சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி

1

அன்புள்ள சார்,

மூன்று வருடங்கள் முன்பு குழந்தைகள் கதை என நினைத்து ஆயிரத்தோரு இரவு அரேபிய கதைகள் முழுத்தொகுப்பை வாங்கி ஹாலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அதை அலமாரி உச்சியில் வைத்து அவ்வப்போது படித்தேன். நான் சிறுவயதில் படித்த கதைகள் இவையில்லையே. அவை இவற்றில் ஒரு பகுதிதான். அவற்றில் பறக்கும் ஜமக்காளமும், ஆளைத்தூக்கிச் செல்லும் கழுகுகளும் மட்டும்தான் வந்தன. ஆனால் இந்த முழுத்தொகுதியானது சிறுவர்களுக்கானது இல்லை என்பது தாமதமாகவே புரிந்தது.

நான் என் மகளுக்கு கதை சொல்லியாக வேண்டும். ஓரளவு சுத்திகரித்து சொன்னாலும் குழந்தைகள் ஒரே கதையை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கவும் அவர்களுக்கு சலிக்கவில்லை ( டோலுவும் போலுவும் பாட்டுப்பாடி சூனியக்கார கிழவியிடமிருந்து தப்பிப்பதை நானே ஆறுமுறை கண்டிருக்கிறேன்). அதனால் பூதத்தின் இடுப்பில் இருக்கும் கன்னி (?) வைத்திருக்கும் 98 மணிகளுக்கான காரணத்தை சொல்லும்போது அதை குழந்தைக்காக மாற்றிச்சொல்லி, அதையே இன்னொருநாள் கேட்கும்போது வேறு வேறாக மாற்றிச்சொல்லி என, எனக்கு கதையே சொல்லட்ரித்தெரியல என்ற நற்பெயரை வாங்கிக்கொண்டேன். விக்ரமாதித்தன் கதைகளும் கார்ட்டூன் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. அதையும் குழந்தைகளுக்கு அப்படியே சொல்லமுடிவதில்லை. மாற்றி சொன்னால் எடுபடுவதில்லை. ( அது எப்படிப்பா.. டெய்லர் அங்க்கிள் கல்யாணம் பண்ணிப்பாரு? இந்த அங்க்கிள்தானே உயிர் கொடுத்தாரு? )

அதன்பின்னர் சித்திரக்கதைகளை விட்டு பனிமனிதன் கதை படித்தேன். அந்த கதை படிப்பதற்காக மட்டுமின்றி படித்து குழந்தைகளுக்கு சொல்வதற்காகவும் ஏதுவாகவே எழுதப்பட்டிருந்தது. கிம்மும், பாண்டியனும், டாக்டரும் பத்தாயிரம் அண்டா ஐஸைக் கொட்டி வைத்த மாதிரி இருந்த ஐஸ்மலையில் நடப்பது ஒரு உதாரணம். குழந்தைகளுக்கான கதைகள், எனக்கும் சுவாரசியமாக இருந்தால்தான் அதை விளக்கமாக சொல்ல முடிகிறது. அதனால்தான் பனிமனிதனை சுவாரசியமாக சொல்ல முடிந்தளவிற்கு அமர்சித்ரகதா கதைகளை சொல்லமுடியவில்லை. அவைகளை நான் படித்து ரசித்ததுபோல அவளும் தானாகவே படிப்பதுதான் சிறந்த முறை என்று தோன்றியதால் விட்டுவட்டேன்.

ஆறு மாதங்கள் முன்பு திரு.யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்ப்பில் ரஷ்யசிறார்சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ‘ அழகான அம்மா’ என்ற தொகுப்பை படிக்கத்துவங்கினேன். ஒருநாளைக்கு ஒன்று அல்லது வாரத்திற்கு இரண்டு கதைகள் என. மொத்தம் ஐம்பது சிறுகதைகள் கொண்டது. என்சிபிஎச் வெளியீடு.

சமீபத்தில் குழந்தைகளுக்கான கதைகள் என்று திரு.கேசவமணி மற்றும் திரு.ரத்தன் அவர்கள் எழுதியிருந்த கடிதங்களைக் கண்டதும் இதைப் பற்றி எழுத நினைத்தேன். ஆனால் அப்போது முக்கால்வாசி கதைகளை மட்டுமே படித்திருந்ததால் எழுதவில்லை. நம் சிறுவர் இலக்கியங்களில் இன்னும் நீதிக்கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால் கதைகளையே மீண்டும்மீண்டும் காண முடிகிறது. ஒரு மகாபாரத சிடியில் விதுரர் பாண்டவர்களாலும் கெளரவர்களாலும் மாமா என்று அழைக்கப்படுகிறார். ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்களா என தெரியவில்லை.

ஆனால் இந்த தொகுப்பில் உள்ள ரஷ்ய கதைகள் மிகச்சிறப்பான தரத்தில் இருக்கின்றன. சூரியனை முதலை தின்று விட்டது என கொட்டாவி விட்ட முதலையை அடிக்கின்றன மற்ற மிருகங்கள்( சூரியனைத் திருடிய முதலை) அம்மாவைத் தேடும் ஆந்தைக்குஞ்சு அம்மா அழகா இருப்பா என்றே அடையாளம் சொல்கிறது ( அழகான அம்மா). தன்னை சுரண்டும் எலிக்கு பூனை படத்தை வரைந்து பயம் காட்டுகிறது பென்சில் ( வாவாவின் பென்சில்). இந்த கதைகளை படிக்கவும் எனக்கே ஆர்வமாக இருந்தது. இந்த கதைகளை அப்படியே குழந்தைகளுக்கு சொல்லவும் முடிந்தது.

அதை எழுதிவிட்டு, கேசவமணி அவர்களின் பதிவை தளத்தில் தேடினால் இந்த லிங்க் கிடைத்தது.

http://www.jeyamohan.in/72#.V_5zbhnhXqA

ரஷ்ய சிறார் கதைகளைப் பற்றி நீங்கள் பத்துவருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள்.

ஆனாலும் இந்த மெயிலை இத்தனை பத்தி டைப் அடித்துவிட்டதால் அனுப்பிவிடுகிறேன்.

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

வெள்ளிநிலம் தொடர்கதை அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேற்றுதான் வாங்கி வாசித்தேன். சாங்கா டென்சிங் அவர்களின் மம்மியோடு துவங்கியிருக்கிறது. பனிமனிதனின் தொடர்ச்சி என்று எழுதியிருந்தீர்கள். மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.
மூன்று வாரம் கடந்தபின்தான் கதைசொல்ல ஆரம்பிக்கவேண்டும். :-))

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

***

அன்புள்ள ஜெ

வெள்ளிநிலம் அறிவிப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பனிமனிதன் நான் முதன்முதலாக வாசித்த ஒரு பெரியவர்களுக்கான கதை. நான் அதற்கு முன்னர் வாசித்ததெல்லாம் கபீஷ் மாதிரியான கதைகள். அவை குழந்தைகளாக பெரியவர்கள் மாறி எழுதியவை. அவற்றின் வாசகனாக இருந்த எனக்கு என்னை ஒருபெரியவனாக நினைத்து எழுதப்பட்ட கதையாகிய பனிமனிதன் பெரிய அளவில் கவர்ந்தது.

நான் அதை ஒருவாரம் வைத்துவைத்து வாசித்தேன் . அதில் சிறுவர்களுக்கான விஷயங்கள் நிறைய. சாகசம். அதைச்செய்யும் ஒரு சிறுவன். ஆனால் கூடவே உலகசிந்தனையின் ஒருபகுதியும் அதில் அறிமுகமாகியது. ஃப்ராய்டு கூட அதில் அறிமுகமானார். அதுதான் உண்மையான குழந்தையிலக்கியம் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது

மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறேன். சுட்டிவிகடன் வாங்கியிருக்கிறேன்

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

வெள்ளிநிலம் அபாரமான தொடக்கம். க்யூ மொனாஸ்டிரியின் அந்த உண்மையான மம்மியை குறிப்பிட்டு அதையே கதைத்தொடக்கமாக ஆக்கியிருக்கிறீர்கள். கதை ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அதிவேகத்துடன் தொடங்கியிருக்கிறது

ஜெயராஜ்

சுட்டிவிகடனில் எழுதுகிறேன்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 18