அன்பின் ஜெ,
ஒரு உறவினர் வீட்டிற்கு போயிருந்த போது அங்கிருந்த கல்கி நூற்றாண்டு விழா மலரில் இதைப் பார்த்தேன்..
மூப்பனார் பக்கத்தில இருக்கறது நீங்க தானே?
அன்புடன்,
ஜடாயு
—
My blog: http://jataayu.blogspot.com/
அன்புள்ள ஜடாயு
மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பரும் நல்ல வாசகரும் ஆவார். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார்
1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். சா.கந்தசாமி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். மூப்பனாரும் தருமபுரம் ஆதீனமும் விழாத்தலைவர்கள்.
கல்கி
கல்கியின் வீட்டை வாங்கி ஒரு நினைவில்லம் அமைப்பது அப்போதைய திட்டமாக இருந்தது . அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அது நிகழவில்லை என நினைக்கிறேன்.அதன்பொருட்டு நாங்கள் ஒரு குழுவாக கல்கியின் சொந்த ஊரான புத்த மங்கலத்துக்குச் சென்றிருந்தோம் . மூப்பனார் அவரது கட்சிக்காரர்களை முழுக்க ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டார். எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் மட்டும் உள்ளே சென்றோம்
புத்தமங்கலம் காவேரிக்கரை ஓர சிற்றூர்களுக்கே உரிய அமைப்புள்ள ஊர் பழமை மாறாமல் இருந்தது. ஓர் எல்லையில் சிறிய சிவன் கோயில் மறு எல்லையில் சிறிய விஷ்ணுகோயில். இருபக்கமும் திண்ணை வைத்து ரேழியும் கூடமும் அங்கணமும் கொண்ட நீளமான வீடுகள். நாழியோடு போட்ட தாழ்ந்த கூரைகல். கல்கி சிறுவனாக இருந்த காலத்தில் அவரது வீட்டு திண்ணையில் கதாகாலட்சேபங்கள் செய்வதுண்டு என்று பொன்னியின் புதல்வன் நூலில் அவரது வரலாற்றாசிரியரான சுந்தா எழுதியிருக்கிறார். அந்த திண்ணையைப் பார்த்தபோது சிறிய உடலுக்குள் ஊக்கம் கொப்பளித்த அந்த அபூர்வமான சிறுவனை பார்க்க முடிந்தது.
அந்த வீட்டில் கல்கியின் சித்திவழி உறவினர்கள் இருந்தார்கள். அங்கே சுவர்களில் இருந்த சென்ற நூற்றண்டு கறுப்புவெள்ளை ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். பெரும்பாலான பாட்டிதாத்தாக்கள் காமிராவைநோக்கி பதைப்புடன் பார்த்தார்கள். உடல்கள் விரைப்புடன் நின்றிருந்தன. காமிரா ஒரு காலத்துளை. அவர்கள் அந்தச் சிறு துளை வழியாக இருபதாம் நூற்றாண்டைப்பார்ப்பதுபோலிருந்தது. அத்துளை வழியாக நாம் சென்ற நூற்றாண்டைப் பார்ப்பதுபோல மறுகணம் தோன்றியது.
அங்கே ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டோம். அனைவரும் வரிசையாக அமர்ந்துகொண்டார்கள். நான் அச்சூழலுக்கு கொஞ்சம் அன்னியமாக உணர்ந்ததனாலும் என் பராக்கு பார்க்கும் புத்தியாலும் கொஞ்சம் விலகிச்சென்றுவிட்டேன். மூப்பனார் என்னை நினைவுகூர்ந்து ‘எங்க எழுத்தாளர் தம்பி எங்க?’ என்று கேட்டார். யார் யாரோ கூப்பிட்டார்கள். நான் சென்றபோது இடமில்லை. மூப்பனார். அவரது மடியில் என்னை அமரச்செய்தார். அடுத்த புகைப்படத்துக்கு நான் சங்கடத்துடன் சா.கந்தசாமியின் மடிமீது [!] அமர்ந்துகொண்டேன். அந்த சங்கடச்சிரிப்பு படம் கல்கியில் பிரசுரமானது.
அடுத்த நாள் காலையில் ஒரு திருமணம். அந்த கல்கி நிகழ்ச்சியில் வந்திருந்த ஒரு இலக்கிய ஆர்வலர் இல்லத்தில். அவர் எல்லாரையும் வருந்தி அழைக்க செல்லும்படியாயிற்று. அன்று மூப்பனாரின் ஓர் இயல்பை நான் கவனித்தேன். அவர் திருமண மண்டபத்தின் உள்ளே நுழையும்போது உள்ளூர் நாதஸ்வரக்கலைஞர் வெளியே நின்று வாசித்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல எவருமே அவரை பொருட்படுத்தவில்லை. மூப்பனார் அவர் முன் நின்றார். கொஞ்சநேரத்தில் யாரோ நாற்காலி போட்டார்கல். கண்மூடி இருபதுநிமிடம் ஒரு கீர்த்தனையை அவர் வாசிக்க கேட்டார். இன்னொரு கீர்த்தனை வாசிக்கச்சொல்லி கேட்டபின் ஒரு சால்வையை அந்த நாதஸ்வரக் கலைஞருக்கு போத்தி ரகசியமாக கையில் இரு நூறுரூபாய்த்தாள்களை செருகியபின் உள்ளே சென்றார்.
மூப்பனார்
அந்த நாதஸ்வரக் கலைஞர் கண்ணீர் மல்கி நிற்பதைக் கண்டார். அவரது வாழ்க்கையின் முதல் அங்கீகாரமாக இருக்கலாம், அனேகமாக கடைசி அங்கீகாரமும். அது ஒரு நிலப்பிரபுத்துவ காலப் பண்புநலன். மூப்பனார் தஞ்சையில் எல்லா நிலையிலும் ஒரு பண்ணையாராகவே தெரிந்தார். தோரணை,பேச்சு எல்லாமே. நிலப்பிரபுத்துவம் இன்று இல்லை. அது சென்ற காலத்தின் அமைப்பு ஆனால் நெடுங்காலம் நீடித்த ஓர் அமைப்பு அதற்கான விழுமியங்களையும் நெறிகளையும்கூடத்தான் உருவாக்கி வைத்திருக்கும். நிலப்பிரபுத்துவகாலத்தின் எதிர்மறை அம்சங்களை கணக்கில் கொள்ளும்போது அதன் சாதமகான அம்சங்களை நாம் மறந்துவிடுகிறோம்.
நிலப்பிரபுத்துவம் கலைகளையும் இலக்கியத்தையும் பேணியது. அதை தன் கடமையாகவும் ஆசாரமாகவும் சிறப்பாகவும் எண்ணியது. நாம் இன்று கொண்டாடும் பேரிலக்கியங்களையும் பெரும் கலைச்செல்வங்களையும் உருவாக்கியது நிலப்பிரபுத்துவமே. இன்று நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவத்தாலும் ஜனநாயகத்தாலும் நாம் நீக்கம் செய்திருக்கிறோம். அப்போது நிலப்பிரபுத்துவ ரசனைகளையும் விழுமியங்களையும் விட மேலான ரசனையையும் விழுமியங்களையும் நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அது நிகழவில்லை.
இன்று கலைகளும் இலக்கியமும் அவற்றில் அக்கறையே இல்லாத பெரும்பான்மையினரின் தயவுக்கு விடப்பட்டிருக்கின்றன. நிலப்பிரபுத்துவம் சரிய ஆரம்பித்த ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இங்கே கலையிலக்கியங்களிலும் மரபார்ந்த சிந்தனைகளிலும் பெரும்சரிவு காணக்கிடைக்கிறது. தொழில்நுட்பத்தையும் கேளிக்கையையும் தவிர வேறெதற்கும் சமூக ஆதரவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்நிலையை இதன் தொடக்க காலகட்டத்திலேயே பாரதி சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரபுக்களின் காலம் மறைந்தது, இனி உயர்கலைகளையும் இலக்கியத்தையும் பொதுமக்களே காக்கவேண்டும் என்று தன் நூல் வெளியீட்டொன்றின் முன்னுரையில் நம்பிக்கையுடன் அவர் கோருகிறார். பெரும் ஏமாற்றத்தை அந்த பொதுமக்கள் அவருக்கு அளித்தனர். அதையும் அவர் பதிவு செய்தார்.
அதன்பின் மூப்பனார் என்னுடன் பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார். பின் தொடரும் நிழல் , கன்யாகுமரி இருநாவல்களையும் படித்து சிறிய கடிதங்கள் எழுதினார். சிலமுறை தொலைபேசியிலும் பேசியிருக்கிறார். நானும் சிலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். அவர் என்னை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தயங்கினேன். நாகர்கோயில் வந்தபோது அவரது கட்சிக்காரர் ஒருவர் என்னை அவர் வந்து சந்திக்கலாமா என்று கேட்க வந்தார். அப்போது நான் ஊரில் இல்லை. நான் அவரை மீண்டும் சந்தித்ததே இல்லை.
அதற்குக் காரணம் அவர் அப்போதிருந்த அரசியல் உச்சநிலை. பெரியமனிதர்களைச் சந்திப்பது குறித்து நடுத்தரவர்க்கத்தினனுக்கு இருக்கும் இயல்பான தயக்கம். ஆனால் அவருடனான என்னுடைய பேச்சுக்களில் அதற்கான முகாந்திரமே தென்பட்டதில்லை. அத்தகைய தயக்கத்துக்கே அவரிடம் அவசியமில்லை என்று பின்னர் ஜெயகாந்தன் சொன்னபோது கொஞ்சம் குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.
ஜெ