ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்

DSC_0101

எண்ணற்ற பலிகளைக் கேட்கும் கொலைத்தெய்வம் போல. நாக்கு நீட்டி நின்றதோ! புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம். இவர்களின் நிழல்களின் கேள்விகளுக்கு. அபத்தம் ஆம் மகத்தான கேள்விகளுக்கான எளிய பதில்கள். பகல் கனவுகளின் பதில்களோ!. தஸ்தாவெய்ஸ்கியும், தல்ஸ்தோயும் சொன்னது. இல்லை. நிச்சயம், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. புகாரினை அழைத்தது லிஸ்ஸிதானே. நம் மனிதகுமாரனின் பதிலாக தேவனின் சொர்க்க ராஜ்ஜியம் குழந்தைகளுக்கானதுதானே. இன்னும் நிழல் துரத்துகிறதே. பதில்கள் எதுவும் சொல்ல முடியாது மர்மமாய் நகர்கின்ற வாழ்வின் நுணுக்கங்களை என்னவென்று சொல்ல.

அசடனான மிஷ்கின் வேறு என்ன செய்ய இயலும். ஆம் நிச்சயம் யாருமே ஏற்றுக்கொள்ள போவதில்லை. பகல் கனவுதானோ எல்லோரையும் நேசிப்பதென்பது. ஒரு கன்னத்தை அடித்தால் மறு கன்னத்தை யார் காட்டப்போகிறார்கள். ஒஷோ சொன்னது போல மூன்றாவது கன்னத்திலும் அடிக்கத்துடிப்பார்களோ. மனித ரத்தம் அள்ள முடியாத திரவமாய் மிதப்பதை பார்க்கும் புகாரினைத் தொடர்கிறான் கிறிஸ்து. கிறிஸ்து என்ற மனிதனே உண்மையில் இல்லையோ! அவன் ஒரு இருப்புதானோ. மொத்த வரலாற்றிலிருந்தும் அழிக்கப்படுதல். தாங்க முடியாத அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகிறேன். மேன்மையான லட்சியங்கள் யாவும் வெறும் பிதற்றல் தானோ. அபத்தமான ஒன்றுதானோ. உறக்கம் வரமாட்டேங்கிறது.

இத்தனை பெரிய மானுடச்சரிவை எளிதில் அகற்றி விட்டு எப்படி திரும்பவும் இவர்களால் ஜன நாயகம் பேச முடிகிறது. கம்யூனிசம் மொத்தமாய் வீழ்ச்சியடைவது வரை பொய் சொல்லியே எப்படி? எப்படி? அருணாச்சலம் அழுததுதான் ஞாபகத்துக்கு வந்தது. அய்யோ கனவுன்னாங்க லட்சியம் நாங்க எல்லாம் போயிற்று. தியாகம் என்பதன் மதிப்பை நினைத்துப் பார்க்கிறேன். பிழைக்கத்தெரியாத பைத்தியக்காரர்கள் செய்வதுதானே என்று தோன்றும் படியாகவே நடக்கிறது. சசி பெருமாளை. அன்னாவை இன்று நிச்சயம் எல்லோரும் மறந்து விட்டிருப்பார்கள். இந்த நூற்றாண்டு தியாகம் செய்பவர்களுக்காக அல்ல போலும்.

நீங்கள் காட்டிய ஏசுவின் பிம்பம் சரியே. துயரம் மிகுந்த அந்த மனிதனை. ஆம் அவன் எப்படி இருக்க முடியும் நம்மைப் போலவே கந்தலாகத்தானே. துயரத்தின் மீட்பின் தியாகத்தின் கடவுளாக. அவனால் வேறென்ன செய்ய முடியும் நீதியின் வாளேந்தி எல்லோறையும் அழிக்கவா. கருணையின் தெய்வத்திடம். இந்த மண்ணில் மனிதனால் பெற முடிந்த மிகப்பெரிய ஞானம் அந்த பாபமேந்திய கிறுஸ்துதானே தந்தார். இருந்து இந்த குழந்தைகளுக்காக மும்முறை பூமியை அழித்து விடும் தார்மீகக் கோபம். அவன் மனிதன் மனிதனே தான். மனிதனால் பெற முடிந்த எல்லா சாத்தியங்களையும் அடைந்தவன். தல்ஸ்தோயும் அதைத்தான் செய்தார் கப்ரியேலின் வருகையின் பொழுது அந்த அழுந்திப்பதிந்த ரத்தக் கைகளைப் பார்த்து அழுது பிரார்த்தனை செய்வதைத்தவிர என்ன செய்து விட முடியும்.

ஆனால் அந்த சூதாடி அவன் சொல்வது முற்றிலும் உண்மைதானோ. இந்தக் கிழவன் மட்டும் சூதாடவில்லையா. தன் ஞானத்தை சூதாக வைத்து தானே பரலோக ராஜ்ஜியத்தை பெற்றான். மீட்பில்லாத சூதாடி. எனக்கென்னமோ மொத்த மானுடத்தின் பிம்பமாக அந்த சூதாடி தெரிகிறான். ஞானங்கள் எல்லாவற்றிலும் காரி உமிழ்கிறான் [ஜோசிமாக் கிழவனின் பிணம் நாறும் பொழுது]. இருந்தும் அழுகிறான். வேறென்ன செய்ய. அவனால் பொறுக்க முடியாத பெரிய கனங்களை வைத்து அழுத்தும் பொழுது பீறிடும் ரத்தத்துளிகளிடம் பேசுகிறான். அவனது பரலோக ராஜ்ஜியம் நிச்சயம் இன்னொரு சிலுவைதான். சைபீரியாவில் அவன் பெற்றுக்கொள்வது அதைத்தான். குரூரமாக தன்னைத்தானே குத்தி சிலுவையில் ஏற்றிக்கொள்வான்.

வீர்பத்ரபிள்ளையின் கடிதங்களில். சுய போகத்தைப்பற்றி விளக்கியது. நிச்சயம் என்னால் தாங்க இயலவில்லை. சுயபோகத்தின் எல்லை வரை சென்று மீள்வதை. நானும் அனுபவித்திருக்கிறேன். தனிமையின் வெறுமையான நாட்களில் காற்றடித்த பம்பு போல அடித்து நெறுக்கி ஆசுவாசப்படுதலை. நாகம்மையின் தொடுகையில் மூச்சின் ரீங்காரத்தில் வியர்வை மணத்தில் சுயபோகம் செய்து கொள்வதை கற்பனை செய்து பார்க்கிறேன். நம்ப முடியவில்லை. அடுத்த நாள் கனவில் வழிந்து விட்டிருந்தது. இந்த சுயபோகம் உண்மையில் என்ன செய்கிறது. உடலுறவில் இல்லாத சாத்தியங்களைத் தருகிறதோ. ஆம் நிகழில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்துடன் சுயபோகம் நிகழ்கிறதோ. ஆண்மனம் காட்சிகளுடந்தான் அதிகம் ரசிக்கிறது. நம் கற்பனை எல்லையில் சுயபோகம் அந்த காட்சிகளை நிகழில் நிஜமாகவே செய்த ஒரு திருப்தியைக் காட்டுகிறதோ.

பசிக்கும் காமத்திற்கும் ஒரு நுண்ணிய இணக்கம் உள்ளது. வீரபத்ரபிள்ளை பசிக்கும் பொழுது சுயபோகம் செய்து கொண்டு நரம்புகள் பிணைந்து சுருங்கிக்கொளவதை. பசி எந்த எல்லை வரையும் செல்லத்துணிவதுதான். பசியுடன் அந்த சின்னப்பையனை கடித்து தின்னாலும் தின்று விடலாம்தான். காமம் எப்பொழுதும் சாத்தியப்படாத கொடூரக்கரங்களை கொண்டுள்ளதோ எனத்தோன்றுகிறது. உண்மையில் நீங்கள் சொல்வது போல காமம் தான் வேறு வேறு பெயர்களில் வீரம் காதல் என்று போற்றப்படுகிறது என்று தோன்றும்.

காதல் அந்த அமரத்துவமான காதலை காடு நாவலில் நீங்கள் சொல்லி இருப்பீர்கள். இருந்தும் குறிஞ்சிப்பூவைப் பார்க்கும் பொழுது திகைத்து இவ்வளவுதானா எனும் கிரீதரனின் கண்களூடே காதலும் காமம் எனும் இச்சையின் வேறு மகத்தான் உவமைதானோ என்று தோன்றியது. காந்தியின் நுட்பமான போராட்டத்தை ஜோனி விளக்கும் பொழுது மிகவும் திடுக்கிட்டேன். ஆம் இந்தியாவில் ஜன நாயக பிரிட்டீஷ் ஆட்சிதானே இருந்தது. ஒரு ராணுவ ஆட்சியில் இருந்து மொத்த காந்தீயர்களையும் வதை முகாமில் போட்டு கொன்று ஒழித்திருந்தால் என்னவாகியிருக்கும். ஆனால் காந்தியடிகளின் அந்தராத்மா என்பது என்ன? மொத்த மானுட அறத்தின் குரலாகத்தான் நான் அதை எண்ணுகிறேன்.

காந்தியிடம் அய்யன் காளி சொல்லுவதுதான் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டிருந்தது. வெல்லும் தருணங்களில் இருக்கும் அதே பிடிவாதம் தோற்கடிக்கும் பொழுதும் புறக்கணிக்கப்படும் பொழுதும் நிச்சயம் இருக்க வேண்டும். ஆம் நிச்சயம் காந்தியிடம் அதை எதிர்பார்க்கலாம். தன் இறுதிதருவாய் வரை அவரின் போராட்டம் முடியவே இல்லை. காந்தியவாதத்தின் மொத்த சாரமும் இதில் அடங்குகிறது. ஒரு மாமனிதனின் பிள்ளைகளாய் நாம் நம்மை அறிவதில் நிச்சயம் குற்ற உணர்வு பிறக்கிறது.

காந்தியம் தோற்கும் இடங்கள் என்று நீங்கள் சமீபத்தில் பேசிய கூட்டத்தில் நானும் இருந்தேன். நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. காந்தியம் தோற்கிறது. அவரது பிள்ளைகளாகிய நாம் தோற்கிறோம். வெறும் நுகர்வை மட்டுமே பார்க்கும் கண்களில் காந்தி எனும் தந்தை காலத்துக்கு ஒவ்வாத பழைய தலைமுறை என்று ஒதுக்கும் பிள்ளைகளாக ஆகின்றோம். இன்று நிச்சயம் தேவையானது காந்தியம் மீண்டும் பிறப்பதே. நம் நவீன யுகத்தில் காந்தியம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டிய அவசியம் உங்களின் மூலமாகக் கிடைத்தது. நான் மிகுந்த மனவெழுச்சியில் உங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். மிக அண்மையில் உங்களின் பின் வரிசையில் இருந்து கொண்டிருந்தேன். ஒரு உச்ச பட்சமான கனவுலகில் மிதப்பது போல. உங்களின் வாசனையை நுகர்ந்து என்னுடலில் சேமித்துக் கொண்டேன்.

இன்றும் நினைவு கூர்கிறேன் உங்களின் வாசனை மிக அணுக்கமாக இருப்பதை. என் அப்பா இப்பவும் வீட்டிற்கு போனால் கட்டிப்பிடித்து கழுத்தில் மோந்து மணந்து கொள்வார். கேட்டால் வேறென்ன மக்கா வேணும். நீங்க கிட்ட இருக்க மாரியாக்கும் உங்க வெசர்ப்பு வாடை. அதான் மோந்து எடுத்து வச்சிகிடுதேன்னு சொல்லுவார். உங்களையும் அப்படியே என்னருகில் வைத்துக்கொள்ளும் பிரயாசையுடன் உங்களின் பின் வரிசையில் இருந்து மணந்து கொண்டேன். அன்று நான் உறங்கவேயில்லை.

திரும்பவும் குடிகாரனின் நாட்குறிப்புகளில், குடிகாரனின் காலை நேர குற்ற உணர்ச்சியை சொல்லியிருப்பதை மிக உண்ணிப்பாக கவனித்தேன். என்னிடம் நான் குடித்த நாட்களில் அந்த குற்ற உணர்வை உணர்ந்திருக்கிறேன். குடி உண்மையில் என்ன செய்கிறது. பாறை போல அமிழ்ந்திருந்ததை மெல்ல பறக்க விடுகிறதோ. ஈரல் ஹாக்கி பந்து போல ஆகும் என்ற உவமையை நினைத்துக் கொண்டேன். அண்ணாச்சி-ராஜ மார்த்தாண்டன் இந்தப்பகுதியை மிக நெகிழ்ச்சியுடன் தன் சொந்த அனுபவங்களுடன் நினைவு கூர்ந்ததை நானும் நினைத்துக்கொண்டேன்.

குடிகாரன் ஒரு தற்காலிக தற்கொலையை விரும்புபவன் தானா! அழுத்தங்கள் மெல்லப்பீறிட்டு வெளிவருவது போல. எனக்கு தெரிந்த ஒருத்தர் அழுதுகிட்டே இருப்பார். ஒன்னுமே புரியாது காலைல கேட்டா அப்படியாம்பார். அவர் சாதாரணமா அழக்கொட்டிய ஆள் இல்லை. மனம் ஒரு விகாரமெடுத்த சொறிப்பட்டிப்போல சொறைஞ்சு சொறஞ்சு சொகம் தேடது போல குடி இருக்கதா நினைத்துக் கொண்டேன். அதே போல வெள்ளாளன் உளுந்தங்கஞ்சி குடிச்சே போதை ஏத்துவான். அது முழுக்க முழுக்க உண்மை. குடிச்சி அனுபவிச்சிருக்கீங்க.

கடுங்குளிர் கவிதைகள் தொகுப்பில்

எறும்புத்தின்னியின் சாசுவதமான நடையும் கொத்து கொத்தாய் எறும்புகளை விழுங்கிக்கொள்வதையும்,

வல்லூறும் குருவியும் வானிலிருந்து சம தூரத்தில் பறப்பதையும் [பார்க்கும் உலகம் வேறு வேறு]

ஒரு சிறு ஆயுதம் போதும் நம்மை மண்டியிட வைப்பதற்கு

முற்றுப்புள்ளி வைக்கமாட்டேன் கண்ணீருடன் காற்புள்ளிகள் வைப்பேன்

உதிறும் இலைகள் வெறுமையானவை அர்த்தமற்றவை மரத்தைத்தவிர எல்லோருக்கும்

ஒவ்வொறு பிடி மண்ணாக இந்த பூமியையே அள்ளி எடுத்து அவள் தன் மகளைப் புதைப்பாள்

பனி உருகும் ஒலி நம்பிக்கையத்தருகிறது [ஆமென்று மட்டும் சொல்லி விடேன்]

கடவுளும் சாம்பல் நிறமும் [அவர் முக மௌனமாக மட்கிக்கொண்டிருக்கிறார்]

சிறந்த தூக்கம் [அனைத்தையும் நியாயப்படுத்தும் தர்க்கங்கள்]

பேசும் குழந்தையை விட பேசாத குழந்தையைக் கொல்வது மிக எளிது

இங்கு வந்து எமது பாவத்தினை மன்னித்து அருள்க! பிறகு உமது பாவத்தினை நாங்கள் மன்னிகிறோம்

பறவைகளை காணாமல் சாக எனக்கு வரம் கொடுங்கள் [அவனால் அதை தாங்க முடியாது]

உன்னைப்போல் எப்பொழுதும் உன் தந்தை நம்பியதில்லை, உன்னைப்போல் எப்பொழுதும் உன்மகன் அவ நம்பிக்கை கொள்வதில்லை

யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன் இந்த கவிதைகளை [உனக்காக உனக்காக மட்டும்தான் வேறு வழியில்லை]

பைத்தியங்கள் உலகத்தை நினைத்துக் கொண்டேன். உங்கள் நாடக வெளியில் பைத்தியங்களின் அசாத்தியமான பகடியை என்ன சொல்ல.

“ரிஷிகள் பிளம்பர் தேடி அலைந்தார்கள”

,”நாடகமா உங்கம்மைக்கு இருபத்தெட்டு”

“மூன்று ஓநாய்களும் நாயர்களும்”

“கோசாம்பியின் பெயர் விளக்கம்”

“ஒரு துளி தவறுதலா மேக்கப் கலையும் முகமூடி தயாரித்தலும் புஸ்தகத்தில விழ்ந்து மார்க்சிய அழகியல் பிறந்தது”

“விஜயகுமாரியா இருக்கும். ஆள் என்ன நல்ல குண்டா?

“புகாரின். அய்யனே இவந்தான் முயலகன்”

“மீட்பரு யார் ஸ்பைடர் மேனா?

“உலகத்த மீட்கும். நான் அகிம்சைக்க போதகன்”

“மீட்பராக கதிர் வருவது”

“தத்வமசியின் பெருவிளக்கம்”

“பின் நவீனத்துவம் (பயங்கர பிண்ணனி இசை”)

இறுதியில் சிலுவையைத்தூக்கி சுமக்கும் அருணாச்சலத்தைப் பார்த்து கதிர் இதை வச்சிட்டு ஓடியாடிப்பொலம்ப முடியாது இறக்கவும் முடியாது. கொஞ்ச நாளைக்கு தொந்தரவில்லையெனும் பொழுது, எழும் குரூரத்தை நினைத்துக் கொண்டேன். நாடகம் முழுவதும் பகடியாய் குரூரம் மெல்ல அடி நாதமாய் ஒலிக்கிறது.

உண்மையில் ஏசு வந்து மீட்டவுடன் நாவல் முடிந்துவிட்டதோ என்றுதான் நினைத்தேன். இறுதியான இரண்டு கடிதங்களில். அருணாச்சலத்தின் மீட்சி நாகம்மையால் நிகழ்ந்ததை. அவளது யோனி தான் அவனைக் காப்பாற்றியது. படைத்து விழுங்கும் பெரும் காளியாய் பிரபஞ்சத்தின் மடியில் அருணாச்சலம் ஓய்வுறுவது போல. லிங்கம் ஆவுடையுடன் இணைந்த தரிசனம் மீள வாசித்துப் பெற வேண்டும்.

இறுதியாக வீரபத்ரபிள்ளை கூறியதுதான் சத்தியம்

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் சுரண்டப்பட்டோம். ஆனால் நீதி நம் பக்கம் இருந்தது. ஆகவே நாம் தலை நிமிர்ந்து நின்றோம். அந்த நீதியை இழந்து விட்டோமெனில் இவ்வுலகையே வென்றாலும் எந்த பயனுமில்லை. எதிர்காலத்தலைமுறைகளிடம் நாம் குற்றவாளிகளாக நிற்போம். அது நிகழலாகாது.

அன்னா மிகலோய்னா சொன்னது,

கிறுஸ்து உயிர்த்தெழுவார். உண்மை உயிர்த்தெழும். ஆனால் அவரை மகத்துவமிக்க வடிவமாக தேவாலயங்களில் வழிபடுவோம்

நன்றி.

திரும்பவும் வாசிக்க வேண்டும்.

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
அடுத்த கட்டுரைபிறிதொரு உலகம்