மத்தகம் (குறுநாவல்) : 1

“ஒம்மாணை அண்ணா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச் சவத்தையும் வெஷம் வச்சு கொன்னுட்டு நானும் சாவேன். பாத்துக்கிட்டே இரும்…” என்றான் சுப்புக்கண். நான் ஓரக்கண்ணால் ஆற்று நீரில் கிடந்த கேசவனைப் பார்த்து விட்டு “சும்மா கெடந்நு செலைக்காம வந்து சோலிமயிரைப் பாருடே….” என்றேன்.

“பின்ன அல்லாம, அண்ணா, நானும் ஒரு மணியனாக்குமே…” என்றான் சுப்புக்கண். “ஒரு வாய்ச் சோத்துக்கு ஊம்பி நடந்தாலும் மனுசன் மனுசனுல்லா…” நான் அவன் மண்டையை ஓங்கித் தட்டி “எந்திரிச்சு வாலே… ஏமான் கண்டா இன்னைக்கு உனக்க தலை ஆத்துமணலிலே கெடந்து உருளும் பாத்துக்க. வாறியா, இல்லியா?” என்றேன்.

சுப்புக்கண் லேசாக விசும்பி முகத்தைத் துடைத்தபிறகு எழுந்து வந்தான். கேசவன் கரும்பாறைகள் நடுவே பாறை போல ஆற்று நீரில் படுத்துக்கிடந்தது. அருகே மூத்த பாப்பான் எலவள்ளி சீதரன் நாயர் ஒரு பாறை மீது அமர்ந்து கால்கள் நடுவே வெள்ளிப்பூண் கட்டிய கட்டெறும்புநிற பிரம்பை வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். கேசவனின் துதிக்கை நீருக்குள் இருந்து மலைப்பாம்பு போலவளைந்து எழுந்து ‘புஸ்ஸ்’ என்று சீறியது. அவனுடைய காதுகள் படகுத்துடுப்புப் பட்டைகள் போல நீரோட்டத்தை அளைந்தன. வயிறு பம் என்று எழுந்து தோல்வரிகளில் நீர் வழிய நீரோட்டத்தை சுழித்துக் கலகலக்கச் செய்தபடித் தெரிந்தது. சீதரன் நாயர் வாயில் நிறைந்த தாம்பூலத்தை எட்டி நீரிலேயே துப்பிவிட்டு “எழிச்சி வேகம் வரீனெடா நாயிகளே” என்று சொன்னார்.

“பலபட்டற எரப்பாளி. அவனுக்க மத்த காலையும் ஆனை சவிட்டட்டு” என்று தலைகுனிந்து முணுமுணுத்தபடி சுப்புக்கண் என்னுடன் வந்தான். சீதரன் நாயரை எழு வருடம் முன்பு கேசவன் தூக்கிச் சுழற்றிப் போட்டு அவரது இடதுகாலின் மீது தன்னுடைய காலை மெதுவாகத் தூக்கி வைத்து விட்டு எடுத்தான். மூங்கில் ஒடியும் ஒலி. கேசவன் ஒரு கணம் செவியாட்டலை நிறுத்திவிட்டு தலையை குலுக்கி பின்னடைந்தான்.

கீழே கிடந்த சீதரன் நாயர் ஒடிந்த இடதுகாலை நீட்டி பிடித்தபடி இரு கைகளையும் வலதுகாலையும் ஊன்றிக்கொண்டு “கொந்நே, என்னை ஆனை கொந்நே… டே  அருணாச்சலம்… பெரமு ஓடிவாடா… ஓடிவாடா” என்று கதறியபடி விலகி எழுதவற்கு முயன்றார். கேசவன் அவர் விலகுவதைக் காதசையாமல் பார்த்துவிட்டு துதிக்கை நீட்டி அவரைத் தூக்கி தன் முன்கால்களுக்கு கீழே போட்டுக்கொண்டது. நானும் சுப்புவும் அருணாசலமும் நாலு பக்கத்தில் இருந்தும் ஓடிவந்தோம். என்ன செய்வதென்று தெரியாமல் “ஆசானே ஆசானே” என்று கூவினோம்.

கேசவன் சதாரணமாக காதுகளை அசைத்துக்கொண்டு ஒரு ஓலையை எடுத்து மெல்லப் பிய்த்து மண்போக முன்னங்காலில் தட்டி விட்டு சுருட்டி நாலைந்து முறை வாய்க்குள் நுழைப்பது போல பாவனை காட்டி பின்பு உள்ளே செருகி, கன்ன எலும்புகள் கரிய தோலுக்குள் அசைய, மென்று தின்ன ஆரம்பித்தது.

ஆசான் கைநீட்டி “பட்டிகளே ஓடிவந்நு என்னெ தூக்கெடா… பட்டிகளே… நந்நி இல்லா நாய்களே” என்று கூவினார்.

நான்ஓடி முன்னால் சென்றேன். கேசவன் இரு செவிகளையும் முன்னால் தள்ளி நிலைநிறுத்தி துதிக்கைதூக்கி மணம் பிடித்தபின் கொம்பும் தலையும் குலுக்கி அலறினான். நான் பாய்ந்து பின்னால் வந்து கல்தூணில் முட்டிக் கொண்டேன். அதற்குள் திருவட்டாறு கோயில் வட்டமே அங்கு கூடிவிட்டது. மறைக்குடை பிடித்த இரண்டு அகத்தம்மமார் முகமெல்லாம் மூடுகோடியால் மூடிக்கொண்டு நின்று வாயில் கைவைத்து வேடிக்கை பார்த்தார்கள். அவர்களுக்கு அகம்படி வந்த அச்சிமார் தளர்ந்த முலைகளுக்குமேல் வெள்ளிமணிமாலையும் உச்சிக் கொண்டையில் கோயில் பிரசாதமான பிச்சிப்பூவும் சூடி திறந்த வாயுடன் பார்த்தனர். கோயில் வேலைக்காரர்களும் காவல்காரர்களும் வந்து சேர்ந்து சேர்ந்து நின்று காக்காய் கூட்டம்போல சளசளவென்று பேசிக்கொண்டார்கள்.

“ஒற்ற சவிட்டு, நின்னாணை அம்மாச்சா! அவனுடெ கூம்பு சம்மந்தி ஆயிட்டுண்டாவும்.”

“கேசவன் கொந்நால் அவனு மோட்சமெடே”

“ஒருபாடு நாள் கொண்டுள்ள பகையாக்கும்.”

ஸ்ரீகாரியம் ராவுண்ணிமேனன் படி இறங்கி வந்தார். “எந்தருடே பரமா எந்து காரியம்?” என்றார்.

“ஆனை.. ஆசானை…” என்று சுட்டிக் காட்டினேன். அவர் யானையின் கால்கீழே கிடந்த ஆசானைப் பார்த்தபடி கடைவாயில் ஊறிக்கிடந்த பாக்கை நாவால் நெருடி எடுத்தார்.

பிறகு “டே, ஒரு நல்ல முளை கொண்டு வந்து அவனை நீக்கி எடுடே” என்றார்.

“வேண்டா, வேண்டா. ஆனைக்கு கோபம் வரும்…” என்று ஆசான் கதறினார்.

“பின்ன? வலிய எஜமான் தரிசனத்தினு வருந்ந சமயம். ஆனை அவனை கொந்நால் கொல்லட்டே. சவத்தை எடுத்து குழீச்சு இடாம்..” என்றபின் மேனோன் பின்பக்கமாக நடந்தார். அவரைக் கண்டதும் கூடிநின்ற கும்பலில் இருந்த கோயில் வேலைக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்றிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. தூரத்தில் நின்ற ஸ்ரீகாரியம் மேனோன் உரக்க “டேய் மயிராண்டி, நீ எந்நு செய்யும் எந்நு எனக்கு அறியுக வேண்ட. சவமோ ஆளோ இப்பம் அவன் எடுத்து மாற்றணும்…” என்றார்.

நான் யானையை மெதுவாக நெருங்கினேன். “வாடா வாடா…” என்று ஆசான் என்னை நோக்கிக் கதறினார். நான் என் முழு பலத்தையும் கால்களுக்குக் கொண்டு போனாலும் என்னால் இம்மியிம்மியாகத்தான் நகரமுடிந்தது. என் வாயும் தொண்டையும் உலர்ந்திருக்க மொத்தக்குடலும் சுருண்டு ஒரு பந்தாக வந்து மூச்சை இறுக்கிக்கொண்டது.

நான் நெருங்கி வருவதைக் கண்ட கேசவன் வயிறு அதிர பம்ம் என்ற ஒலி எழுப்பியது. கோயிலின் பெருமுரசு மீது கோலால் வருடுவது போன்ற ஒலி. எனக்கு அதன் பொருள் தெரியும். கேசவன் ஆசானை துதிக்கையால் தூக்கியது. ஆசான் “பகவதீ என்றெ பகவதீ!” என்று உடைந்த குரலில் கூவினார். “ரெட்சிக்கணே பகவதீ…” என்று அவர் கூவியபோது குரல் தேய்ந்து அடைத்துக்கொண்டது. தாறுமாறாக கைகால்கள் உதைத்துக் கொண்டன. யானை அவரைத் தூக்கி தன் நான்கு கால்கள் நடுவே போட்டுக் கொண்டது. தரையில் விழுந்ததும் அவர் வலி தாளாமல் “பகவதீ” என்று கம்மிய குரலில் கூவிவிட்டு எழுந்து அமர்ந்தார். தனக்குச் சுற்றும் நின்ற நான்கு கரிய கால்களையும் பீதியுடன் பார்த்து சிறுகுழந்தைகள் பயத்தில் செய்வதுபோல “வேண்டா வேண்டா…” என்று கண்ணீர் வழிய கெஞ்சிக் கையை ஆட்டினார். அந்தக் கால்களிடமே அவர் பேசுவது போல இருந்தது.

நான் யானையைப் பார்த்தபடி நின்றேன். அதன் கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல இருந்தன. வரி வெடித்த துதிக்கை மெல்ல முன்னும் பின்னும் ஊசலாடியது. ராட்சதக் குழந்தை ஒன்றின்பல்வரிசை போல பெரிய நகங்கள் பரவிய தூண்கால்களில் ஒன்று சற்று முன்னகர்ந்து நின்றது. நான் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டேன்.

“கேசவா… உடய தம்புரானே , எஜமானே! என்னை காப்பாத்து மகாராஜாவே…” என்று உரக்கக் கூவியபடி நேராக யானையை நோக்கிப் பாய்ந்தேன். ஆனால் என் அகவேகம் கால்களை அடையாததனால் மிக மெல்லத்தான் என்னால் செல்ல முடிந்தது. யானையை நெருங்கியபின் நான் கண்களைத் திறந்தேன். என்னுடைய பார்வையை முழுக்க நிரப்பியபடி கரிய உடல். உயிரில்லாத பாறை அல்லது இரும்பு போல ஒரு பரப்பு.

யானை அசைவில்லாது நின்றது. நான் அப்போதும் உயிரோடிருப்பதை என்மனம் நம்ப மறுத்தது. இரு வெண் தந்தங்களும் பல்லக்குப் பிடிகள் போல என்னை நோக்கி நீண்டிருந்தன. எத்தனை ரத்தம் தோய்ந்து உலர்ந்த கொம்புகள். காயங்குளம் மூன்றாம்நாள் போர் முடிந்து திரும்பியபோது கேசவனை மகராஜாவே வந்து தழுவிக்கொண்டு மத்தகத்தில் குத்தி அறைந்து சிரித்தார். கேசவனை குளிப்பாட்டலாம், ஆனால் கொம்புகளில் பூசியிருந்த ரத்தம் மட்டும் அப்படியே இருக்கவேண்டும் என்றார்.

அரண்மனைக் குளக்கரையில் கேசவனை நிறுத்தி வைத்து குடம் குடமாக நீரள்ளி விடடுக் கழுவினோம். கரிய உடலில் இருந்து ரத்தம் நீரில் கலந்து தரையெங்கும் சிவப்பாக ஓடியது. அடிவயிற்றில் குடல்கள் தொங்குவதுபோல ரத்தநீர் சிவப்பாக வழிந்தது. ரத்தம் வந்து கொண்டே இருப்பதைப் பார்த்து கேசவனுக்குத்தான் ஏதேனும் அடியா என்று ஆசான் ஓடிப்போய் வைத்தியர் அரசுமூட்டில் பார்க்கவன் தம்பியைக் கூட்டி வந்தார். கேசவனுக்கு பெரிய காயம் ஏதுமில்லை. பத்துநாளாக கொம்பில் ரத்தம் அப்படியே இருந்தது. கரிய தோல் மாதிரி பிறகு உரிந்து வந்தது. ஒவ்வொரு நாளும் மகாராஜா வந்து பார்த்தார்.

பெரிய தந்தங்கள் ஆட கேசவன் தலையைக் குலுக்கி மெல்லப் பின்னால் நகர்ந்தது. கொம்பு குலுக்கி பின்னால் நகர்ந்த யானை என்பது ஏற்கனவே அம்பைத் தொடுத்துவிட்ட வில் போன்றது.ஆனால் கேசவன் ஆசானைத் தன் கால்களுக்குப் பின்னாலிருந்து தூக்கி ஒருமுறை தன் மத்தகத்துக்குக் கொண்டுபோய் ஆட்டிவிட்டு கொம்புகள் மீது படுக்க வைத்துக் கொண்டது. நான் அதன் கண்களைப் பார்த்தேன். ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல, தெரிந்தது போல் உணர்ந்தேன்.

முன்னால் சென்று கொம்புகளை அணுகி துணிந்து ஆசானை என்தோளில் தூக்கிக் கொண்டு பின்னால் திரும்பி ஓடினேன். கரிய நதி துரத்தி வருவதுபோல என்னைப் பிடிக்க கேசவனின் தும்பிக்கை வருகிறது. இருட்டு வருவதுபோல சத்தமில்லாமல் கேசவனே வருகிறான். எல்லாம் பிரமைகள். நான் ஆசானுடன் வெளியே வந்து விட்டேன். சுப்புக்கண் என்னையும் ஆசானையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான். அருணாச்சலம் என்னைப் பிடித்துக் கொள்ள நான் அவர் கைகளில் தளர்ந்து விழுந்தேன்.

திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் கேசவன் சாதாரணமாக ஓலை மென்று கொண்டிருந்தான். எல்லாம் கனவா என்று பட்டது. விக்ரமாதித்யன் கதையில் அவன் பாதாள லோகம் சென்று நாககன்னிகைகளைக் கல்யாணம் செய்துகொண்டு ஆயிரம் வருடம் வாழ்ந்து நூற்றியெட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு பிரிந்து திரும்பிவரும்போது பூமியில் ஒரு நொடிதான் ஆகியிருக்கும். அதுபோல ஒரு மாய அனுபவம். ஒரு சில கணங்களே ஆகியிருந்தன. என் இடுப்பு வேட்டி என் மூத்திரத்தால் நனைந்திருந்தது. உடல் வியர்வை வழிந்து குளிர்ந்திருந்தது.

“பரமண்ணா, நீ ஆசானை காப்பாத்திட்டே” என்று சுப்புக்கண் குதித்தான்.

“ஆஹா அஹ்ஹஹா” என்று நடனமாடினான்.

“சும்மா கெடலே சவத்தெளவுக்குப் பெறந்த பயலே… என்னமோ அந்த பூதத்துக்க அப்புடித் தோணியிருக்கு எளவு சீவன் கெடக்கணும்னு நம்ம தலையெழுத்து” என்றேன். சுப்புக்கண் திரும்பிப் பார்த்து “அண்ணா, நீரு அவனை ராஜாவேண்ணுல்லா விளிச்சேரு? அதாக்கும் அவன் உன்னை விட்டது” என்றான். திரும்பி யானையைப் பார்த்தேன் ஒரு இருண்ட அறை. கண்ணுக்குத் தெரியாத ஒரு கோயிலின் கருவறையின் இருட்டு மட்டும் தனியாக நிற்கிறது. அதற்குள் நாம் அறியாத ஒரு வினோதமான தெய்வம் குடியிருக்கிறது. மலைத்தெய்வம். தீராத வன்மமும் அருளும் கொண்டது.

நான் ஆற்றுக்குள் இறங்கி அருகே சென்றதும் பாறையில் இருந்த ஆசான் என்னிடம் “என்னடே சொல்லுகான் அவன்?” என்றார். “ஒண்ணுமில்ல ஆசானே பயலுக்கு ஒரு செறிய காய்ச்சலு… காய்சலுண்ணு சொன்னா உள்காய்ச்சலு. கை நடுக்கம். வாதமுண்ணு தோணுது.”

ஆசான் உதட்டைக் கோணலாக்கி “வாதப் பனியா?” என்றார்.

“ஆமா ஆசானே”

“டேய் ஆனைக்க காலுக்குள்ள நூந்து கொண்டு வாறதாக்கும் வாதப்பனிக்கு கை கண்ட மருந்து. வரச்சொல்லுடே அவனை” என்றார்.

“ஆசானே…” என்று நான் மெல்ல இழுத்தேன்.

ஆசான் சுப்புக்கண்ணிடம் “வாடே… வந்நு வெள்ளம் கோரி ஆனை மேல விடுடே” என்றார்.

ஆசானின் ஒடிந்தகால் சூம்பிப் போய் பிள்ளைவாதக்கால் போல ஆகி எண்ணை பூசிப்பூசிக் கறுத்து கருவேலங்குச்சியாக ஆகி பாறை மீது தூக்கி வைக்கப்பட்டிருந்தது. யானையின் கழுத்தில் வெள்ளாரங்கல்லால் தேய்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம் சுப்புவைப் பார்த்து புன்னகை செய்தான்.

“எறங்கி சோலி செய்யுடே…” என்றார் ஆசான். நானும் வெள்ளாரங்கல்லை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. சுப்பு “எக்கப்போ…” என்று அலறியபடி திரும்பி ஓடினான்.

“பிடிலே அவன… ஏல பிடிலே அவனை” என்றார் ஆசான். நான் பேசாமல் நின்றேன். “டேய் சுப்பு, இப்ப இங்க நீ வரணும். வரலேண்ணா நீ எங்கபோனாலும் உன்னைய ஆளுவச்சு பிடிச்சு கொண்டு வருவேன்…” என்றார் ஆசான்.

“ஆசானே தயவு காட்டணும். பெத்த மகனா நினைச்சு கருணை காட்டணும்…”

“வாடே கிட்ட… வரப்போறியா இல்லியா?”

“ஆசானே அடியனைக் கொல்லப்பிடாது. பாவமாக்கும். கொல்லப்பிடாது ஆசானே…”

சுப்பு முழந்தாளிட்டு, மார்பில் கைகூப்பி, முகம் கோண, கதறி அழுதான். “டேய் வாடே” என்றார் ஆசான்.

குளிர்ந்த நீரில் குளிக்கப் போகிறவன் போல சுப்பு குனிந்து நடுநடுங்கி அழுதபடி வந்தான். நீரை நெருங்காமல் நின்று “ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான்.

நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும்.

“அப்பம் கதை அதாகும் இல்லியா? எண்ணைக்கு முதல் இந்த கத நடக்குது?”

“ஒரு வாரமாட்டு ஆசானே… அதுக்கு மின்ன நான் அதுக்க அடிமயாட்டுல்லா இருந்தேன். ஒரு வாரமாட்டு என்னை அவன் அடுக்க விடுறானில்லை.”

ஆசான் என்னிடம் “நீ என்னலே சொன்னே, மயிராண்டி, அவனுக்கு குளிர் காய்ச்சல் இல்லியா? லே, ஒரு வாரமா இவன் ஆனைக்க பக்கத்தில் போறதில்லை. அதை நானும் பாத்துட்டுதான் இருக்கேன். பிண்டம் அள்ளுதான், ஓலை கொண்டுவந்து போடுதான். ஆனைக்கு எட்டுத தூரத்துக்குள்ள போறதில்ல. இன்னைக்கு பாத்திடுவோம்னாக்கும் வந்தேன். இவன் தண்ணியில காலு வச்சதுமே ஆனை அலறிச்சு பாத்தியா அப்பமே எனக்கு சங்கதி பிடிகிட்டிப் போச்சு” என்றார். சுப்புக்கண் அப்படியே கரையில் குந்தி அமர்ந்து விட்டான்.

“என்னவாக்கும் நீ செய்த காரியம்?” என்றார் ஆசான்.

“ஒண்ணும் இல்ல ஆசானே… சத்தியமாட்டு ஒண்ணும் இல்ல…”

“சொல்லுலே. வந்தா சேத்து வெட்டிப்பிடுவேன் பாத்துக்க.”

சுப்பு “ஆசானே, ஓலை வைக்குத நேரத்தில பங்கிவந்தா. ஒரு நாலு நல்ல சொல்லு சொல்லிட்டு நின்னேன் ஆசானே. மூணு வட்டம் உறுமிக்காட்டினான். நான் கேக்கல்ல நாலாம் வட்டம் உறுமினப்ப நான் ஓடிப் போனேன். அப்பிடியே ஒரு தட்டு தட்டினான். எந்திரிச்சு ஓடிப்போயிட்டேன். அப்பிடி ஒரு கொல விளி. அதுக்கும்பிறகு அருவத்தில போக விடுறான் இல்லை. நான் போனா கொம்பு குலுக்கி ஒரு விளி. ஆசானே அவன் என்னைக் கொன்னு போட்டிருவான் ஆசானே… என்னைய விட்டா நான் எங்கிணயாம் போயி மண்ணு சுமந்து ஜீவிப்பேன் ஆசானே.”

ஆசான் எங்களைப் பார்த்து “சோலி மயிரைப் பாருங்கலே. இங்க என்ன பார்வ?” என்றார்.

நாங்கள் இருவரும் வேகமாக யானையைத் தேய்க்க ஆரம்பித்தோம். நான் ஒன்பது வருடங்களாக கேசவனைக் குறிப்பாட்டுகிறேன். அருணாசலம் அண்ணன் பதினேழு வருடங்களாகக் கூடவே இருக்கிறார். ஆசான் நாற்பது வருடங்களாக. எல்லாருக்கும் கேசவனை நன்றாகவே தெரியும். பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. சொல்லப்போனால் ஆசானிடமும் எங்களிடமும் துரட்டி, குத்துக்கம்பு, கத்தி, மடக்குவாள் எதுவுமே இல்லை. ஆசானின் வெள்ளிப்பூணிட்ட பிரம்பு மட்டும்தான். அதை வைத்து கேசவனை லேசாகத் தட்டலாம். அவன் வேறு எதையாவது பார்த்து நின்றிருந்தான் என்றால் கூப்பிடுவதற்காக. கேசவனே கைகளையும் கால்களையும் தூக்கிக் காட்டுவன். புரண்டு படுப்பான். அங்கெல்லாம் தேய்க்க வேண்டியதுதான்.

கேசவன் எழுந்து நீர் வழிய மழைக்காலப் பாறை போல கன்னங்கரேலென நின்றான். வெளுத்த பெண்ணின் பெருந்தொடை போன்று பெரிய கொம்புகள் என் தலைக்கு மேல் இருந்தன. தரை தொட்டபிறகும் கால் பங்கு மிஞ்சியிருக்கும் துதிக்கை. நெற்றியிலும் காதிலும் பரவிய சிவப்பு மாம்பூத் தேமல். காதுகள் வீசியபோது தண்ணீர் தெறித்தது. யானை எழுந்து மெல்ல கரை நோக்கிச் சென்றதும் சுப்புக்கண் எழுந்து ஓடி இலஞ்சி மரத்தடியில் பதுங்கினான். யானை கரையில் கிடந்த அதன் கட்டுச்சங்கிலியை எடுத்து நீரில் அலம்பி கையில் வைத்துக் கொண்டது. வெறும் வாயை மென்றபடி மெதுவாக காலெடுத்து வைத்து கரைக்கு வந்தது.

ஆசான் “எங்கல அவன்?” என்றபடி தேடி, சுப்புவை பார்த்ததும் “எலெ, வந்து மகராஜன் காலில விழுந்து மன்னிப்பு கேளுலே…” என்றார்.

“ஆசானே” என்று சுப்புக்கண் அலறினான்.

“லே, இனி உன் கதிய தீருமானிக்க வேண்டியது ஆனையாக்கும். காலில வந்து விழு… சொல்லணுமா வளக்கணுமாண்ணு அவன் சொல்லட்டு.”

“ஆசானே ஆசானே ஆசானே…” என்று கதறியபடி சுப்புக்கண் அப்படியே தரையில் அமர்ந்து அவனை யாரோ பிடித்து இழுப்பது போல மரத்தைப் பிடித்துக்கொண்டான்.

“லே மயிராண்டி, நான் சொன்ன சொல்லைக் கேட்டேண்ணாக்க உனக்கு ஒரு ஜீவிதம் உண்டு. இல்லேன்னா இன்னைக்கே உனக்கு கட்டையும் தீயுமாக்கும்” என்றார் ஆசான். பேசுவதெல்லாம் புரிந்துகொண்ட நிற்பது போல யானை ஆற்று மணல்வெளியைச் சற்று இருட்டாக்கியபடி அப்படியே நின்றது.

ஆசான் “வாறியா, இல்ல, ஆனைய போகச் சொல்லவா?” என்றார். சுப்புக்கண் எழுந்து ஒரு அடி எடுத்து வைத்து உடனே கால்களில் பலமில்லாமல் விழுந்துவிட்டான். மீண்டும் எழுந்து பிரமையில் நடந்து வந்தான். அவன் கண்களைப் பார்க்க கிறுக்கனின் கண்கள் போலிருந்தன. இரு கைகளையும் கூப்பியபடி அப்படியே தரையில் அமர்ந்து கொண்டான்.

ஆசான் “போக்கு” என்றார். யானை மெல்ல காலெடுத்தது. பாறைக்குள் அசைவுகள் பரவின. கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது. சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். யானை சாதாரணமாக அப்படியே நடந்து, பெரும் கால்களை தூக்கி வைத்து  கற்படிகளை நோக்கிச் சென்றது. அது மிக நிதானமாக பஞ்சுமூட்டைகள் போல கால்களை வைத்துச் செல்வது போலிருந்தது. நான் சுப்புக்கண்ணை நோக்கி ஓடினேன். அவன் உடலில் யானைக்காலிலிருந்து விழுந்த மணல் பரவியிருந்தது.

“சுப்பு எந்திரிலே… லே சுப்பு எந்திரி… உன்னை ஆனை விட்டுப்போட்டு… லே.”

சுப்பு எழுந்து “ஆரு? ஆரு அண்ணா?” என்று கிறுக்குக் கண்களால் கேட்டான்.

“லே… நீ சாவல்ல. உன் கணக்கு தீந்து போச்சு.”

“ஆ!” என்று வாய் பிளந்த சுப்புக்கண் திரும்பி யானையைப் பார்த்தான்.

படிக்கட்டுக்கு பக்கவாட்டில் சரிவான யானைப்பாதை கற்களை அடுக்கி கட்டப்பட்டிருந்தது. அதில் மெதுவாக கேசவன் ஏறிச் சென்று கொண்டிருந்தான். ஆசான் மெதுவாக ஒற்றைக்காலை ஊன்றி மறுகாலுக்கு பிரம்பை ஊன்று கொடுத்து படிகளில் ஏறினார். கேசவனின் இடது கொம்பைப் பிடித்தபடிச் சென்ற அருணாச்சலம் திரும்பி என்னைப் பார்த்தான்.

சுப்புக்கண் “ஹீஹீஹீ…” என்று சிரிக்க ஆரம்பித்தான்.

“அண்ணா…வே அண்ணா…”’ என்றபடி என்னைத் தழுவிக்கொண்டான். அவன் உடலின் மணல் என் சருமத்தை உரசியது. “அண்ணா…பரமண்ணா…அண்ணா …” என்று கூவி என்னைப் பிடித்து உலுக்கினான். சிரித்தபடியே எழுந்து இரு கைகளையும் தூக்கி கூச்சலிட்டபடி குதித்தான். குதித்து மணலில் விழுந்து கதறி அழுதான். என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான்.

அன்று சந்நியாகால பூஜையும் ஸ்ரீபலியும் முடிந்தபிறகு கேசவனை கொட்டில் தூணில் தளைத்தபின்பு நான் ஆசானின் அருகே சென்றேன். கொட்டைப் பாக்கை பாக்கு வெட்டியால் தோல் சீவியபடி ஆசான் “எங்கல அவன்?” என்றான்.

“அம்மையப் பாக்கப் போனான்…” என்றேன். அருணாச்சலமும் சுப்புக்கண்ணும் சிரித்தபடி வந்தார்கள்.

“என்னல சிரிப்பு?” என்றார் ஆசான்.

“ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” என்றார் அருணாச்சலம்.

“பின்ன?” என்றேன்.

“நம்ம வடக்கமூட்டு கல்யாணி இவன் மேல ஏறி எறங்கினப்ப போனதெல்லாம் போச்சாம்” ஆசான் பாக்கை வாயில் போடப்போனவர் பொக்கை வாய்திறந்து அக்அக்அக் என்று தவளைபோல சிரித்தார்.

“போவும் மக்களே. சகலதும் போவும். அவன் இப்பம் ஈரேழு லோகமும் கண்டு வந்த விக்கரமார்க்கனாக்குமே…” என்றார் ஆசான்.

“ஒண்ணு சொல்லுகேன், கேட்டுக்கோ. இது ஆனையில்ல, இது நம்ம மகாராஜாவு பொன்னு தம்புரானுக்க கண்கண்ட ரூபம். ஏதொருத்தனுக்கும் அவனுக்க தொழிலாக்கும் மகாராஜாவு. செக்காலைக்கு செக்கு சிவலிங்கம்னு சொல்லுதது மாதிரி …. ஏலே, வடக்குமூட்டு கல்யாணிக்கு மூணு சக்கரத்தோட அவகிட்ட சாயங்காலம் வாறவனாக்கும் மகாராஜாவு…” என்றார் ஆசான்.

“ராஜசேவுகம்னா சும்மா இல்ல. ராஜா நம்ம தெய்வம். தெய்வம் உன்னைக் கொல்லுவாரு, வளத்துவாரு. உனக்கு அதில ஒரு பங்கும் இல்ல கேட்டியா. ராஜாவே இனி இந்த ஜீவனும் தேகமும் உனக்காகக்கும்னு காணிக்க வச்சு விழுந்து போட்டேன்னா நீ ரெட்சப்பட்டே.”

தலை குனிந்தபடி சுப்புக்கண் அமர்ந்து கொண்டான்.

“கெளவிய பாத்தியாடே?” “ம்.” “என்ன சொன்னா?”

“இதொண்ணும் சொல்லல்லை.”

“அது நல்லதாக்கும். இம்மாதிரி காரியங்களை வீட்டாளுகளிட்ட சொல்லப்பிடாது. அதுகளுக்கு என்ன தெரியும்?” ஆசான் பாக்கை அமுத்தி மென்றார்.

“நீ சொன்னேல்லடே, பெத்த மகனை மாதிரி நெனைக்கணும்ணு உன்னை எனக்க கையில தாறப்ப உனக்க அம்மையும் அதாக்கும் சொன்னா. அதுக்கு ஒரு கணக்கு உண்டு. இந்தப் பாடத்தப் படிக்காம ஆனைப்பாப்பானால சீவிக்க முடியாது. அன்னைக்கு நான் குனிஞ்சு சங்கிலி அவுக்கும்பம் தும்பிக்கையால என்னை தட்டினான். முகம்போயி கல்லில உரசினப்ப ‘நாசம்பிடிச்சது’ண்ணு ஒரு சொல் எனக்க வாயில வந்துபோட்டு. அதுக்காக்கும் அந்தக் கெதி எனக்கு…  முப்பது நாளு நாள் கெடந்தேன்லா, ஒலக்கோட்டு வைத்தியருக்க குடிலிலே, காலு ஊணி நடந்த அன்னைக்கு நேராட்டு வந்து கேசவனுக்க கால நோக்கிப் போனேன். ‘உள்ளது தான். மனசில ஒரு வெறுப்பு இருந்தது. அது வாயில வந்து போட்டு… இப்பம் அது இல்ல. நீயாக்கும் எனக்க உடைய தம்புரான். பொறுக்கணும். பொறுக்கல்லண்ணா கொல்லணும் உடயதே’ண்ணு சொல்லிட்டு காலடியில இருந்தேன். ஒண்ணும் சொல்லாம நிக்கான். அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும். கேட்டியாடே பரமா?”.

“உள்ளதாக்கும் ஆசானே” என்றேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஈழ இலக்கியம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 2