உயிரின் வஞ்சம் ஒழிய என்ன செய்வதென்று எண்ணியபடி ஊர்கள் தோறும் அலைந்தார்.

அப்பயணத்தில் அவர் பிரஹஸ்பதியை கண்டடைந்தார். குற்றாலமரத்தின் உச்சியில் இருந்த பொந்து ஒன்றுக்குள் ஒரு மலைக்கழுகு உணவுகொண்டு போடுவதைக் கண்டு மரத்தின் மேலேறி அதற்குள் அவர் எட்டிப்பார்த்தபோது கையளவே ஆன உடல் ஒன்று சுருண்டு மூச்சசைவுடன் இருப்பதைக் கண்டார். அவர் பிரஹஸ்பதி முனிவர் என்று உணர்ந்ததும் வணங்கி தன் உளத்தேடலை சொன்னார். முனிவரின் குரல் வெளியே எழவில்லை. ஆகவே அவ்வுருவை அவர் அருகே ஓடிய கங்கையின்மேல் வைத்தார். கங்கையில் அலைகளென அவர் குரல் மாறியது. அவ்வதிர்வை விழிகளால் நோக்கி அவர் குருமொழியை உணர்ந்தார்.

பிரஹஸ்பதி சொன்னார் “மைந்தா, சிற்பியென நீ கொண்ட பொருட்களின் எல்லையையே அப்படைப்புகளும் கொண்டுள்ளன என்று நீ அறிக! பொன் உருகுவது. பாறை பிளப்பது. இனி உன் கலை அனலில் எழுக!” த்வஷ்டா கைகூப்பி “நான் செய்ய வேண்டியதென்ன, முதலாசிரியரே?” என்றார். “அணையாத அனலில் உன் படைப்பு எழுக!” என்றார் பிரஹஸ்பதி. முனிவரை மீண்டும் பொந்துக்குள் வைத்துவிட்டு காட்டுக்குள் செல்லும்போது அணையாத அனலேது புவியில் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. எரிவதென்பதனாலேயே அணைவது எரி. அந்தியில் மறைவது விண்கதிர். அணையாதெரியும் அனலென ஏதுள்ளது?

அவ்வழி செல்கையில் கங்கைச்சதுப்பில் குழியகழ்ந்து முட்டையிட்டு காலால் தள்ளி மூடியபின் ஆமை ஒன்று “அனல்கொள்க, மைந்தர்களே! அழியாத அனல்கொள்க!” என்று நுண்சொல் உரைத்தபின் நீர்நோக்கி செல்வதைக் கண்டதும் அக்கணம் அவர் அறிந்தார், அழியா அனலென்பது உயிர் என. உளமென்றாகி உணர்வுகொள்வதும் சொல்லென்றாகி பொருள்கொள்வதும் உயிரே. உயிரில் எழுக என் சிற்பம் என்று அவர் உறுதிகொண்டார். தன் கலையை எழுப்ப பேரனல் கொண்ட கருவறை ஒன்றை அவர் நாடினார். அனல் ஓங்கிய உயிர் எது புவியில் என்று நோக்கிக்கொண்டு காடுகளில் நடந்தார்.

யானையென பெருகிய தசைத்திரளைத் தூக்கியலையும் உயிரனலே ஆற்றல்கொண்டது. சிம்மமென முழங்குவது சினம் மிக்கது. செம்பருந்தென ஆன உயிர் விரைவெழுந்தது. சிற்றெறும்பென ஆனதோ கணம்கோடியெனப் பெருகுவது. அனைத்துமான உயிர் ஒன்று இருக்கவேண்டும் புவியில். அவர் களைப்புடன் அமர்ந்த புதர்காட்டில் ஒரு யானை தன் மைந்தனிடம் சொன்னது “கவ்விச்சுருட்டிச் செயலற்றதாக்கும் நாகங்களைப்பற்றி எச்சரிக்கை கொள்க, மைந்தா!” அக்கணமே சிம்மம் ஒன்று தன் குருளையிடம் “சீறும் பாம்பின் நஞ்சுக்கு நிகரான எதிரி உனக்கில்லை, குழந்தை” என்றதைக் கேட்டார். செம்பருந்து ஒன்று தன் குஞ்சிடம் “நீளும் நாவின் விரைவுக்கு நம் விழி செல்லமுடியாது என்று கொள்க!” என்றது. அன்னை எறும்பு புற்றுக்குள் அமர்ந்து சொன்னது “பெருகுவதில் நமக்கு நிகர் அது ஒன்றே. எனவே நம் புற்றுகளை காத்துக்கொள்க!”

த்வஷ்டா நாகங்களின் முதல் தந்தையான தட்சனின் மகள் தனுவை மணந்தார். அவளுக்குள் எரிந்த நெருப்பில் உருகிக் கரைந்தது அவரது சித்தம். அவள் கருவறையில் எழுந்த மைந்தன் சிம்மப்பிடரியும் சிறகும் நாகங்களின் உடலும் யானையின் தந்தங்களும் கொண்டிருந்தான். வளர்ந்துகொண்டே இருப்பவன் என்னும் பொருளில் அவர் அவனை விருத்திரன் என்றழைத்தார். அவன் உகிர்கொண்டு கிழித்தான். தந்தங்களால் சரித்தான். பறந்தெழுந்தான். நெளிந்து இருளாழத்தில் மூழ்கினான். அவனை வெல்லும் எவ்வுயிரும் மண்ணில் இருக்கவில்லை.

விருத்திரனுக்கு அனைத்து அறிவுகளையும் தந்தை அளித்தார். அனைத்து போர்க்கலைகளையும் தாய் அளித்தாள். இளைஞனான விருத்திரன் தன்னந்தனியாக நடந்துசென்று மேற்கே வெந்துசிவந்த செம்புலன்களுக்கு அருகே,   மூன்று பேராறுகள் பொற்களி சுமந்து வந்து கடல்காணும் முகப்பில் ஏழு கடல்கள் சூழ்ந்த தீவு நிலமொன்றை அடைந்தான். அங்கிருந்த பெரும் சிதல்புற்றின் மேல் அமர்ந்து நாகமொழியில் சீறி சிதல்களை அழைத்தான். அவனை அணுகி வணங்கிநின்ற சிதல்குலங்களின் நூற்றெட்டுதலைவர்களிடம் தனக்கு ஒரு வெல்லமுடியா பெருங்கோட்டையை அமைக்கும்படி ஆணையிட்டான்.

ஆயிரம்புற்றுகளை எழுப்பி அவை உருவாக்கியதே முதல்கோட்டை. அதற்குள் மேலும் மேலும் கோட்டைகளை எழுப்பிக்கொண்டே இருந்தன அவை. அந்நகர் புற்றிகபுரி என்றழைக்கப்பட்டது. அதன் புற்றுகள்தோறும் பன்னிரண்டாயிரம் நச்சுநாகங்கள் காவல்காத்தன. அவற்றின் இமையாவிழிகள் பத்து திசைகளிலும் நோக்கியிருந்தன.

புற்றிகபுரியில் ஒன்பது கோட்டைகள் முதலில் எழுந்தன. அவை தொண்ணூற்றொன்பது பெருங்கோட்டைகளாயின. கோட்டைக்குள் கோட்டையென அவை விரிந்தபடியே சென்றன. ஒவ்வொருநாளும் எழுந்து ஒரு புதுக் கோட்டையைக் கண்டனர் அந்நகர் வாழ்ந்த அசுரர். அந்நகரின் புகழ் வளரவே அசுரகுடிகள் நான்கு திசைகளிலிருந்தும் அங்கு சென்று குடியேறின. புற்றிகபுரி  வளர்ந்து அங்கே செல்வம் பெருகியது. வணிகர்களும் பாடகர்களும் புலவர்களும் அந்நகர்நோக்கி வரலாயினர்.

கருவூலம் செழித்ததும் விருத்திரன் வேள்விகளைத் தொடங்கினான். நூற்றெட்டு அசுரவேள்விகளை முடித்து மண்ணிலுள்ள அத்தனை அரசர்களையும் திறைகட்டும்படி சொன்னான். எட்டுத் திசைதேவர்களையும் வென்றான். பின்னர் விண்புகுந்து அமராவதியின் அரியணையில் அமரும்பொருட்டு இந்திரவிஜயம் என்னும் பெருவேள்வி ஒன்றைத் தொடங்கினான். அவ்வேள்வி ஆயிரத்தெட்டு நாட்களாக இரவும்பகலும் ஒழியாத அவிப்பெருக்குடன் அணையாத அனலுடன் நிகழ்ந்தது.

அமராவதியில் இந்திரன் அமைதியிழக்கலானான். முதலில் அவன் கனவில் வெண்ணிற இறகு ஒன்று காற்றில் மிதப்பது தெரிந்தது. அது என்ன என்று நூல்களிலும் அறிஞரிலும் உசாவினான். அவர்களால் விடையளிக்க முடியவில்லை. பின்னர் அவன் ஆழ்ந்து அமைதியிலமைந்திருக்கையில் செவிக்குள் ஒரு நரம்புத்துடிப்பென மெல்லிய அதிர்வொன்று கேட்டது. பின்னர் அவ்வொலி வலுக்கலாயிற்று. குறுமுழவு ஒன்றின் தொலைவொலி. அவன் கனவில் ஒரு வெண்ணிறப் புகைக்கீற்றைக் கண்டான். குறுமுழவொலி பெருமுழவின் அதிர்வாகியது. அவன் கனவில் வெண்முகிலொன்று அணுகுவதைக் கண்டான்.

ஒருநாள் காலையில் அவன் போர்முரசின் முழக்கம் அது என்று நன்கறிந்தான். அன்று கனவில் வெண்களிற்றில் ஏறிவரும் விருத்திரனின் தோற்றத்தைக் கண்டான். அமைச்சரை அழைத்து நிகழ்வதென்ன என்று நோக்கினான். விருத்திரன் இந்திரவுலகுக்கு படைகொண்டு எழவிருக்கிறான் என்றனர். “அசுரர் அவனுடன் இணைந்து பெருகியிருக்கின்றனர். வேள்விப்பயனுடன் அவர்கள் போருக்கெழுந்தால் அவனுடன் எதிர்நின்று களமாட நமக்கு ஆற்றலில்லை” என்றனர் தேவர். “அவன் வேள்வி முடியலாகாது. அதன்பின் இந்திரஅரியணை உங்களை ஏற்காது” என்றனர் அமைச்சர்.

பெரும்படையுடன் இந்திரன் புற்றிகபுரிமேல் போருக்குச் சென்றான். விண்ணில் அவன் முகில்படை திரண்டது. மின்கதிர்கள் சுழன்று சுழன்றறைந்தன. இடியோசை கேட்டு நாகங்கள் வெருண்டு சீறிய ஒலி புற்றிகபுரியில் புயல்போல ஒலித்தது. விண்கிழிந்து கங்கைப்பெருக்குகள் விழுந்ததுபோல நகர்மேல் மழை பொழிந்தது. இடியும் மின்னலுமாக இந்திரனின் படைக்கலங்கள் நகரின் நண்ணமுடியாத பெருங்கோட்டைகளை தாக்கின.

நூற்றெட்டுமுறை இந்திரன் புற்றிகபுரியைத் தாக்கினான். நகரின் புற்றுக்கோட்டைகள் மின்படைக்கலம்கொண்டு பிளந்து இற்றுக் கரைந்து வழிந்தோடின. ஆனால் அவை மயிர்க்கற்றைகள்போல சிலிர்த்து எழுந்துகொண்டுமிருந்தன. போர்முடிந்து கை சலிக்கையில் கோட்டைகள் முந்தைய உயரத்தைவிட மேலாக மீண்டும் எழுந்து நிற்பதை இந்திரன் கண்டான். நெஞ்சு ஓய்ந்து அவன் அமராவதிக்கு வந்து அமர்ந்தான்.

“அது உயிருள்ள கோட்டை, அரசே. அதை வெல்லவே முடியாது” என்றனர் தேவர். “உயிரின் அனல். அதை அணைக்க முடியாது. அழியுந்தோறும் பெருகுவது அது” என்றனர் அமைச்சர்.  சோர்ந்து அமர்ந்திருந்த இந்திரனின் காதுகளில் போர்முரசின் ஓசை பெருகிக்கொண்டிருந்தது. பின்னர் தேவியின் சொல்கூடக் கேட்காத முழக்கமாக அது ஆயிற்று. இருகைகளாலும் காதுகளைப் பொத்தி உடல்சுருட்டி நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.

அவனைச் சூழ்ந்திருந்த நீர்த்துளிகள் நடுங்கி உதிரத்தொடங்கின. பின்னர் அவன் மாளிகைக்கூரைகள் இற்று சரிந்தன. அங்கே ஒளிகொண்டு தொங்கிய விண்மீன்கள் விழுந்து சிதறின. பின்னர் அவன் நான்கு திசைகளையும் மூடும் பேரொலியுடன் எழுகடல்போல அசுரர் வருவதைக் கண்டான். அமராவதியின் கோட்டைகள் இற்றுச்சரிந்தன. தெருக்களில் வெற்றிக்கூச்சலுடன் அசுரர்படைகள் நிறைந்து கரைமுட்டிப் பெருகின.

“இனி இங்கிருக்கலாகாது அரசே, விரைக!” என்றனர் அமைச்சர். இந்திரன் ஒரு பொன்வண்டாக மாறி பறந்துசென்று மறைந்தான். அவன் அமைச்சரும் துணைவரும் பொற்தாலங்களில் வெண்ணிற ஒளிகொண்ட பாரிஜாத மலர்களுடன் சென்று கரியயானைமேல் ஏறி அமராவதிக்குள் நுழைந்த விருத்திரனை எதிர்கொண்டு வரவேற்றனர். நகருக்குள் நுழைந்ததும் விருத்திரன் இந்திரனின் ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டான். அமராவதியின் தெருக்களினூடாக தேவர்கள் மலர்மழை சொரிய மாளிகை நோக்கி சென்றான்.

KIRATHAM_EPI_41

அங்கே அரண்மனை முகப்பில் இந்திராணி அசுரப்பெண்ணாக உருவம்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவளைச் சூழ்ந்து மங்கலப்பொருட்களுடன் சேடியர் நின்றனர். அவனை நீரும் மலரும் சுடரும் காட்டி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். விருத்திரன் இந்திரனின் மணிமுடியைச் சூடி அரியணையில் இந்திராணியுடன் அமர்ந்தான். இனி வேதியர் அளிக்கும் அவியில் பாதி தனக்குரியதென்று ஆணையிட்டான். அரசர்சூடும் மணிமுடிகள் அனைத்திலும் தன் காலடிப்புழுதியின் பரு ஒன்று அருமணியென பதிக்கப்பட்டாகவேண்டும் என்றான்.

இந்திரனின் வியோமயானம் பறந்து மண்ணுக்குச் சென்று கங்கைக்கரையில் ஒரு புற்றுக்குள் அமர்ந்து தவம் செய்திருந்த த்வஷ்டாவை அழைத்துவந்தது. இந்திரனை வென்று அரியணையில் ஒளியுடன் அமர்ந்திருந்த மைந்தனைக்கண்டு அவர் விழிபொங்கினார். “என் அனல் இன்று அவிந்தது. நிறைவுற்றேன். இனி என் உயிர் உதிரும். விண்திகழ்வேன்” என்றார். தேவர் புடைசூழச் சென்று ஏழுகடல்களிலும் தன் மூத்தவர்களான பலனுக்கும் திரிசிரஸுக்கும் நீத்தார்கடன்புரிந்து நிறைவுறச்செய்தார்.

மைந்தரை விண்ணேற்றியபின் த்வஷ்டா தன் உடலை உதறினார். அவரிலிருந்து  ஆடி ஒளியை திருப்பியனுப்புவதுபோல உயிர் எழுந்து விண்ணுக்குச் சென்றது. விண்ணில் ஒரு சிவந்த ருத்ரனாக அவர் சென்றமைந்தார். அவரை நான்கு ருத்ரர்களில் ஒருவராக அசுரர் வழிபட்டனர். விருத்திரேந்திரனின் கோல்கீழ் ஆயிரமாண்டுகாலம் புவியும் வானும் செழித்தன.

முந்தைய கட்டுரைவழிகாட்டிகள்
அடுத்த கட்டுரைவீட்டைக் கட்டிப்பார்