[ 3 ]
பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார் சித்ரகேது. அவரை குடிகள் தந்தையென கொண்டாடினர். பற்றற்றவன் செய்யும் உலகியல்செயல்கள் தவமென்றாகின்றன. அவற்றின்மேல் ஊழின் துலாமுள் அசைவற்று நிற்கிறது. அவை வைரமுனைகொண்ட வாட்கள். அளியின்றி அளிப்பவை. சினமின்றிக் கொல்பவை.”
சித்ரகேது தன் ஆட்சிக்காலம் முழுக்க தன் பேச்சிலும் எண்ணத்திலும் இரு சொற்களை முற்றிலும் இழந்திருந்தார். ‘என்’ என்றோ ‘மகன்’ என்றோ அவர் நா உரைப்பதில்லை. அவர்முன் அச்சொற்களை சொல்லலாகாதென்று ஆணையிருந்தது. அமைச்சர்கள் நூறுமுறை பயிற்றுவித்த பின்னரே அவர் முன் அயலாரை அனுப்பினர். மைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைந்ததும் அவனுக்கு முடியளித்துவிட்டு மரவுரி அணிந்து காடேகி தவம் செய்யலானார். தன்னுள் உறைந்த சொற்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுத்து அருகிலோடிய ஆற்றுப்பெருக்கிலிட்டு சொல்லின்மையை சென்றடைந்தார்.
தவம் கனிந்து அவர் முற்றிலும் சொல்லிழந்தவராக ஆனார். ஓணான்கள் அவர் தலைமேல் தாவின. எலிகள் அவர் கால்மடிப்புகளில் ஒடுங்கிக்கொண்டன. அவர்மேல் சாரைப்பாம்பு சுழன்றேறி மேலே சென்றது. அதைத் தொடர்ந்து அரசநாகம் ஏறிச்சென்று கவ்வி விழுங்கியது. மரங்கள்போல் பாறைபோல் அவர் ஆனார். அவ்வெறும்வெளியில் யாழிசையுடன் நாரதர் தோன்றி பிரம்மனுக்குரிய நுண்சொல்லை அவர் செவியில் உரைத்தார்.
அச்சொல்லை தவம்செய்து பெருக்கி மொழியென்றாக்கினார். அம்மொழியின் கனிவில் பிரம்மன் அவர் முன் தோன்றினார். “மைந்தா, நீ வேண்டுவதென்ன?” என்றார் பிரம்மன். “மானுடன் அறிவதன் உச்சமென ஒன்றுண்டு எனில் அது” என்றார் சித்ரகேது. “மைந்தா, நீ கோரியது அருளல்ல, உன் ஆணவநிறைவை மட்டுமே. அது உனக்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.
உடலே தான் என்னும் உணர்விலிருந்து சித்ரகேது விடுபட்டார். அக்கணமே விரும்பிய உடல்கொள்ளும் ஆற்றல்கொண்டவராக ஆனார். நீரென ஒழுகவும் நெருப்பென எழுந்தாடவும் காற்றென பரக்கவும் ஒளியென விரியவும் முகிலெனத் தவழவும் அவரால் இயன்றது. ஊனுணர்வழிந்தவன் உள்ளிருப்பையும் துறக்கிறான். அவர் இருப்பும் இன்மையும் என இருநிலையும் கொண்டவராக ஆனார். விண்வாழும் கந்தர்வர்களைப்போல எங்குமிருந்தார். அவர் உடல் அங்கே கிடந்து மட்கி எலும்புக்கூடாக மாறி மறைந்தது.
அவ்வாறு விண்ணில் செல்கையில் ஒருமுறை காட்டில் ஒரு வேடனும் அவன் துணைவியும் ஒரு சுனைக்கரையில் காதலாடுவதைக் கண்டார். அவர்கள் சிவனும் உமையுமென தெரிந்ததும் விண்ணிலிருந்து இறங்கி அங்கு மலர்ந்திருந்த நீலம் ஒன்றில் விழிகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கினார். உமையை அள்ளி தன் மடியிலமர்த்திய ஈசன் “இவள் என்னவள்” என்று எண்ணி முகம் மலர்ந்த கணம் சித்ரகேது வெடித்துச் சிரித்தார்.
அச்சிரிப்பொலியைக் கேட்டு சினம்கொண்டு எழுந்து நோக்கிய உமை “யார் நீ? உருக்கொண்டு எழு! நீ எதனால் சிரித்தாய் என்று சொல்!” என்று சீறினாள். சித்ரகேது எழுந்து “உலகளந்து புரப்பவனுக்கும் எனது என்னும் எண்ணத்தை கடக்கமுடியவில்லை என்றால் மானுடர் எங்ஙனம் அதை வெல்வது?” என்றார். தேவி மூச்சில் முலைகளெழுந்தமைய கண்களில் ஈரம் மின்ன “இழிந்தோனே, தன் உடைமை என தெய்வங்கள் எண்ணுவதனால்தான் அவர்கள் மானுடருக்கென இறங்கிவருகிறார்கள். மானுடர் அவ்வாறு எண்ணும்போது தெய்வநிலையை இழக்கிறார்கள்” என்றாள்.
“நான் தெய்வநிலையை இழந்தேன். என் மைந்தனை நான் தீண்டியதுகூட இல்லை” என்றார் சித்ரகேது சினத்துடன். “ஆம், இதுவரை உன்னுள்ளத்தில் கரந்து எஞ்சிய நஞ்சு பெருகி உன்னை வென்றுவிட்டது. நஞ்சென நீ வளர்க!” என்றாள் உமை. நீரில் ஒரு குமிழியென ஆகி மறைந்த சித்ரகேது மீண்டும் தன் தவச்சாலைக்கு வந்தார். அங்கே வெள்ளெலும்புக்குவையெனக் கிடந்த தன் உடலை நோக்கி ஏங்கியபடி சுற்றிவந்தார். அப்பகுதியிலேயே காற்றென குளிரென கெடுநாற்றமென செவிமாயச்சொல் என நின்றிருந்தார்.
“என் மகன் என் மகன் என்று சித்ரகேது சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல்லே மொழியாக அதில் திளைத்தார். நீண்டநெடுங்காலம் அங்கே அவர் காத்திருந்தார்” என்றார் அந்தணர். “காத்திருக்கப்படுபவை எய்தப்படும் என்று சொல்கின்றன தொல்மொழிகள். தேயும் காத்திருப்புகளை காலம் உருமாற்றி வெற்று நினைவுகளும் ஏக்கங்களுமாக ஆக்குகிறது. வளரும் காத்திருப்புகள் காலத்தையே தங்கள் விழைவுக்கான படைக்கலமாகக் கொள்கின்றன.”
சித்ரகேது காத்திருந்த அந்தக் குடிலுக்கு ஒரு நாளிரவு சுசரிதன் என்னும் அந்தணன் ஒருவன் பசித்து மழையில் நனைந்து வந்துசேர்ந்தான். இடிந்த குடிலை தொலைவிலேயே கண்ட அவன் அதை அணுகி உள்ளே பார்த்தபோது வெள்ளெலும்புகளைக் கண்டான். ஆயினும் அந்த மழைக்குளிரில் வெளியே செல்ல அவனால் இயலவில்லை. ஆகவே உள்ளே நுழைந்து அமர்ந்து அங்கிருந்த கற்களை உரசி நெருப்பெழச்செய்து அந்தக் குடிலின் தூண்களையும் சட்டங்களையும் எரித்து அனலாக்கி அதில் தன் உடலை காயச்செய்தான். கையுடன் கொண்டுவந்திருந்த கிழங்குகளை அதில் சுட்டு உண்டான்.
அவனைக் கண்டதும் அக்குடிலுக்கு மேலே காஞ்சிரமரத்தில் கசந்துத் திரண்ட காய்களாக குடிகொண்டிருந்த சித்ரகேது ஒரு கரும்பூனையாக மாறி உள்ளே வந்தார். பூனையின் குரலைக் கேட்டதும் சுசரிதன் திரும்பிப்பார்த்தான். அதன் கண்களின் ஒளி அவனை அச்சுறுத்தியது. அவன் தன் உபவீதத்தைப் பற்றியபடி வேதச்சொல்லெடுத்து இந்திரனை வாழ்த்தலானான். அஞ்சிய பூனை அருகே வந்து அவனை நோக்கி விழிசுடர்ந்தபடி அமர்ந்தது.
“இந்திரனே, இது உன் படைக்கலம். இது உன் கையில் இருக்கிறது. இதுவே எனக்குக் காவல்” என்று கூவியபடி அந்தணன் ஒரு கழியை எடுத்து தன்னருகே வைத்துக்கொண்டான். பூனை சித்ரகேதுவின் குரலில் “அந்தணனே, அஞ்சாதே. நான் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. இந்திரன்சொல் உன்னிடமுள்ளது. ஆனால் அழியாப்பெருவிழைவுடன் நான் இங்கு காத்திருக்கிறேன். இங்கு எவரும் வருவதில்லை. இந்த வெள்ளெலும்புகள் என் முந்தைய பிறவிக்குரியவை. இவற்றை விட்டுவிட்டு நான் செல்லமுடியாது” என்றது.
“எது உன் துயர்?” என்றான் சுசரிதன். பூனை தன் கதையை சொன்னது. “ஆம், உன் துயர் எனக்குப் புரிகிறது. விழைவுகள் அனல்துளி. அவற்றின்மேலிட்டு மூடும் மூத்தோர்சொற்கள் உலர்சருகுகள். கற்றோர்சொற்கள் பச்சை இலைகள். அனல் அனைத்தையும் உண்ணும்” என்றான் சுசரிதன். “நான் உருக்கொண்டெழ விழைகிறேன். என்னில் எஞ்சிய அனைத்தும் நுரைத்தெழுந்து பேருருக்கொண்டு ஆடாமல் நான் மீளமுடியாது” என்றது பூனை. “ஆம், துளியென இருப்பது எதுவும் பெருகும் விழைவுகொண்டதே” என்றான் சுசரிதன்.
“அந்தணனே, அணுகுவோர் எவராயினும் துயர்சொல்லி வழிகோருபவர்களுக்கு அந்தணன் சொல்லளித்தாகவேண்டும். அச்சொல்லால் அவனும் அவன் குடியும் அழியுமென்றாலும் அது அவன் கடன் என்கின்றன நெறிநூல்கள். நூலறிந்து உபவீதமணிந்த அந்தணன் எந்நிலையிலும் மானுடருக்கு அமைச்சனே. இன்று உன்னை என் சொல்வலன் எனக்கொள்கிறேன். நான் செய்வதற்குரியதென்ன?” என்றது. சுசரிதன் “ஆம், அது உண்மை. உனக்கு உதவியாகவேண்டியது என் பொறுப்பே” என்றான். “இது ஒரு நிமித்தம் போலும். நான் சற்றுமுன் கேட்டுவந்த கதையே உனக்குரிய விடையென ஆகிறது. அதை சொல்கிறேன்.”
பிரம்மனின் சொல்கனிந்து உருவான மைந்தராகிய கசியப பிரஜாபதி உடலும் உள்ளமும் வளர்ந்து இளமையின் ஒளிகொண்ட இளைஞராக ஆனபோது வான்கீழ் கைவிரித்து நின்று இறைஞ்சினார் “எந்தையே, நான் கொள்ளவேண்டிய துணைவி யார்? எங்குள்ளாள்?” விண்ணில் தோன்றிய பிரம்மன் சொன்னார் “மைந்தா, ஆண் பிறக்கும்போதே பெண் அவனுள் பிறந்துவிட்டிருக்கிறாள். அவன் கொள்ளும் விழைவும் கனவும்தான் திரண்டு பின்னர் ஊனுருக்கொண்டு கருவறையில் திகழ்கின்றன. விழையாத பெண்ணை எவரும் அடைவதில்லை. உள்விழைந்த பெண்ணை எவரும் அடையாதுபோனதுமில்லை. நீ விழையும் பெண் எவள்? அவளை முகமெனத் திரட்டு. அம்முகத்தை கண்டடை.”
கசியபர் தன்னுள் தேடி தவமிருந்தார். தன் சிற்றிளமையிலேயே காமம் ஊசிமுனையால் தொட்டு உட்செலுத்திய நஞ்சென குருதியில் நுழைந்து நுரைத்து ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்நுரையில் ஒளிக்குமிழியென எழுந்த முகமொன்றைக் கண்டார். கண்விழித்து “தந்தையே, ஒளிதவழ் முகம் கொண்டவள். இனியவள். அவளை இன்று கண்டேன்” என்றார். பிரம்மன் புன்னகைத்து “தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அவள் பெயர் அதிதி. அவளை கொள்க!” என்றார்.
அதிதியை மணந்து பன்னிரு ஆதித்யர்களுக்கு தந்தையானார் கசியபர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களும் விண்ணில் ஒளியுடன் திகழலாயினர். ஒளிகொண்ட மைந்தரை எண்ணி மகிழ்ந்து வாழ்ந்த கசியபர் அம்மகிழ்ச்சியில் பளிங்கில் மயிரிழைவிரிசல்போல மெல்லிய குறையொன்று ஓடுவதைக் கண்டு முதலில் வியந்தார். பின்னர் அதையே எண்ணிக்கொண்டிருந்தார். பின் அது என்னவென எண்ணப்புகுந்தார். பின்னர் அதை கண்டுகொண்டார்.
துயருடன் தனித்து நின்றிருந்த கசியபர் மேல் முகிலென எழுந்த பிரம்மன் கேட்டார் “சொல்க, உன் துயர் என்ன?” கசியபர் சொன்னார் “எந்தையே, என்னை எண்ணி நாணுகிறேன். ஒளியையும் இன்சுவையையும் நறுமணத்தையும் நுகர்ந்து என் உள்ளம் சலித்துவிட்டது. இருளையும் எரிசுவையையும் கெடுமணத்தையும் நாடுகிறது. அவையே சுவையென்று எண்ணுகிறது.” பிரம்மன் புன்னகைத்து “நீ நாணவேண்டியதில்லை. உன்னுள் குருதியில் வாழும் மைந்தரின் விழைவு அது. அவர்கள் உன் உடல்திறந்து வெளிவரட்டும். உன் விழைவைத் தொடர்ந்து செல்க!”
தன் உள்ளோடிய இருள்குமிழிகளைத் தேடி காசியபர் கண்டடைந்த முகம் தட்சப்பிரஜாபதியின் இரண்டாவது மகள் திதி என்றார் பிரம்மன். அவளை மணந்த கசியபர் தைத்யர்களை பெற்றெடுத்தார். இருளின் பேராற்றலை திதியில் அறிந்த கசியபர் அவள் கைகளால் முற்றிலும் வளைக்கப்பட்டு பிறிதொன்றுமறியாது நெடுங்காலம் வாழ்ந்தார். கரிய பேருருவும் கட்டற்ற சினமும் சினமளிக்கும் பேராற்றலும் கொண்டிருந்தனர் அவரது மைந்தர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், சிம்ஹிகை என்னும் மூவரிலிருந்து தைத்யர்களின் குலம் பெருகியது.
பின்னர் இருளின் தழுவலுக்குள் தன் தனிமையை உணர்ந்த கசியபர் தான் விழைவது வெல்லும் பெண்ணை அல்ல தான் வென்றாளும் பெண்ணையே என்று உணர்ந்தார். பிரம்மனிடம் அதை சொன்னார். “மைந்தா, அன்னையெனப் பெண்ணை விழைவதும் பின்னர் தோழியென பிறிதொருத்திமேல் மையல்கொள்வதும் ஆண்களின் இயல்பே. உன் உள்ளில் எழுந்த மகள் தட்சனின் மகள் தனு. அவளை கொள்க!” என்றார்.
தனுவை மணந்து மீண்டும் இளமைந்தனென்றாகி ஐவகை நிலங்களிலும் விளையாடி காதல்கொண்டாடினார் கசியபர். த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன், சங்கரன், ஏகசக்ரன், மகாபாகு, தாரகன், மகாபலன், ஸ்வர்பானு, ருஷபர்வா, புலோமன், விப்ரசித்தி போன்ற தானவர் அவர்களுக்குப் பிறந்தனர். ஆதித்யர்களின் ஒளியையும் தைத்யர்களின் இருளையும் கலந்து அமைந்த அகம் கொண்டிருந்தனர் அவர்கள்.
மீண்டும் மீண்டும் தன்னுள்ளிருந்து பெண்களை கண்டெடுத்தார் கசியபர். அரிஷ்டை, சுரசை, கஸை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு என்னும் தட்சமகளிரை மணந்தார். பின்னர் முனி, புலோமை, காலகை, நதை, தனாயுஸ், சிம்ஹிகை, பிராதை, விஸ்வை, கபிலை என்னும் மகளிரையும் மணந்து பெருங்குலங்களைப் படைத்து முதற்றாதையாக அமர்ந்திருந்தார். அக்குலங்கள் வாழ்ந்த ஊர்மன்றுகளில் கல்லில் எழுந்து மலரும் நீரும் படையலும் கொண்டார். அவர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் விழியானார். அவர்களின் வேண்டுதல்களுக்கு செவியானார்.
தைத்யர்களான ஹிரண்யகசிபுவையும் ஹிரண்யாக்ஷனையும் விண்ணளந்தோன் வென்று அழித்த கதையை கசியபர் கேட்டார். தைத்யர் குலத்தை இந்திரன் அழித்துக்கொண்டிருக்கும் செய்திகள் நாளும் வந்தவண்ணமிருந்தன. வஞ்சம் எரிய அவர் சுக்ரமுனிவரை வரவழைத்து அவரிடம் கோரினார் “என் மைந்தர் தோற்பது எங்கே? அவர்களின் வஞ்சம் நிறைவேறும் வழி என்ன?” சுக்ரர் சொன்னார் “முனிவரே, தைத்யர்கள் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். அவர்களை தேவர்கள் வெல்வது எளிது.”
“ஆதித்யர்களை நான் ஏவுகிறேன். அவர்கள் வென்றுவரட்டும் தேவர்களை” என்றார் கசியபர். “அவர்கள் நெறிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். வேதச்சொல் அவர்களை வடமெனப் பிணைக்கும்” என்றார் சுக்ரர். “என்ன செய்வது?” என்றார் கசியபர். “ஒன்றே வழி. ஆதித்யர்களின் ஒளியும் தைத்யர்களின் இருளும் கொண்ட தானவர்களில் தெய்வங்களையும் தேவர்களையும் வெல்லும் மைந்தர்கள் எழுவதாக!” மகிழ்ந்து “ஆம், அவ்வாறே” என்றார் கசியபர்.
கசியபர் பெருவஞ்சம் எரியும் உள்ளத்துடன் தன் துணைவியாகிய தனுவைப் புணர்ந்து பெற்ற மைந்தன் பலன் என்றழைக்கப்பட்டான். மைந்தன் பிறந்ததும் அவன் நெற்றியில் கைவைத்து “உன் மூத்தவர்களின் குருதிக்கு நிகர் கேள், மைந்தா!” என்று வாழ்த்தளித்து மீண்டார் கசியபர். அவனுக்கு படைத்துணையாக விக்ஷரன், வீரன் என்னும் இரு மைந்தரையும் தனு பெற்றாள். தம்பியருடன் பலன் இளைஞனாக வளர்ந்தபோது அவன் பிறப்புநோக்கத்தை தனு சொன்னாள். வஞ்சினம் உரைத்து பலன் கிளம்பிச்சென்றான்.
விண்ணை வெல்லும்பொருட்டு தம்பியரை உடனழைத்துக்கொண்டு சென்ற பலன் வழியில் கடல்விளிம்பில் நின்று அந்திவணக்கம் செய்துகொண்டிருந்தான். அருகே அவன் தம்பியரும் அந்திவணக்கம் புரிந்தனர். பிறபொழுதுகளில் விக்ஷரன் நான்கு திசைகளையும் வீரன் விண்ணையும் நோக்கி மூத்தவனை காவல்புரிவது வழக்கம். அந்திவணக்கமென்பதனால் மூவரும் விழிமூடியிருந்தனர்.
விண்ணில் வெள்ளையானைமேல் எழுந்தருளிச் சென்றுகொண்டிருந்த இந்திரன் அவர்களைப் பார்த்தான். புலித்தோலாடை அணிந்து ஒளிவிடும் தண்டுப்படைக்கலத்துடன் நின்றிருந்த அந்தத் தானவர்கள் விண்புகும் ஆற்றல்கொண்டவர்கள் என அக்கணமே உணர்ந்தான். மறு எண்ணம் நிகழ வாய்ப்பளிக்காமல் தன் மின்கதிர் வாளெடுத்து பலனை இரு துண்டுகளாக வெட்டினான். திகைத்து விழிதிறந்த இளையோரின் தலைவெட்டி இட்டான். அவர்களின் குருதிகலந்து கடல் சிவந்தது.
மைந்தர் கொல்லப்பட்ட செய்தி கேட்டார் கசியபர். சினம்கொண்டு கொந்தளித்தபடி சுக்ரரை நாடிச்சென்றார். “என்ன நிகழ்ந்தது? குறி நோக்கிச் சொல்க! என் மைந்தர் எப்படி அழிந்தனர்?” என்றார். சுக்ரர் ஏழுவகை குறிநோக்கியபின் சொன்னார் “அவர்கள் அன்னையின் முலைப்பால் உண்டவர்கள். முலைப்பாலே குருதியென்றாகிறது. தேவர்கள் குருதியற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் பிறப்பதில்லை, ஒளிபோல எண்ணம்போல வெளியில் தோன்றி நிற்பவர்கள். அவ்வாறு தோன்றும் ஒருவனே இந்திரனுடன் எதிர்நிற்க முடியும்.” “அவ்வண்ண்ணம் ஒருவன் தோன்றுக! அவன் என்னிலிருந்தே தோன்றுக!” என்று கசியபர் கூவினார். “அது நிகழும். அதற்குரிய தருணம் வரும்” என்றார் சுக்ரர்.
“அரசே, கேள்! உன் வஞ்சம் பருவுடல்கொண்ட ஒருவனில் படர்ந்தெழவேண்டும். நீ கசியபரின் மைந்தனாகப் பிறக்கவேண்டும்” என்றான் சுசரிதன். “எவ்வண்ணம்?” என்று பூனை கேட்டது. “உன் எலும்புகளில் ஒன்றை நான் எடுத்துக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து என்னுடன் வருக! நான் கசியபரின் குருநிலைக்குச் சென்று அவரை வணங்கி அவருடைய வேள்விநெருப்பில் அதை இடுவேன். அங்கு நீ எழுக!” என்றான் சுசரிதன். “நன்று அந்தணனே, நான் உனக்கு பொருளேதும் அளிக்கமுடியாதவன். உடல்கொண்டெழுந்ததும் உன் குடித்தோன்றல்கள் எவரேனும் என்னைத் தேடி வரட்டும். உரிய பொருளை அவர்களுக்கு அளிப்பேன்” என்றார் சித்ரகேது.
அந்தணன் வணங்கி “அவ்வாறே ஆகுக, அரசே!” என்றான். “ஆனால் அன்று நான் உயிருடனிருக்கமாட்டேன். என் வாழ்நாள் இன்னமும் ஏழு மாதங்கள் மட்டுமே. இப்போது இச்சொல்லை உரைத்தமையால் இந்திரன் என்னிடம் முனிந்திருக்கிறான். அவன் மின்னிடி விழுந்து நான் கருகி இறப்பேன். அதை அறிந்தபின்னரே உங்களுக்கு செல்வழி சொன்னேன்” என்றான். “நம் இருவருக்கும் வேறு வழியில்லை. அந்தணனே, உங்கள் கொடிவழியினர் மார்ஜார ரகசியம் என்னும் குறிச்சொல்லைச் சொன்னால் அவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்” என்றார் சித்ரகேது.
சித்ரகேதுவின் எலும்புத்துண்டு ஒன்றுடன் சுசரிதன் அங்கிருந்து கிளம்பி கசியபரின் வேள்விச்சாலைக்கு சென்றான். உடன் கரிய பூனையும் சென்றது. கசியபரின் மாணவர்கள் அவனை முகமனும் பூசனையும் செய்து அழைத்துச்சென்றனர். நீராடச் செய்து உணவளித்தனர். அவன் சென்று கசியபர் செய்துகொண்டிருந்த மகாஉத்தீபன வேள்வியில் ஹோதாவாக அமர்ந்தான். தன் விரல்களுக்கு நடுவே எலும்புத்துண்டை வைத்திருந்தான். கரிய பூனை வேள்விக்குடில்மேல் ஏறி கூரையில் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது.
கசியபர் சுபவேள்வியைத்தான் இயற்றிக்கொண்டிருந்தார். தன் உள்ளம் கொண்டிருந்த வஞ்சத்தை இனிய வேதச்சொற்களால் மூடிமறைத்திருந்தார். வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்தபோது அவியிடுவதாக கைநீட்டிய சுசரிதன் அந்த எலும்புத்துண்டை எரியிலிட்டான். எலும்பு எரியும் கெடுமணம் எழுந்ததும் ஹோதாக்கள் அஞ்சிக்கூவியபடி எழுந்தனர். அக்கணமொரு பூனையின் குரலையும் அவர்கள் கேட்டனர்.
கெடுமணம் முகர்ந்ததும் கசியபருக்குள் இருந்து அவ்வஞ்சம் உளம்மீறி எழுந்தது. வேள்வியில் அவர் உரைத்துவந்த வேதச்சொல் மாறுபட்டது. இருண்ட தொல்வேதச் சொல்லை ஓதியபடி தன் இடப்பக்கச் சடைத்திரி ஒன்றைப் பற்றி அறுத்தெடுத்து எரியிலிட்டார். “எழுக, என் வஞ்சமே! எழுக இருளே! எழுக என் நஞ்சே!” என்று கூவினார். அவிகொண்டு எழுந்த அனலில் இருந்து கரிய உடல் ஒளிர அசுரப்பேருரு ஒன்று எழுந்து வந்தது.
இடத்தோளில் வைத்த தண்டமும் வலக்கையில் ஒளிரும் வாளுமாகத் தோன்றிய காருருவன் இடியோசை எழுப்பி கேட்டான் “தந்தையே, என்னிடம் எதை விழைகிறீர்கள்? எதன்பொருட்டு நான் இப்புவியிலெழுந்தேன்?” கசியபர் அவன் கொடுந்தோற்றம் கண்டு அஞ்சி பின்னடைந்தார். அவன் கூர்வாட்கள் போன்ற வளையெயிறுகளும் ஈட்டிமுனைபோன்ற உகிர்களும் கொண்டிருந்தான். “எந்தையே, ஆணையிடுங்கள். நான் உங்கள் மைந்தன்” என்றான் அவன்.
“நீ என்னுள் இருந்தாயா? இல்லை. இது என் விழிமாயை. இவ்விருளை நான் இத்தனைநாள் சூடியிருக்க இயலாது” என்றார் கசியபர். “மைந்தரைக் கண்டு இவ்வண்ணம் சொல்லாத தந்தை உண்டா?” என்றான் விருத்திரன். “நீ என் மைந்தன் என்பதற்கு சான்று ஒன்று சொல்க” என்றார் கசியபர். “உங்கள் துணைவியரில் ஒருத்தியை அழைத்து வினவுக! என்னை அவள் அறிவாளா என்று” என்றான் விருத்திரன்.
தன் ஒளிமிக்க தேவியாகிய அதிதியை அழைத்துவரும்படி ஆணையிட்டார் கசியபர். வேதநிலைக்குள் நுழைந்த அதிதி விருத்திரனின் இருளுருவைத்தான் முதலில் கண்டாள். “ஏன் இவ்வுருக் கொண்டீர்கள்? எங்கே செல்லவிருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். விருத்திரன் உரக்க நகைத்து “அன்னையே, நான் உங்கள் கொழுநனல்ல, அவர் உருக்கொண்ட மைந்தன்” என்றான்.
கசியபர் “எப்படி நீ இவனை நான் என எண்ணினாய்?” என்று கேட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “பெருஞ்சினம்கொள்கையில் உங்களை இத்தோற்றத்தில் பலமுறை கண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். உடல்தளர்ந்த கசியபர் “ஆம், நீ நானேதான்” என விருத்திரனிடம் சொன்னார். “என் பணியென்ன, தந்தையே?” என்றான் விருத்திரன்.
“மைந்தா, என் மைந்தர்களை வஞ்சத்தால் கொன்ற இந்திரனை நீ பழிதீர்க்கவேண்டும். அவனை வென்று இழுத்துவந்து இந்த வேள்விச்சாலை கம்பத்தில் கட்டவேண்டும். அவன் உளம் வருந்தி என் மைந்தருக்கு அன்னம் அளிக்கவேண்டும்” என்றார் கசியபர். “ஆணை!” என்று சொல்லி விருத்திரன் தலைவணங்கினான்.
பிரம்மகபாலம் என்னும் ஊரின் குகைக்குள் அனல்வெம்மைக்கு உடல்கூட்டி அமர்ந்திருந்த பிரசாந்தர் என்னும் அந்தணர் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் சொன்னார் “விருத்திராசுரன் உருக்கொண்ட கதை இது என்கின்றது விக்ரமேந்திரம் என்னும் தொல்காவியம். அந்தணர் ஏற்கும் நூல் இதுவேயாகும்.”
வெளியே மழை நிலைத்துப் பெய்துகொண்டிருந்தது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அடங்கி ஒளிதுடித்து அணைந்தன. இடி போர்த்தப்பட்டதென ஒலித்தது. கபாலர் இன்னொரு சிவமூலிச்சுருளை பற்றவைத்துக்கொண்டு உடலை ஒருக்களித்துக்கொண்டார். பிரசண்டன் “கதைகள் வாள்களையும் கதைகளையும் போல. மின்னும் இடியும் எழ அவை மோதிக்கொண்டே இருக்கின்றன இப்பாரதவர்ஷத்தில்” என்றான். “சொல்க, உமது கதையை!” என்றார் பிரசாந்தர்.
“அந்தணரே, ஏழாண்டுகளுக்கு முன்பு நான் கராளம் என்னும் மலைச்சிற்றூருக்குச் சென்றிருந்தேன். இரு பெருமலையடுக்குகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் அவ்வூர் சுழன்று ஏறி மீண்டும் அதேயளவு இறங்கும் ஒற்றையடிப்பாதை ஒன்றில் பன்னிருநாட்கள் நடந்தாலன்றி அணுகமுடியாதது. அவ்வூரிலிருந்து ஆண்டுக்கொருமுறை ஒரு வணிகர்குழு கிளம்பி காட்டுக்கு வெளியே இருக்கும் சதவிருட்சம் என்னும் ஊரின் சந்தைக்கு வந்து உப்பும் பிறபொருளும் வாங்கிக்கொண்டு மீளும். பிறர் வேற்றுநிலத்தை அறிவதே இல்லை.”
“அவ்வண்ணம் சென்ற வணிகர்குழு ஒன்றுடன் நானும் சென்றேன்” என்று பிரசண்டன் சொன்னான். “அவர்களுக்கு நான் பாடிய பாடல் பிடித்திருந்தது. ஏழு நாட்களில் அவர்களின் மொழியைக்கற்று அம்மொழியிலேயே பாடத்தொடங்கினேன். அவர்கள் என்னை தங்களுடன் வந்துவிடும்படி கோரினர். அவ்வூர் முற்றிலும் குகைகளால் ஆனது. நூற்றெட்டு பெருங்குகைகள். அவற்றின் முன் பட்டைக்கற்களை அடுக்கி உருவாக்கிய சிறுகுகைகளும் இருந்தன.”
“அங்கிருந்த மக்களுடன் நானும் உடன்கலந்தேன். இனிய இரு மாதரை மணந்தேன். ஊனும் தேனும் கிழங்கும் கனியும் உண்டேன். மலைச்சுனை பெருகி விழுந்த அருவியில் நீராடினேன். கனவென அவ்வாழ்க்கையில் மகிழ்ந்திருந்தேன்” என்று பிரசண்டன் சொன்னான். “மூன்றாண்டுகள் அங்கு வாழ்ந்தேன். ஓராண்டு முடிந்தபின்னரே அவர்கள் வழிபடும் தெய்வத்தை மலையேறிச்சென்று கண்டேன். யானைவிலாவென எழுந்த கற்பாறையில் ஒட்டிக் கீழிறங்கிய கொடிகளைப் பற்றிக்கொண்டு விரிசல்களில் கால்வைத்து மேலேறிச் செல்லவேண்டும். திறன்மிக்க இளையோர் மட்டுமே அங்கு சென்றடையமுடியும்.”
“ஆண்டுக்கொருமுறை அவ்வாண்டு பிறந்த இளமைந்தரை தங்கள் தோள்களில் கட்டிக்கொண்டு மலையேறுவர். முதுபூசகரான கபாலர் இளையோரை மிஞ்சும் விரைவுடன் எழுந்து மேலே செல்வதைக் கண்டேன். விட்டில்களென ஏறிச்செல்லும் அவர்களை உயிரச்சத்துடன் நான் தொடர்ந்துசென்றேன். மேலே பாறைகள் மேலும் மேலுமென ஏறி வான் நோக்கி சென்றன. கரிய உடலில் திறந்த வாய் என அங்கு ஒரு குகை திறந்திருக்கக் கண்டேன்.”
“இதைப்போன்ற குகைவாயில் அது. உள்ளே ஏழு கிளைகளாக பிலவழி விரிந்து செல்கிறது. கைகூப்பியபடி இருளுக்குள் துயிலும் மூதாதையரை விழித்தெழக் கோரியபடி பூசகர் குகைக்குள் நுழைந்தார். பூசனைப்பொருட்களுடன் பிறர் தொடர்ந்துசென்றனர். பந்தங்களுடன் சென்றவர்களுக்குப் பின்னால் நானும் இருந்தேன். ஈரம் வழியும் தொல்குகைச்சுவர். அதில் கல்லோவியம் என அவர்களின் தொல்தெய்வம் நின்றிருக்கக் கண்டேன்.”
“ஒரு கையில் ஓங்கிய தண்டு. மறுகையில் வாள். வளைதேற்றை, கூருகிர், கொடுங்கண். சடைசரிந்த பெரும்பிடரி. அவர்கள் விருத்திரன் என்னும் மூதாதை என அத்தெய்வத்தை சொன்னார்கள்” என்றான் பிரசண்டன்.